அன்புக்கு அடிமை!
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2026
பார்வையிட்டோர்: 107
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழக்கமான பெண் பார்க்கும் படலம், மாப்பிள்ளை திவாகர், தாய் அபிராமி சோபாவில் அமர்ந்திருக்க, எதிரே அழகுப் பதுமையாய் வினயா அமர்ந்திருந்தாள், வினயாவின் மொத்த குடும்பமும் திவாகரின் பதிலை எதிர் நோக்கியிருக்க, ஒருவித அமைதி நிலை அங்கு வியாபித்திருந்தது. அந்த அமைதியை நீட்டிக்க விரும்பாத திவாகர், வினயாவின் அப்பாவை நோக்கி மென்மையாக பேசினான்.
“நான் வினயாவோட கொஞ்சம் பேசணும்.”
“தாராளமா பேசுங்க” என்று வினயாவின் அப்பா சொல்ல அவள் குடும்பத்தினர் அங்கிருந்து அகன்றனர். திவாகர் பக்கத்தில் அமர்ந்திருந்த அவன் அம்மா அபிராமியும் எழ முற்பட, திவாகர் தடுத்தான்.
“அம்மா, நீங்க இருங்க…” என்றுவிட்டு வினயாவை நோக்கி பேச ஆரம்பித்தான்.
“ஒரு குடும்பம் அமைதியா, மகிழ்ச்சியா இருக்கணும்னா, கணவன் மனைவி புரிதல் மட்டும் முக்கியம் இல்ல. மாமியார், மருமகள் புரிதலும் அவசியம். நல்ல புரிதல் உள்ள குடும்பத்துல என்னிக்குமே அமைதி நிலவும் என்பது என்னோட கருத்து. அதனால் நீங்க ரெண்டு பேரும் முதல்ல பேசுங்க” என்று திவாகர் நிறுத்த…
“எனக்கு பேச எதுவுமில்லை. ஏன்னா, என்னோட மருமகள் எப்படி பட்ட குணமாக இருந்தாலும் என்னால அவளை அனுசரிச்சுப்போக முடியும்” என்றவள் வினயாவை நோக்கி, “நீ ஏதாவது சொல்ல விரும்பறியா?” என்று கேட்டாள்.
சந்தோஷம் மின்னும் கண்களோடு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வினயா, அதே மகிழ்வோடு பேசினாள்.
“இன்னைக்கு எனக்கு வாழ்க்கையோட புது அர்த்தம் புரிஞ்சிருக்கு. அதோடு நல்ல உள்ளங்கள் எனக்கு உறவாகப் போகிறது. இதைத்தாண்டி வேறென்ன நான் பேச இருக்கு. வேணும்னா ஒரு அடிமை சாசனம் எழுதி உங்கக்கிட்ட கொடுக்கட்டுமா?” என்று சிரித்துக் கொண்டே வினவியவளை, அபிராமி தடுத்துப் பேசினாள்.
“என்னம்மா நீ, இன்னும் சில நாட்கள்ல பெண்கள் தினம் கொண்டாடப் போறோம். இப்பப்போய் அடிமை அது இதுன்னு பழைய காலத்துக்கே போறீயே?”
மீண்டும் கலகலத்து சிரித்தாள் வினயா.
“இது அந்த அடிமை இல்ல அத்தை. அன்புக்கு அடிமை” சொல்லிமுடித்தவளுடன் இணைந்து சிரித்தனர், தாயும் மகனும்.
– 02-03-2019, தினமலர் – பெண்கள் மலர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஸ்மார்ட்போன் பிடியிலிருந்து…
என்.ஸ்ரீதரன்
August 13, 2026
படித்தவரும் படிக்காதவரும்
எஸ்.மதுரகவி
August 13, 2026
குங்குமப்பூ
கே.கணேஷ்
August 13, 2026