கந்தன் நம் காவலன்

“ஸ்கூலுக்கு போகும் முன்பே கடையில் கொடுத்து விட்டு போய்விடு. கடைக்காரர் அவல், நெல் ரெண்டும் பொரித்து வைத்துவிடுவார். சாயங்காலம் ஸ்கூல் முடிந்து வரும்போது வாங்கிக்கொண்டு வந்துவிடலாம்” என தினசரி வேலைப்பளுவில் இயங்கிக்கொண்டிருந்த அம்மா சொன்னாள்.
“அம்மா… எங்க ஸ்கூல் ஒரு பக்கம் …; கடை இருக்குறது இன்னொரு பக்கம். எவ்வளவு தூரம் நடக்கணும். போம்மா…” என்று சிணுங்கினாள் தேவி.
“எப்போதும் நானே அவலை இடிச்சு, வீட்டிலேயே பொரிச்சு விடுவேன். ஆனா இப்போ முடியலடி கண்ணு. நம்ம ஊர்ல கடை இல்ல, டவுனுக்குத்தான் போகணும். இதற்கென்று தனியா நான் போயிட்டு வர முடியுமா? நீயே வழியிலேயே பார்த்துக்கொண்டு வந்தால் சிம்பிளா இருக்குமே. நான் வேண்டுமானால் சாயங்காலம் பஸ்ஸ்டாண்ட்ல வந்து நிக்கிறேன் என்றார் அம்மா, அன்பும் உறுதியும் கலந்த குரலில்.
தேவி, பசுமை கூடிய கிராமத்தில் வசிக்கும் +2 மாணவி. கார்த்திகை தீபத்துக்காக வீட்டில் அம்மா கலகலக்கும் நெல், அவல் பொரி என அனைத்தையும் தயாரிக்க, ஒரு உதவி கேட்க அதனை செய்ய இத்தனை பிடிவாதம் இவளுக்கு.
முதலில் தேவி சிணுங்கினாலும், “சரி… சரி… முருகனுக்காகத்தானே, செய்து கொண்டு வருகிறேன்,” என்றவாறு பைகளை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றாள். அம்மாவின் ஆணைப்படி என்றாலும், வழியில் செல்லச் செல்ல, கார்த்திகை தீப விழா என்ற வருஷார்ந்த உற்சாகம் அவளையும் பிடித்துக்கொண்டது.
அம்மா சொன்னபடியே ஸ்கூலுக்கு போகும் முன்பே கடையில் கொடுத்து விட்டு சென்றாள். சாயங்காலம், பள்ளி முடிந்ததும் கடைக்கு சென்று, தயாரான அவல்பொரி, நெல்பொரி பைகளுடன் பல வண்ண விளக்குகள், பழங்கள், பூக்கள் என பண்டிகைக்குத் தேவையானவை அனைத்தையும் வாங்கினாள். தோழி மீனாவும் கூட இருந்ததால் சந்தோஷம் இரட்டிப்பானது. இவளைப்போலவே தோழி மீனாவும் எல்லாம் வாங்க இருவருமாக சேர்ந்து பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
பேருந்து நிலையம் வந்ததும், மீனாவுக்கு திடீரென ஞாபகம் வந்தது. “ஏய்! எல்லா காசையும் செலவு பண்ணிட்டியா? பஸ்ஸுக்காக எதாவது வைச்சிருக்கியா?”
“வைச்சிருக்கேன்! பத்து ரூபாய் தனியாக எடுத்துவைத்தேனே!” என்று தைரியமாக பதிலளித்தாள் தேவி.
“எதற்கும் ஒரு முறை பார்த்து விடு” என்ற மீனாவின் வார்த்தையை தட்டாமல், தேவி தன் பையிலிருந்து தேடினாள்.
அந்தோ! அந்த பத்து ரூபாய் காணவில்லை. இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. கவலை நிறைந்த முகங்களை பரிமாறிக்கொண்டார்கள் இருவரும்.
“சரி… கண்டக்டரிடம் நாளை பணம் தருவோம் என்று சொல்லி விடலாமே,” என்றாள் மீனா.
“ச்சே.. ச்சே. அப்படி சொல்ல முடியாது. நீ இங்கேயே இரு. நான் என் கிளாஸ்மேட் வீட்டுக்குப் போய் பணம் வாங்கிவிட்டு வருகிறேன்,” என்று சொல்லிக்கொண்டு தேவி ஓடிச் சென்றாள். திரும்பி வந்த போது, பஸ்ஸே போய்விட்டது.
“கண்டக்டர், “ ஏன் வரல?’ன்னு கேட்டார். நான், ‘கடைக்கு போயிருக்காங்க… காத்துக்கிட்டு இருக்கேன்’ன்னு சொல்லிட்டேன்,” என்றாள் மீனா. “அவர் கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம் . இப்போ பாரு அடுத்த பஸ் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமே; வீட்டில என்ன சொல்வது ; இன்னிக்கு நல்லா மாட்டினோம் போ” மீனா கிட்ட தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டாள்.
அதே நேரம், தேவி திடீரென தீர்வு கண்டாள். “நம்ம வழக்கமான பஸ்ஸை விட, இன்னொரு ரூட் பஸ்ல போயிடலாம். பாலக்கரையில் இறங்கி கொஞ்சம் நடக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போ அது தான் சரியான வழி போல இருக்கு.”
அதற்கேற்றாற்போல கொஞ்சம் சுற்று வழியில் செல்லும் வழித்தடத்தில் ஒரு பஸ் வந்தது. இருவரும் அதில் ஏறினர். வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டு ஊர் வந்தடைந்தனர்.
பாலக்கரையில் இறங்கி விரைவாக நடந்தபடியே தேவி மனதுக்குள் வேண்டினாள்: “முருகா… அம்மாவிடம் வாக்குவாதம் செய்தது தப்புதான். என்னை மன்னிச்சுக்கோ.”
வழக்கமான பஸ்ஸ்டாப்பு அருகே வந்தபோது, இருவரின் அம்மாக்களும் அங்கிருந்தனர். மனதிற்குள் குழப்பத்துடன் காத்திருந்த அந்த அம்மாக்கள், இரண்டு பெண்பிள்ளைகளை கண்ணீருடன் கட்டித்தழுவினர்.
“நீங்க வழக்கமாக வரும் டவுன் பஸ் நாலு ஸ்டாப் முன்னாடி சரிவில் ஆற்றுக்கு கீழ விழுந்து விட்டதாம். ஆற்றில் நீரோட்டம் குறைவாக இருந்ததால் எல்லோரும் உயிரோட காப்பாற்றப்பட்டாங்களாம். நாங்க உங்களுக்காக காத்திருக்கும்போது அந்த பக்கம் தாண்டி வந்தவர்கள் சொன்னார்கள்.
நாங்களோ… யாரிடம் உங்களை பற்றி கேட்பது ? பஸ் விழுந்த இடத்திற்கே போகலாமா? வீட்டிற்கு திரும்பி போய் அப்பாவை போய் பார்க்க சொல்லலாமா? எங்கே போகலாம்; என்ன செய்வது என்று என்று தெரியாமல் தவித்தோம்…” என்றனர்.
“அம்மா… அது வந்து. நாங்க எல்லாம் வாங்கி கொண்டு வரும்போது …. என்று பேச ஆரம்பித்த தேவியை பேச விடாமல் ” பஸ்ஸை விட்டு விட்டீர்கள். அதானே. நல்லவேளை நீங்க அந்த டவுன் பஸ் ஏறாதது நல்லதா போச்சு. கடவுள் புண்ணியத்தில் நீங்க ரூட் பஸ்ல வந்து விட்டீர்கள் “என்று நிம்மதியாக பேசியபடியே அவர்களை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் வீட்டிற்கு திரும்பியதும், அம்மா வாங்கிய பொருட்களை பிரித்துவைத்தார். தேவி தன் புத்தகப்பையை எடுத்தாள். பாடங்கள் எழுதத் தொடங்கியவுடன், புத்தகங்களுக்கு இடையே சிக்கியிருந்த ஒரு பத்து ரூபாய் நாணயம் தரையில் உருண்டது.
அவள் கண்கள் நனையத் தொடங்கின. மனதுக்குள் முருகனை நோக்கி வேண்டினாள். முருகா…காசு தொலைந்தது நான் செய்த தப்புக்கு தண்டனை என்று நினைத்தேன் ; ஆனால் காசை மறைத்து வைத்து எங்களை விபத்துக்குள்ளாக போகும் பஸ்ல ஏற விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறாய். எங்கள் உயிர்களை காத்திருக்கிறாய். நன்றி, முருகா!”
மறுநாள் வழக்கம்போல பள்ளிக்கு போகும்போது மீனா நினைவு கூர்ந்தாள்: “நல்லவேளை… நேற்று நாம் அந்த பஸ்ஸில் ஏறல. நாம் தப்பித்தோம் ” என்றாள் மீனா.
“ஆம்… கந்தன் நம் காவலன்,” என்றாள் தேவி, அந்த பத்து ரூபாயை முருகன் கோயிலில் உண்டியலுக்குள் சேர்த்தபடி ; முருகனின் புன்னகை முகம் அவள் மனதில் தோன்றியது..