அலையில் ஆடும் காகிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2026
பார்வையிட்டோர்: 70 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

மிதமான வேகத்தில் தான் அந்த இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்தது. அதை ஒட்டிக்கொண்டிருந்த இளைஞன் நகுலன், எதையோ யோசித்துக் கொண்டே வண்டியை ஒட்டிக்கொண்டு இருந்தான்.

ஒரு சிறிய சிற்றூர் வந்தது. வண்டி டுக் டுக் என்று சத்தம் போட்டது. ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்றது. நிறுத்தி விட்டு பார்த்தான். பின் சக்கர டயரில் ஒரு பெரிய ஆணி இந்தப் பக்கம் புகுந்து அந்தப் பக்கம் வந்தது போல் இருந்தது. தன பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்தான். வரவே இல்லை. உன்னால் முடிஞ்சா இழுத்துப் பார் என்று சவால் விட்டது. என்னடா இது நகுலனுக்கு வந்த சோதனை, என்று தான் தோன்றியது.

எதிரில் ஒரு கடை இருந்தது. அதில் நிகிலா வல்கனைசிங் என்று போட்டு இருந்தது. அது என்ன வல்கனைசிங்? ஒரு சமயம் பஞ்சாபி சிங் யாராவது கடை வச்சு இருப்பானுக போல என்று வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு கண்ணாடியை துடைத்து போட்டு பார்த்தான்.

அங்கே ஒரு பெண் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினாள். அட்ரா சக்க.. என்னா பொண்ணுடா? என்றான். அவன் அவ்வாறு சொல்வதற்கு காரணம் இருந்தது. அவள் ஒரு இளம்பெண். ஒட்டி வந்தது ஒரு புல்லட் வண்டி.

நிறைய இளைஞர்கள் தள்ளி நிறுத்தவே சிரமப் படுவார்கள். ஆனால், இவள் அனாயசமாக நிறுத்தி, சைடு ஸ்டாண்ட் போடாமல், செண்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். ஸ்கூட்டி வண்டியை நிறுத்தவே சைடு ஸ்டாண்ட் போடும் ஆடவர் இருக்கும் இந்த காலத்தில் ஒரு இளம்பெண் இப்படி செண்டர் ஸ்டாண்ட் போட்டு வண்டியை நிறுத்தியது ஆச்சர்யமாக இருந்தது நகுலனுக்கு. அப்படியே வாயை பிளந்த படி பார்த்துக் கொண்டிருந்தவன். அவள் கடையை திறந்து ஷட்டர் பூட்டுகளை அதிலேயே பூட்டிவிட்டு, சர்ரென்று மேலே ஏற்றி விட்டாள்..

அட. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இருக்கே, இது ஒரு பஞ்சர் போடும் கடையா? அதானே பாத்தேன், பழைய டயர் எல்லாம் வரிசையா அடுக்கி வச்சிருக்கானுங்களே ன்னுட்டு, என்று அவனுக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். அங்கே போய் கேட்டா, நமக்கு ஒரு வழி பிறக்கும், ஆனால், யாரு பஞ்சர் போடுவா, இந்த பொன்னத் தவிர வேற ஆள் யாரும் இல்லையே, என்று சொல்லிக்கொண்டே, அந்தக் கடையை நோக்கி போனான்.

அந்தப்பெண், இவனை நோக்கி, கண்ணாலேயே, என்ன வேனும்னு, புருவத்தை உயர்த்தி கேட்டாள். இவள் பஞ்சாபி பொன்னாகத் தான் இருப்பாளோ? பாக்குறதுக்கு அப்படிதான் தெரியுது. சரி முதல்ல தமிழ்ல்ல கேப்போம்.

இங்க வல்கனைசிங் இல்லையா? எப்ப வருவார்? என்று கேட்டான்.

என்ன வேனும் என்று திரும்பவும் கைகளால் சைகை செய்தாள். உங்களுக்கு தமிழ் தெரியாதா? இந்த கடை ஓணர் வல்கனைசிங் இல்லையா?

அவர் இல்லை. உனக்கு என்னப்பா வேனும், என்று சத்தமா கேட்டாள்.

அடிப்பாவி, நல்லா தமிழ் பேசுறாளே? என் வண்டி அங்க நிக்குது. ஆணி குத்திட்டு, அது தான், கடையிலே யாரும் இல்லையா? அதான் கேட்டேன் என்றான் நகுலன்.

ஏன். என்னைப் பாத்தா ஆளா தெரியலையா? வண்டி எங்க என்றாள். ரோட்டுக்கு அந்தப் பக்கம் நிக்குது பாருங்க, என்றான்.

அந்த ஸ்ப்ளெண்டர் தானே, என்னவோ, ஆத்துக்கும் அந்தப் பக்கம் நிக்கிற குதிரை மாதிரி சொல்ற. போய் வண்டிய இங்க தள்ளிக்கிட்டு வாங்க..

இல்ல பெரிய ஆணி குத்தி இருக்கு. நான் உங்கள அங்க தள்ளி கிட்டு போனா தான் சரியா இருக்கும், என்றான் நகுலன்.

யோவ், என்ன டபுள் மீனிங்..ஆ, நசுக்கிடுவேன் என்று குறடு மற்றும் திருப்புளியை காட்டினாள்.

ரொம்ப பயங்கரமான பொண்ணா இருப்பா போலிருக்கே! சரி வாங்கம்மா.. என்று வண்டி இருந்த இடத்துக்கு இருவரும் போனார்கள்.

வண்டியை கொஞ்சம் சாய்த்து, அப்படியே பிடிச்சுக்கோங்க, என்று சொல்லிவிட்டு, லாவகமாக ஆணியை பிடுங்கினாள்.

டயரை சுற்று சுற்றி பார்த்து விட்டு, ஓட்டை பெரிசா இருக்கு. பஞ்சர் போட்டா நிக்காது. ட்யூப்லெஸ் டயர் இது. வல்கனைசிங் பண்ணனும் என்றாள்.

அப்படின்னா, அது ஒரு சிங் பேர் இல்லையா?

ஆமாம். இதுல பஞ்சர் ஒட்டி சூடு பன்னி உருக்கி ஓட்டனும், அப்பா தான் வலுவா நிக்கும். அதுக்கு பேர் தான் வல்கனைசிங். சரி வண்டிய தள்ளிக்கிட்டு வாங்க, என்று அவள் கடைக்கு சென்றாள்.

கடையில், வண்டியை சாய்த்து டயரை கழட்டி, பஞ்சர் ஒட்டி, வல்கனைசிங் செய்ய சூடு வைக்கும் இயந்திரத்தில் மாட்டினாள். கொஞ்ச நேரம் ஆகும். வெயிட் பன்னுங்க, என்றாள்.

அவள், உழைப்பை பார்த்த போது, நகுலனுக்கு, அவள் மீது ஒரு மரியாதை வந்து விட்டது.

அப்போது, மிதிவண்டியில் ஒரு இளைஞன் தேனீர் கொண்டு வந்தான்.

அண்ணா ரெண்டு பேருக்கும் டீ குடுங்க, என்றாள். ஏங்க., என்னுகிட்ட கேக்காமலே டீ சொல்றீங்க, எனக்கு பிடிக்கலைன்னா என்ன பன்னுவீங்க.

ஒன்னும் பன்ன மாட்டேன்.

இப்ப பாருங்க என்று ஒரு தம்ளரை எடுத்து இரண்டு டீயையும் கொட்டினாள். அப்பவும் நிறைய வில்லை. எடுத்துக் குடிக்க ஆரம்பித்து விட்டாள்.

என்னாங்க, நான் வேண்டாம்னு சொல்றதுக்குள்ளயே குடிச்சிட்டீங்க?

அப்ப வேணுமா? அண்ணா, இன்னொரு டீ கொடுங்க இவருக்கு என்றாள்.

டீ விற்பவர், நிகிலா கிட்ட யாரும் ஜெயிக்க முடியாது, என்றான்.

ஓஹோ, இவள் பெயர் நிகிலாவா? இவள் பெயரில் தான் கடை இருக்கா?

இவளிடம் பேச்சு கொடுக்க வேண்டும் போல இருந்தது நகுலனுக்கு.

அது ஏன் என்று கேட்டால், அது தான் நம் இயற்கை. ஒரு இளைஞன் மற்றொரு இளம்பெண் தைரியமாக, சொந்தக் காலில் நிற்பதைப் பார்த்த பொழுது, அவளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தது இயற்கை தானே!

நிகிலா தான் உங்க பேரா, என்று கேட்டான் நகுலன்.

ஆமாம். என்றாள்.

உங்கள் கடைக்கும், இந்த பெயரைத் தானே வச்சு இருக்கீங்க, என்று கேட்டான்.

ஆம், என்றாள். அப்போது, அவள் கண்கள் குளமாக இருப்பது தெரிந்தது.

இவள் வாழ்வில் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது. அது இவள் பெயர் சம்பந்தப் பட்டுள்ளது, அதனால் தான் இவள் கண்கள் பணித்தது, என்று புரிந்து கொண்டான்.

சரி. நான் பக்கத்துக்கு கடை வரை போயிட்டு வர்றேன். நீங்க வண்டிய ரெடி பண்ணுங்க, என்று சொல்லிவிட்டு பக்கத்துக்கடையில் போய் ஒரு தம் வாங்கினான்.

அப்போது டீ விற்பவர், அங்கே வந்தார். அப்போது தானே டீ கொடுத்தார், அதனால், அவரை நகுலனைப் பார்த்து புண் சிரிப்பொன்றை வீசினார்.

அண்ணா, ஒரு டீ குடுங்க, என்று கேட்டான் நகுலன்.

இப்ப தான சார் குடிச்சீங்க, என்று கேட்டார் டீ விற்பவர்.

ரொம்ப நல்ல டீயை யார் விடுவாங்க, கொடுங்க என்று கேட்டான் நகுலன்.

சிரித்துக் கொண்டே டீயைக் கொடுத்த போது, நகுலன் கேட்டான். அந்த பஞ்சர் கடை பெண் நிகிலா, எப்படி மெக்கானிக் ஆனாங்க அண்ணா?

அதை ஏன் சார் கேக்குறீங்க. அவங்க அப்பா தான் இந்த கடையை நடத்திக்கிட்டு இருந்தார். அவருக்கு ஒரே செல்லப் பெண் தான் இந்த நிகிலா. நல்லா படிச்சுக்கிட்டு இருந்திச்சு. நல்ல மார்க். அரசு ஒதுக்கீட்டுல இன்ஜினியரிங் படிச்சு கிட்டு இருந்திச்சி.

ஒரு நாள் திடீர்ரென்று நிகிலாவோட வாழ்க்கை, “அலையில் ஆடும் காகிதம்” போல ஆயிட்டு சார்.

ஆம். நொடியில் மாறும் வாழ்க்கைன்னு கேள்விப்பட்டு இருப்பீங்க சார், அது உண்மையிலேயே நடந்தது இவங்க குடும்பத்திலே தான் சார்.

ஆமாம் சார்.

வாழ்க்கை ரொம்ப வித்தியாசமானது. ஒரு நொடிக்கு முன்னாடி சிரிச்சிட்டு இருப்போம். அடுத்த நொடி கண்ணீர்.

என்ன ஆச்சு அண்ணா, அவங்க அப்பாவுக்கு? நகுலன் பதறினான்.

இப்போ நல்லா ஓடிட்டு இருக்கோம் சார். அடுத்த நொடி மருத்துவமனையில் என்றால் எப்படி இருக்கும்? அது மாதிரி தான்.

ஒரு நாள் காலையில் நிகிலாவை கல்லூரி பேருந்தில் அனுப்பி விட்டு கடைக்கு வந்தவர், வழக்கம் போல நான் டீ கொடுத்தேன்.

எனக்கும் ஒரு டீயை எடுத்துக் கொடுத்தார்.

அவரும் குடித்துக் கொண்டே , “டீ ஆறுறதுக்குள்ள குடிச்சிடு”, அப்படின்னார்.

அப்புறம், ஒரு வடை இருந்தா குடுன்னார்.

ஒன்னு எடுத்துக் கொடுத்தேன்.

அதை ஒரு கடி தான் கடித்தார். புரைக்கு ஏறி விட்டது.

அண்ணே. பேசிக்கிட்டே வடைய கடிச்சு முழுங்கிட்டீங்க, இருமுங்க சரியாயிடும்னு சொன்னேன்.

ஆனால், புரையேறி, அவர் மூச்சுத் திணறி அப்பவே போய்ட்டார். இருந்தாலும், மருத்துவமனைக்கு கொண்டு போனோம்.

டாக்டர்கள் கைய விரிச்சிட்டாங்க.

சார், நம் வாழ்க்கையின், ஒவ்வொரு நொடியும் ஒரு புள்ளி. அந்த புள்ளிகள் நகர்ந்தா தான் அழகான கோடு வரும். நின்னுட்டா, வாழ்க்கை அப்படியே நின்னுடும், அது மாதிரி தான்.

காலையில “சாப்பிட்டியா?”னு கேட்ட குரல். மதியம் அந்த குரல் இல்லாம போயிட்டுது சார் .

ஒரு Phone call தான். நிகிலாவோட வாழ்க்கையே தலைகீழா மாறிட்டு சார்.

அவங்க அப்பா போய்ட்டார் என்ற போன் கால் தான். அவளோட வாழ்க்கையே தலைகீழா மாறிட்டு சார்.

அவர் வாங்கிய வங்கி கடன்கள், தனியார் கடன்கள், என்று அவர்கள் குடும்பத்துக்கு, வருமானம் ஈட்டும் ஒரே நபர் நிகிலாவோட அப்பா தான். அந்த நபர் இல்லை என்றவுடன், அனைவரும் நெருக்க ஆரம்பித்தனர். வங்கியின் அதிகாரிகள், கடையை seal செய்ய வந்து விட்டனர். இப்படி ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல முடியாமல், கடை நடந்தால் தான் வருமானம் வரும். கடன் அடைக்க முடியும். வட்டி வந்தால் தான் கடன்காரர்கள் அமைதியடைவார்கள், என்று கடையை அவளே திறந்து விட்டாள்.

அவள் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் தான் படிச்சா. அதை பாதியில் விட்டுட்டு வந்து அப்பாவோட கடையை எடுத்து நடத்துறா. அப்பா வாங்குன கடனுக்கு வட்டி கட்டிக்கிட்டு இருக்கிறாள்?

அவள் ஸ்கூல் படிக்கும் போதே அப்பாவோட கடைக்கு வந்தா சும்மாவே இருக்க மாட்டா சார். அவருக்கு உதவியா எல்லா வேலையும் செய்வா. அது இப்ப அவளுக்கு உதவியா இருக்கு.

நான் கொடுத்த வடைய கடிச்ச போது தான் அவருக்கு புரை ஏறி இப்படி நடந்தது. எனக்கு அது ஒரு குற்ற உணர்ச்சியா இருந்தது.

அதைப் போக்கும்படியா நிகிலா ஒரு நாள் சொன்னாள், அண்ணா, நீங்க வழக்கம் போல, இங்க வந்து டீ குடுங்க. ஏன்னா, எங்க அப்பா, உங்கள தான் டீ ஆறுறதுக்குள்ள குடிக்க சொன்னார், கடைசியா, உங்க கிட்ட தான் பேசி இருக்கார். எங்க அப்பா உங்க கிட்ட தான் இருப்பார்ன்னே! நீங்க அடிக்கடி வந்து போங்க, என்றாள். என் மேல் கோபம் கொள்வாள், என்று நினைத்த போது, நிகிலா இப்படி சொன்னது, என்னை நெகிழ வச்சுட்டு சார், என்று கண்ணீர் மல்க சொன்னார்.

ஏன், நீங்க படிப்பை தொடர்ச் சொல்லி சொல்லலியா? ஒரு வேலையாள் போட்டு கடையை நடத்தலாமே?

ஒரு வயசுப் பொண்ணு இப்படி மெக்கானிக் வேலை செய்தால், வர்றவங்க போறவங்க எல்லாம் ஒரு மாதிரியா பேசமாட்டாங்களா? பாக்க மாட்டாங்களா? என்று கேட்டான் நகுலன்.

அதையும் கேட்டேன் சார்.

அதற்கு நிகிலா சொன்னாள்,

அண்ணா! “குறைக்கும் நாய்களுக்கெல்லாம் நின்று கல் எறிந்து கொண்டு இருந்தால், நம் பயணம் தொடராது; இலக்கை அடைய முடியாது”.

“நாம் செய்யும் நற்காரியங்களுக்கு அல்லது நமது இலக்குகளை நோக்கிச் செல்லும் போது, பல எதிர்ப்புகள், விமர்சனங்கள், மற்றும் தடைகள் (குறைக்கும் நாய்கள் போல) வரத்தான் செய்யும். அவற்றையெல்லாம் கவனித்து விடை தேடிக் கொண்டோ, சண்டை போட்டுக் கொண்டோ இருந்தால் நம் நேரமும் சக்தியும் தான் வீணாகும்.

நம் உழைப்பை போடுவோம். நேர்மையான வழியில் நடைபோடுவோம். மற்றது எல்லாம் சரியா நடக்கும்.”

இப்பவும் சொன்னான் நகுலன், “என்ன பொண்ணுடா இவ”.

அண்ணா டீ நல்லா இருந்திச்சி. நான் வர்றேன், என்று புறப்பட்டான் நகுலன்.

வண்டி ரெடியாயிட்டு. எடுங்க என்றாள் நிகிலா.

வண்டியை தள்ளி நிறுத்தினான். எவ்வளவு என்று கேட்டு கொடுத்தான்.

இன்னும் எத்தனை செமெஸ்டர் பாக்கி இருக்கு என்று கேட்டான் நகுலன். சற்று ஆச்சர்யமாக பார்த்தாள் நிகிலா.

நீங்க டீ விக்கிற அண்ணா கிட்ட பேசிகிட்டு இருந்தீர்களா? நான் என் வழிய பாத்துக்கிறேன், பரவாயில்லை என்றாள் நிகிலா.

உன் தன்னம்பிக்கை எனக்கு பிடிச்சிருக்கு. நான் இங்க பக்கத்துக்கு டவுன்ல இருக்க ஒரு வங்கி அதிகாரி தான்.

உங்கள் படிப்புக்கு உதவி செய்யும் சில நல்லவர்களை எனக்குத் தெரியும். உங்கள் கடையை நடத்த யாரிடமாவது பேசலாம். நம்பிக்கை வையுங்கள். “எல்லா நாய்களும் குறைக்காது. காவல் காக்கும் பைரவர்கள் ஒரு சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள். இந்த உலகம் நல்லவர்களாலும் நிறைந்தது தான்”. நாளை டீ விற்கும் அண்ணாவுடன் நீங்கள் என்னை சந்தியுங்கள், நல்லதே நடக்கும், என்று புறப்பட்டான் நகுலன்.

“அலையில் ஆடும் காகிதம், ஒரு ஓடத்தில் ஏறி இருக்கிறது. அது கோபுரத்தின் உச்சிக்கு செல்ல தூரம் அதிகமில்லை”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *