எண்களுடன் பயணித்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 9, 2026
பார்வையிட்டோர்: 95 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கையில் இருக்கும் ஐயாயிரத்து ஐநூறு ரூபா என்ற ஒன்றை முழுக்கவும் செலவு செய்து விடாமல் பயணத்துக்கான இருபத்தைந்து ரூபாவாகிய ஏழை மட்டும் வைத்துக்கொண்டு பொருட்களை கொள்வனவு செய்தேன். எனக்குரிய நேரத்தைக் கடந்து விழித்திருக்கவும், தூக்கத்தைக் கலைத்து விரட்டக் கூடியதுமாகிய மருந்துகளும் அதனுள் இருந்தன. பாரம் நிறைந்திருந்த பையை தூக்கிக்கொண்டு பூச்சியமாகி இருந்த வண்டியினுள் வசதியான இருக்கையை தெரிந்து அமரும் போது வீட்டை விட்டு வெளியே வந்து மூன்றை விரயமாக்கி இருந்தேன் மணித்தியாலங்களை. 

பூச்சியத்திற்கு அதிக சக்தி இருந்தது. அது எதனுடனும் சேரும். தனியே சக்தியற்றுக் கிடக்கையில் அர்த்தமற்றதாகி இருப்பினும் அதை எந்த இலக்கமும் செலுத்தலாம்.ஆனால் அந்த இடத்தில் அமரக்கூடிய அனுமதிப்பத்திரம் அந்த எண்ணுக்கு தேவைப்படும். எத்தனை இலக்கங்கள் அடங்கிய எண்ணையும் அது எடுத்துச் செல்லும். பெறுமதியானதாக்கும் காலத்தைக் கடக்கும் சக்தியை அதானல்தான் வழங்க முடிந்தது. இலக்கங்கள் பின்னால் நின்று அதை தள்ளச்செய்தால் பயனற்றதாய்த்தான் இருக்கும். காற்றை உள்ளிழுத்து நுரையீரல் நிரப்பி வெளிவிட்டு களைப்பில் இருந்து சமநிலைக்கு வர எடுத்த பத்து நிமிடங்கள் வரை நான்தான். ஒன்றாய் இருந்தேன் யாரும் ஏறவில்லை. 

நான் எப்போதும் ஒன்றுதான் என்பதில் நிறைந்த மகிழ்ச்சி அம்மாவுக்குத்தான், வகுப்பில் நடக்கும் தேர்வில், ஓட்டப்போட்டியில், கவிதை எழுதுவதில்……. என நீளும் இன்ன பிற எல்லாவற்றிலும், அதற்கு என்னுள் நிரம்பி இருக்கும். ஒன்றுகள் நிரம்பிய ஒன்றுக்களின் தொகுதி தான் காரணம். நான் பிறந்தது பத்தாம் திகதி (1+0=1).

அது பிறப்பெண், பிறந்தவருடம், மாதம், திகதி, கூட்டிவரும் 502L6L600 (1+9+7+0+0+1+1+0=19/1+9=10/1+0=1) பெயரெண் என் வீட்டு இலக்கம் இருபத்தெட்டு (2+8=10/1+0=1) இவையெல்லாம் ஒன்றுகளால் நிரம்பி இருந்ததால் குணமும் அதைப்போலவே பிடிவாதமாய் இருந்தது. எதிலும் நான் வர வேண்டும் என் இருப்பைக்காட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். ஒன்று என்பதால் சூரியன் போல சுயமான இயக்கமும் சுறுசுறுப்பும் வேகமும் துல்லியமான செயலுடனும் ஒளி முதலாய் இருப்பேன் என்னும் அப்பா – நரம்பு சக்தியை ஊக்குவித்து தூக்கம் சோம்பேறித்தனத்தை போக்கக் கூடியதும் தொடு உணர்வுகளை வலுப்படுத்தக் கூடியதுமான மாணிக்கம் போல கதிர்களை வீசி பிரகாசிப்பேன் என்றும் புகழ்வார். முதன்மையுள் முதலாவதாய் இருந்த நான் கால ஓட்டத்துள் அங்கிருந்து நீக்கப்பட்டாலும் -ஒற்றையாய் – முதலாவதாகத்தான் இருந்தேன். 

சில நிமிடங்களில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆண் ஒருவனும் அவனது மனைவியும் இரு சிறிய பைகளுடன் பூச்சியத்துள் ஏறினார்கள். குழந்தை பெண்ணின் சாயலில் இருந்தது. அவன் கலவி கொண்டு பிரிந்த போது அவளிடம் எஞ்சியதாக அக்குழந்தை இருந்திருக்க வேண்டும். ஆனபடியால் அவன் இரட்டை எண்ணாகவும், அவள் ஒற்றை எண்ணாகவும் இருந்திருக்க வேண்டும். அதிலும் அவனை விட அவள் மூப்புற்றிருந்தாள். 

யன்னலோரத்தில் அவளும் அடுத்து அவனும் அமர்ந்து கொண்டாலும் தன் இருக்கை வசதியற்றதைப்போல் அவன் நெழிந்துகொண்டிருந்தான். அவனது முகம் ஏற்கனவே பதியப்பட்ட உணர்வு எனக்குள் சுழன்றடித்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பாடல் ஒன்றுக்கு குரல் கொடுத்த ஞாபகத்தைக் கொண்டு வந்து பிரபலப்படுத்தப்பட்ட போது அவன் நான்காம் இலக்கக்காரன் என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்குறித்தான சில இயல்புகளையும் அவன் கொண்டிருந் ததையும் அவதானித்தேன். 

அவனருகில் அமர்ந்திருந்தவள் கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டு சலிப்புற்று இருந்ததுடன் கணவரிடம் புறப்படும் நேரத்தைக் கேட்ட வண்ணமும் இருந்தாள். அடிக்கடி தன்னை மறந்து தீவிர சிந்தனைக்குள் நுழைந்து மீண்டும் கணவன் இருக்கையுள் நெழியும் இரகசியம் உணர்ந்தும் மடியில் கிடத்தப்பட்டு உறங்கிக் கொண்டிருந்த குழந்தை வசதி போதாமல் முகத்தை சுருக்கி அசௌகரியப்பட்ட போதும் தன் உடலை மூலைக்குள் நகர்த்தி இடப்பரப்பை கணவனுக்கு ஏற்படுத்தி அவனின் மடிமீது குழந்தையின் காலை நீட்டச்செய்து தன் குளிர் அங்கியை சுருட்டி தலைக்கு அணைகொடுத்து படுக்கச் செய்தாள். இதையெல்லாம் பார்த்து தொகுத்து ஒப்பிட்டு அவள் ஐந்தைச் சேர்ந்திருப்பதை அறிந்தேன். 

இவன் என்னைப்போல எனக்கு அடுத்த நிறைவர்க் கக்காரன் இரட்டை எண்ணுக்குரித்தான சாந்த இயல்பு அவனது வட்ட முகப்பரப்பில் இழைவிட்டோடி இருந்தது. மற்றைய எல்லோரையும் சேர்த்து பார்க்கும் சேர்த்தி எண் தன்மையை கொண்டிருந்தாலும் அவள் அதுதான் ஐந்து முதன்மைத் தன்மையுடன் தனித்துவமாகவே இருந்தாள். ஆனாலும் தன்னுள் எழும் எண்ணங்களை பரிமாறிக்கொள்வதற் காகவேனும் வார்த்தையில் ஜாலங்காட்டி இழுத்துக்கொள்வாள். நான்குக்கும் ஐந்துக்கும் பின்னிருந்து இருக்கையின் யன்னல் பக்கம் அமர்ந்து கொண்ட ஏழானவனிடம் ஐந்து தன் நட்பும் இனிமையும் கலந்த உரையாடலை ஆரம்பித்திருந்தாள். இந்த உரையாலுக்குத்தான் ஏழானவனுடன் ஏறிய எந்த இலக்கத்தையும் பார்வை பின் தொடராமல் இங்கே லயத்திருந்தது அதுவே தான் அவன் ஏழுதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது. 

உலகம் போலியானது என்பதையும் சுயசிந்தனை யற்று இயங்கிக்கொண்டிருப்பதையும் வார்த்தைகளாய் விட்டான். யாருக்கு கீழும் அடங்கியிராமல் உலகைத்தட்டி நிமிர்த்தும் அவனது கதை சுவாரசியமாக நகர்ந்ததுடன் ஏழின் மனக்கொதிப்பை வார்த்தைகளாக்கியது. அந்த நிறுத்தப்படாத உரையாடலுடன் ஏழின் மனப்போராட்டமும் ஐந்தையும் இடையிடையே நான்கையும் (மறைமுகமாக) ஒன்றாகிய எண்ணையும் உலுக்கிக் கொண்டே வந்தது. 

பூச்சியத்துள் இருந்த அத்தனை இருக்கைகளும் இலக்கங்களால் நிறைந்துபோயின. அதைவிடவும் இருக்கையற்ற ஒன்றிரண்டு இலங்கங்கள் மேல் நீண்டிருந்த கைப்பிடிக் கம்பியில் தொங்கிக்கொண்டு வந்தன. 

எனக்கு முன்னிருந்த இரண்டானவன் எழுந்து மூதாட்டி ஒருத்திக்கு இருக்கையை கையளித்து கம்பியில் தொங்கினான். இரண்டு எப்போதும் இப்படித்தான் பிறருக்கு தன் இடத்தைக் கொடுத்து தவித்து திரிந்தாலும் காலம் கூடி வருகையில் முதன்மையின் முதலிடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். 

பயணத்துக்கான வாடகை பெற்றுக்கொண்டு வந்து எட்டு என்னருகில் இருந்த இலக்கத்திடம் ஒரு ரூபாய் குறைந்த போதும் பின் இருக்கையின் யன்னலோரத்து இலக்கத்திடம் இரண்டு ரூபாய்கள் குறைந்த போதும் சிரிப்புடன் வாங்கி சென்றதுடன் பயிற்ச்சி கொப்பிகளுடன் அல்லது புத்தகப்பை களுடன் நின்ற இலக்கங்கள் கொடுத்தவற்றை கணக்கிடாமல் பெற்றுக்கொண்டு புன்னகைத்திருக்க எட்டினால் மட்டும்தான் முடியும். எட்டு எப்போதுமே எல்லா இலக்கத்தையும் தன்னுள் உள்வாங்கிக் கொள்ளும் இயல்பானது கணிக்கருவியின் எட்டு எட்டுக்களின் தொகுதியே சகல இலக்கங்களையும் உருப்படுத்தி எண்களாக்கி நின்றன. 

பின் இருக்கையான மரு மூலைக்காரன் ஆறு வெளியில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்ததும் உள் இருந்த தொங்கிய எல்லா இலக்கங்களையும் ரசித்து வியந்தான். அவனது மனம் கற்பனைக்குள்ளாலேயே அழகுணர்வுடன் புன்னகைத்து வந்தது. 

இலக்கங்களெல்லாம் தனித்தனியே இயல்பை வெளிப்படுத்தி வந்தாலும் எனக்கருகில் இருந்த இன்னுமொரு எட்டும், ஒன்பதும் தங்கள் வளையத்துள் எனை மாட்டிக் கொண்டு குலுங்கிக்குலுங்கிச் சிரித்தன. அப்போதிருந்தே இலக்கங்களின் பிணைப்பு மகிமை நிறைந்த உணர்ச்சிகர மான கவிதை உலகைத் தோற்றவிக்குமென அறியத் தொடங்கினேன். 

ஒவ்வொரு இலக்கமும் தன்னியல்புக்கு ஒத்த இலக்கத்துடன் இணையும் போது சாதனைக்குரித்தான எண்களை உருவாக்கும். அப்போது பத்திலோ ஆயிரம் மில்லியன் ஏதோ ஒரு இடத்தில், இடங்களில் கூட்டுசேரும் பிணைப்பு இலக்கங்களும் பூச்சியமும் நிரம்பி அதை மதிப்பு மிக்கதாக்கும். இதன்படிதான் உலகு போராட்டம் நிறைந்தாக அமைதி நிரம்பியதாக இருபத்து மூன்றரை பாகையில் சுழன்றது. 

சாதனையும் சோதனையும் நிறைந்ததான ஒன்பது யாரும் அமராத தனித்துவமான தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு பூச்சியத்தை செலுத்த தயாராகிக் கொண்டிருந்தது. சுத்தமாய் இருந்த இலக்கங்கலெல்லாம் இன்னொன்றுடன் தொடர்பு கொண்டு மற்றையதன் குணத்துடன் உறவு கொள்ளத்தொடங்கி இருந்தன ஆனாலும், மூன்றும் ஐந்தும் தனக்குள் மூழ்கிக்கிடந்தன. உஷ்ணமும் குளிர்சியும் கலப்புற்று வெதுவெதுப்பான வாடை பூச்சியத்துள் நிறைந்தது. 

இருந்தும் தொடங்கியும் இலக்கங்களால் நிறைந்து போன பூச்சியம் மெதுமெதுவாய் உருளத்தொடங்கியபோது ஒன்பது இலக்க குணங்கள் எனக்குள் நுழைந்துகொண்டு உருத்தின. 

உலகம் இலக்கங்களின் இயல்பிலேயே சுழன்றது.

– 06-04-2012, மகுடம் இதழ் – 2.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *