சிவந்தமேகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 399 
 
 

(சிறு நவீனம்)

அத்தியாயம் -1

தொண்டர்கள் வரிசையாகப் போட்ட மாலையை வாங்கி சோபாவில் போட்டுவிட்டு திரும்பிய போதுதான் இந்துமதி அவனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது புரிந்தது.

தமிழரசன் வெளியே எட்டிப்பார்த்தான். “வெளிநாடு செல்லவிருக்கும் அமைச்சர் தமிழரசன் வாழ்க” என்ற கூக்குரல் வானைப் பிளந்தது.

வீட்டிலேயே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் கூடியிருக்க, விமானத்தில் புறப்படத்தயாராக இருந்த தமிழரசன், இப்போது இந்துமதியை தனியாக சந்திக்க முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்த போது, உதவியாளன் முகிலன் “என்னண்ணே என்ன விஷயம் ?” என்று கேட்டான்.

”’ஒரு நிமிஷம் இந்துமதியோடு பேசவேண்டும்.”

”என்ன காதலிக்கு கடைசி நேர முத்தமா?”

”சும்மா விளையாடக்கூடிய நேரமா இது?”

“சரி சரி” என்றவன் எல்லோரையும் காரில்; ஏறச் சொல்லிவிட்டு கொஞ்சம் சத்தமாக , “தலைவரே உங்களுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் இது, அம்மாவின் போட்டோவிற்கு மாலை போட்டுவிட்டுப் போங்கள்” என்றான்.

அவனிடம் மெதுவாக “சாகசக்காரன் நீ” என்று சொல்லிக் கொண்டு மெதுவாக தன் அறையின் பக்கம் வந்தான் தமிழரசன்.

அத்தியாயம் 1A

அவனுடைய சைகையைப் புரிந்துகொண்ட இந்துமதி அவனோடு அந்த அறைக்குள் நுழைய, கதவைத் தாழிட்டுக்கொண்டவன், ”ஏன் இந்துமதி மிகவும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தாய்… என்ன விஷயம்?” என்று கேட்டான்

”தமிழ். நீங்கள் என்னை விட்டு ரொம்ப ஒதுங்கிப் போகிற மாதிரி தோன்றுகிறது”…அவள் குரல் கொஞ்சம் கம்மிப்போயிருந்தது.

”இதோ இருக்கின்ற குவைத் நாட்டிற்கு தொழில் வளம் பற்றி தெரிந்துக் கொள்ளப் போகிறேன். ஒருவாரத்தில் திரும்ப வந்து விடுவேன். இதற்காகப் போய்…..”கொஞ்சம் அலுத்துக்கொண்டான் தமிழரசன்.

”அதற்கில்லை தமிழ், நாம் சந்தித்த அந்தக் கிராமம், அங்கே எனக்காக காத்திருந்த கணங்கள். நீங்கள் அரசியல்வாதியான பிறகு எல்லாமே காணாமல் போய் விட்டது”

”எனக்காக ஒருமணி நேரம் கூட ஒதுக்கமுடியாமல் போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது”

”என்ன செய்யட்டும் இந்து. எல்லாம் நம்முடையை எதிர்கால வாழ்க்கைக்காகத்தானே….”

“இப்போதைய இளமையைத் தொலைத்துவிட்டு நாளைய வாழ்க்கைக்கான துரத்தல் தேவையா தமிழ்”

“நம் வாழ்க்கை முறையின் அடிப்படை இதுதானே.!… அதில் நாம் மட்டும் விதிவிலக்கல்லவே.. வரட்டுமா?”

அவன் கிளம்ப எத்தனித்த போது “ம்… எல்லாமே மறந்தாச்சு. என்றைக்கு காதலை வெளிப்படுத்தினோமோ அன்று பேசியதைக் கூட மறந்தாச்சு” என்று இந்துமதி சிணுங்க, ஒரு நிமிடம் யோசித்தவன் அருகில் வந்து “வெரி சாரி” என அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு “ உனக்கு என்ன பரிசு வாங்கி வரவேண்டும் இந்துமதி” எனக்கேட்டான்.

”நீங்கள் என் நினைவோடு திரும்பிவந்தாலே போதும்”

”சே! கேட்டு கேட்டுச் சலித்துப் போச்சு. என்ன வேண்டும் இந்த முறை நான் போவது வெளிநாடு. ஏதாவது ஆசையாக வாங்கி வரலாமிண்ணு நினைக்கிறேன்” என்றான்..அவள் செவ்விதழைப்பிடித்துக் கொண்டு…

”ஒருமுறை நாம் பல மாதங்கள் பிரிந்து திரும்பச் சந்தித்த போது சொன்ன ஞாபகம் இருக்கிறதா?”

“ம்..கூம்..” உதட்டைப் பிதுக்கினான் தமிழரசன்

“அதுதான் நம்காதல் விவகாரங்கள் தவிர எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்”

“ஓகே ஓகே எல்லோரும் கீழே காத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லு”

“மண்டியிடுங்கள்”

அமைதியாக நின்றான் தமிழரசன்

அத்தியாயம் 1B

“பார்த்தீர்களா? காதலுக்காக நீங்க்ள் எதையும் செய்யும் லட்சணம் இது தான். எனக்காக நீங்கள் எதையும் வாங்கி வரவேண்டாம்” திரும்பி நின்று கண்களை துடைத்துக் கொண்டாள் இந்துமதி.

”இதே விஷயம் அரசியலாக இருந்தால் அந்த இடத்தில் எத்தனை உயிர்கள் சேதமாகியிருக்கும். என் அன்பு காதலியே உனக்காக நான் என் கோபங்களை அடக்கிக்கொண்டு கௌரவங்களைத் தூக்கி எறிந்துவிட்டு கேட்கின்றேன். சொல்” அவள் முன்னால் வந்து முழந்தாளிட்டு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

முதலில் கொஞ்சம் சிரித்தவள், அவன் முன் நெற்றியில் குனிந்து முத்தமிட்டாள் “எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி வரமுடியுமா?” என்றாள்.

“அட்ரா சக்கை! என்னால் வைர நெக்லஸ் என்னால் வாங்கித்தர முடியும் இந்து. ஆனால் எனக்காக நீ கொஞ்சம் பொது விஷயங்களில் நேரம் ஒதுக்க அனுமதிக்க வேண்டும்”

கையைத்தட்டியவள், இங்குமங்கும் பார்த்துவிட்டு,

“யாரங்கே இவர் கேட்டதைக் கொடுங்கள்” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் இந்துமதி.

“சரி. எனக்கு நேரமாகிறது எல்லோரும் கீழே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.”வேகமாக எழுந்தான் தமிழரசன்.

”கவனமாகப் போய் வாருங்கள்” என்று சொல்லிய இந்துமதி, அவனுடைய தலையை கலைத்துவிட, வாசல் கதவு சப்தமெழுப்பியது.

”தலைவரே சீக்கிரம் கீழே இறங்குங்கள். விமானத்திற்கு நேரமாகி விட்டது” என்று உதவியாளன் முகிலன் சப்தமெழுப்பினான்.

“இதோ” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவன் கீழே வந்து வேகமாக காரில் ஏறிப் புறப்பட “தொழில் வளம் காண வெளிநாடு செல்லும் மந்திரி தமிழரசன் வாழ்க” என்று தொண்டர்கள் குரல் எழுப்பினர்.

”…இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது” என்று கேட்டவாறு காரில் ஏறினான் தமிழரசன்.

அத்தியாயம் 2

அந்த ஆஸ்பத்திரியின் அவசர வார்டு பிரிவின் வெளியே நின்று அழுது கொண்டிருந்தது அந்த டாக்டரின் குடும்பம்.

“டாக்டருக்கு இப்படி ஒரு நோய் வருமென்று யார் எதிர்பார்த்தார்கள்” என்று டாக்டர் சந்திரசேகரைப் பார்க்க வந்திருந்த நண்பர் ராஜகோபால் அருகில் நின்றவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் நேரத்தில் அந்த இடம் பதட்டமாகிவிட, டாக்டர்.சந்திர சேகரின் மருமகன் நீதிபதி குமணராசன் வந்து சேர “இவ்வளவு நாள் நீங்கள் இந்த மருத்துவமனையிலேயே வைத்திருந்ததே தப்பு. இப்போது அழுது என்ன பிரயோஜனம்?

ஒரு வாரத்திற்கு முன்னாலேயே நான் அமெரிக்காவிற்கு கொண்டு போய் அவருக்கு நல்ல டிரீட்மெண்ட் கொடுக்கலாமென்றேன். நீங்கள் தான் மறுத்துவிட்டீர்கள்” வாசலில் நின்ற மாமியார் செல்வ லட்சுமியிடம் கோபப்பட்டார் குமணராசன்.

“இங்கே என்றால் எல்லோரும் அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் ….” கரகரத்த குரலில் அழுதுகொண்டே சொன்னாள் மாமியார் செல்வ லட்சுமி.

“எல்லோரும் பக்கத்திலேயிருந்து பார்த்துக் கொண்டதின் லட்சணம் அவருடைய உயிரைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை..கொஞ்சமாவது காய்ச்சல் குறைந்திருக்கிறதா..”

”குறையவில்லை” தலையை அங்குமிங்கும் அசைத்தாள். மாமியார்.

“ நல்ல வேளை இந்த விமானத்திலாவது அனுப்புவதற்கு வசதி கிடைத்தது. நீங்கள் மட்டும் கூடப் போகிறீர்கள். குவைத்திலிருந்து வேறு விமானத்தில் உங்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கே உங்களை வரவேற்பதற்கும், ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்கும் என் நண்பர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று சொல்லி விட்டு வேகமாக மருத்துவமனையின் நிர்வாகியான பெரிய டாக்டரை பார்க்க கிளம்பினார் குமணராசன்..

அத்தியாயம் 2A

டாக்டரின் இளைய மகள் சில்வியா கண்கள் சிவக்க “அப்பாவின் நிலைமை இப்படியாகி விட்டதே. அப்பாவிடம் என்னவெல்லாம் சொல்ல நினைத்திருந்தோம்’ என்று எண்ணிக் கொண்டே திரும்பிப் பார்த்த போது சகாயராஜ் கீழேயிருந்து வேகமாக மாடியேறி வந்துக்கொண்டடிருப்பதை கவனித்தவள் கொஞ்சம் பதட்டமானாள்.

’இவன் ஏன் இங்கு வந்தான். அப்பா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதை நான் இவனிடம் சொல்லவில்லையே.? ஏற்கனவே ஒருமுறை வீட்டிற்கு வந்து அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு போனது காணாதா. ஏன் இங்கு

வந்தான்..அவருக்குத் தெரிந்தால் கடித்துக்குதறி விடுவார்கள் பேசாமல் போகச் சொல்லி விடலாம்’ என்று எண்ணியவாறு படிக்கட்டின் அருகில் வந்தவள் சகாயராஜ் மேலேறி வந்ததும,. அவனைத் தனியாக இழுத்துக்கொண்டு ஒரு ஒதுக்குப் புறமாக வந்தாள்

”இங்கே ஏன் வந்தாய்?”

”என் வருங்கால மாமனாரைப் பார்த்துவிட்டு வரலாமென்று தான்”…………………………

அத்தியாயம் 2B

”மண்ணாங்கட்டி ஏற்கனவே நம்ம செட்டப் படி நீ எங்க வீட்டிற்கு வந்தாய்.. அப்பா உன்னை செமையாகத் திட்டி

அனுப்பிட்டாங்க இந்த நேரத்திலே நீ அந்தப் பக்கம் வந்தே என் அம்மா,அக்கா,தம்பி எல்லோரும் உனக்கு சரியான டோஸ் கொடுத்து விடுவார்கள்.”

அதற்குத்தான் முன் யோசனையோடு உன் அப்பாவிற்கு உதவி செய்ய நானும் அமெரிக்காப் போகிறேன் நான் செய்கிற உதவியிலேயே மயங்கிப் போய் அப்படியே என்னை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்வார்கள்.”

”சும்மாயிரு! இந்த ஊரிலே ஒழுங்காக ஒரு வேலைக்குப் போக துப்பில்லை, அமெரிக்கா போகப்போகிறாராம். அதெற்கெல்லாம் உனக்கு காசு ஏது ராஜா?”

அவன் அவளிடம் ஏதோ இரகசியமாய் சொல்ல, அப்படியே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனவள் “ராஜ் உன்னைக் காதலித்ததே தப்போ என்று தோன்றுகிறது. என் அப்பா பெரிய டாக்டர், எஞ்சினியர், கலெக்டர்னு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

நீ அவரோடு அமெரிக்க ஆஸ்பத்திரியில் இருந்து நர்ஸிங் பாயாக உதவி செய்தால், கூட கொஞ்சம் சீப்பாகி விடுவாய். வேறு ஏதாவது நல்ல வேலைக்கு போக முயற்சி செய்” என்றாள் சில்வியா.

”நீ வேண்டுமானால் பார். நான் செய்யும் உதவிகளை உணர்ந்து உன் அம்மாவும் அப்பாவும் எனக்கு உன்னைக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறார்கள்”

”நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டாய். ஒழுங்காக இந்த ஒரு வருடத்தில் “கம்ப்யூட்டர் முடித்திருந்தால் இந்த ஊரிலேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கும்.”

”எனக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒத்து வர மாட்டேங்கிறது சில்வியா”

”சே! இப்படி ஒரு மக்கைப் போய் காதலித்தேன் பார்” என்று தலையில் அடித்துக்கொண்ட போது “சில்வியா எங்கே?” என்ற குரல் கேட்க, சரி சரி எப்படியாவது போய் ஒரு பூங்கொத்தும், சீக்கிரம் குணமடைய ஒரு வாழ்த்து அட்டையும் வாங்கிவிட்டு வந்துவிடு’ என்று ஓடினாள் சில்வியா.

குமணராசன் “எங்கே போய் விட்டாய் சில்வியா? உன் அம்மாவை கொஞ்சம் தேற்று! நான் மாமாவை விமானத் தளத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

”சரி அத்தான்”

”அங்கே யாரோடு பேசிக்கொண்டிருந்தாய்… அந்தப் பையன் சகாயராஜ் மாதிரி….”…என்று இழுத்தார்.

”இல்லை அத்தான் அப்பாவின் நண்பர் மகன் ஒருவர் அப்பாவை பார்க்க வந்திருந்தார் அவர் தான் என்னோடு பேசிக்கொண்டிருந்தார்”

”இனி அந்தப் பிச்சைக்காரப் பயல் சகாயராஜோடு தொடர்பு எதுவும் வைத்துக்கொள்ளாதே. அது உனக்கும் நல்லதல்ல. நம் குடும்பத்திற்கும் நல்லதல்ல”

சில்வியா ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள் ”’சரி சரி போய் உன் அம்ம்மாவிற்கு ஆறுதல் சொல் அவர்கள் அழுது கொண்டீருக்கிறார்கள்” என்று சொல்லி விட்டு மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றார் குமணராசன்.

அத்தியாயம் 3A

”குவைத்தில் போய் ஹனிமூனா?” நம்மூரிலே எத்தனை பிக்னிக் ஸ்பாட் டூரிசம் சென்டர் இருக்கிறது அதையெல்லாம் விட்டு விட்டு அந்தப் பாலை வனக்காட்டிலே அடிக்கிற வெயில்லே போய் யாரவது ஹனிமூன் வெச்சுக்குவாங்களா?” சுவேதா தன் கணவனிடம் நூறாவது முறையாக சொல்லிக்கொண்டிருந்தாள்.

”வேற வழியில்லை சுவேதா ஊட்டி, கொடைக்கானல் பெங்களூர் போகலாம்தான். கம்பெனியிலே விடுமுறை தர மாட்டார்கள். ஏற்கனவே திருமண விடுமுறை எடுத்து வந்து உன்னைப் பெண் பார்த்து உடனடியாக கல்யாண ஏற்பாடெல்லாம் செய்து முடிப்பதற்குள்ளே ஒரு மாதம் முடிந்து போய்விட்டது.

இனி விடுமுறையை நீடித்தால் உன் ஊரிலேயே இருந்துகொள் நாங்கள் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறோம் என்று அனுப்பி விடுவார்கள். அப்புறம் சோறு கஞ்சிக்கு லாட்டரி அடிக்க வேண்டியதுதான்.”

”அது சரி வேலைக்கு உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள் இதில்லே ஹனிமூனுக்கு ஏன் குவைத்துக்குப்போக வேண்டும்

என்று சொல்கிறீர்கள்.” சிரித்தாள் சுவேதா.

அத்தியாயம் 3B

”சுவேதா இப்போது திருமணம் செய்துவிட்டு உடனடியாக நான் மட்டும் குவைத் போனால் எப்படி இருக்கும்”

”பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அதற்கு திருமணமே செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தான் நினைப்பு வரும்”

அதனால் தான் உனக்கு மூன்றுமாத விசிட்டிங்க் விசா வாங்கி வந்திருக்கிறேன். நாம் இருவரும் ஹனிமூன் கொண்டாடிய மாதிரியும் இருக்கும்.அத்தோடு உன்னைத் தனியாக விட்டு விட்டு அங்கே போய் எண்ணெய்க் கிணத்தில் உன் முகம் பார்த்து விரகத்தோடு……….. வேலை செய்த மாதிரியுமிருக்காது. அதனால் தான் நம் ஹனிமூன் குவைத்திலுள்ள தஸ் மன் பிளாட்டில்லே என்றேன்”

”ஆமாம் அங்கே என்னை அறையில போட்டு ஜெயில் கைதி மாதிரி பூட்டி வைத்துவிட்டுப் போய் விடுவீர்கள் தினமும் இரவில் தான் உங்களை பார்க்க முடியும்”

அப்படியில்லை சுவேதா நீ அங்கே வந்துவிட்டால் அடிக்கடி விடுமுறை போட்டுக்கொண்டு ஒருசில பிக்னிக் பாய்ண்டுகள் போய் வரலாம், குவைத் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வரலாம். அவர்களை அழைத்து நமது திருமண விருந்து கொடுக்கலாம்

”அப்போது உனக்கும் நேரத்தைப் போக்குவதற்கு வசதியாக இருக்கும்”

”ஆமாம். குவைத்தில் எனக்கு எதுவும் வேலை பார்க்க முடியாதா?”

”முயற்சிக்கலாம்”

“நாம் குடும்பத்தோடு அங்கே தங்க முடியாதா ?”

”அதற்கு விசா எடுக்க வேண்டும் அத்தோடு ஊரிலே இருக்கும் என் அப்பா அம்மாவை யார் கவனித்துக் கொள்வது?”

அத்தியாயம்-3c

”உங்களுக்கு மனைவியாக இருக்கவா அல்லது வீட்டுக்கு வேலைக்காரியாக்கவா என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்”

”வீணாக திருமணமான மூன்றாவது நாளே சண்டை போட வேண்டாம். விமானத்திற்கு நேரமாகிவிட்டது. இப்போது கார் வந்துவிடும் சீக்கிரம் எல்லாம் எடுத்துஅடுக்கி வை”

”எனக்கு நீங்கள் ஓர் உறுதி சொல்ல வேண்டும்”

”அங்கே எனக்கு வேலை கிடைக்காவிட்டாலும், எப்படியாவது விசா எடுத்து நான் உங்களோடு தங்கிவிட விட வசதி செய்ய வேண்டும்.”

”சும்மா ஊரிலே இருக்கும் என் அப்பா அம்மாவை யார் கவனித்துக் கொள்வது

என்று சீனெல்லாம் போடக்கூடாது”

“ பின்னே இந்த இழுபறியெல்லாம் வேண்டாம். கண்டிப்பாக விசா வாங்கி செட்டில் செய்கிறேன் என்று சொல்லுங்கள்”என்றாள் ஸ்வேதா.

அவன் “சரி” என்று சொல்லவும் வாசல் கதவு மணி சப்தம் கேட்கப் “போய் பார்” என்றான்

”சுவேதா குவைத்திற்கு புறப்பட்டாகிவிட்டதா” கதவைத் திறந்ததும் சுவேதாவின் அப்பா கேட்டார்.

”வாங்க அப்பா. அம்மா வரவில்லையா?” என்றாள் சுவேதா

”அம்மா ஏர்ப்போட்டிற்கு நேரடியாக தம்பி தங்கைகளுடன் வருவதாகச் சொல்லி இருக்கிறாள்”

”சரி வாங்க கார் வருவதற்காகதான் காத்திருக்கிறோம்.. காப்பி தருகிறேன் குடியுங்கள். நாங்களும் புறப்பட்டு ஏர்ப்போட்டுக்கு எல்லோரும் சேர்ந்து போய்விடலாம்”

”மாப்பிள்ளை எங்கே?”

”மேலே பேக் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வரச்சொல்லுகிறேன்” என்று சமையலறையை நோக்கிக் கிளம்பினாள்.

அத்தியாயம் 4A

இனிகோ, தன் கைப்பிடியை இறுக்கிப்பிடித்தான். பின் கையிலிருந்த வாளை எடுத்து வீச ஆரம்பித்தான். எதிரிலிருந்த

அமுதன் “என்ன வாளை இப்படியா சுத்தறது…” என்று கத்தினான். “டேய்.. இந்த நாடகம் குவைத்தில நல்லா நடந்தா தான் மற்ற அரபு நாடுகளிலேயும் போட முடியும். கொஞ்சம் நல்ல படியா ஒத்துழைங்கடா..” என்றான் டைரக்ட் பண்ணிக்கொண்டிருந்த குரு.

”எல்லாம் நல்லா சூப்பரா பண்ணிடலாம்டா.. கவலைப்பட்டாதே” என்றான் அமுதன். “கிழிச்சீங்க.. இன்னும் வசனத்தை கூட ஒழுங்கா மனப்பாடம் பண்ணலே.. அந்த லேடி கேரக்டர்.. கவிதா எங்கேடா?..” குரு அழாத குறையாக கேட்டான்.

கவிதா வெளியே நின்று தன் காதலன் சோமுவோடு பேசிக் கொண்டிருந்தாள். ”நானே இந்த டிராமாவை வச்சி கொஞ்சம் நாளை தள்ளிப்போட்டிருக்கேன். இதிலே வேற நாளைக்கே பொண்ணு பாக்க வாறாங்கண்ணு அண்ணன் வயிற்றிலே புளியைக் கரைச்சிட்டுருக்கான்.

சோமு. .ஒண்ணு பண்ணு.. சீக்கிரம் நான் குவைத்துக்கு போயிற்று வரதுக்கு முன்னாலே சீக்கிரம் ஒரு வேலையத்தேடிக்க.. இல்லேண்ணா .. நான் என்ன செய்ய.. ஒரு வருசமா சொல்லிட்டுருக்கேன். நீ சும்மா என்னையே சுத்திக்கிட்டுதிறியரே.. நான் என்ன சொல்றது வீட்டிலே..” கண்களைத் துடைத்துக் கொண்டாள் கவிதா.

“எனக்கு வேலை கிடைச்சு நான் போகாத மாதிரியில்ல கவிதா பேசிக்கிட்டிருக்கே..” சோமு வருத்தத்துடன் கேட்டான்.

”பாரு .. காதலிச்சிட்டோம்.. இனி ஒருத்தனை மனசிலே ஏத்துக்க முடியுமாங்கற பயத்திலே தான் இன்னும் …. பாரு சோமு.. எங்கேயாவது சென்னை மும்பாய் போ.. வேலை தேடு.. எங்க வீட்டிலே முடியாதுண்ணு சொன்னாலும் உங்கூட ஓடி வந்துடறேன்..

எவ்வளவு நாளைக்குத்தான் ஒழிச்சு ஒழிச்சு பாத்துகிட்டே திரியிறது.. எனக்கும் இந்த வருடத்தோட காலேஜ் முடியுது..

அத்தியாயம் 4B

நீ எங்கேயாவது வேலை பாக்கிறண்ணு தெரிஞ்சாலே நான் வீட்டிலே கொஞ்சம் எதுத்துப் பேசலாம்.. எங்க அண்ணன் வேற அவன் பிரண்டு ப்ரசன்னாவிற்கு எப்படியாவது கட்டி வச்சிடணும்ணு ஒத்த கால்லே நிக்கிறான் நிலமைய புரிஞ்சிக்க ..:”

திரும்பவும் கண்களைத் துடைத்துக்கொண்டாள் கவிதா.

வெளியே வந்த குரு, “ கவிதா.. கொஞ்சம் சீக்கிரம் வரியா..சீக்கிரம் ரிகர்சலை முடிச்சிட்டு பாஸ்போர்ட் விசா வேலைகளுக்கு அலைய வேண்டியதிருக்கு..” என்றான் கொஞ்சம் உக்கிரமமாக..

‘ இதோ வந்துட்டேன் குரு.. சோமு … பாருப்பா.. எங்க அண்ணன் நம்ம ஆசையிலே மண்ணள்ளிப்போட்றதுக்குள்ளே ஏதாவது வேலைய தேடிக்க…” என்றவாறு உள்ளே வந்தாள் கவிதா.

“இனிகோ.. அடுத்த சீனைக்கொஞ்சம் கவனிச்சிக்கோ.. நான் அந்த டிராவல்ஸ் ஆபீஸிற்கு போய்ட்டு வந்துடறேன்.” என்று குரு கிளம்பினான்.

“ உள்ளூருக்குள்ளே ஒழுங்கா நடிக்க மாட்டாள்.. இதிலே வேற குவைத்திலே என்ன மண்ணள்ளிப் போடப்போறாளோ..” முணு முணுத்துக் கொண்டே ‘காட்சி 6.. யாரெல்லாம்பா… “ சபதமெழுப்பினான் இனிகோ.

“டேய் நீங்க எல்லாம் சேர்ந்து என்னைக்கலாய்க்குறது தெரியுமடா.. குவைத்திலே நான் நடிப்பிற்கு பரிசு வாங்கிட்டு வர்ரேன் பாருங்கடா” என்று சொன்ன கவிதா.. ‘வா அமுதன்..

அடுத்த சீன் நமக்குத்தான்.. சும்மா கையெல்லாம் மேல வைக்காம டயலாக்கு பேசுடா” என்றாள் கவிதா.

ஆமா..உலக மகா பேரழகி.. எல்லாம் அந்த குருவச்சொல்லணும்..” என்றவாறு டயலாக் பேச ஆரம்பித்தான் அமுதன்.

” ஆமாம் அடுத்த சீன்ல யாரு.. எப்பா.. குரு இல்லேண்ணா எல்லாரும் ஆட்டம் போட ஆரம்பிச்சிருவீங்க…கண்ணன்.. வாங்க அடுத்த சீன்ல நீங்க தான் “ என்று கண்ணனை அழைத்தான். இனிகோ

அத்தியாயம் 4C

அடுத்த காட்சிக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்த போது இனிகோவின் அருகில் வந்த கவிதா, “இனிகோ .. உங்க மாமா யாரோ துபாயிலே இருக்கதா சொன்னியே.. அவங்களால நம்ம குருவிற்கு ஒரு வேலை வாங்கித்தர முடியுமா?” என்று கேட்டாள் ”கேட்டுப்பார்க்கிறேன்.. சரி.. அடுத்த சீன்ல யாரு.. அமுதன் வாப்பா..” என்றான் இனிகோ..

”சார் .. இந்த நாடகத்துக்கு.. ஏதோ க்ரீடம் பண்ணச் சொல்லியிருந்தியளாம் ஆள் வந்துருக்கு.. என்றான் தாசன்.

வெளியே வந்த இனிகோ, “ கிரீடம்.. நல்லாத்தான் வந்திருக்கு.. ஆமாம் வேல், வில்லெல்லாம் பண்ணச்சொல்லியிருந்தோமே.. என்னாச்சு..தம்பி:”என்று கேட்டான் இனிகோ.

“ சார் இதக்கொண்டு காட்டிட்டு வரச்சொன்னாங்க.. மற்றதெல்லாம் எனக்குத் தெரியாது “ என்றான் வந்த ஆள்.

“ சரி . நான் பேசிக்கொள்கிறேன். இதை வச்சிட்டுப் போ.. “ என்றான் இனிகோ.

அத்தியாயம் 5

“ இது தான் உனக்கு கடைசி வாய்ப்பு. இந்த. சான்ஸை பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றால் அப்புறம் நீ இந்திய டீமிலே கிரிக்கெட் விளையாடுவதே கடினம் தான்” கபூர் சொல்லிக்கொண்டிருக்க

“நீ.. என்ன தான் சொல்ல வருகிறாய்..” தேவ் கேட்டான்.

“உன்னை எப்படியாவது பெரிய கிரிக்கெட்டராக்கி காட்டுறேன்னு சவால் விட்டிருக்கேன்”

“ நான் நல்லாத்தானே விளையாடுகிறேன். “ என்றான் தேவ்

“பாரு தேவ். இந்த சென்னை கிளைமேட் உனக்கு ஒத்துப்போகுது

ஆனா நீ விளையாடப்போறது .. முதல் மேட்ச் குவைத்திலேங்கிறதை மறந்துடாதே….”

“ஏன் கபூர். பயங்காட்டுற…. “ என்றான் தேவ்

“அந்த பாலைவனத்துல எப்படி விளையாடப்போறங்கிறது தான் முக்கியம், அந்த சீதோசண நிலை உனக்கு ஒத்து வரணும்”

”அதல்லாம் கவலைப்படாதே.. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன். சீக்கிரம் ஏர்போர்ட்டுக்கு போகணும்” என்றான் தேவ்.

அத்தியாயம் 6A

விமானி குமார், மூன்றாவது முறையாக பாத்ரூமிலிருந்து வயிற்றைத் தடவிக் கொண்டு வெளியே வந்தவாறு “நேற்றுக்

குடித்த ரம் சரியில்லை என்று நினைக்கிறேன்.” என்று எண்ணிக்கொண்டார்.

”வனிதா ஏர்ப்போர்ட் அதாரிட்டிக்கு ஒரு போன் பண்ணி இன்று நான் வர முடியாது என்று சொல்லிவிடு. வயிற்று வலி மிகவும் கஷ்டப் படுத்துகிறது” என்றார்.

”என்ன டியர் ரொம்ப கஷ்டமாக இருந்தால் டாக்டரிடம் போய் வரலாமா?” என்று கேட்டாள் குமாரின் மனைவி வனிதா.

வேண்டாம் வனிதா. ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகப் போகும்” என்றவர் திரும்பவும் வயிற்றை பிடித்துக் கொண்டு பாத் ரூமுக்குள் ஓடினார்.

வனிதா போனை எடுத்து டயல் பண்ணி “ஹலோ, மிஸ்டர் பிரேம்சந்தைக் கூப்பிடுகிறீர்களா?” என்றாள்

”ஒரு நிமிடம் லைனில் இருங்கள்” என்றது எதிர் முனையில் ஒரு மின்னல் குரல்”

”ஓ.கே”

”ஹலோ மிஸ்டர் பிரேம் சந்த் லைனில் இருக்கிறார் பேசுங்கள்”

”ஹலோ சார் நான் மிஸஸ் குமார் பேசுகிறேன்”

ஹாய் எப்படியிருக்கீங்க?”

”நன்றாக இருக்கிறோம்” ”சரி என்ன விஷயம்? ஆமாம் குமார் எங்கே? இன்னும் காணோம் இன்னும் ஒரு மணி நேரத்திலே குவைத்திற்கு போகின்ற விமானத்தை மேலே ஏற்றி ஆகணுமே”

“அதற்காகத் தான் சார் போன் பண்ணினேன்”

”என்ன ஆச்சு?”

திடீரென்று வயிற்றுவலி என்றார் இப்போது கூட பாத்ரூமில் தான் இருக்கிறார்”

அத்தியாயம்-6B

”பொய் சொல்லவேண்டாம். திடீர் மூட் வந்து ரெண்டுபேரும் பிக்னிக் போறீங்களா?

அப்படியெல்லாம் இல்லை சார் “

“வனிதா ஒரு நிமிடம் குமாரிடம் போனைக் கொடுங்கள்”

”சார் அவர் பாத்ரூமில் இருக்கிறார்”

”இதோ பாருங்கள் வனிதா இன்றைக்கு வரக் கூடிய மூன்று பைலட்டுக்களும் இன்னும் வரவில்லை.

குவைத் விமான சர்வீசைக் கான்சல் பண்ணவும் முடியாது. குமார் வந்து விட்டால் நான் சமாளித்துக் கொள்வேன்” என்றார் பிரேம்சந்த்.

”அது வந்து….” என்று வனிதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுகில் வந்த குமார் ”போனை இப்படிக் கொடு” என்று வாங்கி “சார் நான் விமானி குமார் பேசுகிறேன்” என்றார்.

”ரொம்ப நல்லதாகப் போச்சு குமார் ஏற்கனவே சிங், ரட்சகன், நிகில் மூன்று பேறும் விடுமுறையில் இருக்கிறார்கள். அது போக இன்று காலையில் இன்னும் மூன்று விமானிகள் விடுமுறை சொல்லிவிட்டார்கள். இப்போது நீங்கள் வராவிட்டால் நான் குவைத் சர்வீசை கேன்சல் பண்ணவேண்டிய சூழ்நிலைதான்”

கொஞ்சம் தெம்பாக உணர்ந்த குமார், “பரவாயில்லை சார் நான் உடனடியாக புறப்பட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

அத்தியாயம் 7A

‘”வாருங்கள்.. என்ன விசயம் ரொம்ப படபடப்போடு வருகிறீர்கள்.என்ன.. கொரானாவுக்கு மருந்து எதுவும் கண்டுபிடித்து விட்டீர்களா?” சிவா சிரித்துக்கொண்டே கேட்டான்

எதிரே வந்த மெரீனா” சிவா உங்களுக்கு எல்லாமே கிண்டல் தான் எப்போதாவது சீரியசாக பேசியிருக்கிறீர்களா?” என்று கொஞ்சம் கோபத்தோடு கேட்டாள்.

“ ஓ!!!! இவ்வளவு கோபப்படுவீர்கள் என்று நினைக்கவில்லை” என்றவன் “ எனிதிங் சீரியஸ்…” மெதுவாகக்கேட்டான்

“ ஆம் என் பின்னால் வருகிற அந்த ஆளைப் பாருங்கள். நான் லேபிலேயிருந்து கிளம்பி வந்ததிலிருந்து என்னைத்தொடர்ந்து வருகிறான்” என்றாள் மெரீனா.

“என்னது?” கோபத்தோடு திரும்ப, “உங்கள் கதா நாயகன் வேலை யெல்லாம் தூக்கி எறிந்து விட்டு என்னோடு நடங்கள்” என்றாள் மெரீனா.

”நாம் இருவரும் சேர்ந்து இத்தனை நாள் ஒரே ஆராய்ச்சிக்கூடத்தில்வேலை செய்திருந்தும் கூட இவ்வளவு பயந்து கொண்டு….” மெதுவாகச் சிரித்தவன் “ மெரீனா இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா படலியா?” என்றான் சிவா.

”நீங்கள் வீரர் தான்.. ஆனால் அதைக்காட்ட இது நேரமில்லை.. ” மெரீனா காரை நோக்கி நடந்தாள்.

அவனும் காரில் ஏறி உட்கார, “ ஆமாம் எங்கே போகிறோம்?” என்று கேட்டான்.

”விமான நிலையத்திற்கு… “ என்றாள் மெரீனா.

”ஆமாம் நாம் கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்தது தெரிந்து விட்டதா?” என்று கேட்டான் சிவா.

”அப்படித்தான் நினைக்கிறேன்” காரை மிகவும் வேகமாக ஓட்டினாள்.

”நான் உடைகள் எதுவுமே எடுத்து வரவில்லை…”என்றான் சிவா.

”என்னை பத்திரமாக குவைத் விமானத்தில் ஏற்றி விடுவதற்காக தான் நீங்கள் ஏர்போர்ட்டிற்கு வருகிறீர்கள்” என்றாள் மெரீனா.

அத்தியாயம் 7B

தமிழரசன்

தொண்டர்களிடம் வாழ்த்து சொல்லி அனுப்பி விட்டு உதவியாளரிடம் ”தினமும் அரசியல் சூழ்நிலையை தெரிந்து, தினமும் மூன்று முறை போன் பண்ணி எனக்கு எல்லாத்தையும் சொல்லணும்” பின்ன நமக்குப் பின்னாலே யாரெல்லாம் இன்னும் குழி பறிச்சி கிட்டிருக்காங்கிறதையும் தெரிவிக்க வேண்டும்” என்று உதவியாளனிடம் சொல்லிவிட்டு விமான நிலையத்திற்குள் நுழைத்தார் அமைச்சர் தமிழரசன் திடீரென்று செல்போன் அழைக்க எடுத்து ”ஹலோ” என்றான்.

”என் ஞாபகம் இருக்குமில்லையா?” என்ற இந்துமதியின் குரல் கேட்டு “இந்து இது கொஞ்சம் அதிகம்” என்றான்.

”நம் இருவர் அன்புச் சின்னமான காதலும் கொஞ்சம் அதிகமான விஷயம் தானே?” என்று இந்துமதி சிணுங்க”

”ஓகே ஓகே நான் அப்புறமாக கூப்பிடுறேன். என்றவாறு எமிகிரேசன் பகுதிக்கு வந்தான் தமிழரசன்.

டாக்டர் சந்திரசேகரை ஸ்ட்ரெக்சரில் வைத்து தூக்கி வந்துகொண்டிருந்தனர். குமணராசன்தான் மாமியாருடன் உள்ளே வந்து அவர்களுடைய டிக்கெட்டுகளை சரிபார்த்துக் கொண்டு மற்ற நண்பர்களிடம் ஒரு சில இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுத்து செய்யச் சொன்னார்.

சில்வியா வெளியில் நின்று அம்மாவிற்கு கையசைப்பது போல வெளியே நின்று கையாட்டினாள். சகாயராஜும் கூடவே ஒட்டிக்கொண்டு நின்றான்.

அத்தியாயம் 8

சுவேதாவும் சங்கரும் பெட்டிப் படுக்கைகளை டிராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வர ”மாமியார் சொன்னதெல்லாம் மனசிலே வைத்துக் கொண்டிருக்காமல் மாப்பிள்ளையோடு ஒழுங்காக குடும்பம் நடத்து. முடிஞ்ச வரைக்கும் குவைத்திலேயே இருக்கப்பார்.

இங்கே வந்து பெருசுகளோட சண்டை போட்டுக் கொண்டிருப்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.” அம்மா உபதேசித்துக் கொண்டே வந்தாள்.

வாயில் வந்ததும் “போயிட்டு வாங்க மாப்பிள்ளை. கண்ணை துடைச்சுக்கோ” சுவேதாவின் அப்பா வழியனுப்பினார்.

குவைத் செல்லும் விமானம் ஏரக்குறைய ஒரு ராட்சஸ பறவையைப் போல விமானத்திற்கான இறைச்சலுடன் பயணத்திற்கு தயாராக நின்று கொண்டிருந்தது.

விமானப் பயணிகள் எல்லோரும் ஏறிவிட சுவேதா,சங்கர், குடும்பம் முன் வரிசையில் அமர, டாக்டரோடு பார்வதி அம்மாளும் உதவிக்கு ஒரு உதவி செவிலியும் அமர்ந்திருந்தனர்.

அமைச்சர் தமிழரசன் விமான டி.வி யைத் தவிர்த்து. குவைத்தில் இறங்கியதும் தமிழர் அமைப்பு ஒன்றில் பேசுவதற்கு குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, விமானி குமார் விமானி ப்ரேம் சந்தோடு சேர்ந்து விமானத்தை ஓட்ட ஆரம்பித்தான்.

ஸ்வேதாவும் அவள் கணவனும் புத்தகம் புரட்ட ஆரம்பித்தனர்.

அத்தியாயம்-8B

இனிகோ தங்களுடைய நாடகக்குழுவினர் எல்லோரும் அமர்ந்து விட்டர்களா என்று சரி பார்த்துவிட்டு நாடகத்திற்கான கத்தி, வாள், மகுடம் மற்றும் மன்னன் வேடத்திற்கான உடைகள் அடங்கிய

பெட்டியை காலுக்குள் தள்ளி வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் குடித்தான்.

தேவ் தன்னுடைய முதல் இன்னிங்ஸை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதை மனதால் பேட்டிங் செய்ய ஆரம்பித்தான்.

கடைசி நிமிடத்தில் வந்த மெரீனா பயந்து கொண்டே தன் பைகளை மெல்ல வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.

தேவ் தன் முதல் இன்னிங்ஸ் எப்படி ஆட வேண்டும் என்று யோசித்தவாறு கையிலிருந்த பேட்டை திருப்பி பார்த்துக்கொண்டு இருந்த போது பணிப்பெண் வாங்கி மேலே வைத்தாள்.

விமானப் பயணிகள் எல்லோரும் தங்கள் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டுகளை விடுவித்துக்கொள்ள, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, “ குமார் நாம் எல்லாவற்றையும் செக் பண்ணினோம் ஆனா இந்த திராட்டிலே மறந்திட்டோம். இது வேலை செய்ய மாட்டேங்குதே” என்றார் ப்ரேம் சந்த்.

“என்ன இதை செக் பண்ணாம….. மண்ணாங்கட்டி வேலையா பார்த்துக்கிட்டிருந்தீங்க..” என்று கத்தியவாறு, அசைத்துப்பார்த்தவர், “சரி” எல்லோரும் பரலோகம் போக வேண்டியது தான். காதரினைக் கூப்பிட்டு எமெர்ஜென்ஸி எக்சிட்டை திறக்கச்சொல்லி எல்லோரையும் பாராசூட்டை எடுத்துக்கிட்டு குதிக்கச் சொல்லி அறிவிக்கச்சொல்லுங்கள்” என்றார் மிகக்கோபமாக.

அவர் உள்ளேயிருந்து கத்திக்கொண்டிருக்க, திடீரென்று பயணிகள் பக்கமிருந்து, ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் எழுந்து கொண்டார்கள்.

”யாரும் அசையக் கூடாது. விமானி குமார் தலையில் குறி வைத்து எங்கள் நண்பன் துப்பாக்கியோடு அமர்ந்திருக்கிறான். இந்திய அரசாங்கம் எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால் நாங்கள் இந்த விமானத்தைக் கடத்துகிறோம்” என்றனர்.

விமானம் ஆட ஆரம்பித்தது.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *