கிடைக்கும் பிடிசோறு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 180 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“….ஜபார் நீ பாட்டுப் பாடு…” 

“….சேர் உவனுக்குப் பாடவராது சேர்…” 

“அப்ப உவனுக்கு என்ன வரும்…” 

“…உவனுக்குச் சாப்பிடத்தான் சேர் வரும்…” சோதி கூறுகின்றான். சோதி இப்படிக் கூறியதும் வகுப்பில் பெரும் சிரிப்பு. சகல மாணவர்களும் ஜபாரைப் பார்த்துச் சிரித்தாலும், ஜபார் வெட்கப்பட்டுக் கொள்ள வில்லை. 

ஏனென்றால் இவனுக்கு இது புதிசானதல்ல…. இவன் சாப்பாட்டு விஷயத்தில் மிகப் பொறுப்பானவன் என்பது சகலருக்கும் தெரியும். 

இதால் இவன் பல தடவை நக்கலுக்குள்ளாகி அதுவே பழக்கமாகி விட்டது! 

ஜபாரைப் பாடும் படி கேட்ட கனகசிங்கம் தன் கண்ணாடி யைக் கழற்றி விட்டு மாணவரோடு சேர்ந்து அவரும் சிரிக்கின்றார். 

ஜபார் நீ பாடு… கனகசிங்கம் ஆசிரியர் திரும்பவும் கூறுகின்றார். 

“சேர் உண்மையாத் தான் சொல்லுறன் சேர்… இவனுக்குப் பாட வராது சேர்” சோதி திரும்பவும் ஜபாருக்காக வக்காலத்து வாங்குகிறான் ஜபார்… 

இரத்தம் போன்ற சிவந்த நிறம், வயதிற்கு மிஞ்சிய உடல் வளர்ச்சி பந்து போன்ற உருண்டைத் தலை, தலைக்கேற்றவாறு சுருண்ட கேசம், குழந்தைப் பிள்ளைத் தனமான பார்வை எதையும் பெரிது படுத்திக் கொள்ளாத சுபாவம், நினைத்ததை செய்து முடிக் கின்ற தைரியம், சேட்டை இறுக்கமாய்ப் போட்டு கையை மடித்து விட்டிருப்பான், தொடை தசையை இறுக்கி விட்டிருக்கும் களிசானைப் போட்டிருப்பான். 

மிக அழகானவன் என்று நாக்குப் புரளாமல் கூறி விடலாம் அதை ஆட்சேபிக்கமாட்டார்கள். அவ்வளவுக்கு அழகானவன். வறுமை, வேதனை இவைகளை காணாத வசதியான குடும்பத்தில் பிறந்தவன். 

இருந்தாலும் சகலரோடும் சகஜமாகப் பழகிக் கொள்ளும் தன்மை உள்ளவன், எதிலுமே பாகுபாடு காட்டிக் கொள்வதில்லை. ஆனால் சாப்பாட்டு விஷயம் என்றால் முன்னணியில் நிற்பான். இவனைச் சாப்பாட்டுக்கு ஆவலாதிப்பட்டவன் என்று கூறி விட முடியாது, ஏனெனில் இவனுக்கு வேண்டியளவிற்கு மேலாய் வீட்டில் சாப்பாட்டு வசதி உண்டு. இருந்தாலும் சாப்பாட்டு விஷயத்தில் இப்படி நடந்து கொள்வான். 

சரியாக பத்து மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்காரன் பால் கொண்டு வருவான். இந்த வகுப்பிலுள்ள இருபது மாணவர்களில் இவனுக்கு மட்டும் தான் இப்படி நடக்கின்றது. 

வகுப்பிலும் சகல விஷயங்களிலும் முன்னணியிலே நிற்பான். படிப்பில் அவ்வளவு அக்கறைப்பட்டுக் கொள்ளமாட்டான். ஆனால் பரீட்சைப் புள்ளிகளும் தாராளமாக எடுத்துக் கொள்வான். இது இவனிடமுள்ள தனிச்சிறப்பு. 

“சரி இந்த வகுப்பிலை வேறு யாருக்குப் பாடத் தெரியும்” கனகசிங்கம் மாஸ்ரர் தொடர்கிறார். 

