குறுங்கதை : நூறு
கதையாசிரியர்: செம்பியன் செல்வன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 98
(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
31. பழம் பெருமை

கலைக்கூடம் ஒன்று நீண்டகாலமாக இயங்கி வந்தது.
கலைப் பொருட்களும், சிற்ப வேலைப்பாடு அரங்க நிர்மா ணிப்புகளும் — கூடமும், பொருட்களும் அபூர்வக் கலைகளின் உரைகல்லாக மிளிர்ந்தன. ஆனால்,
மக்கள் அதனைப் பொருட்படுத்தவேயில்லை.
ஒருநாள்-
இடியொன்று தெறித்து, கட்டிடத்தின்மேல் விழ,
கட்டிடம் உருக்குலைந்து,
சிற்பங்கள் மூளியாகி, சிதிலமாகி……
மக்கள் திரள்திரளாக… கூட்டம்கூட்டமாக கலைக்கூடம் நோக்கி வரலாயினர்.
கலைக்கூடத்தின் பழம்பெருமையையும், சிற்பங்களின் சிறப் பையும், இயற்கையின் அரக்கத்தனத்தையும் வாயுளையாமல் பேசிக்கொண்டே
‘இழப்பின் மகிமை’யை இரசிக்கலாயினர்.
32. முரண்பாடுகள்
அவர் ஒரு பொருளியல் பேராசிரியர். விடுமுறைக் காலங் களில் கிராமத்திற்கு வந்து விடுவார். வீட்டின் முன்னால், கோடையிலும் குளிர் காற்றிறைக்கும் வேப்ப மரத்தின் கீழ், சாய்வு நாற்காலியில் படுத்து, உண்ட களைப்பிற்கு ஆயாசமாகப் புகைத்துக் கொண்டிருக்கும் வேளையிலும்-
உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, வியர்வையில் மேனி பளபளக்க-
அந்தக் கரடுபாய்ந்த கற்பூமியில் விளைநிலத்தை அணுவணு வாகத் தேடிச் சேமித்துக்கொண்டிருப்பான். அவன் உழைப் பில் வாழைத் தோட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது.
உழைப்பு – உற்பத்தி – கேள்வி – விலை.
‘ஒரு பொருளின் விலை அதனை உற்பத்தி செய்ய எடுத்த தொழிலின் மதிப்பினாலும், மக்களின் தேவை நிலையினாலும் நிர்ணயிக்கப்படுகிறது” பொருளியல் தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றை அவர் மனம் ஏனோ நினைக்கின்றது.
மறுநாள் –
அவன், அவர்முன் ஒரு வாழைக்குலையுடன் நிற்கிறான்.
‘ம்… கடைசியா என்ன விலை சொல்லுறாய்?…’
‘ஐயாவுக்குத் தெரியாதா… பட்டணத்தால வாறனியள்… உங்களுக்குத்தான்… சந்தை நிலபரம் எங்களவிட நல்லாத் தெரியும்… ஐயா… கொடுக்கறதைக் கொடுங்க…’
‘இஞ்ச… இந்தக் கதையொண்டும் வேண்டரம்… நீ உன்ர விலையைச் சொல்… சரி… மூண்டு ரூபா தரட்டே?’
‘என்ன? அடாத்து விலை கேக்கிறியள்… கொஞ்சம் சிர மத்தை பாராம சந்தைக்குக் கொண்டு போனா கத்தாழை முள்ளுப்போல பத்து ரூபாவுக்கு விக்கலாம்’
‘அப்ப போறது தானே?…’ ரோசம் முகம் சிவக்க வைக்கிறது.
‘இல்ல ஐயா… அந்தப் போய்வாற நேரத்தில கொஞ்சம் கல்பிரட்டி, கழனியாக்கலாம் எண்டு தான் யோசிக்கிறன்’
‘சரி… சரி… ஐஞ்சு ரூபா தாறன்… விருப்பமெண்டா வைச்சிட்டுப்போ!…’
-அவன் போகிறான். அவர் மனைவி வருகிறாள்.
‘மெத்த மலிவா வேண்டிப் போட்டிகள்… கண்டியில ஒரு பழமே இருபத்தைந்து சதமெல்லே…’
அவருடன் சேர்ந்து, தத்துவமும் சிரிக்கிறது.
33. பார்வை
கழுகு ஒன்று மேலாகப் பறந்து கொண்டிருக்கிறது.
அதன் பார்வைத் தெறிப்பில்…
எங்கும். வர்ணக் காட்சிகள்.
பச்சை வயல்கள் – செங்கனித் தோட்டங்கள்.
நெற்போர்கள் — கரும்புக் குவியல்கள்
கழனித் தோட்டக் கோலங்கள்.
கழுகு, தாழத்தாழப் பறந்து மார்த்தது. ஏமாற்றம் உதட் டைப் பிதுக்கிற்று.
‘பிச்சைக்காரத் தேசம்… சே… ஒரு அழு இய பிணம் கூட இல்லாமல் ஒரு நாடா…’
கழுகு மீண்டும் உயரப் பறக்கலாயிற்று.
34. கேள்வி
‘அம்மா! அம்மா!… ஏனம்மா என்னோட அப்பாவும் நீயம் பாடசாலைக்கு வந்தனிங்கள்?’
அம்மா பதறிக்கொண்டே கேட்டாள்:
“ஏன்?… நாங்க வந்தது உனக்குப் பிடிக்கேல்லியா?”
மகள் சலித்துக்கொண்டே சொன்னாள்.
‘நீங்க ரெண்டுபேரும் என்னோட பாடசாலைக்கு வந்த தாலதான் எங்களை அகதிகளெண்டினம்… பாடசாலைகளையும் அகதிகள் முகாம் எண்டினம்’
அம்மா பெருமூச்சு விட்டாள்.
‘உண்மைதான் மகளே!’
35. விடைகள்
இடம் பெயர்ந்த மாணவன் பரீட்சைக்கு விடை எழுதினான்.
கே: சனநாயகம் என்றால் என்ன?
வி: பெரும்பான்மையினர் சிறுபான்மையினரைக் கொள்ளையடிப்பது, கொன்று குவிப்பது, சுட்டெரிப் புது – என்பவற்றைச் சட்டத்தால் அங்கீகரிப்பது.
கே: சோசலிசம் என்பது என்ன?
வி: நாடடினின்றும் சிறுபான்மையினரை இல்லா தொழிப்பது
கே: குடியரசு என்று எவ்வமைப்பைக் கொள்வர்?
வி: வாக்களித்துத் தன்னை ஆட்சிபீடமேற்றிய மக்களை அகதிகளாக்கும் தன்மையைக் கொண்ட அமைப்பைக் கூறலாம்.
வினாத்தாள் திருத்தும் ஆசிரியர் விடைகள் சரியா, தவறா என்பதனைத் தீர்மானிக்க முடியாமல் உறைந்து போனார்.
36. மதில்
‘பாத்தியா… இதுக்குத்தான் பாடசாலைக்குப் பக்கத்தில வீடு பார்க்கவேணும் எண்டு சொல்லுறது… எவ்வளவு நல்லதாப் போச்சு!’
‘நீங்கள் என்னதான் சொல்லுறியள்? எனக்கு ஒண்டு மாப் புரியேல்ல!’
‘எடி மடைச்சி… பாடசாலைக்குப் பக்கத்தில எண்டதால தான் மதிலால குதிச்சு விழுந்து அகதிமுகாமுக்கு வந்ந்திட் டம்… இல்லாட்டி எவ்வளவு கரைச்சல்… வாற வழியி லேயே…’ அவள் இடைமறித்தாள்.
‘ஓம்!… ஓம்!… மேல சொல்லிப் பயப்படுத்தாதீங்க… ஆனா ஒண்டைக் கவனிச்சியளே’
‘என்னத்தையப்பா சொல்லிறாய்?…’
‘இந்த மதிலுக்கு அங்கால இருந்தா நாட்டின் சகல உரிமையுமுள்ள சுதந்திரப் பிரசை. இங்கால வந்திட்டா நாடற்ற பிரசை… அகதி என்னப்பா…’
மௌனம் கனத்து இடியென இறங்கியது.
37. பெருமை
வெளிநாடு ஒன்றில் பலநாட்டு மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொரு மாணவனும் தத்தமது நாட்டினைப் பற்றிப் பெருமையுடன் கூறிக் கொண்டனர்.
“எங்கள் நாடுதான் முதன்முதலில் ‘உலகத் தொழிலா ளரே ஒன்றுபடுங்கள்!’ என்று குரல் கொடுத்து நவீன உலகை விழித்தெழச் செய்தது” என்றான் ரூஷிய மாணவன்.
‘தனிமனித வளர்ச்சிக்கு தடையாக எதுவுமே இருக்கக் கூடாது என்ற தத்துவத்தால் உயர்வடைந்த நாடு நமது நாடு’ என்று கூறினான் அமெரிக்கச் சிறுவன்.
‘அஹிம்சையே நமது நாட்டின் சொத்துடமை!” என்றான் பாரதச் செல்வன்.
‘நாட்டின் எவ்வித உயர்ச்சிக்கும் அந்நிய நாட்டிடம் கையேந்தலாகாது என்று மனித சக்தியின் பலத்தை உலக றியச் செய்த நாடு எங்கள் நாடு!” என்றான் சீனப் புதல்வன்.
‘இலவச அரிசி மூலமும், இனக் கலவரங்களாலும் நாட்டு மக்களை பிச்சைக் காரர்களாகவும், அகதிகளாகவுமாக்கி, அந் நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடு என்று எண்ணிய அவன் கூறுவதா எனக்குப் பெருமை?’ என தலைகுனிந்தான்.
38. பார்வைகள்
ஆங்கில மொழியில் மட்டும் கல்வி கற்பிக்கும் பாடசாலை. அங்கு மாணவர்களிடம் பின்வரும் வினா கேட்கப்பட்டது.
கீறிட்ட இடத்தை நிரப்புக.
இலங்கை… வடிவமாகும்.
‘இலங்கை தாமரைப்பூ வடிவமாகும்’ பறங்கி மாணவன் பதில்.
‘இலங்கை தீச்சுடர் வடிவமாகும்’சிங்கள மாணவன் பதில்.
‘இலங்கை கண்ணீர்த்துளி வடிவமாகும்’ தமிழ் மாணவனின் பதில்.
ஆசிரியர் இலங்கையின் வடிவம் பற்றி முதன்முதலாகச் சிந்திக்கத் தொடங்கினார்.
39. நெற்றிக்கண்
சமாதானப் புறாக்கள் வெண் பஞ்சுக் கூட்டமென நடந்தன.
அழகு – மென்மை அமைதி.
‘க்கும்…க்கும்… க்கும் ‘ உலகிற்கு அவை எதையோ போதிக்துக்கொண்டிருந்தன.
அது யோகம். ஞானம் சிந்திக்க கூட்டையடைந்தன.
வேடன் வந்தான்.
கீழே நெருப்பு வளர்த்தான்.
வெப்பப் புகையில் புறாக்கள் தவித்தன, சில சுருண்டன நெருப்பில் விழுந்தன.
ஒரு புறா பொறுமையை இழந்தது; விண்ணில் எழுந்தது.
‘விர்ரென்று கீழிறங்கியது.
நெருப்புத் துண்டொன்றை தூக்கிச் சென்று வேடனின் குடிசையில் போட்டது.
அவன் குடிசை.
வெந்தழலில் வேகியது.
40. வேலி
நீண்ட நாட்களாக நட்பு உவமை சொல்லிக் கொண்டி ருந்த அமுலவர்கள் அவர்கள்.
ஒரு நாள் வேலி அடைக்கும் போது, ஒரு கதியால் தள் ளிப் போனதில், விவகாரம் சமாதானமாக ஆரம்பித்து, கிண் டல், ஆவேசம், கத்திவெட்டு என்று வளர்ந்ததில், தன் மானப் பிரச்சனை பூதாகாரமாகியது.
நீதிமன்றங்கள் பலவற்றின் பல படிகளை ஏறி இறங்கினர். நீண்ட நாட்களின் பின், சமாதானமாகப் போகும்படி நீதி வழங்க, இருவரும் சமாதானமாகி வீட்டிற்குத் திரும்பினர்.
ஆனால்,
இருவரது வீட்டுவாசலில் வாதி, பிரதிவாதிக்கு ஆஜராகி மின்னிக் வழக்கு நடத்திய வழக்கறிஞர்களின் பெயர்கள் கொண்டிருந்தன.
– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.
![]() |
இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடென்ன செய்தது நமக்கு?
வளர்கவி
September 15, 2026
நாய் வால்
நீர்வை பொன்னையன்
September 15, 2026
அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்
இளையவேணி கிருஷ்ணா
September 15, 2026
