மாலவல்லியின் தியாகம்






(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
பதிமூன்றாம் அத்தியாயம்
விதியும் மதியும்
அன்று காலையில் வெளியே சென்ற பூதுகன், அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்து விடுவான் என்று வைகைமாலை நினைக்க வில்லை. அவன் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்ததை எண்ணி அவள் திகைப்படைந்ததோடு அவன் முகத்திலும் மிகுந்த வாட்டம் இருந்ததைக் கண்டு திகைப்புற்றாள். அவளுடைய சகோதரி சுதமதி தாழ்வாரத்தில் உட்கார்ந்து வீணை மீட்டிக் கொண்டிருந்தாள். முதல் நாள் இரவு நெடு நேரம் வரையில் கண் விழித்ததால் மிகவும் அசதியோடும் களைப்போடும் மஞ்சத்தில் சாய்ந்திருந்த வைகைமாலை பூதுகனைக் கண்டதும் சட்டென்று எழுந்து, “ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்கள்? ஏதேனும் விசேஷம் உண்டா?” என்று கேட்டாள்.

“நிறைய விசேஷம் உண்டு. ஆனால் எல்லாம் விபரீதமாகவே போய்க் கொண்டிருப்பதால்தான் மனம் மிகவும்
வேதனை அடைகிறது. சம்பாதி வனத்திலுள்ள புத்த சேதியத்தில் ஒரு கொலை நடந்திருக்கிறது….” என்று இழுத்தாற்போல் கூறினான்.
புத்த சேதியத்தில் கொலையா? என்னால் நம்ப முடியவில்லையே?” என்றாள் வைகைமாலை திகைப்போடு.
யாழை மீட்டிக்கொண்டிருந்த சுதமதி யாழைக் கீழே வைத்துவிட்டு மெதுவாக எழுந்து வந்து, “புத்த சேதியத்தில் கொலையா? என்ன அநியாயம்? இப்படியும் நடக்குமா? காலம் ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது! ஏன் நடக்காது? இந்த நாடு சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்குமானால் இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் நடந்திருக்குமா?…” என்றாள்.
“சோழ மன்னர்கள் ஆண்டாலா? துளிக்கூட நடக்காது. இப்பூம்புகாரைப் பல்லவ சக்கரவர்த்திக்கு மரியாதையோடு திரை செலுத்திக் கொண்டு களப்ரகுல திலகர்களான மன்னர்கள் அல்லவா ஆளுகிறார்கள்? புத்த சமயத்தைச் சேர்ந்த அம்மன்னர்கள் இப்படித் தான் பௌத்த தருமத்தையும் காப்பாற்றுகிறார்கள்…” என்றன் பூதுகன்.
திகைப்பிலும் குழப்பத்திலும் இருந்த வைகைமாலை, “யார் கொலை செய்யப் பட்டார்கள்? யார் கொன்றார்கள்?” என்று கேட்டாள்.
“புத்த விஹாரத்தில் வேறு பார் வரப் போகிறார்கள்? அங்கு பிக்ஷக்கள் கூட்டம்தானே அதிகம்? யாரோ ஒரு பிக்ஷு யாரோ ஒரு பிக்ஷுவைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டான்…” என்றான் பூதுகன்.
“வேறு யாராக இருக்கும்? எனக்குத் தெரியும், அந்த பிக்ஷுக்களே எமகாதகர்கள், நான் அவர்களை நம்புவதே இல்லை அவர்களுடைய கொள்கைகளும் எனக்குப் பிடிப்பதே இல்லை. ஆனால் இவளுக்கு மாத்திரம் நான் எவ்வளவு சொன்னாலும் புரிவதே இல்லை. அந்தப் பிக்ஷுகளிடமும், பிக்ஷுணிகளிடமும் அசாத்திய பக்தி மணிமேகலையும், வைத்திருக்கிறாள். நம் குலத்தில் உதித்த மாதவியும் அந்த மார்க்கத்தைப் பின்பற்றினார்கள் என்றால் நாமும் அந்த மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது ஏதாவது விதியா? அந்தக் காலத்தில் அப்படி யிருந்தது. அவர்கள் அந்த மார்க்கத்தைக் கைக் கொண்டார்கள். அன்று சோழ சாம்ராஜ்யம் உலகில் தருமத்தைக் காத்து வந்தது. ஆனால் இன்று அப்படி யில்லையே? இந்த நாட்டில் பல சமயங்களைச் சேர்ந்த அரசர்கள் ஆளத்தொடங்கியதிலிருந்து, தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி ஊழல் தானே மிகுந்து கொண்டு போகிறது? புத்த தருமத்தைப் பின் பற்றும் சிரமணர்களுக்கு சாம்ராஜ்ய ஆசையும் இருந்து கொண்டு வருகிறது. சாம்ராஜ்ய ஆசை கொண்ட முரடர் களையும், சூழ்ச்சிக்காரர்களையும் வஞ்சகர்களையும் சுலபமாக மதத்துக்குள் சேர்த்துக் கொண்டு விடுகின்றனர். அவர்களும் தலையை முண்டிதம் செய்து கொண்டு துவராடையைப் போர்த்திக் கொண்டு சிரமணர்கள் என்று சொல்லிக் கொண்டு ஊரில் திரியத் தொடங்கி விடுகின்றனர். இதெல்லாம் வைகைமாலையின் மனத்தில் படவே படாது. புத்த, ஜைன சமயத் தருமங்கள் எல்லாம் – தத்துவங்க ளெல்லாம் கடல் போன்ற நம்முடைய பிராசீன தருமமான வேத மார்க்கத்தில் இல்லாமல் போகவில்லை. அவைகள் எல்லாம் நம்முடைய மார்க்கத்திலும் அமைந்த சாதாரண தருமங்கள்தான். ‘சர்வம் பிரம்மமயம் ஜகத்’ ‘அன்பே சிவம்’ என்ற கொள்கைகளைப் புரிந்து கொண்டு நாம் அதை அனுசரித்தால் போதாதா….?” என்றாள் சுதமதி ஒரு நீண்ட பிரசங்கத்தைச் செய்து முடித்தவள் போல.
பூதுகன் சுதமதியின் வார்த்தைகள் யாவற்றையும் கேட்டுக் கொண்டு நின்றான். அதற்குள் அவள் தன் பிரசங்கத்தை முடித்துக் கொள்வாள் என அவன் நினைக்கவில்லை. அவனுக்குச்சுதமதியைப் பற்றி நன்கு தெரியும்.

சுதமதியும் வைகைமாலையும் ஒருவரின் மீது ஒருவர் அன்பும் பாசமும் வைத்திருக்கும் சகோதரிகளே தவிர, கொள்கைகளில் மிகவும் நேர்மாறானவர்கள். சுதமதி மிகுந்த சிவபக்தி உடையவன். பல சாஸ்திரங்களையும் நன்கு படித்தவள். சில விரதங்களைத் தீவிரமாகக் கைக்கொண்டவள்.
தனக்கு அடங்கியவளானாலும் தன்னு டைய தங்கை வைகைமாலையின் கொள்கைகளையோ அவள் நடைமுறைகளையோ அவள் தடுத்ததில்லை. நெடு நாட்களுக்குப் பிறகு பூதுகன் கொண்டு வந்த செய்தியினால் தன் மனத்தில் தோன்றியதைச் சொல்லும்படியான நிர்ப்பந்தம் அன்று சுதமதிக்கு ஏற்பட்டுவிட்டது. சுதமதியின் வார்த்தையைக் கேட்டு வைகைமாலை மனவருத்தமோ, கோபமோ அடையவில்லை. தன் சகோதரி தன்னுடைய போக்குக்கு இடையூறு செய்யாமல் எந்த அளவுக்குச் சகிப்புத் தன்மை காட்டினாளோ அந்த அளவுக்கு வைகைமாலையும் சகிப்புத் தன்மை காட்டி வந்தாள், தன் சகோதரியின் நோக்கம், அவளுடைய கொள்கை, அன்பு நிறைந்த உள்ளம் எல்லாம், அவளுக்குத் தெரியும். இதன் காரணமாக வைகைமாலைக்குச் சுதமதியின் பேரில் பக்தியும் பாசமும் அதிகமாயிற்றே தவிர, வெறுப்போ பகை உணர்ச்சியோ ஏற்பட்டது கிடையாது.
வைகைமாலை சிரித்துக்கொண்டே, “அக்காவின் வார்த்தைகளிலும் உண்மை இருக்கிறது. ஆனால் என் கவலைகள் எல்லாம் வேறு. நீங்கள் தயவு செய்து எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுங்கள். புத்த சேதியத்தில் எந்த பிக்ஷு கொல்லப்பட்டார்? அவரை யார் கொன்றார்கள்? நம்முடைய மாலவல்லி அங்குதானே இருக்கிறாள்?” என்று கேள்விகளை அடுக்கினாள்.
“புத்த விஹாரத்தில் கொல்லப்பட்டுக் கிடப்பவர் ரவிதாசர் என்ற பிக்ஷு, மாலவல்லி இந்த மாளிகைக்கு வரும்போது எவர் அவளைப் பின் தொடர்ந்து வந்தாரோ, அவரேதான் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார். புத்த பிக்ஷுவாக இருந்த கலங்கமாலரையரையும் காணவில்லை. அவர் காணாமல் போனதற்குரிய காரணம் உனக்குத் தெரியும். ஆனால் மாலவல்லியும் காணமல் போனதுதான் எனக்குப் பெரிய குழப்பத்தை அளிக்கிறது…” என்று சொன்னான் பூதுகன். இதைக் கேட்டதும் திடுக்கிட்டு, வைகைமாலை “மாலவல்லியும் காணவில்லையா? இது என்ன விபரீதம்? அவள் எங்கே போயிருப்பாள்? அவளுக்கும் இந்தக் கொலைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?” என்று கேட்டாள்.
”அதை யார் கண்டார்கள்? நீ குழப்பம் அடைவதிலோ ஆச்சரியப்படுவதிலோ அர்த்தமே இல்லை. இப்படி எது நடந்தாலும் எதிர்பார்க்கக் கூடியதுதான். ஏனென்றால் இது காதல் விஷயம். அதிலும் களவியல் காதல். நான்தான் உன்னிடம் முன்பே சொன்னேனே, பெளத்த பிக்ஷுணிக் கோலம் பூண்டு திரியும் மாலவல்லியின் அந்தரங்க வாழ்க்கையில் ஏதோ ரகசியமான கதை இருக்கிறதென்று,..”
வைகைமாலை பிரமை பிடித்தவள் போல் ஒன்றும் தோன்றாதவளாக நின்று கொண்டிருந்தாள். சுதமதியின் முகத்தில் ஒரு ஏளனச் சிரிப்பு எழுந்தது. ”எனக்குத் தெரியும், அந்த மாலவல்லியின் நடைமுறை சரியில்லை யென்று. இந்த இளம் வயதில் துறவுக் கோலம் பூண்ட ஒரு பெண் வாழ்க்கையை நேரிய முறையில் நடத்த முடியாதென்று,-புதருக்குள்ளே மல்லிகை மலர் பூத்திருந்தாலும் அதன் மணம் வெளியே பரவி அதைக் காட்டிக் கொடுத்துவிடும்-அதைப் போலத் தன் மனத்தைத் தான் பக்குவப்படுத்திக் கொண்டாலும், நல்லாடைகளையும் ஆபரணங்களையும் துறந்து சீவர ஆடைக்குள் தன் பொன் மேனியைப் புதைத் துக்கொண்டிருந்தாலும் யௌவனமும் அழகும் பிறர் பார்வையில் பட்டு மனத்தைச் கலக்காமல் இருக்காது. இயற்கையாக இந்தப் பருவத்தில் அவளுக்குத் துறவு மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது என்பதை நான் நம்பவே இல்லை. அப்படி ஏற்பட்டிருக்குமானால் தினமும் தனக்குரிய தருமத்தைப் புறக்கணித்து இரவு வேளையில் இரகசியமாக விஹாரத்தை விட்டுப் புறப்பட்டு இந்த மாளிகைக்கு வர மாட்டாள். அவள் இந்தக் கலையில் தேர்ந்தவள். தினமும் பாட வேண்டும் என்ற துடிப்பால் இங்கு வந்தாள் என்றால் நம்ப முடியாது. புத்த விஹாரத்தில் இருந்து கொண்டே தாராளமாகப் பேரின்பமயமான பாடல்களைப் பாடியிருக்கலாமே! இந்நாட்டில் பிராசீனமாக வந்த வேத உபநிஷத மார்க்கங்களை மறுபடியும் புனருத் தாரணம் செய்ய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட சைவ நாயன்மார்களும் வைஷ்ணவ ஆழ்வார்களும் இசையில் தேர்ந்தவர்களாய் மனமுருகப் பக்திரசப் பாடல்களைப் பாடி மக்களின் மனத்தை வசீகரித்துக் கொண்டு வருகிறார்கள். ஆங்காங்கு இசையோடு கூடிய நாட்டியம், நாடகம் இவைகளை நடத்தி மக்களுக்குப் புராதன தரும மார்க்கத்தைப் புகட்டி எளிதில் அவர்களைத் தங்கள் மார்க்கத்துக்கு இழுக்கிறார்கள். இந்தப் புதிய வழியை, பிரசார வழியைக் கண்டு புத்த சமயத் கலா ஞானத்தோடு கலந்த இந்தப்புதிய தினரும் அவ்வழியில் செல்ல ஆசைப்படு கின்றனர். இந்தச் சமயத்தில் மாலவல்லியைப் போன்ற இசையில் தேர்ந்த புத்த பிக்ஷுணி ஒருத்தி சங்கத்திலிருப்பதை அவர்கள் பாக்கியமாக எண்ணிப் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, அவளுடைய இசை ஞானத்தை முடக்கி வைத்து, வறண்ட துறவற வாழ்க்கைக் குள்ளேயே அவளை ஈடுபடுத்திப் புழுங்க வைக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் அவள் பாடுவதற்காகவே இங்கு இரவு வேளையில் ஒளிந்து மறைந்து வருகிறாள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் பாவம்! வைகைமாலை எதை அறிவாள்? அவளுக்கு வெளுத்த தெல்லாம் பால். அதிக உலக அனுபவம் பெறாதவள். எல்லாம் ஒரு நாள் தானே தெரிந்து கொள்வாள் என்றுதான் பேசாமல் இருந்தேன். இன்று எல்லாம் விளங்கி விட்டன” என்றாள் சுதமதி.
வைகைமாலை எதுவுமே பேசாமல் தலை குனிந்த வண்ணமே மனம் குழம்பியபடி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய அழகிய முகம் எதிர்பாராத செய்தியைக் கேட்டதனால் கலக்கமும் துயரமும் அடைந்து வாடி இருந்தது.
பூதுகன் சிரித்தான். எப்பொழுதுமே, எதையுமே. பெரிய விபரிதமாகக் கருதி வாட்டமடைந்து, மனத் தளர்ச்சி அடைபவன் அல்ல அவன். இந்த உலகத்தில் எதையுமே சாதாரணமாக மதித்து, மன சந்தோஷத்தைக் குலைத்துக் கொள்ளாமல் ஆனந்தமாக வாழ் நாளைக் கழித்து விடுவதுதான் சுவர்க்கம் என்ற கொள்கையுடையவன் அல்லவா அவன் ? தன்னுடைய காதலியின் மன வருத்தத்தையும் குழப்பத்தையும் அறிந்திருந்தும் அவன் மனம் குலையாமல் சிரித்துக் கொண்டிருந்தானென்றால் வியப்படைய என்ன இருக்கிறது!.”
“அப்படி யென்றால் மாலவல்லிக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இருக்கும் என்று சொல்லுகிறீர்களா?” கேட்டாள் வைகைமாலை.
“நான் அப்படி யெல்லாம் ஒரு முடிவுக்கு வர மாட்டேன். நான் இதில் தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சிலகாரியங்கள் யார் மனத்திலும் சந்தேகத்தை யெழுப்பக் கூடியதாகத் தான் இருக்கின்றன. கொலை நடந்ததும் கலங்கமாலரையரும் மாலவல்லியும் தலைமறைவாய் எங்கோ போய் விட்டது யார் மனத்திலும் சந்தேகத்தை யெழுப்பக் கூடியது தானே ? அதோடு மாத்திரமல்ல: புத்த விஹாரத்தில் நடந்த இக் கொலைபின் விஷயம் அறிந்ததும் மாலவல்லியின் கதி என்ன ஆயிற்று என்று பார்ப்பதற்காக என்னோடு வந்த வீரவிடங்கனும் திடீரென்று என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் மாயமாய் மறைந்து விட்டான். இதுதான் எனக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யத்தை அளிக்கிறது. மருவூர்ப்பாக்கத்துக்கு வந்து அங்கு இருக்கும் சாலைகளில் எல்லாம் தேடினேன், காணவில்லை. மருவூர்ப்பாக்கத்துக்கு நான் வந்ததற்குச் சிறிது நேரத்துக்கு முன்னால் ஒரு வீரன் குதிரையின் மீது அமர்ந்து எங்கோ சென்றதாக ஒரு வர்த்தகன் என்னிடம் சொன்னான். சந்தேகமின்றி அவன் வீரவிடங்கன்தான் என்று எனக்கு நிச்சயமாகத் தோன்றிவிட்டது. நிச்சயம் வீரவிடங்கனுக்கு மாலவல்லி எங்கே போயிருக்கிறாள் என்பது தெரியாமல் இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். வைகைமாலா! நீ இதைக் குறித்து வருந்துவதில் எவ்வித லாபமும் இல்லை. அவரவர்கள் தங்கள் வாழ்க்கை சுகத்துக்கு வழி வகுத்துக் கொள்கிறார்கள். அது சுலபமான வழியாகவும் இருக்கலாம்; அபாயகரமான வழியாகவும் இருக்கலாம். மாலவல்லி அவளுடைய யௌவனத்துக்கும் அழகுக்கும் ஏற்றாற்போல் கண்கவரும் கம்பீரமான யௌவன புருஷனைக் காதலனாக அடைந்திருக்கிறாள். இத்தகைய சிறந்த காதலனைப் பெற்றிருக்கும் போது, இத்தகைய தொடர்பு அவளுக்கு இருக்கும் போது, அதற்கு நேர்மாறான பிக்ஷுணி வாழ்க்கையை அவள் ஏன் கைக்கொள்ள வேண்டும்? கங்க நாட்டைச் சேர்ந்த அந்த வாலிபன் காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள புத்த சேதியத்திலுள்ள அவளைச் சந்திப்பதற்காக ஏன் ஓடோடி வரவேண்டும்?” என்றான் பூதுகன்.
”அப்படி யென்றால் அவர்கள் எங்கே போயிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டாள் வைகைமாலை.
”எனக்கு என்ன தெரியும்? காஞ்சிக்குப் போயிருக்கலாம். கங்கபாடிக்கும் போயிருக்கலாம். வேறு எங்கேயாவது போயிருக்கலாம். ஒன்றும் நாம் இப்பொழுது நிச்சயமாகச் சொல்ல முடியாது. என் மனத்தில் எத்தனையோ சந்தேகங்களெல்லாம் எழுத்து குழம்புகின்றன. உன்னோடு இவ்வளவு அந்தரங்கத்தோடு பழகிய மாலவல்லி உன்னிடம்கூடச் சொல்லாமல் இப்படித் தலைமறைவாகப் போனது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உன்னிடம் அவள் தன் வாழ்க்கை ரசுசியத்தை யெல்லாம் மறைத்திருக்கிறாள். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்ததுபோல் இன்றிரவும் நீ எதிர்பார்க்க முடியாது. அவளுடைய இனிய இசையை நீ எப்பொழுது கேட்கப் போகிறாயோ? அவன் இசையோடு கலந்த உன்னுடைய ஆட்டம் ஊரறியப் பரிமளிக்கா விட்டாலும் மாளிகையினுள்ளே பரிமளித்துக் கொண்டிருந்தது. இதை யெல்லாம் நினைத்தால் உனக்கு மிகுந்த துயரம் தான் ஏற்படும்…” என்றான் பூதுகன்.
“எனக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் வாய்ச் சொல்லில் அடங்காது. அவளுடைய வாழ்க்கையில் இவ்வளவு ரகசியங்கள் புதைந்து கிடக்கும் இப்படி யெல்லாம் நேரும் என்று நான் நினைக்கவே இல்லை. ஒன்றுக்குப் பின் ஒன்றாக எல்லாம் ஆச்சரியத்தைத்தான் அளிக்கின்றன. நீங்கள் என்ன சொன்னாலும் அவளுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன். அவள் புத்த பிக்ஷுணிக் கோலம் பூண்டு தன்னை மறைத்து வாழ வழி ஏற்பட்டிருந்தாலும், இத்தகைய கொடூரமான காரியங்களைச் செய்வதற்காக இத்தகைய கோலங்களை அவள் கொண்டிருப்பாள் என்பதை நான் நம்ப மாட்டேன். அவள் மிகவும் அடக்கமானவள், அன்புருவானவள். ஏதேர் விதிதான் அவளை இப்படி யெல்லாம் ஆட்டி வைக்கிறது” என்றாள் வைகைமாலை.
‘விதி’ என்ற வார்த்தையைக் கேட்ட தும் பூதுகன் சிரித்தான். “விதி, விதி என்று தனியாக ஒரு கற்பனையை வளர்த்துப்பெரிய ஞானவான்கள் கூடத் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும்போது, பாவம்! பேதைப் பெண் நீ. விதியைப் பற்றி நிறையப் பேச மாட்டாயா? தணியாக விதியொன்று இருந்து ஆட்டுவதாக நாம் நினைப்பதே தவறு. மாலவல்லிக்குத் தான் புத்த விஹாரத்திலிருந்து மறைய வேண்டு மென்று அவளுடைய புத்திக்குத் தோன்றியதாக இருக்கலாம். அல்லது வேறொருவருடைய புத்திக்குத் தோன்றிய விஷய மாக இருக்கலாம். ஆகையால் இதை யெல்லாம் விதி என்று சொல்லாமல் புத்தியால் யோசித்து முடிவு செய்த விஷயமாக நினைக்கிறேன்” என்றான்.
வைகைமாலை ஏதோ பதில் சொல்ல நினைத்தாள். ஆனால் அதற்குள் அவளுடைய சகோதரி சுதமதி சிறிது ஆத்திரம் நிறைந்த குரலில், “நீங்கள் மிகவும் புத்திசாலி, மிகவும் கெட்டிக்காரர். ஆனால் உங்கள் கொள்கைதான் எனக்குப் பிடிக்க வில்லை. நம்முடைய புத்திக்கும் சக்திக்கும் மீறிய சக்தியொன்று இருந்துதான் நம்மை யெல்லாம் ஆட்டி வைக்கிறது என்றுதான் நான் கூறுகிறேன். இதெல்லாம் நம் முன்னோர்கள் கண்ட உண்மை. இதை நீங்கள் மறுத்துக்கூற முடியாது” என்றாள்.
பூதுகன் எப்பொழுதும் போல் ஒரு சிரிப்பு சிரித்தான். “நம்முடைய சக்திக்கும் மீறிய சக்தி யொன்று இருக்கிறது என்பதும் நம்முடைய புத்திக்குத்தானே படுகிறது” என்றான்.
“நீங்கள் சொல்லுகிறபடி தங்களுடைய புத்தியாலும் சக்தியாலுமே தங்கள் புத்திக்கும் சக்திக்கும் எட்டாத ஒரு பொருளைக் கண்டு பிடித்தார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர்கள் கண்டு பிடித்த உண்மைகளை நீங்கள் மறுக்க முடியாதல்லவா?” என்றாள் சுதமதி.
“மறுக்க முடியாதா? அதைத்தானே நான் மறுத்துக் கொண்டு வருகிறேன். அவர்கள் முயற்சியில் கண்ட பொருளை, சொல்லத்தான் நாம் தெரிந்து கொள்ள முடிகிறதே தவிர அவர்கள் கண்ட பொருளை நாம் காண முடிவதில்லை அல்லவா? நமக்கும் அவர்களால் காட்ட முடியவில்லை அல்லவா?”
இதற்குத் தக்கபதில் சொல்லச் சுதமதி முயற்சித்தாள். ஆனால் அதற்குள் யாரோ, ”சுவாமி” என்று கூப்பிடும் குரல் கேட்கவே அவர்கள் கவனம் எல்லாம் வாயிற்பக்கம் சென்றது.
பூதுகன் வெளியில் சென்று அங்கு வந்திருந்த ஒரு மனிதரிடம் ஏதோ சில வினாடிகள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவசரம் அவசரமாக உள்ளே வந்து,
“வைகைமாலா ! நான் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது. நான் எங்கே போகிறேன் என்பதை முடிவாகச் சொல்ல முடியாது. எப்பொழுது திரும்புவேன் என்றும் சொல்ல முடியாது. ஆனால் எங்கும் நான் தங்கிவிட மாட்டேன். ஏனென்றால் எதைச் சகித்துக் கொண்டாலும் உன் பிரிவாற்றமையை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது, நீ கவலைப்படாதே. உன் தோழி எங்கே இருக்கிறாள். எப்படி இருக்கிறாள் என்பதை யெல்லாம் கண்டு பிடித்துத் தெரிந்து கொண்டு உன்னிடம் வந்து சொல்ல வேண்டியது என் பொறுப்பு” என்று சொல்லி வைகைமாலையை அன்புறத் தழுவி விடைபெற்றுக் கொண்டான்.
பதினான்காம் அத்தியாயம்
புதிய விருந்தினன்
சோழ வள நாட்டில் கரிகாலனால் சமைக்கப்பட்ட பூம்புகார் நகருக்குச் சிறிது புகழ் குறைந்து விட்டது என்ற உண்மை தொண்டை நாட்டிலுள்ள காஞ்சி நகரைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்களுக்குத்தான் தெரியும். ஒரு காலத்தில் பூம்புகாருக்கு எத்தகைய சிறப் பும் பெயரும் இருந்ததோ, அத்தகைய பெருமை யும் சிறப்பும் காஞ்சிமா நகருக்கு இருந்தது.

அவனி நாராயணன் என்ற இயற் பெயரையும், நத்திவர்மன் என்ற குலப் பெயரையும் பெற்றுக் காவிரி நாடன் என்ற சிறப்புப் பெயரையும் தாங்கி நின்ற பல்லவப் பேரரசர் ஆளுகையில் அப்பொழுது தலைநகராக விளங்கிய காரணத்தால் மிகுந்த கர்வம் அடைந்ததுபோல் திகழ்ந்து கொண்டிருந்தது. காஞ்சிமாநகரம். இதற்கு அடையாளமாக நந்தியைச் சின்னமாகப் பொறிக்கப்பட்ட வெண் கொடிகள் வெற்றியைப் பாடி வானளாவப் பறந்து கொண்டிருந்தன. அவனி நாராயணன் சைவ சமயத்தவராக இருப்பினும் எல்லாச் சமயங்களையும் ஆதரிக்கும் மனப் பண்பு உள்ளவராகத் திகழ்ந்ததால் காஞ்சிமா நகரில் வைஷ்ணவர்கள், சைவர்கள், ஜைன, புத்தசமயத்தைச் சேர்ந்தவர்கள் யாவருமே தங்கள் மத சம்பிரதாயங்களைப் பரப்பி மிக சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்தனர்.
அவனி நாராயணன் சிவபெருமானிடம் பக்தி கொண்டவராய் எப்பொழுதும் நெற்றியில் திருநீறு அணிந்து பெருமானைப் புகழ்ந்து பாடுவதிலும் பெருமானைப் பாடுவதைக் கேட்டுக் களிப்பதிலுமே சிந்தையைச் செலுத்துபவராய் இருந்தார். ஆனாலும் நகரில் வணிகப் பெருமக்களின் பேராதரவு பெற்று வளர்ந்து நின்ற சமண சமயத்துக்கு எவ்விதத் தீங்கும் நினையாது பெருங்குணம் படைத்த புரவலராக வாழ்ந்து வந்தார், நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வந்த ஜைன சமயத்தின் காரணமாகக் காஞ்சி நகரின் ஒரு பகுதியே ஜனகஞ்சி என்ற பெயர் பெற்றுத் திகழ்ந்தது.
அச் சமயம் புத்த சமயம் மிகச் சிறப்புள்ள நிலையிலே இல்லாவிடினும் காஞ்சிமா நகரில் சில குறிப்பிட்ட இடங்களில் பௌத்த விஹாரங்களும் பெளத்தமதப் பள்ளிகளும் மிக உன்னத நிலையில்தான் இருந்தன. அழகான வீதிகளில் துவராடை பூண்டு பிக்ஷ பாத்திரம் ஏந்திச் செல்லும் பௌத்த பிக்ஷுக்களையும், மயில் பீலி தாங்கித் திரியும் சமணத் துறவிகளையும். விபூதி ருத்திராட்சம் துலங்கக் காட்சி யளிக்கும் சிவனடியார்களையும், வைணவ பாகவதோத்தமர்களையும் நேச மனப்பான்மையுடன் கலந்திருக்கக் காண முடிந்தது. சைவமும் வைணவமும் மிகவும் முன்னேறி வந்த அக்காலத்திலும் புத்த மதத்தினரும், சைவ மதத்தினரும் தங்கள் மதப் பிரசாரத்தில் தீவிர நிலையைக் காட்டி வந்தனர் என்றால் அதை அனுமதித்து வந்த சைவ வைணவர்களின் பெருந்தன்மையையும், மன்னரின் சம நோக்கத்தையும் நாம் புகழாமலிருக்க முடியாது.
பௌத்த மதத்தினரைவிட ஜைன மதத்தின் பிரசார வேகமும் பலமும் தலை தூக்கி நின்றன. வணிகப் பெரு மக்களின் பேராதரவும் மக்களின் மதிப்பும் பெற்று இருந்த அச் சமயத்தினர் மற்ற சமயத்தினரின் செல்வாக்கில் மிகுந்தே இருந்தனர். இந்தத் தருணத்தில் சமண சமயத்திலுள்ள சிலரிடையே வேற்றுமை மிகுந்திருந்தது. சிலர் மிகவும் செருக்குடையவர்களாக இருந்தனர். சிலர் அரசியலில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கி யிருந்தனர். வணிக மக்களிடம் பெரு மதிப்புப் பெற்றிருந்த சமணத் துறவிகள் தங்களிடம் அபிமானம் வைத்த குடும்பத்தினரிடமே தங்களுடைய அதிகாரங்களைப் பிரயோகிக்கத் தொடங்கினர். அதோடு நந்திவர்மனின் தம்பி முறையாக வேண்டிய சிம்ம வர்மன் ஒரு தீவிர சமணவாதியாக இருந்தான். சிம்ம வர்மன் பல்லவ அரசன் நந்திவர் மனுக்குச் சொந்தத் தம்பியாய் இல்லா விட்டாலும் அவனுக்கு அரசாங்கத்தில் பெரு மதிப்பும் கௌரவமும் இருந்தன. இதற்குக் காரணம் பல்லவ சாம்ராஜ் யத்தின் சக்கரவர்த்தியாக, சிம்ம வர்ம னின் பாட்டனாகிய சித்திரமாயன் தான் அரசனாக வேண்டியவன். ஆனால் சித்திர மாயன் பட்டத்துக்கு வரும் சந்தர்ப்பத் தில் சாம்ராஜ்யத்தையே சிதைக்கக் கூடிய போர்க் குழப்பங்கள் ஏற்பட்டி ருந்தபடியால் அவனுக்குச் சித்தப்பனான இரணிய வர்மனின் மேற்பார்வையில் அவன் மகன் இரண்டாம் நந்திவர்மன் பட்டம் சூட்டிக் கொண்டான். அதி லிருந்து ராஜ்ய பாரம்பர்யம் கைமாறி விட்டது. அவ்வழியில் வந்த வீரநாரா யணன் என்னும் மூன்றாம் நந்திவர்மன் அரச சிம்மாசனம் ஏறினான். முதற்கிளை யில் உதித்த சிம்மவர்மனுக்குச் சிம்மாச னம் ஏறும் பாக்கியம் கிடைக்காவிட்டா லும், அவனுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் அளித்திருந் நந்தி வர்மன், என்னதான் தனக்கு மரியாதையும் செல்வாக்கும் இருந்தாலும் உலகையாளும் அரசன் என்ற புகழ் துர்ப்பாக்கியவசமாக வேறு கைக்கு மாறிவிட்டதே என்ற பொருா மையில் சிம்மவர்மன் நந்திவர்மனின் அரசைக் கவிழ்க்கும் சில சூழ்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கினான். பாவம், அவ னுடைய சூழ்ச்சிகளுக்குச் சமண சமயத் தைச் சேர்ந்த சில செல்வம் மிகுந்த வணிகர்களும் புகழ்பெற்ற சமயப் பிர சாரகர்கள் சிலரும் உதவி செய்தது தான் மிகவும் பரிதாபகரமானது.
மாலை வேளை. தேவர்களின் அமரா வதி பட்டினத்தையும் அழகில் மிஞ்சிய தாக விளங்கும்[காஞ் சிமா நகரின் ‘வானளாவும் மாடங்கள் நிறைந்த மாளிகை களின் சாளரங்களில் தீப அலங்காரங்கள் செய்யப்பட்டு நகரையே ஒளி மயமாக் கின. அன்றுதான் அந்த ஊருக்கே புதிதாக வந்தவன் போலும், அந்த நகரின் பேரழகைக் கண்டு பெரு வியப்பில் ஆழ்ந்து விட்டவன் போலும் தோன்றிய வாலிபன் ஒருவன் விசித்திர விசித்திரமாகத் தோன்றும் அழகிய பெரிய மாளிகைகளையும் தேவாலயங் களையும் பார்த்துக் கொண்டே பல வீதி களையும் கடந்து நடந்து வந்தான், பல தெருக்களையும் கடந்து நடந்துகொண் டிருக்கும் அவன் எந்த வீதியிலோ தனக்கு வேண்டிய யாரையோ தேடிக் கொண்டு போகிறான் என்பதைத் துருவித் துருவிப் பார்க்கும் அவன் கண் பார்வையி லிருந்து நன்கு தெரிந்து தெரிந்து கொள்ள முடித்தது.
அவன் ஒரு பெரிய வீதியை அடைந்த தும் ஒரு வீட்டிலிருந்து யாழின் ஒலியும், இன்னொரு வீட்டில் சதங்கை ஒலியும், மற்றொரு வீட்டிலிருந்து குழல் ஒலியும், பிரிதொரு வீட்டிலிருந்து இனிய குர லால் ஒரு பெண் பாடும் ஒலியும் வரிசை யாகக் கேட்டுக்கொண்டிருந்தன. அவன் ஓர் இடத்தில் தயங்கி நின்றான். அவன் நாடி வந்த வீதி இதுதான் என்பதைப் பிறரைக் கேட்காமலேயே அறிந்து கொண்டு விட்டான். ஆனால் அவன் யாரை நாடி வந்தானோ அவர்கள் இருக் கும் மாளிகையை அறிந்து கொள்வது எப்படி என்றுதான் தயங்கி நின்றிருக்க வேண்டும். நல்ல வேளை, அவன் எதிரே ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார். அந்த வாலிபன் மெதுவாக அந்த மனித ரிடம் நெருங்கி, ‘ஐயனே! இங்கு சோழ நாட்டிலிருந்து வந்து குடி புகுந்திருக்கும் “தேனார்மொழி’ என்னும் இசைக் கணி கையின் மாளிகை எது?” என்றான்.
அந்த வாலிபனின் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்த மனிதர் அலட்சிய மாகச் சிரித்துக் கொண்டே, “சோழ நாடு ..அப்படி ஒரு நாடு கூட இருக் கிறதா? என்னையா பழைய புராண காலத்து நாடுகளை யெல்லாம் பற்றி இப்பொழுது பேச வந்துவிட்டீர்? இப் பொழுது நீர் குறிப்பிடும் அந்த நாடுகள் எல்லாம் பல்லவநாடு என்பதை மறந்து, இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் தலை நகரில் வந்தே ‘சோழ நாடு’ என்று பேசுகிறீரே?” என்றார்.
அந்த வாலிபனும் சிறிது அலட்சிய மாகச் சிரித்தான். “உண்மைதான், தவறுதான். கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை நினைத்துப் பார்ப்பது கூட இப்பொழுது நீங்கள் சொல்வதுபோல் ஏதோ புராண காலத் தையோ புராதன காலத்தையோ நினைத்துப் பார்ப்பது போல்தான் இருக் கிறது. என்ன செய்வது? புராண காலத்திலோ புராதன காலத்திலோ ஏற்பட்டவைகளையெல்லாம் நம்முடைய நினைவுக்குக் கொண்டு நினைவுக்குக் கொண்டு வர இன்னும் காவியங்களும் ஓவியங்களும் அழியாமல் இருக்கின்றன அல்லவா? பெருமை பொருந்திய இந்தப் பல்லவ சாம்ராஜ் யத்தின் தலை நகரிலிருந்து, நான் சோழ நாடு என்று சொன்னதன் காரணமாகச் சோழ பரம்பரையை நினைவுப்படுத்தி விட்டது பிசகுதான். வேறு அடையாளம் சொல்லிக் கேட்க முடியாமையாலும் சோழ நாடு, சோழநாடு என்று சொல்லிப் பழக்கம் ஏற்பட்டு விட்டதாலும் அப்படிக் கேட்டேன். பல்லவர் கோனும் தன்னைத் “தமிழ்த் தென்றல் புகுந்துலவும் தண் சோணாடன்” என்று சொல்லிக் கொள்வதால் சோழநாடு என்று சொல்லுவதில் தவறு இல்லை என்று எண்ணி விட்டேன். போகட்டும். இப்பொழுது என் தவறை உணர்ந்து விட்டேன். குடந்தைக் கோட்டத்திலிருந்து இங்கு வந்து குடி புகுந்திருக்கும் தேனார்மொழியாள் என்ற அணங்கின் வீடு எது என்று கேட்கிறேன். தயைசெய்து தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுவீர்களா?” என்று கேட்டான்.
அந்த மனிதர் அவ் வாலிபன் பேச்சிலிருந்து அவன் ஒரு சாதாரண வாலிபன் அல்ல, நன்கு படித்த பேரறிவாளன் என்பதை உணர்ந்து கொண்டு தம்முடைய மதிப்பையும் விட்டுக் கொடுக்காதவர் போல், “பழக்கத்தினால் ஏற்பட்ட தவறை நான் பெருங் குற்றமாய்க் கருதவில்லை. இங்கிருந்து மேற்கே பொன்தகடு போர்த்தியது போல் துலங்கும் அதோ அந்த மஞ்சள் நிற மாளிகைதான் தேனார்மொழியாளின் மாளிகை” என்று சொல்லி விட்டு நடந்தார். அந்த வாலிபனும் அலட்சிய மாகப் புன்முறுவல் பூத்தபடியே அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு நடந்தான். ஆனால் சில வினாடிகளே பேசிக் கொண்டிருந்தாலும் அந்த மனிதரின் முகத்தைத் தன் நினைவில் வைத்துக் கொள்ள நினைத்தான் அந்த வாலிபன்.
தேனார்மொழியாள் சோழ நாட்டிலுள்ள குடந்தைக் கோட்டத்திலிருந்து பல்லவரின் அரச சபையில் ஒரு இசைக் கணிகையாக ஊழியம் செய்ய வந்தவள். இசைக் கலையில் மிகவும் தேர்ந் தவள் என்பதோடு, பல்லவ அரசர்களில் மிகவும் சிறந்தவனாக. விளங்கியவனும் இசைக் கலையில் லய வகைகளில் பல நடை களைக் கண்டு சாஸ்திரம் வகுத்தவனுமான மகேந்திர பல்லவன் மீட்டிய பரிவாதினி என்னும் எட்டு பொன் நரம்புகளைக் கொண்ட அற்புத யாழை அவனுக்குப் பீன் எடுத்து மிகவும் அழகாக வாசிக்கும் திறமையும் பெற்றிருந்தாள் தேனார்மொழியாள். குடந்தைக் கோட்டத்திலிருந்த அவள் இசைத் திறனை அறிந்து வீரநாராயண நந்தி வர்மன் மிகப் பெருமையோடு அவளைத் தன் சபையில் பிரதான இசைக்கணிகையாக அமர்த்திக் கொண்டான். அரசனின் அன்பும், நன்மதிப்பும் இசைக் கலையில் பிறரை வசீகரிக்கும் தேர்ச்சியும் பெற்று மக்களின் நன்மதிப்புக்கும் பாத்திர மான தேனார்மொழியாளின் பெருமை யைப் பற்றி நாம் சொல்ல வேண்டுமா? உண்மையாக அவளுடைய பெரிய மாளிகை பளபளக்கும் மஞ்சள் வர்ணக் குழம்புகளால் பூசப்பட்டிருந்தாலும் பொன் தகட்டால் போர்த்தப்பட்டது போல் தானிருந்தது. உண்மையிலேயே தன் மாளிகையையே பொன் மாளிகை யாக்கிக் கொள்ளும் செல்வச் செருக்கும் அவளுக்கு இருந்தது.
அந்த வாலிபன் அந்த மாளிகையின் வாசலில் வந்து சிறிதுநேரம் தயங்கி நின்றான். உள்ளிருந்து வந்த அந்த யாழின் ஒலி கேட்டு அவன் அப்படித் தயங்கினானோ அல்லது திடீரென்று அந்த மாளிகைக்குள்ளே போவது அவனுக்குச் சங்கோசத்தைக் கொடுத்ததோ தெரியாது. ஏதோ யோசனை செய்த வண்ணமே தயங்கியபடியே மெதுவாக உள்ளே சென்றான்.
அந்த மாளிகைதான் எவ்வளவு அழகு! வெளிப்புறத்தை விட உட்புறம் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. வெளிப்புறத்தில் பார்வைக்குப் பொன் வண்ணமாகக் காட்சியளித்த அந்த மாளிகை உட்புறத்தில் பொன் மயமாகவே காட்சியளித்தது. வட்ட வடிவமான தாழ்வாரத்தைச் சுற்றிலும் அழகான பொன் தூண்கள் தாங்கி நின்றன. சுவர்களில் நீண்ட நிலைக் கண்ணாடிகளும் சிவபெருமானின் பல திருக்கோலங்களைக் காட்டும் அழகான ஓவியங்களும் பதிக்கப்பட்டிருந்தன.
தரை யெங்கும் விலை யுயர்ந்த இரத்தினக் கம்பளங்கள் விரிக்கப் பட்டிருந்தன. சீன நாட்டிலிருந்து வரவழைக்கப் பட்ட வர்ணக் கண்ணாடி தொங்கு விளக்குகள் தங்கள் வர்ண ஒளியால் அந்த அழகிய தாழ்வாரத்தைக் கற்பனைக்கு எட்டாத ஒரு ஒளி உலகத்தைக் கனவில் சொண்டு வந்து காட்டுவது போன்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தின. ஆம்! அந்த ஒளி உலகமே மன மயக்கத்தைக் கொடுப்பதாய்த் தானிருந்தது. அந்த ஒளி உலகத்தையே தனி அரசாட்சி செய்யும் பேரரசு போல் பொன்னாடை யணிந்து, பொன் மணி பூஷணங்கள் அணிந்து உலகை மறந்து இசையில் கலந்து இருக்கும் சுந்தரியையும் பார்த்த பின் இரும்பான மனசும் மெழுகாக உருகிவிடும் என்பது நிச்சயம். ஆம்! அவள்தான் தேனார்மொழி, அவளுடைய பேரெழில் தான் என்ன? அவள் இள நங்கையல்ல! அவளுக்கு வயது முப்பதுக்கு மேலிருக்கும்.ஆயினும் அந்தப் பொன் மேனியின் அழகில் மாசுமறுவற்ற இளமை யெழில் தான் மிகுந்திருந்தது. உண்மையிலேயே அந்த வாலிபன் தட்டுத்தடுமாறி ஏதோ ஒரு உலகத்துக்கு வந்து விட்டவன் போல்தான் மயங்கி நின்று கொண்டிருந்தான். அவனுடைய மயக்கம் தெளியச் சிறிதுநேரம் சென்றது. இசையில் மெய் மறந்து இருக்கும் அந்த அணங்கின் கவனத்தை எப்படித் திருப்புவது என்றுதான் அவனுக்குத தெரியவில்லை. அவன் மெதுவாக நடந்து தேனார்மொழியாளுக்குச் சமீபமாகப் போடப்பட் டிருந்த ஒரு ஆசனத்தில் உட்காருபவன் போல உட்கார்ந்து, அதைச்சிறிது சத்தம் எழும்படி நகர்த்தி அவள் கவனத்தைக் கவர்ந்தான்.
யாழின் சுருதியோடு இணைந்து அமைதியான இசை வெள்ளத்தில் மூழ்கியிருந்த தேனார்மொழியாளுக்கு இடையே களங்கத்தை ஏற்படுத்துவது போல் ஒரு சத்தம் எழவே சுய உணர்வு பெற்றவளாய்த் தன் அழகான விழி களைத் திறந்து பார்த்தாள். தன் எதிரே ஆசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் வாலிபனைக் கண்டதும் அவளுக்குச் சிறிது திகைப்பு ஏற்பட்டது. அவளுடைய அழகிய விழிகள் பரபரப்பு அடைந்து வியப்பில் சுழன்றன.
அவ்வேளையில் ஒருவரும் அறியா வண் ணம் தன் மாளிகையில் நுழைந்ததோடு எவரும் உபசரித்து ‘உட்காரு’ என்று சொல்லாதபோது தானே வந்து ஆச னத்தில் அமர்ந்திருக்கும் மனிதரைப் பற்றி அவள் என்ன நினைப்பது? உண் மையிலேயே அவ்வாலிபன் சிறிது அதிர்ஷ்டம் செய்தவனாகத்தானிருக்க வேண்டும்? இல்லா விட்டால் ஒரு வாலி பன் அந்த நிலையில் துணிவோடு வந்து தன் எதிரில் அமர்ந்திருப்பதைப் பார்த் ததும் தேனார்மொழியாள் பொறுமை யோடு இருந்தாள் அல்லவா? பாவம்! இயற்கையிலேயே அந்த வாலிபனின் கம்பீரமான முகவொளி தேனார்மொழி யாளின் மனோ வேகத்தையே அடக்கிப் பிடித்திருக்க வேண்டும். எத்தனையோ அரச குமாரர்களின் முகங்களையும், பிர புக்களின் முதங்களையும் பார்த்திருக்கும் அவளுக்கு அந்தப் புதிய முக கம்பீரம், காணாத புது வசீகரமாகத்தான் இருந் தது. சில நிமிட நேரங்கள் அந்த வாலி பனின் ஒளி முகத்தை அவள் பார்க்க முடியாதபடி இனமறியாத நாணம் அவளைப் பிடித்துக் கொண்டு தலைகுனிய வைத்தது. அவள் தன் பெயருக்கு ஒத்த இனிய குரலில், “தாங்கள் யார்?” என்று கேட்டாள் மிகுந்த மரியாதை யோடும் அடக்கத்தோடும்.
“நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன்’ என்று அவனும் சுருக்கமாகவே சொல்லி நிறுத்தினான். அவன் இவ்வளவு சுருக்கமான பதில் சொல்லி நிறுத்துவான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனோடு பேசுவ தற்கே வெட்கப்பட்ட அவளுக்கு இந்த நிலை மேலும் சற்றுத் தர்மசங்கடத் தைத்தான் உண்டாக்கியது.
“தங்கள் சொந்த ஊர் எதுவோ. நான் தெரிந்து கொள்ளலாமா??'” என்று வினவினாள் பணிவான குரலில்.
“உங்கள் சொந்த ஊருக்குச் சமீபம் தான். குடந்தைக்குச் சமீபமாக உள்ள திருப்புறம்பியம்!” என்று சொல்லி நிறுத்திக் கொண்டான் அவன்.
‘சோழ நாட்டைச் சேர்ந்தவன். அதி லும் தன்னுடைய சொந்த ஊருக்குச் கேட்ட அவனிடம் அவளுக்கு ஒரு மதிப் சமீபத்தில் இருப்பவன்’ என்பதைக் பும் பரிவும் ஏற்பட்டன. இதன் காரண அவனோடு இன்னும் கொஞ்சம் பேசத் தைரியமும் ஏற்பட்டிருக்க வேண்டும். அவன் முகத்தை அவள் மறுபடியும் உற்றுக் கவனித்து விட்டு, “தாங்கள் திருப்புறம்பியத்தைச் சேர்ந்தவர்களா? மிக்க மகிழ்ச்சி. சோழ நாட்டவர்கள் வந்தால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் என் வீட்டில் தாங்கள் விருந்தினராகத் தங்கலாம். தாங்கள் என் வீட்டை நாடி வந்ததற்கு மிகவும் சந்தோஷம்” என்றள் சிறிது வெட்கமும் பரிவும் நிறைந்த குரலில்.
அந்த வாலிபன் சிரித்தான். “தங்கள் உபசார வார்த்தைக்கு நன்றி. நான் இந்தக் காஞ்சிக்கு விருந்து சாப்பிடுவதற்காக வரவில்லை. சோழ நாட்டில் வாழும் ஒருவனுக்கு மற்ற எந்த நாட்டின் விருந்தும் மிக உன்னதமாக இருந்த தில்லை. நான் இந்தக் காஞ்சிக்கு வந்த காரணமே வேறு.அதுவும் உங்களைத் தேடி வந்த காரியம் மிக முக்கியமானது” என்றான்.
அந்த வாலிபனின் வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த வியப்பை அளித்தன. அவள் ஒருவிதமாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “நீங்கள் எந்தக் காரிய மாகவேனும் இந்த ஊருக்கு வந்திருக்கலாம். ஆனால் சோழ நாட்டிலிருந்து வந்திருக்கும் தங்களுக்கு உபசாரம் செய்ய வேண்டியது என்னுடைய கடமை. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் எங்கே இருந்தாலும் அவர்களோடு அவர்களோடு ஒட்டிய இந்தப் பண்பாட்டிலிருந்து விலக முடியாதல்லவா? இருக்கட்டும்-தாங்கள் என்னிடம் எவ் விஷயமாக வந்திருக்கிறீர்கள்? தெரியப் படுத்தினால் நன்மையாக இருக்கும். தங்களுக்கு அரசாங்கத்தில் ஏதேனும் உதவிகள் வேண்டுமாயின் செய்யச் சித்தமாய் இருக்கிறேன். தங்களுக்கு ஏதேனும் உத்தியோகம் அரண்மனையில் வேண்டுமாயினும்.” என்று மெதுவாகச் சொல்லி நிறுத்தினாள்.
அந்த வாலிபன் கொஞ்சம் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, ”எனக்கு அரச சமூகத்தில் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. நான் சோழ அரச சபையில் ஏதேனும் உத்தியோகம் கிடைத் தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இந்தப் பல்லவ அரசர்களின் அரச சபையில் உத்தியோகம் தேடிக் கொள்ளும் அளவுக்கு என் புத்தி சுய மதிப்பை இழந்துவிட வில்லை. அதுவும் இந்த அரசாங்கத்தில் ஒரு பெண்ணின் சிபார்சினால் உத்தியோகம் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு என்னுடைய நிலை வந்துவிட வில்லை” என்றான்.
அந்த வாலிபன் தன்னுடைய வார்த்தைகளுக்கு அத்தகைய முறையில் பதில் அளிப்பானென்று தேனார்மொழியாள் எதிர்பார்க்க வில்லை. தன் உள்ளத்தில் திடீரென்று ஏற்பட்ட பரிவும் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியும் தனக்குப் பல்லவ அரசசபையில் உள்ள மதிப்பு காரணமாக ஏற்பட்ட மமதையுமே தன் எதிரில் வந்து நிற்கும் ஒரு மனிதனின் மனநிலை. அந்தஸ்து இவைகளை அறிந்து கொள்ளும் முன்னால் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லும் படி செய்து விட்டன என்று அவள் நினைந்து மனம் வருந்தினாள். ”மன்னிக்கவும்-நான் தங்கள் மன நிலையைப்பற்றியும். தங்கள் யோக்கியதையைப்பற்றியும், தாங்கள் வந்த காரியம் என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் முன்னால் இத்தகைய வார்த்தைகள் பேசியது தவறுதான். தாங்கள் யார்? தாங்கள் என்னிடம் வந்த காரியம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தங்களுடைய காரியம் என்ன என்று தெரிந்து கொண்டபின் அக்காரியத்துக்கு என்னாலான உதவிகளை யெல்லாம் செய்யச் சித்தமாயிருக் கிறேன்” என்றாள்.
“தங்களிடம் நான் வந்த காரியத்தைப் பளிச்சென்று சொல்லிவிட முடியாது. அது மிகவும் அந்தரங்கமான விஷயம். இங்கு நீங்கள் தனித்திருக்கும் நிலையில் அந்த விஷயத்தைச் சொல்லலாம்-ஆயினும் திடீரென்று யாரேனும் வந்து நம்முடைய வார்த்தைகளைக் கேட்டுவிட்டால் மிகவும் விபரீதமாக முடியும்…” என்று கூறினான்.
அவனுடைய வார்த்தைகள் தேனார்மொழியாளுக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யத்தை யளித்தன. அவன் தன்னிடம் எத்தகைய அந்தரங்கமான காரியத்தை உத்தேசித்துப் பேச வந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதபடி குழப்பம் தான் அப்பொழுது அவளுக்கு ஏற்பட்டது. “நீங்கள் பயப் படவேண்டாம் – நீங்கள் என்னோடு தாராளமாகப் பேசலாம். உங்களுக்கு எவ்வித இடையூறோ ஆபத்தோ ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் நான் வாயில் கதவை வேண்டுமானால் சாத்தித் தாழிட்டுவிட்டு வருகிறேன்…” என்று சொல்லிச் சட்டென்று வாசற் பக்கம் சென்று கதவை மூடித் தாழிட்டு விட்டு உள்ளே வந்து அவன் எதிரில் நின்றாள்.
“நீங்கள் இவ்வளவு சகஜமான உள்ளமும் உபகாரசிந்தையும் உள்ளவர்களாக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அதுவரையில் மகிழ்ச்சி. முதலில் நான் இன்னாரென்று தங்களுக்கு அறிமுகம் செய்துகொள்ள வேண்டாமா? என் பெயர் பூதுகன் . நீங்கள் இந்தப் பெயரை இதற்குமுன் எங்கேயாவது கேள்விப்பட் டிருக்கலாம்…” என்று சொல்லி விட்டு ஆர்வத்தோடு அவள் முகத்தைப் பார்த்தான் அவன்.
பதினைந்தாவது அத்தியாயம்
சிம்மவர்மனின் சதி
அவன் தன்னுடைய பெயர் பூதுகன் என்று கூறிய தைக் கேட்டதும் தேனார்மொழியாள் அப்படித் திகைத்து நின்று விட்டதில் எவ்வித ஆச்சர்யமும் அடைந்துவிட வில்லை. அவள் அவனைப் பற்றியும் ஓரளவு அறிந்து கொண் டிருக்கிறாள் என்பதைத்தான் அப்போது அவள் இருந்த நிலை விளக்கிக் காட்டியது, அவனை நேரில் அனேகர் பார்த்திராவிட்டாலும் தமிழகத்திலே தீவிர நாஸ்திகவாதி யாகிய பூதுகனைப் பற்றி எவரும் கேள்விப் பட்டிருக்காமல் இருக்க முடியாது, அதுவும். சோழநாட்டில் பிறந்தவர்கள் யாரும் அவனைத் தெரிந்து கொள் ளாமலிருக்க முடியாது. இந்த நிலையில் தேனார் மொழியாள் அவனைப் பற்றி அறிந்து கொண்டிருந்ததில் வியப்பில்லை யல்லவா?’

பூதுகன் என்ற பெயரைக் கேட்டதும் தேனர் மொழியாள் நிகைப்படைந்து போனதற்கு முக்கிய காரணம் அவனுடைய உருவம் தான். தீவிர தாஸ் திகவாதியாகிய பூது கனைப் பற்றி அவள் நினைக்கும் போதெல் வாம். அவள் மனக் கண்முன் ஏதோகுரூர மான உருவம்தான் நிற்கும். ஆனால் இன்று அவனை யே தேரில் பார்த்து விட்டதும் முக வசீசுரம் நிறைந்த தெய்வீக புருஷன் போல்தான் அவன் காணப்பட்டான். அவள்தான் பூதுகன் என்று அறிந்ததும் அவளுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை விட அத்தகைய நாஸ்திகவாதி தன்னை தாடி எதற்காக வந்திருக்க வேண்டும் என்ற ஆச்சரியம்தான் மேலும் அவள் மனத்தைக் குழப்பியது.
“தாங்கள் தானா அவர்? தங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.. ” என்கிற வார்த்தைகள் அவளை அறியாம லேயே அவன் உள்ளத்திலிருந்து வெளி வந்தன. அதைத் தொடர்த்து, தாங்கள் என்னை எதற்காக நாடி வத்தீர்கள்?” என்று கேட்டாள்.
“பயப்படாதீர்கள். உங்களோடு நாஸ்திக வாதம் பேச நான் வரவில் முக்கியமாக இது ஒரு பெண்ணைப் பற்றிய விஷயம்” என்றன் பூதுகள்.
“பெண்ணைப் பற்றிய விஷயமா? யார் அந்தப் பெண்? என்ன விஷயம்?” என்று கேட்டாள் அவள் பதற்றத்தோடு.
“அலையூர் கக்கையின் பேத்தி மாலவல்லியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவளைப் பற்றிப் பேசத் தான் உங்களை நாடி வந்தேன்” என்று சொன்னான் பூதுகன்.
“அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அக்கறை உங்களுக்கு ஏற்பட்டதின் காரணம் என்ன” என்று வியப்புடன் வினவினாள் அவள். “காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள வைகைமாலையைப் பற்றி உங்களுக்குத் தெரித்திருக்கலாம்…”
“தெரியாம லென்ன? எனக்கு நன்றாகத் தெரியும். அவளுடைய சகோதரி சுதமதியும் நானும் தான் சதுர்வேதிமங்கலத்தில் இசைக்கலை பயின்றேம். அப்பொழுது நான் வைதைமாலையோடு நெருங்கிப் பழகி யிருக்கிறேன். அவள் பரத சாஸ்திரம் கற்றுக் கொண்டிருந்தாள். குழந்தைப் பருவத்திலிருந்தே மிக நன்றாக நாட்டியம் ஆடுவாள். நாட்டியத்துக்கு வேண்டிய இலட்சணம் பொருந்திய உடல் அமைப்பு. அதோ நல்ல அழகி. கலையிலும் தேர்ச்சி பெற்றவள். அதிருக்கட்டும், அவளைப் பற்றி இங்கு பேசவேண்டிய காரணம் என்ன?” என்று கேட்டாள்.
“அந்த வைகைமாலையின் நாயகன் நான் – மாலவல்லி வைகைமாலைக்கு அந்தரங்கமான தோழி என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்றான் பூதுகள்.
“அது தெரியாது. இருக்கலாம். அவர்கள் இருவரும் நெருங்கிய தோழியாக இருப்பது வரவேற்கத் தக்கது தான். சிறந்த நாட்டியக்காரி வைகைமாலை. அதைப் போலவே சிறந்த பாடகி மாலவல்லி. உயர்தரமான இசையும் சிறந்த நாட்டியமும் சேர்ந்தால் இந்த உலகத்தில் நெய்வத்தையே எதிரே கொண்டு வந்து நிறுத்தி விடலாம்” என்றள் தேனார்மொழியாள்.
“நாட்டியத்தின் மூலமாகவும். சங்கீ தத்தின் மூலமாகவும் எங்கோ இருப்ப தாகச் சொல்லிக் கொள்ளும் தெய்வங் களை யெல்லாம் பிடித்து இழுத்துக் கொண்டு வத்து நிறுத்துவதில் எனக் குச் சந்தோஷம்தான். ஆனால் தெய்வங் களை இழுத்துக் காட்டுவதை விடஅழிந்து போன சிறந்த சாம்ராஜ்யத்தை மறுபடியும் ஸ்தாபிக்க வைப்பது மிகவும் நல்லது என்பதுதான் எனது அபிப்பிரா யம் அதிருக்கட்டும், உங்களுக்கு மால வல்லியைப் பற்றி ஏதேனும் தெரிந்தால் என்னிடம் சொல்லுங்கள்” என்றான்.
“மாலவல்லியைப் பற்றி எதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? அதுதான் தெரிய வில்லை. அவளைப் பற்றி நான் பச்சா தாபப் படுவதெல்லாம் இந்த இளம் வயதில் அவள் அறியாமையால் பௌத்த பிணிக் கோலம் பூண்டதுதான், முதலில் பௌத்த மதத்தில் பற்றுக் கொண்டு அதில் சேர்ந்த அவள், திடீரென்று பிக்ஷுணியாகி இவ்வூரில் தங்காமல் காவிரிப்பூம் பட்டினத்துக்குப் போய் விடுவாள் என்று நான் நினைக்கவில்லை. இனிய குரலும் இசை ஞானமும் பெற்றிருந்த அவளுக்கு அரச சபையில் நல்ல மதிப்பு இருந்தது. போகட்டும், அவள் காவிரிப்பூம்பட்டினம் வந்ததும், அங்கு வைகைமாலைக்குத் தோழியானதும் மிகுந்த திருப்தியையே அளிக்கின்றன… என்றாள் தேனார்மொழியாள்.
“அப்படி நீங்கள் திருப்தி அடைவதற்கு இல்லாமலேயே போய் விட்டது. அவள் சம்பாதிவன புத்த சேதியத்தில் இருக்கும்போது இரவு வேளைகளில் ரகசியமாக வைகைமாலையின் வீட்டுக்கு வந்து அவளுடைய நாட்டியத்துக்கேற்பச் சில பண்கள் பாடிவிட்டுப் போவாள். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவள் அந்த விஹாரத்திலிருந்து எங்கேயோ மறைந்து விட்டாள்….” என்றான் பூதுகன் அமைதியாக,
பூதுகனின் வார்த்தையைக் கேட்டுச் சிறிது ஆச்சரியம் அடைந்த தேனார்மொழியாள், “அவள் பௌத்த விஹாரத்திலிருந்து மறைந்து விட்டாளா? ஏன்? என்ன காரணம்? அவள் எங்கே போயிருப்பாள்?” என்று படபடப்போடு கேட்டாள்.
“அவள் எங்கே போயிருப்பாளோ! ஆனால் அவள் கண் மறைவாகப் போன அன்றைய தினம் புத்த விஹாரத்தில் படு கோரமான கொலை யொன்று நடந்திருக்கிறது. எல்லோரும் அந்தக் கொலைக்கு மாலவல்லிதான் காரணமாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்…” என்றான்.
“நீங்கள் சொல்வதைக் கேட்டால் பெருத்த விபரீதமாக இருக்கிறதே ? நாளுக்கு நாள் இந்தப் புத்த விஹாரங்களில் நடக்கும் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றனவே! கள்வர்கள், சூழ்ச்சிக்காரர்கள் எல்லோரும் புத்த சங்கத்தைச் சரணென்று அடைந்ததால் அல்லவா இவைகள் எல்லாம் ஏற்படுகின்றன? புத்த பெருமானின் வைராக்கிய சீலம் எங்கே? அன்பு நெறி, அறவழிகள் எங்கே? இந்தப் போதிசங்கங்களில் சேர்ந்த சிலரின் கொடிய நடத்தைகள் எங்கே?…அந்தப் புனிதமான சங்கங்களில் மிக வஞ்சகர்களும் கொலைபாதகர்களும் உன்னத சாம்ராஜ்யங்களையே கவிழ்க்கும் குழ்ச்சி நிறைந்தவர்களுமான ரவிதாசன் போன்றவர்களுக்கு இடம் இருக்கு மானால் அதைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?” என்றாள் தேனார்மொழியாள் மிகவும் மனக்கிலேசம் அடைந்து விட்டவள் போல.
‘ரவிதாசன்’ என்ற பெயரை அவள் வாய்மூலமாகவே கேட்டதும் பூதுகன் சிறிது வியப்படைந்தான். இப்பொழுது தான் வந்த காரியத்துக்கு ஏதோ பலன் ஏற்பட்டது போல் அவனுக்குத் தோன்றியது.
“ரவிதாசனை உங்களுக்குத் தெரியுமா! உங்களுக்குத் தெரியாமல் எப்படி இருக்க முடியும்? அவன் இக் காஞ்சிமா நகரிலிருந்துதானே புத்த பிக்ஷு கோலத் தில் காவிரிப்பூம்பட்டினம் வந்தவன்? ரவிதாசனைப் பற்றித் தெரிந்த உங்களுக்கு இன்னெரு உண்மையைச் சொல்லப் போகிறேன். பூம்புகாரில் உள்ள புத்த சேதியத்தில் நீங்கள் சொல்லும் அந்த வஞ்சகனாகிய ரவிதாசன்தால் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான்…” என்று கூறினான் பூதுகன்.
இதைக் கேட்டதும் அவள் திகைப் புற்றுப் பரபரப்போடு, “ஒழித்தானா பாவி. அவனைப்போல் அவளைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொருவராக ஒழிந்து தொலைந்தால் இந்த உலகம் பிழைக்கும்…” என்றாள் அவள் ஏதோ சிறிது மன ஆறுதல் அடைந்தவள் போல.
”அவன் ஒழிந்த வரையில் சரிதான். ஆனால் அவன் ஒழிந்ததோடு ஆபத்து விட வில்லையே! அவனைக் கொலை செய்த பழி மாலவல்லியைப் போன்றவர்களின் தலையில் அல்லவா சுமரும் போலிருக்கிறது…?” என்றான் பூதுகன்
தேனார்மொழியாள் இதைக் கேட்டதும் ஆத்திரமும் கோபமும் அடைந்தவளாக,” மாலவல்லியின் மீது எனக்குக் கோபம் உண்டு-ஏன், சிறிது பொறாமையும்கூட உண்டு. ஆனால் அவள் இத்தகைய கொடூரமான செயலைச் செய்திருக்க மாட்டாள் என்று தான் நான் சொல்லு வேன், யார் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். இதன் காரணமாக அவளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதாக இருந்தாலும் அதிலிருந்து அவளை மீட்க நான் தயாரா யிருக்கிறேன். இந்தச் சாம்ராஜ்யமே அவளுக்குஎதிராக நின்றாலும் அவளை மீட்டுவிட எனக்குத் தைரியம் உண்டு, சாமர்த்தியமும் உண்டு. ஆனால் இந்த மாலவல்லியின் வாழ்க்கையில் ஏதோ சில ரகசியங்கள் இருக்கின்றன என்றுதான் நினைகிறேன்” என்றாள். அவள் மேலும் தொடர்ந்து, “நீங்கள் நினைப்பதுபோல் மாலவல்லியின் வாழ்க்கையில் சில ரகசியங்கள் உண்டு. ஆனால் அவை ஒன்றும் பிரமாதமானவையல்ல. இயற்கையாக இளம் உள்ளங்களில் ஏற்படும் செய்கைகள் தான் அவை, அவள் தகாத இடத்தில் மனத்தை வைத்துவிட்டாள். அதன் காரணமாகவே தான் அவள் பௌத்த பிணிக் கோலம் கொள்ள நேர்ந்தது என்பது என் அபிப்பிராயம்” என்றாள்.
“ஆசையும் மோகமும் யாரை விட்டன? ஆனால் இது ஒரு சாதாரணக் காதல் விவகாரமாய் இல்லாமல் பெரிய சாம்ராஜ்ய விவகாரமாக இருக்கும் போலிருக்கிறதே…?”என்றான் பூதுகன் மெதுவாக அவள் மனத்தைக் கிளறி உண்மையை அறிந்து கொள்ள.
“பெரிய சாம்ராஜ்யத்தின் காவலர்களாக இருப்பவர்களின் காதல் விவகாரங்கள் எல்லாம் அப்படித்தானே இருக்கும்? எங்களைப் போன்ற பெண்கள் அழகில் ஊர்வசி, ரம்பையைத் தோற்கடித்தாலும் ராஜசபைக் கணிகையர்கள்தானே. என் போன்றவர்கள் கலைத் தேர்ச்சியாலும், அழகாலும் அரசரின் அன்பு பீடத்தில் அமர்ந்தாலும் அரசிக் சூரிய பீடத்தில் அமர முடியாதல்லவா? ஆனால் ஒரு பெண்ணின் காதலுக்காக ஒரு சாம்ராஜ்யமே போரில் ஈடுபட்டு அழித்து விடலாம். ஒரு பெண்ணின் காதல் காரணமாக ஒரு பெரிய சாம்ராஜ்யமே போரின் அபாயத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடலாம்” என்றாள்.
தேனார்மொழியாளின் வார்த்தையைக் கேட்டதும் பூதுகனின் மனத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டது.
“நான்கூட அப்படித்தான் நினைத்தேன். பூம்புகாரில் அவளைச் சந்திக்க வந்த ஒரு அழகான வாலிபனை நான் விசாரித்தபோது, அவள் கங்கபாடியைச் சேர்ந்தவனென்றும் ஒரு சாதாரணப் போர்வீரன் என்றும் சொல்லிக் கொண்டான். ஆனால் அவன் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை ஏற் படவில்லை. அவன் பார்வையில் ஒரு அரசகுமாரனாகவோ அல்லது ஒரு பிரபு வாகவோ இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். அவனுடைய கம் பீரமான உருவத்தையும் அவன் சவாரி செய்யும் குதிரையையும் பார்த்த வர்கள் அவனை ஒரு சாதாரணப் போர் வீரன் என்று மதிக்க மாட்டார்கள்” என்றான் பூதுகன்,
தேனார்மொழியாள் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே, “பல்லவ சாம்ராஜ்யத்தில் பாடகியாக விளங்கிய மாலவல்லி பிக்ஷுணிக் கோலம் பூண்டதும் கங்க நாட்டு இளவரசரும் சாதாரணப் போர்க்கோலம் பூண்டு விட்டார் போலிருக்கிறது. காஞ்சியில் இந்தக் காதல் தளையால் ஏற்பட்ட அபாயத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டு மென்றுதான் பௌத்த பிக்ஷுணியாகிப் பூம்புகாரை அடைந்திருக்க வேண்டும் மாலவல்லி. அவள் பெரும் புத்தியுடன் தன்னால் இரு அரசாங்கங்களுக்குள்ளும் நட்புரிமை பாராட்டிக் கொண்டிருப்பவர்களுக்குள் மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தன் காதலைத் துறந்து துறவுக் கோலம் பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்திருக்க வேண்டும். அத்தகைய கோலம் பூண்டு அங்கு சென்றும்-வேறு தலைமறைவான இடத்துக்குச்சென்றும் அந்த வினை அவளை விடாமல் பின் தொடர்ந்தால் என்ன செய்வது?” என்றாள்.
“மாலவல்லி மிகுந்த தியாக சிந்தை உள்ளவளாகத்தான் இருந்தாள் என் நானும் அறிந்து கொண்டேன். ஆனால் பெருத்த அபாயங்கள் ஏதேனும் தனக்கு ஏற்படலாம்; அல்லது வேறு சிலருக்கு ஏற்படலாம் என்று அறிந்திருந்தும் அவளால் தன் மனக் காதலைத் துறக்க முடியவில்லை என்றுதான் தெரிகிறது. புத்த பெருமானின் வைராக்கிய சீலம் எல்லோருக்குமே ஏற்பட்டு விடுமா? வைராக்கியமாக இருந்து விடலாம் என்று மனம் எண்ணலாம். பந்தங்களை உதறி விட்டுவிடுவது போல் சீவர ஆடையுடுத்தி எங்கேனும் கிளம்பி விடலாம். ஆனால் தானாக வந்து ஒட்டும் உறவுகளை வைராக்கிய சித்தத்தோடு உதறி எறிவதுதான் மிகக் கடுமையான விரதம். பாவம், அவள் ஒரு பெண். அவள் மனம் இவ்வளவு பக்குவம் அடைந்திருக்க முடியுமா ?’ எனக்கு இன்னொரு சந்தேகம். சமண மதத்தினனாக இருந்த ரவிதாசன் தீடீரென்று பௌத்த துறவியாகி மாலவல்லி இருக்கும் புத்த விஹாரத்துக்கு வந்ததுதான் சிறிது ஆச்சர்யம் அளிக்கிறது. அவன் மாலவல்லியிடம் மிகுந்த கண்காணிப்பாக இருந்தான் எனத் தெரிகிறது. அவளுக்கும் அவனுக்கும் எதன் காரணமாகவோ தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகிக்கிறேன்….?” என்றான்.
“உங்கள் சந்தேகம் சரிதான்-ரவிதாசன் மாலவல்லியைக் கவனிப்பதற்காகவேதான் புத்தபிக்ஷக் கோலம் தாங்கிப் பூம்புகாருக்கு வந்திருக்கிறான், ரவிதாசன் சிம்மவர்மனின் தோழன். சிம்மவர்மனைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்….” என்றாள்.
“சிம்மவர்மனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் பல்லவ மன்னனுக்கு ஒரு வகையில் சகோதரன் ஆக வேண்டும் இல்லையா…?” என்றான்.
”ஆம், உங்களுக்குப் பல்லவ சாம்ராஜ்யத்தின் பாரம்பரியம் தெரியும் என்று நினைக்கிறேன். இந்த வம்சத்தில் இரண்டு கிளைகள் உண்டு. இதிலொன்று இப்பொழுது அரச வம்சத்தில் அமர்ந்திருக்கும். பீமவர்மனின் கிளை. மற்றது சிம்ம விஷ்ணுவின் கிளை. முதல் கிளையாகிய சிம்ம விஷ்ணுவின் வம்சத்தினர் தான் வரிசைக் கிரமமாய் அரசர்களாயிருந்தனர். அந்த வம்சத்தில் பரமேசுவர போத்தரையனுக்குப் பின் அந் நாட்டை யாளுவதற்கு யாரும் இல்லாது போய் விட்டதால் இரண்டாவது: கிளையாராகிய பீமவர்மனின் வம்சத்தில் உதித்தவர்களில் ஒருவரும் இப்பொழுது பேரரசராக விளங்குபவரின் பாட்டனாருமாகிய நந்திவர்ம போத்தரையர் அரசாட்சியைக் கைக்கொள்ள நேர்ந்தது. அதிலிருந்து இந்த இரு கிளையினருக்குள்ளும் உள்ளுறப் புகைச்சலும் பகையும் இருந்து கொண்டுதான் இருந்தன. அந்தச் சிம்மவிஷ்ணுவின் வம்சத்தில் வந்தவனான சிம்மவர்மன இப்பொழுது பகை உணர்ச்சியில் மித மிஞ்சியவனாக இருக்கிறான். இந்த அரசாங்கத்துக்கு ஏதேனும் கெடுதல் விளைவிக்க வேண்டும் என்ற சித்தம் தான் அவனுக்கு எப்பொழுதும். அரசர் சைவராய் இருக்கிறார் என்று இவன் சமணனாகி இருக்கிறான். மதப் புகைச்சலும், இனப் புகைச்சலும் இல்லாது இருக்கும் இந்த நாட்டில் அதைக் கிளறி விடவேண்டும் என்பதற்காகவே அவன் சமணனாதி இருக்கிறான். இன்னொரு ரகசியமும் உண்டு. ராஷ்டிரகூட மன்னனான் அமோகவர்ஷனின் மகள் கங்காவைத்தான் நமது மன்னர் மணந்திருக்கிறார். அமோகவர்ஷன் தன் மற்றொரு மகளான அந்திரப்பிரபாவைக் கங்க நாட்டு ராஜமல்லருடைய மகனாகிய பரமானந்தனுக்கு மணம் செய்து கொடுத்திருக்கிறார், கங்க நாட்டு அரசரும். ராஷ்டிரகூட அரசரும் இந்த விவாகத்தின் காரணமாகப் பல்லவ மன்னரோடு உறவு முறையும் நட்புரிமையும் கொண்டவர்களால் விட்டனர். நாம் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கங்க குல மன்னனான ராஜமல்லனும் ராஷ்டிரகூட அரானான அமோகவர்ஷனும் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ மன்னரோ சைவ சமயத்தில் தீவிரப் பற்றுதல் உள்ளவர். இதை உணர்ந்த சிம்மவர்மன் தானும் ஒரு ஜைன சமயத்தவனாகிப் பல்லவ அரசர் ஜைன சமயத்துக்கு ஏதோ தீங்கு நினைப்பதாகக் காட்டி இம் மூன்று மன்னர்களுக்குள்ளும் சமய சம்பந்தமான குழப்பத்தை ஏற்படுத்திப் பெரும் பகையை வளர்க்கப் பார்க்கிறான். இவையெல்லாம் மன்னருக்குத் தெரியுமோ தெரியாதோ? தெரிந்திருந் தாலும் பெருந்தன்மையோடும், பொறுமையோடும் தான் சிம்மவர்மனின் சூழ்ச்சிகளுக்கு இடங் கொடுத்து வருகிறார் என்று நான் நினைக்கிறேன்.” என்று சொல்லி நிறுத்தினாள்.
பூதுகனுக்குத் தேனார்மொழியாள் சொல்லிய வார்த்தைகளிலிருந்து பல விஷயங்கள் விளங்கின. அவன் ஏதோ ஆழ்ந்து சிந்திப்பவன் போல, “நீங்கள் சொல்வ தெல்லாம் எனக்கு விளங்கு கிறது. ஆனால் மாலவல்லியின் காதல் விஷயம் தான் புரியவில்லை. கங்ககுல இளவரசன் பரமானந்தன் ராஷ்டிர கூட இளவரசி சந்திரப்பிரபாவை மணந்து கொண்டான் என்கிறீர்கள். அப்படி இருக்கும்போது மாலவல்லியிடம் அவனுக்குக் காதல் ஏற்பட்டது எப்படி..?” என்றான்.
“மாலவல்லியைக் காதலித்தவன் பரமானந்தன் இல்லை. அவனுடைய தம்பி பிரதிவீபதி…” என்றாள்.
“பிரதிபதியா? சரிதான். பாவம். அவன்தான் தன்னை வீரவிடங்கன் என்று சொல்லிக் கொள்ளுகிறான் போலிருக்கிறது. இத்தகைய ராஜகுமாரர்களெல்லாம் காதலுக்காக எவ்வளவு பெயர் மாற்றம் உருவ மாற்றமெல்லாம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது? போகட்டும் – ஒரு அழகிய இராஜதமாரன் ஒரு அழகிய இசைக் கணிகையைக் காதலிப்பது என்பது சகஜம். வேண்டுமானால் தாராளமாக அவளைக் கங்கபாடிக்கே அழைத்துச் செல்லலாமே? இதெல்லாம் ராஜ வம்சத்தினருக்குச் சகஜம் தானே? இவ்வளவு கஷ்டம் எல்லாம் எதற்கு..?”
தேனார் மொழியாள் சிரித்தாள். ”அதில்தான் இடையூறு இருக்கிறது. சிம்மவர்மன் தன்னுடைய தங்கையாகிய அமுதவல்லியை இந்தப் பிரதிவீபதிக்கு விவாகம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பிரயத்தனப்படுகிறான். அந்த சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட வேண்டும் என்பதற்காக அரசர்மூலமாக ஏற்பாடு செய்து கொண்டு வருகிறன். அதோடு அந்தக்காமுகனுக்கு மாலவல்லி யிடமும் கொஞ்சம் மோகம் இருக்கிறது. பிரதிவீபதிக்குச் சிம்மவர்மனின் தங்கை அமுதவல்லியிடம் மோகம் இல்லை. பிரதிவீபதிக்கு மாலவல்லியின் மீது காதல். இக்காதலுக்கு இடையூறாக முளைத்திருக்கிறான் சிம்மவர்மன், அவனுடைய அதிகாரங்களுக்கெல்லாம் மன்னர் இடங் கொடுத்திருக்கிறர். உத்தம குணலேரான மன்னர் மாலவல்லிக்கும் பிரதிவீபதிக்கும் உள்ள உள் அந்தரங்கமான காதலை அறிந்தால் அதற்கு இடையூறாக எத்தப் பெண்ணையும் பிரதிவீபதிக்கு மணம் முடித்து வைக்கப் பிரியப்பட மாட்டார் என்பதை அறிந்து, அவருக்குத் தெரிவதற்கு முன்னால் மாலவல்லிக்கும் பிரதிவீபதிக்கும் ஏற்பட்டிருக்கும் காதலுக்கு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யச் சித்தமாயிருக்கிறான் சிம்மவர்மன், பிரதிவீபதியும் தன்னுடைய காதலைப் பகிரங்கமாகச் சொல்லிக்கொள்ள முடியவில்லை. அவனுடைய தகப்பனார் ஜைனசமயத்தில் தீவிரப் பற்றுக் கொண்டவர். தம்முடைய குமாரன் ஒரு பெண் மீது மோகம் கொண்டு, கேவலம் ஒரு கணிகையை மணந்துகொள்வதை அவர் விரும்ப மாட்டார். இப்பொழுதே வயதான நிலையிலிருக்கும் அவர் ஆயுட் காலம் அதிக நாள் நீடிக்காது. அதற்கு மேல் மாலவல்லியை மணந்து கொள்ளலாம் என்று பிரதிவீபதி நினைக்கிறன்” என்றாள் தேனார்மொழியாள்.
பூதுகன் ஒரு பெருமூச்சு விட்டான். அவனுக்குஎல்லா விஷயங்களும் விளங்கி விட்டன. ஆனால் அந்நிலையில் ரவிதாசனைக் கொன்றவர்கள் யாராயிருக்க முடியும் என்றுதான் அவனுக்கு விளங்கவில்லை. வீரவிடங்கன் என்ற பெயரில் உலவும் பிரதிவீபதியே ரவிதாசனைக் கொல்வதற்கு ரகசியமான ஏற்பாடு செய்திருக்கலாமா ஏதாவது நினைத்தான். எப்படியோ அவன் இங்கு வந்ததில் அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டான். இதன் மூலமாக இன்னும் சிறிது பிரயாசைப்பட்டால் அதையும் தெரிந்துகொண்டு விடுவது கடினமில்லை என்று அவனுக்குப் பட்டது. அவன் ஒரு அலட்சியச் சிரிப்போடு, “எப்படியோ பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் செய்யும் இச்சூழ்ச்சிகளை யெல்லாம் மறுபடியும் இந்த நாட்டில் சோழ சாம்ராஜ்யம் தலை யெடுப்பதற்குரிய வண்ணம் உபயோகித்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் எனக்கு. நீங்கள் சோழவன நாட்டைச் சேர்த்தவர்கள். அதிலும் குடத்தைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். பூம்புகாரிலுள்ள வைகைமாலைக்கும். அவள் சகோதரி சுதமதிக்கும் உள்ள உணர்ச்சியும் ஆர்வமும் உங்களுக்கு இல்லாமல் போய் விடுமா?” என்றான்.
பூதுகனின் வார்த்தையைக் கேட்டுத் தேனார்மொழியாள் பரபரப்போடும் ஆச்சர்யத்தோடும் விழித்தாள். அழகு நிறைந்த அவள் முகத்தில் சட்டென்று மலர்ச்சியும் ஏற்பட்ட பிரகாசமும் மேலும் ஒரு பேரழகைத்தான் எடுத்துக் காட்டின. இந்தச் சமயத்தில் வாயிற் கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்கவே, தேனார் மொழியாள் பரபரப்பு அடைந்தவண்ணம் “நீங்கள் தயவுசெய்து அதோ அந்த அறையில் போய் இருங்கள்; யாரோ வந்து கதவைத் தட்டுகிறார்கள். நான் போய்க் கதவைத் திறக்கிறேன்” என்றாள். சிறிது பயமும் கொண்டவளாய்.
– தொடரும்…
– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.
– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.