“சேர்… சேர்… இவன் முருகேசு நல்லாப் பாடுவான் சேர்” திரும்பவும் சோதி கூறுகின்றான். சோதி ஜபார் இவர்களோடு சேர்ந் தவன் தான் முருகேசுவும். 

“என்ன முருகேசு பாடுவியா” கனகசிங்கம் மாஸ்ரர் கேட்கிறார். “இல்லை சேர்.. எனக்குப் பாட வராது சேர்…” முருகேசு தலையைச் சொறிகிறான். 

“சேர் இவன் சும்மா சொல்லுறான் சேர்… பொப் பாட்டு எல்லாம் பாடுவான் சேர்” சோதி விடுவதாக இல்லை. 

“சேர் அண்டைக்கு மாணவ மன்றத்திலை முருகேசு பாடினவன் சேர்…” சோதி கூறியவற்றை ஊர்ஜிதப் படுத்துகிறான். அதே வகுப்பு மாணவனை உபைதுல்லா 

இப்பாடசாலைக் கிறிஸ்தவ பெயரைக் கொண்ருந்தாலும் எம்மதமும் சம்மதம் என்பது போல் சகல மதப் பிள்ளைகளும் இங்கு படிக்கின்றனர். 

கனகசிங்கம் ஆசிரியர் இந்த வகுப்புக்குரியவரல்ல. இந்த வகுப்பிற்குரிய ஆசிரியர் இன்று வராத காரணத்தால் அந்த பாட நேரத்தை நிவர்த்தி பண்ணிக் கொள்வதற்காக இவர் வந்திருக் கின்றார். முன்பின் தொடர்பில்லாத வகுப்பு ஆதலால் பட நேரத்தை சமாளிக்கப் பார்க்கின்றார். 

கனசிங்கம் ஆசிரியர். இவர் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் இப்பாடசாலை அமைந்திருக்கும் கிராமத்திற்கு அண்மைக் கிராமமாக “கட்டைப்பறிச்சான்” என்ற சின்னக் கிராமத் தில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றான். 

சிறிய முகம் அந்த முகத்திற்கு எடுப்பான கண்ணாடி இரண்டையும் அழகு படுத்துவது போல் அமைந்திருக்கும் கறுத்த மீசை அவரது சிறிய நெற்றியை மறைத்தும், மறைக்காமல் நிற்கும் சுருண்ட கேசம் நிலத்தில் விழுந்த பந்து துடிப்பதைப் போல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கின்ற மனோபாவம் மாணவர்களின் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் இவர். 

“முருகேசு… நீ… நீ… பாடு…” ஆசிரியர் கூறுகிறார். முருனேசுவால் அந்த நிலைமையைச் சாமாளிக்க முடியவில்லை. அங்குமிங்கும் பார்த்தவன் எழுந்து நிற்கின்றான். வாயை அகலத் திறந்து கொட்டாவி விடுகின்றான். 

வகுப்பில் மெல்லிய சிரிப்பொலி. 

கட்டை உருவம். கறுத்தவன், பக்க வகிடிட்டு வாரிய தலை, ஒரு காற்சட்டை, சேட் அவ்வளவு தான். அவனது காய்ந்த உதடுகளில் வெண்மை படர்ந்து போய்க் கிடக்கின்றது. அவனது கண்களும் பஞ்சடைந்து நீரற்ற தாவரம் போல் வாடிப் போய் நிற்கின்றான். 

முருகேசு எழுந்து நின்று கொட்டாவி விட்டதும் அந்த வகுப் பிலுள்ள மாணவர்களுக்கு சிரிப்பிற்குரியதாக இருந்தாலும் ஆசிரி யரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவரது சிறிய நெற்றியில் சிந்தனையைப் பிரதிபலிக்கும் இரண்டோ மூன்று கோடுகள் வரை கட்டி நிற்பது தெளிவாகத் தெரிகின்றது. 

“என்ன முருகேசு பசிக்குதா…” அவர் திரும்பவும் கேட் கின்றார். அவன் சிரிக்கின்றான். தானாக மலராமல் இதழ் பிரித்து விட்ட மலர் போன்று ஈரப்பசுமையற்ற சிரிப்பு… அவனது கண்கள்… தண்ணீரில் மிதக்கின்ற தூண்டில் மிதப்புப் போல் மிதந்து வருகின்றன… பருவம் தப்பிப் பழுத்த…. வெதும்பல் பழத்தின் தன்மை…? 

