ஒரு விதவை அஞ்சலி செலுத்துகின்றாள்
கதையாசிரியர்: கோவிலூர் செல்வராஜன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 8
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மட்டக்களப்பு, படுவான்கரையில் கடுக்காமுனை என்ற கிராமம். பார்த்த இடமெல்லாம் பச்சைப்பசேலென்று நெற்காணிகள். ஊர்ப் போடியார்களின் வயல்கள் நன்கு விளைந்து கிடக்கின்றன. படுவான் கரையின் அனைத்துக் கிராமங்களும் இப்படிதான் இருக்கும். மட்டக்களப்பு நகரிலிருந்து வருபவர்களை இந்த வயல்களின் வனப்புமிக்க காட்சிகள் கவராமல் விடுவதில்லை. ஊருக்கே அழகு சேர்க்கும் இந்த வயல் பரப்பில் யாரும் மனதை பறிகொடுத்து விடுவார்கள்.
சின்னத்தம்பி போடியாரின் வயலில் அன்று பல பெண்கள் இறங்கி களை பிடுங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் கனகம்மா என்ற கனகம் பரபரத்துக்கொண்டு இருந்தாள். வானத்தை நிமிர்ந்து பார்ப்பதும், தான் பிடுங்கிய புல்லுகளை கொண்டு வரப்பில் வைப்பதுமாக படபடத்துக்கொண்டு இருந்தாள். அவள் பக்கத்தில் நின்று களை புடுங்கிக் கொண்டிருந்த வள்ளியம்மை கேட்டாள்.
“என்ன கனகம் எண்டைக்கும் இல்லாதபடி இண்டைக்கு அவசரப்படுறாய் என்ன விசயம்”
“ஓமக்கா இண்டைக்கு அவசரமாத்தான் இருக்கன். கெதியா வீட்ட போகணும் என்ர பிள்ளைகள் ரெண்டும் பள்ளிக்கூடத்தால் வந்து காத்துக் கொண்டு நிப்பார்கள்”
“அவங்கட பள்ளி பின்னேரம் நாலுமணிக்குத்தானே கலையும். இல்லையோ”
“ஓமக்கா.. இண்டைக்கு வாத்தியாரிட்ட கேட்டுக்கொண்டு கொஞ்சம் நேரத்தோட வந்திருப்பாங்க”
“ஏன் கனகம். அவங்களோட புளியந்தீவு (மட்டக்களப்பு நகர்) டவுனுக்கு கிவுனுக்கு போகப்போறியோ”
“இல்லக்கா. இண்டைக்கு அவங்களையும் கூட்டிக்கொண்டு நம்மட ஊர் சவக்காலைக்கு போகவேணும் அதுதான் கொஞ்சம் அவசரப்படுறன்” ”ஊர் சவக்காலைக்கோ.. என்னடி சொல்லுறாய்”
“அக்கா இண்டைக்கு மாவீரர் நாளல்லோ, பத்து வருசத்துக்கு முன்னால் இவர் கொக்கட்டிச்சோலை சண்டையில ஆமிக்காரண்ட துவக்கு குண்டுகள நெஞ்சில வாங்கி நிலத்தில விழுந்து உசிர விட்வரல்லோ. அவர மாவீரர் எண்டு அண்டைக்கு சொன்னவங்க எல்லாம். இந்த பத்து வருசத்தில் ஒருநாள் கூட அவரைபற்றிய எந்த கதைகளும் கதைச்சதில்ல. ஆனா நான் அவர மாவீரராக நினைச்சுதான் இந்த நாளில் அவருக்கு செய்ய வேண்டியதை செய்யுறன்”
“மெய்தானா கனகம், எனக்கு இதுவொண்டும் தெரியாதடி. ஆனா எனக்கு ஞாபகம் இருக்கு உண்ட புருஷன் இந்திரன் அந்த சண்டையில செத்தவன் என்று. ஊர்க்காரங்க கூடி அவன்ர சடலத்தை கொண்டுவந்து நம்மட சவக்காலையில் அடக்கம் பண்ணினதும், பிறகு ஒரு கட்டடம் கட்டினதும் தெரியும். அவன் செத்த பிறகு நீ அவன்ட பிள்ளைகள வளக்க எப்படி. கஷ்டப் படுறாய் எண்டும் தெரியும். சரி சரி கனகம் நீ கிளம்பு மிச்சத்தை நான் பாத்துகிறேன்”
“சரி அக்கா,போடியார் வந்தால் சொல்லுங்கோ வேலமுடிச்சுத்தான் போனவ எண்டு.
“அதெல்லாம் நான் பாத்துக்கிறன் நீ கிளம்பு. உண்ட பிள்ளைகள் வந்து காத்துக் கிடக்குங்கள்” என்று கனகம்மாவை நேரத்தோடு அனுப்பி வைத்தாள் வள்ளியம்மை.
பத்து வருடங்களுக்கு முன்னர் கனகம்மாவை இரண்டு பிள்ளைகளுடன் தவிக்க விட்டுவிட்டு கொக்கொட்டிச்சோலை சமரில் தன் இன்னுயிரை விட்டவன் இந்திரன். மூத்தபிள்ளைக்கு மூன்று வயசு. ஆண்பிள்ளை. மற்றப் பிள்ளை கைக்குழந்தை பெண்குழந்தை. துடிதுடித்துப் போனாள் கனகம். இந்திரனுக்கு போராளியாகப் போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும், அன்று அவன் நிர்ப்பந்திக்கப்பட்டான். வலுக்கட்டாயமாக அவனை அன்று சேர்த்துக் கொண்டார்கள். அவன் மறுதலித்தும் அவனை பயமுறுத்தி அழைத்துச் சென்றார்கள். அவனை மட்டுமல்ல படுவான்கரையில் உள்ள கிராமங்களில் இருந்து பல குடும்பஸ்தர்களை வலுக் கட்டாயமாக இயக்கத்தில் அன்று இணைத்தார்கள். அப்படி இணைக்கப்பட்டவன்தான் இந்திரன். அன்று அவன் சேர மறுத்திருந்தால் அவன் உயிருக்கு அச்சுறுத்தல் வந்திருக்கும். கடைசியில் அவனை அவர்களே கொன்றிருப்பார்கள். அதுதான் அன்றைய நிலை. விருப்பமில்லாமல் சேர்ந்து, நாளடைவில் ஒரு போராளியாகி பல சண்டை களில் ஈடுபட்டு, கடைசியாக கொக்கொட்டிச்சோலை சமரில் உயிரை விட்டான் இந்திரன். அந்த சண்டையில் அவனுடன் பலர் மாண்டார்கள்.
கண்ணீரும், கம்பலையுமாக கதியற்று மூன்று வயதுப் பிள்ளை யுடனும், கைக்குழந்தையுடனும் கதறிய, பதறிய கனகம்மாவுக்கு ஊரவர் ஆறுதல் சொல்லி இறுதிக் கிரிகைகள் செய்து அவள் கணவனை அடக்கம் பண்ணினார்கள். பின்னர் ஒரு நினைவுக் கல்லறையையும் இந்திரன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டினார்கள்.
இந்திரனின் மறைவுக்குப் பின்னர் கனகம்மா மிகவும் கஷ்டப் பட்டாள். பிள்ளைகளை வளர்த்து எடுப்பதற்கு படாத பாடு பட்டாள். ஊரிலே போடிமாரின் வயலிலே களை பிடுங்குவது, தனது வளவுக்குள். மரவள்ளி, சோளம், கீரை, வெண்டி, கத்தரி பயிரிட்டு விற்பது, களப்பில் கரப்பு குத்தி இறாலோ மீனோ அகப்பட்டால் அதை சந்தியில் வைத்து விற்பது என்று பல வேலைகள் செய்து தனது பிள்ளைகளை வளர்த்தாள். இன்று பையனுக்கு பதின்மூன்று வயது. பொண்ணுக்கு பத்து வயது. பள்ளிக்கூடம் போகின்றார்கள். சனி, ஞாயிறு நாட்களில் அவர்களின் வீட்டு காய்கறித் தோட்டத்தில் தாயுடன் சேர்ந்து வேலை செய்வார்கள். அவர்கள் படிக்க வேண்டும். படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று ஒரு தாயாக கனகம்மா தன்னால் முடிந்ததை செய்கிறாள்.
தன் கணவன் இந்திரன் இயக்கத்தில் சேரமுன், மிகவும் கஸ்டப்பட்டு சம்பாதித்து, இரண்டு அறைகள் கொண்ட ஒரு மண் வீட்டை கட்டி தன் குடும்பத்துடன் வாழ்ந்தான். அதில்தான் கனகம்மா இப்பொழுது தன் பிள்ளைகளுடன் வாழ்கிறாள். அவளது உறவுக்காரர் என்று ஒருசிலர் அங்கு இருந்தாலும் அவர்களால் இவளுக்கு உதவ முடிவதில்லை. காரணம் அவர்களும் கஷ்டப்படுகின்றனர்.
அண்மைக்காலங்களில் புலம்பெயர் மக்களிடமுள்ள தன்னார்வ அமைப்புகளினால் படுவான்கரைப் பகுதிக்கு பல உதவிகள் கிடைகின்றன. குறிப்பாக கல்வி மேம்பாட்டிற்காக சில அமைப்புகள் இங்குள்ள பாடசாலைகளுடன் தொடர்புகொண்டு, கிராம அதிகாரிகளுடன் பேசி நேரிலும் சென்று நிலைமைகளை பார்த்து தேவையான உதவிகளை செய்கின்றார்கள். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு அவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள். புத்தகப் பைகள்,வளர்ந்த பிள்ளைகளுக்கு சைக்கிள்கள், மற்றும் பிரத்தியேக வகுப்புகளை நடாத்த ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கான ஊதியங்கள் என்று இந்த புலம்பெயர் அமைப்புகள் செய்கின்றன.இவற்றில் கனகம்மாவின் பிள்ளைகளுக்கும் சில உதவிகள் கிடைகின்றன.
அது கனகம்மாவின் சுமையை ஓரளவு குறைத்திருக்கிறது. அந்த உதவிகளுக்காக அவள் அதை செய்யும் அமைப்புகளுக்கு நன்றி பாராட்டுகின்றாள்.
வயலிலிருந்து புறப்பட்ட கனகம்மா வேகா வெயிலில் வேர்த்து. விறுவிறுத்து வீடுவந்து சேருகின்றாள். பிள்ளைகள் இரண்டும் தாயின் வரவை எதிர்பார்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவள் தன் வீட்டு படலைக்கதவை திறந்துகொண்டு வளவிற்குள் பிரவேசித்ததும். சத்தம் கேட்டு பிள்ளைகள் இரண்டும் வெளியில் வந்தார்கள்.
‘வந்துட்டீங்களா மகள்… கெதியா வெளிக்கிடுங்க அப்பாவுக்கு அஞ்சலி செலுத்தப் போவோம்’
‘அம்மா நான் எல்லாம் ஆயத்தம் பண்ணிட்டன். பூமாலை, பழங்கள், நீங்க இரவு சமைத்து வைத்த அப்பாவுக்கு பிடித்தமான சாப்பாடுகள் எல்லாம் பாத்திரத்தில் போட்டு மூடி வச்சிருக்கிறன். நீங்க குளிச்சு வந்தால் நாம போயிடலாம் அம்மா’ என்றள் மகள் சுகந்தி.
‘சரி மகள்… அம்மாவின் வேலைக் கஷ்டம் அறிந்த என் செல்லம்’ என்று தன் மகளை வாரி அணைத்துக்கொண்டாள் அந்த அன்புத் தாய்.
கனகம்மாவின் மகன் கபிலன் மட்டும் எப்போதும்போல மௌனியாக இருந்தான். அவனுக்கு தன் தகப்பனை பற்றிய எண்ணங்கள் எப்போதும் வேதனையைக் கொடுத்தாலும் மண்மீட்புக்காக அவர் வீர மரணம் அடைந்தவர் என்பதை நினைத்து பெருமை கொள்வான். தன் தகப்பன் ஒரு மாவீரர் என்று அவன் பெருமிதம் கொண்டாலும் தன் தந்தைக்கு உரிய மரியாதை இந்த படுவான் கரையில் கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வான். மாவீரர் நாளுக்கு உலகம் முழுதும் பெரிய எடுப்பில் புலம்பெயர்ந்த மக்கள் விழா எடுத்துக்கொண்டாடுகின்றார்கள். விளக்கேற்றி அஞ்சலி செய்கிறார்கள் என்ற செய்திகளை அவன் இப்பொழுது ஊடக வாயிலாக அறிந்து கொள்கின்றான். புலம்பெயர் அமைப்பு ஒன்றினால் தனது பாடசாலைக்கு வழங்கப்பட்ட கணினி ஒன்று அவனுக்கு இந்த செய்திகளை பார்க்க உதவுகின்றது. அவனும் அதை எப்படி கையாள்வது என்பதை ஒரு ஆசிரியர் மூலம் கற்றுக்கொண்டு இருக்கின்றான். கிழமையில் ஒருநாள் அதை அவன் பார்க்கும்போது பல உலக நடப்புகளை அறிந்துகொள்கின்றான்.
குடும்பஸ்தரான தன் தந்தையை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்துக்கொண்டவர்களை அவன் நொந்துகொண்டு இருக்கின்றான். வாலிபத்தை எட்டாத இந்த வயதிலும் கபிலன் பல கருத்தாக்கங்களை தன்னிடம் கொண்டுள்ளான்.
போராட்டத்துக்கு ஆள் சேர்க்கும்போது குழந்தைகளை கொண்டுள்ள தகப்பன்மார் தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும். திருமணம் முடித்தவர்களும் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்று பல பெண்கள் விதவையாக்கப்பட்டிருக்கமாட்டார்கள். தாய்மார், தகப்பனை இழந்த பிள்ளைகளை கஸ்டப்பட்டு வளர்க்க வேண்டிய தேவை இராது. குடும்பச் சுமையை தங்கள் தோள்களில் சுமக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காது என்ற கருத்துகளை அவன் கொண்டு இருக்கின்றான். சரியான திட்டமிடல் இல்லாததால்தானோ என்னவோ போராட்டம் தோல்வியை சந்தித்தது என்ற எண்ணமும் அவனிடம் உண்டு. ஆனாலும் உரிமைக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிறங்கி தங்கள் உயிர்களை விதையாக்கிய பல்லாயிரம் மாவீரர்கள் நினைவு கூரப் பட வேண்டியவர்களே. புலம்பெயர் நாடுகளில் இந்த நாளை பெரிய அளவில் செய்கிறார்கள். நாட்டில் கடந்த காலங்களில் இவர்களை நினைவு கூர தடை இருந்தது. இப்போது ஓரளவு கெடுபிடிகள் இல்லை.
மாவீரர் விதைக்கப்பட்ட இடங்கள் வடக்கில் பலவும். கிழக்கில் ஒருசிலவும் இருக்கலாம். ஆனால் தன் தந்தையைப் போன்று தனிப்பட்ட முறையில் அவரவர் மயானங்களில் அடக்கம் செய்யப்பட்ட மாவீரரும் உண்டு. இவர்களுக்குத்தான் மாவீரர் நாளில் உரியமுறையில் அஞ்சலி கிடைப்பதில்லை.
அந்த மாவீரனின் குடும்பம் மட்டுமே அஞ்சலி செய்வார்கள். அதுதான் இப்பொழுது நடைபெறப்போகின்றது. சிந்தனைகளுடன் மௌனமாக இருந்த கபிலன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ‘அம்மா… அம்மா எல்லாம் சரியா மழை வரப்போகுது போல இருக்கு. கெதியா வாங்க’ வெளியில் நின்று குரல் கொடுத்தான்.
“இதோ எல்லாம் முடிஞ்சு மகன். நீ எதற்கும் குப்பை வாரியையும். இரண்டு குடைகளையும் எடுத்துக்கொள்” என்ற கனகம்மா தன் மகள் சுகந்தியோடு கைகளில் தட்டுமுட்டு சாமான்களுடன் வெளியில் வந்தாள். அவள் மகளின் கைகளிலும் பைகள் இருந்தன. மூவரும் வீட்டை விட்டு புறப்பட்டார்கள்.
இந்திரன் அடக்கம் செய்யப்பட்ட ஊர் மயானத்திற்கு வந்து விட்டார்கள். கபிலன் தான் கொண்டுவந்த குப்பை வாரியினால் தன் தந்தையின் கல்லறையை சுற்றி கூட்டி துப்பரவு செய்தான். கனகம்மா தன் கணவனின் கல்லறைக்கு முன்னால் வெள்ளை விரித்து அதில் வாழை இல்லை பரப்பி, அதில் தான் கொண்டுவந்திருந்த படையல் பொருட்களை வைத்து கற்பூரம் கொளுத்தி வழிபட்டாள். சுகந்தி, தான் கொண்டுவந்திருந்த பூமாலையை தன் தந்தையின் கல்லறைக்கு சாற்றினாள் பின் அகல் விளக்கு ஏற்றி, தேவாரம் பாடி அஞ்சலி செலுத்தினாள். கபிலன்அடக்கமாக கண்களில் நீர்மல்க தன் தந்தையை நினைத்து இப்பொழுதும் பெருமை கொண்டான்.
புதர்களும் பற்றைக்களுமாக கிடந்த அந்த கடுக்காமுனை ஊர் மயானத்தில் அப்பொழுது கனகம்மாவையும் அவள் பிள்ளைகள் இருவரையும் தவிர வேறு ஒருவருமே இல்லை.
அழுதழுது தன் நினைவுகளையும், தன் கஷ்டங்களையும் கல்லறையில் நின்று மாவீரராகிப் போன தன் கணவனிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள் அந்த விதவைத்தாய். பிள்ளைகள் இருவரும் தங்கள் தகப்பனின் கல்லறையை தொட்டுப்பார்த்து பார்த்து கண்கலங்கினார்கள்.
மாவீரர்களுக்கு புலத்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகச் சிறப்பாக மாவீரர் நாள் என்றும் தேசிய நினைவெழுச்சி நாள் என்றும் கொண்டாடும் அதேவேளை மாவீரராக மண்ணில் விதையான தன் கணவனுக்கு கண்ணீருடன் கூடிய அஞ்சலியை ஆளரவமற்ற அந்த மயானத்தில் அர்ப்பணம் செய்துவிட்டு மனப்பாரத்துடன் தன் வீடு நோக்கி புறப்பட்டாள் கனகம்மா. இப்பொழுது மழை துளிகள் மண்ணில் விழ தொடங்கின. பிள்ளைகள் இருவரும் குடைகளை பிடித்துக் கொண்டு தாயின் பின்னால் தங்கள் எதிர்காலம் பற்றிய கேள்விகளுடன் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லப்போகின்றார்கள்?
– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.
![]() |
கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026
