இணையச் சிலந்திகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 5, 2026
பார்வையிட்டோர்: 127 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

மாலை நேரத்து அந்தப் பெரு மண்டபம் இசையாலும், வண்ண விளக்குகளின் கண்கவர் ஒளியாலும் நிறைந்திருந்தது. மேடையில் ஆகாஷ் நின்றிருந்தான். பதின்ம வயதின் துள்ளலோடும் அசாத்திய நம்பிக்கையோடும் அவனது விரல்கள் கிற்றார் கம்பிகளில் மின்னல் வேகத்தில் நடனமாடின. ஆரம்பத்தில் விரல் நுனிகளில் காயத்தையும் கடுமையான வலியையும் ஏற்படுத்தும் அந்த வாத்தியத்தை, அவன் இப்போது வாசிக்கிற லாவகம் அலாதியானது. இரும்புக் கம்பிகள் விரல் சதைகளை அறுத்தாலும், அவன் முகத்தில் இருந்த அந்தப் புன்சிரிப்பு ஒரு நொடி கூட மாறவே இல்லை. தன் வாசிப்பைத் தானே ரசித்து, தாளமும் சுதியும் ஒரு மில்லிமீட்டர் கூட விலகாமல் அவன் இசைத்த போது, அவனது உடல்மொழியில் ஒரு அசாத்திய ஆளுமை மிளிர்ந்தது. அந்தப் பகுதியின் இளையவர்களின் உள்ளங்கவர் தனிப்பெரும் ராஜா அவன். அவனது ஒவ்வொரு இசை மீட்டலுக்கும் அரங்கம் அதிரும் கைதட்டல்களும் ஆரவாரங்களும் காதுகளைத் துளைத்தன.

அந்த மண்டபத்தின் ஒரு இருண்ட மூலையில், தன் ஆடம்பரமான உடையலங்காரத்துடன் அமர்ந்திருந்தாள் மாலினி. இருபத்தேழு வயதான அவளுக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. ஆடம்பரமான, வசதியான வாழ்க்கை என்பது டிஸ்கோ மற்றும் பார்களில் குட்டிகரணமடித்து இரவுகளைக் கழிப்பதுதான் என்று தீவிரமாக நம்புபவள் அவள். அவளுக்கு எதிலும், எப்போதும் ஒரு முழுமையான திருப்தி இருக்கவில்லை. அவளது கணவன் அவளுக்கு வேண்டிய அனைத்துப் பொருளாதார வசதிகளையும், சொகுசு வாழ்க்கையையும் வாரி வழங்கியிருந்தான். எனினும், அவளது மனம் எப்போதும் ஒருவித வெறுமையையும், புதுமையான கிளர்ச்சியையும் தேடி அலைந்தது. அதன் விளைவாக, தன் கணவனோடு தினசரி முரண்பட்டு, அவனைக் குடும்ப வாழ்விலிருந்து முற்றிலும் தள்ளி வைத்திருந்தாள்.

மாலினியின் இந்த விபரீதமான தேடல்களுக்கும், கணவனுடனான ஏமாற்றங்களுக்கும் தீனி போட இணையத்தில் இயங்கும் இரகசிய சேவை வலைதளங்கள் அவளுக்கு உதவின. இன்றைய இணைய வலைப்பின்னல் இளையோர் முதியோர் அனைவரையும் பிடித்துண்ணும் பெரும்பேதச் சிலந்தி.

இன்றைய நவீன ஏ.ஐ (AI) யுகம் மக்களை இயல்பு வாழ்விலிருந்து, உண்மையான மனித உணர்வுகளிலிருந்து வெகுதொலைவு இழுத்துச் சென்றுவிட்டது. கல்லூரி இளைஞர்களைத் தன் தற்காலிக இன்பத்திற்காகப் பகடைக்காயாக்கும் நவீன வலைப்பின்னல் நிறைந்த அபாய உலகமது. மாலினியும் அந்த மாய உலகிற்குள் முழுமையாக அடைக்கலமாகியிருந்தாள். அதில் கிடைக்கும் தற்காலிகத் தொடர்புகளும், போலிப் பாராட்டுக்களும் அவளுக்கு ஒரு போதையாகவே மாறியிருந்தன.

மண்டபத்துள் சுருதி சுத்தமாக ஒலித்த இசையை விட, மேடையில் தெரிந்த ஆகாஷின் அந்தப் புன்சிரிப்பும், அவனது இளமைத் துடிப்பும்தான் மாலினியைப் பெரிதும் ஈர்த்தது. அவனது இளமையும், துள்ளலும் அவளுக்குள் ஒரு புதுக் கவர்ச்சியை ஏற்படுத்தின. இசை நிகழ்ச்சி முடிந்ததும் அவள் நேராக அவனிடம் சென்றாள். ஆகாஷின் திறமையைப் பாராட்டி, வார்த்தைகளால் அவனை வசியப்படுத்தத் தொடங்கினாள். “உன் விரல்களில் ஏதோ ஒரு மாயாஜாலம் இருக்கிறது ஆகாஷ்… உன் இசை என் தனிமையைப் போக்குகிறது,” என்று அவள் குழைந்து பேசினாள்.

அவள் பேசிய அந்த அன்பு வார்த்தைகள், அந்தப் பதின்ம வயது சிறுவனின் இதயத்தில் முதல் காதலின் சுருதியை மீட்டியது. உலகமறியா அந்தப் பையன் அவளது வார்த்தைகளை அப்படியே தெய்வீக உண்மை என்று நம்பினான். அவளை ஆகாஷ் சட்டென்று விரும்ப இன்னுமொரு முக்கியக் காரணமும் இருந்தது. அவனது கனவுலக கன்னியான, உலகப்புகழ்பெற்ற அமெரிக்கப் பாப் பாடகி ‘அரியானா கிராண்டே’ போன்ற தோற்றமுடையவளாக மாலினி இருந்தாள். அந்தத் தோற்ற மயக்கமும், அவள் காட்டிய போலி அன்பும் ஆகாஷை அந்த ஆபத்தான நவீன வலைப்பின்னலுக்குள் மெல்ல இழுத்துச் சென்றது.

ஆகாஷின் பதினேழு வயது என்பது உடலால் இளைஞனாகி, மனதால் இன்னும் முழு வளர்ச்சி பெறாத ஒரு விசித்திரமான பருவம். உடலுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், தங்களுக்குள்ளேயே ஒரு பெரும் போராட்டத்தை நடத்தும் வயது அது. இந்த பலவீனமான தருணத்தில் மாலினியின் அதீத கவனிப்பும் வசிய வார்த்தைகளும் அவனுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அது காதலா, காமமா என்று பிரித்தறியத் தெரியாத வயதில் அவன் அவளிடம் முழுமையாக வீழ்ந்தான். தன் உயிரான கிற்றாரை விடவும், தான் பெற்ற இசையை விடவும் மாலினியே அவனது உலகமாக மாறினாள்.

நாட்கள் நகர நகர, ஆகாஷின் மனதிலிருந்த அந்த ஈர்ப்பு, அவளைத் தன் வாழ்நாள் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதமாக மாறியது. ஒருநாள், தன் தூய்மையான காதலுடன் அவளைத் மணம் முடிக்கக் கேட்டான். “மாலினி, நீதான் என் உலகம். நாம் ஏன் தாலி கட்டிக் கொண்டு கணவனும் மனைவியாக ஒன்றாக வாழக் கூடாது?” என்று அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அவன் ஏக்கமாகக் கேட்ட போதுதான், அந்தப் பேரிடி அவனுக்காகக் காத்திருந்தது.

மாலினி அவனை ஏளனமாகப் பார்த்து, அலட்சியமாக மறுத்தாள். “உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ஆகாஷ்? எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. நீ இன்னும் உருப்படியா சம்பாதிக்கக் கூடத் தெரியாத ஒரு கல்லூரி மாணவன். இதோடு இதை நிறுத்திக்கொள். இதெல்லாம் சும்மா ஒரு பொழுதுபோக்குதான், டைம்பாஸ்!” என்று அவள் உதிர்த்த வார்த்தைகள், ஆகாஷின் இதயத்தை சுக்குநூறாக்கின. அவனது காதல் சங்கீதம் ஒரே நொடியில் சுதி தப்பி அவனுக்குள் உடைந்து சிதறியது.

பத்தாண்டுகள் இளையவனான ஒரு சிறுவன் உணர்ச்சிவசப்பட்டு நெருங்கி வரும்போது, அவனைக் கோடிட்டுத் தள்ளி நிற்கச் செய்வதும், இது சாத்தியமில்லை என்று பக்குவமாக அறிவுறுத்துவதும் ஒரு மூத்த, தாயான பெண்ணின் சமூகக் கடமையல்லவா? ஆனால், மாலினி தன் சுயநலத்திற்காக அவனது அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டாள். பதினேழு வயதில் அந்த அதிரடி ஏமாற்றத்தையும், கொடூரமான நிராகரிப்பையும் அந்தச் சிறுவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கிற்றார் இசையில் ஒருமுறை கூடத் தடுமாறாத அவனது மனம், வாழ்க்கையின் இந்தத் திடீர் திருப்பத்தில் முற்றிலும் நிலைதடுமாறியது.

விரக்தியின் உச்சத்துக்கே சென்ற அவன், “நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன்” என்று மாலினிக்குக் கதறி அழுது குறுஞ்செய்திகளை அனுப்பினான். தான் தற்கொலை செய்யப் போவதாக, அதற்கான ஆயத்தப் படங்களையும் ஆதாரமாக அவளுக்குத் தட்டச்சு செய்து அனுப்பினான். அந்த இறுதி மணித்துளிகளுக்குள் மாலினி நினைத்திருந்தால், அவனைக் காப்பாற்றியிருக்க முடியும். அவனுடன் தற்காலிகமாகச் சமாதானமாகப் பேசி, அவனது பெற்றோருக்கோ அல்லது காவல்துறைக்கோ உடனடியாகத் தகவல் சொல்லி அவனுக்கு ஒரு நல்ல மனநல ஆலோசனையை வழங்கியிருக்கலாம்.

ஆனால், அவளிடம் அந்த மனிதாபிமானம் இருக்கவில்லை. சமூகத்திற்குத் தெரிந்தால் தன் அந்தஸ்து, மானம் என்னவாகும் என்ற சமூகப் பயமும், தன் தவறு வெளியே தெரிந்துவிடும் என்ற சுயநலமும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. அவள் மொபைலை அணைத்துவிட்டு மௌனமாக இருந்தாள். அந்த ஏமாற்றத்தின் உச்சத்துக்கே சென்ற ஆகாஷ், வேறு வழியறியாமல் தன் பதின்ம வயது வாழ்க்கையைத் தற்கொலை மூலம் மிகக் கொடூரமாக முடித்துக் கொண்டான்.

அவனது மரணத்திற்குப் பின், இந்தச் சமூகம் இரு வேறு பிரிவுகளாகப் பிரிந்தது. சில ஊடகங்கள், “இது ஒரு மூத்த பெண்ணால் சிறுவனுக்கு நிகழ்ந்த கொடுமையான சிறுவர் துஷ்பிரயோகம்” என்று உண்மையை உரக்க எழுதின. அவனது பதின்ம வயது பலவீனத்தைப் பயன்படுத்தி, அவனது மரணத்திற்குத் தூண்டுகோலாக இருந்த மாலினியைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தின.

ஆனால், வக்கிர எண்ணம் கொண்ட வேறு சில ஊடகங்களோ, “அது அவனது வயது கோளாறு, அவனது அரிப்பு” என்று மிகக் கொச்சையாகவும் இரக்கமின்றியும் எழுதின. ஒரு தாயாக, சமூகத்தில் பொறுப்பான இடத்தில் இருக்கும் ஒரு பெண் செய்த துரோகத்தை மூடிமறைக்க, மறைந்த அந்தச் சிறுவனின் மீதே அதிக பழி சுமத்தும் இந்தச் சமூகத்தின் அவல நிலை இதன் மூலம் வெளிப்பட்டது.

ஆகாஷ் யாருக்காகத் தன் உன்னதமான உயிரைக் கொடுத்தானோ, அந்த மாலினி சில நாட்களிலேயே அந்த அதிர்ச்சியிலிருந்து மிக எளிதாக மீண்டுவிட்டாள். அவனது நினைவுகளைத் தன் மனதிலிருந்து ஒரு சிறு தூசியைப் போல ஊதித் தள்ளிவிட்டு, தன் உடல் சுகத்திற்காக இணையத்தின் வழியே வேறு ஒரு ஆண் துணையோடு உல்லாசமாக வாழத் தொடங்கினாள்.

நீ யாருக்காக அழிகிறாயோ, அவர்கள் உன்னை மறந்துவிட்டு தங்களின் அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கி மிகச் சாதாரணமாக நகர்ந்துவிடுவார்கள் என்பதே இவ்வுலகத்தின் மிகக் கசப்பான உண்மை. மாலினியைப் போலத் திருமண வாழ்க்கையில் நிறைவு காணாத, உயர் வருமானம் கொண்ட பல பெண்கள், தங்களின் சுய இன்பத்திற்காக இது போன்ற இரண்டுங்கெட்டான் வயது மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நவீனச் சீரழிவை ஊக்குவிக்கும் வலைத்தளங்கள் இன்று உலகெங்கும் பெருகி வருகின்றன. இந்த மாய வலைப்பின்னலில் சிக்கி, தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு தற்கொலைக்குத் தள்ளப்படும் பதின்ம வயது இளைஞர்களும் யுவதிகளும் இந்த உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய நவீன யுகத்தின் பேராபத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *