இரு தேசங்களும் ஒரு மனித சங்கிலியும்
கதையாசிரியர்: மாத்தளை பெ.வடிவேலன்
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 1,217
(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அப்பா எவ்வாளவு சொன்னாலும் நீங்க கேட்கவே மாட்டீங்க… அந்த காணிப்பட்டா பத்திரத்தையும் இந்த நெருப்பிலே போடுங்க” முரளியின் குரல், அதட்டலாக சினத்துடன் ஆவேசமாக ஓங்கி ஒலித்தது. மறுப்பு சொல்ல முடியாத ‘வீட்டோ’ அதிகாரம், அது!
“அவன் அப்படித்தான். பிடிவாதக்காரன்.”
அடங்கிப் போயாக வேண்டும். அடங்கி விட்டார் சுப்பையா கணக்கப்பிள்ளை. வேறு விஷயம்; அல்லது வேறு சந்தர்ப்பமாக இருந்தால் இப்படி “பெட்டிப்பாம்பாக” அடங்குவாரா சுப்பையா? ருத்ர தாண்டவமே ஆடி இருப்பார். இந்த விஷயம் அப்படியானது. அதுதான்! அப்படியான நேரம்.
திடீரென ஏவப்பட்ட இந்த “பாசுபதத்தால்” திகைத்து; வெல வெலத்து; செய்வதறியாது நிற்கும் சுப்பையா கணக்குப் பிள்ளை, கத்தரிப்பூ நிறத்தில், அசோக சக்கரம் பதித்து “ஜீ, நிப்பால்” அச்சொட்டாக எழுதப்பட்ட காணிப்பட்டா பத்திரத்தை மலைத்துப் போய் நிற்கும் மகள் சுந்தரியிடம் நீட்ட, அதை வெடுக்கென பிடுங்கி, நடுவீட்டில் எரிந்து கொண்டிருக்கும் இந்தியத் தபால்கள், கடதாசிகள் மீது சுக்குநூறாக கிழித்துப் போட்டான் முரளி.
எரியம் நெருப்பில் நிலப்பட்டா நீறுபூத்து சாம்பலாகியது. பரம திருப்தி முரளிக்கு. கறுப்பு பணத்தைத் தேடி “ரெய்டு” நடாத்தியது போல் அல்லோலகல்லோலப்பட்ட வீடு; தற்போது மயான அமைதியில் மூழ்கிவிட்டது. திண்டுக்கல்பூட்டு, இரட்ரைச்சரணீர் ரெங்கு பெட்டிகளெல்லாம் சோதனை முடிய மீண்டும் அட்டல் முதல்; அடுக்களை வரை கொலுவேறி விட்டன.
கொந்தளிக்கும் உள்ளத்துடன் சுப்பையாபிள்ளை வீட்டு முற்றத்தில் வந்து குந்தினார். “முருகா… முருகனை நினைத்து வாய் முணுமுணுத்தது. சுப்பையா கணக்கப்பிள்ளை ஒரு வித்தியாசமான பேர்வழி. தோட்டத்து “பாஷையில் இந்த வித்தியாசமான என்ற பதத்திற்கு பல ஒருத்தக்கருத்துக்கள் உள்ளன. அது “தோட்ட நிர்வாகத்துக்கு நம்பிக்கையானவர்,” “விஸ்வாசமுடையவர்” அதே வேளையில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் “நல்ல மனுசர்’ என்பது உட்பட பல்வேறு அட்சர அர்த்தங்களையும் பரிபாசைகளையும் அது உள்ளடக்கும். அவர் “நிர்வாகத்தின் தாளத்திற்கு ஆட்டம் போடுகிறார்.” “ஜால்ரா தட்டுகிறார்” என்றெல்லாம் எழுந்த எதிர்ப்புகள் வெறும் கிசுகிசுப்போடு அடங்கிப் போய்க்கிடக்கிறது.
கணக்கப்பிள்ளை ஐயாவை “முகத்திற்கு முகம் நின்று எதிர்த்து பேசியவர்கள் இந்த தோட்டத்தில் உண்டா?” இது பயமா? மரியாதையா……? கணக்கப்பிள்ளையின் இந்த எழுதா மறையான சானக்கிய கூட்டு ஒப்பந்தத்தை பாராட்டாத துரைமார்களே கிடையாது. சிவில் சேவையின் சிலாக்கியம். தோட்டத்தில் எந்த ஒரு தொழிற்சங்கத்தையும் தலையெடுக்க விடாமல் “அவராடும் சதுராட்டத்தை” இரு தரப்பினருமே பாராட்டுவர்.
இந்த “ஆடு, புலி புல்லுக்கட்டு’ காய் நகர்த்தலில் தோட்டமே அடங்கிப்போய் கிடக்கின்றது. இலாவகமான தந்திரோபாயம். எல்லோருக்குமே கைவராத தனித்துவ சாதுரியம். இதற்கு கைமாறாகத் தான் அவர் வசிக்கும் இஸ்டோர் லயத்திற்கு மேற்கிலுள்ள “சின்ன பங்களாவோடு” சேர்ந்த அவரை ஏக்கர் காணியை நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது.
பேருக்குத்தான் சின்ன பங்களாவே ஒழிய; வசதிகள் சிறியவைகளல்ல! ஒரு காலத்தில் “துரைச்சாணி” குடியிருந்த கோட்டமல்லவா! பங்களாவைச்சுற்றி கனிமரங்கள்….. நினைத்தாலே வாய் ஊறும் துரை வரிக்கன். தேனில் நனைத்த பலாச்சுளைகள். கலர்கலரில் ஜம்பு. ஊதிக்கட்டிய பலூன்களாக “ஜம்போல’. தோடம்; மாதுளைகள் பலவகையான மாம்பழங்கள்.
எத்தனையோ தடவைகள் ”டீட்” எழுதிக் கொள்ளும்படி கணக்கப்பிள்ளையை, தனியார் தோட்ட கூட்டுநிர்வாகம் வற்புறுத்திய போதும் பிரஜா உரிமை இல்லாதபடியால் அவரால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.”கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல்…..” பிரஜா உரிமையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவர் மனம் குருதி கசிந்து வடியும்” சே…. இப்படியொரு தலைவிதியா என்று தலையில் அடித்துக்கொள்ளாமல் அடித்துக்கொண்டு; யார் யாரையெல்லாமோ நொந்து கொள்வார்.
யாரை நொந்து என்ன பயன்?
“எலெக்சன்” என்று வந்து விட்டால் தோட்டத்திலுள்ள ஏழெட்டு பேருக்குத்தான் “சந்தகாட்” வரும் தோட்டத்து ஆபிசில் கையெழுத்து வைத்து விட்டு; அவர்கள் வாக்களார் அட்டையை வாங்கிக் கொண்டு போகும் பொழுது; கணக்கப்பிள்ளைக்கு எரிச்சல் மட்டுமல்ல பொறாமையாகவும் இருக்கும்.”பயலுக மேலே போய்விட்டானுகளே” என்று மனம் வஞ்சினம் கொள்ளும்.
“மாடு மேய்க்கிற மாசிமல” செலகமையில் இருந்து நேற்று தோட்டத்துக்கு வந்த வெள்ளையன் மகன் சுப்பன். சேனக்காரன் வேலு எல்லாம் “ஓட்டும் போட போறோம்…. உருளா முள நாட்டுக்கு ஓட்டுப் போட போறோம்’ என்று காலையிலேயே “வெள்ளையும் சொள்ளையுமாக” உடுத்திக் கொண்டு, போட்டி போட்டுக்கொண்டு தோட்டத்து கேட் வாசலில் வந்து நிற்கும் கட்சிக்காரர்களின் வண்டியில் ஏறி; எலக்சனுக்காக “காடி” போட்டு காச்சி வடித்த கசிப்பு சாராயம் மணக்க, மாலையில் தோட்டத்து லயத்து குறுக்கில், “யாருக்கு போட்டோம்” என்று தெரியாமல் வருவது கணக்கப்பிள்ளை அறியாத ஒன்றா?
எத்தனையோ இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்ட கணக்கப்பிள்ளைக்கு இந்த பிரஜா உரிமை மட்டும் திருஷ்டி பரிகாரமாக அமைந்துவிட்டது. தோட்டத்தில் உள்ளவர்களுக்கு; பிரஜா உரிமை விசாரணைக்காக வந்த கொழும்பு ஆபீசர்களுக்கு மேசை போட்டு, சோடா கொடுத்து; உபசரித்ததோடு மட்டுமல்ல, விசாரணைக்காக வரிசையாக வந்து நின்ற தொழிலாளர்களை அதட்டியும் தனது வல்லமையை காட்டியவருக்கே; இப்படி பிழைத்துப் போய்விட்டது. இது ஐம்பதுகளில்…..
“இந்தியாவில் காணி இருக்கா?” “இங்கு இருந்து காசு பணம் அங்கு அனுபினியா?”
இப்படிப்பட்ட பல கேள்விச் சரங்களுக்கு கை பிசைந்து, தலை சொரிந்து நின்வர்களை ஏளனம் செய்து “ஒழுங்கா பதில் சொல்லு” “616016011? பேமாணி மாதிரி முழிக்கிற” என்று ஐயாவால் ஏளனம் செய்யப்பட்டவர்களே “ஐயாவுக்கு நிராகரிச்சு புட்டானுக” என்று ஏளனமாக இளக்காரமாக கதைக்க, “இந்தியாவில் “காணி, நிலம் இருக்கு.
“இந்தியாவுக்கு காசு அனுப்பிக்கிட்டு தான் இருக்கேன்.” என்று தம்பட்டமாக விசாரணையின் போது கூறிய வார்த்தைகள் இப்படி; அவருக்கு வில்லங்கமாக அமையும் என்று; அவர் நினைக்கவே இல்லை. புலமைப்பரிசில் வினாவாக தடுமாறிப் போய்விட்டது.
“இந்த நாட்டுக்கு விசுவாசம் இல்லாதவன்” என்று இனிக்க… இனிக்க… பேசிய விசாரணை அதிகாரிகள் “மினிற்” போடுவான் என்று தெரிந்திருந்தால் “சுளையாக” பணத்தை நீட்டி அவனை மடக்கி இருக்க மாட்டாரா? என்ன….?
இந்த நாட்டில் பணத்தை நீட்டினால் “பாசாகாத” “பையில்” உண்டா? ‘மூவ்’ ஆகாத மேட்டர் உண்டா? பணம், பணம் எல்லாமே பணம் தான்!
ஒட்டுப்பாலாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இலங்கை இந்தியர் பிரச்சினையை; சிரட்டைப் பாலாக முடக்க, நிறைவேற்றப்பட்டது தான் “தாஷ்கண்ட்” ஒப்பந்தம். இங்குள்ள மக்களுக்காக எங்கோ ஒரு நாட்டில் நிேைவற்றப்பட்ட ஒப்பந்தம். ஒப்பந்தமா அது ? நெஞ்சில் ஏற்றிய தீப்பந்தம். சம்பந்தப்பட்ட மக்களையோ, அல்லது அவர்களது பிரதிநிதிகளது கருத்துக்களையோ கேட்டறியாமல் எடுக்கப்பட்ட முடிவு அது. அவசரமாக ஓர் இரவில் எடுக்கப்பட்ட முடிவு.
விடிந்த போது, விழிக்காத நித்திரையை தாய் நாட்டு பிரதிநிதி அணைத்துவிட்டார். விளக்கம் சொல்வது யார் ? இந்த கட்டைகளைப் பற்றி அந்த கட்டைக்கு அப்படி என்ன பாச உணர்வு இருக்கவா போகின்றது. தன் பெயரை வரலாற்றில் பதித்துவிட்டால் போதாதா? யார் எப்படி சீரழிந்தால் என்ன? அரசியல் அரசியல்…. மக்கள் அரசியல் பிராணிகள் தானே!
மக்களின் அபிப்பிராயத்தையோ, சம்மதத்தையோ கேளாமல் கால்நடைகளின் உரிமையாளனும், வளர்த்தவனும் பங்கு போட்டு பிரிக்கும் வகையில் இரவோடிரவாக நடந்தேறிய மந்தை வியாபாரம் அது, கால்நடைகளைக் கூட எடைப் போட்டு, நடைபிரித்து வியாபாரம் செய்யும் காலத்தில்; உழைக்கும் ஓர் இனத்தை அவலட்சணமாக…;அவமானமாக; ஆராய்ந்து பாராமல் நடைபெற்ற சதி! விடிந்த போது ஒரு பங்காளி விழிக்காத நித்திரையை அணைத்துக்கொள்ள; விழி பிதுங்கி நின்ற மக்கள் வழியறியாது; நிந்தனைப் படலாமாக திகைத்தாலும், படிவங்கள் நிரப்பும் படலம், காட்சிப் படலமாக நிகழ்கின்றது. ஒப்பந்தத்திற்கு பலியானவர்கள், பலிக்கடாவாக படிவங்களை நிரப்புகின்றனர். அத்தோடு குறுகிய கால அவசாசம் வேறு. படிவங்கள் துரித கதியில் நிரப்பப்படுகின்றன. எவருக்கும் முடிவு பற்றி எந்த விளக்கமுமே கொடுக்கப்படாத நிலை.
யாரோ…. எவரோ எழுதி நிர்ணயித்த, தங்களதும், தங்களது சந்ததியினதும் தலைவிதியை நிர்ணயிக்க தோட்டம் தோட்டமாக; மலையகம் எங்கும் கட்டுக் கட்டாக படிவங்களை நிரப்புகின்றனர். இந்த களேபரத்தில் கருங்காலி தோட்டமும் களைகட்டி நிற்கிறது. சூடு பிடித்துள்ள இந்த குட்டி வியாபாரத்தில் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தவர்களுக்கு அடித்தது யோகம். “படிவத்துக்கு பத்து ரூபாய்” “ரேட்டில்” ஸ்டாம்பிற்கு வேறு; முத்திரைக்கு வேறு என்றெல்லாம் அறுவடை ஆகின்றது. தோட்டத்து “நைட் ஸ்கூல் மாஸ்டர்’ இராமசாமியின் ஏற்பாட்டில் ஒருவர்; இன்று கருங்காலி தோட்டத்திற்கும் வர துரித ஏற்பாடுகள் செய்தாகி விட்டன.
படிவம் நிரப்பும் மாஸ்டருக்காக, நைட் ஸ்கூல் மாஸ்டரின் வீட்டில்; லயத்துக் கானைக் கொத்தி; கொத்தி; கொழுப்பேறிய சிவப்பு கொண்டையுடன் தொங்கும் தாடி “டால்” அடிக்க தோட்டத்திற்கே சண்டியனாகி; எந்த ஒரு சேவலையுமே அண்ட விடாது; குப்பைகளைக் கிளறி…. கிளறி… பெட்டைக் கோழிகளை வெறும் அணைப்பிலேயே கருக்கட்டச் செய்யும் நாட்டுச்சேவல் ; “தாச்சியில்” ஆக்ரோசத்துடன் கொதித்துக் கொண்டு இருக்கிறது.
படிவம் நிரப்புபவருக்காக பீரிஸ் பாரில் இருந்து கொண்டு வந்த சாராய போத்தலுக்கு மேலதிகமாக; அவருடைய மேலதிக ஆசையையும் பூர்த்தி செய்ய திம்புல்கமுவ நாட்டிலிருந்து கொண்டு வந்த முடட்டிக் கள்ளு, வேறு கொக்கோ மர நிழலில் நுரையை கக்கிக் கொண்டிருக் கின்றது. ஆள்மாற்றி ஆள காவல் வேறு அதற்கு! நுரை கொப்பளிக்கும் கள்ளில் சாரை வாய் வைத்து விடாமல் இருக்கவே இந்த முன் ஏற்பாடு.
அந்தி சாயும் முன்னரே தோட்டப் பாடசாலையில்; ஈசல்கள் மொய்த்து மோட்சமடைய; “குப்பென இரைந்து” எரியும் பெற்றோல்மெச்ட் வெளிச்சத்தில் வரிசை வரிசையாக, ஒடுக்கமாக வந்த தொழிலாளர் குடும்பங்களின் படிவங்கள் நிரப்பப்பட, கணக்கப்பிள்ளையாரின் படிவத்தை அவரின் வீட்டுக்கே சென்று நிரப்புகிறார்; வந்தவர். அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது நாவில் ”ஜலம்” ஊறுகின்றது. “கால் அரைக்காக” வாடிநின்ற அவருக்கு வரப் புயர்ந்து வான் பாய்ந்து வடிகின்றது.
மலை நாட்டான் யாரைத்தான் வாழ்விக்கவில்லை.
கணக்கப்பிள்ளை அவர் சட்டைப்பையில் திணித்துவிட்ட “என்விலப்” CA சாராயுதமாக தரும் சுகம் இது. சாராயமும் ஒரு ஆயுதம் தான். இது சாதிக்காத காரியம் உண்டா? யாரோ எவரோ செய்த சேவையை தன் பேரில் போட்டுக் கொள்ள வேண்டுமா? நடைபெறாத கூட்டத்தை நடந்ததாக; சேவையை தான் செய்ததாக, அறிக்கை விட அரைப்போத்தலை வாயில் ஊற்றினால் போதும் பப்ளிசிட்டி தந்து விடும் இந்த பாணம்.
“இந்த தடவை எப்படியும் இலங்கைப் பிரசா உரிமையை எடுத்துவிட வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.” கணக்கப்பிள்ளையின் மனம் கணக்குப்போட்டு பார்க்கின்றது. தமிழ்நாட்டில், திருச்சியில், இளமைக் காலத்தில் அவர் மனதில் தொட்டிலாடிய வயல்வெளிகளும், ஐயனார் கோயிலும், கனவுலகில் வந்து குயிலாக கூவினாலும், இலங்கை பிரஸா உரிமை கிடைத்தவுடன் சொந்தமாகப்போகும் சின்ன பங்களா, காணி;
மாத்தளை நகரில் பாக்கிய வித்தியாலயத்தில் படித்து எஸ். எஸ். ஸி பாஸ் செய்து விட்டு, டீச்சர் கனவில் சிறகு விரித்து நிற்கும் மகள் அன்னபூரணி; முயற்சியுடன் படிக்கும் மகன் முரளியை இங்லீஸ் பேசும் தொரையுடன் ஒப்பிட்டு ; ஒத்திகை பார்த்து கொண்டிருக்கும் தனது ஒரங்க நாடக ஆசைக்கனவுகள் நிறைவேறும் காலத்துடன்; தோட்டத்தில் எழுதாமறையாக தனக்குள் அடங்கியுள்ள சுக போகங்களையும்; அதிகாரங்களையும், “கணக்கப்பிள்ளை” ஐயா – என்ற மரியாதையையும் எப்படி இழப்பது? இழக்கத்தான் மனசு வருமா? ஒரே முடிவு. இலங்கைப் பிரஜை ஆவது தான்! முடிவெடுத்தே விட்டார்.
”மகா கனம் பொருந்திய ராய… ராய ஸ்ரீ என்று தொடங்கி சுகஷேமம் விசாரித்து ”இப்பவும் இங்கு பருவமழை இல்லை. நஞ்சை புஞ்சை எல்லாம் கூட விளையவில்லை. பஞ்சம் தான். பஞ்சம் பிழைக்க பல குடும்பங்கள் மைசூர் போய்விட்டார்கள். எக்காரணம் கொண்டும் சிலோனை விட்டு இங்கு வந்து விடாதீர்கள்”. இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வரமுடியாதபடி மண்டபம் கேம்பை மூடிவிட்டார்கள் என்று தெரிந்தும் அடிக்கடி கடிதம் எழுதி; “பெர்லீன் சுவர் எழுப்பி வரும் மைத்துனன் மதுரை சோழவந்தான் சேவகனின் கூற்றில் உண்மை இல்லை. என்று தெரிந்தாலும் செழித்து நிற்கும் தன் குடும்பத்திற்கு இலங்கையில் தங்குவதே நல்லதென முடிவு செய்து; வெள்ளைநிற படிவத்தை நிரப்பி விட்டார் கணக்கப்பிள்ளை.
இலங்கையா..? இந்தியாவா..? அடிக்கடி ஊர் நினைவு உப்பளமாய் மனதில் படிந்தது. இளஞ்சிவப்பு நிறமும், அசோக சக்கரமும். பொறித்த படிவம் தாயக நினைவுகளை மீட்கும் வீணையின் தந்திகளாக சுருதி சேர்த்தாலும் இதயத்தை கல்லாக்கிக் கொண்டார். மைத்துனன் பரம்பரை உறவு காட்டி; காணியையும் வீட்டையும் அபகரித்துக் கொண்டார். கள்ளப்பட்டா எழுதி; ஊர் காணிகளை அபகரித்து; பரம்பரை காணி உரிமையாளர்களையே பிச்சை எடுக்க வைத்த உத்தமன் அவன்!
இதில் தொப்புள் கொடி உறவு. வேறு கள்ள உறுதியில் காணி உரிமையை அபகரித்தவனின் மகன்; கணக்கப்பிள்ளையின் உறவினரின் “சவ அடக்கம்,’ ”குழி வெட்டு” என்று வேறு பணமும் பறித்தார்கள். மாத்தளை நகருக்கு படிக்கச் செல்லும் தன் மகன் முரளி “தொரையை போல் இங்லீஸ் பேச வேண்டும். காற்சட்டை, மேற்சட்டை எல்லாம் போட்டுக்கொண்டு உத்தியோகம் பார்க்க வேண்டும்.” துரைமாரின் தயவு தனக்கு இருக்கும் போது இது ஒன்றும் தனக்கு எட்டாக் கனியல்ல. தனது துை துரை விசுவாசத்திற்கு, வேரில் பழுக்கும் பலா இதுவாகும். இந்தப் பலா பழுக்கும். காலத்தால் கனியும்.
ஆனால் நாளடைவில் மகனின் போக்கு அவருக்கு இந்த ஆசைக்கனவில், எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளித் தூவி விட்டது. மகனின் மாற்றம் அப்படி
மகனோடு அடிக்கடி; சிவப்பு சட்டை போட்ட இளைஞர்கள் கூட வந்து; இரவு இரவாக கதைப்பது, விடியற்காலையில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய், நேரமில்லாத நேரத்தில் வந்து போவது என்பனவெல்லாம் அவருக்கு எரிச்சலை மூட்டின. யார்? யார் ? எப்போது வருகின்றார்கள்? எப்போது போகின்றார்கள்? என்ற விபரம் தெரியாது. எதற்காக வருகிறார்கள்? ஏன் வருகிறார்கள்? அப்படி என்ன தான் பேச்சு? விடிய விடிய…
ஆரம்பத்தில் இப்படி புது முகங்கள் மகனோடு வந்து போவது மரியாதை கலந்த மகிழ்ச்சியை கணக்கப்பிள்ளைக்கு அளித்தாலும், இப்போது அதுவே சங்கடத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகின்றது. அவர்களது நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. சகிக்க முடியவில்லை. “முதலில்” தன் வீட்டுக்கு மட்டுமே வந்தவர்கள் படிப்படியாக லயலயமாக போய் கதைத்து வருவது தமது குடும்பத்திற்கு மரியாதை இல்லையென்று நினைத்தார். “முதலாளி வர்க்கம்,” “தொழிலாளி வர்க்கம்” “புரட்சி போராட்டம்” என்றும் மகனும் சகபாடிகளும் தோழர் தோழர் என்று பேசிக் கொள்வதும் அவருக்கு நல்லதாகப் படவில்லை. “சுரண்டலை ஒழிக்க வேண்டுமாம்” ஆத்திரப்பட்டார்.
எல்லாவற்றிற்கும் மேலாக “துரைமார் துரைமார்” என்று ஒட்டிக்கொண்டு, “உப்பைத் தின்றவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்” என்று உணர்வாக இருக்கும் அவருக்கு; ”முதலாளி தொழிலாளரின் உழைப்பைச் சுரண்டுகின்றான். பட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கத்தை புரட்சி செய்து அழிக்க வேண்டும்” என்று மகன் பேசுவது தர்மமாகப் படவில்லை.
அவர் நியாயம் அவருக்கு, மகனின் நியாயம் மகனுக்கு,
சீனா; பாரதம் மீதுபடையெடுத்து லடாக் பகுதியை ஆக்கிரமித்தது. “பாரத மாதாவுக்கு ஜே’ என்ற கோஷம் மலையக மக்கள் உள்ளத்திலும் ஒலித்தது. தாயகத்திற்கு ஆபத்து என்ற கவலை மேலோங்கியது. இந்நிலையில், வீரமாக; உணர்வுகளின் கேசரியாக; தேசிய நாளிதழ் ஒன்று; இந்திய பாதுகாப்பிற்காக நிதி திரட்டியது. கணக்கப்பிள்ளை தானே முன்னின்று நிதி திரட்டி பக்கத்து அரிசி ஆலையில் பணி புரிந்த இராமநாதபுரம் அழகர்சாமியின் துணையோடு பத்திரிகைக்கு அணுப்பி வைத்தார். அனுப்பி வைத்தார். நிதி அளித்தவர்களின் பெயர் பட்டியலை பத்திரிகையில் பார்த்தபோது தாய்நாட்டிற்கு தம் பங்களிப்பினை நல்கியதாக அனைவரும் உள்ளம் பூரித்தனர்.
பஞ்சசீலம் பேசி ஏமாத்தி “சீ” பாம்பு தின்கிறவன் நாகமா கொத்திப்புட்டானே! என்று வஞ்சினம் கொண்டனர்; தோட்டத்தினர், ஆனால் இன்று; மகன் “செஞ்சீனம் என்றும் சிகப்பு” என்று பேசுவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. “தருதல புள்ள புத்தி கெட்டு போச்சி” என்று சபித்துக் கொண்டார். “உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” முதலாளி ஒழிக!ஒழிக!! என்று இரவோடிரவாக ஆபிசில் நோட்டிஸ் போர்டில் ஒட்டியதில் முரளிக்கும் பங்குண்டு. வெளியில் சொல்ல முடியுமா….? மனதில் போட்டு ஆற்றிக்கொண்டார்.
கவலையை சுமந்து காலம் ஓடுகின்றது.
உழைப்பால் மலையகத்தை உருவாக்கிய இலட்சோப இலட்ச மக்கள் “கள்ளத்தோணி” “நாடற்றவன்” என்ற அவமான குறியீடுகளில் இருந்து விடுபட, ஏதேதோ அருட்டுணர்வில் வந்த வந்தவர்க்கெல்லாம் வாய்க்கரிசி போட்டு, தெரியாத, புரியாத; விளங்காத; வேண்டாத வினாக்களுக்கெல்லாம் விடையளித்து பிரசா உரிமைக்காக படிவங்களைத் தற்போது நிரப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
சமூகத்துக்கு பொறுப்பானவர்களே, விக்கிரமாதித்தன் வேதாளத்தை சுமந்து பதில் கூறித் தொடர்வதைப் போல மனம் நொந்து கொண்டிருக்கும் போது, அப்பாவித் தொழிலாளர்கள் என்ன செய்வது.?
நோனா தோட்டத்திலிருந்து கணக்கப்பிள்ளையின் சம்மந்தி பிச்சமுத்து வந்தார். “என்ன சம்மந்தி என்ன முடிவு எடுத்திறிக்கீங்க” என்று கேட்டார்? “உங்க மாப்பிள்ள முரளி இலங்கை பிரஜா உரிமைக்கு தான் போடனும்ணு பிடிவாதமாக இருக்கிறார். அதோட இரங்கலையில கல்யாணம் முடித்த மூத்தவன் தங்கராசும், அவுங்க மாமா, மாமியோட இலங்கைக்கு தான் மனு போடப் போறானாம். வயசுக்கு வந்த குமர்களின் வீட்டில வச்சிக்கிட்டு இனி நா எங்க இந்தியாவுக்கு போறது? மகன் முரளியின் பேச்ச மீறி என்னால ஒன்றும் செய்ய முடியாது. சம்மந்தி” – என்று முழுப்பொறுப்பையும் மகன் மீது போட்டு விட்டார்.
நோனா தோட்டத்து மைத்துனர் பிச்சமுத்து அடக்கமானவர், ஆழமாக சிந்திப்பவர். அமைதியாக பேசினார். “மச்சான் எல்லாம் யோசிச்சி செய்ங்க. ஐம்பத்திஎட்ட மறந்திடாதிங்க… இனி வரப்போற காலத்தில என்னென்ன நடக்குமோ நமக்குத் தெரியாது. நாட்டு நிலம சரியில்லை. ஒரு சின்ன சந்தோசத்தில உண்மை நிலையை மறந்து விஷயம் விளங்காம இருக்கிறது தான் நம்ம சனங்க…..” கவலையோடு தொடர்ந்த அவர்.. “வெள்ளைக்காரன் நம்ம வம்சத்த இங்க கொணந்து விட்டிட்டு ஒரு முடிவும் சொல்லாம போயிட்டான். இங்க நம்ம உழைக்கிறத தவிர நம்ம என்ன சுகத்த கண்டோம்? நம்ம கண்ண மூடிட்டா நம்ம பிள்ள குட்டிக போற கதி என்ன?”
அவர் குரலில் நிச்சயமற்ற நிலையில் வாழந்து கொண்டிருக்கு ஒரு இனத்தின் தவிப்பு தனலாய் கொதித்தது. கணக்கப்பிள்ளையால் கவலைப்பட முடிந்ததே ஒழிய; பதில் கூற முடியவில்லை நிதானமும் தீட்சணியமும் மிக்க அவர் கவலையுடன் விடை பெற்றுச் சென்றார். சுப்பையை கணக்கப்பிள்ளைக்கு தலைசுற்ற ஆரம்பித்தது. ஐம்பத்தெட்டை மறக்கமுடியுமா?
”சம்மந்தி’ பிச்சமுத்து சொன்னா சொன்னது தான். ஐம்பத்தியெட்டை நினைக்கும் போது அவருக்கு அடிவயிறு பத்தி எரிகின்றது. என்றாலும் சுப்பையா என்ற சில்லரை, கங்காணி, துரைமாரால் “கேஜி” என்றும் தற்போது “கே.பி” என்றும் அழைக்கப்படுகின்றார். இதையெல்லாம் விட்டுக் கொடுக்க முடியமா?”கலவரம் நடந்திச்சுதான். அதையே நினச்சிகொண்டிருந்தா எப்படி? நம்ம ஒரு குடும்பமா? எத்தனாயிரம் குடும்பம் இருக்கு,”
“எல்லாம் இறைவன் விட்டபடி…’ தனக்குத்தானே மனசை தேற்றிக்கொண்டு தோட்டத்தில் வளர்ந்து வரும் தனது செல்வாக்கு; உயர்ந்து வரும் குடும்பப், பெருமை! “அட நாட்டானும் கணக்கப்பிள்ளை ஐயா என்று கைக்கட்டி நிற்கிறானே!” எல்லாவற்றிற்கும் மேலாக சின்ன பங்களாவும், அதனை ஒட்டிக்கொண்டிருக்கிற காணி; இதனை எல்லாம் இழக்க மனசு வருமா? இப்ப தன்னை லயத்து ஆளு என்று யாரும் சொல்வானா? சொன்னாலும் நம்புவானா? எப்படி நிறுத்தாலும் தன்பக்கமே தராசு கணக்கின்றது. கணக்கப்பிள்ளைக்கு! இவவாறு, ஒரு வளர்ச்சி ஏற்படும்போது மகனின் கட்டுக்கடங்காத செயல்களினால் மறுபக்கம் குடும்பத்தில் அமைதியின்றி தவிக்க .
இப்படியே வாழ்க்கை போராட்டம் தொடர… தொடர…
ஒருநாள் தகப்பனுக்கும் மகனுக்கும் நடந்த நீண்ட வாக்குவாதத்தின் பின்னர், நடுநிசிக்கு பின் வந்து குழுமும் நண்பர்களுடன் மகன் முரளி புறப்பட்டு போய் திரும்பி வீடு வராமல் இருப்பது சுப்பையா கணக்கப்பிள்ளை கட்டிய மனக்கோட்டைக்கு சுனாமியாக அமைந்தாலும், தோட்டத்தில் இருந்து; துரைமார்களுக்கு எதிராக பேசி; செயற்பட்டு தனக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பது ஓரளவு திருப்பதியாக இருந்தது.
பிரஜா உரிமைப்படிவம் நிரப்பும் நிகழ்வில் தோட்டமே முழ்கி நிற்கும் போது, இன்று திடீரென வீட்டுக்கு வந்து நின்றான். முரளி. வீடே அல்லோலகல்லோலப்பட்டது. அவனை மீண்டும் பார்த்த பாசம் ஒரு புறம். பயம் ஒரு பக்கம். “முக்கிய விடயம் முடிவு எடுத்தாக வேண்டும்.”நிலப்பட்டா முதல் சகல இந்தியா ஆவணங்களையும் அழித்தது அவனது கட்டளையின் பேரில் தான்.
தனது வீட்டில், பிரஜா உரிமை படிவத்தை நிரப்பும் போது; அதனை நிரப்ப வந்தவருவுடன், தனக்கு புரியாவிட்டாலும் அவருக்கு மேலாக ஆங்கிலத்தில் ஏதேதோ விளக்கங்களை கூறுவது கணக்குப்பிள்ளைக்கு பரம திருப்தியைத் தந்தது. மகன் ஒழுங்காக படித்திருந்தால் இன்று தனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் மனதில் அவர் கட்டிய ஆசைக் கோட்டைகள் தகர்ந்து மண்ணோடு மண்ணாகிவிட்டனவே!
மறுநாள் வழமைபோல் முரளி புறப்பட்டு போய்விட்டான்.
அடுத்த வருடம் கொழும்பில் இருந்து “ரோனியோ” செய்யப்பட்ட ஒரு பாதித் துண்டு கடிதத்தில் இலங்கை பிரஜா உரிமைக்கு அனுப்பிய விண்ணப்பம், எது விதக் காரணத்தையும் குறிப்பிடாமல்,”மனு நிராகரிக்கப்பட்டது.” என்று ஒவ்வொன்றாக; கட்டுக்கணக்கில் தோட்டத்து ஆபீசுக்கு வந்து குவிந்தன.
ஆறு மாதத்துக்கு முன்னர் நெருப்புக்காய்ச்சலில்; எழுபது வயதில், இறந்துபோன செல்லமுத்து கிழவனுக்கு; நடக்க முடியாத சப்பாணிக்கு; வாசக்கூட்டி சூசை ஆகியோருக்கு காலை ஒன்பது மணிக்கு கொழும்பு காலி முகத்திடலின் முன்னால் உள்ள ஆபீசில் விசாரணைக்கு ஆஜராகும் படி அழைப்பு வந்தது. தோட்டத்தில் வாயைக் கட்டி, வயிற்றைக்கட்டி, ஆடு, மாடு வளர்த்து, மகன் பெரிய சாமியை டவுனில் படிக்க வைக்கும் காளிமுத்துக்கு குடும்பத்தோடு நிராகரித்து வந்தது. இடிந்து போனது பெரியசாமி மட்டுமல்ல அவனது கனவுகளும் தான் யார் யாரையோ பிடித்து “அப்பில்” செய்ய சிட்டாய் பறக்கின்றான் அவன். எவருக்கு ஏன் நிராகரித்தார்கள் யாருக்கு எதற்காக சாகப் போறவயதில் அழைத்தார்கள் என்பதெல்லாம் விளங்காத விசித்திரம் தான் ஆனால் ஏதோ ஒரு சூட்சுமம் உண்டு என்பது மட்டும் உன்மை.
தனது விண்ணப்பத்தை நிராகரித்து விடக் கூடாது என்று முத்துமாரி அம்மனுக்கு நேர்த்தி வைத்தார் கணக்கப்பிள்ளை தினமும் இதே கனவும் ஏக்கமும்….. கடந்த மாதம் கொழும்புக்கு விசாரணைக்குப் போய் வந்த ஸ்கூல் லயத்து ராமசாமி கொண்டு வந்து தூது, கணக்கப்பிள்ளைக்கு அசோக வனத்துக்கு ஆஞ்சநேயர் கொண்டு வந்த கணையாழியாக அமைந்தது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் நிர்வாக சேவையை கரைத்துக்குடித்து, எண்பிழை, எழுத்துப் பிழை பார்த்து தோட்டத்தவர்கள் நிரப்பி அனுப்பிய படிவத்தையே பார்த்து; கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களை மடக்கி “எத்தனையாம் ஆண்டு பிறந்த?” என்ற கேள்விக்கு, “ஏல மலையில் கொக்கோ கன்னு போட்ட போது” என்ற பதிலைக்கேட்டு பரிகசித்து, சிரித்து மனுவை உதவிக்கமிஷனர் நிராகரித்தாலும், ராமசாமி மூலமாக தனது வீட்டுக்கு வேலைக்கார பிள்ளை ஒன்று தேவை என்ற அந்த அதிகாரியின் செய்தி கணக்கப்பிள்ளைக்கு பச்சை கொடி காட்ட; ராமசாமி மகளையே சட்டு புட்டென ஏற்பாடு வெய்து கொழும்புக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
இராமசாமியின் பிள்ளையின் படிப்பில் மண். “உங்கா பிள்ள அழுது கொண்டே பஸ் ஏறியது. தாயும் கூடவே கொழும்பு போய் பிள்ளையை ஒப்படைத்துவிட்டு வந்தார். அடுத்த வாரம் கணக்கப்பிள்ளை ஐயாவுக்கு விசாரணை கடிதம் வந்தது.
“ஐயாவிற்குசந்தோஷங்களோடு” “பஸ்” ஏறிய கணக்கப்பிள்ளை ஐயா சந்தோஷமாக திரும்பி வந்தார். இலங்கைத் திருநாடே தனக்கு “ஜன்ம பூமி” ஒப்பனை கிடைத்துவிட்ட திருப்தி.
அவரும் இப்போது பதிவு பிரஜை. அவர் பெயர் இப்போது வாக்காளர் பட்டியலில், அடிக்கடி மீசையை முறுக்கி மகிழ்கின்றார். தேர்தல் வந்தது. இது வரை தோட்டத்து லயத்து பக்கமே தலைவைத்து படுக்காதவர்கள் கலர், கலர் கொடிகளை கட்டிக் கொண்டு லயத்ததை வலம் வந்து வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
எத்தனை அன்பு, பரிவு, பாசம், வாஞ்ஞை. “தோட்டக்காட்டான்” என்று பழித்து ஒத்துகியவர்களை எல்லாம் ஒட்டிக்கொண்டு உதட்டில் உறவாட வைத்தது ஒட்டு ஒட்டு மகியையே ……. மகிமை சாதிப்பெருமை பேசியவர்கள், சாதிச்சங்கம் வைத்து; தனது உறவுக்குள்ளேயே வசதிகளை, வாய்ப்புகளை பெருக்கி; பகிர்ந்து கொண்டவர்கள், வாயார “நாம் தமிழர், தமிழர்’ என வாய் இனிக்க பேசுகின்றனர். ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டு தமிழ், தமிழர், என்ற போர்வையில் மாரீசம்புரிகின்றனர். லயத்து பக்கத்திற்கு காலெடுத்து வைக்காதவர்கள் கூட தண்ணீர் வாங்கி குடித்து, ஓட்டுவேட்டை ஆடுகின்றனர். எப்படியெல்லாமோ வேஷம் போட்டு வென்று விட்டால் போதாதா? பதவிகளிலுள்ள பணவரவு சுக போகம் தோட்டத்தவருக்கு தெரியவா போகின்றது.
தேர்தல் காலத்தில்; “ஒப்பாரி சொல்லி அழக்கூட ஆள் இல்லாத” அனாதை பிணங்களுக்கும் மலர் வளையம், மரியாதை! போட்டி போட்டுக்கொண்டு அனுதாபம் தெரிவிக்கும் கூட்டங்கள் நிறைகின்றன. தோட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் வேறு! ஆள் ஆளுக்கு யார், யாரையெல்லாமோ கூட்டிக்கொண்டு வந்து வாக்கு வேட்டை ஆடுகின்றார்கள். தெய்வச் சிலைகள் வேறு சீரழிகின்றன! வோட்டுக்காகத்தான்….! எடுத்துக்கூறுவதற்கு கொள்கையில்லை. கோயிலுக்குச் சிலைகள்.
சிலை வடித்து, உயிர் கொடுத்து, கலை வளர்த்து கடவுள் பாதம் பணிந்தோருக்கு நிலையில்லாத பதவிக்காக தெய்வச் சிலைகள் .ம்…ம்
அம்மன் கோயில் திடலில் பைலா பாடலோடு கதம்பமாக ஒலிக்கும் ஒலிபெருக்கி பேச்சை கேட்டு “ஒட்டுப்போட்டு என்ன பிரயோசனம். நமக்கு என்ன காணி வீடெல்லாமா கிடைக்குது எலெக்ஷனுக்கு எலெக்ஷன் அடி உதை தானே கிடைக்குது?” என்று முணு முணுத்த பணிய லயத்து பாலாவை கணக்கப்பிள்ளை வாயடைக்கச் செய்கின்றார். “வாய் கொழுப்பு அடக்கு” என்று கணக்கப்பிள்ளைக்கு ‘ஹொந்தாய்” என்று சபாஷ் கூறிய வேட்பாளர் தோட்டத்தை விட்டு புறப்பட்டு போகும் போது, தனது வேனை நிறுத்தி பாலாவை முறைத்துப்பார்த்து “மம் பலாகண்ணங்’ கட்ட பரிசம் டவுமட்ட வர்ரெங் பலமு” என்று உறுமிவிட்டு போனார். “வேனும்” தன்பங்கிற்கு உறுமியது.
தேர்தல் தினம். தேர்தல் திருவிழா! வாக்களிப்புகளை கட்டியது. தோட்டத்தில் களிப்பு. கணக்கப்பிள்ளை வக்களித்து பிள்ளையார் சுழி போட்டார்.
தேர்தல் திருவிழா முடிந்தது. ஆட்சி அமைந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் தோட்டம் ஆவலுடன் காத்திருந்தது. அப்போது வடக்கில் கண்ணி வெடியில் சிக்கிய இராணுவ வீரர்களின் சடலங்கள் கொழும்பு கனத்தையில் நல்லடக்கம் செய்யும் போது வன்செயல்கள் வெடித்தன. யாருமே எதிர்பார்க்கவில்லை, பொரல்ல தோசைக்கடையில் ஆரம்பித்த தீ தேசத்தையே எரித்தது. லங்காதகனம் நாள் கணக்கில் வாரக்கணக்கில் நீண்டது. பசி பட்டிணி, பஞ்சம் தீர்ந்து நிம்மதியாக வாழலாம் என்றிருந்த வேளையில், இப்படி ஒரு பேரிடி… தமிழர்களின் வீடுகள், வியாபார ஸ்தலங்கள், ஆலயங்கள், தேர்கள், என்பவற்றுடன் விக்கிரங்கள் கூட அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கபட்டன. கொலை, கொள்ளை, மான பங்கம் என்பன கட்டுக்கடங்காமல் காட்டுத்தர்பாராக அரங்கேறின.
வரலாறு காணாத வன்செயல். ஆடி மாதம் கறுப்பு ஆடி மாதமானது. நாடெங்கிலும், மானமே திரையாய் அணிந்த தமிழ்ப்பெண்கள் ஈனபங்கப்படுத்தப்பட்டனர். மேகம் மூடிய மலைகள், அக்கினி மலைகளாகின. நாடெங்கிலும் இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் குற்றுயிரும் குலைஉயிருமாக அகதிகளாயினர்.
பஞ்சமாபாதகம்… தட்டிக்கேட்டது யார்? தோட்டத்தில் மிஞ்சியது என்ன? ஏன் எங்களை அடித்தார்கள்? வெட்டினார்கள்? எரித்தார்கள்? மானபங்கப்படுத்தினார்கள்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? தோட்டத்து மக்கள் அப்பாவிகளாக அழுதார்கள். உயிர்த்தப்பி பிழைக்க, காடுகளில், மானாப்புல் மலைகளில் தஞ்சம் அடைய அவையும் எரிக்கப்பட்டு… தேடி கண்டு பிடிக்கப்பட்டு… அனர்த்தங்கள்….
வவுனியா, கிளிநொச்சி, மன்னார் அகதி முகாம்கள் தோட்டத்து மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தன. வருஷக் கணக்கான அகதிமுகாம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வைரமிகு பாலைகளை வெட்டிச் சாய்த்து ஆழக்கிணறு வெட்டி வாழ்க்கையை ஆரம்பித்த போது மீண்டும் ஏமாற்றம் வாழ்ககைப் பயணத்தில் … புதிய சூறாவளி. போராட்டம்…. யுத்தம்… யுத்தம்…. உள்நாட்டு யுத்தம்.
கவலைகளே காலங்களாக தொடர… தொடர…
வடபகுதியில் போராட்டம். இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை. பங்கரில்” படுக்கை. நிமிர்ந்து நின்றால் தலைச் சிரச் சேதம்.” இந்தப் போராட்டத்தில் ‘ஷெல்” விழுந்ததில் சுப்பையா கணக்கப்பிள்ளை தனது ஒரு காலையும், தனது மூத்த மகளையும் இழந்தார். இழப்புகள் எண்ணில் அடங்காமல் தொடர்ந்தன. எஃகுப்பறவைகளின் இராஜ்ஜியம். அவற்றின் “திட்டிவிடபார்வைகளே” உயிரைக் குடித்தன.
கலவரத்தில் அநுராதபரத்தில் சிக்கிக்கொண்ட முரளி பதுங்கி இருந்தான். அப்போது தெரிந்த, உறவான முகங்கள் தேடி வர ஆறுதல் அடைந்தான். “சகோதரயா” என்று தோழமையை முன்நிறுத்தி முகம் மலர அழைத்து; அவர்கள் அடைக்கலம் தருவார்கள் என்று நம்பிக்கை கொள்ள; “இது சகோதர சமாச்சாரம்” இல்லை. “இரத்த வழி போராட்டம்” என்று மறுமொழி கூறியதோடு அவர்களில் சிலராலேயே தாக்கப்பட்டு நம்பிக்கை இழந்து; மன்னார் ஜெயபுரத்திற்கு வந்து சேர்ந்து விட்டது கணக்கப்பிள்ளைக்கு ஒரு வகையில் மன ஆறுதலாக இருந்தது. மானுடத்தை நேசித்த முரளி…
யுத்த மேகங்கள் ஓயவில்லை…
மானுடம் தோற்குமா? மானுடம் என்பது ? யுத்தம் யுத்த. மேகங்கள் ஓயவில்லை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காலை படகுத்துறையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி ஆபத்தான பயணங்கள் தொடர்ந்தன. மௌனம் பூத்த மனசுடன் முரளி வாசிப்பில் மூழ்கி இருந்தான். அவன் கையில் உள்ள நூல் “தேசிய இனங்களும் சுய நிர்ணயமும்…..” சுப்பையா மௌனத்தை கலைத்து “முரளி; நாமும் படகில் இந்தியா போய்விடுவோம்.” அது அழைப்பு மட்டுமல்ல அது உறுதியான வேண்டுகோள், கட்டளையாக ஒலித்தது. முரளி மறுக்கவில்லை. உயிர்தப்பினால் போதும் வேறு வழி ஏது பதுங்கு குழியில் எத்தனை நாள்கள் வாழ்வது? வறுமையின் கோரப்பிடிவேறு..
காலம் கற்றத்தந்த பாடம். தெய்வ நம்பிக்கையையே உறுதியாகக் கொண்டு கணக்கப்பிள்ளையின் குடும்பம் வங்காலையில் படகேறி ஜீவ மரண போராட்டத்தின் பின்; இராமேஸ்வரம் போய்ச்சேர்ந்தது. கடலில் புயலிலும், அலையிலும் குண்டடிப்பட்டும் படகு கவிழ்ந்ததும், உயிர் துறந்தும், உறவுகளை பிரிந்தும், ஏற்பட்ட அனர்த்தங்கள் எத்தனை எத்தனையோ……!!
ஒரு காலத்தில் தனது தகப்பனார், பாட்டனோடு தங்கச்சிமடம், அக்காமடம் கடந்து, இராமேஸ்வரத்தில் படகேறி தட்டப்பாறையில் தவழ்ந்து மன்னாரில் இறங்கி, சிலோனுக்கு வந்த கதையை சொல்ல, சுப்பையா கணக்கப்பிள்ளை கேட்டிருக்கின்றார்.
இப்போது அதே சரித்திரம் மன்னாரில் திரும்பவும் தொடர; அகதிகளாக தமிழ் நாட்டுக்கு தஞ்சம் கோரி வந்த போது, கடலில் அனர்த்தங்கள். படகு விபத்துகளில் மரணித்தவர்கள் போக எஞ்சி தப்பிப் பிழைத்தவர்கள் குமரி முதல் கேரளம் வரை அகதி முகாம்களில் சுப்பையா கணக்கப்பிள்யிைன் குடும்பம் திருவண்ணாமலையில் அமைந்த அடி அண்ணாமலை அகதி முகாமில். ஆம், அடி அண்ணாமலை கேம்பில் “ஆமாம் துணை வந்தணையும்சாரல் அண்ணாமலையாரே” என்று அண்ணாமலையானை துதித்தபடி. அகதி முகாம்களில் பல வருடங்களாக அகதிகளாக அகதி வாழ்க்கை….. “வடக்கத்தியான்” கள்ளத்தோணி இந்தியாக்காரன் என்ற ”நாமங்கள்’போய் தன் சொந்த தாய் நாட்டிலேயே சிலோன் அகதி’ சிலோன் காரன்” என்ற பட்டப் பெயரில் தன் சொந்த தாய் நாட்டிலேயே முத்திரை குத்தப்பட்டு வாழும் நிலை. வாழ்க்கை ஒரு சிறைதானா? வாழ்வும் ஒரு திறந்த வெளி சிறைதான்.
கால ஓட்டம் தான் எத்தனை வேகமாக சுழலுகின்றது.
காலசக்கரம் சுழல கணக்கப்பிள்ளை கண்ணை மூடி விட்டார். சுகாதாரமற்ற சூழல், நோய்கள் மனக்கவலை. சிதைந்து போன குடும்பம். இப்படி லட்சக்கணக்கானோர்….
வாட்டமே வாழ்க்கையாக தொடர….
வடக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. அகதிகள் சொந்த ஊருக்குத் திரும்பலாம் அகதி வாழ்வில் அலுத்துப்போன பலர் அவசர, அவசரமாக மூட்டை கட்டுகின்றனர். இலங்கைக்குத் திரும்புகின்றனர்.
அகதி முகாமில் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு முரளியின் கையிலும் அது திணிக்கப்படுகின்றது. காடாகக் கிடந்த மலையகத்தை தோட்டங்களாக்கி, அந்தப் பசுமையை இதயத்தில் கொலுவேற்றி, நேசித்து, பூஜித்த அந்த மலைகள், அக்கினி மலைகளாக மாறி தீயிட்டு, கொழுத்தி சுட்டெரித்த போது, அவன் நேசித்த மானுடம், மனித நேயம் என்பதெல்லாம் அவனை நிலை கலங்கச் செய்து நிர்க்கதி ஆக்கி; துரத்தி; விரட்டி விரட்டி அடித்த போது
பிறந்தமண்ணை நேசித்து, பிரஜா உரிமை பெற்று ….; அவன் இதயத்கை சுட்டெரித்த அந்த மலைகளை, அந்த முகவரியை, தேசத்தை மீண்டும் நினைப்பானா?
இந்த ஜீவ மரண போராட்டத்தில் வாழப் பழகிக்கொண்டு, அங்கேயே கல்லாய் சமைந்து, இராமரின் பாத தரிசன விமோஷனத்தை கூட நினைத்துப் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் உறவுகளுடன்; இனத்துடன் மீண்டும் இணைவானா?
சுட்ட மண்ணா? பச்சை மண்ணா? எங்கும் மண் தான். இந்த உலகமே மண் தான். ஆனால் நாடு, தேசம் என வரம்புக்கட்டி பிரித்து, பிரிவுகண்டு மனிதன் உயர்ந்தானா? அல்லது தாழ்ந்தானா? சிறுபான்மையானவர்களால் நிம்மதியாக வாழ முடிந்ததா?
முரளி என்னதான் செய்யப்போகின்றான்? சட்டத்தின் பிடியில் “அகதி” என்ற பதிவில்… ஆயிரம் ஆயிரம் இலட்சோப இலட்சமுரளிகள் என்னதான் செய்யப்போகின்றார்கள். தாய்நாடு எது..? வாழ்வாதாரம், வாழ்விடம், இனத்துவம், எது? எது?
இருதேசங்களில், இணைந்திருக்கின்ற; மனித சங்கிலிகளின் இணைவு… சங்கமமில்லாத நதிகளாக…
– வீரகேசரி, 2011.
– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
![]() |
சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன. வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க... |
