உலக்கைச் சாமியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 58 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – புதுசா கல்யாணம் முடிச்சவங்க இருந்தாங்க. அவங்களுக்குப் பிள்ளயே இல்ல. பிள்ளயில்லாததனால், எப்பயும் அவங்களப் புதுசாக் கல்யாணம் முடிச்சவங்கண்டு, அந்த ஊர்ல எல்லாருஞ் சொல்லிக்கிருவாங்க. 

இப்டி இருக்கயில, பிள்ளவரங் கேட்டு போகாத எடமில்ல. கோயிலுமில்ல. எல்லா எடங்களுக்கும் போயி, அலஞ்சு பாத்திட்டு, வேலயச்செஞ்சு, கஞ்சியக் குடிச்சுக்கிட்டு நம்மள மாதிரி இருக்குறாங்க. 

இப்டி, பிள்ளயேக்கம் புடிச்சு இருக்கயில, ஒரு நா, அந்த ஊருக்கு ஒரு சாமியாரு வந்தாரு. விசயத்துல பெரிய கெட்டிக்காருண்டு அவரச் சொல்லிக்கிருவாங்க. பெரிய கெட்டிக்காருண்டு சொல்லவும், சாமியாருகிட்டப் போயி, குடும்ப வாழ்க்கயில இருக்ற பிள்ளயில்லாக் கொறயச் சொல்லி, எனக்கு எப்டிண்டாலும் பிள்ளவரங் குடுக்கணும்ண்டு,சாமியாருகிட்டக் கேக்குறா. 

கேக்கவும், சாமியாரு அதுக்குப் பரிகாரஞ் செய்யணும்ண்டு சொன்னாரு. பரிகாரஞ்செய்றதுக்கு என்னா செய்யணும்ண்டு, சாமியாருகிட்டத் திரும்பிக் கேக்குறா. கேக்கவும், அதுக்கு சாமியாரு, 

பத்துநா, இங்க இருந்து பரிகாரத்துக்குச் செய்றதெல்லாஞ் செய்யணும்ண்டு சொன்னாரு. சொல்லவும், அண்ணக்கிருந்து, சாமியாருக்கு நல்ல சாப்பாடு போடுறா. குளிக்கத் தண்ணி, படுக்க வசதி செஞ்சு குடுத்துக்கிட்டிருக்கா. சாமியாருக்கு ஏராளமா வசதி செய்யவும், வீட்டுப் பொம்பளக்கி வேல அதிகமாயிருச்சு. வேலைகளச் செய்ய முடியாமத் தெணர்றா. பத்துநா, நம்மளால தாங்க முடியாது. இவன எப்படிண்டாலும் வீட்ட விட்டு, வெரட்டிரணும்ண்டு திட்டம் போடுறா. 

ஏழெட்டுநா நல்லாத் திண்டுகிட்டிருக்கர். திண்டுகிட்டிருக்கயில, ஒருநா, மதியானத்துல புருச வெளியூருக்குப் போயிட்டா. நல்லா ஆத்ல போயி குளிச்சிட்டு, மதியானச் சாப்பாட்டுக்கு வாராரு சாமியாரு. அண்ணக்கிண்டு நல்லாக் கோழியடுச்சு, கொழம்பு வச்சு ரெடியா வச்சிருக்கா. வச்சிருக்கயில, சாமியாரு வாராரு. இண்ணக்கி எப்படியாச்சும் இவன, வெளிய வெரட்டிரணும்ண்டு ஒக்காந்துகிட்டிருக்கா. அப்பப் பாத்து சாமியாரு வாராரு. 

வரவும், சாப்பாடு போடுறதுக்கு ரெடியாகுறா. எல – கிலயப் போட்டுட்டு, தண்ணி மோந்து வச்சிட்டு, சாப்பாடப் போட்டு, கொழம்ப ஊத்றா. சாமியாரு சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு. சாப்பிட்டுக்கிட்டிருக்கயில, பெரிசா ஒரு ஒலக்கய எடுத்திட்டு வந்து, வாசல்ல வச்சிட்டு, வீட்டுக்குள்ள போறா. 

அப்டி, போறது வாரது, ஒலக்கய எடுத்திட்டுப் போயி வாசல்ல வைக்கிறது, எல்லாத்தயும் பாத்துக்கிட்டிருக்கா. பாத்துக்கிட்டிருந்திட்டு, ஏம்மா ஒலக்கய எடுத்திட்டுப் போயி வாசல்ல வக்கிறண்டு, சாமியாரு கேக்குறாரு, கேக்கயில, அவ என்னா சொல்றாண்டா! அவரு, கோழியடிச்சுக் கொழம்ப வச்சு சாமியாருக்குப் போடச் சொல்லிட்டு, வெளியப் போயிருக்காரு. நீங்க சாப்பிட்டு முடிக்கவும், ஒங்கள இந்த ஒலக்கயக் கொண்டு அடிச்சுக் கொல்லணும்ண்டு சொல்லிட்டு, வெளிய போயிருக்காரு. ரெடியா இருக்கச் சொல்லிட்டுப் போயிருக்காரு. அதா இங்க, நீங்க சாப்பிட்டுக்கிட்டிக்கீருங்க. அங்க, ஒலக்க ரெடியா இருக்கு. எனக்குப் பாவமா இருக்கு. அதனால, அவரு வாரதுக்குள்ள வேகவேகமாச் சாப்பிட்டுட்டுப் போயிருங்க சாமி. வந்தால், கட்டாயமா, இந்த ஒலக்கயக் கொண்டு அடிச்சுக் கொல்லப் போறாருண்டு சொன்னா. 

சொல்லவும், சாமிக்கு கையும் ஓடல, காலும் ஒடல. பயந்து எந்திருச்சாரு. கையுங் கழுவாம சாப்பிட்ட கையோட, எந்திருச்சு, இவளயும் தாண்டி வெளிய ஓடுறாரு. 

என்னாங்க சாமி! சாப்பிடாம ஓடுறீங்க. இருந்து சாப்பிட்டுப் போங்க சாமிண்டு சொல்லிக்கிட்டே, இவளும், வெளிய வாரா. சாமியாரு என்னா? ஏதுண்டு கேக்காம வடக்கால ஓடுறாரு. 

அதே நேரத்ல, புருச, தெக்கயிருந்து வந்து, வீட்டுக்குள்ள நொளயிறா. அப்ப, சாமியாரு ஓடுறாரு. இவ-வடக்க பாத்தவாக்ல நிக்கிறா. அப்ப, நம்ம கருப்பசாமி கோயிலப் போல சாமியாரு ஓடுறாரு. இவ்,வீட்டுக்குள்ள மொளஞ்சவ், என்னா? சாமியாரு ஓடுறாருண்டு, இவகிட்டக் கேட்டா. கேக்கவும், அவ, வாசல்ல ஒலக்கயக் காமுச்சு, இந்த ஒலக்கயக் கேட்டாரு. நா தரமாட்டே. குத்தக் குலுக்க, இது ஒண்ணுதா இருக்குண்டு சொன்னே. அதுனால, கோவுச்சுக்கிட்டுச் சாமியாரு போறாருண்டு சொல்லி ப்பிட்டா. 

இதுக்குப் போயா கோவுச்சுக்கிட்டுப் போறாரு. நிய்யி ல்ல, தந்திர வேண்டியதுதானேண்டு, இவளப் புடிச்சு வஞ்சிட்டு, ஒலக்கயக் கையில எடுத்துக்கிட்டு, சாமியத் தொயந்துகிட்டு ஓடுறா. யாரு? புருச. 

அப்ப, ஊரக்களிச்சு வந்திட்டோம்ல்ல, இனியாரு வரப் போறாண்டு நெனச்சு, லேசாப் பின்னால் திரும்பிப் பாத்தாரு சாமியாரு. பாக்கயில, இவ் ஒலக்கய கொண்டுகிட்டு வாரது தெரியுது. சாமி திரும்பிப் பாக்கவும், சாமி! இந்தாங்க ஒலக்க, ஓடாதீங்க! நில்லுங்கண்டு ஒலக்கயத் தூக்கிக் காமுச்சுக்கிட்டு வேகமாத் தொயந்து ஓடுறா. ஓடியாரவும், சாமிக்கு இருப்புக் கொள்ளல, இலக்கய எடுத்துக்கிட்டு அடிக்கத்தா வாராண்ட்டு, உசுரக் கையில புடிச்சுக்கிட்டு ஓடுராரு. அவனும் ஓட, அவரும் ஓட, ஊருக்காரங்க வேடிக்க பாத்தாங்களாம். 

ஒலக்கயக் குடுக்கலண்டு சொல்லவும் சாமியாரு கோவத்ல போறாரு. போயி, ஏதாச்சும் சாபம் போட்டுருவாருண்ட கவலயில இவ் ஓடுறா. இவங்கிட்டச் சிக்குனா சட்னிய எடுத்திருவர் போலண்ட்டு, இவங்கிட்டயிருந்து எப்டியாச்சும் தப்பிக்கணும்ண்டு, சாமியாரு ஓடுறாரு. 

ஒருத்த உதவி செய்ய ஓடுறா. ஆமா, ஒருத்தி உசுருக்குப் பயந்து ஓடுறா. ஆமா! உசுருக்குப் பயந்து ஓடுறவன, உதவி செய்ய ஓடுறவ் புடிக்க முடியுமா? புடிக்க முடியல. ஒலக்கயக் கொண்டுகிட்டுத் திரும்பி, வீட்டுக்கு வந்தானாம். பொம்பள எப்டித் தந்திகாரிண்டு பாரு. எல்லாமே பொம்பளக்குள்ள இருக்கு. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *