அக்கரைப்பார்வைகள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 155

“உப்பு தின்னவன் தண்ணி குடிக்கோணும். உபத்திரக்கார பொண்டாட்டியக்கட்டுனவன் தண்ணிதான் அடிக்கோணும்” என காலையிலேயே வாசல் பெருக்கிக்கொண்டிருந்த தன்னைப்பார்த்தவாறு தத்துவத்தை உதிர்த்து விட்டு சென்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு தனது கணவர் குடிப்பது தெரிந்தாலும், தன்னால் தான் குடிக்கிறார் என்பதை மறைமுகமாக உணர்த்துவது போல் சொன்னது சிங்காரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
வீட்டிற்குள் சென்று கணவன் பரமனைப்பார்த்தாள். அப்பாவியாக படுக்கையில் குரட்டை விட்டபடி உறங்கிக்கொண்டிருந்தான்.
“கலரா, லட்சணமா இருக்கறீங்கன்னு உங்களக்கட்டுனதுக்கு கருப்பா, லட்சணமில்லாட்டியும் சொத்து வெச்சிருக்கறவனக்கட்டீருந்தா இன்னைக்கு நானும் கோடீஸ்வரன் பொண்டாட்டியாயி ஆடில சுத்தீருப்பேன். என்ற மாமம்பையன் சங்கன் என்ன கொஞ்சங்கருப்பு, தலைல முடி கொஞ்சங்கம்மி, ஒயரம் என்னை விட கொஞ்சங்கம்மி. வயசும் பத்து வருசந்தா எச்சு. எழுதப்படிக்கத்தெரியாது. அவ்வளவு தான். இப்ப பாருங்க கோடிக்கணக்குல அவனோட சொத்து வெலை ஏறிப்போச்சு” சென்னவள் மேல் மூச்சை பெரிதாக இழுத்து விட்டாள்.
“இப்புடி பொலம்பறதுக்கு இப்பவே என்னைய டைவர்ஸ் பண்ணிப்போட்டு ஒரு சொத்துக்காரனா பாத்துக்கட்டிக்க சிங்காரி. நானும் நிம்மதியா இருக்கற காலத்த ஓட்டிக்கிறேன். உன்ற கூட வாழ்ந்தேன்னா எனக்கு ஆயிசு கம்மிதான். பணமில்லாம கூட வாழ்ந்து போடலாம், கணமில்லாம வாழ முடியாதுன்னு பொருத்தம் பாத்த போதே சோசியர் நாசூக்கா சொன்னாரு. நாந்தா மொகங்கொஞ்ச லட்சணமா இருக்கறீன்னு தாலிய கட்டுனது தாம்பேரு என்ற சோலியவே முடிச்சுப்போட்டே… தூரத்துல இருந்து பாக்கிறவனுக்கு வெங்கக்கல்லும் வைரமாத்தான் தெரியும். உனக்கு நாஞ்சொல்லி புரிய வைக்கவா முடியும்? நல்ல வாழ்க்கைய நீயே தொலைச்சுக்கப்பாக்கறே…. ” புலம்பிய கணவன் பரமனை முறைத்துப்பார்த்தாள்.
“படிச்சுப்போட்டு வேலைக்கு போற மாப்பிள்ளையக்கட்டுனா நாம தோட்டத்துக்குள்ள வெய்ய வேனல்ல பாடுபடாம டிவிய பார்த்துட்டு நெழல்ல காலத்த ஓட்டிக்கலாம்னு சொத்துப்பத்து இல்லாம ஊடு மட்லும் இருக்கற உங்களக்கட்டிக்க ஒத்துத்துட்டேன். சொத்து வெல உச்சத்துக்கு போனதுனால காட்டானெல்லாம் இப்ப சேட்டானாயிட்டான்….” புலம்பலாக சொல்லியபடி கண்ணீர் சிந்தினாள் சிங்காரி.
கணவன் மனைவி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போது சிங்காரியின் மாமன் மகன் சங்கனின் மனைவி கனகி உள்ளே வந்தாள்.
“காடு தெரியாதவன் கல்லாங்காட்டத்தான் ஓட்டுவான். மாட்டப்பார்க்காதவன் காளையப்புடிச்சுதான் பால் கறப்பான்னு சொல்லுவாங்களே அந்தக்கதையாச்சு என்ற கதை” என்று சொன்னவள் கண்களில் கண்ணீர் விட்டாள்.
“நீ என்னமோ கோடில காடு விக்கிறதுனால ஆடில வருவீன்னு சொன்னாளே என்ற சிறுக்கி சிங்காரி. நீ ஆடிக்காத்துல அடிச்சுட்டு வந்த அம்மியாட்டில்ல வந்து உழுந்து பொலம்பறே….” பரமன் கிண்டலாகக்கேட்டான்.
“சொத்துக்கெடந்து என்ன பண்ணறது மச்சான்? சோத்துக்குத்தான் ஊட்ல அரிசி பருப்பு இல்லை. என்ற மொறைப்பையன் உன்னைய ஒதறிப்போட்டு சொத்துக்காரன்னு கொண்டு போயி கொளத்துல தள்ளிட்டானே என்ற அப்பங்காரன். சொத்த செத்தாலும் விக்கவும் மாட்டான், பொண்டாட்டி புள்ளைங்களுக்கு ஒழுங்கா சோறும் போட மாட்டான் என்ற ஊட்டுக்காரன். வெயில்ல மாடு மேச்சு வெந்து போனது தான் மிச்சம். நீயுந்தா இருக்கறையே மகராசன். உன்ற பொண்டாட்டி சிங்காரிய அழுக்கு படாம, வெள்ளாவில வெச்சு வெழுத்த வெள்ளத்துணியாட்டில்ல ஊட்டுக்குள்ளயே வெச்சுக்காப்பாத்தறே…. சொகத்தக்குடுக்காத சொத்து இருக்கறதும் ஒன்னுதான் இல்லாததும் ஒன்னுதான்” கனகி பேசப்பேச கத்திப்பேசிப்பழகிய சிங்காரிக்கு மூச்சு கூட பெரிதாக வரவில்லை. கடவுளாக தனது மனைவியின் பேராசை மனதை திருத்த கனகியை அனுப்பியதாக நினைத்து நிம்மதிப்பெருமூச்சு விட்டான் பரமன்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
