கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2024
பார்வையிட்டோர்: 869 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனை எழுப்பவில்லை. அவன் தூங்கும் அலங்கோல கவர்ச்சியைக் கவனித்து நின்றாள். 

இப்போது அவன் கணவனாய்த் தோன்றவில்லை. ஏதோ விலங்கு, வழி தவறிப் போய், உள்ளே வந்து பாயில், அவள் பக்கத்தில் படுத்து விட்டது. எம்மா உண்டாலும் ஒட்டிய அந்த ஓநாய் வயிறும், மேல் தூக்கிய கைகளடியில் அக்குள் மயிர்ச் சுருளும், தலையணை மீது அவிழ்ந்த கட்டுக் குடுமியும் அந்த பாவனைக்கு உரமேற்றின. இத்தனை வருடங்களில் ஒரு தரமேனும் அவன் குறட்டை கேட்ட நினைவு அவளுக் கில்லை. மாலைக் காற்றில் ஜலத்தின் நலுங்கல் போல, அந்த மார்க் குழியில் அந்த மிதப்புத்தான் அவள் தைரியம். 

சுபாவத்திலேயே அவனுக்குத் தூக்கத்தில் அரைக் கண். அதனால், சமயத்தில் அவனுக்குத் தூக்கமா. விழிப்பா எனச் சட்டெனப் புரிவதில்லை. 

அவள் பயத்திற்கேற்ப அவனுக்கு விழிப்பும் சட்டென வராது. அவன் தூக்கத்தைக் கண்டு அசூயை கொள்வாள். ஏனெனில் அத்தனைக்கத்தனை அவளுக்குக் கோழித் தூக்கம், கூரையிலிருந்து காரை யுதிர்ந்தாலே போதும், கண் கலைந்து போம். அப்புறம் விடியும் வரை இருட்டில் விட்டத்தை அண்ணாந்த வண்ணம் விடியக் காத்திருக்க வேண்டியதுதான், 

அதோ,கூடத்தில் வௌவாலின் இறக்கை வீச்சு, சமயலறை ஜலதாரையுள் “புஸ்-ஸ்-ஸ்” 

(அது உன்னை என்ன பண்றது? இன்னிக்கா, நேத்தா, மூணு தலை முறையா கேட்குது! இதுவரை யார் கண்ணுக்கும் பட்டதில்லை. இதுவரை யாரையும் கடிச்சு பழிக்கு ஆளான தில்லே. அது பாட்டுக்கு வரது. போறது. உன்னை என்ன பண்றது?’) 

கொல்லையில் தென்னங்கன்றின் உச்சியில் அதென்ன “டொக் டொக்?” 

வைக்கோல் போர் மேல் யாரோ குதிச்ச மாதிரி ‘பொத்’ துனு சத்தம் கேட்டுதா? 

அக்ரகாரம், பேர் தான் பெரிசு. ஒரே சாரி; எண்ணி நாலு வீடு. எதிர்ச்சாரியின் பெருமாள் கோவில் மதில் முதல்வீடு கிலம், வாசலும் உள்ளும் நுண படர்ந்து சிலந்தியும் ஒட்டடையும் தான் வாசம், 

அடுத்தது தன் வீடு. 

மேலண்டை வீட்டைக் கழுகாய்க் காத்துக் கொண்டிருந்த தொண்டு கிழத்தை எடுத்துப் போய் ஆறு தாண்டி-ஆறாம் ஆறு அதென்ன ஆறோ, பேறு தான் ஆறு என் நினைப்பு தெரிஞ்சு நானும் ஆளாகு முன்னே எட்டு வயசிலே தாலியைக் கட்டினார். இங்கே வந்தாச்சு. இப்போ எனக்கு வயது நாற்பதா, நாற்பத்திரெண்டா, எண்ணிக்கை கூட மறந்து போச்சு-என் நினைப்பிலே தண்ணி ஓடினதா ஞாபகமில்லே – ஆறு தாண்டி புளிய மரத்திலே பொசுக்கி யாச்சு. சொல்லியனுப்பி, கொள்ளி வைக்க வந்த புள்ளி அடுத்தநாள் சாம்பலைக் கிளர நிக்கல்லே, செத்தவர் சொத்து, குருவிக்காரன் குடுகுடுப்பைக்குக்கூட எடுபடா துன்னு கண்டதும் கிழவியை வாய்க்கு வந்தபடி திட்டிட்டு ராவோடு ராவாக் கிளம்பிப் போயாச்சு. பாலில் குளிராத ஆவி இன்னும் அந்த வீட்டைச் சுத்திண்டுதான் இருக்கு, இல்லாட்டா திடீர் திடீர்னு ஏது அந்த முக்கல், முனகல், பெருமூச்சு, விசிப்பு பக்கத்து வீட்டுச் சுவர் பின்னாலிருந்து? 

கோடி வீட்டில் அடிக்கடி குடிமாற்றம் ஒரு சமயம் பள்ளிக்கூடத்தின் புது வாத்தியார். இன்னொரு சமயம் தண்ணீர்ப் பந்தல். தயிர் சாதம். மசால் வடை, சுண்டல், வடைகறி (உன் துட்டு எங்கே போவது நாளைக்கு வாங்கிக்கோ ஐயரே இன்னொரு வடையை) மூணு மாதத்தில் கடைபோண்டி, அடுத்தாற் போல் எண்ணெய்ப் பிண்ணாக்கு கிடங்கு. அப்புறம் இரண்டு மாதம் காலி, பிறகு “லொட்டு லொட்டு” ஒரு தட்டான் பட்டறை, அப்புறம் திண்ணையில் ஒரு சோடாக் கடை, மறுபடியும் காலி-இதுமாதிரி ஏதோ ஒண்ணு,ஆனால் எதுவுமே உருப்பட்டதில்லை. 

ஆனால் அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். கொடுத்து வெச்ச ஆசாமி. 


ஆனால் வேறு என்னதான் வேலை? 

இருப்பது பரம்பரையாய் ஒரு கோவில் பூஜை. 

இரண்டு காலம்தான், அதற்கே ஒழுங்காய் நெல் அளக்க ஊருக்கு வக்கில்லை. அதற்கு கொசிர் மூலைப் பிள்ளையார் பூஜை. பாவ தோஷத்திற்கு அஞ்சி,இரக்கப்பட்டு வாரத்துக்கு ஒரு முறை இருமுறை பண்ணினால் உண்டு; இல்லையெனில் கேட்க வாயில்லை, எத்தனைசாமியானாலும் என்னா பொங்கினது ஒரு நைவேத்யம் தானே! சோற்றை மூடிய சிக்குத் துண்டை கொஞ்சம் தூக்கி மணியை இரண்டு ஆட்டு ஆட்டி உடனே மூடு! 

எல்லாம் அப்பப்போ உடல் அசதிக்கும் மனத்தென்புக்கும் தக்கபடி. 

சுவாமி சன்னதியில் தோளுயரம் கங்காளம். அம்மன் சன்னதி அண்டா மாருயரம். மனமிருந்தால் கிணற்று ஜலத்தை மொண்டு இரண்டு ஏனங்களையும் விளிம்புகட்டி அபிஷேகம் பண்றதுதான். இல்லையோசொம்பு ஜலத்திலேயே இரண்டையுமே நடத்தறதுதான். சுவாமி கன்னத்தில் அறை வதற்குப் பதிலாக, லிங்கத்தின் முகத்திலே வீசிவிட்டுக் கதவை மூடிக் கொண்டு வெளியேறுவதும் உண்டுதான். 

இஷ்டப்பட்டால் நாள், கிழமையில் தனக்குத் தெரிந்த அலங்காரத்தில் உத்ஸவரை முறுக்கிக் கட்டி தாத்தா காலத்துக் கிழிசல் பட்டைத்தான் கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டு, வருவோருக்கு விபூதி பிரசாதம் சிம்ட்டா பிடித்து வழங்கலாம். இல்லையோ, அது கெட்டதுபோ! கையை நீட்டுவோருக்கு, மாடப்பிறையில் கொட்டியிருக்கும் திருநீறைச் சுட்டிக் காட்டி விட்டுப் போய்க் கொண்டே இருக் கலாம். இங்கே தோடா போடுவோருமில்லை. சாட்டை சொடுக்குவோருமில்லே. 

எல்லாம் அப்பப்போ உடல் தென்புக்கும் மன அசதிக்கும் ஏற்றபடி. 

ஆனால் வரவர இப்பவே தூக்கந்தான். சமையலாச்சு. 

இடம் பெருக்கி இலை போடுவதற்குள் சாய்வுத் திண்ணையில் ஒரு சின்ன மருளாட்டம். தோளைத் தொட்டு எழுப்பலையோ அப்படியே காலும் நீட்டிக் கொள்ளும். அப்புறம் சாப்பாடு கூப்பாடுதான். 

சாப்பாடு ஆச்சா, பாக்கை ஊதி வாயில் போட்டு, வெற்றிலையை தொடையில் துடைத்து மூணாவதைத் தடவும் போதே தலை சாய்ந்துவிடும். அதென்ன தூக்கமோ? உள்ளங்காலில் “சுறீல்”னு ஒரு தணலை வெச்சால் என்ன? மூஞ்சியில் ஜலத்தைக் கொட்டட்டுமா? 

எனக்கே தூங்கறவாளைக் கண்டால் ஆகல்லே. ஆனால் அத்தை முழிச்சுண்டுதானே யிருந்தார்; அதுவுந்தான் ஆச்சோ? அத்தை கண்மூடறவரை கண்கொட்டல்லே, போன அப்புறம்கூட இமையை யாரோ இழுத்து மூடி அந்த விறைச்ச பார்வையை மறைக்கும் படியாச்சு. யார் என்ன செய்யறா, ஏது சொல்றான்னு கவனிச்சு கவனிச்சு அத்தைக்கு கண்மூடவே மறந்து போச்சு. அதுவும் கடைசி காலந்திரத்தில் ஆளை வதைச்சே எடுத்துட்டார். எண்பதும் தாண்டி இருந்த வயசில் கடைசி பத்து வருஷம் படுத்த படுக்கையில் தொட்டதெல்லாம் குத்தம்தான். எதிரே நின்னாலே குத்தம்தான். “என்னடி பாக்கறே? மூச்சு போகலையேன்னா” சரின்னு கண் மறைவா வளைய வந்தாலோ: 

போயிடுங்கோ; ரெண்டு பேரும் போயிடுங்கோ! எதிரே இருந்தால் தானே கடையற் தொண்டையில் பாலூத்த வேண்டிவரும்! அதுசாக்கில் என் உசிர் தங்கிடு மோன்னு கவலை. இழுத்துண்டிருக்கிறது அடங்கறதுக்குள் ரெண்டு பேரும் மூங்கிலைத் தேடப் போயிட்டா. அவன் வெட்டுவான். இதள் கட்டிண்டு வருவாள்.’ 

திட்றத்தில் பிள்ளைன்னும் பார்க்கல்லே. நான்தான் தம்பி பொண்ணுன்னும் பார்க்கலே! போகப் போக நெஞ்சில் ஓதமே வத்திப் போச்சு. இனி எழுந்திருக்கப் போவதில்லை. இத்தோடு சரின்னு தனக்கே தெரிஞ்சு போன பின் இருக் கிறவா மேல் போறவாளுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? பொறாமையா, பயமா,எதனால் இந்தக் கொடூரம்? ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டைன்னு நம்மால் முடிஞ்ச புலிப்பாலைக் கறந்து வந்து கொடுத்தாலும் செம்போடு மூஞ்சியில் வீசியெறிவார். 

கடைகியில் தான் என்ன அவஸ்தை! உயிர் தயாரானாலும் உடல் ஆகல்லே. உடம்பில் பூச்சியே வெச்சுப் போச்சு. உயிரும் உடலும் வாசலுக்கு வாசல் மல்லிட்டு, அங்கம் அங்கமா அடங்கி கடைசியில் உயிர் போச்சுன்னு ஆனதும் ”ஐயோ”ன்னு அழுகைக்கு முன்னால் “அப்பா டான்னு” மூச்சுத்தான் தெரியறது. 

ஆனால் எங்கே போனார்? கூடத்து அலமாரியில் பானை யில், அஸ்தியாக இன்னும் புழுங்கிண்டுதான் இருக்கார். 

”ஒரு ஊரா, கோவிலா,குளமா, ஒரு விரதமா, ஜபமா, முழிப்பா- இந்த ஜென்மத்துக்கு ஒண்ணும் கிடையாது. ஒரு விமோசனமில்லாமல் இதோ இப்படியே போயிடப் போறேன். இந்த எலும்பையாவது எடுத்துப் போய் வருஷம் ஆவதற்குள் கங்கையில் கரை. கரைப்பையா இல்லை இந்த சமயத்துக்குத் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்டிப்பிட்டு அப்புறம். 

“ஹாய்யா, இருந்துடறையா?ன்னு வாயைத் திறந்து சொல்லு”ன்னு கையை அடிச்சு வாங்கிக்காத தோஷமா வாக்கை வாங்கிண்டு தானே ஆவி பிரிஞ்சுது. 

பாவம் அத்தை! பூச்சியோ புழுவோ, நாத்தமோ, அழுகலோ, வார்த்தையோ கொடுமையோ, இருந்த வரைக் கும் அவராவது இருந்தார். குழந்தையில்லா வீட்டில் அவர் தான் குழந்தையாக சிசுருஷையில். ராமுழிச்சு, பகல் தூங்கி விழுந்து போகப் போகப் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் வெளிச்சம்னு ஒரு அடையாளம் தவிர மற்றதெல்லாம் மறந்து போய், பொழுது போனதே தெரியாமல் போச்சு. அவர் ஆட்சி போச்சு. கூடவே வீடும் வெறிச்சிட்டுப் போச்சு. பேச்சும் செத்துப் போச்சு. இருள் வழிக்குக் கொடு உறவும் உறுதுணை தானே? 

போறவா போனப்புறம் தான் தெரியறது. இருக்கறவா வாழ்வும் போயிண்டேயிருக்கிறது தான் என்று–வாழ்வா இது? 


சாய்வுத் திண்ணையில் அரைத் தூக்கத்தில் அயர்ந்திருக் கையில் வயிறு மீது ஏதோ ‘தொப்’!பென்று விழுந்து விழித்துக் கொண்டான். 

இரண்டு பல்லிகள் – ஆள் மேல் விழுந்தும் பிரியவில்லை. ஒன்றின் வயிற்றை ஒன்று கவ்விக் கொண்டு, இரண்டில் ஒன்றின் சாவுவரை சண்டை மூர்க்கத்தில் உருண்டு கொண்டே திண்ணையிலிருந்தும் விழுந்தன. 

பலனுக்குப் பஞ்சாங்கம் பார்க்கத் தெவையில்லை. இதெல்லாம் மனப்பாடம். வந்து கேட்பாருக்குச் சொல்லியாக வேண்டுமே! கோவிலுக்குக் குருக்கள், ஊருக்குப் புரோகிதன், மாலையில் மாந்தரீகம்! காலையில் வேப்பிலையடிப்பு, இதெல்லாம் வயிற்றுப் பிழைப்பின் தந்திரத்தில் சேர்ந்த தாச்சே- “வயிறு புத்ரலாபம்” என்ற விடை மனதில் பளிச் சிட்டதும், முகம் புன்னகையில் இளகிற்று. 

எப்பவோ, என்றோ, நேர்ந்தது கூட மறந்து போச்சு. சாந்தி முகூர்த்த சுருக்கில்-என்னத்தையோ ஒரு துணியில் சுற்றிக் கொண்டு நாலுபேர் வீட்டை விட்டுக் கிளம்பினதாய் நினைவில் ஒரு தோற்றம். தாது அடித்து மடிந்தது. அந்த சுமையைக் கூட அவன் தூக்கவில்லை. அவன் தகப்பனார் எடுத்துச் சென்ற ஞாபகம். 

அதற்குப் பின் லாபமுமில்லை. நஷ்டமுமில்லே.முதலில் நேர்ந்தால் தானே லாப நஷ்டத்திற்கு! 

சுற்றம் விட்டுப் போகக் கூடாது என்று இந்தக் கூட்டத் திற்கே உள்ள பயத்தில் தனக்குள் தானே பின்னிக் குமைந்து இறங்கி வரும் தலைமுறையில், எந்தக் கிளை, இலையிலேனும் தாய்க்கு மகன் தாலி கட்டி இருந்தாலும் அண்ணனுக்குத் தங்கை வாழ்க்கைப் பட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. 

இப்படி வழி வழியாய்ச் செத்து வரும் ரத்தத்தில், மல டுக்குப் பொறுப்பு யார் மேல் தனியாய்க் கட்டுவது? ஆண் மேலா பெண் மேலா? 

அட, அப்படித்தான் விருத்தியாகாமல் என்னோடு அற்றுப் போனால் தான் என்ன? வாரிசு இல்லாமல் என்ன சொத்து பாழாப் போறது? 

பொருளே முன்னால் எங்கிருந்து சேரும்? இந்த ஜாதிக்கே ஜாதகம் எங்கே சரி? சிவ சொத்தில் புழங்கி உருப் படுவது எது? தெரிந்து எடுத்தால் திருட்டு, தெரியாமல் நேர்ந்தால் பிழை என்று விளக்கம் தந்து விடலாம். ஆனால் வினை ஒன்றுதானே? 

அறியாமல் செய்தேன் என்பதே ஒரு புளுகு. தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா? இருந்தால் அவன்தான் முதல் மோசடி..அவன் மேல் தான் முதலில் கல்லை எறிய வேண்டும்- என்னையேதான் சொல்லிக்கறேன். அந்த நாளில், எப்போதேனும் பக்கத்தூரில் உற்றார் உற வினர் வீட்டில் நேரும் ஒரு கல்யாணம் கார்த்திக்கு, இவள் போட்டுக் கொள்ள, அம்பாள் கழுத்திலிருந்து அட்டிகையோ காசுமாலையோ கடன் வாங்கியிருக்க மாட்டேனா – தர்மகர்த் தாவை கைக்குள் போட்டுக் கொண்டோ அவன் கண்ணில் மண்ணைத் தூவி விட்டோ? அட்டிகையென்ன, ஒட்டி யாணமேகூட 

எடுத்ததற்குப் பிராயச்சித்தம் வெள்ளிக்கிழமை ஸகஸ்ர நாமத்தைக் கொஞ்சம்கூட நிறுத்தி இன்னும் ராகமாய்ப் பாடி அர்ச்சனை, அவ்வளவு தானே! 

ஆச்சு, என் அர்ச்சனைகளும் ஓஞ்சு போச்சு. எனக்கு ஐம்பதை எட்டிப் பிடிக்கிறது. இவனுக்கு மாத்திரம் வயசு நின்னுட்டுதா. வலது நெற்றிப் பொட்டில் நுரை அடையாய் ஓடறது.உடம்பில் கூட பழைய நிறம் உதிர்ந்து போச்சு. 

ஆனால் அவள்..எனக்குத் தெரிந்து என் முப்பாட்டனுக்கும் மூணு தலைமுறைக்கு முன்னாலிருந்து நின்ற விடத் தில் அசையாமல் நின்று காத்திருக்காளே ஒருத்தி-அவள் தான் – அன்றுகண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருக்கிறாள். தினம் இரண்டு வேளையும் எண்ணெய்க் காப்பு மொழு மொழுப்புக்கு என்ன குறைச்சல்! முகம்தான்…லேசாய் … 

ஆனால் தேயத் தேய அவளுக்கு மவுஸ் ஜாஸ்தி. 

நமக்குத் தேய்ந்தால் நாம் கிழம், அப்புறம் நாமே குளோஸ். 


சுபாவமே பேச்சுக் குறைவு. காது மந்தம். வயதாக ஆக டமார செவிடு ஆனபின் எதற்கும் காதண்டை வந்து கத்திக் கத்தி அலுத்து அவளுக்கும் இப்போது வாய் ஓய்ஞ்சு போச்சு. 

இப்பவோ அவனிடம் அவள் கை அபினயம்தான். மற்றும் உதட்டசைவிலிருந்து அவன் யூகமாய்க் கண்டு கொள்வதும் அவன் சொல்லி அவள் செய்ய நேராமல் போவதுமாவே, தினப்படி 

தினப்படி அலுவல்கள் ஒரு ஒழுங்கில் விழுந்தாயிற்று. 

பேசவே என்ன இருக்கிறது? பேசின பேச்சையே திரும்பத் திரும்பப் பேசி, போட்ட சண்டையே திரும்பத் திரும்பப் போட்டு, துப்பிய எச்சிலைத் திரும்ப உட்கொள்வது போல், சமரசமே அதே முறையில் திரும்பத்திரும்ப ஆகி, இருவர் உறவிலும் – அது உடலோ, சொல்லோ, செயலோ- இதுவரை சொல்லாதது, செய்யாதது, இல்லாதது இனிமேல் வரப்போவது, எதிர்பாராதது எனும் செயலூக்கியே இற்றுப் போயிற்று. 

ஒன்றுடன் ஒன்றுமோதி சமபலத்தில் சமகாயம் கண்டு பிரிந்த இரு விலங்குகள் அதனதன் காயங்களை அது அது நக்கிக் கொண்டு, ஒரே நீரோட்டத்தில் அதனதன் தண்ணீரைக் குடிப்பது போல், இப்போது இருவரும் முகர்வது மின்றி மோதுவதுமின்றி, அவரவர் எண்ணத்தில் அவரவர் ஒருவரைப் பற்றி ஒருவர் எண்ணிக் கொண்டிருக்கும் எண் ணங்களே சரியா என்று எண்ணக்கூட அலுப்பு இல்லை. அலுப்பையும் மீறிய நிலை – அலுப்பு என்று ஒன்று படக்கூட வலுவும் சுரணையும் செத்துப் போய் நெஞ்சில் பூஞ்சைக் காளானின் ‘பூப்பு’ யந்திர வாழ்க்கையின் யந்திரத்தின் தேய்வு. 


அரைத் தூக்கத்தின் மனசில் கொலுசில் மாட்டிக் கொண்டு நினைவின் அடிவாரத்திலிருந்து கொத்தும் குடலு மாய்க் கிளம்பும் இனம் தெரியா கொதிப்புகள், உருவக விகாரங்கள்.. 

லிங்கத்தின் நெற்றியில் காய்ந்த சந்தனத்தைக் கிள்ளிய இடத்தில் திடீரென முண்டிக் கொண்டு அசிங்கமாய் ஒரு ரத்தக் கட்டி. 

கங்காளத்திலிருந்து மொண்டு லிங்கத்தின் மண்டைமீது ஊற்றியதும் குடத்திலிருந்து ஜலத்துக்குப் பதிலாக கொட கொடவென்று நுரை கக்கிக் கொண்டு இரத்தம். அம்பாள் சன்னதியில் விளக்குத் திரியை தூண்டப்போய் தீ விரலைச் சுட்டதும், அவன் உடலை சிவப்பு, நீலம், ஊதா, பச்சை, மஞ்சள் வர்ணங்கள் வெகு வேகமாய் அடுத்தடுத்து ஊடுருவி அந்தந்த நிறம், அவன் மாறி எரிந்து பஸ்பமாய்க் குழுங்கிக் குன்றி, பிசுபிசுவென்று உதிர்ந்து போவதாய் அம்மன் பின்னால் மாட்டி இருக்கும் நிலைக்கண்ணாடியில் பிம்பம். 

அம்மனுக்கு இப்போ புல்லாக்குன்னா மாட்டினேன், மூக்கில் ஏன் சளி தொங்கறது? 

அண்டா ஜலத்தில் கைக்கு ஏதோ வழவழவென தட்டுப் பட்டதும், நூலிழை தடுமனாய் உணர்ந்து, கைக்கடியிலேயே உடனே வளர்ந்து, கனவேகத்தில் மழமழவென ஆலமரத் தின் அடி மரப் பருமனுக்கு வீங்கி, இன்னும் வீங்கிக் கொண்டே, அதன் பிளந்த வாயுள் ஸ்வாமி, அம்மன், கர்ப்பக் கிருஹம்,கோபுரம் உள்பட, தான் உள்பட, விழுகையில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டதும் அந்த ராக்ஷஸ பாம்பு அவன் காலை உதைத்துக் கொண்டிருக்கும் தூணாய்ச் சமைந்தது. 

திருட்டுத்தனமாய் வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆள் வருமுன் தின்கவுமுடியாமல் விழுங்கவுமுடியாமல் தவிக்கும் முறுக்கு சீடை போல் பரம்பரைப் பழக்க வாசனை யில் அவனையுமறியாமல் வாயில் அவனறிந்த ரக்ஷாமந்திரங் களின் அக்ஷரங்கள் திடீரென நிறைகின்றன. 

“அம்பா! தையநாயகி! வைதீஸ்வரா!!” 

அம்மையும் அப்பனும், மௌன சாக்ஷியாய், சுட்டகல் லாய் அவரவர் இடத்தில் காலமாய் நிற்கிறார்கள். 


மற்றவர்க்கு அவரவர் இஷ்ட வரமருள் தெய்வம்; எனக்குக் கல். 

நட்ட பீஜத்தை குளிப்பாட்டி, அதன் தலையில் பூச் சுற்றி, தூபதீபம் காட்டுவதில் என் வயிற்றுப் பிழைப்பைப் போட்டிருக்கிறது. இந்தத் தெய்வங்களின் உடுவையை நாளுக்கிருமுறை களைந்து, உடுத்திப் பார்த்துப் பார்த்து என் ஆண்மையே அவிஞ்சு போச்சோ? 

கல்லைப் பூஜித்து பூஜித்து நானே கல்லாய் மாறிக் கொண்டிருக்கிறேன். வரவர மாரில் ஏதோ கனம் அழுத் தறாப் போலிருக்கு. தேடினால், மார்புத்துடிப்பு சட்டென்று கைக்கடியில் கிடைக்கவில்லை போலக்கூட சில சமயங்கள் தோணறது. 

எனக்கே வேலை வந்து விட்டதா? 

அப்படியானால் அம்மாவுக்குக் கொடுத்த வாக்கை நிறை வேற்றியாக வேணுமே! ஏற்கனவே அம்மா என்னைத் தலை யாட்டின்னு சொல்லிவிட்டாள். அப்படி இல்லை என்று நான் ஒரு தரமேனும் சொன்னதைச் செய்ய வேண்டாமா? 

என்னையே எனக்கு நிரூபித்துக் கொள்வது எப்படி? 


நாளைக்கு காசி 

நாளை போய் இன்று வருகிறது. 

நேற்று போன நாளையை ஏமாற்றிய இன்று. 

இன்று போய் மறுபடி நாளை. 

இன்று வந்த இன்றை மன்னித்துவிட்ட நாளை. 

நேற்று, இன்று, நாளையாகத் தன் வாலைத்தான் தேடிப் 

பிடிக்கும். பூனைக்குட்டிபோல் அன்றன்றாய், நாள் ஓவ் வொன்று. 

நாளைக்கு காசி. 

அன்றொருத்தன் அப்படித்தான் நாளையைத் தேடினான். 

ஒவ்வொரு நாளும் நாளையாக மாறி, நெஞ்சில் நாளையின் கேலிக் கூத்து. 

அவன் கனவுகளில் அம்மாவின் அஸ்திப் பானையில் இருந்து நடராஜன் தோன்றினான். 

ஊன்றிய பாதத்தினடியில் முயலகனுக்குப் பதில் அவன். விழிப்பு வந்ததும் வெகு நேரம் வரை ரண வலி போக வில்லை. பின்னே என்ன; ஆண்டவன் மிதித்தால் லேசா?

கனவுப் பலன்படி கனவில் தாண்டவம் கண்டால் யமன்.

காஞ்சியில் பிற 

காசியில் இற. 

காசிக்குப் போவோரில் சிலர், அதற்காகத் தானே அங்கு சாகப் போது தேடி காத்துக் கிடக்கிறார்! 

பிறக்கப் பத்து மாதம். சாகப் பத்து மாதம் அதென்ன சாஸ்திரமோ? 

காரணமில்லாமல் சாஸ்திரமில்லை. 

போனால் திரும்பக் கூடாது. மானத்தின் லட்சியம் அது தான். 

ஆனால் போனால் தானே சாகலாம்? 

எப்படியும் போகப் போற உசிரை அம்மா சுலபமா பணயம் வெச்சு வாக்கை வாங்கிண்டுட்டாள். 

ஆனால் காசி என்ன லேசா? கொல்லைப்புறமா? 

காசு? 

வெச்சு வாங்க இங்கே என்ன இருக்கு? 

என் மாரில் சிக்குப் பூணூல். அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு. 

இருப்பு, செலவு, பாக்கி எல்லாமே இவ்வளவுதான். வீட்டை அடைமானம் வைக்கலாம்னா அதுவும் சொந்தம்னு நிச்சயமில்லை. பழைய ஏடு எதையாவது ஏந்திண்டு எங்கிருந்தாவது ஒரு தாயாதி என் பங்குன்னு முளைச்சால்? 

பங்குக்கு மாத்திரம் கிளை கிளையா களைக்குமே! 

இன்னும் கொஞ்சம் ஆழமா தோண்டினால் இரண்டு பேருக்குமேயில்லை. வீடு கோவில் சொத்துன்னு தீர்வையா சாசனமே கிடைத்துவிடும். 

எல்லாம் என்னுடையது. 

கடவுள் நியாயம், குரங்கு நியாயம், ரெண்டுக்கும் மிஞ்சின கோர்ட் அப்பீலே கிடையாது. 

நாளைக்குக் காசி. 


அப்போது தான் குளித்துவிட்டு – இன்னும் சரியாகத் துவட்டிக் கொள்ளக்கூட இல்லை. வாசற் கதவை அவசர மாய்த் தட்டும் சத்தம் கேட்டது. 

சத்தம் கேட்டது. புடவையைச் சுற்றிக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள். ஒரு ஆளை – பாதிக்கு மேல் அவன் உடல் பாரத்தை தான் தாங்கிக் கொண்டு அவள் கணவன் வாசலில் நின்றான். 

கதவை இன்னும் அகலத்திறந்ததும், உள்ளே தாண்டி வந்து கனத்தை கடைத்திண்ணையில் கிடத்தி, முகத்தில் தோய்ந்த மயிரை ஒதுக்கியதும் – சொல்லத் தேவையில்லை. கண்டாலே தெரிந்தது அங்கு அடிக்கும் ஜுரவேகம் 

உள்ளே போய்த் தலையணையை எடுத்து வந்தாள். அவள் கணவன் தலையைத் தூக்கிக் கொள்ள, அவள் தலை யணையை அண்டக் கொடுத்ததும், அவன் தலையை அதன் மேல் இறக்கிவிட்டு இருவரும் ஒரு நிமிடம் அந்த முகத்தைக் கவனித்து நின்றனர். ஸ்மரணை யிருப்பதாகத் தெரியவில்லை. 

அவள் கணவன் சென்ற பின்னரும் அவள் நகரவில்லை. அந்த முகத்தில் தாடி முட்கள் கருகருவென நின்றன. தலை யில் காடு மாதிரி எவ்வளவு மயிர்! இப்போதைக்கு முகத்தை மூக்கும் முழியும்தான் அடைத்துக் கொண்டிருந்தன. 

ஜுரவேகமாயு மிருக்கலாம்.

கொல்லைப்புறத்திலிருந்து அவள் கணவன் வந்தான். பறித்து வந்த மூலிகைகளைத் தோள், துண்டிலிருந்து திண்ணை யில் கொட்டி, ஆய்வதற்கு உட்கார்ந்தான். 

‘-த்வஜஸ்தம்பத் தடியில் குப்புறக் கிடந்தான். ரெண்டு சன்னதி பூஜையையும் முடிச்சிட்டு வந்தப்புறம்கூட ஆள் அப்படியே படுத்துட்டுக் கிடக்கான். நமஸ்காரம்னாகூட, இவ்வளவு நேரமா என்ன? கூப்பிட்டால் பேச்சு மூச்சு இல்லை. எனக்குப் பயமாப் போச்சு. புரட்டிப் பார்த்தால் உடம்பு உலையாய்க் காயுது. என்ன செய்யறது? அப்படியே விட்டுட்டு வர மனமில்லை.” 

அவன் சமாதானமாய்ச் சொல்லவில்லை. சமாச்சார மாய்த்தான் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்குப் பதில் பேசியே பழக்கமில்லை. “யார், ஏது, ஏன்?” இந்த வீட்டில் கால் வைத்த நாள் முதல் அவள் எதற்கும் கேட்டதேயில்லை. அவளுக்குக் கேட்கவும் தெரியாது. அப்படிக் கேட்கும்படி நேர்ந்ததுமில்லை. அந்த ஆளைக் கவனித்தபடி நின்றாள். 

அவள் தோளில் ஜலமுத்துக்கள் இன்னும் துளித்து நின்றன. குளிப்பில் மயிர்ப்பிரிகள் ஒன்றிரண்டு நனைந்து கன்னத்தில் ஒட்டிக் கொண்டு நின்றன. நெற்றியில் பற்றிய மஞ்சள் பளீரிட்டது, 


நினைவு திரும்ப மூன்று நாட்கள் ஆயின.- உடம்பு புரட்டினது புரட்டினபடி, மலஜலம் எடுத்து, உடைமாற்றி, வாயைத் திறந்து, கிட்டின பல்லை நெகிழ்த்தி, ஒளடதம் ஊற்றி, கண் விழித்து…இவன் யாரோ நான் யாரோ, ஜாதி என்னவோ? இத்தனை பாடும் இவன் மேல் இரக்கம் காரணமா, அல்ல, இவன் நம்மடியில் வாயைப் பிளந்து வச்சால் என்ன ஆகறது. என்கிற பயமா? 

நட்டாற்றில் கரடியைக் கட்டிக் கொண்ட பிராம்மணன் போல் இவன் விதியுடன் எங்கள் விதியும் எப்படி விழைந்தது? ஏன் விழையணும்?- 

என ஆச்சர்யமுற, தோன்றக் கூட இப்போது நேரமில்லை. 

-நீர்த்துப் போன மூட்டத்தின் கீழ் மாட்டிக் கொண்ட ஒற்றைப் பொறியைச் சுடராக்க, மாற்றி மாற்றி ஊதும் போட்டியில் திணறுவது எங்கள் மூச்சா? இல்லை இவன் மூச்சா? யார் அவஸ்தை அதிகம்? 

என்று சிந்திக்க அந்த அவஸ்தையை நினைவு பூர்வமாய்ப் படுவதற்குப் போது இல்லை. 


மசியூற்றிலிருந்து பொங்கிவரும் இருள் பிந்துக்கள்மேல் கவிந்து கடலாய்ப் பெருகி அதில் மூழ்கிப் போனது தான் கடைசி நினைப்பு. அதன்மேல் இருள் அலைகள் உடைந்து வீழ்ந்து அதைக் கடலின் நடுவயிற்றுள் இழுத்துக் கொண்ட னவா, அல்ல ஏந்திச் சென்று கரையோரம் ஒதுக்கினவா? 

அறிய நினைப்பில்லை. 

எது கரை? கடலுக்கும் கரைக்கும், மலைக்கும் மடுவுக்கும் அடையாளம் அறிய நினைப்பில்லை. 

அறிய நினைப்பில்லை என்று அறியத் தோன்றுவதே மீளும் நினைப்பின் முதல் ஊன்றுகோல். 

அறியத் தோன்றிய சர்வ அமைதியினின்று காதோடு காது வைத்த ரகஸ்யமாய், சீடனுக்குக் குருவின் உபதேச மந்தரமாய், மந்திரத்தின் உருப்புரியாது. ஆனால் உரு அதனுள் அடங்கியதாய் 

ரீங்காரம்

ஒன்று 

குதித் தெழுகின்றது. 

அந்த உயிரோசையில் நினைப்பு இல்லையென்ற நினைப்பு கவ்விக் கொண்டதும், எங்கும் சூழ்ந்த இருளில் விரிசல் ஓடி, இல்லை, இருக்கிறது எனும் தோன்றல்களின் இடைவிளிம்பு கள் ஆங்காங்கே படர்ந்து, தோன்றி மறைந்து மீண்டும் தெரிவதே ஒளியின் உதயதரிசனம், அகத்தின் மாட்சி, நினைவின் மீட்சி. 

அது நேரும் சமயம் அவள் அடுக்குளில் வேலையாய் இருந்தாள். அவன் கோவிலுக்குப் போயிருந்தான். 

முனகல் சத்தம் கேட்டு ஓடி வந்தாள். 

கரையில் தூக்கிப் போட்ட மீன் போல நோயாளியின் வாய் திறந்து மூடித் திறந்து ஏதோ சைகையில் தவித்தது. 

நாக்கு வரட்சி. 

உலையில் இன்னும் அரிசி கொட்டவில்லை. வெந்நீரைப் பரக்கப் பரக்க கொட்டி யாற்றி தம்ளரில் ஊற்றிக் கொண்டு வந்து உதட்டில் வைத்தாள். 

ஒரு முழுங்குதான்- அது கூடஇல்லை. இருமல் வந்து புரைக்கேறி விட்டது. இமை நேரத்தில் கருப்பு விழி இமைக் கூரைக்கு ஏறி விழி வெள்ளைக்குப்பின் மறைந்தது, மூச்சு நெஞ்சில் கடைய ஆரம்பித்து விட்டது. 

‘ஐயோ! ஐயோ!! ஐயோ!!!” 

தான் அலறினது- தெரியவில்லை. என்ன செய்தாள் என்றோ தெரியாது. தலைக்கடியில் கையைக் கொடுத்துத் தூக்கி அவனைத் தன் மேல் சாற்றிக் கொண்டாள். மார்பைத் தடவிக் கொடுத்தாள். 

வரலாமா, வேண்டாமா என்று பார்த்துக் கொண்டு மெதுவாய்க் கருப்பு விழி கீழே இறங்கிற்று. மூக்சு மறுபடியும் முறையாகக் கோர்த்து வாங்கி நிலைப்படத் தலைப்பட்டது. விழிக்குஹைகளிலிருந்து தணற் பிழம்புகள் அவள் மேல் ஊன்றுகையில் அவளுக்கு அடிவயிற்றில் “சுறீல்’ 

வாசற்படியில் நிழல் தட்டி நிமிர்ந்தால், அவள் கணவன் முழங்கையில் நைவேத்ய மூட்டையை மாற்றிக் கொண்டு நின்றான். 

அப்போதுதான் அவளுக்கே அவள் நிலை தெரிந்தது. தன் முழங்கை வளைவில் நோயாளியின் தலைதாங்கியிருப்பது உடல் வெலவெலத்து விட்டது. அவனைக் கீழே இறக்கி விட்டு எழுந்து அவ்விடம் விட்டு விடுவிடு வென்று போய் விட்டாள். 


அவளைத் தேடிச் சென்ற போது கொல்லைப்புறத்தில் புன்னை மரத்தடியில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட் கார்ந்திருக்கக் கண்டான்; 

“இங்கே வந்து குந்தியிருந்தால் என்ன அர்த்தம்?” 

ஊம் – ஊம் எழுந்திரு. கஞ்சியைப் போடு. கஷாயச் சட்டியை அடுப்பில் காய வை.இன்னிக்கு கஷாயத்தை மாத்தியாகணும். அந்தமட்டுக்கும் பரவாயில்லை. தப்பிச்சுட் டான்”. அவள் எழவில்லை. முகம் குங்குமமாய்க்கொதித்தது; விழிகள் தளும்பின. 

“இப்போ என்ன ஆயிடுத்து? உனக்கு ஒரு தம்பியிருந் தால் செய்யமாட்டையா? ஆபத்துக்குத் தோஷமில்லை. முதலில் நான் சொன்னதைக் கவனி’. 

அவன் சொல்லிவிட்டுப் போய்விட்டான். 

அவன் அப்படிச் சொன்னதும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. விக்கி விக்கி அழுகை. அழ அழ இன்னும் அழுகை. 

அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இதுமாதிரி அவள் அழுததேயில்லை. அழுகையே மறந்து போன பின் இது ஒரு புது அனுபவமாய் இருந்தது. அழுதால் இன்பமாய்க்கூட இருக்குமா என்ன? இது அழுகையில்லை.’ கண்ணீரில் குளிப்பு. எங்கெங்கோ ஏதேதோ அழுக்குகள், கறைகள், கனங்கள் கரைந்தோடி, உடலே லேசுபட்டு, குளிர்ந்து… 


“உன் பேர் என்ன?” 

நோயாளிக்குப் பேசச் சக்தியில்லை. தரையில் எழுதிக் காண்பித்தான். 

“காசி” 


சருகு துளிர்ப்பது போல், நாள் ஆக ஆக, விலாச்சதை பிய்ந்து விடும் போல் பிதுங்கிய எலும்புகள் மூடி, கன்னத்துக் குழிகள் மூடி- 

ஒரு நாள் வெந்நீரின் பதச் சூட்டில் குளிப்பாட்டி, அவள் கணவனே அவனுக்கு உடம்பு தேய்த்து விட்டான். சுட்ட அரிசி அப்பளாமும் ஆவி பறக்க மிளகு ரஸமும்- 

ஒரு நாள் காலை சொல்லிக் கொள்ளாமலேயே வெளியே போய் மயிர் வெட்டிக் கொண்டு, க்ஷவரம் பண்ணிக் காண்டு வந்து விட்டான். சட்டென முகம் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்று 

அன்று முழுக்கத் திட்டிய வெசவுகளுக்கெல்லாம் ஒரே பதில் ஒரு அசட்டுச் சிரிப்பு. 

ஆனால் அந்தச் சிரிப்பில் உண்மையில் அசடும் இல்லை. ஆனால் காசி ஒற்றை நாடிதான், குருவிபோல் சோற்றைக் கொறித்தான் என்றாலும், எவ்வளவு ஊட்டம் கொடுத்தா லும் சதை பற்றாது. அந்த உடம்பு வாகு அப்படி. 

இரவில் குத்து விளக்குச் சுடர் காட்டும் நிழலாட்டத்தில் அந்த முகத்தில் சதை மறைந்து வெளிப்படும் வெறும் முகக் கோட்டினுள் விழிகள் மட்டும் பற்றி எரிகையில் அவளுக்குச் சில சமயங்களில் பயமாவேயிருந்தது. தான் பார்ப்பது உட் கார்ந்த நிலையில், உயிர் பிரிந்த சவமா? அல்ல தான் புகுவதற்குத் தக்க சடலம் தேடிக் காத்திருக்கும் ஆவியா? 

“காசி, உன் முழுப் பேர் என்ன?’ 

“எனக்கே தெரியாது.” 

“உன் பேரே உனக்குத் தெரியாதா, நீ என்ன ஆளப்பா!” 

“வாஸ்தவமா, அப்படித்தான் என்னை வளர்த்தவர்கள் என்னை காசியில் அவர்கள் தங்கிய மடத்தில் பத்து நாள் குழந்தையாக ஒரு கந்தைத் துணியில் சுற்றின மூட்டையில் கண்டெடுத்தார்களாம். அதே சாக்கில் என்னைக் காசி யென்று அழைப்பார்கள். அதுதான் எனக்குத் தெரியும். 

“காசிக்குப்போயும் அவர்களுக்கு கர்மம் தொலையலையாக்கும்?” என்றாள் அவள். 

காசி புன்னகை புரிந்தான். 

“கர்மத்தை அவர்களல்லவா தேடிக் கொண்டார்கள்! என்னைக் கண்டதால் அவர்கள் கொண்டு வரணுமா? அவர் கள் அப்படி ஆரம்பித்து வைத்த தர்ம சங்கிலியின் கோர்வை யாகத் தானே உங்கள் கணவர் என்னைக் கோவிலில் மறுபடியும் கண்டெடுத்து வந்தார்! இல்லாவிட்டால், காசி யிலேயே நான் வேறு யாரேனும் எடுப்பார் கைப்பிள்ளையாக வளர்ந்து கங்கா நதியில் யாத்ரிகள் வீசியெறியும் காசை மூழ்கி எடுத்துக் கொண்டிருப்பேனோ, அல்லது என்னைச் சுற்றி யிருந்த கந்தைத் துணியிலேயே விரைத்துப் போய், பிறந்த சுருக்கில் பிணமாய்க் கிடந்திருப்பேனோ, யார்கண்டது? 

 எனக்கு என்னவோ மாதிரி சங்கடமாயிருந்தது. அவன் தோள் மேல் கைவைத்தேன். 

“காசி உனக்குச் சாவே கிடையாது” என்றேன். 

“அது எனக்கு நன்றாய்த் தெரிகிறது.” 

அப்படி அவன் சொன்னபோது அவனை நான் தொட்டுக் கொண்டிருப்பதாகவே எனக்கு இல்லை. என் தொடலுக்கு அவன் அகப்படவில்லையென்றே பட்டது. ஒவ்வொருவராய் இப்படி ஆசி கூறிக் கூறி அழிவேயில்லாமல் அடித்துவிடும் ஆசி உண்மையில் சாபம் தானோ? 


எனக்குத் திடீரென வியப்பு உண்டாயிற்று. காசி பேசினது எனக்கு எப்படிக் காது கேட்டது? நானோ செவிடு. நான் அவனைத் தனியாய்க் கேட்கவில்லை. என் ஆச்சரியம் என் வாய்விட்டுத் தானே வந்து விட்டது. 

காசியின் புன்னகையில் ஏதோ புதிர் என் நெஞ்சுக்கு மட்டும் தட்டுகிறது. நானே இதைக் கவனித்தேன். பல கேள்விகளுக்குப் பதிலாய் அந்தப் புன்னகை வைத்திருக் கிறான். அது புன்னகையுமில்லை. நாக்கு நுனிவரை வந்து விட்ட பேச்சை அங்கேயே தடுத்து விட்டாற்போல் உதட்டின் உறைவு. 

‘குருக்களே, இரைச்சலைக் கேட்டு கேட்டு உங்களுக்குச் செவியடைச்சுப் போச்சு. ஆனால் நாம் எல்லோருமே ஓசைகள். ஓசைகளின் உருவங்களாகத்தான் மூக்சும் சதையு மாய் இயங்குகிறோம். இதை உயிர் உணர ஆரம்பித்ததுமே வாசல்கள் திறந்து கொள்கின்றன. அவ்வளவுதான்?” 

”நீ என்ன சொல்கிறாம்? புரியல்லையே!” 

குருக்களே, நான் இல்லாததை உண்டாக்க முடியாது. என்னால் முடிந்தவரை ஏற்கனவே இருப்பதை உங்களை உங்களுக்கு நினைப்பு மூட்டுகிறேன். அவ்வளவுதான்.” 

காசி சொல்வது சுவையாய் இருக்கிறது. புரியவில்லை. 

புரியாமலும் இல்லை. தலை கிர்ர்… 

இவனை எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. 

இவன் வந்த பிறகே வீட்டுக்கு கலர் மாறி விட்டது. இது திடீர்னு நேர்ந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் திடீர்னு பார்த்தேனோ என்னவோ? 

இந்த மாறுதலைக் கலராய்ப் பார்க்கறப்போ தான் அதுவே புரியறாப் போலத் தோணறது. பார்க்கவும் அப்படித் தான் பிடிக்கிறது. ஐப்பசி மாதம் எட்டு நாள் விடாமழைக்குப் பின், வக்களிப்பு போல், அங்கங்கே எங்கெங்கோ ஏதேதோ மப்புகள் கலையறாப்போல் என்னென்னவோ புதிசு புதிசா அசைவு கொடுக்கிறது. 


காசி பசுமாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறான். இதன் தாய் வயிற்றில் இது பிறந்து, கன்றாகி, பசுவாகி இது வும் தாயான நாள் முதல் இதுவும் நாங்களும் ஒருவரை ஒருவர் அறிவோம். ஆனால் அவன் பக்கத்தில் வந்தாலே அதற்கு ரோமாஞ்சலி ஏற்படுகிறது. அவன் அந்த உடம்பைத் தேய்த்துக் கொண்டிருக்கையிலேயே அவன் முகத்தை நக்கிக் கொடுக்க தலையைத் திருப்பித் திருப்பித் தவிக்கிறது. 

அட, காசிக்கு மாடு கறக்கவும் தெரியுமா? 

நிமிஷமாய்க் குவளையில் நுரை பொங்கி வழிகிறது.

“என்ன காசி, உன் கைபட்டதுமே பசுவுக்கு உடம்பெல்லாம் பாலாய் மாறிப் போச்சு? என்ன சொக்குப் பொடி வெச்சிருக்கே.” 

”எல்லாம் குருக்கள் ஆசீர்வாதம் தான்!” 

வந்தனம் தெரிவிக்கிறானா? ஏளனம் பண்ணுகிறானா? இன்று காலை மடி ஜலம் ‘கிளுக், கிளுக்’ என்று தளும்ப குடத்தை இடுப்பில் ஏந்தி ஈரப் புடவையை உடம்பில் சுற்றியபடி, கிணற்றடியிலிருந்து இவள் வருகையில்- “இது இவள்தானா?”நிஜமாவே கண்ணைக் கசக்கிக் கொண்டேன். 

ஏதோ நினைப்பில் மோவாய்க் குழியில் புன்னகை உதயத்தில் முகத்தில் ஒரு தனி வெளிச்சம் உள்ளிருந்து பரவும் அவ்வொளியில் புருவத்தின் கவானும் மேல் உதட்டின் வில் வளைவும் தனி முருகு கொண்டன. 

நான் அவளைக் கவனிப்பதைப் பார்த்து விட்டாள். முகம் செவேலாகி விட்டது. இந்த வயசில் நாணமா? ஆனால் எந்த வயதிலும் சுயமான நாணம் நன்றாய்த் தானிருக்கிறது. 

இவள் இடுப்பு வளைவில் பிசிர் உதிர்ந்திருப்பதாக என் மனசுக்குத்தான் தோற்றமா? இவள் சந்தோஷமாயிருப் பதைப் பார்த்தாலே எனக்கு சந்தோஷமாயிருக்கிறது. இருக்கட்டும், எங்கள் சந்தோஷத்துக்குத் தானே காசி வந்திருக்கிறான்! 


அப்போதுதான் கோவிலிலிருந்து திரும்பி வந்தேன். கிணற்றடியில் அவனும் அவளும் அண்டாவுள் குனிந்து என்ன அவ்வளவு சுவாரஸ்யமாகக் கவனிக்கிறார்கள்? நானும் அங்கு போனேன். 

அண்டாவில் ஜலம் கண்ணாடித் தகடுபோல் அசைவற்று நின்றது. வான பிம்பம், இவ்வளவு துலக்கமாய், அதுவும் இரவில் ஒரு நாளும் தெரிந்ததில்லை. கலக்கம் எங்கள் கண்ணிலா, வானத்துக்கேவா? 

தனித்தனியாய்,சரம்சரமாய், பாளை வெடித்துச் சொரியும் முத்துக்களாய் ஆனால் அத்தனையும் அதனதன் முழு உருவில், ரஸ குண்டுபோல் தொங்கிக் கொண்டு இன்று எத்தனை நக்ஷத்திரங்கள்! என் எண்ணத்தின் எதிரொலி போல் காசியின் குரல் வந்தது. 

‘இந்த பூமி மீது உலாவும் உயிர்களுக்கு அதிகமாய் நக்ஷத்திரங்கள் வாரி இறைந்து கிடக்கின்றன. சூரியனைக் காட்டிலும் மாபெரும் நக்ஷத்திரங்கள். ஆனால் இத்தனை யிலும் பேர் கொண்டது இருபத்தி ஏழுதான், இது வேடிக்கை யாயில்லை? 

இந்த இருபத்து ஏழின் கதிகளுடன் இந்த உலகத்தின் ஜீவ ராசிகள் அனைத்தின் விதிகளையும் முடிச்சுப் போட்டு வைத்திருப்பது அதைவிட வேடிக்கையாயில்லை? விபரீதமா யில்லை? நான் நம்பமாட்டேன். பேரில்லாததால் இந்த நக்ஷத்திரங்கள், சூரியர்கள், சூரியனைக் காட்டிலும் பெரிய கிரஹகங்கள் இல்லாமல் போய்விட்டனவா? இருபத்தி ஏழின் கொடுங்கோலாட்சிக்குள் மாட்டிக் கொண்டதாய் நாம் அதைரியப்பட வேண்டியதில்லை. நம்மை இவை ஆள்வதற்குப் பதில், நாம் இவைகளை ஆளக் கூடாது என்று எழுதியிருக்கிறதா? எழுதியிருந்தால் தான் என்ன? நம் விதியை மாற்றிக் கொள்ள நமக்குச் சக்தி உண்டு. என்ன முழிக்கறேள் ரெண்டு பேரும்? – இதோ பாருங்கள்! பூ! 

அவன் ஜலத்தின் மேல் ஊதினதும் அண்டாவுள் மாட்டிக் கொண்ட வான் மண்டலம் கவிழ்ந்தது. நக்ஷத் திரங்கள் நிலை குலைந்து ஒன்றன் மேல் ஒன்று கதி கலங்கிச் சரிந்தன. 

“பார்த்தீர்கனா? – மனமுண்டாளால் இடமுண்டு-இன்று நிழலை ஆண்டால் நாளை நிஜத்தை ஆட்சி புரிவோம். நம் விதி நம் கையில் தான் இருக்கிறது. எண்ணத்தில் தீவிரம் இருந்தால், இந்த பூமியின் கோளத்தையே, விழுங்கப் போகும் லேகிய உருண்டையாய் ஒரு நாள் உள்ளங்கையில் ஏந்தி விடலாம். குருக்களே, என்ன சொல்கிறீர்கள்? என்ன சொல் கிறீர்கள்?-” 

பாம்பின் சீறல் போல் அவனின்று சிரிப்பு வெடித்தது.

அவனின்று வெளிப்பட்ட விஷயத்தின் ‘மஹத்’தைக் காட்டிலும், குரலில் தொனித்த வெறி, பேச்சில் ஏறிவிட்ட அதட்டல், முகத்தில் குழம்பிய ருத்ரம்-அவனைப்பார்க்கவே 

அவள் அச்சமாயிருந்தது. அவள் முகத்தைக் கைகளுள் புதைத்துக் கொண்டாள். அவன் தன் வசத்தில் இல்லை, மகுடி வசப்பட்ட பாம்பு போல, அவனை ஆட்கொண்டு விட்ட ஆவேசத்தில் அவன் உடல் லோாய் மிதப்பலாடிற்று, 

அவள் பின்னிடைந்தாள். அவள் அறியாமலே அவள் கை என் கையை நாடிற்று. 

அன்று முழுவதும் அவன் பிறகு பேசவில்லை. சாப்பிடவு மில்லை. நாங்களும் அவன் வழிக்குப் போகவில்லை. நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டு நெடுநேரம் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். 


அவள் கிணற்றடியில் குடந்தைத் தேய்த்துக் கொண்டிருந் தாள். நான் அந்தரத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒரு அவரைக் கொடியை மாட்டுக் கொட்டகையின் ஓலைக்கூரை மீது ஏற்றி விட வாகான இடம் தேடிக் கொண்டிருந்தேன். 

முதுகில் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு காசி தரை யில் என்னவோ தேடிக் கொண்டிருந்தான், 

மேலெழுந்த வாரியாய் மனம் இந்தக் காட்சியைத்தான் வாங்கிக் கொண்டிருந்தது. இதெல்லாமே பின்னால்தான் நினைவுக்கு வருகிறது. 

காசி எதையோ குனிந்தெடுத்து சட்டென்று அண்ணாந்து ஆகாயத்தில் வீசி யெறிந்தான். பிறகு அரைக்கணம் அல்ல. ஒருகணம் ஓடியிருக்குமோ என்னவோ தெரியாது. அடுத்து நேர்ந்த அதிர்ச்சிதான் எங்களுக்குத் தெரியும். 

பொத்தென்று மேலிருந்து ஏதோ பூமியில் விழுந்தது. வானுடன் ஒவ்விய நீல நிறத்தில், உரிக்காத மட்டை தேங் காயளவுக்கு ஒரு பக்ஷி, அதன் உடலில் பொன்னும் வெள்ளி யுமாய் வைத்த புள்ளிகளும் சிரக்கொண்டைக் கதிர்களும் பொன் வெயிலில் மின்னின. 

கண்ணெதிரில் அதன் கண் கண்ணாடி ஆகிவிட்டது. அதைச் சுட்டிக் காட்டியபடி காசி நாணறுந்து வில்போல் குதித்தான். 

“பார்த்தேளா, குருக்களே, பார்த்தேளா? உலகத் துக்கே பொதுவான உண்மை! பொருளுக்கும் நிழலுக்கும் உள்ள தொடர்பை! உலகத்தில் நிழலில்லாத பொருளே இல்லை. பொருளில்லாமல் நிழலும் இல்லை. எவ்வளவு உயரம் பறந்தாலும் அது அது அதனதன் நிழலுக்குள் விழுந் தாகணும்!” 

எனக்கு உடம்பு வெலவெலத்து விட்டது. 

அவளைப் பார்க்க சஹிக்கவில்லை. இரத்தமும்,மஞ்சளும் சுண்ணாம்பும் முகத்தில் மாறி மாறிப் பாய்ந்து வாங்கி மறு படியும் பாய்ந்தன, அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு, குப்பைகொட்டும் எருக்குழியண்டை ஓடினாள். குமட்டிக் குமட்டி-வாந்தி. 

என் கால் கல்லாலடித்துப் போட்டாற்போல் ஆகிவிட்டது. அவனும் நகரவில்லை, நாங்கள் மௌனமாய், அவளையே கவனித்துக் கொண்டிருந்தோம். 

ஒருவாறு குமட்டல் அடங்கி எழுந்து திரும்பி எங்களை நோக்கி வருகையிலேயே, அவள் முகத்தில் தெரிந்த வேதனை, திகைப்பு, பயம், ஆச்சரியம் இவை யாவற்றின் பின்னணியில் விசிறி விரித்தாற் போல் ஒரு கோபம் உதய மாவது கண்டேன். அவள் நெற்றியில் அது ஆரம்பித்து, வியாபித்து, முகம்பூரா, கழுத்துவரை குங்குமம் குழம்பிற்று, அவள் உடல் கிடுகிடென ஆடிற்று. அவள் கைகள் முஷ்டித்தன. 

காளி. 

எனக்கு உடல் வெலவெலத்து விட்டது. 

“போ! போயிடு!! உடனே போயிடு!!!” 

குரல் அடங்கித்தான் ஒலித்தது. ஆனால் அந்த அமுக் கிய எஃகுச் சுருள் விசிறிவிட்டால் மொக்குமோறை காலி. 

காசி அவளை வியப்புடன் நோக்கினான். அவளைப் பார்க்கவில்லை. அவளில், அவளைக் கவ்விக் கொண்டிருக் கும் சீற்றத்தில், ஏதோ இதுகாறும் நினைவடியில் புதைந்து போன, அல்லது இதுகாறும் அவன் தேடிக் கொண்டிருந்த ஏதோ உருவத்தை அடையாளம் கண்டு கொண்டாற் போல் அவ்விழிகளில் ஒரு ஆச்சரியம் உள்நினைவின் திடும் பூரிப்பு. 

உடனே அலரிப்பு. 

அவன் உள்கட்டடத்தின் கட்டவிழ்தலைக் கண்கூடாகக் காண முடிந்தது. 

காசி பேசவேயில்லே. காசிக்கு என்ன நேர்ந்து விட்டது? தலைகீழாய்த் தூக்கிப் பிடித்த பாம்பு போல் காசி திடீரெனப் பொலிவிழந்து போனான். நீர்த்தே போனான். 

பறவையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான். அவன் அதன் சடலத்தைத் தாங்குவது போல் இல்லை. ஏதோ சகுனத்தைத் தூக்கிக் கொண்டவன் போலிருந்தது. அவன் பிறப்பித்த சகுனத்தை அவனே சுமந்து கொண்டு இதோ போய் விடுவான்,காசிக்கு இனி இங்கு வேலை யில்லை. அது எனக்கே தெரிந்தது. 

“எங்கே போகப் போறே?” 

கேட்டது நான். அவனைப் பார்க்கப் பரிதாபமாயிருந் தது. இத்தனை ‘சட்’டில் இவ்வளவு நீச்சமா? அதுவும் காசிக்கா? 

“காசிக்கு” 

ஏதோ பாடம் ஒப்பிப்பதுபோல். வாழ்வின் கனம் அமுக்கும் அசதி. 

‘நில்”- அவள் குரல் கணீரென்றது. 

நின்றான். அவன் மேல் இப்போது ஊதினால், உதிர்ந்து போயிருப்பான். 

அவள் விடுவிடென உள்ளே சென்று ஒரு பானையை எடுத்து வந்து அவன் கைகளுள் திணித்தாள். 

“இதைக் கங்கையில் கரைச்சுடு” 

வசியங்கண்ட பாம்பு போல் அவனுக்கு அவள் மேல் பதிந்த விழி மாறவில்லை. வேறு யாருக்கும் அவன் கண் இல்லை. 

வாசற்புறம் சுட்டிக் காட்டினாள். 

“போ!” 

போனான். 

ஒழுங்கைத் தாண்டி, உள்முற்றம் தாண்டி, தாழ்வாரம் தாண்டி, வாசல் தாண்டி.. 

ஆள் மறைந்ததும், திரையாடினாற்போல், காற்று மூச்செறிந்தது. 

அவள் போய் வாசற் கதவைத் தாளிட்டு வந்தாள். வந்து என்னெதிரே முகம் குனிந்து நின்றாள். முகம் ஏதோ ரகஸ்யத்தில் புன்னகை பூத்திருந்தது. அவள் மேல் படா திருந்த அந்த வெட்கத்தையும் ஆட்கொண்ட ஒரு வெற்றியில் அவள் தகதகத்தாள். 

இத்தனை பொலிவு இவளுக்கு எங்கிருந்து வந்தது?

– மீனோட்டம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1991, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *