என் மனத்தே வைத்தேனே
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 235
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவபெருமானுடைய பல பெருமைகளை நினைவுகூர்ந்த அப்பர் சுவாமிகள் இப்படிப்பட்ட பெருமானை என்மனத்திலே வைத்தேனே என்று பாடுகின்றார். சிவனிடத்திலே என்ன பெருமையைக் கண்டுவிட்டார்?.
ஒருமுறை நாரகாவனத்து ரிஷிகள் தமது தபோசக்தியை நினைந்து செருக்குக் கொண்டார்கள். அவர்களுடைய அகங்காரம் அவர்களையே அழித்து விடும்; உலகத்திற்கும் அதனால் கேடு அவர்கள் உண்டாகும் என்பதை எம்பெருமான் உணர்ந்தார். புலனடக்கம் இல்லாது வாழ்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார் எம்பெருமான்.
முனிவர்களுக்கு முன்னால் அழகிய மோகினி உருக்கொண்டு சென்றார். தவத்திலே ஈடுபட்டிருந்த அத்தனை முனிவர்களும் மோகினியின் அழகில் ஈடுபட்டு மோகினியின் பின்னே எழுந்து சென்றார்கள். முனி பத்தினிகளின் முன்னே அழகிய புருஷோத்தமனாகச் சென்றார். அப்புருஷோத்தமனின் அழகில் ஈடுபட்ட முனி பத்தினிகள் அத்தனைபேரும் அப்புருஷோத்தமனின் பின்னால் நடந்து சென்றார்கள். புருஷோத்தமனும் மோகினியும் மறைந்துவிட்டனர். முனிவர்களும் முனிபத்தினிகளும் தமது செயலுக்காக நாண் அழிந்து வெட்கப்பட்டார்கள். இது சிவனுடைய செயல்தான் என்பதை உணர்ந்து சிவனுக்கு மாறாக ஒரு பெரு யாகம் செய்தார்கள்.
யாகத்திலே பெரிய யானை ஒன்று தோன்றியது. அதனை சிவபெருமான் மீது ஏவினார்கள். பெருமான் அதனை அடக்கி அதன் தோலை உரித்துப் போர்த்துக்கொண்டார். இச்செய்தியை “அடுத்தானை உரித்தானை” என்று குறிப்பிடுகிறார் அப்பர் சுவாமிகள்.
பஞ்சபாண்டவர்கள் துரியோதனனுடைய சூழ்ச்சியினால் நாடு நகரம் இழந்து காட்டிற்குச் சென்றார்கள். யுத்தம் நடந்து முடிந்தால்தான் துரியோதனன் வழிக்கு வருவான் என்பது கண்ணன் முதலான பெரியேர்களுடைய எண்ணம். வியாசர் பஞ்சபாண்டவர் களைப் பார்க்க வந்தால் உங்களுடைய வீரம் தர்மத்துடன் தெய்வபலமும் சேர்ந்தால்தான் யுத்தத்தை வெல்ல முடியும். ஆதலால் அர்ச்சுனன் சிவபெருமானைக் குறித்து தவஞ் செய்து பாசுபதாஸ்திரம் பெற வேண்டும் என்று வியாசர் கூறியதோடு சிவபெருமானைக் குறித்து தவஞ் செய்யும் வகையை விவரித்து அர்ச்சுனனுக்கு மந்திரோபதேசமுஞ் செய்தார்.
அர்ச்சுனன் இமயமலை அடிவாரஞ் சென்று பஞ்சாக்கினி மத்தியில் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவஞ் செய்தான். மூகன் என்ற அசுரன் பன்றியுருக் கொண்டு அர்ச்சுனனைக் கொல்வதற்கு வந்தான். அதேநேரத்தில் சிவபெருமானும் வேடுவ உருவங் கொண்டு பன்றியைக் கொல்வதற்காக வந்தார். அர்ச்சுனன் எதிரே வந்த பன்றியைக் கண்டு குறி வைத்தான். சிவனாகிய வேடரும் அதேநேரத்தில் குறிவைத்தார். இருவரது அம்புகளும் ஒரே நேரத்தில் பாய்ந்து பன்றி மாண்டது.
சிவனாகிய வேடர் அர்ச்சுனனுக்கு அருகில் சென்று நான் எய்த பன்றிக்கு நீ ஏன் எய்தாய் என்று வலியச் சண்டைக்கு இழுத்தார். அர்ச்சுனன் உனக்குப் பன்றிதானே தேவை. அதை எடுத்துக் கொண்டு செல் என்று கூறினான். பிறர் எய்த பன்றியை நான் எடுப்பதில்லை என்று சிவவேடர் கூறினார். இருவருக்கும் வாய்ச்சண்டை முற்றிக் கைச்சண்டையாக மாறியது. சிவவேடர் அர்ச்சுனனைத் தூக்கி ஆகாயத்திலே எறிந்தார். கோபங் கொண்ட அர்ச்சுனன் சிவவேடருடைய தலையிலே வில்லால் அடித்தான். அந்த அடி உலகிலுள்ள உயிர்கள் மீதெல்லாம் விழுந்தது. இறைவரது காட்சியும் கிடைத்தது பாசுபதாஸ்திரமும் கிடைத்தது.
“அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை” என்பது அப்பர் வாக்கு. தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி என்ற முப்புரத்தசுரர்களும் இரும்பு, வெள்ளி, செம்பு ஆகியவற்றினாலே ஆகாயத்திலே கோட்டை கட்டிக் கொண்டு தேவர்களுக்குத் துன்பம் விளைவித்தனர். துன்பம் தாங்கமாட்டாத தேவர்கள், முனிவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். தேவர்களுடைய முறையீட்டுக்கு இரங்கிய பெருமான் முப்புரத்தசுரர்களை அழிக்கப் புறப்பட்டார்.
பூமியைத் தேராகவும் சூரியசந்திரர்களை சில்லுகளாகவும் கொண்டு பிரமதேவர் தேர்ச்சாரதியாக இருந்து தேரைச் செலுத்தினார். மகாமேருமலையை வில்லாகவும் மகாவிஷ்ணுவை அம்பாகவும் கொண்டனர். அம்பாக இருந்த மகாவிஷ்ணுவுக்கு தன்னை இல்லாமல் முப்புரங்களை அழிக்க முடியவில்லையே என்று மனதில் நினைத்தார். இந்த நினைவை உணர்ந்த சிவபெருமான் ஒரு புன்முறுவல் புரிந்தார். அப்புன்முறுவலிலேயே முப்புரங்களும் எரிந்து சாம்பராயின. இதனை அப்பரடிகள் “குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரிய” என்று குறிப்பிடுகின்றார்.
குபேரனிடம் இருந்த புட்பக விமானத்தை இராவணன் அடித்துப் பறித்துத் தனதாக்கிக் கொண்டான். இராவணன் புட்பக விமானத் திலேயே எங்கும் பறந்து திரிந்தான். ஒருமுறை கைலாயமலைக்கு மேலால் பறந்து வந்தான். மலைக்கு நேராக வந்ததும் விமானம் நின்றுவிட்டது. கோபஞ் கொண்ட இராவணன் கயிலாய மலையையே தூக்கி எறிய முனைந்தான். இருபது தோள்களால் மலையை அசைத்தான். உமாதேவியார் அஞ்சி நடுங்கியபோது பெருமானார் தமது கால் பெருவிரலை மலையிலே ஊன்றினார். இராவணன் மலைக்குள் அகப்பட்டு வருந்தினான். அவ்வழியே வந்த வாகீச முனிவர் இராவணன் வருந்துவதைக் கண்டு இறைவன் சாமவேத கானப்பிரியன், ஆதலினால் சிவனைப் பாடு என்றார். உடனே இராவணன் கை எலும்பை முறித்து நரம்புகளைக் கொண்டு யாழ் தயாரித்து சாமவேத கானம் பாடினான். இராவணனுடைய பாடலுக்கிரங்கிய எம்பெருமான் இராவணனுக்கு உயிர்ப்பிச்சை அளித்ததோடு வீரவாளும் நல்கினார்.
இதனை அப்பரடிகள் “சுனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை” என்று குறிப்பிடுகின்றார்.
இப்பொழுது தேவாரம் முழுவதையும் பார்ப்போம்.
அடுத்தானை யுரித்தானை அர்ச்சுனர்க்குப் பாசுபதம்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை யென்மனத்தே வைத்தேனே.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026