ஆலவீரன்
கதையாசிரியர்: பம்மல் சம்பந்த முதலியார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள் நாடகம்
கதைப்பதிவு: July 22, 2026
பார்வையிட்டோர்: 89
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்:
ஆலவீரன் – ஓர் அரசன்
ஏலன் – அவனது உத்யோகஸ்தன்
குப்பன் – ஒரு குடியானவன்
காந்தாரி – அவர் மனைவி
முதற் காட்சி
இடம் – ஆற்றூர்.
ஆலவீரன் ஒரு குடியானவன் வேஷத்தில் அழுக்கடைந்த வஸ்திரத்துடன் வருகிறார்.
ஆ. இந்த இடத்தில் எல்லாம் எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது! இந்த ஆறானது இச்சிற்றூரைச் சுற்றி மெல்லெனச் செல்கிறது. இதைச் சுற்றிலும் சோலைகளிருப்பது இதைக் காப்பதுபோல் காண்கிறது. ரத்தவெறி பிடித்த தானவர் அமைதியையுடைய ச்சிற்றூரில் இன்னும் நுழையவில்லை. ஆகவே, இவ்விடத்தில் நான் ஒளிந்திருந்தால் என்னைக் கண்டு பிடிக்கமாட்டார்கள். இச்சிற்றூரில் யாராவது குடியானவர்கள் இருப்பார்கள்.அவர்களைக் கொண்டு என் பசியை ஆற்றாவிட்டால் நான் மடிய வேண்டியது தான் – ஹா! இதோ ஒரு ஒற்றையடிப் பாதை செல்கிறது – அதோ சற்று தூரத்தில் மரங்களுக்கிடையி லிருக்கும் ஒரு குடிசையிலிருந்து கிளம்புகிறது – அங்குப்போய்ப் பார்க்கிறேன். [போகிறார்.]
காட்சி முடிகிறது,
இரண்டாம் காட்சி
இடம் – ஆற்றூரில் ஒரு குடிசை.
குப்பனும் காந்தாரியும் உள்ளே யிருக்கின்றனர். ஆலவீரன் அதற்குள் நுழைகிறார்.
ஆ. ஐயா, நமஸ்காரம் – நான் ஒரு பரதேசி. மிகவும் பசித்திருக்கிறேன். கொஞ்சம் ஏதாவது சாப்பாடு கொடுத்தால் புண்ணியமுண்டு.
கு. ஆமாம், இப்பதான் எங்கே பாத்தாலும் பிச்சைக்காரருங்க ஆயி பூட்டாங்க, அவுங்களுக்கெல்லாம் சாப்பாடு போடரதிண்ணா நாங்க பட்டினியா யிருக்கவேண்டியது தான் – ஏ! காந்தாரி! சமைச்சாச்சா? பொழுதெல்லாம் கட்டவெட்டி எனக்கு ஓஞ்சி போயிருக்கது. எனக்கும் பசியாயிருக்குது.
கா. ஆமாம் – ஒனக்கு எப்ப பாத்தாலும் பசிதான்! ஓலையிலே போட்ட அரிசி இன்னம் வேகலெ. இந்த அப்பங் கள்ளாம் சுட்டாவ இன்னம் கொஞ்ச நாழியாவும்; இன்னம் சூரியன் சாயரத்துக்கு பொழுதிருக்குது – இது யார் இது ஒரு ஆளே இழுத்துகினு வந்தையே?
ஆ. அம்மா தாயே! – நான் ஒரு பரதேசி – இராத்திரி எனக்கு கொஞ்சம் சாப்பாடு போட்டு, இங்கே தங்கிப் போக உத்திரவு கொடுங்கள்.
கா. இன்னம் நானு தாயாராகலெ அப்பா – வா அப்பாவா – ஆனாலும் இந்த பரதேசிங்களெ பாத்தா என் மனசு பொறுக்கிறதில்லெ – பரதேசத்திலிருந்து வந்து இந்த தேசத்தெயெல்லாம் பாழாக்கி வைக்கராங்க! இந்த தேசத்துலே வெளி தேசத்தாரு நுழைஞ்ச பொறவு, வேடிக்கெ – சந்தோஷம் – இண்றதெ போச்சு!
ஆ. நான் இந்த ஊருக்குப் பரதேசியானாலும், நான் இந்த தேசத்திற்கு வெளியானவன் அன்று – நான் இந்த தேசத்தில் பிறந்து வளர்ந்தவனே!
கு. ஆனா வெளி ஊர்லே இருந்து வந்து, எங்க ஊருங்களெல்லாம் கொளுத்திவுட்டு, எங்க சாப்பாட்டையெல்லமா திண்ணுட்டு, எங்க ஆடுமாடுங்களெயெல்லாம் ஓட்டிக்கினு பூடராங்களே – அவங்கள்ளெ ஒருத்தனில்லையோ நீ?
ஆ. அல்ல – அவர்களை யெல்லாம் உங்களைப்போல் நானும் வெறுக்கிறேன்.
கா. வாஸ்தவமா? வாஸ்தவமா சொல்லச் சொல்லு இவனெ.
ஆ. வாஸ்தவமாய் அவர்களை வெறுக்கிறேன் சத்தியமாக!
கு. ஆனால் உன் கையெக் கொடு அப்பா — நீ நல்ல மனுஷன்தான் – நீ யாரப்பா?
ஆ. ஆலவீர – ராஜன் – பக்கம். அவர் போட்ட கடைசி சண்டையில் நானும் சண்டை போட்டேன்.
கா. ஆலவீர ராஜன் பக்கமா? – அவர் க்ஷேமமாயிருக்கணும்!
கு. ரொம்ப நல்லவர் பாபம்! – அவர் என்னமானாரோ? பாவம்!
ஆ. ஏது அவர் மீது உங்களுக்கு அவ்வளவு பட்சம்?
கு. ஆமாம் – நாங்க ஏழைங்களா யிருந்தாலும் அவர் போலே எங்களுக்கு ரொம்ப இஷ்டம். நாங்க தினம் ராத்ரியிலே கோவிலுக்கு போயி சாமியே கும்பிடும் போது, அவர் எப்படியாவது இந்த தானவ நாயிங்களெ ஜெயிக்கணும் இண்ணு பொராத்திக்கிறோம் – அப்படி பொராத்திச்சும் அவருக்கு இன்னும் ஜெயிப்பு வல்லே.
ஆ. என்னைவிட அதிகமாக அவர்மீது உங்களால் அன்பு பாராட்ட முடியாது.
கு. அவர் என்னமானாரோ பாபம்?
ஆ. அவர் செத்துப் போய்விட்டதாக நினைக்கப்படுகிறது.
கு. ஐயோ பாவம்! – ஸ்வாமிதான் நம்பளே யெல்லாம் ரட்சிக்கணும்! வா அப்பா – உக்கார் – எங்ககிட்ட இருக்கிற கூழெ நீயும் குடி – ரொம்ப பசியாயிருந்தா, பாலுஞ் சோறு உப்புஞ்சோறு, எங்க குடி கவனிக்காது..
கா. ஆமாம்பா. வா – எங்க குடிசைக்கி, ராஜா வந்தா எப்படி சந்தோஷமா வரவழைப்போமோ,அப்படி உன்னெவர வழைக்கிறோம் – அதிருக்கட்டும் – ஒனக்குத்தான்- இந்தப் பரதேசிக்கி நம்போ சாப்பாடு போடவேண்டியது தான் – இல்லாப்போனா அது பாவமாவும் – இருந்தா சாப்பிடலும், அவன் ஏதாவது வேலெ செய்யட்டுமே, சாப்பிடரத்துக்கு முன்னே – ஆள் பலசாலியாதான் இருக்கரான்- நண்ணா வேலே செய்வாம் போலே யிருக்குதே.
கு. ஆமாமாம் – அது வாஸ்தவம்தான் – ஏண்டாப்பா? என்னா வேலெ செய்வே?
ஆ. நீங்கள் என்ன வேலை யிட்டாலும் அதைச் செய்து உங்களுக்கு உதவ சித்தமாயிருக்கிறேன். நான் சாப்பிடுகிற சாப்பாட்டை நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து நான் சாப்பிட வேண்டுமென்பது என் விருப்பம்.
கு. எதோ பாக்கலாம் – கட்டைகளையெல்லாம் சரியாக கட்டு கட்டுவையா?
ஆ. நான் அதைச் செய்து வழக்கமில்லை. அதை சரியாகச் செய்யாது கெடுத்து வைப்பேனென்று பயப்படுகிறேன்.
கு. கூரைக்கி பில்லு மூடத்தெரியுமா? அந்த பசு கொட்டாயிலே கொஞ்சம் பிரிஞ்சிப் போயிருக்குது.
ஆ. ஐயோ! எனக்கு கூரை மூடத் தெரியாதே.
கா. இந்த நாணலுங்களெ மொடையத் தெரியுமா? கேளு – நம்பளுக்கு கூடைங்க வோணும்.
ஆ. அதை நான் கற்கவில்லை – எப்பொழுதும்.
கு. வைக்கலையாவது போர் போடுவையா?
ஆ. முடியாது.
கு. அடடே! என்னா ஆளுடா அப்பா நீ! – எங்களுக்கெல்லாம் இருக்கர மாதிரி ஒனக்கும் ரெண்டு கை இருக்குதே. என்ன பிரயோசனம்:- ஆயி – இவனுக்கு வீட்டிலெயெ ஏதாவது வேலெ கொடுத்துப்பாரு – அடுப்புக்கு கட்டெ கிட்டே போடுவான் – இல்லாப்போனா சாமான்களெ யெல்லாம் கழுவுவான்.
கா. ஆனா – இந்த அப்பங்கள்ளாம் பாணாவுலே வேவுதுங்க, அதுங்களெ பாத்துகட்டும், நான்போய் பால் கறக்கணும்.
கு. நானுபோய் அந்த கட்டைங்களை யெல்லாம் அடுக்கரேன் – சாப்பாடு ஆவத்தான் கொஞ்சம் நாழி ஆவுமே.
[போகிறான்.]
கா. அப்பா,தம்பி! இந்த அப்பங்கள்ளாம் கருகிப் போவப் போவுது, அப்பப்போ திருப்பிகினே இருக்கணும்.
ஆ. நீங்கள் சொன்னபடி செய்கிறேன். [காந்தாரி போகிறாள்.] அந்தோ! எனக்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் பொறுப்பேன், ஆயினும் துர்ப்பாக்கிய ஸ்திதியிலிருக்கும் சிங்களமே! உன் கதியைக் கருதும்போது என்மனம் பதைபதைக்கிறது; என் இருதயம் வெடித்துப்போகும் போலிருக்கிறது! கிழக்கு முதல் மேற்குவரை இத் தீபத்திலுள்ள நதிகளெல்லாம் ரத்தப்பிரவாகத்தால் ஓடுகின்றன! என் சுத்தவீரர்களெல்லாம் சின்னா பின்னமாக வெட்டப்பட்டார்கள்; என் எளிய பிரஜைகளில் சிலர் கொல்லப்பட்டனர் – இன்னும் சிலர் தங்கள் வீடுகளிலிருந்து அணிமணிகளை யெல்லாம் இழந்து, அவமானப் படுத்தப்ப – அடிக்கப்பட்டு! வெளியே துரத்தப்பட்டனர்! அவர்களை யெல்லாம் காப்பாற்றும் பொருட்டு ஜகதீசன் என்னை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தியும், இந்தப் படுபாவிகள் அவர்களைப் பாழாக்காதபடி காக்க வகையற்றவனா யிருக்கிறேன். கருணைக்கடவுளே? தானவர்களின் வாளுக்கு இரையாகாதபடி இந்நாட்டைக் காக்க எனக்கு யோக்கியதை யில்லாவிட்டால், என்னை விட மேலாகப் போர் புரிந்து, வெற்றியடையக் கூடின ஒர் சுத்த வீரனை சிருஷ்டித்தருளும் இந்நாட்டிற்கு – நான் இங்கேயே இச்சிறு குடிசையில், இழிதொழில் புரிந்து, என் எப்படியாவது சிங்களம் சந்துஷ்டி யடைந்தால் போது மெனக்கு! – ஓ! – இதோ வருகிறார்கள் எனக்கு விருந்தளிக்கும் புருஷனும் பெண் சாதியும்.
குப்பனும் காந்தாரியும் வருகிறார்கள்.
கா. ஒன்னெத்தான். இந்த பால் பானெயெப் பிடிச்சி கொஞ்சம் எறக்கி வையி – இந்தப் புதுப்பாலும்,அப்பமும், சாப்பிட்டா நல்ல பலம் கொடுக்கும் – ஐயோ! கெட்டேனே! இதென்னா, இந்த அப்பங்கள்ளாம் கரியா காந்தி போச்சே! — அடுப்புக்கரியா போச்சி! அதுங்களெ திருப்பியே போடலையே!- தடியா! மடையா! சோம்பேறிப் பயலெ!
[ஆலவீரனை ஒரு சிறு சுள்ளியால் அடிக்கிறாள்.]
ஆ. அம்மா! நான் செய்தது தப்புதான் – மன்னியுங்கள் – ஏதோ மனக்கவலையில் இருந்துவிட்டேன்.
கு. இந்தா! – போதும் நிறுத்து! – மன்னிச்சூடு பாவம்! ஒரு வேளெ அவன் பெண்சாதியெ நெனைச்சிகினு இருந்தானோ என்னமோ? – எனக்கு ஞாபகமிருந்து உன்னெ நானு கலியாணம் பண்ணிகின வொடனே-
கா. உம், கியாபக மிருக்குதா அது
கு. வாஸ்தவமா! – ஞாபகமிருக்குது – ரொம்ப வருஷமான போதிலும் – அப்பொ – எங்கம்மா பாயசம் – காய்ச்சிகினு இருந்தாங்க – அப்பொ – நானு –
கா. தா!- போதும் நிறுத்து! – நம்ப சாப்பிடலாம் வா.
[மூவரும் புசிக்கின்றனர்.]
ஆ. ஹா! புதிதாய்க் கறந்த இப்பால் என்ன ருசியாயிருக்கிறது! இந்த ரொட்டியும் என்ன நன்றாயிருக்கிறது?
கு. நண்ணா சாப்பிடப்பா – வவுறு நெறைய! – காந்தாரி– ராத்திரிக்கி எங்கே படுத்துக்குவான் இவன்?
கா. நம்ப குடிசையிலெ ஒரு நாடா கட்டில்தான் இருக்குது. நம்பொ நெல்லு கொட்டகையிலே கொஞ்சம் வைக்கல் இருக்குது- அத்தெ பரப்பி – படுத்துகட்டும் இண்ணைக்கு – அப்பறம் பார்க்கலாம் –
ஆ. [தனக்குள்] அரசனைப் போல் நான் படுக்காவிட்டாலும் போர் வீரனைப்போல் படுத்துறங்குகிறேன் இன்றைக்கு! – அந்தோ! இந்த வைக்கோலும் கிடைக்காமல், எனது போர்வீரர்களில் எத்தனை பெயர் கட்டாந் தரையில் படுத்துறங்குகின்றனரோ!
கா. அதென்ன அது சத்தம்? ஏதோ குதரைங்க வர்ராப் போலெ இருக்குதே, நீ போயி என்னாண்ணு பாரு வெளியே!
[குப்பன் போகிறான்.]
ஆ. [ஒருபுறமாக] ஈசனே! என் துர் அதிர்ஷ்டமானது இந்த எளிய குடியானவர்களுக்கு ஒரு கெடுதியும் கொண்டு வராதிருக்க வேண்டும்! – ஐயோ! இதைவிட நான்காட்டி லெயெ மடிந்திருக்கலாகாதா!
குப்பன் வருகிறான். அவன் பின்னால் உருவிய கத்தியுடன் ஏலன் வருகிறான்.
கா. ஐயோ! சாமி! கத்தியெ உருவிகினு வர்ராரே யாரோ!
கு. தானவர்! தானவர்! – ஐயா! எங்களெக் கொல்லாதைங்க!
ஏ. அரசே! எம்மிறையே!- உங்களைக் கண்டு பிடித்தேனே!
[அரசனுக்கு முழந்தாளிடுகிறான்.]
ஆ. [அவனை எழுப்பி கட்டியணைத்து] சுத்தவீரனாகிய ஏலனே! என்ன சமாசாரம்?
ஏ. மஹாராஜா! நான் சந்தோஷ சமாசாரம் கொண்டு வருகிறேன் உமக்கு. கானவாயில் கோட்டையில் முற்றுகை யிடப்பட்ட உமது சைனியம், ஒரு தந்திரம் செய்து இரவில் வெளியே வந்து எதிரி கைதிகளை உறங்குகையில் எதிர்த்தனர் – சுருக்கிச் சொல்லுமிடத்து தானவர் சின்னாபின்னமாக முறியடிக்கப்பட்டனர். தானவர் தலைவனான ஆபன், மரண காயமடைந்து கிடக்கிறான்.
ஆ. இது வாஸ்தவம்தானா? – நான் இன்னும் அரசன் தானா?
ஏ. அவர்களது பெயர்பெற்ற ‘நாணல் காகம்’ எனும் கொடி பிடிக்கப்பட்டது நம்மவரால்! அவர்களது சைனியமெல்லாம் பயந்தோடுகின்றன நான்கு பக்கமும், நமது படைவீரர்களெல்லாம் உங்களை நாடுகின்றனர்.
இதோ இக்கடிதத்தில் மற்ற சமாசாரங்கள் எல்லாம் எழுதி யிருக்கிறது.
[ஒரு கடிதத்தைக் கொடுக்கிறாள்.]
கு. [ஒருபுறமாக] ஐயோ! நம்பகதி என்னாவாவுமோ? ஏ பொம்பளே! உன் வாயெ கொஞ்சம் முன்னே நீ அடக்கியிருக்கக் கூடாதா?
கா. [ஒருபுறமாக] ஐயோ! பாவி நான் என்ன செய்யரது! நம்பளே எல்லாம் கொண்ணூடுவாங்க! நிச்சயம்! – இவர் தான் நம்ப ராஜ இண்ணு யாரு நெனைச்சி யிருப்பாங்க?
ஆ. இந்த சமாசாரத்திற்காக ஈசனைப் போற்றுவோமாக! அதோகதியிலிருந்த என்னைக் கரையேற்றிவிட்டது தெய்வம்! அப்பா ஏலா! நான் மறுபடியும் கவசம் அணிவேனா? – நமது சிங்களப் படையை யுத்தத்திற்கு நடத்துவேனா? – அவர்களைக்கொண்டு வெற்றி பெறுவேனா? – நமது நண்பர்களெல்லாம் தலையெடுக்குங் காலம் வந்து விட்டதா?
ஏ.ஆம், உங்களுக்கு அநேகம் நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுவரையில் தங்கள் எஜமானனான உங்களைப்போல், காடுகளிலும், குகைகளிலும் பாலை வனங்களிலும் காலம் கழித்து வந்தனர். அன்றியும் குடிசைகளிலும் ஒளிந்து வந்தனர்; நீங்கள் உயிருடன் இருப்பதையும், படையை மறுபடியும் சேர்ப்பதையும் கேள்விப்படுவார்களாயின், தாங்கள் ஒளிந்திருக்கும் இடங்களை யெல்லாம் விட்டு வெளி வந்து, உமது பக்கத்தை அணுகுவார்கள்.
ஆ. அவர்களை யெல்லாம் மறுபடியும் யுத்த களத்திற்கு அழைத்துச் செல்ல ஆவல் மீறுகிறது. நமது தேசத்தின் பகைவர்மீது பழிவாங்க வேண்டும் சீக்கிரம்!
கு.கா. [அவர் பாதத்தில் விழுந்து] மஹாராஜா! மஹாராஜா!
கா.பாவிங்க எங்களை வதை செய்யாமே கொண்ணுடும்படி கேட்டுக்கரோம் – நீங்க மஹாராஜா இண்ணு எங்களுக் குக் கொஞ்சங்கூட தெரியாமே போச்சி!
கு. மஹாராஜா! எப்படியாவது இந்த பொம்பளே திட்டினதெயெல்லாம் மன்னிச்சூடனும், அவ ஓணுமிண்ணு திட்டலெ பாவம்!
ஆ. எனது நல்ல பிரஜைகளே ! உங்களை மன்னிப்பதாவது! உங்களுக்கு வந்தனமல்லவோ அளிக்க வேண்டும்! நான் துர்ப்பாக்கிய ஸ்திதியிலிருந்த பொழுது என்னைக் காப்பாற்றினீகள்! நான், ஈசன் அருளால், மறுபடியும் சிங்களத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருந்தால் எனது முதற் கடன், நீங்கள் எனக்கு விருந்தளித்ததற்குக் கைம்மாறு செய்வதாகும். உங்களை நான் காப்பாற்றுகிறேன்.– வா அப்பா, நண்பா ஏலா, எடுப்போம் நமது படையை! கர்வம் பிடித்த இத்தானவர்களை மறுபடியும் எதிர்க்க என் மனம் துடிக்கிறது! இதோ ஈசன் மீது ஆணைப்படி சத்தியம் செய்கிறேன். இக்கொள்ளைக்காரர்களை யெல்லாம் நமது தேசத்தை விட்டுத் துரத்தி, நமது நாட்டிற்கு சீரும் செழிப்பும் கொண்டு வருமளவும் என் கத்தியை உரையில் போடேன்! ஜெய்!
ஏ. ஜெய்!
[ஆலவீரனும், ஏலனும் போகிறார்கள்]
கு.கா. நம்ப நல்ல ராஜாவுக்கு ஜெய முண்டாகணும்! ஜெய்! ஜெய்!
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றிற்று.
– ஒன்பது குட்டி நாடகங்கள், முதற்பதிப்பு: 1956, நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது.
தொடர்புள்ள சிறுகதைகள்
திருந்திய அசோகன்
அந்தனி ஜீவா
August 1, 2026
இருவர்களும் திருடர்களே
பம்மல் சம்பந்த முதலியார்
July 22, 2026
கானநாதனும் அவனது அமைச்சர்களும்
பம்மல் சம்பந்த முதலியார்
July 22, 2026