கணம்புல்லன் கருத்துகந்தார்
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 20
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வடவெள்ளாற்றின் தென்கரையில் இருக்கு வேளூர் என்று ஒரு தலம் உண்டு. சோலையில் உள்ள பலாப் பழங்கள் வெடித்து அதனின்றும் வழியும் தேன் பாய்ந்து வயல்விளையும். அவ்வூரிலே தலைவராய் வாழ்ந்தார் கணம்புல்லநாயனார். நிறைந்த செல்வமுடையாராய் நற்குணசீலராய் அவர் விளங்கினார். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என்று விரும்பி அன்பு செய்வார். திருக்கோயிலின் உள்ளே ஒளியுற விளக்கெரித்தலே நன்று என்றுணர்ந்து, திருக்கோயிலில் திருவிளக்கிட்டு நாவார நம்பனைப் பாடும் அன்பு செய்வார்.
இறைவன் அவரைச் சோதித்துப் புடமிட விரும்பினான் போலும். அவருக்கு வறுமை வந்து எய்தியது. அருணகிரியார் ‘மிடியென்றொரு பாவி” எனக் வறுமையைக் கூறுவார். கணம்புல்ல நாயனார் தேவாதி தேவராய அம்பலவாணர் எழுந்தருளியுள்ள தில்லையம்பதி சென்றார். ஆடலரசை அன்புடன் பலகாலும் பணிந்து தில்லையிலேயே தங்கியிருந்தார். வீட்டிலுள்ள பொருட்களை விற்றுத் திருப்புலீச்சரம் என்ற கோயிலில் விளக்கெரித்து வந்தார்.
விற்பதற்கு வேறொரு பொருளும் இல்லாதொழிந்தது. அயலாரிடம்போய் இரப்பதற்கு அஞ்சினார். உடல் உழைப்பினால் அரிந்த கணம்புல்லைக் கொண்டுவந்து விற்று அப்பொருளால் நெய்வாங்கி விளக்கிட்டுத் தொண்டு புரிந்தார். ஆகையாற் கணம்புல்லர் என்று பெயரும் பெற்றார்.
இவ்வாறு தொண்டு புரியும் நாளில் அரிந்து கொண்டு வரும் கணம்புல் எங்கும் விலையாகாமல் இடர்ப்பட்டார். அதனால் அவர் அப்புல்லையே திரித்து விளக்காக எரித்தார். இவ்வாறு தொடர்ந்து செய்தபோது அப்புல்லுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கணம்புல்ல நாயனார் அன்புருகும் சிந்தையுடன் என்புருக அவ்விளக்கில் தலையை வைத்து எரித்தார். உடனே சிவபெருமான் திருவருள் புரிந்து அவருக்குச் சிவலோகம் போவதற்கு அருள்புரிந்தார். கணம்புல்ல நாயனார் திருக்கயிலையில் இறைவரை அடைந்தார். இதனை அப்பர் சுவாமிகள்,
பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
பேதப்படு கின்ற பேதை மீர்கள்
நிணம்புல்கு சூலத்தார் நீலகண்டர்
எண்டோளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபா லப்பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே
என்று அருளிச் செய்தார்.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026