இடிபாடுகள்
கதையாசிரியர்: புலோலியூர் செ.கந்தசாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 955
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத்தைக் கீறி வையத்தைப் பறித்தெடுக்கத் துடிக்கும் விடுதலை வீரனின் ஆவேசத்துடன் காக்கைக் கூட்டங்கள் பறந்து ஆர்ப்பரிக்கும் விடியல் பொழுது.
காலை ஆறரை மணி இருக்குமோ!
அந்தத் தனியார் கல்வி நிறுவனத்தில் இருந்து வண்ணப்பறவைகளாய் வெளியேறியது மாணவியர் குழாம்.
அந்தச் சிங்காரச் சிட்டுக்கள் ஆளுக்கொரு துவிச்சக்கர வண்டி மீதேறிச் சிறகை விரித்தன. ஏதோ வீதி அவர்களின் பாட்டன் வீட்டுச் சொத்து என்ற தோரணையில் பாதையை மூடிய படி அந்த ஐவரும் சமாந்தரமாகப் பறந்து கொண்டு…
கல்விக் கூடத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள், இவர்களுக்கு இந்தப் பாதை விதிமுறைகளையும் கொஞ்சம் போதித்து வைத்தால் என்ன என்று காண்பவர் மனம் ஆதங்கப்படும்.
போகிற போக்கில் ராஜி என்ற வண்ணக்கிளி திருவாய் மலர்ந்தது. “இண்டைக்குச் சுகந்தியின்ரை அலங்காரம் கலக்கலடி. தேவயானி மாதிரி…….”
“இல்லாட்டி அவள் அழகில்லை எண்டோ சொல்ல வருகிறாய்” அமுதா இடக்காக.
“அதுக்கில்லையடி! எப்பவும் அழகு சுந்தரிதான் அவள். இண்டைக்கு அலங்காரம் பிரமாதமாக இருக்கு அதைச் சொல்ல வந்தால்….”
அப்பொழுது….!
எதிர்த் திசையில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த ஆதவன் சுகந்தியை நோக்கிக் கண்ணைச்சிமிட்டி, நாவைத் தொங்கப் போட்டு ஒரு அழகுக் கோலம் காட்டி விட்டு “விசுக்” என்று நகர்ந்தான்.
“இப்போ கண்டீரோ அலங்காரத் தின்ரை ரகஸ்யம். அண்ணனும் நோக்கினான், அவளும் நோக்கினாள்” அமுதா நக்கலடித்தாள். கடைவாயில் புன்னகையைக் கசியவிட்டபடி.
“போங்கோடி…” சிணுங்கினாள் சுகந்தி. “இவனை யார் பார்த்தது? எனக்குக் காதலும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை. உன்னை யாரும் காதலிப்பாளவையோ…. குடியன்…. பெருங்குடியன்… வெறிக்குட்டி”
“ஓ….! பெருங்குடியன் ……” எல்லோரும் ‘கொல்’லென்று சிரிக்க சுகந்திக்குப் பற்றிக் கொண்டு வந்தது. எல்லோரையும் எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.
“அதுக்கேனடி வெறுக்கிறாய்… இது ஒரு தலைராகம் போலை…. விடுங்கடி” என்றாள் அமுதா ஒரு போலிப் பெரு மூச்சை உதிர்த்தபடி.
அப்பொழுது சங்கர் எதிரில் வந்தவன் வெகு பவ்வியமாக நல்ல பிள்ளைத்தனமாக இவர்களை விலத்திக் கொண்டு சென்றான்.
“பாரடி, ஆளைத் தெரியுதோ?”
“ஆரடி அது?”
“இவர்தான் சங்கர் நளினியின்ரை காய்”
“சரி தான் போடி. இவன் எங்கேயிருந்து வருகிறானடி. அது “ஓல்ட் நியூஸ்” இவர் இப்போ மாலதிக்கெல்லோ ‘லைன்’ அடிச்சுத் திரியிறார்”
“பாருங்கடி இவனை. இவன் நளினிக்கெல்லோ ‘லவ்’ அடிச்சுத்திரிஞ்சவன். அவளைவிட்டு இப்போ மாலதி யோடை… என்ன ஆண்களோ….காதலும் கத்தரிக்காயும்…” சலிப்புக் காட்டினாள் ராஜி.
இனி இவர்கள் வீடு போய்ச்சேரும் வரை கேலியும் கிண்டலும் இவர்கள் பேச்சாக இருக்கும். சிரிப்பும் கும்மாளமும் மூச்சாக, கலகலப்பும் வளவளப்பும் ‘சைக்கிள்’ பாய்ச்சலாக…. அவர்கள் உலகமே தனிதான் போங்கள்.
அவர்கள் ஓராங்கட்டைச் சந்தியைத்தாண்டி பிரியா தியேட்டருக்கு அண்மையில் அந்த வளைவில் திரும்பும் போது சடக்கென்று எதிரில் துவிச்சக்கரவண்டியில் வந்த வயோதிபர் இவர்களின் வண்டிகளோடு மோதப் போக. இவர்கள் ஒவ்வொரு வராய் வண்டியை வெட்டி ஒடித்து மடக்கித் திருப்பி ஒருவாறு சமாளித்து நிமிர்ந்து நோக்கினால் கிழவன் இவர்களை நோக்கி ஒரு முறைப்பு முறைத்து, கீழ் உதட்டை மேல்வாய்ப்பற்களால் கவ்வி அழகு காட்டி அகன்றது.
“பார் சனியனை, இந்த நைன்ரிக்கு இப்பவும் ஏதோ வேணும் போல. வீதியிலே சைக்கிள் ஓடத் தெரியேல்ல.”
“பாவமடி! பரிந்து பேசினாள் கவிதா. “வயதுபோன மனுஷன்…” வீதியை மூடிய படி ஓடிவந்தது எங்களிலும் குற்றம்தானே”
“போடி ! இவ அவருக்குப் பரிந்து பேசவந்திட்டா. வயது போனா அதுக்கேற்ற மாதிரி ஒதுங்க வேண்டியது தானே! இந்த ஆள் இப்படித்தான் ஒரு மாதிரி….”
“ஓமடி. இவர் கொஞ்சநாளா இப்படித்தான்…. தொடருவதும் இடிப்பதும்…. நொடிப்பதும் ” ஒத்தூதியது அமுதா.
“இதுக்கு ஒரு ‘ஐடியா’ நான் சொல்லட்டுமா” ராஜியின் திடீர் அறிவிப்பு.
“என்னடி ஐடியா” வண்ணப்பறவைகள் கூட்டமாகக் கீதமிசைத்தன.
ராஜி சிறிது சரிந்து அருகில் ஓடிக்கொண்டிருந்த வதனியின் காதில் கிசுகிசுக்க……
….வதனி சுகந்திக்கும். சுகந்தி அமுதாவுக்கும், அமுதா கவிதாவுக்கமாக…. செய்தி அஞ்சல் முறையில் கிசுகிசுக்கப்பட்டது.
“மணியான ஐடியா, ராஜிக்கு ஒரு மாலை போடலாம்: இந்த பிரதானமான ஐடியாவுக்கு” இது சுகந்தி.
“வேண்டாமடி… பாவமடி கிழவன்” கவிதா கெஞ்ச,
“போடி இவங்களுக்கெல்லாம் நல்ல பாடம் படிப்பிக்க வேணும்” என்றாள் ராஜி கண்டிப்புடன்.
பறவைகள் ஒரு புது உற்சாகத்துடன் தத்தம் வீடு நோக்கிப் பறந்தன.
அடுத்த நாள்
படிப்பறையில் யாருக்குமே இருப்புக் கொள்ளவில்லை. ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தில் அவர்களின் மனம் ஒன்றினால்தானே. தாங்கள் அரங்கேற்றப் போகும் வீதி நாடகக்தைப் பற்றிக் கற்பனையின் சுகத்தில் திளைத்திருந்தனர்.
“அம்மாடியோவ் இந்த மாஸ்டர் என்னடி அறுக்கிறார்” என்று புளுங்கியபடி இருந்தவர்களுக்கு, “இன்றைய பாடம் இத்தோடு முடிந்தது….இனி..” என்று தமிழோசை புகழ் ஆனந்தியின் பாணியில் ஆசிரியர் அறிவித்ததும்தான் தாமதம் அவர்கள் பரக்கப் பரக்க வெளியேறி சைக்கிளில் தாவி .
அப்போது சொல்லி வைத்தாற் போல் எதிரே கிழவன் தூரத்தே வருவதைக் கண்ட ராஜி சுகந்திக்கும் வதனிக்கும் கண்ஜாடை காட்டினாள்.
சுகந்தியும் வதனியும் படக்கென ஒரு ஒழுங்கையில் திரும்பி குறுக்கு வழியே ஓடிச்சுற்றி மீண்டும் பிரதான வீதியில் ஏறி இப்போது கிழவனுக்கும் பின்னால் அருகே… மிக அருகே….
இப்போது ஏறக்குறைய எல்லோருமே கிழவனைச் சுற்றி வளைத்து
கிழவன் ராஜியை மோதுகிறாற் போல்’ வேப்புக்காட்டிவிட்டுத் துவிச்சக்கரவண்டியை வெட்டி அப்பால் செல்ல எத்தனிக்க சுகந்தியும் வதனியும் கிழவனை இப்பாலோ அப்பாலோ நகரவிடாமல் அவரவர் துவிச்சக்கர வண்டியை முறித்து மடக்கி
“ஐயோ ! என்ர தெய்வமே…”
கிழவன் கால் இடறி சைக்கிளோடு
தடம் புரண்டு வீதியில் விழ…
அங்கே அவர்கள் யாரையும் காணோம். எல்லோரும் ஒழுங்கை ஊடாக திரும்பி மாயமாகிவிட்டனர்.
வீதியில் விழுந்த கிழவன் தடுமாறி நிமிர்ந்து தன்னைச் சுதாகரித்து எழுமுன்பு வேகமாக வந்த ஜீப் ஒன்று கிழவன் உடலைப் பதம் பார்த்துக்கொண்டு, சைக்கிளை நொருக்கிக் கொண்டு பயங்கர ‘கிறீச்” சலுடன் சிறிது தூரம் அப்பால் சென்று குலுங்கி நின்றது.
கிழவன் இரத்த வெள்ளத்தில் !
அடுத்தநாள் அவர்கள் எல்லோரும் சந்தித்தபோது அவர்கள் செய்த ‘மடைத்தனத்தை’ நினைத்து மனம் மறுகிக் கொண்டனர். ஒரு அவசர ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தனர். அதன் படி மாலை வேளையில் எல்லோரும் ஒன்றுகூடி கிழவனது வீட்டைத் தேடிச் சென்றடைந்தனர்.
புதுமை நாகரிகம் புரைக்கேறிவிட்ட இக்கால கட்டத்திலும் பழமையின் சுவடுகள் இன்னும் முற்றாக அற்றுவிடவில்லை என்பதை நிரூபிப்பதை போல் ஒன்றரை ஆள் உயர சுற்றுமதிலும்.
வீட்டு ‘படலை” திறந்தே கிடக்கிறது. முற்றம் முழுவதும் குப்பையும் கூழாமுமாய்… செல் வீச்சினாலும் ‘பொம்பரின்’ அட்டகாசத்தினாலும் வீட்டினுள் பெரும்பகுதி கொலுக் குலைந்து சீரழிந்து கிடந்தது. சிதைவுகளும் சிதறலுமாய் கிடந்த இடிபாடுகளுக்கிடையிலும் தப்பிப்பிழைத்துக் கிடக்கும் ஒரு பக்க அறையில்தான் அவர்களின் வாசம். வீட்டுச் சொந்தக்காரன் கனடாவில் என்பதால் இவர்கள் இதில் தஞ்சமடைய வாய்ப்பாகப் போய் விட்டது.
‘ஆரது?” தீனமாய் வினாவிக் கொண்டு வெளிப்பட்டது ஒரு மெலிந்த உருவம். காலத்தின் சுவடுகள் அவள் ஒட்டிய கன்னங்களில் குரூரமாகத் தம் ரேகைகளைப் பதித்திருந்தன. துயரத்தில் தோய்ந்து போன விழிகள். அந்த அபலையின் முகத்தில் கவலையின் திவலைகள்.
“என்ன பிள்ளை வேணும் ?”
“ஒன்றுமில்லை அம்மா ! அந்த விபத்து நடந்த அப்பு வீடு இதுதானோ?”
“ஓம் பிள்ளை ! என்ன விசயம்? “
“இல்லை அம்மா, அண்டைக்கு வீதியிலை சைக்கிளிலை வந்த நேரம் தான் அவர் சைக்கிளை மோதப்போக… நாங்கள் விலத்த முயற்சிக்க அந்த விபத்து நடந்தது”.
“அப்படியோ சங்கதி… அவருக்கு சிக்காரான அடிபிள்ளை. தெருவிலை நிண்ட ஒரு லொரிக்காரன் தான் அவரை ஆஸ்பத்திரியிலே சேர்த்து…”
“அதை ஏன் பிள்ளை கேட்பான். இந்த மனுஷனுக்கு மூளை கொஞ்சம் மாறாட்டம்..”
தோழிகளின் விழிகள் ஒன்று சேர ஆச்சரியத்தில் அகல விரிந்தன.
கிழவி சுவரில் தொங்கிய சட்ட மிட்ட புகைப்படம் ஒன்றைச் சுட்டிக் காட்டினாள்.
“அந்தா, அந்த போட்டோவில இருக்கிறாளே அவள்தான் கமலி. எங்கள் ஒரே மகள்.”
மீண்டும் ஒரு ஆச்சரியக் குறி தோழிகளின் வதனத்தை ஆட்கொண்டது. அவர்கள் வெகு உன்னிப்பாக கிழவி சொல்லும் விருத்தாந்தத்தைச் செவி மடுத்தனர்.
ஒருநாள் ரியூஷன் எண்டுசொல்லி காலை ஆறுமணிக்கு போனவள் பத்துமணியாகியும் திரும்பி விரவில்லை. விசாரித்துப்பார்த்தால், சந்தியில் ரவுண்ட் அப்’ பில் தலை ஆட்டிமுன்னே நிறுத்தி வைத்திருந்ததாகக் கேள்விப்பட்டுப் போய் இராணுவ முகாமில் கேட்டுப் பார்த்தால் அப்படி ஒரு ஆள் பிடிபடவில்லை என்று கையை விரிச்சினம்.
பிறகு அடுத்த முகாம் அண்டிய முகாம் எண்டு பலாலி ஈறாகப் பார்த்துக் களைத்தது தான் மிச்சம். அன்று தொட்டு ஆலோசிச்சு, ஆலோசிச்சு ஆள் மூளையை விட்டுவிட்டார். ஒழுங்கான சாப்பாடு இல்லை… தொழில் துறையில்லை…. பைத்தியமாகித் திரிகிறார்…. நான் தான் இடியப்பம் பிட்டு அவித்துச் சாப்பாட்டுக் கடைக்குக் குடுத்து அரை வயிறும் கால் வயிறுமாகக் காலம் கழியுது.
“இப்படி ஒரு நாளில் தான்….”
கிழவி சுகந்தியைச் சுட்டிக்காட்டினாள்.
சரியாகப் பத்தெழுத்தும் பாவனையும் இந்தப் பிள்ளை கமலியின்ரை சாயல். இந்தப் பிள்ளையைக் கண்டால் போதும் கமலி என்று சொல்லிக் கொண்டு பின்னால் போவார். இவளைக் கண்டால் ஒரு சந்தோஷம். இப்படித்தான் அண்டைக்கும் இந்தப் பிள்ளையைத் தொடர்ந்திருக்கிறார் போலை. எங்களின்ரை விதி அப்படி…. விபத்து நேர்ந்து போச்சு. இனி அவர் தப்பிப்பிழைக்கிறது எண்டால்….
வார்த்தைகளில் அவநம்பிக்கை இழையோடியது. அவள் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
“நாங்கள் செய்த பாவம் பிள்ளையை வாழுகிற வளர்கிற வயசில பறி கொடுத்திட்டு நிற்கிறம். அது சீவனோடு தான் இருக்குதோ, இல்லை பலாலியிலோ களுத்துறையிலோ… அனுராதபுரத்திலோ இல்லை செம்மணியிலோ யார் அறிவார்.
நாங்கள் போகாத இடமுமில்லை. தேடாத தளமுமில்லை. முறையிடாத பேருமில்லை. எல்லா கட்சிகளின்ரை கவனத்துக்கும் கொண்டு போனதுதான். மனித உரிமைக் குழுவிலுந்தான்…
அங்கே போனபோது தானே கண்டது. எத்தனை பாவிகள் வீட்டில் வைத்து தொலைந்து போனவரின் பெற்றோர் பாதையிலை. பாடசாலையலை போனவழியிலை தவறிய பிள்ளைகளின் பெற்றோர். உறவினர். கணவனைத் தொலைத்த இளம் பெண்கள். பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர்.
அப்போதுதான் எண்ணினன். இது எனக்கு மட்டும் ஏற்பட்ட இடிபாடு இல்லை. இது நாடளாவிய சோகம். எங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட சாபக் கேடு எண்டு மனத்தைத் தேற்றிக் கொண்டேன். ஆனால் இந்த மனுஷன்ரை மூளை பிசகிக் கிடக்குது.
இனி நானும் மூளையை விட்டால் இந்த மனுஷன்ர கதி… இனி இங்கே முழிக்கிற இந்தப் பாலகன்ர கதி… அது அந்தரிச்சுப் போகும்.
நானும் மனதைக் கல்லாக்கி…. என்ர பிள்ளையின்ரை செய்தி வரும்…. எங்களுக்கும் விடிவு வரும்… ஒரு காலத்தை நெட்டித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. இப்போ இந்த மனுசன்…. இப்படி ஐயோ ! இனி எங்களுக்கு ஆர் துணை மார்பில் அடிக்காத குறையாக விம்மி விதிர்விதிர்த்து….
“அம்மா! அழாதையுங்கோ! தழிழன்ரை விதி இதுவாகப் போச்சு! இனி நடக்கிறதை காணவேண்டியதுதான்”
காணாமல் போனவைக்கு நஷ்டஈடு குடுக்கிறதாகச் செய்தி வந்தது. பிறகு சில பேரின்ரை இருப்பிடமே தெரியவில்லை எண்டு செய்தி வந்தது. மொத்தத்தில செம்மணி விவகாரம் புகைஞ்சு போச்சு.
இழந்த உயிருக்கு என்ன தொகை குடுத்தாலும் ஈடாகுமே ஆனால் அப்படி தத்துவம் பேசிப்போட்டு இருக்க மனம் கேட்குது. இல்லையே ! பெற்ற வயிறு பற்றி எரியுதடி. நான் தனிச்சுப்போனனடி…
“நீங்கள் தனியில்லை அம்மா நாங்கள் உங்கள் பிள்ளைகளைப் போல உறுதுணையாக இருப்போம் யோசியாதையுங்கோ….”
அடுத்த நாள் காலையில் அவர்கள் எல்லோரும் வைத்திய சாலைக்குச் சென்று கிழவனைப் பார்ப்பதாக உறுதியளித்துவிட்டு தோழிகள் பிரிந்தனர்.
ஏற்கனவே தீர்மானித்ததுபோல் தோழிகள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக்கொண்டனர். சுகந்தி மட்டும் வந்து சேரவில்லை. எல்லோர் முகத்திலும் ஒரு வித சோகத்தின் சாயல். அவர்களுக்கு இயல்பாகவேயுள்ள குதூகலமும் உற்சாகமும் எங்கே முடங்கிவிட்டதோ! கை மணிக்கூட்டையும் பாதையையும் அடிக்கடி மாறிமாறிப் பார்த்த வண்ணம் ஒருவித பரபரப்பில் யாவரும்.
“அதோ சுகந்தி” கூவினாள் வனிதா.
சுகந்தியைக் கண்டதும் எல்லோரும் வியப்பின் விளிம்பில்… “இது சுகந்தி தானா? முதல் நாள் அந்தக் கிழவன் வீட்டில் கண்ட கமலியின் போட்டோவில் கண்டமாதிரி.
நடு வகிடுவிட்டு தலை மேவிச்சீவி, இரண்டு பின்னலும் இரு தோளின்மேல் முன்பக்கம் மார்பில் தொங்க… பின்னல் நுனியில் வட்ட ரிபன். நெற்றியில் கரும்புள்ளியாக ஒட்டிய திலகம்… நீளமாய்க் குருவிக்கூடு போல் தொங்கும் காதணி. கையில் ‘றில்’ வைத்துத் தைத்த சட்டை அப்படியே உரித்து வைத்தாற்போல் கமலி… கமலியேதான்.
உலகில் எங்கையாவது ஒத்தசாயலில் ஏழுபேர் உண்டு என்பார்களே… இங்கேயே…. இருவரா….
அமுதா சொன்னாள்.
நீ ‘ பேய்காய்’ தானடி சுகந்தி. உன் அலங்காரம் ‘அந்த மாதிரி இருக்கடி. நீ அசல் கமலி மாதிரியே இருக்கிறாய். உன்னைக் கண்டால் கிழவன்….”
“சரி சரி, ஆஸ்பத்திரிக்குப் போவமடி… நேரம் தாமதமாகுது” அவசரப்படுத்தினாள் ராஜி.
வைத்தியசாலையில் மணியடித்துப் பத்து நிமிடங்கள் கடந்து விட்டன. துரிதமாக நடந்து ‘வார்ட்டில்’ போய்த் தேடினர். அங்கே தாயும் மகனும் சோகமாக நிற்பதைக் கண்டு அருகில் சென்று பார்த்தால்…
“இரத்தம் ஊறிய கால்கட்டு. வயிற்றில் கட்டுடன் சோர்ந்து போய் கிழித்துப் போட்ட வாழைநாராக நொய்ந்துபோய் படுத்திருந்த கிழவனைக் கண்டதும் பரிதாபமாக இருந்தது. சுகந்தியைக் கண்டதும் அவர் விழிகளில் ஒரு விகசிப்பு. எழுந்திருக்கவோ பேசவோ எத்தனித்தும் இயலாத நிலையில் உதடுகள் மட்டும் ‘கமலி’ என்று அரற்றுவது துல்லியமாகத் தெரிந்தது. கிழவன் சுகந்தியைத் தன் மகள் கமலி என்று எண்ணிவிட்டது எல்லோருக்கும் புரிந்து விடுகிறது. எல்ரோரும் சுகந்தியை உற்று நோக்குகின்றனர். சுகந்தி அவர் அருகில் சென்றாள்.
“அப்பா !” என்ற வார்த்தை அவர் காதில் அமுத தாரையாக விழ அவர் முகத்தில் மலர்ச்சியின் கீற்று. எழுவதற்கு எத்தனிக்கும் அவரை அமர்த்திப் படுக்க வைக்கிறாள் சுகந்தி. அவர்கள் கொண்டுவந்த வெந்நீர்ப் போத்தலில் இருந்து ஊற்றி அவள் பருக்கிய பாலை மிடறு முறிய மென்று விழுங்குகிறார் கிழவன். அவர் முகத்தில் என்றுமில்லாத ஒரு அபரிமிதமான ஒளிவீச்சு. அவர் விழிகள் மலர கன்னம் விகசிக்க உதடுகள் விரிய கமலி..க…ம…லி…
பட்டென அவர் தலை சாய்கிறது. அவர் மீளா நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்..
– ஞானம், 2001.
– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.