குறுங்கதை : நூறு
கதையாசிரியர்: செம்பியன் செல்வன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 96
(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
41. அரசு

வீட்டின் தெற்குச் சுவரும் – எல்லைச் சுவரும் ஒன்றாக இருந்தன. வீட்டின் சுவருடன் இணைத்து காம்பவுண்ட் சுவர் நீண்டிருந்தது.
ஆரம்பத்தில் பிரச்சனை எதுவுமே யிருக்கவில்லை.
ஒரு பெரு மழையின் பின் சுவர்கள் நன்றாக ஊறி நனைந்து, வெயிலில் காயத் தொடங்கியபோது
வீட்டுச் சுவரும் கரம்பவுண்ட் சுவரும் இணையுமிடத்தில் ஒரு அரசங்கன்று தளிர் இலை நீட்டி தலைகாட்டியது.
அதனை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.
சில காலம் வெளியூர் மாற்றம் கிடைத்துப் போய்விட்டுத் திரும்பியபோது
அரசமரம் வளர்ந்து வீட்டின் சுவர்கள் வேரோடி வெடித் திருந்தன. கண்டு இடுக்குகளில் பூச்சி புழுக்கள்… விஷ ஜந் துக்கள் ஊர்ந்துகொண்டிருந்தன.
எல்லாம் இந்த அரசால்தான்.
கோடரியுடன் விறகுவெட்டி வந்தான்.
வீட்டைப் பாதுகாக்க மரத்தைத் தறிக்க முதல் வெட்டைப் போட்டான்.
அந்த சப்தத்தில் அரச அதிகாரிகள் ஓடி வந்தார்கள்.
”அரசு – அரச மரம். தறிக்கக் கூடாது. சட்டவிரோதம். அரசால் வீடு சிதைந்தால் வீட்டைவிட்டு எழும்பவேண்டுமேயன்றி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கக்கூடாது. அரசின் எல்லைக்கு அப்பால் ஓடி பாதுகாப்புத் தேடு’
வீட்டை நொருக்கிப் பிளந்து மரம் வளர்ந்தது.
42. விசாரணைக் குழு….
ஐந்து நட்சத்திர ஹோட்டல்.
ஐக்கிய நாடுகள் தாபனத்திலிருந்து நாட்டின் நிலையை, சமாதானத்தை, ஆட்சியினரின் நிர்வாகத்தை பரிசீலிக்க ஒரு குழு வந்து தங்கியிருக்கிறது.
அக்குழு போகுமிடம் – சந்திக்கும் நபர்கள் – எல்லாமே திட்டமிடப்பட்டு முன்னெச்சரிக்கையாக நிகழ்கிறது.
எங்கும் தர்மோபதேசம், தார்மீகம்.
சிறுபான்மையினர் பாதிக்கப்படவேயில்லை. மோசமான பொய்ப் பிரசாரம்.
குழு முடிவுக்கு வந்துவிட்டது.
குழு நட்சத்திர ஹோட்டல் வாசலுக்கு வருகிறது. தெரு வுக்கு அப்பால் நடைபாதையில் ஒருவன் பழைய புத்தகக் கடை விரித்திருக்கிறான்.
பழைய – புராதனப் பண்டங்களைச் சேகரிக்கும் அந்தக் குழு அங்கு விரைகிறது.
பழைய புத்தகங்களை மேய்கிறது.
‘ஒரு வரலாற்றுப் புத்தகம் தமிழில் அரசினாலேயே சமீபத்தில் அச்சிடப்பட்டது. ஏராளமான புகைப்படங்களுடன்’
அதனை எடுத்து விலை கேட்கிறார் ஒருவர். அவர் எண்ணப்படி புதுப்புத்தகம் புத்தகத்தில் இடப்பட்ட விலை முப்பது ரூபா.
அவன் முன்னூறு சொல்கிறான்.
“ஏனப்பா… இது பழைய புத்தகம் கூட இல்லை. புதியது. அரசு வெளியிட்டது. அப்படியிருக்க ஏன் இந்த விலை?”
‘உண்மைதான். ஆனால் இப்போது எங்கே தமிழர். தமி ழர் புத்தகங்கள் இருக்கு… எல்லாவற்றையும் தான் எரித்து அழித்துவிட்டோமே. இது புதுப்புத்தகம். ஆனாலும் தமிழருக்கு எரியாமலிருக்கிற அருஞ்செல்வம். அது தான் இந்த விலை.’
குழு முதன்முதலாக தன் பனிபற்றிச் சிந்தித்தது.
43. விளையாட்டுப் பொம்மை
செல்வந்தக் குடும்பம். இளந்தம்பதிகள்.
நீண்டகாலமாக குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்து, ஆண்குழந்தையொன்றிற்கு பெற்றோராயிருந்தனர்.
குழந்தையை மகிழ்விக்க ஏராளமான பொருட்செலவில் பல விளையாட்டுச் சாமான்களை வாங்கிக் கொடுத்தனர்.
குழந்தையை மகிழ்வூட்ட அவர்கள் பொம்மையை வைத்து விளையாடுவார்கள். குழந்தையைத் குழந்தை பொம்மைகளை உடைத்துவிடுமாம். மற்ற நேரங்களில் தொடவிடமாட்டார்கள். ஷோ-கேஸில் அலங்காரமாக பூட்டப்பட்டிருக்கும். குழந்தை ஒரு நாள் கேட்டது.
‘அப்பர் அம்மாவுக்கு விளையாட ஒண்டு நான் வேணும்; இல்லாட்டி பொம்மை வேணும்’
44. தூது?
‘கண்ணா! துரியோதனனிடம் சென்று நமக்குரிய பாதி ராஜ்யம் கேள்!;
‘ஆஹா! பொதுவுடமை’ – என்று ம கி ழ்ந்தான் கண்ணன்.
‘அது தர மறுத்தால், ஐந்து நாடு கேள்!’
‘சோஷலிசம்!’ – என்றான் முகமலர்ச்சியுடன் கண்ணன்
‘அதுவுமில்லையெனில் ஆள ஐந்து நகர் கேள்!’
‘முதலாளித்துவ சோஷலிசம்!’ – என்றான் மலர்ச்சி நீங்க.
‘கௌரவர் அதனையும் மறுத்தால் ஐந்து ஊர்……’
‘ஜனநாமக சோஷலிசமா?’ – அவன் வாய் முணு முணுத்தது.
‘துரியோதனன் அதனையும் இழப்பாகக் கருதினால் ஐந்து வீடாவது தரும்படி கேள்!’
‘ஜனநாயகமா.?’ – கண்ணனின் எண்ணங்கள் எங்கோ நீந்தின.
‘கண்ணு! இவை ஒன்றிற்கும் கௌரவர்கள் உடன்படார் களாயின் போர் வேண்டு! அடுபோர் வேண்டு!’ – என்றான்.
வாய்மையின் புத்திரன்.
‘புரட்சி! அடிப்படை மாற்றம் அடித்தளமே மாற்றப்படும் மாற்றம் ….. போர்… போர்… போர்…’ எனச் சிரித்தான் சக்கராயுதன்.
சிறிது யோசனையின்பின் கண்ணனைக் கேட்டான் தர்மன்.
‘எல்லாம் சரிதான் கண்ணு! நான் ஒவ்வொன்றாக தூதுப் பொருளைச் சொல்லி வருகையில் – நீ ஏதேதோ சொல்லி வந்தாயே – என்ன அவை? எனக்குப் புரியவில்லையே’
”உனக்கு மட்டுமல்ல… வேறு எவருக்கும் புரியாது… இவை யாவும் வரப்போகும் யுகங்களின் சமூக மாற்றங்கள்… அதற்கு நீ அடியெடுத்துக் கொடுத்திருக்கிறாய்!’ – என்றான் பரமாத்மா.
45. விமர்சனம்
இரு அறிஞர்கள் கழனிப் பக்கமாக காலாற நடந்து கொண்டிருந்தனர்.
வயலில் விதைப்பு நடந்துகொண்டிருந்தது.
சூரியன் மெல்லமெல்ல உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.
‘ஆஹா!… விதையில்லாட்டி விளைவு ஏது?’ என்றார் ஒருவர்.
‘விளைவில்லாமல் விதையேது… விதைப்பேது?’ என்றார் மற்ணெருவர்.
விவாதம் ஓய்வின்றித் தொடர்ந்தது.
சூரியன் உச்சிக்கு வந்ததுகூடத் தெரியாமல், வெயிலில் வாதிட்டுக்கொண்டிருந்தனர்.
விவசாயி தனது கஞ்சிப் பானையுடன் மரநிழலில் வந்து அமர்ந்தான். உலகம் எவ்வளவோ பொருளோடு தெரிந்தது.
‘பைத்தியக்காரர்களே!… வெற்றுச் சொற்களை விதைத்து விதைத்து எதனை அறுவடை செய்யப் போகிறீர்கள்? உச்சிப் பொழுது வந்து விட்டதே! எதை உண்ணப் போகிறீர்கள்?… வாருங்கள்! என்னுடன் கூடி ஒரு வாய் கஞ்சி குடியுங்கள்!…’ என்றான்.
முடிவற்ற வாதத்தின் அர்த்தம் அப்போதுதான் முற்றுப் பெற்றதாகத் தெரிந்தது – அவர்களுக்கு.
46. தேர்தல் விற்பனை
பெருங் கூட்டம் அமைச்சரைக் ‘கேரோ’ செய்தது.
‘உங்கள் கோரிக்கை என்ன?’ அமைச்சரின் வினாவில் அற்பனின் பவிசு ஆதிக்கம் செலுத்தியது.
‘எங்கள் கோரிக்கையை அல்ல… உங்கள் தேர்தல் பிர கடனத்தை அமுல்படுத்துங்கள் போதும்!’
‘எந்தப் பிரகடனம்?!” – அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதிகளைச் சத்தியப் பிரகடனமாகக் கருதினால் அதற்கு அவர்தான் என்ன செய்வார்?
‘மறந்து விட்டதா? சந்திர மண்டலத்திலிருந்துகூட அரிசி கொண்டு வருவோம் என்றீர்களே. எங்கே அரிசி?’
‘அட மூடச் சனங்களே, சந்திரமண்டலத்தில் நெல் பயிராகிறதா, என்ன?… அப்படிப் பயிரானாலும் கொண்டுவர அரசாங்கத்தில் ஏது பணம்? சென்றகால ஆட்சியினர் திறை சேரியை முற்றாகக் காலிசெல்து விட்டுப் போயிருக்கிறார்களே!”
‘இது தெரியாமல் எங்களுக்கு ஏன் பொய் வாக்குறுதி கள் அளித்தீர்கள்?’
‘இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் ஏன் இந்த வியாபாரத்துக்கு வருகிறோம். பெரிய பொருளாதார நிபுணர்களாகவல்லவா வாழ்க்கை நடத்தியிருப்போம்… பொய்கள்தானே இங்கு விற்பனைப்பண்டங்கள்!’
மக்கள் கூட்டம் மந்தையாகக் கலைந்து சென்றது,
47. கூண்டுச்கிளி
தங்கக் கூண்டு.
கிளி அதனுள்ளே சிறகடித்துக்கொண்டிருந்தது.
பாலும் பழமும் நிறைந்திருந்தன.
தோப்புகளோ வெளியேயிருந்தன.
கிளி மனிதர் மொழி மேசியது. அவர்கள் மொழிதான் எத்தனையோ?
பலமொழி பேசியது.
எல்லோரும் மகிழ்த்தார்கள்.
கூண்டுக்கு வெளியிலிருந்து உணவுகளை நீட்டினார்கள்.
கிளிக்கு வயிறு நிறைந்திருந்தது.
தெருநாய் ஒன்று அவ்விடத்திற்கு ஓடி வந்தது.
‘லொள்!… லொள்!… லொள்!…’
”அப்பப்பா!… என்ன கொடூரமான ஓசை?’
அடித்து விரட்டினார்கள்.
எல்லோரும் கலைந்து போனபின், நாய் அந்த இடத்திற்கு வந்தது.
கிளிக்குப் பெருமை தலையைக் கனக்க வைத்தது.
‘உனது குரல் எவ்வளவு கொடூரம். மொழி எவ்வளவு அபசுரம் கேட்டாயா, என் குரலை? கிளி கொஞ்சுகிறது என்று தான் அழகுக்கு… இனிமைக்கு… உவமை சொல்வார்கள். ஆனால் உன்னையோ அடித்து விரட்டுவார்கள்…’ – என்றது.
‘நீ சிறையிலிருந்து அந்நிய மொழியைப் பேசுகிறாய்… உன் தாய்மொழியை மறந்துவிட்டாயா?… கூண்டிற்குள் சிறகடிக்கிறாய். உனக்கு சுதந்திரம்.. விடுதலை… தாய்மொழி என்பது பற்றி எதுவுமே புரியாது’.
48. போதகர்கள்
புயற்புரவி பூட்டியதென விரைந்து வந்த, போர் இரதத் தின் கடிவாளத்தைச்’ ‘சடார்’ எனச் சொடுக்கி இழுத்து குருக்ஷேத்திர மையத்தில் கொண்டுவந்து நிறுத்தினான் கிருஷ்ணன்.
பாஞ்ச காலை இளங்கதிரில் பளபளத்தது.
அர்க்ஷுனன் பார்வை கௌரவ சேனையைக் கௌவியது. மனம் அதிர்ந்தது.
உறவுகள் பகையாகிப் போர்க்கோலம் பூண்டிருந்தன.
அவன் அழிக்கப்போவது –
உறவுகளின் உயிரையா?
பகையின் உருவங்களையா?
காண்டீபம் கைநழுவி விழுந்தது.
மாயச் சிரிப்புடன் ‘அர்க்ஷுனா!’ என்றான் சாரதி.
‘கண்ணா! என் கண்ணுனவர்களின் உடல்களைப் புண்ணுக் கவா, நான் காண்டீபம் எடுத்தேன்’.
‘அர்க்ஷுனா! காண்டீபம் கடமையைச் செய்யவே அருளப் பட்டது. உறவுகள் மாயை. கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே.
-பகவான் கீதோபதேசத்தை குருக்ஷேத்திர மண்ணில் விரித்தான்.
அதில் மனம் தோய, தேறிய அர்ச்சுனன் கேட்டான்
‘எல்லாம் சரிதான் கண்ணா! நீ என்னுடன் நிலவில்… தேனாற்றங்கரைகளில்…… மாடமாளிகைகளில்…… சோலை களில் எல்லாம் இருந்திருக்கின்றாய்…… அப்போதெல் லாம் செய்யாத உபதேசத்தை, இந்த குருக்ஷேத்திர களத்தில் விரித்ததென்ன?’
‘கர்மவீரனே அது என் அவதார ரகசியம்.
மனிதர்களுக்குப் பிரச்சினைகள் தோன்றும்போது….. அப்பிரச்சினைகளைத் தீர்க்க வழியோ, வகையோ தெரியாத போது, அப்பிரச்சினைகளையே தர்மம், தியாகம் என நியா யப்படுத்தி போதிப்பதே இந்த ரகஸ்யமாகும்…’
‘எனக்குப் புரியவில்லையே?’
‘உனக்குப் புரியாதுதான். இதனை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர்கள் கலியுகத்தில்தான் தோன்றுவார்கள்.’
‘யாரந்தத் திறமைசாலிகள்…….??
‘நீ இன்று பாசத்தீயில் அகப்பட்டுத் தவிக்கையில் நான் வீசிய ஆறுதல் காற்று அதனை அடக்கிவிட்டது, கலிகாலத்தில் ஆட்சியாளரின் அநியாயத்தால் மக்கள் பசி பட்டினி, வறுமை, நோய் எனத் துடிக்கையில், வெறும் வார்த்தைகளாலேயே அவர்கள் துன்பத்தினைத் துடைத்துக்கொள்பவர்கள் தோன்று வார்கள். அவர்கள் என்னைவிடப் பெரியவர்கள். அவர்கள் இருப்பதால் என் அவதாரம் கலிகானத்தில் இருக்கமாட்டாது. தேவையுமற்றது.’
‘யாரவர்கள்?’
‘அரசியல்வாதிகள்’ எனப் பாஞ்சசன்யம் ஒலித்தது.
49. ‘ம்… பிறகு…’
கண்ணன் கதை சொல்லத்தொடங்கினான்.
சுபத்திரை கதை கேட்டவாறே உறங்கிப்போனாள்.
‘ம்!… பிறகு.. ம்.. பிறகு…’
அந்த ஆர்வக் குரலுக்கு அடிபணிந்துபோன கண்ணன், கதை சொல்லும் சுவாரஸ்யத்தில் எதையும் கவனிக்கவில்லை.
பாரதப் போர் – முன்னோட்டமாக, இரவு முழுதும் விரிந்து கொண்டிருந்தது:
‘ம்… பிறகு…’
சுபத்திரையின் வயிற்றிலிருந்து அந்த வீரக்கரு ‘ம்’ கொட்டிக்கொண்டிருந்தது.
கதை முடிந்தது. கண்ணன் திரும்பிப் பார்த்தான். சுபத்திரை ஆழ்ந்த உறக்கத்திலாழ்ந்திருந்தாள். அப்படி யானால்… என்னிடம் கதை கேட்டது யார்?
மாயக் கள்ளனே மயக்கம் காட்டினான்.
‘கண்ணா! மணிவண்ணா! என்னை உனக்காக தயார்செய் கிறாய். எனது தந்தைக்கு பேரர்க்காலத்தில் உன்னால் உபசேதம்தான் செய்யமுடியும் என்பதால், என்னைக் கருவிலேயே பாசமறுத்து ‘கடமையைச் செய்’ என வீரிய வித்தாக மாற்றுகிறாய் என்பதனைக்கூட நான் புரியாதவனா என்ன? –கரு உள்ளிருந்து கேட்டது.
அன்றிரவு மாயவன் நீண்ட நேரமாக தனது புல்லாங் குழலை வாசித்துக்கொண்டிருந்தான்.
50. திட்டங்கள்
கரையோர மீனவப் பகுதி.
புயற்காற்றும், பேரலையும் கரையோரத்தில் மணற்றடையை ஏற்படுத்தியது.
வள்ளங்களும் கட்டுமரங்களும் கரையேறாமல் ஆழப் பகுதியில் தள்ளாடின.
தொழில் தொடர்ந்து நடக்க, மணல் தடை நீக்கப்பட வேண்டும். அவர்கள் கணக்குப் போட்டார்கள். பெருந். தொகை தேவைப்பட்டது.
அரசாங்க அதிபருக்கு மனுப்போட்டார்கள்.
சில வாரம் கழித்து பொறியியல் துறையினர் வந்து பார். வையிட்டனர். அவர்கள் அதற்கென ஒரு பைலை தயாரித் தனர். அது
திட்டமிடல் பகுதி, சமூக சேவைப் பகுதி மீன்பிடிக் கூட்டுத்தாபனப் பகுதி, கணக்காய்வாளர் பகுதி என சிவப்பு நாடாவில் பயணம் செய்து முடிக்க, ஆறு மாதமாயிற்று.
அதிபர் கைக்கு வரும்போது ஐந்து இலட்சம் செலவைக் காட்டிற்று. அவரால் அத்துணை செலவழிக்க அதிகாரமில்லை
மீனவர்களை அழைத்து “இது ஒரு பெருந்திட்டம். கடற் றுறை அமைச்சினால் மட்டுமே முடியும். அதற்கு மனுச் செய் யுங்கள்” என்றார்.
‘இதைச் சொல்ல உங்களுக்கு ஆறு மாதமா தேவைப் பட்டது? தயவுசெய்து எங்களுடன் வந்து பாருங்கள் இடத்தை’ என்றனர். அதிபரும் சென்றார்.
அங்கு மணற்றடை சுத்தமாக நீக்கப்பட்டு மீன்பிடித் தொழில் நடந்துகொண்டிருந்தது.
‘உங்களை நம்பியிருந்தால் எங்கள் குடும்பம் இந்த ஆறு மாதத்தில் பசியால் அழிந்திருக்கும். எங்களுக்கு இருபதாயி ரம் மட்டுமே செலவு. இயலுமானால் அதைத் தர ஏற்பாடு செய்யுங்கள்!” என்றனர்.
அரச அதிகாரி — அதிபர் திகைத்தார்.
– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.
![]() |
இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடென்ன செய்தது நமக்கு?
வளர்கவி
September 15, 2026
நாய் வால்
நீர்வை பொன்னையன்
September 15, 2026
அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்
இளையவேணி கிருஷ்ணா
September 15, 2026
