கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,389 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கரீமுக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்க லாம். நல்ல உடல்வாகு உடையவன். அவன் தன்னிலும் இரண்டு மூன்று வயது இளையவளும் சுமாரான அழகிய மான சரீனாவைத் திருமணம் செய்து ஒரு வருடம் உருண் டோடி விட்டது. ஆரம்பமுதல் வறுமை அவர்களது வாழ்க் கையோடு விளையாடத் தவறவில்லை. என்றாலும், அவன் தனது குடும்ப ஓடத்தை அன்றன்றைக்குக் கூலி வேலை செய்து நகர்த்திக் கொண்டே வந்தான். அவன் தினமும் தம் கிராமத்திலேயே எங்காவது எப்படியோ ஒரு வேலையைப் பற்றிப்பிடித்துக் கொள்வான். அதில் மகா கெட்டிக்காரன். ஆனால், இன்றோ அவன் காலை முதல் மத்தியானம் வரை சந்தை, கடைத்தெரு, கடற்கரை என்றெல்லாம் பம்பரம் போலச் சுற்றிச் சுழன்றும் எந்த வேலையுமே அகப் படவில்லை. அதனாலே, நிறைந்த மனச் சோர்வு அவனைச் சிறை பிடித்துக் கொள்கிறது. ‘இனி இன்று தொழில் தேடி எங்குமே திரிவதில்லை’ என்று எண்ணியவனாய் உடனேயே வீடு திரும்பினான். 

பிற்பகல் இரண்டரை மூன்று மணி இருக்கலாம். கரீம் தம் வீட்டுத் திண்ணையிலே சாவகாசமாக உட்கார்ந்திருக் கிறான். பக்கத்தில் அவன் மனைவி சரீனாவும் அமர்ந்தி ருக்கிறாள். நாணம் மலர, அவள் கன்னங்களிலும், மூக்கின் நுனியிலும் செம்மை படர்கிறது. அவள் ஒருவாறு தலை நிமிர்ந்து தன் உள்ளத்திலே கிளர்ந்தெழுந்த ஆசையைத் தனது கணவனிடம் வெளியிட்டு வைக்கிறாள். 

“இஞ்சப்பாருங்க… வெள்ளத்தால் நம்மிட குளமெல் லாம் நிரம்பி அதுக்குப்பக்கத்தில இருக்கிற கரவாகுப்பத்து வயலுங்கூட தண்ணீரில் தாண்டு கிடக்குதாமே, அந்த வயலுக்கதான் நம்மிட பக்கத்து வீட்டு பரிதாட புரிசன் நேத்து நல்ல சள்ளல் மீன்களெல்லாம் வீசிக்கந்திருக்காரு. சள்ளல் மீன் தின்க எனக்கும் நல்ல விருப்பமாத்தானிருக்கு. அதுவுமில்லாம நாலஞ்சி நாளா நமக்கு நல்ல கறியுமில் லல்லவா? இப்ப நீங்க சும்மாதானே இருக்கிங்க. ஒருக்காப் போய்ப்பாருங்க” என்றுவிட்டு, தன் நெற்றியிலே அலை மோதிய தலை மயிரை ஒதுக்கிவிட்டுக் கொள்கிறாள் சரீனா. 

அவள் நான்கு மாதக் கர்ப்பிணி. அவளுக்கு ஏற்பட்டி ருக்கும் இந்த ஆசை மிக மிகச் சாதாரணமானதுதான், என்றாலும் அவளின் நிலையிலிருந்து நோக்கின் அது அந்த அளவுக்கு நினைக்கக்கூடிய ஒன்றல்ல என்பது புலனாகும். இதனை நன்கு உணர்ந்து கொண்ட கரீமை, சரீனாவின் வார்த்தைகள். அப்படியே காந்தமெனக் கௌவிக் கொள் கின்றன. உடனேயே அவன் தன் மனைவியை நோக்கி, ‘புள்ள …உங்கட ஆசையையும் ஏன்தான் கெடுப்பான். நான் இப்பவே போறன்” என்றவாறு திண்ணையிலிருந்து எழுந்து நிற்கிறான். 

பொங்கிவந்த ஒருவித வேகம் முன்னே தள்ள அவன். மனையின் நடு அறையிலே நுழைந்து நிறம் மாறிப்போன ஒரு வலையையும், ஒரு பையையும் எடுத்துக்கொண்டு தன் துணைவியிடமிருந்து விடை பெற்று வீதியிலே இறங்குகிறான். 


அந்தக் கிராமத்தின் மேற்குப் புறமாக நீண்டு நெளிந்து கிடந்தது ஒரு பெரிய குளம்.அண்மையிலேற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக, அது தன் இரு பக்க எல்லைகளைக் கூட சற்று விஸ்தரித்திருந்தது. அக்குளத்தின் அருகாகவே கரைவாகுப்பற்று வயல் வெளி பரந்து விரிந்து கிடந்தது. அவ் வயல் வெளியிலே, நீரில் மூழ்காதிருந்த திடல்களிலே ஒன்று தன் பரந்த நெஞ்சை நிமிர்த்தியவாறு படுத்திருந்தது. 

அத்திடலுக்கு வந்து சேர்ந்த கரீம் தன் நெற்றியிலே வந்து கவிந்து கிடந்த தலைமயிரை ஒதுக்கிவிட்டுக்கொண்டு நெற்செய்கை மேற்கொள்ளாதிருந்த அந்த வயல் வெளி யைத் தன் கண்களுக்கெட்டிய மட்டும் நோட்ட மிடுகிறான். 

நீர் நன்கு நிறைந்து கிடந்த அவ்வயல் வெளியிலே ஆங்காங்கே பலர் வலை வீசிக் கொண்டிருப்பது அவன் விழி களிலே விழுகின்றது. அவசர அவசரமாய் அவன் தனது கை யிலே இருந்த பையை அத்திடலிலே வைத்துவிட்டு சாரனை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு வயல் நீரிலே இறங்குகிறான். ‘சுர்..ர்’ எனத் தேகமெங்கும் மெல்லிய குளிர்மை பரவுகிறது. வாயிலே புகைந்து கொண்டிருந்த பீடியை எறிந்துவிட்டு தன் தோளைத் தழுவிக் கிடந்த வலையை எடுத்து வெகு லாவகமாய் விரித்து வீசி எறிகிறான். 

குறட்டை, பனையான், சள்ளல், கெழுத்தி, பொட் டியான் இத்தியாதி மீன்களெல்லாம் அவன் வலையிலே சிக்குகின்றன. ஒவ்வொன்றையும் வெகு பக்குவமாகக் கழற் றிப் பையிலே வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் வயல் நீரிலே வலை வீசுகிறான். மீண்டும் மீண்டும் அதே மீன்கள் பையிலே தஞ்சமடைகின்றன. 

இவ்வாறு இயங்கிக் கொண்டிருந்த அவன் திடீரென்று வலை வீசுவதை நிறுத்திக் கொண்டு சுற்றும் முற்றும் நோட் டமிடுகிறான். எங்கும் மெல்லியதாய் இருள் படர்ந்து கொண்டிருப்பதும் தொலைவிலே கிராமப்பக்கமாகத் தெருக் கம்பங்களிலும், கட்டடங்களிலும் அவ்வேளைதான் மின் சார பல்புகள் பளீரென்று ஒளியை உமிழ்ந்து கொண்டு சிரிப்பதும் அவன் பார்வையிலே படுகின்றன. நேரம் ஆறு மணியிருக்கலாம் என ஊகித்துக் கொண்ட அவன் மீன் பையின் அருகிலே விரைந்து தான் பிடித்து வைத்திருந்த மீன்களை நன்கு அவதானிக்கிறான். அம்மீன்களுக்கிடையே பல அளவுகளிலும் கிடந்த எட்டுச்சள்ளல் மீன்கள் மட்டுமே அவன் கவனத்தை ஈர்க்கின்றன. அவன் அவற்றைப் பார்த் ததுமே, ‘கர்ப்பிணியான தன் மனைவியின் ஆசை நிறை வேறப்போகிறதே!’ என்ற எண்ணத்தினால் மிக்க உவகை யெய்துகிறான். அவன் ஊறிவந்த உமிழ் நீரை விழுங்கிக் கொண்டு மீளவும் ஒரு முறை மீன் பிடிக்க நினைத்து வயல் நீரிலே இறங்கி வலைவீசுகிறான். நீரின் மேல் விழுந்த வலை மெல்ல மெல்ல நீரிலே ஆழ்கிறது. 

அந்த வேளையிலேதான், ‘என்னப்பா கரீம், மிச்சம் ஒசாரா வீசுறாய் காட்டு பாப்பம் மீன்கள’ என்ற வார்த் தைகள் கரீமின் செவிகளிலே மோதுகின்றன. படீரென்று திரும்புகிறான். 

திடலிலே தன் மீன் பையின் அருகிலே றகீம் போடி யார் வெகு கம்பீரமாக நின்றிருந்தார். அவர் தன் தலை யிலே அணிந்திருந்த தொப்பியும், தோளிலே தொங்கவிட்டி ருந்த அங்க வஸ்திரமும், இடுப்பிலே தரித்திருந்த பெரிய தோல்வாரும் அவரை ஒரு பெரிய மனிதராகவே விளம்பிக் கொண்டிருக்கின்றன. கரீம் அவரை அவதானித்த மறு தலையைப் கணமே அவரின் அருகிலே படர்கிறான். தன் பின்னால் வருடிவிட்டுக்கொண்டு றகீம்போடியார் வேண்டிக் கொண்டபடி அவரின் பார்வைக்காய்ப் பையிலிருந்த அத்தனை மீன்களையும் வெளியிலே கொட்டி விடுகிறான். நிலத்திலே வீழ்ந்த அம் மீன்களிலே சள்ளல், பொட்டியான் ஆகியவை தவிர்ந்த ஏனையவையாவும் துடிதுடிக்கின்றன. 

சகல மீன்களையும் ஊன்றி அவதானித்துக் கொண்ட றகீம் போடியார், “சா… நல்ல மீன்களெல்லாம் பிடிச்சிருக் கியே, அது சரி… என்ட வயலுக்க கிடந்த இந்த மீன்கள் என்ட கேள்வி பாரில்லாம நீ எப்படிப் பிடிப்பாய்?” என்கிறார். 

போடியாரின் இவ் வார்த்தைகளைச் செவிமடுத்த கரீமை பக்கென்று சினம் பற்றிக் கொள்கிறது. இருந்தும், அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு விடை பகர்கிறான்: 

“காக்கா..இந்த மீன்கள் உங்கட வயல்ல விளைஞ் சதா இல்லையே… வெள்ளத்தில வந்த மீன்கள்தானே” 

கரீமின் இவ்வுரையைக் கேட்ட றகீம் போடியார் பாம்பெனச் சீறி எழுகிறார். 

“ஏய்…கரீம் உனக்கு வேறுகதை வேணாம். என்ட வயல்லதானே பிடிச்ச. மறுகா என்ன” என்கிறார். 

அவன் அதற்கு, தான் என்ன இயம்புவதென்றே தோன்றாது மௌனமாகி நிற்கிறான். ஆனால், றகீம் போடி யாரோ அந்த மீன்களுக்கிடையே அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்த எல்லாச் சள்ளல் மீன்களையும் சொல்லி வைத்தது போல் பொறுக்கி எடுத்து கரையிலே ஒதுங்கிக்கிடந்த இரு தாமரை இலைகளுக்குள் புதைத்துக் கொண்டு “நான் வாறன்…நீயும் போ…ம்” என்று விட்டு, விடு விடென்று நடந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது கரீமுக்கு ஆத்திரம் கடலலையெனப் பொங்கி எழுகிறது. றகீம் போடியாரைப் பற்றிப் பிடித்து அவர் பிடரியிலே நன்கு நாலு வைக்கத் துடிக்கிறான். 

‘போடியார் செய்தது அநியாயந்தான். என்றாலும் வயதுபோன ஒரு மனிதரென்றும் பாராது அவரிடம் அவ்வாறு நடந்து கொள்வது நல்ல பண்பல்ல’ என்று கரீமின் உள்ளமே அவனைத் தடுக்கிறது. அதனால் செய் வதறியாது அவர் செல்வதையே பார்த்தபடி நிற்கிறான். பார்வையிலிருந்து அவர் மறைந்ததும் ‘தன் மனைவி ஆசை யோடு கேட்ட மீன்களெல்லாம் போய்விட்டனவே, அவ்வா சையை நிறைவேற்ற முடியாமலா வீட்டுக்கு மீள்வது’ என்று உள்ளூரக் கவலைப்பட்டுக் கொள்கிறான். பின்பு அவன் எஞ்சிய மீன்கள் அனைத்தையும் திடலிலே விட்டு விட்டு வெறிகொண்டவன் போல் விரைந்து குளத்திலே இறங்கி இரண்டு மூன்று முறை வலை வீசினான். அவன் எண்ணிய மீன்கள் ஒன்றுமே அகப்படவில்லை. இதற்கிடையில் இருளும் நன்கு கனிந்து வந்து கவிந்து கொண்டதால் இனி எதுவுமே செய்ய முடியாது என்ற தீர்மானத்துக்கு வருகிறான். 

‘ம்…ஹூ…’ என நெடு மூச்சொன்றை உதிர்த்து விட்டு மீண்டும் திடலுக்கு வந்து மிக்க வெறுப்போடு அங்கு எஞ்சிக்கிடந்த அத்தனை மீன்களையும் எடுத்துக் கொண்டு மனைக்கு மீள்கிறான். 

இல்லம் திரும்பிய அவன் தன் மனைவியை அழைத்து நடந்த விடயங்களை எடுத்து இயம்பினான். அதனைச் செவிமடுத்த சரீனாவோ, சினங்கொண்டு கொதிக்கிறாள். 

“றகீம் போடியார் ஊரிலேயே பெரிய புள்ளி. ஹாஜியார், மரைக்கார், சமாதான நீதவான். அப்பப்பா… பெரிய பதவிகள். அவரப்பார்த்தா ஆருக்குமே மரியாத செய்யத்தான் தோன்றும்.ஆனா…அவர்ர செயலென்ன? மிச்சம், கீழ்த்தரமாரிக்கி. இவர்களுக்கெல்லாம் அழிவு வராதா” என்று படபடத்துக் கொள்கிறாள். அவளின் நெஞ்சோ, உயர்வதும் தாழ்வதுமாயிருக்கிறது. 

கெட்டவர்களுக்குக் கெதியில் அழிவுவராது. அது கிடக்கட்டும். நீங்க கவலைப்படாதிங்க. நாளைக்கு எப் படியோ நான் சள்ளல் மீன்கள் வீசிக்கொண்டு வருவன். இல்லாட்டி விலைக்கு வாங்கிக் கொண்டின்டானவருவன்.” 

கரீம் தன் துணைவியைத் தேற்ற முற்படுகிறான். அதற்குச் சரீனாவோ, “நான் சள்ளல் மீன் இல்லாததப் பத்திக் கவலப்படல்ல. ஆனா, இந்தப் பெரிய மனிசன் செய்த அதியாயம், அக்கிரமத்தப்பத்தித்தான் கவலப்பர்ரன்” என்கிறாள். அவள் வதனத்தில் சோகத்தின் ஆட்சி, 

‘ம்…ஹு…’ பெரு மூச்சொன்றை விட்டுக்கொள்கிறான் கரீம். 

மீண்டும் சரீனாவே தன் உரையைத் தொடர்கிறாள். 

”சரி…இனி இந்த விஷயத்த விடுங்க. இப்ப நான் உங்களுக்குக் கோப்பி போடப்போறன், கை கால்களைக் கழுவிக் கொண்டு வாங்க” என்றுவிட்டு மார்பிலிருந்து சற்று நீங்கிக்கிடந்த சேலையைச் சரி செய்து கொள்கிறாள். 

”புள்ள… எல்லாத்துக்கும் கொஞ்சம் பொறுங்க… எனக்கு தலைக்கெடிக்கிறாப்போலரிக்கி. கடைத் தெருவுக் குப் போய் டிஸ்பிறின் வாங்கிட்டு வந்திர்ரன்.” இதசுரீம். 

சரீனா திண்ணையிலே விடப்பட்டிருந்த வலையை யும், மீன் பையையும் எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைகிறாள். ஆனால், கரீமோ, கசங்கிச் சுருங்கியிருந்த தன் அரைக்கைச் சேர்ட்டைக் கீழ் நோக்கி இழுத்து விட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே அடி வைக்கிறான் 


கடைத் தெருவை நோக்கி விரைந்து வந்து கொண் டிருந்த கரீமை, திடீரென்று வெடித்துச் சிதறிய உரை யாடற் சப்தம் தெருக்கரையின் ஓர் இடத்திலே நிறுத்தி விடுகிறகிறது. தலையை நிமிர்த்தி ஒலி வந்த திசையிலே நோக்குகின்றான். அங்கே, தெருக்கரையைத் தொட்டவாறு அழகுற அமைந்திருந்த றகீம் போடியாரின் பெரிய வீட்டின் முன் பகுதியும், திண்ணையும், மின்சார ஒளி விரிந்து கிடந்த அத்திண்ணையிலே போடியாரும் மனைவியும் எதிரெதிராக நின்றிருப்பதும் அவன் பார்வையிவே விழுகின்றன. 

கரீம் அவர்களைப்பார்த்ததுமே. சற்று முன் தான் கேட்டது அவர்களது உரையாடற் சப்தமாகத்தானிருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொள்கிறான். மறு வினாடி றகீம் போடியாரும் மனைவியும் தன்னைக் கவனிக்காத வாறு ஒதுங்கிக் கொண்டு மீளவும் அவர்களையே உற்று நோக்குகிறான். 

அந்த வேளையிவேதான் றகீம் போடியாரை நோக்கி அவரின் மனைவி, “சள்ளல் மீனா எனக்கு இந்த மீன்க ளென்றாலே வயித்தப் பெரட்ர…எப்ப பார்த்தாலும் இதப் போல மீன்களத்தான் அள்ளிக் கொண்டு வருவீங்க…சீ…’ என்றுவிட்டு தாமரை இலைகளுக்குள்ளிருந்த அச்சள்ளல் மீன்களை அப்படியே வெளியிலே வீசி எறிந்துவிடுகிறாள். 

றகீம் போடியார் இப்பொழுது தன் மனைவியின் வதனத்தில் வெடித்துச் சிதறிய சினத்தையும், அருவருப் பையும் எதிர்கொள்ள முடியாது தலை கவிழ்ந்து கொள் கிறார். 

இவை அனைத்தையும் அவதானித்த கரீம் மேலும் அவ்விடத்திலே நிற்க விழையாது தனது பயணத்தைத் தொடர்கிறான், ஆனால், தன்னிடமிருந்து அபகரித்துவந்த மீன்களால் றகீம் போடியாருக்கேற்பட்ட அவல நிலையை எண்ண எண்ண அவன் மனவானிலே திரண்டிருந்த கோப மேகங்கள் மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருக்கின்றன. 

– தினகரன் வாரமஞ்சரி 1982 பெப்ரவரி 07.

– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.

யூ.எல்.ஆதம்பாவா உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *