உன் கண்ணில் நீர் வழிந்தால்….
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 77
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 13

குமார் ஸ்கூட்டரை வாசலில் நிறுத்திவிட்டு படி ஏறியபோது ஹரி வராண்டாவில் உட்கார்ந்திருந்தான்.
மனைவி இல்லை.
“அம்மா எங்கே ஹரி..?” அருகில் அமர்ந்தான்.
“சந்தானம் மாமா வீட்டுக்குப் போயிருக்காள்.”
“ஏன்..?”
“அவரோட பையனுக்குத் தேள் கொட்டிடுச்சாம். அவன் அம்மா வந்து சொன்னாள். இவளுக்குத்தான் வண்டி ஓட்டத் தெரியுமே அதனால் அம்மா அவனையும், அவளையும் அழைச்சுக்கிட்டு மருத்துவமனைக்குப் போயிருக்கா.. அப்பா..!”
“என்ன கண்ணு…?”
“ஒரு சந்தேகம்!”
“என்ன..?”
“சேகர் மாமா என்னைப் பார்க்கத்தானே தினம் இந்த வீட்டுக்கு வர்றார்..?”
“ஆமாம். அதுக்கென்ன…?”
“பக்கத்து வீட்டுப் பாட்டி என்னைப் பார்க்க வரலை. அம்மாவைப் பார்க்க வர்றார்ன்னு சொல்றா…?”
“அப்படியா சொல்றா..?”
“அது மட்டுமில்லே. அம்மாவை அவர் ஏன் பார்க்க வரனும்..? கேட்டேன். அதுக்கு அவள்…. அதெல்லாம் ஆண் பெண் சமாச்சாரம் உனக்குப் புரியாது சொன்னாள்.”
“அப்படியா..?!”
“ஆமாம். அப்புறம் அந்த பாட்டி சுசிலா ஆண்டி, சரோஜா ஆண்டிகிட்டேயெல்லாம்… நம்ம வீட்டைப் பத்தி குசுகுசுன்னு சொல்றாள். ஒன்னும் விளங்கலை” என்றான்.
ஆக… தெரு காறிமொழிகிறது! – இவனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது.
இனி ஊர் ஆயிரம் சொல்லுமென்று ஒதுக்கக் கூடாது. வெட்ட வேண்டும்! குமார் தீர்மானத்திற்கு வந்தான்.
மருத்துவமனையிலிருந்து திரும்பிய சுமதி வாசலில் கணவன் வண்டி நிற்பதைப் பார்த்து துணுக்குற்றாள்.
‘காபி கூட இல்லையே.!’ அவசர அவசரமாக தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.
ஆளைப் பார்த்ததுமே குமாருக்குள் ஆத்திரம் வெடித்தது.
‘அடங்கு!’ அடக்கினான்.
“பையன் எப்படி இருக்கான்..?” கேட்டான்.
“ஊசி போட்டதும் வலி கொறைஞ்சிடுச்சி. நல்லா இருக்கான்.” சொல்லி அடுப்படி நோக்கி நகர்ந்தாள்.
“ஒரு விசயம் சுமதி!”
“என்ன…?”
“சேகர் இனி நம்ம வீட்டுக்கு வர வேணாம்..!”
“ஏன்…?”
“தெரு தப்பாப் பேசுறாப்போல தோணுது…”
“அது ஆயிரம் பேசும்…!”
“எனக்குப் பிடிக்கல…”
“நான் வழிக்கு வரலை என்கிறதுனால இப்படி ஒரு அபாண்டமா..?”
“வாக்குவாதம் வேணாம் சுமதி. சேகர்க்கிட்ட விசயத்தை நீ சொல்லலைன்னா நான் சொல்லுவேன்!”
“குமார்!” அதிர்வாய்ப் பார்த்தாள்.
“சேகர் உன் காதலன்.”
“….”
“திருமணத்துக்கு முன்னாடியே மாமா எல்லா விபரமும் சொல்லித்தான் எனக்கு உன்னைத் திருமணம் முடிச்சார். அதுமட்டுமில்லாம… அவன் ரொம்ப நல்லவன். நல்லது கேட்டது எடுத்துச் சொன்னதும் உடனே புரிஞ்சிக்கிட்டு… விலகி விட்ட புத்திசாலின்னும் சொல்லி நல்ல அபிப்பிராயம் சொன்னதால நானும் நம்பி இப்போ பழவிட்டேன். அப்படி பழக விட்டதாலும் தப்பு நான் சொல்லல. ஆனா… நம்மைச் சுத்தி உள்ளவங்க அப்படி பேசுறாங்க. அதை ஏன் நாம அனுமதிக்கணும்..?”
“மக்கள் மேல இப்படி பழி போடுறதை விட… நீங்க என்கிட்டே நேரடியா விவாகரத்தே கேட்டிருக்கலாம்..!”
“இது தப்பு சுமதி! நான் பொறுமையாய் சொல்றதுக்கு இது பதில் இல்லே.”
“நீங்க சரி இல்லே!”
“சுமதி!” எவ்வளவு நேரம்தான் இவனால் பொறுமையாக இருக்க முடியும்…? தான் குற்றவாளி என்று நேரடியாக கை காட்டும் போது எவரால் பொறுத்துக் கொள்ள முடியும்..? அவ்வளவுதான்! ஆத்திரம் கண்ணை மறைக்க…. எழுந்து ‘பளார்!’
சுமதி இதை எதிர்பார்க்கவில்லை. பொரி கலங்கியது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.
அத்தியாயம் – 14
‘காலையிலேயே சேதியை சொல்லிவிட வேண்டும்!’ என்று நினைத்து பணிக்குக் கிளம்பிய சேகர்…
வழக்கம் போல் சுமதி வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி படி ஏறினான்.
வழக்கத்திற்கு மாறாக கதவு சாத்திய இருக்க… அழைப்பு மணி அழுத்தினான்.
சுமதி திறந்தாள்.
அழுத சுவடு…கலக்கம்… கன்னம், கண்கள் வீங்கி இருக்க…
“என்ன சுமதி..?” துணுக்குற்றான். கலவரமாகப் பார்த்தான்.
“உள்ளே வாங்க சொல்றேன்…”
சென்றான்.
ஹரி நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
எதிரில் அமர்ந்த சுமதி வழிந்த நீரைத் துடைத்தாள்.
“என்ன ஹரி நடந்தது…?”
“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை”
“அம்மா கன்னம் வீங்கி இருக்கு. அப்பா அடிச்சாரா…?”
“ம்ம்ம்….”
“என்ன சுமதி…?”
“எனக்கொரு உதவி செய்யனும்…”
“சொல்லு..?”
“என்னையும் ஹரியையும் பேருந்து ஏத்தி விடனும்…”
“எங்கே..?”
“அப்பா வீட்டுக்குப் போறேன்.”
“ஏன்…?”
“இனி இந்த வீட்டில ஒரு நிமிசம் வாழ முடியாது!”
“கணவன் மனைவிக்குள்ள சண்டை வர்றது சகஜம். என்ன நடந்தது சொல்லு…?”
“…”
“குமார் அடிக்கிற அளவுக்கு உங்களுக்குள்ள என்ன தகராறு சொல்லு…?”
“ஒன்னும் சொல்றாப்போல இல்லே. நான் அங்கே போய் கொஞ்ச நாளாவது இருந்து திரும்பனும்…”
“அதுக்கான நேரம் இது இல்லே சுமதி…”
“…”
“நீ வீட்டை விட்டுப் போனால் குமாருக்கு ரொம்ப துளிர் விட்டுடும்.”
“புரியல…?”
“நீ கணிச்சது சரி. நேத்து குமாரோடு ஒருத்தியைப் பார்த்தேன்…”
“அவர் அவகூடவே வாழட்டும். நான் கிளம்பறேன்.”
“பொறு சுமதி!”
“நீங்க என்னை ஏத்திவிடலைன்னா நானே கிளம்பறேன்!”
‘விட்டுப் பிடித்தால்தான் சரி வரும்!’ – சேகருக்குத் தோன்றியது.
“சரி. புறப்படலாம். நம்ம ஊருக்கு ஒரு மணிக்கு மேலதான் பேருந்து. நான் பள்ளிக்கூடத்துக்குப் போய் விடுப்பு சொல்லிட்டு வர்றேன்.” எழுந்தான்.
அலுவலகம் புறப்பட்டு வந்த நுழைந்த குமாருக்கு அங்கு செல்ல பிடிக்கவில்லை.
கை பேசியில் அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு பாரதி பூங்கா வந்தான்.
கைபேசி எடுத்து…
“நிர்மலா..!” அழைத்தான்.
“சொல்லுங்க…?”
“நான் அரை நாள் விடுப்பு. நான் பாரதி பூங்காவுல இருக்கேன். வர முடியுமா..?”
“…”
“ஒரு அவசரம் உன்னிடம் பேசனும்…”
“சரி வர்றேன்!” மறுப்பு சொல்லாமல் கிளம்பினாள்.
இவளும் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தாள்.
“என்ன சார்..?” கேட்டு எதிரில் அமர்ந்தாள்.
நடந்தது சொன்னான்.
“தப்பு பண்ணிட்டீங்க சார். நீங்க கை நீட்டி அடிச்சது தப்பு!”
“ஆத்திரம் கொஞ்சம் அதிகமா போச்சு…”
“அதுக்காக….”
“சரி வீண் பேச்சு வேணாம். அடுத்து என்ன செய்ய…?”
“உடனடியா போய் மன்னிப்பு கேளுங்க..”
“நிர்மலா…!” பரிதாபமாகப் பார்த்தான்.
“கணவன் மனைவிக்குள் உசத்தி, மட்டம் வேணாம். ஆண் பெரியவன். பெண் அடங்கியவள் என்கிற ஏற்றத்தாழ்வு வேணாம். சரி சமம். மன்னிப்புக் கேளுங்க…”
“நிர்மலா…” மறுபடியும் தயவாய்ப் பார்த்தான்.
“உங்களுக்கு மன்னிப்புக் கேட்க கஷ்டமா இருந்தா நானும் கூட வர்றேன்!” சொன்னாள்.
‘எடுத்துச் சொல்ல வசதியாய் இருக்கும். பெண்ணுக்குப் பெண் சமாதானம் செய்ய சரி!’ – நினைத்த குமார் …
“சரி” தலையசைத்தான்.
அத்தியாயம் – 15
சேகர் கையில் சூட்கேஸ். ஹரியைப் பிடித்துக் கொண்டு சுமதி. இவர்கள் வாசலுக்கு வரவும்… குமாரும் நிர்மலாவும் ஆளுக்கொரு வண்டியில் அங்கு ஆஜராகவும் சரியாக இருந்தது.
இவர்களை இந்த நிலையில் பார்த்ததும்…. குமாருக்கு உடலும், உள்ளமும் பற்றி எரிந்தது.
“என்ன…! வீட்டை விட்டு ஓட திட்டமா..?” பதறி மனைவியைத் தாவிப் பிடித்தான்.
நல்லவேளை நிர்மலா சுதாரித்து அவனைப் பற்றி இழுத்தாள்.
“விடு நிர்மலா! எப்போ வீட்டை விட்டு ஓடிப்போற அளவுக்கு வந்துட்டாங்களோ… சும்மா விடக்கூடாது!” முரண்டினான்.
‘ஓடப் பார்க்கிறோமா…?!’ திகைத்த சுமதி…
“ஓடப் பார்க்கிறோமா…?! நிறுத்துங்க உங்க கோணல் புத்தியை!” கத்தினாள்.
“என்ன சொன்னே..? எனக்கா கோணல் புத்தி..?” சீறினான்.
“ஆமாம் உங்களுக்குத்தான்!. காதலியோ, கள்ளப் பொண்டாட்டியோ… வீடு வரைக்கும் அழைச்சு வந்திருக்கீங்களே… உங்களுக்குத்தான் அந்த கோணல் புத்தி!”
இவளும் விடாமல் சீறினாள்.
கேட்ட நிர்மலாவிற்குப் பொரி கலங்கியது. தூக்கிவாரிப்போட்டது.
‘இவள் தங்களைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளாள்!’ – புரிந்தது.
குமாருக்கும்…. ‘அபாண்டம்!’ தாங்கிக்கொள்ள முடியவில்லை. முகம் ஜிவு ஜிவு என்று சிவந்தது.
“எங்களைப் பத்தி தப்பா பேசினே… நாக்கு அழுகிடும்!” சாடினான்.
“என்ன…என்ன…”
“இவ என் கூடப் பிறக்காத தங்கச்சி!”
சேகருக்கும் அப்போததுதான் தன் தவறு தெரிந்தது
“ப்ளீஸ்! குமார் பொறுங்க…” இடையில் புகுந்தான்.
“நீ அந்தண்டை போடா நாயே..!”
“குமார்! ஆவேசம் வேணாம். ஆத்திரம் வேணாம்.” நிர்மலாஅடக்கினாள்.
“அவ… நாக்குல நரம்பில்லாம உன்னைப் பத்தி என்ன சொன்னாள் கேட்டியா..?”
“சொல்லட்டும். நாம பழகினது போல அவுங்களும் பழகி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்!” சொன்னாள்.
அப்போததுதான் குமாருக்கும் பட்டென்று புத்தியில் உரைத்தது.
“ஆமாம். அப்படித்தானிருக்கும்! வாங்க உள்ளாற உட்கார்ந்து பொறுமையா பேசலாம்!” நிர்மலா சொன்னாள்.
எல்லோரும் அமைதியாய் உள்ளே சென்றார்கள்.
உடன் பிறவா தங்கை என்று சொன்னதும் சுமதி மனம் அமைதியானது.
குமார் மனதில் இடையில் புகுந்த சாத்தானும் நிர்மலா சவுக்கால் வெளியேற…அவனும் அமைதியானான்.
எல்லாரும் நடந்தது பேசினார்கள்.
குமார் அடித்ததிற்காக தன் மனைவி சுமதியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டான்.
சுமதியும் நிர்மலாவிடம் மன்னிப்புக் கேட்டாள்.
எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ஹரி…
“இந்த பிரச்சனைக்கெல்லாம் முக்கிய காரணமே நான்தான்!” என்றான்.
“இல்ல ஹரி…” சுமதி எதுவோ சமாதானம் சொல்ல வந்தாள்.
“இல்லே நான்தான் காரணம். எனக்குத் துணை வேணும், வேணாம்ன்னு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கரிசனம். இடையில் வந்து என் மீது மோதிய சேகர் மாமாவுக்கு எங்க ஒட்டு மொத்த குடும்பத்து மேலும் பாசம். விளைவு…. கோளாறு! இந்த சிக்கலெல்லாம் தீர ஒரே ஒரு வழிதான் இருக்கு. நான் சொன்னத்தை ஏத்துக்கிட்டீங்கன்னா மொத்த கோளாறும் கண்டிப்பா தீரும்!” சொன்னான்.
“என்ன…?” நிர்மலா கேட்டு அவன் முகத்தை அவளாகப் பார்த்தாள்.
மற்றவர்களும் அவனை அப்படியே பார்த்தார்கள்.
“நிர்மலா ஆண்டியும் சேகர் அங்கிளும் கலியாணம் முடிச்சி எனக்கு ஒரு துணை கொடுத்தால் எல்லாம் சரியாகப் போகும்!” சொன்னான்.
‘என்ன ஒரு வழி…! சுமுகமான டீ தீர்வு?! ‘ மூக்கின் மேல் விரல் வைக்காத குறையாய் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
“என்ன சம்மதமா…?” ஹரி திரும்ப கேட்டான்.
“சரி.” சேகர் சொன்னதும்…
சேகரும் நிர்மலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கப்பட்டார்கள்.
சுமதியும் குமாரும் மலர்ச்சியாய் சிரித்தார்கள்.
(முற்றும்)
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
என் உயிரே… மயூரி..!
ஜூனியர் தேஜ்
April 25, 2026
உன் கண்ணில் நீர் வழிந்தால்….
காரை ஆடலரசன்
April 21, 2026
