கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 256 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகு முன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிலிருந்த அரச வீதியிலுங்கூட வாட்போர் வீச்சும், வேலெறி பந்தயமும், விற்போரும் மற்போருமாகப் பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந் ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளை யாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்க வில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துகள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்துக் கிடந்தது. உலகெலாம் தன் வீரப் புகழ் பாட உறையூரை ஆண்ட தித்தன் அன்று, “நாம் ஏன் இந்தப் பிறவி எடுத்தோம்? என்று ஏங்கினான் உள்ளூர. ஏங்கியவன் கனத்த மனத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து காவலர் செலுத்திய வணக்கத்தையும் கவனிக்காது படிகளில் ஏறி முதல் உப்பரிகையை அடைந்தான். அங்கொரு திடீர் சிரிப்பொலி! பகடைகள் உருளும் சத்தம்! இவற்றைக் காதில் வாங்கிய தித்தன் தனது மடியிலிருந்த குறுவாளை எடுத்துக் கொண்டு அந்த ஒலிகள் வந்த இடத்தை நாடிச் சென்றான். 

அங்கு தலையில் பட்டுச் சீலையால் முக் காடிட்டுக் கொண்டு தோழியர் பலருடன் பகடை களை உருட்டிக் கொண்டிருந்தான் அவன் ஒரே மகனான நற்கிள்ளி, அரசன் வந்ததை அவன் கவனிக்கவில்லையாயினும் தோழிகளில் ஒருத்தி கவனித்ததால் பகடையிடத்திலிருந்து சரேலென்று எழுந்திருக்க முயல, அவள் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்ட நற்கிள்ளி, “எங்கே ஓடுகிறாய் பாதி ஆட்டத்தில்? உட்கார்,” என்று அவளை வலிய இழுத்தான். 

“வெற்றி கிடைக்கும் சமயத்தில் யார் விடுவான்? உட்கார்,” என்று அதட்டினான் நற்கிள்ளி. 

“இளவரசே! விடுங்கள்! பகடை வெற்றி ஒரு வெற்றியல்ல. உங்கள் வெற்றி, வீரத்தில் இருக்க வேண்டும்,” என்றாள் தோழி. 

நற்கிள்ளி வேகமாக நகைத்தான். “அடி, தோழி! பகடை வெற்றியிடம் வீரத்தின் வெற்றி பலிக்காது. சகுனி பகடையால் வெற்றி கொள்ளவில்லை பாண்டவரை? நாடு கடத்தவில்லை அவர்களை?” என்றும் கூறி மீண்டும் பகடையை உருட்டினான். தலையிலிருந்து நழுவ இருந்த பட்டாடையையும் மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டான். 

இந்தச் சமயத்தில் தித்தன் குரல், கூரிய வாளென நுழைந்தது- அந்த உரையாடலுக்குக் குறுக்கே ‘டேய் நற்கிள்ளி! விடு அவள் முந்தானையை,” என்றான் தித்தன், சினம் பீறிட்ட குரலில்.

தித்தன் குரலைக் கேட்டதும் நடுங்கிய நற்கிள்ளி, பகடையை அவசர அவசரமாக எடுத்து மடியிற் செருகிக் கொண்டு போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு எழுந்து நின்றான். “தந்தையே! தாங்களா!” என்று வினவினான் நற்கிள்ளி நடுக்கம் ஒலித்த குரலில்.

“நான்தான், ஆனால் உன் தந்தையல்ல,” என்றான் தித்தன். 

நற்கிள்ளியின் கண்களில் அச்சம் தெரிந்தது. “நீங்கள் என் தந்தையில்லையா?” என்று வினவினான் மெள்ள, 

“இல்லை. சகுனிக்கு ஒரு தந்தை இருந்ததாகப் புராணங்களில் குறிப்பிடவில்லை.” 

“நான்…” 

“சகுனி” பகடையில் வல்லவன். பெண்களிடை பழகுபவன், குதிரையேற்றம் பயில வேண்டிய காலத்தில் குலாவுகிறாய் அரண்மனைச் சேடிகளிடம். வில்லையும், வாளையும் பிடிக்க வேண்டிய கைகள் பகடையையும் கழங்குகளையும் பிடிக்கின்றன,” என்ற மன்னன், “டேய்! நற்கிள்ளி! உன்னை அரண்மனைத் தோழிகள் என்னவென்று அழைக்கிறார்கள் தெரியுமா?” என்று வினவினான். 

“என்னவென்று?” நற்கிள்ளி அக்கம் பக்கத்திலிருந்த தோழியை நோக்கினான். அவர்கள் தலைகள் தாழ்ந்து கிடந்தன; கமலக் கண்கள் தரையை நோக்கின! 

“மடையா! எப்பொழுதும் பெண்களைப் போல் உடலைப் பட்டாடை கொண்டு போர்த்தியிருக்கிறாயல்லவா?” 

“ஆம்.” 

“அதனால், ‘போர்வை கோப்பெரு நற்கிள்ளி’ என்று அழைக்கிறார்கள். உன் கோழைத்தனத்துக்கு அரண்மனைத் தோழிகள் சூட்டியுள்ள பட்டம் அது” இதை வெறுப்புடன் சொன்னான் மன்னன். 

நற்கிள்ளி பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான். “பட்டத்து இளவரசனான என்னையா அப்படிப் பழிக்கிறீர்கள்?” என்று வினவினான், அவர்களை நோக்கி. 

இந்த சமயத்தில் சுறீலென வாளைப் பாய்ச்சுவது போல் கேட்டான் தித்தன், “நீ பட்டத்து இளவரசன் என்று யார் சொன்னது?” என்று, 

நற்கிள்ளியின் கண்கள் சலனத்தைக் காட்டின, “யார் சொல்ல வேண்டும்? நான் உங்களுக்கு ஒரே மகன் …” என்ற நற்கிள்ளியின் சொற்களை, “நீ என் மகனல்லன் என்று முன்னமேயே சொன்னேன்,” என்று பாதியில் வெட்டினான் தித்தன். 

“அப்படியானால்…?” நற்கிள்ளியின் குரல் நடுங்கியது. 

“நீ நாடு கடத்தப்பட்டாய். நாளைக்குப் பிறகு உறையூரில் நீ தலை காட்டினால், உன் தலை கொய்யப்படும். ஒரு கோழையை மகனாகத் தினம் காண்பதைவிடக் காணாதிருத்தல் நன்று,” என்ற மன்னன், அவ்விடத்தைவிட்டு வேகமாக அகன்றான். தோழியரும் பறந்தனர். அச்செய்தியைப் பட்டத்தரசியிடம் சொல்ல. 

அரண்மனை உப்பரிகைக் கூடத்தில் தனியே நின்ற போர்வை கோப்பெரு நற்கிள்ளி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் இதழ்களில் புன்னகை அரும்பிற்று. அவன் அழகிய கண்களும் சிரித்தன. போர்வையை நன்றாகப் போர்த்திக கொண்டு அவன் அரண்மனையை அடுத்திருந்த புறக்காட்டை நோக்கிச் சென்றான். 

காட்டுக்குள் புகுந்து சிறிது தூரம் நடந்ததும் தூரத்தே தெரிந்த ஒரு விளக்கை நோக்கிச் சென்று அங்கிருந்த சிறு வீட்டின் கதவைத் தட்டினால் மும்முறை! கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டினான் பிரும்மாண்டமான ஒரு மனிதன் அவன் உடற்கூறு இரும்பாய் இருந்தது. சதைகள் கெட்டிப்பட்டுக் கிடந்தன. கன்னக் கதுப்புகள் பெரியதாயிருந்தமையால் கண்கள் சிறிதாகத் தெரிந்தன. இளவரசனைக் கண்டதும், “வாருங்கள் உள்ளே;” என்று அழைத்துச் சென்றான் வீட்டிற்குள். கூடத்தை அடைந்ததும் கேட்டான், “எங்கே வந்தீர்கள் இங்கே?” என்று. 

“நல்ல சேதி சொல்ல வந்தேன்,” என்றான் நற்கிள்ளி. 

“என்ன சேதி இளவரசே?” 

“என் தந்தை என்னை நாடு கடத்திவிட்டார்.” 

இதைக் கேட்ட அந்த மனிதன் சிறிதும் பதற வில்லை. பெருமூச்சு மட்டும் விட்டான். “நீங்கள் தினைத்தது நடந்து விட்டது.” என்று வினவினான் அந்த மனிதன். 

“ஆம்,” என்றான் நற்கிள்ளி மகிழ்ச்சியுடன். 

“இது சரியல்ல இளவரசே” என்றான் அந்த மனிதன். 

“பெருஞ்சாத்தனாரே? என் ஆசானான நீருமா இதை ஏற்க மறுக்கிறீர்? என் ஆசையை ஏன் தடை செய்கிறீர்?” என்று கேட்டான் நற்கிள்ளி. 

“நீங்கள் உறையூரை விட்டுப் போவதால்?” என்று பெருஞ்சாத்தன் வாசகத்தை முடிக்காமல் விட்டான். 

“ஒரு கோழையை உறையூர் இழக்கிறது”

“ஆனால் உலகம் ஒரு…”

“நிறுத்துங்கள் சாத்தனாரே! காலம் புதிரை அவிழ்க்கட்டும். நான் வருகிறேன்,” என்று நற்கிள்ளி ஆசானை வணங்கி விடைபெற்று வெளியே சென்றான். 


முக்காவல் நாட்டின் சிறப்புற்ற சிற்றூரான ஆமூருக்கு ஆண்டுதோறும் ஓர் அதிர்ஷ்டமுண்டு. அந்த ஊர் முருகவேள் கோட்டத்தின் பெருந்திரு நாளன்று அந்த நாட்டின் பல பகுதிகளிளின்று வணிகரும் வீரரும் கூடி முருகவேளைத் தொழுது. அடுத்து வரும் ஆண்டைப் பயனுற்றதாகச் செய்து கொள்ளும் வழக்கம் இருந்ததால், பெருங்கோழியூர் நாயகன் என்ற வீரர் பெருமானும் தனது நெடு நாளைய குறையொன்றைப் போக்கிக் கொள்ள, தனது மகள் நக்கண்ணையுடன் ஆமூருக்கு வெளியே யுள்ள தோப்பு வீட்டில் தங்கியிருந்தான். 

பெருந் திருநாளின் மாலைப் பூசை நடந்ததும் குறி சொல்லும் பூசாரி கர்ப்பக்கிரகத்தை அடுத்த மண்டபத்தில் குழுமியிருந்த கூட்டத்தைக் கற்பூரத் தட்டுடன் அணுகிக் கூட்டத்தின் மீது கண்களை ஓடவிட்டான் ஒரு விநாடி. பிறகு தூரத்தே தோழி யருடன் ஒரு தூணுக்கருகில் நின்று கொண்டிருந்த நக்கண்ணையைக் கைகாட்டி அழைத்து, “பெண்ணே! முருகவேள் அருள் உனக்குக் கிட்டி விட்டது. இன்னும் பத்து நாள் இங்கேயேயிருந்து கோட்டக் குளத்தில் நீராடி அவனடி வணங்கு. பத்தாவது நாள் உன்னை மணப்பவன் உன் இல்லம் தேடி வருவான்,” என்று கூறித் தட்டை நீட்டினான். நக்கண்ணையும் தட்டிலிருந்த விபூதியையும் குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் தீட்டிக் கொண்டாள். பிறகு தோழியருடன் தோப்பு வீட்டுக்குத் திரும்பினாள். 

கோட்டத்தில் நடந்ததைத் தோழியர் எடுத்துக் கூற பெருங்கோழியூர் நாயகன் இறும்பூது எய்தி, முருகவேளை மனத்துள் துதித்தான். ‘என் குறை தீர்ந்தது அப்பனே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, பெண்ணின் தலையைக் கோதிவிட்டு, “நக்கண்ணை! உன் புலமைக்கேற்ற புருஷன் நிச்சயம் கிடைப்பான்,” என்றும் ஆறுதல் கூறினான் அவளுக்கு. 

நக்கண்ணை தனது நளினமான அழகிய விழிகளை நிலத்தில் ஓட்டினாள். “போன கோட்டங் கள் கணக்கில்லை. செய்த வழிபாடுகள் குறை வில்லை. இரண்டு ஆண்டுகளாக நடக்காதது இப்பொழுது எங்கே நடக்கப் போகிறது?” என்று தினைத்தாள் நக்கண்ணை இருப்பினும் தந்தையிடம் பதில் பேசாது இடை துவள, அழகு நடை நடந்து உள்ளே சென்றாள். 

ஆனால் பூசாரி சொன்னதுபோல் அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் முருகவேளின் கோட்டத்திற்குச் சென்றாள். வாவியில் நீராடினாள். அங்கிருந்த செங்கழுநீர்ப் பூவைப் பறித்துத் தலையில் சூட்டிக் கொண்டு சந்நிதானம் சென்று வழிபாடு செய்தாள். 

எட்டு நாட்கள் இப்படி ஓடியும் பலனேதுமில்லை செய்ய யென்றாலும், தந்தையைத் திருப்தி விரதத்தை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டு வந்தாள். ஒன்பதாம் நாள் ஒரு விதமாக வழி பிறந்தது. ஆனால் அது நல்வழியல்ல. 

அன்று காலை வழக்கம்போல் வாவியில் நீராடி, கரையில் தோழியர், தன்னைச் சுற்றித் திரை போல் பிடித்த பட்டாடைக்குள் ஈர ஆடையைக் களைந்து புத்தாடைச் சுற்றி கச்சு அணிந்து, தலையில் செங்கழுநீர் மலர் சூடி, வாவிப்படிகளில் ஏறினாள். அங்கு ஒரு மனிதன், அவனை ஏற இறங்க தீ விழிகொண்டு நோக்கினாள் நக்கண்ணை. “யார் நீங்கள்?” என்றும் வினவினாள். 

“ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள் ?” என்ற அவன் பதிலில் தற்பெருமையும் இருந்தது. 

“அத்தனை போக்கிரியா நீ?” இம்முறை மரியாதை யைக் கைவிட்டுக் கேட்டாள் நக்கண்ணை. 

“போக்கிரியா!” வியப்பிருந்தது அவன் கேள்வியில், 

“பெண்களை வழிமறிக்கும் ஆடவருக்குப் பெயர் வேறு ஏதாவது இருக்கிறதா?” 

“எதற்கும் ஒரு விலக்கு உண்டு.” 

“இது அப்படி ஒரு விலக்கு?”

“ஆம். உன் அழகு ஆமூர் மல்லனையும் இவ் வழிக்கு இழுத்தது.” 

“இவ்வூர்ப் பெருமல்லரா நீங்கள்?” 

“ஆம்.” இதைப் பெருமையாகச் சொன்னான் மல்லன், அத்துடன் விடவில்லை அவன். “உனக்கு மணாளனைத் தேட இரண்டு ஆண்டுகளாக உன் தந்தை முயலுவதாகக் கேள்வி. அந்தக் கஷ்டம் இனி இல்லையென்று அவரிடம் சொல். உன்னைப் பெண் கேட்க இன்று மாலை வருகிறேன்,” என்று கூறி வழியினின்று விலகினான். 


அன்று பெரும் சீற்றத்துடன் முருகவேளை நோக்கினாள் நக்கண்ணை; ‘இவன்தான் நீ தரும் மணாளனா’ என்றும் வினவினாள் மனத்துள். 

முருகவேளின் வதனத்தில் புன்சிரிப்பு இருந்தது; கண்களில் அருள் இருந்தது. அந்தச் சிலை அவளுக்குப் பதில் சொல்லவில்லைதான். ஆனால் அவனுக்குப் பேச்செதற்கு? விழிகள் போதுமே! 

இதை உணராத நக்கண்ணை ஆத்திரத்துடன் வீட்டை எய்தினாள். தந்தையிடம் நடந்ததைச் சொன்னாள். பெருங்கோழியூர் நாயகன் மனம் எரிமலையாயிருந்தது. அன்று மாலை ஆமூர் மல்லன் வந்தபோது வாயிலிலேயே நின்று விடை பகர்ந்தான், “வல்லூறு புறாவை மணக்க முடியாது,” என்று. 

“நாயக்கரே! ஆமூர் மல்லனை அவமதிப்பவர் செய்ய வேண்டிய கடமையொன்றிருக்கிறது,” என்றான் மல்லன். 

“தெரியும். உன்னுடன் மற்போர் புரிய வேண்டும்” என்றான் நாயகன், 

“ஆம். நீயோ, உன்னிடமுள்ள மல்லரோ இன்றிலிருந்து மூன்றாவது நாள் ஆமூர் மற்போர் கூடத்துக்கு வாருங்கள்,” என்று கூறிவிட்டு அகன்றான் மல்லன். 

இதைக் கேட்ட நாயகன், “தன் உயிர் இன்னும் இரண்டு நாட்கள் தான்,” என்று தீர்மானித்துக் கொண்டான். ஆமூர் மல்லன் கிழித்தெறிந்த உடல் கள் பல என்பதை அறிந்த நக்கண்ணை அன்று முழுவதும் உறங்கவில்லை. 

பத்தாவது நாளும் பிறந்தது. தோப்பு வீடு துன்பத்தில் ஆழ்ந்து கிடந்தது. அன்றும் முருகவேள் கோட்டத்திற்குக் கிளம்பிய நக்கண்ணை வெறுப் புடனேயே கிளம்பினாள். தமிழ்ப் புலமையை அன்று முருகவேளிடமே காட்டி இகழ்ச்சியாகப் பா பாடினாள் உள்ளூர முருகன் முகத்தில் அதைக் கேட்டும் முறுவலிருந்தது. அன்று கடைசித் தினமாத லால் மாலையிலும் கோட்டம் வந்து விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள். 

வீட்டின் திண்ணையில் தூணுக்கருகில் முக் காடிட்டு ஒரு உருவம் பதுங்கியிருந்தது. உடல் முழு வதும் பட்டுப் புடைவை மூடிக் கிடந்தது. “யார்?” என்று வினவினாள் நக்கண்ணை. பதில் கிடைக் காததால் பக்கத்திலிருந்த ஒரு மரக்கிளையில் சிறிது உடைத்து அதன் உதவி கொண்டு முக்காட்டை தூக்கிப் பார்த்தாள். கரிய இரு விழிகள் அவளை நோக்கின! முகம் சந்திர பிம்பமாயிருந்தது. அது ஆடவன் என்பதற்கு ஒரே ஒரு அறிகுறி, உதட்டின் மீது ஆழமாக வளர்ந்திருந்த அரும்பு மீசை. 

“எழுந்திரு,” என்று அதட்டினாள் நக்கண்ணை.

எழுந்திருந்தான் முக்காட்டுக் காளை. அவன் இடையில் ஒரு வாளும் இருந்ததை அவள் கண் டாள். அவன் எழுந்ததில் ஒரு கம்பீரமும் இருந்தது அவளுக்குப் புலனாயிற்று. “யார் நீ?” என்று மீண்டும் வினவினாள் நக்கண்ணை. 

அவளுடைய அழகிய விழிகளுடன் அந்த வாலிபன் தனது கண்களைக் கலந்தான் ஒரு விநாடி அந்த விநாடியில் அந்தப் பார்வை மூலம் அவன் தன்னுள் புகுந்து விட்டானென்பதை உணர்ந்த நக்கண்ணை நாணமெய்தினாள். “தோழி! அவர் யாரென்று கேள்” என்று இம்முறை தோழியை ஏவினாள். 

தோழி திகைத்தாள். என்றும் யாரிடமும் நேராகப் பேசும் நக்கண்ணை, அன்று தன்னைப் பேச ஏவியது திகைப்பாகவும் இருந்தது, வியப்பாகவும் இருந்தது அவளுக்கு. இருப்பினும் திகைப்பையும் வியப்பையும் உதறிக் கேட்டாள்: “யார் நீ?” என்று. 

“கோழைச் சோழன்” என்று பதில் கூறினான் அவன். 

“கோழைச் சோழனா!” வியப்புடன் வினவினாள் தோழி. 

“ஆம். நான் பட்டாடைப் போர்வையுடன் முக்காட்டிருக்கவில்லையா?” என்று வினவினான் அவன். 

“இருந்தாய்!”” 

“அப்படிப்பட்டவன் தென் புலத்தில் ஒருவன் தாணுண்டு, அவன்…” 

“போர்வை கோப்பெரு நற்கிள்ளி” என்று இடை புகுந்து வாசகத்தை முடித்த நக்கண்ணை அதிர்ச்சி ங்கு ஏன் வசப்பட்டாள். “சோழ இளவல் வந்தார்?” என்று வினவினாள். 

“நாடு கடத்தப்பட்டேன்,” என்றான் இளவல்.

“கேள்விப்பட்டோம்,” என்றாள் நக்கண்ணை.

“கோழைத்தனத்திற்காக!” என்று சொன்னான் இளவல். 

நக்கண்ணையின் மனம் குழம்பியது. அவன் முகம் கோழையின் முகமாகத் தெரியவில்லை அவளுக்கு. கண்களும் கோழையின் கண்களல்ல என்பது அவள் புலமை உள்ளத்திற்குப் புலனாயிற்று, “ஆகவே உள்ளே வாருங்கள்” என்று அழைத்துச் சென்றாள். 

உள்ளே, பெருங்கோழியூர் நாயகன் சோழ இள வலைத் தகுந்த மரியாதையுடன் எதிர்கொண்டான். மஞ்சத்தில் உட்கார வைத்து எதிரில் நின்று கொண் டான். “என்ன ஆணை?” என்றும் கேட்டான். 

“நாயகரே! ஒரு உதவி வேண்டும்” என்றான் சோழ இளவல். 

“உத்தரவிடுங்கள்.” 

“நாளைக் காலையில் நீர் ஆமூர் மல்லனிடம் செல்லுங்கள்.” 

“உம்.” 

“சென்று நான் அவனுடன் மற்போர் புரிய விரும்புவதாகச் சொல்லுங்கள்.” 

இதைக்கேட்ட நாயகன் திகிலடைந்தான். “இளவரசே வேண்டாம் – இது வேண்டா,” என்றான். 

“ஏன்?” 

“அவன் உங்களைக் கிழித்துப் போட்டுவிடுவான்?”

“நாயகரே…” 

“இளவரசே?” 

“வீரர்கள் போரில் மரிப்பது நல்லதா, கோழை யாக வாழ்வது நல்லதா?” 

இதற்கு நாயகன் பதில் சொல்லவில்லை. “ஏன் மரிக்க இஷ்டப்படுகிறீர்கள்?” என்று முடிவில் கேட்டான். 

*நற்கண்ணையின் நளின விழிகளுக்காக, அவளை நேற்று வாவிக்கரையில் அவமதித்தான் மல்லன்.”

“ஆம், என்னையும் போருக்கு அழைத்தான்.”

“உங்களுக்குப் பதில் நான் செல்கிறேன்!” நற்கிள்ளியின் பதில் உறுதியாயிருந்தது. 

இந்த விநோதத்தைக் கேட்டு மறுநாள் ஆமூரே நகைத்தது. “போர்வை கோப்பெரு நற்கிள்ளி மாள ஆழருக்கா வரவேண்டும்!” என்று ஊர்ப் பெரியவர் கள் சிரித்தார்கள். பெண்கள்கூட நகைத்தார்கள். “இந்த மற்போர் நடைபெறாது. சமயத்தில் நற்கிள்ளி ஓடி விடுவான்” என்று பலரும் சொன்னார்கள். 

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் போர்வையைப் போர்த்துக் கொண்டு ஊர் மத்தியிலிருந்த மற்போர் கூடத்துக்கு வந்து சேர்ந்தான் நற்கிள்ளி. மக்கள் அவனை வியப்புடன் பார்த்தார்கள். ஆமூர் மல்லன் எல்லோரும் கேட்கக் கூவினான். “ஐயோ சோழன் மகனே! விதி உன்னைப் பிடரி பிடித்து உந்த இங்கு வந்தனை. வேண்டுமானால் ஓடிவிடு” என்று. 

பெருநற்கிள்ளி மெள்ளப் போர்வையை எடுத் தெறிந்தான். தனது உடலின் மீதிருந்து. உள்ளே சல்லடம் மட்டுமே தரித்திருந்த அவன் தேக காந்த இளமை, விழிகளிலிருந்த அசட்டை இவற்றைக் கண்டு மக்கள், “இந்த வயதில் இவனுக்கு ஏன் இந்த விதி?” என்று கேட்டார்கள். 

சிலர் பெருங்கோழியூர் நாயகனைத் தூற்றினர். “இந்தச் சிறுபிள்ளையை இவன் ஏன் காவு கொடுக் கிறான்?” என்று. இவையனைத்தும் சற்று எட்ட இருந்த பனை மரத்தில் சாய்ந்திருந்த நக்கண்ணை யின் காதில் விழ, அவள் தனது நளின நயனங்கள் பனிப்ப நின்றாள். 

ஆனால் மற்போர் துவங்கியதும் விழிகளைத் துடைத்துக் கொண்டாள். வேதனையிருந்த இடத்தை வியப்பு ஆட்கொண்டது. ஆமூர் மல்லன் மும்முறை இளவலைப் பிடித்தான் தனது முரட்டுப் பிடியில். மும்முறையும் மிக லாவகமாக நழுவினான் நற்கிள்ளி. நான்காம் முறை இருவரும் அணுகிய போது பிடித்தவன் ஆமூர் மல்லன். நற்கிள்ளியின் மெல்லிய கைகள் மல்லன் கரங்களைப் புதுப்பாணி யில் சுழற்றி மடக்கிப் பிடித்தன. திடீரென அக்கைகள் திரும்பிய வேகத்தில் மல்லன் இருமுறை சுழன்றான். 

இந்தப் புதுப்பிடியைக் கண்டிராத மல்லன் இதயத்தில் சந்தேகம் எழுந்தது. ‘இவன் உண்மையில் கோழைதானா? சோழன் மகன்தானா?’ என்ற கேள்விகள் சித்தத்தில் பிறந்தன. ஆகவே தனது வலிமையெல்லாம் உபயோகிக்க நெருங்கினான் இளவலை. இளவலும் தயாராக நின்றான். இம்முறை காலுதைப்பில் ஈடுபட்டான் மல்லன். அதை எதிர் பார்த்த நற்கிள்ளி சற்று விலகித் தனது காலால் அவன் கணுக்காலுக்கு மேல் உதைக்க, மல்லன் மண்ணில் புரண்டான். அடுத்த விநாடி யானை மீது பாயும் சிங்கம் போலப் பாய்ந்த இளவரசன், மல்லன் மார்பில் தன் காலை ஊன்றி, அவன் தலையை எடுத்துப் பிடித்து, “இது உன் மமதைக்கு, இது என் வீரத்துக்கு, இது நக்கண்ணையை வழி மறித்ததற்கு!” என்று மும்முறை தரையில் மோதி விட்டு எழுந்தான். மல்லன் வாயில் ரத்தம் வந்தது. அத்துடன் ஒரு பெருமூச்சு. அவன் உயிரும் பிரிந்தது. 

ஆமூர் மக்கள் பிரமை பிடித்து நின்றனர். ஏதும் நடவாதது போல் சல்லடத்துடனும் உடம்பில் புழுதியுடனும் நக்கண்ணை நின்றிருந்த பனை மரத்தை நோக்கி நடந்தான் நற்கிள்ளி. அத்தனை புழுதியுடன் அவளைத் தழுவியும் கொண்டான். நக்கண்ணை மறுக்கவில்லை. நகர் மக்கள் காண அவன் உடற் புழுதிகளை புடைவைத் தலைப்பால் துடைத்தாள். 

மகன் நாடு கடத்தப்பட்ட ஓராண்டுக்குப் பின்னர் பெருஞ்சாத்தன் இல்லத்தை அடைந்த சோழ மன்னன் தித்தன், “பெருஞ் சாத்தனாரே! என் மகன் ஆமூர் மல்லனைக் கொன்றுவிட்டா னாம்” என்றான். 

“ஆம்” என்றார் பெருஞ்சாத்தனார். 

“அப்படியானால் அவனுக்கு மற்போர் கற்றுக் கொடுத்தது யார்?” என்று வினவினான் மன்னன். 

“நான் தான்.” 

“விற்போரும் தெரியுமா?”

“சகலமும் தெரியும்.” 

“அப்படியானால் அவன் கோழையல்லவே?”

“சிங்கத்தின் வயிற்றில் நரி எப்படிப் பிறக்கும்?”

பெருஞ்சாத்தனாரின் இக்கேள்வி மன்னனைத் திகைக்க வைத்தது. “பிறகு கோழையாக வேடந்தான் போட்டானா நற்கிள்ளி?” என்று வினவினான். 

“ஆம், உலகத்தைத் தனிப்படப் பார்க்க விரும்பி னார் இளவரசர். ஒரே மகனானதால் நீங்கள் அனு மதிக்க மாட்டீர்களென்று எண்ணினார். ஆகையால்?” 

“நாடகமாடினான்?” 

“ஆம்.” 

“அதற்கும் நீரும் உடந்தை?” 

பெருஞ்சாத்தனார் பதில் கூறவில்லை. வாயிலில் எதையோ கண்டு விழித்தார். “என்ன விழிக்கிறீர்?” என்று சீறினான். 

வாயிலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந் தான் நற்கிள்ளி. “அப்பா! சாத்தனாரிடம் குற்றம் காணாதீர்கள். குற்றம் என்னுடையது,” என்றான். 

தித்தன் ஒரு விநாடி தாமதித்தான். பிறகு மைந் தனை அணைத்துக் கொண்டு, “நற்கிள்ளி! இன்று நான் புத்திரப் பேறு பெற்றேன்” என்று கூறிவிட்டு, 

“இனி அந்தப்புரம் சென்று விளையாடுவதில்லை என்று உறுதி சொல்” என்று கையை நீட்டினான். 

“அந்த உறுதி சொல்ல முடியாது.”

“அப்படியானால்?” 

“இப்பொழுதே அந்தப்புரம் போக வேண்டும்.” 

“காரணம்?” 

“இவள்” என்ற இளவல், “இதோ உங்கள் மருமகள்” என்று கூறி வாயிலை நோக்க, நக்கண்ணை அன்ன நடை நடந்து வந்து மன்னனை வணங்கினாள். 

மன்னன் நகைத்தான், “சரி சரி, போ அந்தப்புரத்துக்கு!” என்றான். 

அன்றிரவு மணவறையிலும் நற்கிள்ளி போர்வை போர்த்தி வந்தான். “புடைவையை எடுத்தெறிகிறீர்களா, நான் எறியட்டுமா?” என்றாள் நக்கண்ணை. 

“அது உன் தொழிலல்ல, என் தொழில்,” என்று சீலையை நீக்கிப் பஞ்சணையை அணுகினான் நற்கிள்ளி. 

– இந்தக் கதையின் கரு புறநானூற்றுப் பாடல்கள் 80 இதிலிருந்து 85 வரையும், வித்வான் இராஜகோபலய்யங்கார் எழுதிய “சங்க சிந்தாமணி” என்ற நூலில் இருக்கிறது.

– மங்கலதேவி (சரித்திரக் கதைகள்), முதற் பதிப்பு: பெப்ரவரி 1979, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *