படகுகள் கரை சேருமா ?…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 176 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சமூகத்தில் நிலவுகின்ற வறுமையின் வெளிப்பாடுகளை நேரடி யாகப் பார்த்து அனு பவிப்பதில் நான் பெரும் மனத்திருப்தியைக் காண் பவன். உணர்ச்சி நரம்பு கள் புடைக்கும் வண் ணம் அந்த வறுமை யைப் பற்றி விமர்சிப்பதும் உண்டு. 

இப்படியான காட்சிகளைக் கண்டு விட்டால், அந்தக் காட்சிக்குரிய அடி நாதக் கருத்துக்களை அறியாமல் நான் போவ தில்லை. சீழ் நிறைந்த புண்ணை ஊசியால் குத்தி, சீழை வெளி யேற்றிய பின் ஏற்படுகின்ற உடல், உளத்திருப்தி, அப்படியொரு திருப்தியைத்தான் நான் இதில் காண்கிறேன். 

எனது குடும்பத்தோடு வச்சிரம் போல் ஒட்டியிருக்கும் வறுமைதான் இதற்குக் காரணம். 

இப்போது கூட எனது பார்வை, இந்தப் பார்வையில் படுகின்ற காட்சிகளின் உணர்வுகள் சங்கமிக்கின்ற இதயம் ஆகிய இரண்டும் ஒரு காட்சியில் நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றன. 

அந்தக் காட்சி! 

ஒரு பிச்சைக்காரக் குடும்பம். ஒரு தாய் மூன்று பிள்ளைகள். 

பருத்தித்துறை பஸ் நிலையத்திலிருந்து பிரசவமாகியிருக் கும் கறிக்கடை ரோட்டு, இந்த ரோட்டு வந்திணைகின்ற கடற்கரை ரோட்டு, இந்தச் சந்தியில் தான் நான் பஸ்ஸிற்காக நிற்கிறேன். இந்தச் சந்தியின் இடது பக்கமாக பரந்து வளர்ந்திருக்கும் பூவரசு மரத்தடியில்த்தான் அந்தப் பிச்சைக்காரக் குடும்பம் அமர்ந்திருக் கின்றது. 

எனது நண்பன் கிருஷ்ணமூர்த்தியும் என்னோடு நிற்கின் றான். கிருஷ்ணமூர்த்தி இதே ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் பேச்சில் நிதானமானவன். என்னைப் போன்ற வறுமையின் பிரதிநிதிகளை ஆதரிப்பதிலும் முதன்மையானவன். 

அவனுடைய முக அழகு அதிலுள்ள அமைதி, கூச்ச மின்றிப் பல தடவைகள் பார்க்கலாம். 

“என்ன மச்சான் கடும் யோசினை” சிவா கேட்கிறான். என்னை நன்கு புரிந்தவர்களில் அவனும் ஒருவன். எனது சிந்தனையின் கருவையும் அவன் புரிந்து கொண்டுதான் பேசுகிறான் என்பதை அவனது கேள்வியில் நான் புரிந்து கொள்கிறேன். 

“அந்தக் குடும்பத்தைப் பாத்தியா…” 

“…உப்பிடி எத்தினை குடும்பங்கள்.. தங்கடை கைக் குள்ளை வாழ்க்கையை அடுக்கி வாழுறவை இருக்கிற இந்தச் சமுதாயத்திலை… வாழ்க்கையின்ரை கோரப் பிடிக்குள்ளை அடங்கி தெருத்தெருவாய் இழுபடுகிற இது போன்ற குடும்பங்களும் இருக்கத் தான் செய்யிது… அதுவும் என்ன ஒன்றா, இரண்டா….” சிவா அர்த்த புஷ்டியாகப் பேசுகிறான் இது அவனது வழமையான பேச்சு. 

“இண்டைய பஞ்ச நிலையில், மூண்டு புள்ளையளும் தாயும்… பிச்சை எடுத்து எப்பிடி மச்சான் சீவிக்கிறது….” 

“மானத்தை உதறித் தள்ளிப் போட்டு வீதிக்கு வந்த இது களைத்தான் நீ காணுறாய். மானத்துக்கஞ்சி வீட்டுக்குள்ளை கொட்டாவி விடவும் இயக்கமில்லாமல் எத்தினையோ சீவன்கள் கிடக்கிது… உயிருள்ளவரை வாழ்க்கை என்ற தத்துவந்தான்..” திரும்பிச் சிவாவின் முகத்தைப் பார்க்கிறேன். அவன் முகத்தில் இயற் கையாகவுள்ள பசுமையில் இழையோடிப் போயிருக்கும் சிந்தனைக் கோடுகள் – அவனது இதயத்திற்கு உரைகல்லாகு கின்றது. 

திரும்பவும் எனது பார்வை அந்தக் குடும்பத்தில் படிகிறது. அந்தப் பெண்” அவள் மிகவும் அழகானவளாக இருந்திருக்க வேண் டும். நிலைகுத்தித் தெறிக்கின்ற பார்வையும் நெருப்பிலிட்ட பூப்போல் வாடியிருக்கும் அவளது முகமும், அதற்கு வரைகோடிட்டுக் காட்டு கின்றன. 

கிட்டத்தட்ட முப்பது வயதிருக்கும். சிவந்த மேனி. ரோட்டுப் புழுதி படர்ந்து முறுக்கேறிப் போயிருக்கும் கூந்தல், ஒரு நாலு முழத் துண்டு ஒரு சட்டை… அவளுக்குப் பின்னால் இரு பிள்ளைகள் நிற் கின்றன. இருவருமே ஆண்கள். பிறந்த மேனியாய் நிற்கின்றனர்… இருவருக்கிடையேயுள்ள வயது வேறுபாட்டைக் காண முடியாவிட் டாலும், இருவரும் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் தான்… 

அவளுக்கு முன்னால் சற்சதுரமான ஒரு சாக்கில் ஒரு பெண் குழந்தை, இரவு முழுவதும் கத்தி விடியற் காலையில் வீங்கி கரையில் வெள்ளை புரண்டு கிடக்கின்ற மாரித்தவளை போல, வயிறு வீங்கி, கைகால்கள் சூம்பி, கண்கள் பருத்து, குழிவிழுந்து பிதுங்கி… மரண கோலங்கண்டு கிடக்கின்றது. 

பூவரசு மரத்தின் இடைவெளியூடாகப் படுகின்ற சூரிய ஒளி யால் முகம் வியர்த்து எண்ணெய் படர்ந்து போய்க்கிடக்கின்றது. 

‘சிவா…”

“என்ன….” 

“அந்தச் சாக்கிலை கிடக்கிற பச்சைப் பாலகனைப் பாத்தியா” 

“இரண்டு வருஷமாய் பாக்கிறன்….. உதே கோலந்தான்…”

“இந்த உலகத்தையே அறியாத பிஞ்சுகள் கூட இந்த உலகத்தின் தாக்கத்தால் படுகிற வேதனை…” 

“உலகத்தை அறிஞ்சதுகளே அந்த உலகத்தின் தாக்கத்தால் வேதனைப்படும் போது… உலகத்தையறியாததுகள் எப்படித் தப்ப முடியும்…” 

அந்தப் பிள்ளையின் கோலம் – மன ஈரமுள்ள எந்த மனி தனையும் குத்தாமல் விடாது – வருவோர் போவோர் ஏதோ பிச்சை போடுகின்றனர். 

அவள் அவைகளை எடுத்துச் சாக்கின் கீழ் மறைத்துக் கொள்கிறாள். 

யாரோ குடித்து விட்டெறிந்த செவ்விளநீர் கோம்பை ஒன்றை இரண்டாகப் பிளப்பதில் மல்லுக்கட்டி நிற்கின்றனர் அந்தப் பிள்ளை கள் இருவரும். அவர்கள் அந்தக் கோம்பையைக் கல்லில் குத்து கின்ற பக்குவம், அவர்களது அனுபவத்திற்கு நிலைக் கண்ணாடியா கின்றது. வெகுவிரைவில் பிளந்து ஆளுக்குப் பாதியாக எடுத்துக் கொள்ளுகின்றனர். 

சிரட்டையோடு ஒட்டியிருந்த தேங்காய் வழுவலைத்தன் கைவிரல்களால் வழித்து மறு கையைக் கோலிப் பிடித்து -அதற்குள் போட்டுக் கொண்டு சாக்கில் படுத்திருந்த பிள்ளையை நோக்கி வந்தவன் – அந்தக் குழந்தைக்குத் தீர்த்தப் போகிறான். 

அதைத்தாய் தடுக்கின்றாள். 

“அதுக்கு வயித்துக்குக் குடுத்து, உங்கடை வயித்திலை அடிக்கப் போறியளே..” அவள் கூறுகிறாள். 

“நீ நெடுகளும் இப்பிடித்தான்… தங்கச்சிக்குக் குடுக்க விட மாட்டாய்…” அவன் திரும்பவும் கொடுக்கப் போகின்றான் அவள் வலுக்கட்டாயமாக மறிக்கின்றாள். இறுதிவரை அவள் அனுமதிக்க வில்லை. 

அவன் அழுதபடி அங்கிருந்து சென்று பூவரசு மர அடியோடு அமர்கிறான். 

“மச்சான்….” 

“என்ன..” 

“இவள் நெடுக உப்பிடித்தான்..” 

“உப்பிடியெண்டால்…” 

“உந்தப் பிள்ளைக்கு ஒண்டும் குடுக்கவிடாள்…”

“ஏன்..” 

“ஏனெண்டு தெரியாது…” சிவாவாலும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை…. 

“ஏன் சிவா… இந்தப் பிள்ளை இவளின்ரை தானே..” 

”ஓம்..” 

“அப்ப…” 

அந்தக் காரணம்?…. நமதிருவருக்குமே புரியாத புதிர்!

“ஐயா… இந்தப் பச்சை பாலனைப் பாருங்கோ….. கருணை காட்டுங்கோ…” 

அவள் கெஞ்சுவது எனது சிந்தனையைத் திசை திருப்புகின்றது.  

அந்தச் சின்னஞ்சிறிசின் பசியைச் சுட்டிக் காட்டிக் கெஞ்சு கிறாள்… அப்படியென்றால்?… இவள் செயல்?…! இவள் தாய் தானே, தாயே தான் பெத்த பிள்ளையின் வயித்துக்குத் துரோகம் செய்து தன் வயிற்றை நிரப்புவாளா?…. 

‘சிவா…” 

“என்ன…” 

“இவள உனக்குத் தெரியுமா…?” 

“நல்லாய்த் தெரியும்…” இதே ஊரைச் சேர்ந்தவள் தான். அவளின்ரை புருஷன் லொறிக்கீளீனராய் இருந்தவன். லொறி கல்லு, மண் ஓடு இப்படி ஏதாவது ஏத்தப் போனால் இவளும் ஒரு கூலியாகப் போவாள். ஒரு நாள் லொறி புரண்டு அந்த இடத்தி லேயே இவள் புருஷன் இறந்து போனான். அதற்குப்பிறகு இவள் அப்பிடியும், இப்பிடியும் கூலி வேலை செய்து வந்தாள். 

நாட்டிலை பஞ்சங் கூடி கூலிவேலை செய்யிறவயின்ரை மதிப்புக் குறைஞ்சது… அதிலையும் இவள் பெண்… உழைப் பில்லை, பிள்ளையள் பசி பட்டினி… பிச்சை எடுக்க வந்திட்டிதுகள், தினசரி ஏதோ கிடைக்கிறதைக் வைச்சுச் சீவிக்கிதுகள்… ஆனால் புருஷன் இருக்கையுக்கை உந்த இளைய புள்ளை நல்லாய்த் தான் இருந்தது… பிறகு வறுமையாலை இப்பிடி நொஞ்சானாய் வந்திருக்கலாம்…” 

“….. அப்பிடியெண்டால் மற்ற இரண்டும்…” 

“அதுவும் சரி தான்…” 

“சிவா…” 

“என்ன…” 

“இதுகளுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிக் குடுத்தாலென்ன..”

“அதுக்கென்ன தருமந்தானே…” 

இருவரும் பக்கத்துக் கடைக்குச் சென்று மூன்று வாழைப் பழங்கள் வாங்கி வருகின்றோம். இந்த வாழைப்பழத்தைக் கொண்டு அவளது உள்ளத்தை எப்படியும் அறிய வேண்டுமென்பது தான் எனது முடிவு. 

நான் அவளுக்கு முன்னால் குந்தியமர்கிறேன். 

“என்னக்கா…. இந்த ஊர் தானே” 

“ஓமுங்க” 

“புள்ளையள் மூண்டு தானே” 

”ஓமுங்க” 

“இதுக்கென்ன சுகமில்லையே….” 

“சாப்பாடு இல்லையையா… அதாலைதான்… “

”… சாப்பாடு குடுக்கிறது…” 

“என்ன சாப்பாடு குடுக்கிறது…” 

“இதுக்கெண்டு தனிச் சாப்பாடு குடுக்க என்னங்க ஐயா கிடக்கிது… நாங்கள் சாப்பிடுகிறதுதான்..” 

“அப்ப எல்லாந்தான்..” 

“நக்கிற நாங்கள் வசதியும், ருசியும் பார்த்து நக்க முடியுங்களா…. எல்லாந்தான்…” 

நான் கொண்டு சென்ற மூன்று வாழைப்பழங்களில் இரண்டையும் அந்த இரு பிள்ளைகளிடமும் கொடுத்துவிட்டு, ஒன்றின் தோலை உரித்து பழத்தின் ஒரு பகுதியைப் பிய்க்கிறேன். நான் குழந்தைக்குத்தான் கொடுக்கப் போகிறேன். என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டான். 

“அதை என்னட்டைக் குடுங்கோ… நான் புள்ளைக்குக் குடுக்கிறன்…” 

“….நான் குடுக்கிறன்…” 

“….வேண்டாம்…” 

“ஏன்…” 

“…. குடுக்க வேண்டாம்…” 

“ஏனக்கா…… நானும் உங்களைப்போல ஒருவன்தான், நான் குடுக்கிறன்….” 

“வேண்டாம்” 

“அதிலை என்ன தப்பு” 

“தப்பொண்டுமில்லையையா சாப்பாட்டைக் குடுத்து, எங் கடை வயித்தில் அடிக்காதையுங்கோ” அதே வார்த்தைகள். நான் எதிர்பார்த்த நிலைக்கு அவள் வந்து விட்டாள். எப்பிடியும் அவள் உள்ளத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்கு. 

“அக்கா இந்தப் புள்ளையின்ரை வயிறு நிறையிறதாலை உங்கடை வயித்துக்கு என்ன நட்டம்’ நான் நேரடியாகக் கேட்கின்றேன். 

அவள் என்னைப் பார்க்கின்றாள். நான் அவளைப் பார்க் கின்றேன். மை உறிஞ்சும் ரியூப்புப்போல என் இதயத்தை உறிஞ்சு கிறாள். நம்பிக்கையுணர்வு அவளது பார்வையில் இழையோடு கின்றது. 

அவள் கண்கள் கண்ணீரால் பனிக்கின்றது. 

“ஐயா” இதயத்தின் அடித்தளத்தில் நிறைவு பெற்று பிரசவிக்கின்ற வார்த்தை. 

“அக்கா என்னாலை உனக்கு எப்பவும் ஆபத்தில்லை உள்ளதைச் சொல்லு” 

“ஐயா பெத்த வயிறு தீப்பத்தி எரியுது” 

“சொல்லக்கா…” 

“இந்தப் பாலனுக்கு இப்ப சாப்பாடு குடுத்தால் சாப்பிட்ட தெம்பிலை கையைக்காலை அடிச்சு விளையாடும். போறவாறவை யைப் பாத்துச் சிரிக்கும். அதுக்கு உலகந்தெரியுமா அப்பிடி இந் தப்புள்ள கிடந்தால் ஆர் பிச்சை போடுவினம்” 

“அதுக்காக” 

“இந்த உலகத்திலை இரங்கிறவை குறைவு. அப்பிடி இரக்க குணமுள்ளவை யளையும், இப்பிடிச் செத்தும் சாகாமல் கிடக்கின்ற இந்தப் பிள்ளையைக் காட்டித்தான் இரங்க வைக்க வேண்டிக்கிடக்கு 

“அதாலை” 

“அதாலைதான் இந்தப் பாலனுக்கு பகலிலை சாப்பாடு குடுக்கிறதில்லை” 

“அதுக்காக இந்தப் பச்சைப் பாலனை வதைச்சு நீங்கள் வயிறு வளக்கிறியளா?….” சிவா அனுதாபத்தோடும், ஆவேசத் தோடும் கேட்கின்றேன். 

“ஐயா நான் பெத்தவள்” உங்களைவிட எனக்குப் பாசங்க கூட” என்ரை வயித்திலை பிறந்த மற்ற இரண்டு உலகம் தெரியாதது களின் வயித்தைக் கழுவுறதுக்காகத்தான்… இப்பிடிச் செய்யிறன்… இது பசி எண்டு கேக்காது” அதுகள் இரண்டும் பசி எண்டு கேக்கிதுகளே நான் என்ன செய்ய…? 

உங்களுக்கு இண்டைக்குத்தான் கேள்விக்குறியாய் பட்டிது எங்களுக்கு எப்பவுமே எங்கடை வாழ்க்கை கேள்விக்குறி தான்… 

“ஐயா கடலாலை தத்தளிக்கிற கட்டுமரத்துக்கு கரை காட்ட வெளிச்ச வீடாவது இருக்கு… எங்கடை தவிப்புக்குக் கரை காட்ட, எந்த வெளிச்சவீடு இருக்கு”. 

பனித்த அவள் கண்கள் புருவங்கட்டி துளிகளாகி சாக்கில் செத்தும் சாகாமல் கிடக்கின்ற பிள்ளையின் வீங்கிய கல்லுப் போன்ற வயிற்றில் விழுந்து சிதறுகின்றன. 

– வீரகேசரி 25.05.1975 

– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *