உடன் வரும் உறவு
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 626

மழைக் காலத்து வெள்ளிக் கிழமை மாலை வேளை. சென்னை மாநகரின் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கான சபாவின் பின்பக்கம் உள்ள க்ரீன் ரூமில் (ஒப்பனை அறையில்) பரத நாட்டியத்தில் பெயர் பெற்ற, அழகான தோற்றம் கொண்ட சற்றே பூசிய தேகம் உடைய இளம் மங்கை சகுந்தலா, அன்றைய ஆடல் நிகழ்ச்சிக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், உரிமையுடன் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் சகுந்தலையின் காதலனான, தொழில் அதிபர் ராம் குமாரின் மகன் கட்டிளங்காளை இளைஞன் விக்னேஷ். அவன், சகுந்தலையின் அருகில் வந்தான். அவள், அவன் வந்ததைக் கவனிக்காதவள் போல் ஒப்பனையில் மும்முரமாக இருந்தாள். அவன் அவளுடைய தோளைத் தொட்டு “இன்னிக்கு உன் ப்ரொக்ராமுக்கு எங்க அப்பா அம்மா வந்திருக்காங்க… உன் டான்சைப் பார்த்தா மாதிரி இருக்கும் அவங்க பொண்ண பார்த்தா மாதிரியும் இருக்கும் எப்படி என்னோட ஏற்பாடு” என்றான்.
அவள் திரும்பி அவனுடைய முகத்தைப் பார்த்து “நீங்க எனக்கு ப்ரபோஸ் பண்ணறதுக்கு முன்னாடி அவங்கள என் நாட்டியத்தைப் பாரக்க வெச்சிட்டு அப்ப அவங்க கிட்ட என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டு என் கிட்ட ப்ரபோஸ் பண்ணி இருக்கணும். இப்ப எதுக்கு? அவங்க இந்த பொண்ணு வேணாம்னா என்னை விட்டுடுவீங்க அதானே” என்று சிடுசிடுத்தாள்.
“நீ நவரச திலகம் ங்கறது சரியா இருக்கு.. ரௌத்திரத்துல உன் முகம் கொள்ளை அழகு” என்று கூறியபடி அவன் அவளை அணைக்க முற்பட்டான். அவள் நகர்ந்து சென்றாள். அப்போது அந்த அறையின் மூலையில் ஒரு சின்னஞ்சிறிய நாற்காலியில், தலையில் முடி இல்லாத மழித்த முகம் கொண்ட வாட்டசாட்டமான, ஜிப்பா வேட்டி அணிந்த சீனியர் சிட்டிசன் ஒருவர் அமர்ந்து இருப்பதைப் பார்த்தான்.
விக்னேஷ் கேட்டான் – “நட்டுவனாரை எப்பவும் கூடயே வெச்சுக்கணுமா சகுந்தலா?”
மீண்டும் கண்ணாடி எதிரே அமர்ந்து இருந்த சகுந்தலா எழுந்து நின்றாள். அவளுடைய முகம் மாறியது.
“அவர் நட்டுவனார் இல்ல… என்னோட அப்பாவும் அம்மாவும் காளிதாசனோட சகுந்தலாவோட அப்பா அம்மா விசுவாமித்திரரும் மேனகாவும் போல தான்… அப்பா பிசியான டாக்டர் அம்மா பிசியான வக்கீல் அம்மா எப்படியோ என்னைப் பெத்து எடுத்துட்டாளே தவிர ரெண்டு பேருக்கும் என்னை பார்த்து பார்த்து வளர்க்க நேரமில்ல… என்னை பார்த்து பார்த்து கவனிச்சது வளர்த்தது எல்லாம் இங்க உட்கார்ந்து இருக்காரே இவரும் இவருடைய மனைவியாரும் தான். இவரு எங்க சித்தப்பா ரங்கா… க்ரீம் ஆப் லைப்ல இவர் பணத்துப் பின்னால ஓடலை என் பின்னாடியே வந்தாரு என்னை வளர்க்கறதுல.. பொத்தி பொத்தி பாதுக்காக்கறதுல கூடயே இருந்தாரு இருக்காரு… இப்ப எல்லாம் பொண்ணு பெரியவளா ஆயிட்டா கிராண்டா ஊரைக் கூட்டி பங்க்ஷன் பண்றாங்களே அதை எங்க சித்தப்பா தான் சிம்பிளா நடத்தினாரு.. அதுக்கு கூட என்னை இந்த உலகத்துக்கு கொண்டு வந்தவங்க வரலை… நான் இன்னிக்கு நாட்டிய தாரகையா இருக்கறதுக்கு காரணம் இவர்தான்… நான் நானா இருக்கறதுக்கும் காரணம் இவர்தான்” பேசி முடித்தாள் சகுந்தலா .
விக்னேஷ் நெளிந்தான். “நீ இது வரைக்கும் சொல்லவே இல்லையே… வணக்கம் அங்கிள்” என்று அவளுடைய சிற்றப்பாவைப் பார்த்தான்.
அவர் புன்னகை பூத்தார்.
“சகு , நான் ஆடியன்ஸ்ல போய் உட்கார்றேன்” என்று கூறிய விக்னேஷ் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
