அப்புனு!






“கால் செராய் போட்டிருக்கற சீமைக்கார அப்புனு, இங்க சித்த வா… அந்த வட்டச்சட்டிய எடுத்துட்டு வந்து இந்தல்ல வெய்யி” வயதான முருகாத்தாள் பாட்டி பேசியது எதுவுமே புரியாமல் அமெரிக்காவிலிருந்து தாயின் ஊருக்கு வந்திருந்த கவின் பேந்தப்பேந்த விழித்தான்.
“கால் செராயி… அப்புனு…. வட்டச்சட்டி…. இந்தல்ல… என்னம்மா இது வார்த்தை? அந்தக்காலத்துல நம்ம முன்னோர்கள் இப்படியா தமிழ்ல பேசினாங்க…?” தாய் ரமாவிடம் கேட்டான்.
“ஊருக்கூறு வார்த்தை மாறும். கால் செராயின்னா பேண்ட், சீமைன்னா வேற நாடு, அப்புனுன்னு சொன்னது இப்ப அப்பாவாயிடுச்சு. இப்ப வாழறவங்க இந்தப்பக்கம்ங்கிற வார்த்தை அப்ப இந்தல்ல, அந்தல்லன்னு பேசினாங்க” தாய் கூறுவதைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தான்.
கற்காலத்திலிருந்து தற்காலம் வரை அறிந்தவள் தான் ரமா. ரமா ஒரு வரலாற்று மாணவி. சிறு வயதிலிருந்தே பல மன்னர்களின் வரலாறுகளை ஆர்வமாக நூலகத்திலிருந்து எடுத்து வந்து பள்ளிப்பருவத்திலேயே விடுமுறை நாட்களில் படிப்பாள்.
சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் படைப்புகளை விடாமல் படித்தவள், தற்போதைய சு.வெங்கடேசன் எழுதி ஆனந்தவிகடனில் வெளிவந்த வேள்பாரியையும் விட்டு வைக்காமல் படித்திருந்தாள்.
யாராவது முன்னோரர்கள் பேசிய தமிழ் வார்த்தைகள் புரியவில்லை என்றால் கூகுளைக்கேட்பதை விட ரமாவிடம் தான் போன் போட்டுக்கேட்பார்கள் அவளது நண்பர்கள்.
கல்லூரியில் வரலாறு விருப்பப்பாடமானது.
பெற்றோரும் சரி, மற்றோரும் சரி ‘வரலாறு படிக்க சுவையா இருக்கும். ஆனா சுவையா சமைக்க பணம் தராது. வேலை கிடைக்கிறது சிரமம்’ என பலரும் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக தான் விரும்பிய வரலாறையே படித்து தேறியவளுக்கு வெளிநாட்டு வரன் அமைய வேறு வழியின்றி சம்மதித்தாள்.
குழந்தைகள், குடும்பம், அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற காலத்தை செலவிடும் நிலையால் படித்ததை பயனுள்ளதாக்க இயலாமல் போனது.
குழந்தைகள் பெரியவர்களான பின் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல படித்தது கை கொடுத்தது.
மகன் கவின், மகள் நிவ்யா இருவரையும் அழைத்துக்கொண்டு விடுமுறையைக் கழிக்கவும், சொந்தங்களைச் சந்திக்கவும் அமெரிக்காவிலிருந்து கோயம்புத்தூர் வந்திருந்தாள்.
இங்கு வந்த பின் குழந்தைகளுடைய செயல்பாடுகள் முற்றிலும் மாறியிருப்பதை தெரிந்து ஆச்சர்யப்பட்டாள். நாம் படித்து உள்ளபடியே தெரிந்து கொண்டதை குழந்தைகள் ஊடுருவிப் பார்ப்பதைக் கண்டு வியந்தாள்.
“மம்மி…. நோ… நோ… இனிமேல் சுத்தமான தமிழ் தான். அம்மா நீங்க சொல்லறதை விட பாட்டியோட தமிழ் நம்ம வாழ்க்கையோட, ஆரோக்ய விசயத்தோட சம்மந்தப்படுது”
“அப்படியா? எப்படி?”
“அப்பாங்கிற வார்த்தை சொல்லும் போது வாயை முழுசா திறக்கனம். அப்போ வெளில இருக்கிற காத்து உள்ள வரும். காட்டுக்குள்ள இருந்து கூப்பிடும் போது குப்பை வாயில நுழைஞ்சிட வாய்ப்பு இருக்கு. அப்புனுங்கிற வார்த்தை வாயை பெருசா திறக்காமலேயே சொல்லறதோட கடைசில ஊல முடியறதால உள்ளிருக்கிற சூடான காத்தும் வெளியேறிடும், அசுத்தமான குப்பைகளும் உள்ளே வராது. இப்ப ஏஸில வாழறவங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. அந்தக்காலத்துல காடு சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு அப்பாவை விட அப்புனு தான் சரி. இது பெரிய விஞ்ஞானமா இருக்கே…?” மகன் கவின் சொன்னதைக் கேட்டவள் ‘இவ்வளவு படிச்சும் நமக்கு இந்த யோசனை வரலியே….’ என ஆச்சர்யத்துடன் யோசித்தவாறு மகனை அழைத்து இறுக அணைத்து முத்தமிட்டு வாழ்த்தினாள் ரமா.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |