உந்தன் நிழலாய் நானடி தோழி…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2026
பார்வையிட்டோர்: 241 
வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

ரயில்வே  ஸ்டேஷன் வாசலில் வந்து நின்றது மாட்டுவண்டி.

வண்டியிலிருந்து இறங்குவது சற்று சிரமமாகவே இருந்தது சாருவுக்கு.

எப்படியோ இறங்கியவளை ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்றான்  வண்டிக்காரன்.

தன்னை பம்பாய்க்கு அழைத்துச் செல்லவிருந்த வர்களை அடையாளம் கண்டு கொண்டாள் சாரு. 

அவர்களும் சாருவைத் தெரிந்து கொண்டார்கள்.

சாரு..சாருதானேம்மா ஒம்பேரு..அந்தப் பெண் கேட்டாள்.

ஆமாம் மாமி எம் பேரு சாருலதா..சாரும்பா என்றாள் சாரு.

மாமின்னு கூப்டாத இனிமே என்ன ஆன்ட்டினு கூப்புடறியா?சிரித்தாள் அந்தப் பெண்.

ம்..லேசாயைப் புன்னகைத்தாள் சாரு..சரி கூப்படறேம் மாமி..ம்ஹும்..ஆன்ட்டி என்றாள்.

அந்த.. தியாகு என்ற பெயர்கொண்ட ஆணும் மீனலோச்சனி என்ற பெயர்கொண்ட பெண்ணும் சிரித்தார்கள்.

வண்டிக்காரன் போய் விட்டான்.

சாரு..நீ மட்டும் தனியா வந்திருக்க?அப்பா அம்மா யாரும் வல்ல?

அப்பிடியாரும் எனக்கு இல்ல

ஆன்ட்டி.தயக்கமின்றி சாருவின் வாயிலிருந்து பதில் வந்தது.

அயர்ந்துபோனார்கள் அக்கணவனும் மனைவியும்.

சாருவின் நிலைமை புரிந்து போனது அவர்களுக்கு.

சாப்டியா?

ம்..என்றபடி தலை குனிந் தாள் சாரு.

ரயில்வர நேரமிருக்கு சாப்டு..

மணி ஒன்னேகால்தா ஆறது.

ரெயில்வே காண்ட்டீனில் அந்த நேரத்தில் ரவா உப்புமாவும் காபியும் மட்டுமே கிடைத்தது.

ங்கீ..ங்கீ.. லேசான அழுகையும் சிணுங்கலும் கொஞ்சம் தீனமாய்க்கேட்டது. அந்தப் பெண்ணின் மடியிலிருந்த துணிக் குவியலுக்குள்ளிருந்து.

ராஜு செல்லம் எழுந்துண்ட் டானா? ராஜுக்குட்டீ..ராஜு செல்லம் என்றபடி துணிகளை விலக்கிவிட்டு குழந்தையை நோக்கிக் குனிந்தாள் மீனலோச்சனி எனும் அந்தப் பெண்.

பாப்பாவா ஆன்ட்டி என்று கேட்டபடி தானும் குழந்தையைக் குனிந்து பார்த்த சாரு சற்று அதிர்ந்துதான் போனாள்.

ஆண் குழந்தை.குழந்தை ரொம்பவும் மெலிந்திருந்தது. சோர்வாய்த்தெரிந்தது.

ஆங்கில எழுத்து “ஓ” போல் வாயைத்திறந்து அழுத குழந்தையின் நாக்கும் உதடுகளும் லேசாய் ஊதாக்கலராய்த் (நீலம்) தெரிந்தது. ஆங்காங்கே உடலின் நிறமும்.. கைவிரல் நகங்களும் நீலமாய்த் தெரிந்தன.

என்னது கொழந்த இப்பிடிருக்கு நினைத்தவ சாருவுக்கு..

அது ப்ளூபேபி சிண்ட்ரோம்..

ப்ளூ ஹார்ட் டிஸீஸ்..பிறவிக் குறைப்பாட்டு நோய்.. ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு தேவையான அளவு இல்லாது போனால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுமென்றோ.. அக்குழந்தைகள் எடை குறைவாய்க் காணப்படுமென்றோ.. அவ் வப்போது நுரையீரல் ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து போகும் போது மூச்சுத்திணறும் என்பதோ..

நய்நய்யென்று அழு மென்றோ..சரியாய் உணவு உட்கொள்ள முடியாதென்றோ தெரிந்திருக்க நியாயமில்லை.

சட்டென சீனுவின் ஞாபகம்வந்தது.அவனுக்கும் ஒன்ர வயசுதானே ஆறுது?

அவ இப்பிடீல்லாம் இல்லையே என்று தோன்றியது.

சாரு..பாப்பாக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்ல..அதா இப்பிடி..அதற்குமேல் எதுவும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள் லோச்சனி.

பாப்பாவ நீ பாத்துப்பியா?ஆர்வமுடன் சாருவின் முகம்பார்த்தாள்.

பாத்துப்பே ஆன்ட்டி தம்பிய என்றாள் சாரு சிறிதும் தயங்காமல். நா மடீல வெச்சுக்கவா?

வெச்சுக்கிறியா? பாத்ரூ போய்ட்டு வந்துர்றே.. ட்ரெயின் வந்துடும் பத்து நிமிஷத்துல..

ம்..வெச்சுக்கிறேன்..சொல் லிக்கொண்டே தரையில் அமரப்போனவளை.. ஏ தரேல ஒக்கார்ர?சிமெண்ட் பென்ச்லயே ஒக்காரே.. என்றாள் லோச்சனி.

இல்ல ஆன்ட்டி..சிமெண்ட் பென்ச் குறுகலாருக்கு..

தம்பிய மடீல வெச்சுண்டு விளிம்புல ஒக்காந்தா..தம்பி உருண்டு கீழ விழுந்துட்டா?

எம்மாடி எவ்வளவு யோஜன ஜாக்கிரத..பாருங்கோ சாருவ..என்றாள் கணவன் தியாகுவிடம்.

ஆமா..பாத்தே..குட் கேர்ல் என்றான் தியாகு.

அது முதல் வகுப்புப்பெட்டி.

ஏசி வேறு.

சாரு ரயிலையே அதிகம் பார்த்ததில்லை.அவளுக்கு

ட்ரெயினும் ஏசியின் ஜில்லிப்பும் புது அனுபவமாக இருந்தது.

ட்ரெயினிலும் கீழே அமர்ந்து குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொண்டாள்.

குழந்தையின் தலையிருக் கும் தொடைப்பகுதியை லேசாக மேலும் கீழும் அசைத்துக் கொண்டேயிருக்க அழுகையோ சிணுங்கலோ இல்லாமல் தூங்கியது குழந்தை.

விமான நிலையம். அந்த பரபரப்பும்.. ஓயாத அறிவிப்பு களும் விமானங்கள் எழுப்பும் ஒலியும் சாருவை பிரமிக்க வைத்தன.

விமானமொன்று வானில் பறப்பதைக்கண்ட சாருவுக்கு ஊரில் எப்போதாவது  மினுக் மினுக்கென விளக்குகள் எரிய சப்தமெழுப்பியபடி  வெகு உயரத்தில் பறந்து செல்லும் விமானத்தை..

ஏய்..ஏய்..ஏரோப்ளேன்..ஏரோப்ளேன் பறக்கறது பாரு பறக்கறது பாரு  என்று  கத்தியபடி வீட்டுக்குள்ளி ருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்து ஆ வென்று வாயைப்பிளந்து கொண்டு.. வானத்தில் நீந்திச் செல்லும் விமானத்தை தெருக் குழந்தைகளெல்லாம்  அண்ணாந்து பார்க்கும் நிகழ்வு நினைவுக்கு வந்தது சாருவுக்கு.

ரேவியோட சேந்து நின்னுண்டு பாப்போமில்ல என்று நினைத்துக் கொண்ட போது கண்களில் நீர் திரண்டது.ரேவீ என்றது மனது.

ஃப்ளைட்டிலிருந்து இறங்கி பம்பாய் மண்ணில் கால்களை வைத்தாள் சாரு.

பம்பாய் எனும் காஸ்மோபாலிடன் நகரம் தன் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றப்போகிறது என்பதை பத்து வயது சாரு எப்படி யறிவாள்?

பம்பாய் மாநகரம் சாருவுக்கு எப்படியான மாற்றங்களைத் தரப்போகிறது?

விரைவாக ஓடப்போகும் காலம் சாருவுக்கு விடிவைத் தருமா?

அத்தியாயம் – 11

சாண்டாக்ரூஸ் சர்வதேச விமானநிலையம்.

யம்மாடீ என்ன இப்பிடி இருக்கு?கண்கள் விரிந்து கொண்டே போனது வியப்பில் சாருவுக்கு..

சின்ன கிராமத்தைத்தாண்டி எங்கும் சென்ற அனுபவம் கிடையாது.

நாகு.. சாருவை வாசலில் தோழிகள் விளையாடு வதைத் திண்ணையில் அமர்ந்து கூட பார்க்க அனுமதித்ததில்லை.

அப்படியிருக்க எங்கே.. அங்கே இங்கே.. போன அனுபவம்.. பார்த்த அனுபவம் கிடைக்க?

சினிமா..சர்க்கஸ்..திருவிழா..

கோவில்ல பொம்பலாட்டம் எல்லாம்தான் உண்டு.. ஆனாலும் நாகு.. தான் மட்டுமே போவாளேயன்றி எதற்கும் சாருவை அழைத் துச் செல்ல மாட்டாள்.

வீட்டைவிட்டால் சாருவுக்கு எதுவும் தெரியாது.

பத்துவயதுக் குழந்தைக்க ளுக்கான எந்த அனுபவமும் அவளுக்குக் கிட்டியதில்லை.

ஆனால் கனவிலும் நினைத்துப்பார்க்காத..வெளியுலகில் இபடியெல்லாம் இடங்கள் இருக்கின்றன என்று நினைக்கவே தெரியாத சாருவுக்கு அந்த விமான நிலையமே பெரும் அதிசயமாகத்தெரிந்தது.

விமான நிலையம்  விட்டு வெளிவந்தாயிற்று..

விரையும் வாகனங்கள் விதவிதமான ஆடைகளிலும் அலங்காரங்களிலும் கூட்டம் கூட்டமாய் ஜனங்கள்.. பெரிய பெரிய கடைகள்.. தமிழில் லாமல் வேற்று மொழியில் பேசிக் கொள்ளும் பேச்சுக்கள்..

தெரிந்த நடிகர்கள் நடிகைகள் இல்லாமல் புதுப்புது முகங்களைக் கொண்ட சினிமா விளம்பரத் தட்டிகள்.பிரமிப்பின் உச்சிக்கே சென்றாள் சாரு.

அச்சூழல் சாருவின் நெஞ்சில் சிறிது பயத்தையும்..தவிப்பையும் ஏற்படுத்தியது.ஊருக்கே போய்டலாமா?பயமான்னா இருக்கு என்று தோன்றியது.

பயம் முகத்தில் வந்து நின்றது. 

சாருவின் மனதில் ஓடும் எண்ணங்களை அவள் முகம் எடுத்துக்காட்டியாதோ லோச்சனிக்கு?

தபாரு சாரு..பயமாருக்கா..

பம்பாயபாத்தா?பயப்படாத..மொதல்ல அப்பிடித்தா இருக்கும். நானும் கிராமத்துலேந்து மொதமொதல்ல இங்க இந்த பம்பாய்க்கு வந்தப்ப பயந்துதா போனே.

பதினெட்டு வயசுக்கு இங்கவந்த எனக்கே பிரமிப்பா பயமாயிருந்து துனா. பத்துவயசு ஒனக்கு எப்பிடிருக்கும்?.பயமாத்தா இருக்கும்.பழகிப்பேடும் பயப்படாத..

ம்..சரி ஆன்ட்டி..பயத்திலும் மிரட்சியிலும் ஒட்டிப்போன உதடுகளை மெல்லப்பிரித்து பதில் சொன்னாள் சாரு.

டாக்சியில் வீடுவந்து சேரும்வரை ஜன்னல் வழியாக வெளியே பார்ப்ப தும் உள்ளே கழுத்தைத் திருப்பி குழந்தையைப் பார்ப்பதுமாய் இருந்தாள்.

அடுக்குமாடி குடியிருப்பில் ஓர் போர்ஷன்.விஸ்தாரமாய் நன்றாகத்தான் இருந்தது. லிஃப்டில் ஏறியிறங்கும் அனுபவம் புதிதாய் இருந்தது.நல்லவேள அஞ்சாவது மாடிக்கு ஏறிவரணும்னா நாம எப்பிடி நம்மகால வெச்சுண்டு படியேறி வரமுடியும்?இதுல ஏறி நின்னாக்க ஆத்து வாசப்படீல கொண்டு விட்டுர்றதே..இதுக்குப் பேரு என்ன?என்னமோ சொன்னாளே?..லிஃப்ட்.. லிஃப்ட்.. 

சாருவுக்கென்று தனியாக வெல்லாம் ரூம் கொடுக்கும் வசதியில்லாததால் பொதுவான ஒரு அறை யிலிருந்த கப்போர்டு மட்டும் அவளுக்கென ஒழித்துக் கொடுக்கப்பட அதில் தன் பெட்டியை வைத்துக் கொண்டாள் சாரு.

முதல் ஒருவாரம் புதிய சூழ்நிலைக்கு மனம் பழகாததால் ஒருமாதிரி உணர்ந்தாள் சாரு.

பம்பாய் திரும்பிய அந்த நாள்மட்டும் வீட்டிலிருந் தார்கள் தியாகுவும் லோச்சனியும்.

மறுநாள் இருவரும் ஆபீஸ் கிளம்பிவிட்டார்கள்.

குழந்தை ராஜுவுக்குக் கொடுக்கவேண்டிய ஆகாரம் மருந்து பற்றியெல்லாம் சாருவுக்கு அவளின் மனதில் பதியும்படி சொல்லிக் கொடுத்தார்கள்.

ஏற்கனவே ராஜுவப் பாத்துக்க ஒருபாட்டி இருந்தாங்க..அவங்க ஒடம்பு முடியல.. நின்னுக்கறேன்னு சொல்லிட்டா.. ஒரு வருஷமா அவுங்கதா பாத்துக் கிட்டாங்க..வேற நம்பகமான ஆளு யாரும் கெடைக்கல..

அதாஞ் சாரு ஒன்ன அழச்சிண்டு வராப்ல ஆயிடுத்து.ஒம்படிப்பக் கெடுத்துக் கூட்டிட்டு வந்ததா நெனைக்காத..

இங்கயும் தமிழ்க்காரா நடத்தர ஸ்கூல் இருக்கு.

அஞ்சாவதுக்கான எல்லா புக்கும்..நோட்டும் வாங்கித் தரோம்.

பாப்பா தூங்கரநேரத்துல நீ படி..என்ன? வருத்தப்படாத.. என்று சொன்னவர்கள் சொன்னபடி செய்தார்கள்.

பகலில் ராஜுவைப் பார்த்துக் கொள்வதும் அவன் தூங்கும் நேரத்தில் படிப்பதுமாய் பழகிக்கொண்ட சாருவுக்கு ரேவதியின் நினைப்பு வாட்டித்தான் வதைத்தது.

ஒருவாரமாய் புதிய இடத்தின் சூழ்நிலைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருந்தவளுக்கு சூழல் பழக ஆரம்பிக்க.. தோழியின் நினைப்பு அதிகமாக எழ ஆரம்பித்தது.

ரேவி என்று உதடுகள் உச்சரித்து உச்சரித்து கண்களைக் கலங்க வைத்தது.

ரேவி..வண்டீல கடசியா ஒன்ன ஒருதர பாத்துட்டு ஏறினப்பறம்..நீ சாரூ..சாரூனு காத்திண்டே வண்டிபின்னாடி ஓடிவந்தியேடி..ஒன்ன நா திரும்பிக்குட பாக்காம கல்லுமாரி வேறபக்கமே பாத்துண்டு ஒக்காந்திருந் தேனேடி..

ரேவி..சத்தியமா வேணுண்ணே அப்பிடி செய்யலடி..ஒன்னப்பாத்தா வண்டீலேந்து குதிச்சிடு வேனோன்னுதாண்டி ரேவி ஒன்னப் பாக்கல..அப்ப நா அழுதிண்ருந்தே தெரியுமா?

ரேவி..நீ என்னடி பண்ற..

ஸ்கூலுக்குப் போறியா?ஒம்பக்கத்துல யாருடி ஒக்காந்துக்கறா க்ளாஸ்ல..

அது என்னோட எடம்ல?..

ஒன்ன நெனச்சு நெனச்சு நா அழறே..நீயும் என்ன நெனச்சு நெனச்சு அழறியா?அழாதடி ரேவி.

சாமிக்குக்கூட நாம ஃப்ரெண்டா ஒன்னா இருக்குறது புடிக்கலயாட்டம் இருக்குடி..அதா நம்மள பிரிச்சிடுத்து.

எம் மனசுலேந்து அதால..அந்த சாமியால ஒன்னப் பிரிக்கவே முடியாதுடி ரேவி.

ரேவி..ஒன்னோட குச்சிடப்பாவ..பென்சில் டப்பாவ வண்டீல நா இருக்கும்போது எம்மடீல தூக்கிப் போட்டப்ப.. நா சட்டுனு ஒன்னத்திரும்பிப் பாத்தேண்டி..நீ முதுகக் காம்சிண்டு திரும்பி ஆத்துக்கு ஓடினடி..

நீ எம்மடீல தூக்கிப்போட்ட மஞ்சகலர் டப்பாவ இப்பதாண்டி பாக்கப்போறே ரேவி..

கப்போர்டிலிருந்த பெட்டி யைத்திறந்து அந்த மஞ்சள் நிற தகர டப்பாவை மெதுவாய் எடுத்தாள்.

கையிலிருக்கும் டப்பாவைப் பார்க்கமுடியாமல் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

பெட்டில் தூங்கும் குழந்தை ராஜுவை எட்டிப் பார்த்தாள்.தூங்கறான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டே பெட்டுக் கருகிலேயே சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். 

மெல்ல மடியில் தகர டப்பாவை வைத்து இடதுகையால் டப்பியைப் பிடித்துக்கொண்டு வலது கை கட்டை விரலால் டப்பாவின் மூடியை நெம்பித்திறந்தாள்.

திறக்கப்பட்ட டப்பாவின் உட்புறம் மேலாம்படி இருந்தது அந்த கோடுபோட்ட நான்காய் மடித்து வைக்கப் பட்டிருந்த சின்னபேப்பர். 

சின்னக்கைகள் நடுங்கின.

நாலாய்மடித்து வைக்கப் பட்டிருந்த பேப்பரை எடுத்து மெல்லப் பிரித்தாள்.

ரேவதி எழுதியிருந்த வரிகளைப்படிக்கப்படிக்க கண்கள் கண்ணீரில் நீந்தின. ஹூ.. ஊ.. தாறுமாறாய்க் குரல் உடைந்து வாய்விட்டு அழ ஆரம்பித்தாள் சாரு.

ஏற்கனவே எழுதும்போதே ரேவதியின் கண்ணீர்.. எழுத்து வரிகள் மீது பட்டுத்தெறித்து சில எழுத்துக்கள் லேசாய்க் கலைந்திருக்க..கலைந்தி ருந்த எழுத்துக்கள் மீது சாருவின் கண்ணீர்த் துளிகளும் விழுந்தன.

அழுததால் மூக்கு ஒழுக..

மூக்கை உறிஞ்சியதால் சளியும் கண்ணீருமாய்ச் சேர்ந்து தொண்டையில் போய் நின்றது. கண்கள் எரிச்சலாய் எரிந்தன.

ரேவி ஏண்டி இப்டீல்லாம் எழுதிருக்க?அழுகையா வருதுடி..அழாதடி ரேவி..

நீ சொல்லுவீல்ல அடிக்கடி..

சாரூ..நீதாண்டி நா..நாந்தாண்டி நீன்னு..

ஆமாண்டி ரேவி..அது சத்தியந்தாண்டி..நீதாண்டி நா..நாந்தாண்டி நீ..

கடவுள் எரக்கமுள்ளவராம்..

நல்லவங்கள ரொம்ப அழவிட மாட்டாராம்.. நாம நல்லவங்கதானேடி ரேவி..

நாம என்ன கெட்டவங்களா?

பாத்துண்டே இரு..நம்மள சாமி பாத்துக்க வெக்கிம்.

நிச்சயமா நாம ரெண்டு பேரும் மறுபடியும்  பாத்துப்போம்டி ரேவி..

பாவம்தான் சாரு. அவளின் சின்னஞ்சிறு இதயத்தில் ஏற்பட்ட நம்பிக்கை.. உண்மையாக நடக்க எவ்வளவு காலமாகும்? தன் தோழி ரேவதியை தான் சந்திக்கும் சூழ்நிலை எப்படி யானதாக இருக்குமென் பதும்.. சாமிநடத்தப்போகும் நாடகம் என்ன என்பதையும் இப்போதே அவளுக்குத் தெரிந்துவிட்டால் என்னாவாள் சாரு? 

வாழ்க்கையில் நாளை என்ன நடக்குமென்பதை யார்தான் அறிவார்?  

அத்தியாயம் – 12

மஞ்சள் நிற தகர டப்பாவில் இருந்த பொருட்கள் அனைத்தையும் மடியில் கொட்டிக்கொண்டாள் சாரு.

உருண்ணடை உருண்டை யாய்ப் பழுப்புக் கலரில் ஆறு கமர்கட்.. சின்ன கோலி குண்டு சைஸில். 

முழு சிலேட்டுக்குச்சியை உடைத்தால் கிடைக்கும் அஞ்சாறு சிலேட்டுகுச்சி பிட்கள்.. புழுக்கைப் பென்சில்கள் இரண்டு..

கலர்சாக்பீஸ் துண்டுகள் நாலு..தேய்ந்துபோன ரப்பர்ஒன்று..சிகப்புக்கலரில் ஆறு கண்ணாடி வளையல் கள்..பாதியளவு ரோஸ்கலர் நெயில்பாலிஷ் குட்டிபாட்டில் ஒன்று.. சிகப்புகலர் சாந்து பாட்டில் ஒன்று..அதற்குமேல் எதையும் வைக்கமுடியாது அந்தச் சின்னத் தகர டப்பாவில்.

ரேவீ..என்னல்லாம் வெச்சுருக்கடி ரேவி.. ஒவ்வொரு பொருளாய் தொட்டுத் தொட்டுப்பார்த்த சாருவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தேற்றுவார் யாருமின்றி தேம்பியழுதாள் சாரு.

மெல்ல இரண்டு விரல்களால் கமர்க்கட் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.ரேவி எனக்கு கமர்கட் புடிக்கும்னு வாங்கிவாங்கிண்டு வந்து தருவீல்ல..அப்பிடித்தானாடி வாங்கிண்டு வந்து வெச்ச..

இந்த டப்பால? த பாரு நா ஒரு கமர்கட்டத் திங்கறேன்.

ஏய் ரேவி இந்த டப்பா ஒ குச்சி..பென்சில்லா போட்டுக்கிற டப்பால்ல..எங்கிட்ட குடுத்துட்டியேடி.. இந்த டப்பாவா நீ ஆசையால்ல வெச்சிருப்ப..எங்கிட்ட ஏண்டி குடுத்துட்ட?என்னவோ எதிரில் தோழி இருப்பதைப் போல் கேட்டுக்கொண்டி ருந்தாள் சாரு.

ராஜு சிணுங்குவது கேட்டது.

சட்டென மடியில் கிடக்கும் பொருட்களையெல்லாம் டப்பாவில் எடுத்துவைத்து டப்பாவைக் கொண்டுபோய் பெட்டியில் வெகு ஜாக்கிரதை யாய் வைத்தாள் சாரு.

இனி ரேவி கொடுத்த டப்பாவை சாரு அவளின் வாழ்க்கையில் எத்தனை முறை பார்ப்பாள் என்பதற்குக் கணக்கு வைத்துக் கொள்ள முடியாது.அது சாத்தியமு மில்லை.

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. சாரு பம்பாய் வந்து ஆறுமாத மாகிவிட்டது.குழந்தை ராஜு சாருவோடு ஒன்றிப் போனான் .

லோச்சனியும் தியாகுவும் சாருவை அந்நியமாக நினைக்காமல் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்டார்கள். 

சாரு சமையல் மற்ற வீட்டு வேலைகளை செய்வதில் லோச்சனிக்கு பெரும் உதவியாக இருந்தாள்.

சித்தியும் அப்பாவும் சீனுவும் நெஞ்சிலிருந்து நகர்ந்தனர். கசப்பும்..வெறுப்பும்.வலியும்..

லோச்சனியும் தியாகுவும் காட்டிய அன்பில்.. மறைய ஆரம்பித்தன.

ரேவியின் நினைவே  நெஞ்சு முழுதும் நிரம்பியிருந்தது.

காலம் மேலும் அவசரம் காட்டி நகர.. சாரு பதிமூன்று வயதைத்தொட்டாள்.

பருவம் அவளைத்தொட்டது.

பெரிய மனுஷியானாள் சாரு.

சின்னநிகழ்வாய் ஆனால் சிறப்பாய் அவளின் பெரியமனுஷியான நிகழ்வை லோச்சனியும் தியாகுவும் கொண்டாடினார் கள்.அவளின் வேண்டுதல்படி ஊருக்குத் தெரிவிக்க வில்லை  லோச்சனி.

ஓரளவு ஹிந்தி பாஷை பிடிபட ஆரம்பித்தது.

என்னதான் ராஜுவை பார்த்துப்பார்த்து கவனித்தாலும் அவன் உடல் நலத்தில் முன்னேற்ற மில்லை.

மருத்துசிகிச்சைகளும் சாருவின் கவனிப்பும் வீணாகின.நாலுவயதில் குழந்தை ராஜு மூச்சுத் திணறல் அதிகமாகி பெற்றவர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு இறந்து போனான்.

வீடே சோகத்தில் மூழ்கியது.

கதறிவிட்டாள் சாரு.

ஆன்ட்டி தம்பிய நா சரியா பாத்துக்கலையா..அதா தம்பி..

கதறும் அவளை குழந்தை யைப் பறிகொடுத்த லோச்சனியும் தியாகுவும் சமாதானம் செய்தனர்.

ராஜுபோய் பதினைந்து நாட்கள் ஓடிப்போயாகி விட்டது.

சாருவுக்குள் பயம் மெல்ல எட்டிப்பார்த்தது.எதுக்கு நம்மள அழச்சுண்டு வந்தா ராஜுவப் பாத்துக்கதானே?..

அவனும் போயாச்சு..இனிமே நமக்கு இங்க லேலயில்ல.

ஊருக்கே மறுபடி போயிட ணுமோ?

ஐயோ..ஊருக்கேவா?மறுபடி சித்திட்டயா?நெஞ்சு நடுங்கியது..நா ஊருக்குப் போய்ட்டா.. மாசாமாசம் இவா அனுப்பற பணம் நின்னு போய்டும்.அதுவே சித்திய

ஆவேசப்படுத்தும்..நானும் போனேன்னா..ஏற்கனவே கொடும..பத்துகாசுக்குப்பிரயோஜனம் இல்ல..

மறுபடி போனமச்சான் திரும்பி வந்தான்னு வந்துட்டியா?

நீ ஒ நொண்டிக்கால வெச்ச எடமே உருப்படாதே.. பூண்டுகூட மொளைக்காத போயிடுமேன்னு.. கொடுமய ஆரம்பிச்சிடுவாளே..

அதுவும் நா வயசுக்கு வந்துட்டேன்னு தெரிஞ்சா.. முடிஞ்சிது கத..

அதானே பாத்தேன்..வயசுக்கு வந்தாச்சா..காலு நெட்டையுங் குட்டையுமா நொண்டியாட்டம் இருந்தாலும் பாக்கீல்லாம் சரியாருக்குமே..டாண்ணு வர ரேண்டிய காலத்துல சரியா வந்தேன்னு வந்துடுமே..

என்று கேவலம் கேவலமாய் பேசுவாளே?திகிலாய் இருந்தது சாருவுக்கு.

ரேவதிட்ட பேசக்கூடாதுன்னு சட்டம் போட்ருவா.. சித்தியதாண்டி ரேவிகிட்ட பேச முடியாது. அப்பறம் அங்க நரகமான்னா இருக்கும்? 

என்ன நடக்கப்போகிற தென்று கலங்கிப்போனது நெஞ்சு.

அங்கிளும் ஆன்ட்டியும்  ரொம்ப நல்லவங்க.  நம்மகிட்டதா எவ்வளவு அன்பும் பாசமும் காட்றாங்க?..

அவுங்களா நம்மள ஊருக்குனா கிளம்புறியா சாரு..கொண்டுவிடவான்னு கேக்க மாட்டாங்க.. தயங்கு வாங்க..

நாமளாதா கிளம்பறே ஆன்ட்டி.. அங்கிள்னு சொல்லனும்…

எத்தன நாளைக்குத் தண்டமா ஒக்காந்திருக்கிறது?

அன்று ஞாயிற்றுக்கிழமை.

இன்னும் மகன் இறந்த சோகத்திலிருந்து லோச்சனியும் தியாகுவும் பெருமளவு விடுபடவில்லை.

ஆளுக்கொருபக்கம் பார்த்  துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தனர்.

அவர்களின் எதிரில் போய் நின்றாள் சாரு.

பார்வயைத்திருப்பி எதிரில் வந்துநின்ற சாருவைப் பார்த்தாள் லோச்சனி. 

என்ன சாரு..எதாவது சொல்லணுமா? கேக்கணுமா?

தியாகுவும் திரும்பி சாருவைப் பார்த்தான்.

ஆன்ட்டி..நா..நா..ஊருக்குப் போகவா?நா தம்பிய பாத்துக்கவந்தே..ஆனா.. ஆனா..அது ப்ரயோஜனம் இல்லாம போயிடுத்து..

இனிமேவும்..நா..நா..இங்க..

மூகத்தைமூடி அழுதாள் சாரு.

சட்டென சோஃபாவிலிருந்து எழுந்தாள் லோச்சனி..

சாரூ..நீயும் எங்கள விட்டுட் டுப் போறேங்கிறியா?

சடாரென முகத்திலிருந்து கைகளை அகற்றி லோச்சனியின் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தாள் சாரு.

ஆன்ட்டீ..

சாரூ..ராஜு போன துக்கத்து லேந்தே மீளமுடியாம தவிக்கிற நாங்க..நீயும் ஊருக்குப்போய்ட்டா என்ன செய்வோம் சாரூ?

வேண்டா..லேண்டா சாரு..

நீ எங்கியும் போகாத.. எங்களோடயே..

எங்க பொண்ணுமாதிரி இங்கயே இருந்துடு.

இனிமே எனக்கு கொழந்த பொறக்காது..நீயே எங்க கொழந்தையா இருந்துடு சாரு..எங்கள ஒன்னோட அப்பாவா அம்மாவா ஏத்துப்பியா சாரு..

அதிர்ந்தே போனாள் சாரு..

என்ன சொல்றேள் ஆன்ட்டீ?

என்ன ஒங்க பொண்ணா நெனைக்கிறேளா?கடவுளே..

ஆன்ட்டி நா கால்  சரியில்லா தவ..என்னப்போயி?..எதுக்கு ஆன்ட்டி ஒரு ஊனமான

பொண்ணப்போயி மகளா..

சாரூ..கத்தினாள் லோச்சனி..கால்ல லேசான குறைபாடு இருக்கற நீ ஊனம்கீனம்னு ஏ சொல்லிக்கிற?..நீ மனசால தங்கம் சாரு..ஒம் பாசமு..மரியாதையும்..பக்குவமும்..ஏத்துண்ட கடமய மானசாட்சியோட செய்யிற ஈடுபாடும் யாருக்கு வரும் சாரு..

நாங்க ரெண்டுபேரும் நீ எங்கள ஓ அப்பாவா அம்மாவா ஏத்துப்பியாங்கிற எதிர்பார்ப்போட இருக்கோம் சாரு..ஏத்துப்பியா சாரு?

அழுதுகொண்டே லோச்சனி கேட்க..ஆமா சாரு எங்கள ஏத்துப்பியா சாரு என்றான் தியாகு.கண்கள் கலங்கிக் கிடந்தன.

சாரூ நீ எங்கள ஓ அம்மா அப்பாவா ஏத்துக்க சம்மதம்னு ஒனக்குத் தோணித்துனா..ஒ வாயிலேந்து ஆன்ட்டி அங்கிள்ங்கிற வார்த்தைங்க வரக்கூடாது சாரு..

அம்மா.அப்பாங்கிற வார்த்ததா வரணும்.

அப்பிடி அந்த வார்த்தைங்க ஒவ்வாயிலேந்து வந்தா நீ எங்கள அம்மா அப்பாவா ஏத்துண்ட்டன்னு நெனச்சி சந்தோஷப்படுவோம். அந்த சந்தோஷத்த எங்குளுக்குக் குடுப்பியா சாரு..என்ற லோச்சனி ஏக்கமும் எதிர்பார்பும் அழுகையும் முட்டிமோத சாருவின் முகத்தைப் பார்த்தாள்.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் சாரு.

என்னது என்னது இவாளோட பொண்ணா நானா?இப்டீல்லாம் கூட நடக்குமா?

எனக்குப்போய்க்கூட பாசமான அம்மாவும் அன்பான அப்பாவும் கெடைப்பாளா?

சாருவின் சின்ன இதயம் தாங்கமுடியாத அதிர்ச்சியி லும்.. அதிசயத்திலும் வேகமாய்த் துடித்துத் தவித்தது.

இது நெஜமா?இப்பிடியுமா நடக்கும்?பிரமைபிடித்தாற் போல் அசையாது நின்றாள்.

சாரூ..சாருவை மெல்லத்தொட்டு அசைத்தாள் லோச்சனி.

அ..அ..அம்மா..முதல்முதலாய் அம்மாவென்ற அமுத வார்த்தை சாருவின் வாயிலிருந்து வெளிவந்தது.

அவள் உச்சரித்தே அறியாத வார்த்தை.அழைத்ததே இல்லாத அமுதவார்த்தை.

அ..அ..அப்பா..பாசத்தைக் காட்டாத பெற்ற அப்பாவை.. அப்பாவென்று அழைத்த நாக்கு.. இப்போது அன்பைக் கொட்டத்தயாராயிருந்த தியாகுவை அப்பா என்றழைத்தது.

சாரூ..கத்திக்கொண்டே சாருவைத்தன்னோடு இறுக அணைத்துக்கொண்டாள் லோச்சனி அந்த அணைப் பில் தாய்மையின் தவிப்பு தெரிந்தது.

சாரூ..எஞ்செல்லமே..என் றாள் லோச்சனி.சாருவின் உச்சந்தலையில் முத்த மிட்டாள்.

அம்மா..என்றபடி தன் புதுத்தாயைப் பாசத்தோடு கட்டிக் கொண்டாள் சாரு.

தாயின் அணைப்பு எப்படி இருக்கும் என்பதையே அறியாத சாருவுக்கு லோச்சனியின் தாய்மை அணைப்பு..இப்படித்தான் என்றில்லாத இதத்தையும் சிலிர்ப்பைபயும் தந்து மனதையும் உடலையும் சிலிர்க்கவைத்தது.

பெற்றபிள்ளையை இழந்த தாயும்.. பிறக்கும்போதே தாயை இழந்த குழந்தை யான சாருவும் கட்டிப்பிடித்து அழுவது கடவுள் நடத்தும் நாடகமோ?

இருவரையும் சேர்த்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் தியாகு.

வீடு மகிழ்ச்சியும் சந்தோஷ முமாய் கலகலப்பாயிற்று.

தகுதித்தேர்வெழுதி வெற்றி பெற்று எட்டாம் வகுப்பில் சேர்ந்தாள் சாரு.

காலம் றெக்கைகட்டிப் பறந்ததோ என்று நினைக்கு மளவுக்கு வேகம்கூட்டிப் பறந்தது.

இப்போது சாரு மெடிகல் காலேஜ் இரண்டாமாண்டு  மாணவி.

இருபது வயதில் அழகும் இளமையும் பொங்கிவழியும் பாவையாய் பார்ப்பவர்களை ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப் பார்க்க வைத்தாள்.

ஆங்கிலம்..ஹிந்தி..மராட்டி..குஜராத்தி மொழிகள் சாருவுக்கு தண்ணிபட்ட பாடாயிற்று.

பம்பாயின் நாகரீகம் அவளுக்கு அத்துப்படி யானாலும் தமிழ்கலாசாரத் தைக் கைவிடாமல் எளிமையாகவே இருந்தாள் சாரு.

நெஞ்சம் முழுதும் தோழி ரேவியே ஆட்சிசெய்தாள்.

அம்மா..காலேஜ்ல இன்னிக்கு கல்ச்சுரல் ஈவன்ட் நடக்கப்போறதா சொன்னேல்ல.. 

ஆமா சொன்ன..

கொஞ்சம் சீக்கிரம் போகணும் கிளம்பறேம்மா..

நீகூட கவிதப்போட்டீலக் கலந்துக்கிறதா சொன்னியே..

ஆமா..கலந்துக்கிறேன்.

அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த லோச்சனி

ஹேண்ட்பேக்கைக் குடைந்து கொண்டே கேட்டாள்(ர்)

சாப்டல?

அதா ரெண்டு சப்பாத்தி சாப்டேன்ல..

மத்தியானம் லன்ச்சுக்கு..

காலேஜ் கேண்டீன்ல பாத்துக்கிறேன்மா..

தக்காளி சாதம் பண்ணீருக்கே..எடுத்துண்டு போயே..

ஹெவியாருக்கும்..அம்மா ப்ளீஸ்..வேண்டாம்மா..

சரிப்பா..ஓ இஷ்ட்டம்.. கவிதா யினிக்கு வாழ்த்துக்கள் என்று சொல்லியபடி ஹேண்ட்பேக்கின் ஜிப்பை இழுத்து மூடியபடி நிமிர்ந்து சாருவைப்பார்த்த கண்கள் அகல விரிந்தன.

என்னம்மா என்னமோ என்ன இப்பதா புதுசா பாக்றாப்ல?

சிரித்தாள் சாரு.

எங்கண்ணே பட்டுடும் போலருக்கு..எ அழகு செல்லம்.கண்ணாடில பாத்துண்டியா?

க்கும்..போங்கம்மா..ரொம்பத்தா..பொய்யெல்லாம் சொல்லிண்டு..செல்லமாய் 

அம்மா லோச்சனியிடம் கொஞ்சினாள் சாரு.

நா சொன்னா பொய்யாத்தா தெரியும்..யாராவது சொல்லுவா பாரு.. அப்பதெரியும் அம்மா பொய்சொன்னாளா நெஜம் சொன்னாளான்னு..

சாருவின் அருகில் வந்து கன்னம் தொட்டுத் திருஷ்ட்டிக் கழித்தாள்.

சுடிதார் ரொம்ப நல்லாருக்கு சாரும்மா..பக்க பதிய அள வெடுத்துத் தெச்சாப்ல..

ஓ..பவுன் நெறத்துக்கு..

அம்மா.. மீதிய நா காலேஜ்  விட்டுவந்தப்றம்.. நீங்க ஆபீஸ்லேந்து வந்தப்றம் சாவுகாசமா சொல்லுங்

கோம்மா..காதாரக்கேட்டு மகிழறேன்..இப்ப லேட்டாயி டுத்து..சொல்லிச் சிரித்து விட்டு லோச்சனியின் கன்னத்தில் முத்த மிட்டுவிட்டு ஓடினாள் சாரு.

நெட்டை குட்டை கால்களுக் கெனத் தயாரிக்கப்படும் ஷுவைப் போட்டுக்கொள்ள ஆரம்பித்திருந்ததால் இப்போதெல்லாம் நடக்கவோ ஓடவோ எந்த சிரமும் இருக்கவில்லை சாருவுக்கு.

லிஃப்ட்டில் ஏறி இறங்கி வாசலுக்கு வந்து டூவீலரில் ஏறி ஸ்டார்ட் செய்துவிட்டு வாட்சில் மணிபார்த்தாள்.

மணி எட்டேகால் ஆகியிருந் தது.மருத்துவக் கல்லூரி நோக்கிப் பறந்தது வண்டி.

பர்சைத்திறந்து ஃபோட்டோ

ஹோல்டரில்.. விரைப்பாய் முகத்தை வைத்துக்கொண்டு மார்பளவு புகைப்படத்திலி ருந்த ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது கிராமத்திலிருக் கும் தாத்தாவிடம்..

தாத்தா காலேஜ் கிளம்பிட்டேன். பேரன ஆசிர்வாதம் பண்ணுங்கோ.. 

என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் முரளிகிருஷ்ணா.

நாலரையாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவன்.

பர்சை மூடி பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஹாஸ்டல் வாசலுக்கு வந்து வண்டியின் ஸ்டேண்டை நகர்த்திவிட்டு..

சீட்டிலேறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தபோது வண்டி மக்கர் பண்ணியது.

டேய்..டேய் சமத்தில்ல..சமத்தா வம்பு பண்ணாம.. கேலேஜ்க்கு என்ன அழச்சுண்டு போவியாம்.

இன்னிக்கு காலேஜ்ல ஒரு ஈவன்ட்ருக்கு..அதுல நாதா மெயின் ஆளு.. கால வாரிடாத.. சமத்தில்ல..சாயந்திரமா ஒன்ன ஒர்க் ஷாப்ல குடுத்து ஒத்தடம் குடுக்கச் சொல்றேன்..சரியா?

வலது கை விரல்களைக் குவித்து வண்டியைத் தொட்டு உதட்டில் வைத்து முத்தமிட்டான் முரளி..முரளி கிருஷ்ணா.

சமாதானமாகி வண்டி மருத்துவக் கல்லூரி நோக்கிப் பறந்தது.

– தொடரும்…

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *