கருணை
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூரில் மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இயங் கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதிலும் அதிகாலைப் பொழுதில் மக்களின் நடமாட்டம் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை; அத்தனைச் சுறுசுறுப்போடு ஆலாய்ப் பறந்துகொண்டிருப்பார்கள்.
பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும் பாலகர்கள் ஒரு பக்கம்; பணிமனைகளுக்கு விரைந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் ஒரு பக்கம், அலுவலகங்களுக்கு ஓடிக் கொண்டிருக்கும் உத்தியோகஸ்தர்கள் ஒரு பக்கம் என்றிவ்வாறு பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மக்களின் நடமாட்டம் ‘ஜன ரஞ்சகம்’ என்று சொல்வார்களே அப்படிக் காட்சியளிக்கும்.
எப்போதும் ஏழரை மணியளவில் இராமலிங்கம் தன் னுடைய அடுக்குமாடி வீட்டிலிருந்து கீழிறங்கி வந்து தொடர்ந்து அமைந்திருக்கின்ற இரண்டு மூன்று அடுக்கு மாடி மனைக் கட்டுகளினூடே விரைந்து நடந்து சென்று பேருந்து நிலையத்தை அடைவார். அன்றும் அப்படித் தான் வேகமாகப் பேருந்து நிலையத்தை இலக்காகக் கொண்டு விரைந்து கொண்டிருந்தார். அவரை யாரோ கூப்பிடுவது போலப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. திகைப்போடு திரும்பிப் பார்த்த இராமலிங்கம் தூரத்திலிருந்து யாரோ ஒருவர் தன்னை நோக்கி விரைந்து ஓடி வருவதைக் கண்டு அப்படியே நின்று விட்டார்.
மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்த அந்த மனிதர் இராமலிங்கத்தின் அருகில் வந்து நின்றார். இராமலிங்கம் அந்த மனிதரை உற்றுப் பார்த்தார். இவரை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே; இவர் யார்;இவர் ஏன் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு இப்படி வியர்க்க விறுவிறுக்க ஓடி வரவேண்டும் ? என்று தனக்குள் தானே கேட்டுக்கொண்டு சிந்தனையோடு நின்றார். இராமலிங்கத்தைக் கூப்பிட்டுக் கொண்டு அறக்கப் பறக்க ஓடி வந்த அந்த மனிதரும் பேச முடியாதபடியோ அல்லது எப்படித் தொடங்குவது என்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையிலோ இராமலிங்கத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்தார்.
ஒருவர் முகத்தை ஒருவர் உறுத்தலோடு பார்த்துக் கொண்டே நின்றால் காரிய சாத்தியம் ஆகிவிடுமா என்ன? யாராவது ஒருவர் பேச்சைத் தொடங்கித்தானே தீர வேண்டும். இருவரில் இராமலிங்கமே வயதில் மூத்தவராக இருந்ததால், “என்னங்க தம்பி….ஏன் இப்படி ஓடிவர்ரீங்க…? என்னைத்தானே கூப்பிட்டுக் கொண்டு வந்தீங்க..?” என்று கேட்டுக் கொண்டே இராமலிங்கத்தின் கண்கள் எதிரில் நின்று கொண்டிருந்தவரை ஊடுருவிக் கொண்டிருந்தன. மூளையின் எங்கோ ஒரு மூலையில் பதிவாகியிருக்கும் அந்த உருவத்தை நினைவலைகளில் சிந்தனை தேடிக் கொண்டிருந்தது.
“என்னங்கய்யா, என்னைத் தெரியலியா? நான்தான் மண்டோர் மன்னார்சாமியின் மகன் மருதமலை. நீங்க அப்பாவோட நெருங்கிய கூட்டாளியா இருந்தீங்களே…!” என்று பணிவோடு சொல்லி ஏதோ ஓர் ஆதங்கத்தோடு இராமலிங்கத்தைக் கூப்பிட்டுக் கொண்டு ஓடி வந்த அந்த மனிதன் தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்டான்.
இராமலிங்கம் மருதமலையின் நினைவு கூர்தலைக் கேட்ட பின்னரும்கூடச் சிந்தித்துக் கொண்டே இருந்தார். இராமலிங்கத்துக்கு அவருடைய அலுவலகத்தில் ‘நினை வாற்றல் மிக்கவர்’ என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. இதுகாறும் மூளையைக் குடைந்து கொண்டிருந்த சிந் தனை இப்போது படிப்படியாக அமைதி அடைந்து கொண்டிருந்தது.
இப்போது இராமலிங்கம் மிகத் தெளிவாக இருந்தார். இராமலிங்கம் மருதமலையிடம் அவனைப் பற்றியும், அவனுடைய குடும்பம் பற்றியும், அவனுடைய தந்தை மண்டோர் மன்னார்சாமியைப் பற்றியும் விசாரித்தார். நலம் விசாரிப்பது என்பது நயத்தகு நாகரிகப் பண்புகளில் ஒன்றல்லவா?
சிங்கப்பூரில் ஒரே தொகுதியில் அல்லது ஒரே பகுதி யில் வாழ்ந்தாலும் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருக்கிறது. அந்தக் காலக் கிராம வாழ்க்கையைப் போல் அமைந்திருந்த, அக்கம் பக்கத்தார் சூழ வாழ்ந்த ‘கம்போங்’ வீட்டு வாழ்க்கைக்கும், இப்போதைய அடுக்குமாடி வீட்டு வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அண்டை அயல் வீடுகளில் ஒன்றென்றால் அந்தக் ‘கம்போங்’ வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிடும். நல்லது கெட்டது எதுவானாலும் உடனடியாக எல்லோரும் கலந்து கொள்வார்கள். அடுக்குமாடி வீட்டு வாழ்க்கையில் அடுத்த ‘புளோக்கில்’ நடப்பதையே வானொலிச் செய்தி வாயிலாகவோ, பத்திரிகைச் செய்தி மூலமாகவோதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. கால மாறுபாட்டிலும், நாகரிக வேகத்திலும் விளைந்த கணக்கற்ற மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.
இராமலிங்கம், மண்டோர் மன்னார்சாமியைப் பற்றியோ அவர்தம் குடும்பத்தைப் பற்றியோ தெரிந்து கொள்ளக்கூடிய நெருக்கச் சூழலில் ‘கம்போங்’ வாழ்க்கையிலும் இருந்திருக்க நியாயமில்லை. ஏறத்தாழ ஏழு கிலோ மீட்டர் தொலைவு இடைவெளி அப்போதே இருந்தது. எண்பது களில் ‘கம்போங்’ வீடுகள் எடுபடத் தொடங்கிய போதும், அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுக் ‘கம்போங்’ வாழ் மக்கள் புனர் குடியேற்றம் தூரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் தொகுதிகளும், பகுதிகளும் மாறி மாறிச் சென்றுவிட நேர்ந்தது. அப்போதைய அந்த இடை வெளி இன்னும் சற்று விரிவடைந்து தொடர்பற்றுப் போய்விட்டது.
இராமலிங்கம் மருதமலையினுடனான இந்தச் சந்திப்பைத் தவிர்க்க விரும்புகின்றாரா? எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாகத் தூண்டித்துக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாகக் கத்தரித்துக் கொண்டு சென்று விடத் துடிக்கின்றாரா என்று பகுத்துணர்ந்து கொள்ள முடியாத நிலையில் அவர் ஓர் அவசரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் என்று கூடச் சொல்லலாம். அலுவலகத்துக்குப் போக வேண்டும்; நேரமாகிக் கொண்டிருக்கின்றது; கால தாமதம் ஆகிவிடக்கூடும் என்ற எச்சரிக்கையை அடிக்கடி தன்னுடைய கெடிகாரத்தைப் பார்த்துக் கொள்வதன் மூலம் உணர்த்திக் கொண்டு இருந்தார்.
“ஐயா…! வீட்டில் ஒரே பிரச்சினையா இருக்குங்கய்யா; எனக்கு அடுத்த வாரம் தான் சம்பளம் கிடைக்கும்; ஒரு பத்து வெள்ளி கைமாத்தாக் கொடுத்து உதவி செய்யுங்கய்யா; அடுத்த வாரம் இதே நாளில் இதே இடத்தில் கொண்டு வந்து கொடுத்துடறேன்,” அழாக் குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது.
மருதமலையின் கெஞ்சுதல் இராமலிங்கத்தின் நெஞ்சத்தை இலேசாக வருடிக்கொண்டிருந்தது. கருணை உணர்வு என்பது மனித பலஹீனங்களில் ஒன்றாக இருக்குமோ? இராமலிங்கத்தின் கை தானாகவே இயங்கியது. இப்போது பத்து வெள்ளிதாள் ஒன்று மருதமலையின் கையில் இருந்தது. அப்போது சொல்லி வைத்தாற்போல இராமலிங்கம் ஏறிச் செல்ல வேண்டிய பேருந்தும் வந்து விட்டது. அதைத் தவறவிட்டுவிட்டால் இன்னும் இருபது நிமிடம் காத்திருக்க நேரும். பேருந்தில் ஏறி அமர்ந்ததுதான் தாமதம்; அவரது சிந்தனை சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது.
மருதமலையை எங்கே பார்த்திருக்கிறோம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த இராமலிங்கத்துக்கு அவனைப் பார்த்த ஞாபகம் இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. இன்றுபோல் அன்றும் அதிகாலையில் வேலைக்கு அவச ரம் அவசரமாகப் போய்க்கொண்டிருந்த இராமலிங்கம் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறும்போது அந்தக் காப்பிக் கடையில் சற்றே தொலைவில் மூவர் உட்கார்ந்தி ருந்ததைப் பார்த்தார். வழக்கமாக அவர் காப்பி குடித்து விட்டுச் சில்லறை மாற்றிக் கொண்ட போது உற்றுக் கவனித்தார். அந்த மூவரும் அவ்வளவு அதிகாலையில் கறுப்பு ‘பீர்’ குடித்துக் கொண்டிருந்தார்கள். சாலையில் இறங்கி நடந்து கொண்டிருந்த இராமலிங்கம் சமுதாயச் சீர்கேட்டை எண்ணித் தன் தலையில் அடித்துக் கொண்டார்.
ஒரு காலத்தில் உழைப்பாளிகள் தங்களின் உடல் அலுப்புத் தீர்ந்து உறங்கவேண்டும் என்பதற்காக மாலை நேரத்தில் அல்லது இரவில் ஓரளவுக்கு மருந்து போல மதுவைப் பயன்படுத்தினார்கள். இப்போது அதிகாலையில் காப்பிக்குப் பதிலாகக் கறுப்பு பீர் குடிக்கிறார்களே.. ! இந்தச் சமுதாயம் இந்த அளவு மதுவுக்கு அடிமையாகி விட்டதே…என்று தனக்குள் தானே சொல்லிக்கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டார்.
அன்று பார்த்த ‘திருமுகங்களுள்’ ஒன்றுதான் இந்த மருதமலையின் முகம் என்பது இராமலிங்கத்தின் சிந்தனையில் பளிச்சிட்டது. அப்போதுதான் மருதமலையும் கைமாத்து கேட்டான். சந்திப்பையும், பேச்சையும் தவிர்க்கக் கருதியபோது எங்கிருந்தோ வந்து இந்தக் கருணை உணர்வு முந்திய உணர்வுகளை முந்திக்கொண்டு விட்டது.
மருதமலை என்பவன் மண்டோர் மன்னார் சாமியின் மகன்தான் என்பது ஊரறிந்த ஒரு செய்தி. ‘யார் இந்தப் பிரபல மண்டோர்?’ என்ற கேள்விக்கு இராமலிங்கத்தின் சிந்தனை திரும்பியது. மலேசிய ரப்பர் தோட்டம் ஒன்றில் மண்டோராகப் பணி புரிந்த மன்னார்சாமி அறுபதுகளில் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்தவர். இராமலிங்கத்துக்கும் மன்னார்சாமிக்கும் என்ன தொடர்பு?
சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்ட தமிழவேள் நாடக மன்றத்தின் படைப்பாக 1968-ஆம் ஆண்டு கிரைஸ்ட் சர்ச் அரங்கத்தில் அரங்கேற்றப்பட்ட ‘அத்தை மகன்’ என்ற நாடகத்தில் மண்டோர் பாத்திரமேற்று நடித்தார். அந்த நாடகத்தின் இயக்குநராகவும், குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய இராமலிங்கம் அவருக்கு அந்தப் பாத்திரத்தைக் கொடுத்துப் பயிற்சியும் அளித்து வந்தார். இந்த அளவுக்குத்தான் தொடர்பே தவிர நெருங்கிய கூட்டாளி என்ற உறவு என்று ஒன்றும் இருந்ததில்லை. மன்னார்சாமி யிடமிருந்து இராமலிங்கம் ஒதுங்கியே இருந்ததற்குக் காரணம் மன்னார்சாமி ஒரு நித்தியக் குடிகாரராக இருந்ததுதான் என்றால் அது அதிகப்படுத்திச் சொன்னதாகாது.
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த இராமலிங்கத்தின் மனத்திரையில் அடுத்து வந்த காட்சியும், சிந்தனையும் என்ன? அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்று சொல்வது போல மன்னார்சாமியின் மகன் மருதமலை அன்றாடக் குடிகாரனாக மட்டுமில்லாமல் அதிகாலைக் குடிகாரனாகவும் இருப்பதை நேரில் பார்த்து வேதனைப்பட்ட காரணத்தால் அவனது சந்திப்பையும், பேச்சையும், தொடர்பையும் தவிர்க்க விரும்பினார் இராமலிங்கம்.
அன்று மாலை ஆறரை மணியளவில் அலுவலகம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த இராமலிங்கம் அடுக்கு மாடி வீடமைப்புக் கட்டிடத் தொகுதிகள் இரண்டைக் கடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒரு காட்சியைச் சந்திக்க நேர்ந்தது. அதிகாலையில் வீட்டில் பிரச்சினை என்று சொல்லி பத்து வெள்ளி கைமாத்து வாங்கிச் சென்ற மருதமலை மற்றும் இரண்டு மூன்று பேருடன் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான். அவன் கண்களில் பட வேண்டாம் என்பதற்காகவே, தொலை தூரம் நடக்க வேண்டிய நிலையிருந்தும் வேறு பாதை வழியே சென்று மறைந்து விட்டார்.
ஒரு வாரம் ஆயிற்று; பத்து நாட்களும் ஆயிற்று..! மருதமலையைக் காணவில்லை; அவன் இராமலிங்கத்தின் பார்வையில் பட்டுவிடாமல் இருக்க ஒதுங்கியும் பதுங்கியும் வாழ்ந்து கொண்டிருந்தான். ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிவிட்டிருக்கக் கூடும். ஒரு நாள் அதிகாலை ஏழரை மணியளவில் இராமலிங்கம் வழக்கம் போல் அலுவலகத்துக்குப் போவதற்காகப் பேருந்து நிறுத்தத்துக்கு விரைந்து கொண்டிருந்தார். அப்போது அடுக்குமாடி வீட்டுத் தொகுதி ஒன்றின் கீழ்த்தளத்தில் இருக்கும் கடையொன்றின் அருகாமையில் போடப்பட்டிருக்கும் பளிங்குக் கல்லான மேசையைச் சுற்றிலும் இருந்த நான்கு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு மது அருந்திக் கொண்டிருந்த நால்வருள் அன்றைய நாயகன் போல் மருதமலை வீற்றிருந்தான். அந்தக் காட்சி இராமலிங்கத்தின் கண்களில் படத்தான் செய்தது.
எந்த ஒன்று நடைபெறக் கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த ஒன்றுதான் அவசரமாக நடந்து கொண்டிருக்கும். எந்த ஒன்று யாருக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறோமோ அந்த ஒன்று அதே அந்த நபருக்கு அதிவிரைவாகத் தெரியுமாறு நடந்து முடிந்துவிடும்.
இந்த உலகத்தில் எதிர்பார்ப்பது நடப்பதை விட எதிர்பாராததுதான் அதிகமாக நடக்கும்போல் இருக்கிறது. அதற்குப் பெயர்தான் ஆண்டவன் திருவிளையாடலோ?
அழ மாட்டாக் குறையாகக் கெஞ்சிக் கூத்தாடிக் கடன் பெற்றுச் சென்ற மருதமலை, ‘வீட்டில் பிரச்சினை’ என்று கைமாத்துக் கேட்டது கூடப் பொய்யாகத் தான் இருக்குமோ? இனி இம்மாதிரியான ஏமாற்றுக்காரர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியதுதான்; இப்படிப்பட்டவர்கள் வந்து மனைவி சாகக் கிடக்கின்றாள் என்று சொன்னால்கூட மனம் இளகக் கூடாது; இந்த மருதமலையிடம் ஏமாந்தது ஆகக் கடைசியாக இருக்க வேண்டும்; இனி யார் எத்தகைய மனதை உருக்கும் சம்பவத்தைச் சொன்னாலும் இரக்கம் காட்டக்கூடாது. இவ்வாறு இராமலிங்கம் தனக்குள் தானே பேசிக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். இது எந்த அளவுக்குச் சாத்தியப்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உலகம் என்பது யாருடைய நல்லது கெட்டதுக்காக வும் காத்திருப்பதில்லை. கால தேவன் தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.
மருதமலையின் சந்திப்பு நிகழ்ந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகியிருக்கலாம். வழக்கம்போல் அதிகாலை ஏழரை மணியளவில் அலுவலகம் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்துக்கு இராமலிங்கம் வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் அவர் விரும்பாத அபசகுணங்கள், சகுண தடைகள் என்று எதுவும் எங்கும் நடைபெற வில்லை. அவர் எதிர்பார்க்காத அல்லது விரும்பாத ஒன்று அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஆமாம்; அவரை எதிர்நோக்கிய நிலையில் மிகவும் பரிதாபமான கோலத்தோடு மருதமலை நின்று கொண்டிருந்தான்.
இராமலிங்கத்தைப் பார்த்தவுடன் ஓடோடி வந்து அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு, “ஐயா…! இதை உங்கள் கையென்று நினைக்காதீர்கள்; கால் என்று கருதிக் கொள்ளுங்கள்; இரண்டரை வயது என் மகன் சாகப் பிழைக்கக் கிடக்கிறான்; ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்ட கையில் காசு இல்லை; இருபது வெள்ளி கடனாகக் கொடுங்கள்; என் பிள்ளையைக் காப்பாற்றுங்கள்; உங்களைத்தான் நம்பி வந்து இங்கே உங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்; தெய்வம் போல் வந்து விட்டீர்கள்,” என்றெல்லாம் சொல்லிக் கதறி அழ ஆரம்பித்துவிட்டான். இராமலிங்கத்துக்குத் தர்மசங்கடமாக இருந்தது.
இராமலிங்கத்தின் இயல்பான மனம் இரக்கப்பட்டது. இன்னொரு உள்மனம் விழித்துக் கொண்டது. இவன் இப்போது சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கப் போகிறது; இதுவும் அவனுடைய கை தேர்ந்த நடிப்புகளில் ஒன்றாக இருக்கக் கூடும்; ஏமாந்து விடாதே..! இப்படியாக அந்த உள் மனம் எச்சரித்தது. இராமலிங்கம் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டவராய் “இந்தாப்பா..! ஏங்கிட்ட காசு எதுவும் இல்ல ; எனக்கு நேரமாவுது; வழிய விடு” என்று, சற்றுக் கடுமையாகவே வார்த்தைகளை உமிழ்ந்தார்.
மருதமலையும் சுலபத்தில் விடுவதாக இல்லை; மன்றாடிக் கொண்டிருந்தான். இராமலிங்கமும் ஒரே வைராக்கியமாக அசைந்து கொடுக்காமல் எரிந்து விழுந்தார். இதற்கு மேலும் இவரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு நேரத்தைக் கடத்துவதைவிட வேறு யாரையாவது பார்த்துக் கேட்டுப் பார்க்கலாம் என்று மருதமலை நினைத்தானோ என்னவோ அவரிடமிருந்து விலகிச் சென்றான்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்து வைத்த உண்மையா? இராமலிங்கம் ஓரடி பின் வாங்கி நின்று மருதமலை சென்று கொண்டிருப்பதை ஊன்றிக் கவனித்தார். அவனுடைய நடையின் தளர்ச்சியை உறுத்தலோடு பார்த்தார். இராமலிங்கத்தின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருந்து அவன் கேட்டு நான் கொடுக்க மறுத்த இருபது வெள்ளி இல்லாக் காரணத்தால் அந்தக் குழந்தை இறந்து விட்டால்..? என்று ஒரு கணம் ; ஒரே கணம் எண்ணிப் பார்த்த இராமலிங்கம், ‘தெய்வமே…என்னை மன்னித்துக் கொள்; என்னை மன்னித்துக் கொள்’ – நெஞ்சுக்குள் ஓலமிட்டுக் கொண்டார்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இராமலிங்கத்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த அவரது அலுவலக சகாக்களில் ஒருவரை அழைத்தார். அதுகாறும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டு இருந்தவர்தானே அவர்…!
அவரிடம் இருபது வெள்ளியை எடுத்துக் கொடுத்து, ஏதோ அவரே முன் வந்து கருணை உள்ளத்தோடு கொடுத்து உதவுவதாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு வரும் படிச் சொல்லியனுப்பினார். அவரும் விரைந்தோடி மருதமலையிடம் அந்த இருபது வெள்ளியைச் சேர்ப்பித்து விட்டு வந்துவிட்டார். இப்போதுதான் இராமலிங்கத்துக்கு, ஏதோ நின்று போயிருந்த மூச்சு வந்தது போல ஓர் ஆசுவாசம் பிறந்தது. பேருந்து வந்து நின்றதும் அதில் ஏறிக் கொண்ட இராமலிங்கம் இருக்கையில் அமர்ந்த வேகத்தில் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பது போலக் காட்சியளித்தார். உடனிருந்த அலுவலக நண்பரும் அவரை அமைதியாக இருக்க விட்டுவிட்டார்.
ஒரு சில நாட்கள் உருண்டோடி விட்டன. அன்றொரு நாள் ஞாயிற்றுக்கிழமை..! அலுவலகம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் ஆர அமர அமைதியாக எழுந்து காலைக் கடன்கள், கடவுள் வழிபாடு முதலிய இத்தியாதி இத்தியாதிக் கருமங்களை முடித்துக் கொண்டு இராமலிங்கம், தான் வசிக்கும் அடுக்குமாடி வீட்டுத் தொகுதிக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் ஒரு சிறிய பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்தார்.
இராமலிங்கம் பூங்காவில் இருக்கை இருக்கும் இடம் நோக்கிச் செல்லும்போது, மருதமலை ஓடோடியும் வந்து, இராமலிங்கத்தின் எதிரே வந்து நின்று கொண்டு அவரைப் பார்த்து, “ஐயா…! உங்க மேல எனக்குக் கொஞ்சங்கூடக் கோபம் இல்லீங்க ; நீங்க எனக்குப் பணம் கொடுத்து உதவி செய்யாததுக்கு நானேதான் காரணம். என்னை மன்னிச்சுக்குங்க ஐயா..!” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.
அன்றொரு நாள் ‘வீட்டில் பிரச்சினை’ என்று பொய் சொல்லிக் காசுவாங்கிக் கொண்டுபோய்க் குடிப்பதற்குச் செலவு செஞ்சேன்; அதோட அந்தக் கைமாத்து வாங்குன பணத்தைத் திருப்பித் தரவுமில்ல; அன்றைக்கு நான் பொய் சொல்லிக் கடன் வாங்கியதோடு அதைத் திரும்பக் கொடுக்காததால, உண்மையாகவே குழந்தை சாகப் பிழைக்கக் கிடக்கிறான்னு நான் கண்ணீர் விட்டு வேதனையோட சொன்னதை நீங்க நம்பல; அதற்குக் காரணம் நான்தாங்கிறத, நீங்க பணம் கொடுத்து உதவி செய்ய மறுத்த அன்றைக்குத்தான் உணர்ந்தேன். குழந்தைய ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோயி டாக்டருக்கிட்ட காட்டீட்டு வீட்டுக்குத் திரும்புன போது தான் என் மனச்சாட்சி எனக்குக் குத்திக் காட்டுச்சிங்கய்யா…! அப்போது முதல் என் குடிப்பழக்கத்தை நிறுத்திட்டேன்; இது சத்தியமான வார்த்தை; என்னை நம்புங்கய்யா” என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடக் கூறினான். நெஞ்சம் நெகிழ்ந்த இராமலிங்கம் மருதமலைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது இராமலிங்கத்தின் அலுவலக நண்பர் அவரைப் பார்த்துப் பேசுவதற்காக வந்தார். மருதமலை அவரைப் பார்த்ததும், “ஐயா..! உங்க கருணையால என் பிள்ளை பொழச்சிக்கிட்டான்; உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு; இன்னும் ரெண்டு நாள்ல சம்பளம் கெடெச்சதும் அந்த இருபது வெள்ளிய கொண்டாந்து கொடுத்துடறேங்கய்யா..!” என்று சொல்லித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான். இராமலிங்கத்தின் அலுவலக நண்பர் மருதமலையிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தார். இராமலிங்கம் தன் கண்ணசைவினாலேயே அவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்.
கருணை என்பது மனித பலஹீனங்களில் ஒன்றா? இராமலிங்கத்தின் இதயத்துள் எழுந்த இந்தக் கேள்விக்குப் பதில் அவருக்கே தோன்றவில்லை…!
– மனங்கமழும் பூக்கள், முதல் பதிப்பு: நவம்பர் 1997, மலர்மாமணி பதிப்பகம், சென்னை.
![]() |
மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: August 21, 2025
பார்வையிட்டோர்: 996