எல்லோரும் முருகேசுவைத்தான் பார்க்கின்றனர். இதை ஆசிரியர் உணர்ந்து கொள்கின்றார். 

“….. நீ பாடு…” 

“என்ன பாட்டு சேர்…” 

“அண்டைக்கு மாணவ மன்றத்திலை பாடின பாட்டு…” 

“அது சினிமாப்பாட்டு சேர்…” 

“அதுகென்ன பாடு…” 

“….”

“அது என்ன பாட்டு…” 

“….”

“…உலகத்தில் சிறந்தது எது…” 

“சரி… அதைப் பாடு…” 

அவன் பாடுகின்றான். 

“உலகத்தில் சிறந்தது எது… ஒரு உருவம் இல்லாதது எது… கிடைக்கும் பிடி சோற்றை தனக்கென்று எண்ணாமல் தருகின்ற கோயில் அது… அது தாய்மை… அது தாய்மை… அது தாய்மை… அது…..” 

அவனால் தொடர்ந்து பாட முடியவில்லை. பல்லற்ற ஒருவன் வாய்க்குள் உணவை வைத்துக் குதப்புவது போல் இதயத்தில் உள்ள துயரங்கள் குதப்பப்பட வார்த்தைகள் குறைமாதப் பிள்ளை யாய் பிரசவித்து குரல் வளை வரை வந்து வாய்க்குள் உந்தப்பட்டு வாய்க்குள் அவை மரித்துப் போக… வகுப்பில் பெரும் அமைதி. அவனது கண்களில் கண்ணீர் பனித்து விட்டது. 

தனது புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.

“இவன் ஏன் அழுதான்?” 

இந்த கேள்வி கனகசிங்கம் ஆசிரியரின் இதயத்தை நிறைத்து வழிவதை அவர் முகம் நிலைக் கண்ணாடியாகக் காட்டுகின்றது. 

கேள்வி, கேள்விதான் அவர் இன்னமும் அதிலிருந்து விடுபட்டுக் கொள்ளவில்லை. 

மாணவர்கள் எல்லோரும் முருகேசுவைப் பார்க்கின்றனர். 

கனகசிங்கம் ஆசிரியர் மாணவரின் இங்கிதம் தெரிந்தவர் “நீ ஏன் அழுதாய்” என்று முருகேசுவிடம் கேட்டு விடாமல் வகுப்பைத் தொடர்கிறார். ஆனால் நெருப்புப் பெட்டிக்குள் விடப்பட்ட வண்டு துடிப்பதைப் போல் அவர் இதயத்தில் அந்தப் பிரச்சனை துடிப்பதை அவர் முகம் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது. 

….மாணவர் மன்றத்திலை அன்று பாடிய பாட்டு… அன்று எவ்வளவு அழகாய் பாடினான்.. இன்று அதே பாட்டு. இன்று மட்டும் இவன் ஏன் அழுதான்…? தாய்மை நிலையைப் புரிந்து கொண்டு விட்டானா…? எட்டோ ஒன்பதோ வயது மாணவன் தானே…. இவ னால் புரிந்து கொள்ள முடியுமா…? இவன் ஏன் அழுதான்..? 

பச்சைக் கொடியொன்று முறிந்து அதிலிருந்து சாறு வடிவது போல்… 

இப்பாடசாலை அமைந்திருக்கும் றோட்டால் வடக்கு நோக்கி சிறிது தூரம் நடந்தால் அடர்ந்து வளர்ந்திருக்கும் ஒரு புளிய மரத்தையும் அந்தப் புளியமர அடியோடு ஒரு குடிசை வீட்டையும் காணலாம். அதை வீடென்று கூறிக் கொள்ள நான்கு கப்புக்கள் சில ஓலைகள் அதைச் சுற்றி “நைலோன்” சாறி உடுத்தது போன்ற மறைப்பு அவ்வளவு தான். 

இது தான் அவனது வீடு. அந்தப் புளியமரத்தடி தான் இவர்களது குசுனி. நான் பின்னேரங்களில் பொழுது போக்கிற்காக கடற்கரைக்கு இந்தப் பாதையால் தான் போவேன். அப்படிப் போகும் நாட்களில் இந்த வீட்டை அவதானித்திருக்கிறேன். சில நாட்களில் மட்டும் அந்த குசினியில் சமைத்தற்குரிய சாத்தியக் கூறுகள் தென்படும். மற்றைய நாட்களில்…? 

பனி, குளிர், வெயில் எல்லாத்துக்கும் ஒரே பாதுகாப்பு இந்த மரத்தடிதான். 

இவர்கள் இந்த வீட்டில் எப்படி சீவிக்கின்றார்கள்…? இப்படி பல தடைவ எனக்குள் நான் கேட்டதுண்டு. எனது உள்ளத்திலும் இப்பிரச்சனை தோன்றி சில நேர வேதனையைக் கொடுத்து மறைந்து போய்விடும்….. 

அநேக நாட்கள் இப்படி இவன் முருகேசு ஏன் அழுதான்…? 

கிடைக்கும் பிடி சோற்றை தனக்கென்று எண்ணாமல் தருகின்ற கோயில் அது… அது தாய்மை.. இதோடு தானே அவன் முடித்தான். 

பக்கத்தில் வகுப்பிலிருந்த என் இதயத்திலும் இந்தப் பிரச் சினை கடும் தரையில் விழுந்த பந்து எழும்பிப் பறப்பது போல் இதயத்தில் குத்தி முறிக்கின்றது. சாதாரண நிலை. நடக்கக் கூடிய சம்பவமல்ல என்பது மட்டும் எனக்குத் தெரியும். நான் திரும்பி கனகசிங்கம் ஆசிரியரைப் பார்க்கிறேன். அவர் என்னைப் பார்க்கின்றார். 

ஒரே முனையை நோக்கி நிற்கும் இரு முனைகளின் சந்திப்பு… 

இடைவேளைக்குரிய மணியடிக்க மாணவர்கள் வெளியேறு கின்றனர். ஜபார் வீட்டு வேலைக்காரப் பையன் பால் போத்தலுடன் வருகின்றான். 

‘உதென்ன…’ ஜபார் கேட்கிறான். 

‘சக்கரை…’ 

‘ஏன் சீனியில்லையே…’ 

‘சீனி முடிஞ்சு போச்சாம்… இண்டைக்கு மட்டும் சக்கரை யோடை குடிக்கட்டாம்…. நாளைக்கு சீனி வாங்கலாமாம்…’ 

‘எனக்குக் குடிக்கேலாது’ ஜபார் கோபமாக கிளாசை எறிகின்றான். நிலத்தில் விழுந்த கிளாஸ் உடைய தடித்த பால் சீமெந்து நிலத்தில் படர்ந்து போய் நிற்கிறது! 

வேலைக்காரன் போகின்றான். அவன் போக ஜபார் எழுந்து வெளியே செல்கின்றான். அந்தச் சம்பவத்தைப் பொறுத்து அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

அவன் முருகேசு அந்த இடத்திலேயே இருக்கிறான். 

‘ஏன் முருகேசு நீ தண்ணி குடிக்கப் போகலாயா…’ கனகசிங்கம் ஆசிரியர் கேட்கிறார். அவர் ஒரு தொடர்பை ஏற்படுத் திக் கொள்ளவே இப்படி கேட்கிறார் என்பது எனக்குத் தெரியும். நானும் அவரோடு சேர்ந்து கொள்கிறேன். 

‘இப்ப குடிக்கேலாது சேர். ஆக்களாயிருக்கும். அப்புறமாய் குடிப்பம்’ 

‘உங்கடை வீட்டிலை ஆரார் இருக்கிறியள்…’ 

‘அம்மா, நான், இரண்டு தங்கச்சி, தம்பி…’ 

‘அப்பா இல்லையா…? 

‘இல்லை சேர்…’ 

‘அப்பா என்னண்டு இறந்தவர்..’ கேட்கக் கூடாத கேள்வி தான். ஆனால், என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. கேட்டு விட்டேன். 

‘…. எங்கடை வீட்டு புளிய மரஞ் சேர்… எங்கடை ஐயா அந்தப் புளிய மரத்தடியிலை தான் சேர் படுக்கிறவர்…. ஒரு நாள் இரவு… அந்தப் பளிய மரப்பொந்துக்குள்ளை இருந்த பாம்பொண்டு அவரைக் கடிச்சு… அவர் செத்துப் போனார் சேர்…’ 

என் இதயத்தில் நஞ்சு பூசப்பட்ட ஒரு ஈட்டி குத்தி முறிகிறது. நான் கனகசிங்கம் ஆசிரியரைப் பார்க்கின்றேன். அவர் கண்கள் கண்ணீரால் பனித்து நிற்பது கண்ணாடிக் கூடாகத் தெரிகிறது. 

என் இதயத்தில் நஞ்சு பூசப்பட்ட ஒரு ஈட்டி குத்தி முறிகிறது. நான் கனகசிங்கம் ஆசிரியரைப் பார்க்கின்றேன். அவர் கண்கள் கண்ணீரால் பனித்து நிற்பது கண்ணாடிக் கூடாகத் தெரிகிறது. 

‘ஏன் முருகேசு… நீங்கள் வேறை இடத்திலை போய் இருக்கலாந்தானே…’ 

‘எங்களுக்குச் சொந்தக் காணயில்லைச் சேர்…’

‘அப்ப இந்தக் காணி…’ 

‘இது ஒரு சுடலைக் காணி சேர்… இந்தக் காணியிலை ஒரு தரும் இருக்கறதில்லை. அதாலை தான் நாங்கள் இருக்கிறம்.. 

மீண்டும் ஒரு விஷ ஈட்டி, என்னுள்ளத்தில் குத்தி முடி கிறது… கனகசிங்கம் ஆசிரியர் தலையைத் தாழ்த்திக் கொள்கிறார்… 

‘அது சரி… அப்போதை பாடயுக்கை ஏன் அழுத நீ….’ நான் கேட்கின்றேன். அவன் என்னைப் பார்க்கின்றான். அந்தப் பார்வை அதன் அர்த்தபுஷ்டி அவன் எதையோ மறைக்க முயற்சிப்பது தெரிகின்றது. 

‘சொல்லு முருகேசு…’ 

‘…. சேர்… காலமை சேர் சாப்பாட்டுக்காக… தட்டோடை போய் இருந்தன் சேர்… சேர்..’ வார்த்தைகள் துயரத்தில் புதைந்து குரல்வளை வரை வந்து வாய்க்குள் மரிக்கின்றன. 

‘சொல்லு முருகேசு…’ 

‘… அம்மா சோத்துப் பானையுக்கை கைவெச்சுப் புளிஞ்சா… ஆக ஒரு பிடி… சோறு தான் சேர்.. அம்மா கல்லுக் கொத்தப் போறவ… பசியோடை எப்பிடிச் சேர்… எனக்கும் பசி… இரண்டாம் முறையும் பானையுக்கை. கைவிட்டா சேர்…. அதை எனக்குத் தந்திட்டு… அவ அந்தத் தண்ணியைக் குடிச்சிட்டு போனவ சேர்…… 

அண்டைக்குப் பாடயுக்கை அப்பிடி ஒண்டும் நடக்கயில்லைச் சேர்… இண்டைக்குப் பாடயுக்கை அந்த எண்ணம் வந்திட்டிது சேர் அதாலைதான் அழுதனான்..’ அவன் கூறி முடிக்கிறான். 

அந்தப்பாட்டு ‘கிடைக்கும் பிடி சோற்றை…’ என் இதயத்தை அரித்த வண்டொன்று விடுதலையாக பெரிய பாறங் கல்லொன்று இதயத்தில் விழுந்து அமிழ்கிறது..! 

அவன் கண்கள் திரும்பவும் கண்ணீரால் பனிக்கின்றன. 

ஜபார் விட்டெறிந்த அந்தப் பால் காயாமல் இன்னமும் நிலத்தில் படர்ந்து போய் கிடக்கின்றது. 

…ஒரு பிடிசோறு…? 

…பாலுக்குச் சீனி வேண்டும்..? 

வகுப்பு ஆரம்பமாகும் மணியடிக்கிறது.

– வீரகேசரி 30.11.1975 

– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *