கல்லறையின் விடியல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 16, 2026
பார்வையிட்டோர்: 14 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

கல்லறைகளின் நிழலில்...

கதரேனர் நாட்டின் கடற்கரை பாறைச் சரிவுகளில் வீசிய காற்றுக்கு எப்போதுமே ஒருவித கசப்பான, பிண நாற்றம் உண்டு. சூரியன் மறையும் அந்தி வேளையில், அந்த ஊர் வாசிகள் எவருமே சுண்ணாம்புப் பாறைகளால் சூழப்பட்டிருந்த பழைய கல்லறைகளின் பக்கம் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. அங்கே, ஒரு மனிதன் வாழ்ந்துகொண்டிருந்தான். இல்லை… அவன் மனிதனாக வாழவில்லை. மரணத்தின் நிழலில், மனித குலத்தால் முற்றிலுமாக மறக்கப்பட்டு, மிருகத்தை விடக் கேவலமாக வீசப்பட்டிருந்தான்.

அவன் உடம்பில் ஆடையின் தடம் கூட இல்லை. அழுக்கும், உறைந்துபோன பழைய ரத்தமும், காய்ந்த களிமண்ணும் அவனது தோலின் மீது தடிமனான கவசம் போலப் படிந்திருந்தன. அவனுடைய கைகளிலும் கால்களிலும் உடைந்த இரும்புச் சங்கிலிகளின் துருப்பிடித்த கண்ணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ஊர் மக்கள் பலமுறை ஒன்றுசேர்ந்து அவனை அடக்க முயன்றார்கள்; தடிமனான வடம் கயிறுகளாலும் கனமான சங்கிலிகளாலும் பிணைத்தார்கள். ஆனால், அவனுக்குள் இருந்த கட்டுக்கடங்காத சக்தி, அந்த இரும்புக் கண்ணிகளை வெற்று நூலைப்போல அறுத்தெறிந்தது.

“அய்யோ… என்னை விட்டு விடுங்கள்!” என்று அவன் தொண்டை கிழியக் கத்துவான்.ஆனால், அடுத்த கணமே அவனது வாயிலிருந்து வேறொரு குரல் ஒலிக்கும். அது மனிதக் குரல் அல்ல; ஆழமான நரகத்தின் உறுமலைப் போல, “நாங்கள் உன்னை அழிக்க வந்திருக்கிறோம்!” என்று கதறும்  அவனுக்குள் ஆயிரக்கணக்கான அசுத்த ஆவிகள் குடியிருந்தன. இரவென்றும் பகலென்றும் வேறுபாடின்றி, அவன் கல்லறைகளிடையேயும் கரடுமுரடான மலைகளிலும் அலைந்து திரிந்து, கூக்குரலிட்டு, கூர்மையான பாறாங்கற்களால் தன்னைத்தானே கீறிக்கொண்டான். அவனுடைய உடம்பில் காயமில்லாத இடமே இல்லை. வடியும் ரத்தத்தின் வழியே அவனுடைய வேதனை வெளிப்பட்டது. அவனது சொந்தப் பெயர் கதரேனர் மக்களின் நினைவிலிருந்தே மறைந்துபோயிருந்தது. அவனைப் பற்றிய அச்சம் மட்டுமே எஞ்சியிருந்தது.

கடலைக் கடந்த வந்த இரட்சகர்….

அன்று அதிகாலை, கலிலேயக் கடலில் பெரும் புயல் அடங்கியிருந்தது. அலைகள் அமைதியாகக் கரைதொட்ட அந்த நேரத்தில், ஒரு சிறிய மரப்படகு கதரேனர் நாட்டின் கரை ஒதுங்கியது. அதிலிருந்து இறங்கிய அந்த நபரின் முகத்தில் அளவிட முடியாத அமைதியும், ஏதோ ஒரு ஆழமான தேடலும் இருந்தன. அவர், இயேசு.

கல்லறைகளுக்குள் இருந்த அந்த அசுத்த ஆவிகள், இயேசுவின் பாதம் கரையைத் தொட்ட கணமே நடுங்கத் தொடங்கின. அதுவரை மனிதர்களை வேட்டையாடி வந்த அவன், இப்போதெல்லாம் அறியாத ஏதோ ஒரு திவ்வீக அதிகாரத்தைக் கண்டு அஞ்சினான். அவனுக்குள் இருந்த ஆவிகள் அவனைக் கட்டுப்படுத்தி, இயேசுவை நோக்கி ஓடச்செய்தன. அவன் இயேசுவின் பாதங்களில் விழுந்து பணிந்து, உரத்த குரலில் அலறினான்: “உன்னதமான தேவனுடைய குமாரனாகிய இயேசுவே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையிடுகிறேன்!”

இயேசு அவனது கலங்கிய கண்களை உற்று நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அவனது வாயிலிருந்து ஆயிரக்கணக்கான பேய்களின் குரல்கள் ஒன்றாக இணைந்து, “எங்கள் பெயர் லெஜியன்; ஏனெனில் நாங்கள் அநேகராய் இருக்கிறோம்” என்று கத்தின.

அந்தப் பகுதியை விட்டுத் தங்களை துரத்திவிட வேண்டாம் என்றும், அருகிலிருந்த மலையில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிக் கூட்டத்திற்குள் போக அனுமதிக்கும்படியும் அந்த ஆவிகள் கெஞ்சின. இயேசுவின் ஒரே ஒரு அதிகாரமுள்ள வார்த்தை கதரேனர் காற்றில் எதிரொலித்தது: “போங்கள்!”

அவ்வளவுதான்! அடுத்த நொடி, அந்த மனிதனின் உடலை விட்டு அசுத்த ஆவிகள் வெளியேறி, பன்றிக் கூட்டத்திற்குள் புகுந்தன. வெறிபிடித்த அந்தப் பன்றிக் கூட்டம் மலையின் செங்குத்தான சரிவிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கி மாண்டன.ஷசில நிமிடங்களுக்கு முன்பு வரை அலறித் துடித்த அந்த மனிதனின் உடம்பில் இப்போது ஒரு பேரமைதி புகுந்தது. அவனது கண்கள் தெளிவடைந்தன. புத்தி சுயாதீனமானது. சீடர்கள் அவனுக்கு ஆடையை உடுத்தினார்கள். அவன் இயேசுவின் பாதத்தருகே, சுயநினைவோடு, பேரமைதியின் வடிவமாக அமர்ந்திருந்தான். அவனது வாழ்வின் புதிய விடியல் அது.

புதிய பெயரும் புதிய கடமையும்…

பன்றிகள் அழிந்த நஷ்டத்தைக் கண்டு பயந்த கதரேனர் நாட்டு மக்கள், இயேசுவை உடனடியாகத் தங்கள் எல்லையை விட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டனர். இயேசு மீண்டும் படகில் ஏறினார்.

இப்போது அந்த மனிதன் ஓடிவந்தான். அவனுடைய கண்களில் கண்ணீர் வழிகிறது. தனக்கு வாழ்வு தந்த ஆண்டவரை விட்டுப் பிரிய அவன் மனம் ஒப்பவில்லை.

“ஆண்டவரே, நான் உம்மோடு வர அனுமதிக்க வேண்டும்! இந்த மக்கள் என்னை அருவருக்கிறார்கள். நான் உம்மைப் பின்பற்றி வருகிறேன்!” என்று அவனுடைய கால்களைப் பிடித்துக் கெஞ்சினான்.

ஆனால் இயேசு அவனுடைய தோள்களைத் தொட்டுத் தூக்கினார். அவனுடைய கண்களைப் பார்த்து மென்மையான, ஆனால் அழுத்தமான குரலில் சொன்னார்:

“இல்லை, நீ என்னோடு வரக் கூடாது. நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்த பெரிய காரியங்களையும், அவர் உனக்கு இரங்கினதையும் உன் மனுஷருக்கு அறிவி.”

இயேசு அவனுக்கு ஒரு புதிய பொறுப்பைக் கொடுத்தார். படகு மெதுவாகக் கரையை விட்டு விலகிச் சென்றது. அவன் கரையில் நின்று, இயேசுவின் படகு மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தான். அவனது நெஞ்சில் இயேசுவின் வார்த்தைகள் தீயென எரிந்துகொண்டிருந்தன.

இனி அவன் பேய்களின் கூட்டத்தைக் குறிக்கும் ‘லெஜியன்’ அல்ல. கடவுளின் இரக்கத்தைப் பெற்ற எலியேசர் (Eliezer – ‘கடவுளே என் உதவி’ என்று பொருள்).

அன்பின் சாட்சி….

எலியேசர் தன் சொந்த ஊரின் வீதிகளுக்குள் நுழைந்தான். மக்கள் அவனைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு கதவுகளையும் சன்னல்களையும் பூட்டினார்கள். “அந்தக் கொடூர மனிதன் வருகிறான்! சங்கிலிகளை உடைத்தவன் வருகிறான், தப்பி ஓடுங்கள்!” என்று கத்தினார்கள்.

ஆனால், இம்முறை எலியேசரின் கைகளில் பாறாங்கற்கள் இல்லை; அவனுடைய முகத்தில் வெறித்தனம் இல்லை.

அவன் ஊர்ச் சந்தையின் நடுவே நின்றான். மென்மையான, கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான்: “என் அன்பான மக்களே! பயப்படாதீர்கள். நான் உங்களைத் தாக்க வரவில்லை. என்னை உங்களுக்குத் தெரியுமல்லவா? சங்கிலிகளால் கட்டப்பட்டு, கல்லறைகளில் கதறி அழுத அதே மனிதன் தான் நான். ஆனால், இன்று நான் புதிய மனிதன்! என் பெயர் எலியேசர்!”

மக்கள் மெதுவாகச் சன்னல்கள் வழியாக எட்டிப்பார்த்தனர். அவனுடைய கண்கள் பேரன்பால் நிறைந்திருந்தன. அவனது பேச்சு தெளிவோடு இருந்தது.

“மனிதர்கள் யாரும் என் மேல் இரக்கம் காட்டவில்லை. ஆனால், கலிலேயாவில் இருந்து வந்த இயேசு என்ற இரட்சகர் எனக்காகவே இந்த நிலத்திற்கு வந்தார். அவனுடைய ஒரே ஒரு வார்த்தை என்னை இந்த அசுத்த ஆவிகளிடமிருந்து விடுவித்தது. பன்றிகள் அழிந்ததற்காக நீங்கள் அவரைத் துரத்தினீர்கள், ஆனால் அவரோ என் வாழ்வையே மாற்றியிருக்கிறார்!” என்று கண்ணீரோடு சாட்சி பகர்ந்தான்.

நாட்கள் செல்லச் செல்ல, எலியேசரின் மாற்றம் தற்காலிகமானதல்ல என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். அவன் தெக்கப்போலியின் (Decapolis) பத்து நகரங்களுக்கும் நடந்தே சென்றான். அவன் ஒரு வேத அறிஞரோ, சிறந்த பேச்சாளரோ அல்ல. ஆனால், அவனுடைய சொந்த வாழ்க்கையே ஒரு நடமாடும் அற்புதமாக இருந்தது.

யார் யாரெல்லாம் அவனைப் பேய் பிடித்தவன் என்று ஒதுக்கித் தள்ளினார்களோ, அவர்களெல்லாம் அவனுடைய சாட்சியைக் கேட்டுத் தங்கள் கடினமான இதயங்களை மாற்றிக்கொண்டார்கள். தெக்கப்போலி முழுவதும் இயேசு என்ற பெயர் விதைக்கப்பட்டது.

அறுவடை நாள்…

ஆண்டுகள் சில உருண்டோடின. இயேசுவின் சிலுவை மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு, அவருடைய அப்போஸ்தலர்களும் சீடர்களும் உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டனர். அப்படியொரு பயணத்தின் போது, அப்போஸ்தலர்கள் சிலர் புறவின மக்கள் வாழும் தெக்கப்போலிப் பகுதியின் கதரேனர் நாட்டிற்குள் நுழைந்தனர்.

ஊரின் நுழைவாயிலில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் ஒரு பெரிய மக்கள் கூட்டம் கூடி, ஒரு மனிதனின் பேச்சைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

சீடர்கள் ஆச்சரியத்துடன் கூட்டத்திற்குள் ஊடுருவிச் சென்றனர். அங்கே, நடுத்தர வயதைக் கடந்த ஒரு மனிதன், பேரமைதியோடும் தெய்வீக ஒளியோடும் பேசிக்கொண்டிருந்தான்.

“நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கவே அந்த மெய்யான ஒளியானவர் உலகிற்கு வந்தார். என்னை இருளிலிருந்தும் மரண பயத்திலிருந்தும் மீட்ட அதே இயேசு, இன்று உங்களுடைய இதயக் கதவுகளையும் தட்டுகிறார்!” என்று அவன் பேசப் பேச, கூட்டத்திலிருந்த முதியவர்களும் வாலிபர்களும் கண்ணீரோடு மண்டியிட்டு, “நாங்கள் இனி விக்கிரகங்களை வணங்க மாட்டோம், அந்த இயேசுவையே எங்கள் இறைவனாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றனர்.

கூட்டம் கலைந்ததும், இயேசுவின் சீடர்கள் அந்த மனிதனிடம் சென்றனர்.

“சகோதரனே, நீர் பேசக் கேட்டோம். நீர் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்ல. ஆனால் அவரைப் பற்றி இவ்வளவு ஆழமாகப் பேசுகிறீரே! நீர் யார்?” என்று வியப்புடன் கேட்டனர்.

அந்த மனிதன் புன்னகைத்து, தூரத்திலிருந்த பழைய பாறைச் சரிவைக் காட்டிப் பேசத் தொடங்கினான்:

“ஐயா, சில ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊர் மக்கள் என்னை மனிதனாகக் கூட மதிக்கவில்லை. ஆயிரக்கணக்கான பேய்களால் சித்திரவதை செய்யப்பட்டு, ஆடைகளின்றி, சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, அந்தக்கல்லறைகளில் கூச்சலிட்ட ‘லெஜியன்’ என்று அழைக்கப்பட்ட மனிதன் தான் நான். என் பெயர் எலியேசர். என் சொந்த ஊர் மக்கள் கூட என்னை வெறுத்தபோது, கலிலேயக் கடலைக் கடந்து எனக்காகவே ஒரு படகு வந்தது. இயேசு என்ற அந்த இரட்சகர் ஒரே வார்த்தையால் என்னை விடுவித்தார்.”

சீடர்கள் சிலிர்த்துப்போனார்கள்! “ஓ! ஆண்டவர் இயேசு தன் உலகப் பணியின் போது, படகில் சென்று ஒரு மனிதனை விடுவித்ததாக எங்களிடம் கூறியிருந்தார். அது நீங்கள்தானா!” என்று அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டனர்.

“ஆம்!” என்றான் எலியேசர். “நான் அவரோடு வர விரும்பியபோது, ‘தேவன் உனக்குச் செய்த பெரிய காரியங்களை அறிவி’ என்று அவர் எனக்குக் கட்டளையிட்டார். அன்று முதல் இன்று வரை அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.”

அப்போஸ்தலர்கள் எலியேசரை அன்போடு தழுவிக்கொண்டனர்.

“சகோதரனே, நாங்கள் நற்செய்தி அறிவிக்க இங்கு வந்தோம். ஆனால், எங்கள் ஆண்டவர் ஏற்கனவே உம்மைக் கொண்டு இந்தத் தெக்கப்போலி நிலத்தைப் பண்படுத்தி, விசுவாசப் பயிரை விளையச் செய்திருக்கிறார்!” என்று இறைவனைத் துதித்தனர்.

அன்று, எலியேசரும் இயேசுவின் சீடர்களும் இணைந்து அந்த ஊரில் முதல் விசுவாசச் சபையை உருவாக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *