அகல் விளக்கு
கதையாசிரியர்: மு.வரதராசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2026
பார்வையிட்டோர்: 384
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

பள்ளிக்கூடம் திறந்தவுடன் நானும் சந்திரனும் மேல் வகுப்பில் உட்கார்ந்தோம். அங்கே தலைமையாசிரியர் வந்து, ‘சந்திரன்!’ என்று பெயரைக் கூப்பிட்டு, அவனிடம் வந்து முதுகைத் தட்டிக்கொடுத்தார். “எல்லாப் பாடத்திலும் இவன்தான் முதன்மையான எண்கள் வாங்கியிருக்கிறான். இவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவான். நம் பள்ளிக்கூடத்துக்கும் இவனால் நல்ல பெயர் கிடைக்கும். இப்படியே படித்து வந்தால், அடுத்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறமுடியும். மற்ற மாணவர்கள் இவனைப் போல் பாடுபட்டுக் கற்கவேண்டும்” என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பாராட்டில் பாதி எனக்குக் கிடைத்ததுபோல் நானும் மகிழ்ந்தேன். சந்திரன் என் பக்கத்தில் உட்காருவது பற்றியும், என் தெருவில் குடியிருப்பது பற்றியும், என் நண்பனாக இருப்பது பற்றியும் பெருமை கொண்டேன்.
அந்த வகுப்பில் வரலாறு, விஞ்ஞானம், கணக்கு ஆகிய மூன்றில் ஒரு பாடத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் அதை முடிவு செய்ய வேண்டும் என்றும் தலைமையாசிரியர் கூறிவிட்டுச் சென்றார்.
வீட்டுக்குச் செல்லும் வழியில் எதைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொள்வது என்று எண்ணிக்கொண்டும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டும் சென்றோம். எங்களால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. எங்கள் இரண்டு குடும்பங்களிலும் அதற்கு வழிகாட்டக் கூடியவர்கள் யாரும் இல்லை.
பாக்கிய அம்மையாரின் தம்பி பத்தாவது வரையில் படித்தவர். ஆகையால் அவரைக் கேட்டால் தெரியும் என்று அம்மா சொன்னார். உடனே நானும் சந்திரனும் பாக்கியத்தின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர் இல்லை. “தம்பி வரும் நேரம் ஆயிற்று. வந்ததும் கேட்டு வைத்துச் சொல்’றேன்” என்றார் அந்த அம்மா. சந்திரனைப் பார்த்து, “தலையைச் சரியாக வாரக் கூடாதா? கலைந்து போயிருக்கிறதே” என்றார். பிறகு சந்திரனுடைய தாயைப் பற்றியும் தங்கையைப் பற்றியும் தங்கையின் படிப்பைப் பற்றியும் விரிவாகக் கேட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தபோது, சிறிது நேரத்தில் அவருடைய தம்பி வந்துவிட்டார். “இந்தப் பிள்ளைகள் என்னவோ கேட்கிறார்கள். சிறப்புப் பாடமாம். எதை எடுத்துக் கொள்ளலாம் என்று உன்னைக் கேட்க வந்திருக்கிறார்கள்” என்றார்.
அந்தத் தம்பியின் குரலிலிருந்து ‘ஆ’ என்ற ஒலி வந்ததே தவிர, புன்சிரிப்போ முகமலர்ச்சியோ ஒன்றும் காணப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, “போன தேர்வில் எந்தப் பாடத்தில் நல்ல மார்க் வந்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அதோடு பேச்சை முடித்துவிட்டார். யாருக்கு எதில் மிகுதியான மார்க் என்றும் கேட்கவில்லை.
“எனக்கு கணக்கில் மிகுதியான மார்க்; நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து” என்றான் சந்திரன்.
“அதை எடுத்துக்கொள்” என்றார் அவர்.
“இவனுக்கு வரலாற்றில் நாற்பத்தைந்து மார்க். மற்றப் பாடங்களில் அதைவிடக் குறைவு” என்று சந்திரனே என்னைப் பற்றியும் கூறினான்.
“அப்படியானால் வரலாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார் அவர்.
இதைத் தெரிந்து கொள்வதற்காகவா இந்த ஊமையிடம் வந்தோம் என்று வெறுப்போடு திரும்பினோம். குறைவான என் எண்களைப் பற்றிப் பாக்கிய அம்மையார் தெரிந்து கொள்ளும்படியாகச் சந்திரன் சொன்னது எனக்கு வருத்தமாகவும் இருந்தது.
நாங்கள் அது பற்றி ஒரு முடிவுக்கும் வரவில்லை. மறு நாள் வகுப்பில் ஆசிரியர் கேட்டபோது சந்திரன் கணக்குப் பாடம் எடுத்துக் கொள்வதாகச் சொன்னான். என்னைக் கேட்டபோது நானும் அதுவே சொன்னேன். உடனே ஆசிரியர் என்னை நோக்கி, “கணக்கில் உனக்கு எத்தனை எண்கள்?” என்றார்.
“முப்பத்தாறு” என்றேன்.
“அப்படியானால் உனக்கு எப்படிக் கணக்குக் கிடைக்கும்?” என்றார்.
எனக்குப் பெரிய மனக்குறை ஆகிவிட்டது. அடுத்த வகுப்பில் மற்றோர் ஆசிரியர் வந்து அவ்வாறே கூறினார். சந்திரன் எடுக்கும் பாடமே நானும் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு வழி என்ன என்று கலங்கினேன். சந்திரனும் எனக்காக வருந்தினான். “உனக்காக நான் வரலாறு எடுத்துக் கொள்ளட்டுமா?” என்றான்.
அவனுடைய அன்புணர்ச்சியை எண்ணி உருகினேன். “வேண்டா, கணக்கு ஆசிரியரிடம் நாம் இருவரும் நேரே போய்க் கேட்டுப் பார்ப்போம்” என்றேன்.
மறுநாள் கணக்கு ஆசிரியரிடம் போகவில்லை. ஏதோ ஒருவகை அச்சம் எங்களைத் தடுத்தது. கணக்கு ஆசிரியர் அப்படிப்பட்டவர். ஒருவரையும் அடிக்கமாட்டார்; வைய மாட்டார்; வகுப்பில் ஏதாவது தவறு செய்துவிட்டால் பார்வை பார்த்து அமைதியாக இருப்பார்; கணக்கில் ஏதாவது தவறு செய்தால், பக்கத்தில் வந்து நின்று காதைப் பிடித்துக் கொள்வார்; திருகமாட்டார்; தம் கையில் உள்ள சாக்குத் துண்டினால் கன்னத்தில் குத்துவார்; இவ்வளவுதான். மற்ற ஆசிரியர்களோடும் பேசமாட்டார்; பழகமாட்டார்; வகுப்பு இல்லாத நேரத்தில் தம் அறையில் ஒரு மூலையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பார். அவருடைய உயரமான வடிவமும், நீண்ட கறுப்பு அல்பாக்கா சட்டையும், ஒரே நிலையான அமைதியான முகத்தோற்றமும் அப்படி எங்கள் மனத்தில் ஒருவகை அச்சத்தை ஏற்படுத்தின. மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் வழக்கம் போல் ஒவ்வொரு குறும்புப் பெயர் வைத்திருப்போம். கணக்கு ஆசிரியர்க்கு மட்டும் அப்படி ஒரு பெயர் வைத்ததில்லை. எங்களுக்கு முன் தலைமுறையைச் சார்ந்தவர்களும் அப்படி ஒரு பெயர் வைத்ததில்லை. வைத்திருந்தால், அந்தப் பெயர் வழிவழியாக மாணவர்களிடையே வழங்கியிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஆசிரியரிடம் எப்படி அணுகிக் கேட்பது என்று இரண்டு நாள் தயங்கினோம். மூன்றாம் நாள் சந்திரன் துணிந்தான். என்னை அழைத்துக்கொண்டு அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான், எங்களைக் கண்ட கணக்கு ஆசிரியர் வாய் திறக்காமல் தலையை மெல்ல அசைத்தார். வரலாம் என்பது அதற்குப் பொருள். அணுகி நின்றோம். கண்ணால் ஒரு வகையாகப் பார்த்து மறுபடியும் தலை அசைத்தார். “என்ன காரணமாக வந்தீர்கள்?” என்பது அதற்குப் பொருள்.
சந்திரன் வாய் திறந்து, “நான் சிறப்புப் பாடமாகக் கணக்கைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்” என்றான்.
ஆசிரியர் வாய் திறந்து, “சரி” என்றார். மறுபடியும் சந்திரன், “இவனும் கணக்கு வேண்டும் என்கிறான்” என்றான்.
“மார்க்”
“முப்பத்தாறு”
ஆசிரியர் உதட்டைப் பிதுக்கினார். பயன் இல்லை என்பது அதற்குப் பொருள்.
“நாங்கள் இருவரும் ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்தில் இருந்து படிக்கிறோம். அதனால் ஒரே பாடமாக இருந்தால்-” இவ்வாறு சந்திரனே பேசினான்.
நான் வணக்கமாக வேண்டிக்கொள்ளும் முறையில் நின்றேன்.
“நீ சொல்லித் தருவாயோ?” என்றார் ஆசிரியர்.
“சொல்லித் தருவேன்” என்றான் சந்திரன்.
“சரி, போ” என்று சொல்லிவிட்டு ஆசிரியர் என்னைப் பார்த்துக் கண்களை ஒருமுறை மூடித்திறந்து தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து அசைத்தார்.
நான் வாயைத் திறக்காமலே கைகூப்பி வணக்கம் செலுத்திவிட்டுச் சந்திரனைத் தொடர்ந்து வெளியே வந்தேன்.
அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து ஒருநாள் வகுப்பில் கணக்கு ஆசிரியரின் கையில் என் காது அகப்பட்டுக் கொண்டது. “கணக்கே வேணும் என்றாயே! விதிகளை மனப்பாடம் பண்ணினாயா? கணக்குகளை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் போட்டாயா? சந்திரனிடம் கேட்டாயா?” என்று என் கன்னத்தில் சாக்குத் துண்டால் குத்தினார்.
அந்த ‘தீட்சை’ நிறைவேறிய பிறகு, உண்மையாகவே கணக்குப் பாடத்தில் நான் முன்னேறினேன். முப்பத்தாறு எண்கள் வாங்கியவன். கால் தேர்வில் ஐம்பது வாங்கினேன். அரைத் தேர்வில் ஐம்பத்தைந்து வாங்கினேன். சந்திரன் எனக்கு மிகப் பெரிய துணையாக இருந்து உதவினான். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் போதே சில சந்தேகங்களை எல்லாம் தீர்த்து உதவினான். கணக்கு ஒரு கடினமான பாடம் என்ற பயமே பறந்து போயிற்று. ஆனாலும் சந்திரனைப் போல் அவ்வளவு வல்லவனாக விளங்க முடியவில்லை; அவனைப் போல் தொண்ணூறு, தொண்ணூற்றெட்டு, நூறு எண்கள் பெறமுடியவில்லை.
முந்திய ஆண்டைவிட இந்த ஆண்டில் சந்திரனுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு வளர்ந்தது. அவன் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பழகிக்கொண்டே எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்த உதவியை நன்றியோடு நினைத்துப் போற்றினேன். சில நாட்களில் மாலையில் நெடுந்தொலைவு நடந்துபோய் வரும் வழக்கத்தை மேற்கொண்டோம். பெரும்பாலும் ரயில் நிலையச் சாலையில், அதாவது வடக்கு நோக்கியே நடந்து போய் வந்தோம். நடக்கும்போது பலவகையான செய்திகளைப் பேசிக்கொண்டு போவோம். தேர்வு உள்ள காலங்களில் நடக்காமல், கையில் புத்தகமோ குறிப்போ எடுத்துக்கொண்டு மெல்லப் பார்த்துக் கொண்டே நடப்போம். அந்தச் சாலையில் இலுப்பை மரங்கள் இரு பக்கத்திலும் நிறைய வளர்ந்திருந்தன. சில சமயங்களில் அவற்றின் பூக்கள் ஒரு புதுமையான நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். கீழே பழங்கள் போல் வெண்ணிறமாக விழுந்து கிடக்கும். சிறுவனாக இருந்தபோது அவற்றைப் பழங்கள் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அவற்றை எடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, “இந்தப் பழங்களைத் தின்னலாமா?” என்று கேட்டேன். “இவைகள் பழங்கள் அல்ல, பூக்கள்” என்று என்னைப் பார்த்துச் சிரித்தான். அன்று அவனிடமிருந்து அந்த வேறுபாட்டைக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் சந்திரனுக்கு அதைச் சொன்னபோது “இது எனக்குத் தெரியுமே. இலுப்பைப்பூ பழம் போலவே இருக்கும். அதில் உள்ள தேனை உறிஞ்சிச் சுவைப்பார்கள்” என்றான்.
அந்த இலுப்பைமரச் சாலை ஓரமாகவே பாடத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விடைகள் சொல்லிக் கொண்டும் நடப்போம். ஒருநாள் ஒரு தோப்பின் எதிரே உட்கார்ந்து கணக்கு ஒன்றைச் சந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தேன். அவன் ஒரு குச்சியை எடுத்து மண்ணில் கோடுகள் கிழித்து இருசம முக்கோணத்தில் ஒரு வெட்டு வெட்டி, இரண்டு பகுதிகளிலும் உள்ள கோணங்களின் ஒற்றுமை வேற்றுமையை விளக்கிக் கொண்டிருந்தான். அதை முடித்தவுடன், “நேரம் ஆயிற்று போகலாமா?” என்றான்.
“இன்றைக்கு முழுநிலா நாள்போல் இருக்கிறதே. அதோ பார், நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம்” என்றேன்.
“உனக்கு நிலா என்றால் மிகவும் விருப்பம்போல் தெரிகிறது.
“ஆமாம். சந்திரன் அல்லவா! உன் பெயர், உன் நிறம், உன் பண்பு எல்லாம் எனக்கு விருப்பம்தான்.”
அவ்வாறு நான் சொல்லி முடித்தவுடன் பெருங்காஞ்சியில் கண்ட நிலாவின் காட்சி நினைவுக்கு வந்தது.
“எங்கள் ஊரில் நிலா மிக அழகாக இருந்ததாகச் சொன்னாயே” என்று சந்திரனும் அதையே கூறினான்.
“ஆமாம்” என்று சொல்லிக் கிழக்கு வானத்தை அணி செய்து கொண்டு எழுந்துவந்த முழுநிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் வெள்ளிமேனியும் வட்ட வடிவும், அமிழ்த ஒளியும் பற்றி எண்ணிக் கொண்டிருந்தபோது அதன் உடலில் உள்ள களங்கத்தைப் பற்றிய எண்ணம் வந்தது. என்ன காரணமோ, பெருங்காஞ்சியில் சந்திரனுடைய நடத்தையில் கண்ட மாசு என் நினைவுக்கு வந்தது. கிணற்றில் குளித்த பிறகு வெந்நீரை எடுத்துக் கீழே கொட்டச் சொன்னதும், தாழை ஓடையில் அந்தப் பெண்களுக்குக் காசு கொடுத்து மயக்கிப் பாடச் சொன்னதும் நினைவுக்கு வந்தன. பக்கத்தில் இருந்த சந்திரனைப் பார்த்தேன். புன்முறுவல் கொண்டேன்.
“என்ன அய்யா! அந்தச் சந்திரனைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்துச் சிரிக்கிறாயே?” என்றான் சந்திரன்.
“அந்தச் சந்திரனிடத்தில் எவ்வளவு பெரிய களங்கம் இருக்கிறது! உன்னிடத்தில் ஒரு களங்கமும் இல்லை அல்லவா?” என்றேன்.
“போதும் போதும் உன் கதை. எழு, எழு” என்று புறப்பட்டான். நானும் தொடர்ந்து வந்தேன்.
என் நண்பனுடைய உள்ளத்தில் – நடத்தையில் – சிறு களங்கம் இருக்கிறதே. அது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை.
இந்த ஆண்டில் சந்திரனுடைய வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வந்தார்கள். அத்தைக்கு வேலை மிகுதியாயிற்று. படிப்பதற்கு வேண்டிய அமைதி இல்லை என்று சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். தேர்வுக் காலத்தில் தனித்தனியே படித்தால் நல்லது என்று எண்ணி அவன் பாக்கியம் அம்மையாரின் வீட்டுக்குப் போய்விடுவான். அந்த வீட்டில் குழந்தைகளின் கூச்சலும் இல்லை; விருந்தினரின் ஆரவாரமும் இல்லை. இருந்த ஒரு தம்பியும் உணவுக்கடையில் உண்பதுபோல் உண்டு முடித்துத் திண்ணையை நாடி அமைதி பூண்டார். உணவுக் கடையிலும், சிலர் பரிமாறுவோரோடும் வேலையாட்களோடும் நெருங்கிப் பழகிச் சிரிப்பும் ஆரவாரமுமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், சிலர் வீட்டில் இருப்பதைவிட, உணவுக்கடையில் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். நெடுநேரம் பாடிக்கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். பாக்கியத்தின் தம்பியோ, வீட்டை வீடாகவும் கருதவில்லை. உணவு விடுதியாகவும் கருதவில்லை. ஒரு சத்திரமாகக் கருதினார் என்று சொன்னால் ஒரு வகையில் பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீட்டில் தேர்வுக் காலத்தில் தனியே அமைதியாகப் படிப்பது சந்திரனுக்கு உகந்ததாக இருந்தது.
சந்திரன் வீட்டுக்கு விருந்தினர் வந்தபோது நான் அடிக்கடிப் போவதில்லை. அத்தை மட்டும் சில நாட்களில் கேட்பார்: “ஏன் வேலு! நான்கு நாளாக எங்கள் வீட்டுக்கே வரவில்லையே” என்பார்.
“யார் யாரோ வந்திருந்தார்கள். அதனால் நான் வரவில்லை” என்பேன்.
“யார் வந்தால் என்ன? எனக்குக் கூச்சமா? நீ வரலாமே! நீ என்ன, இப்படிப் புதிய ஆட்களைப் பார்த்தால் பழகுவதற்குக் கூச்சப்படுகிறாயே, சந்திரனைப் பார், யார் வந்தாலும் கலகல என்று பேசிப் பழகுகிறான்.” என்பார் அத்தை.
அம்மாவும் அதற்குத் தகுந்தாற் போல், ஒருநாள், “அது என்னவோ தெரியவில்லை அம்மா! இவனும் அப்படி இருக்கிறான். இவன் தங்கை மணிமேகலையும் அப்படித்தான் இருக்கிறாள்” என்றார்.
“மணிமேகலை அப்படி இருக்கலாம். அவள் பெண், வேலு ஏன் அப்படி இருக்கணும்?” என்றார் அத்தை.
அப்படி நான் சின்ன வயதில் பழகியதைப் பற்றியும் அத்தை சொன்னதைப் பற்றியும் பிற்காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒதுங்கித் தயங்கி வாழ்ந்து வந்த காரணத்தால் நான் எத்தனையோ இடர்களிலிருந்து தப்பியிருக்கிறேன் என்று சொல்லலாம்.
அத்தை வீட்டில் விருந்தினர் வந்தபோதெல்லாம் ஒதுங்கியிருந்த நான், கற்பகம் வந்தபோது அவ்வாறு ஒதுங்கியிருக்கவில்லை. அப்போது மட்டும் அடிக்கடி போய்க் கொண்டிருந்தேன். கற்பகத்தைக் காண்பதற்கென்றே அடிக்கடி போனேன். அவளும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து, என் அலமாரியையும், பெட்டியையும் திறந்து புத்தகங்களை எடுத்துப் படங்கள் பார்த்துவிட்டுச் செல்வாள். என் தங்கை மணிமேகலையோ தம்பி பொய்யா மொழியோ அப்படி என் அலமாரியிலும் பெட்டியிலும் கை வைத்தால் எனக்கு உடனே கோபம் வரும். ஆனால் கற்பகம் வந்து எடுத்தால் உவகையோடு இருப்பேன். அவள் பார்க்க வேண்டும் என்றே சில படங்களை நானே எடுத்துக் காட்டுவேன். இது என் தங்கைக்கும் பொறாமையாக இருந்தது. “நான் எடுத்தால் அண்ணன் கோபித்துக் கொள்கிறார். கற்பகம் மட்டும் எடுக்க விடுகிறார்” என்று அம்மாவிடம் குறை சொன்னாள். “நீ எடுத்தால் எல்லாவற்றையும் கலைத்துவிடுகிறாய். கற்பகம் அப்படிக் கலைப்பதே இல்லை” என்றேன் நான்.
கற்பகம் வளர வளர அவளுடைய அழகும் வளர்ந்து வந்தது. முன்னே பாவாடை சட்டை மட்டும் உடுத்தி வந்தவள். இப்போது தாவணியும் உடுத்திவந்தாள். அவளுடைய காதுகளில் திருகாணி இருந்தது போய், வெள்ளைக்கல் தோடு வந்து அழகு செய்தது. மூக்குத்தியும் அணிந்திருந்தாள். அவற்றில் இருந்த கற்கள் அவளுடைய மேனியின் அழகையும் ஒளியையும் எடுத்துக்காட்டுவன போல் இருந்தன.
ஒருநாள் சனிக்கிழமை பிற்பகல், அம்மாவும் தங்கையும் பாக்கியம் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். தம்பியும் எங்கோ விளையாடப் போயிருந்தான். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது யாரோ உள்ளே வரும் காலடி கேட்டுத் திரும்பினேன். கற்பகம் ஒரு பை நிறையத் தின்பண்டங்கள் கொண்டு வந்து நின்றாள்.
“எப்போது வந்தாய் கற்பகம்” என்றேன்.
“இப்போதுதான். உங்கள் அம்மா இல்லையா?”
“இல்லையே!”
“மணிமேகலை!”
“அவளும் இல்லை” என்று நான் சொன்னவுடன் அந்தப் பையைக் கீழே வைத்து விட்டு நகரத் தொடங்கினாள். “அதைக் கீழே வைத்துவிட்டுப் போகிறாயே, என் கையில் கொடுத்தால் என்ன?” என்று அவளுடைய கையைப் பற்றினேன். அவள் விடுவித்துக்கொண்டு ஓட முயலவே, நான் இறுகப் பற்றினேன். வளையல் இரண்டு நொறுங்கி உடைந்தன. உடனே கையை விட்டேன். “எனக்குக் கோபம் வரும், தெரியுமா?” என்று உடைந்த வளையலைப் பார்த்தாள். அவளுடைய முகம் வாடியது. அந்த வாட்டத்திற்கு இடையே புன்முறுவல் செய்துவிட்டு நகர்ந்தாள். நான் செய்த தவறு உணர்ந்து அவள் முகத்தில் விழிப்பதற்கு வெட்கப்பட்டு, அன்றெல்லாம் சந்திரனுடைய வீட்டுக்குப் போகாமலே நின்றேன். மறுநாள் காலையிலும் போகவில்லை. பிற்பகல் அவளே வந்தாள். அம்மாவோடும் தங்கையோடும் பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே அவளுடைய பார்வை என்மேல் இருந்தது. அவளுடைய ஒரு கையில் வளையலே இல்லாததைக் கண்டு மனம் வருந்தினேன். குறும்புக்காரி அவள். அதைப் பொருட்படுத்தாமல் “நீங்கள் ஏன் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை? அண்ணாவும் நீங்களும் பேசுவதில்லையா? காய் விட்டு விட்டீர்களா?” என்றாள். “இல்லை. உன்னோடுதான் காய் விட்டிருக்கிறேன்” என்றேன். “அப்படியா? நல்லதுதான்” என்று, வலிய வந்து என் பெட்டியைத் திறந்து அதில் இருந்த கைகுட்டையைக் கேளாமலே எடுத்துக் கொண்டு போய்விட்டாள்.
அத்தியாயம் – 8
அந்த ஆண்டிலும் இருவரும் தேறி மேல் வகுப்புக்கு வந்தோம். முன்போலவே சந்திரனைத் தலைமையாசிரியர் பாராட்டினார். ஆனால் இந்த முறை அவன் ஆங்கிலத்தில் மட்டும் முதன்மையாக வர முடியவில்லை. அதையும் தலைமையாசிரியர் குறிப்பிட்டார். சந்திரன் ஆங்கிலத்தில் இரண்டாம் தரமாக இருந்தான். அதற்காகக் கவலைப்பட்டான்.
அவனைத் தேற்றுவதற்காக நான் பல முயற்சிகள் செய்தேன். “ஒரே ஒரு பாடத்தில் இன்னொரு பையன் முதன்மை பெற்றுவிட்டானே என்று கவலைப்படுகிறாயே. நான் எல்லாப் பாடத்திலும், நாற்பதும் நாற்பத்தைந்துமாக வாங்கியிருக்கிறேனே? என்னைப் பற்றி எண்ணிப்பார், நான் கவலைப்படுகிறேனா? போனால் போகட்டும் என்று விடு. இந்த ஆண்டில் முயற்சி செய். எஸ்.எஸ்.எல்.சி தான் முக்கியம் அதில் எல்லாப் பாடத்திலும் முதன்மை பெற்று விட்டால் போதும். அதுதான் பெரிய சிறப்பு என்று சொல்லிப் பார்த்தேன். இருந்தாலும் சில நாட்கள் வரையில் ஒரு சிறு சோர்வுடன் இருந்தான்.
பள்ளிக்கூடம் திறந்த மூன்றாம் நாள் காலையில் சந்திரன் வீட்டில் அவனுடைய அப்பா சாமண்ணாவின் குரல் கேட்டது. உள்ளே எட்டிப் பார்த்தேன். சோர்ந்து வாடிய முகத்தோடு கற்பகமும் உட்கார்ந்திருந்தாள். வெளியே பின்வாங்கி வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். சாமண்ணா தம் அக்காவிடம் கற்பகத்தைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தார். “நான் எவ்வளவோ சொன்னேன். அவளுடைய அம்மா எவ்வளவோ சொன்னாள். கேட்காமல் ஒரே பிடிவாதமாக அழுதுகொண்டிருந்தாள். அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போச்சு. பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என்று சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். இந்த வயதிலே இவ்வளவு பிடிவாதம் கூடாது. அதற்காகத்தான் பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னார்கள்” என்றார்.
அத்தை குறுக்கிட்டு, “நாங்கள் எல்லாம் என்ன படித்தோம்? ஓர் எழுத்தும் தெரியாது. கையெழுத்தும் போடமாட்டோம்; உள்ளூரிலே பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கே படித்தாய், முடித்தாய், கையெழுத்துப் போட, கடிதம் எழுத, ஒரு புத்தகம் படிக்கத் தெரிந்து கொண்டாய், அது போதாதா, கற்பகம்?” என்றார்.
மறுபடியும் சாமண்ணா, “இப்போதுதான் தெரியுது அந்த அளவுக்கும் படிக்க வைத்திருக்கக் கூடாது. அதுவே என் தப்புத்தான். வீட்டிலே வாய்க்குச் சுவையாகச் சமையல் செய்யக் கற்றுக் கொள்ளணும். பொருள்களை வீடு வாசலைச் சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக் கொள்ளணும் அதுதான் முக்கியம். நீ படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்? அதைச் சொல். நீ ஒன்பதாவது பத்தாவது படித்தால், மாப்பிள்ளை பி.ஏ., எம்.ஏ., படித்தவனாகப் பார்க்கணும். அவன் தலையோ ஆகாசத்திலே பார்க்கும். தாட் பூட் என்பான். நம் இனத்திலே நம் வட்டாரத்திலே அப்படி எவன் இருக்கிறான்? எங்களுக்கு அல்லவா தெரியும், இந்தத் தொல்லை எல்லாம்? எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன் அக்கா. நீ வேணுமானால் சொல். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால், நாளைக்குக் கொண்டு போய்ப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டுப் போய்விடுவேன். இன்னொன்றும் சொல்லிவிட்டேன். இந்த வருசம் மட்டும்தான் படிக்க வைப்பேன். சந்திரன் எஸ்.எஸ்.எல்.சி. தேறி விட்டானானால், அப்புறம் இங்கே ஒரு குடும்பம் இருக்காது. நீயும் இங்கே படிக்க முடியாது. இந்த வருசம் மட்டும் படித்துவிட்டுச் சந்திரனோடு வீட்டுக்கு வந்து விடணும்” என்றார்.
“சரிதானே அம்மா?” என்று மகளைப் பார்த்துக் கேட்டார். அவளுடைய குரல் கேட்கவில்லை. ஒருகால், தலை மட்டும் அசைத்திருப்பாள்.
“சரி. இருந்து போகட்டும் எனக்கும் ஒரு துணை ஆச்சு” என்றார் அத்தை.
என் உள்ளம் குளிர்ந்தது. வந்தது தெரியாமல் திரும்பிவிட்டேன்.
மறுநாள் கற்பகம் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட போதும் அவள் முகம் வாடியே இருந்தது. அங்கே சேர்ந்து பெயர் எழுதிவிட்டுத் திரும்பிய பிறகுதான் முகத்தில் மலர்ச்சி இருந்தது. மறுநாள் சாமண்ணா ஊருக்குத் திரும்பிவிட்டார். கற்பகம் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என் தங்கை மணிமேகலையோடு சேர்ந்து விளையாடிக் கொண்டும் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தாள். மணிமேகலையும் அவளும் ஒரே வகுப்பில் படித்தமையால் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. ஆனால் சந்திரனும் நானும் என்றும் மாறாத அன்போடு பழகியது போல் அவர்களால் பழக முடியவில்லை. சில நாட்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் தனித்தனியே முன்னும் பின்னுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள். “பெண்களே, இப்படித்தான். அடிக்கடி சண்டை போடுவார்கள். முறுக்கிக் கொள்வார்கள்” என்றான் சந்திரன்.
அடுத்த மாதத்தில் வேலூரிலிருந்து என் அத்தையும் அத்தை மகள் கயற்கண்ணியும் மகன் திருமந்திரமும் வந்து எங்கள் வீட்டில் பத்துநாள் தங்கியிருந்தார்கள். அப்போது இன்னும் வேடிக்கையாக இருந்தது. சில நாள் என் தங்கை தனியே இருக்க கயற்கண்ணியும் கற்பகமும் ஒரு கட்சியாக இருந்தார்கள். மற்றும் சில நாள் மூன்று பேரும் சேர்ந்து எங்கள் வீட்டையே அமர்க்களம் செய்தார்கள். அது கால் தேர்வின் நெருக்கமாக இருந்தபடியால், எனக்கு ஒரு வகையில் இடையூறாக இருந்தது. ஆனாலும் கற்பகத்தின் ஆடல் பாடல்களைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று பேசாமல் பொறுத்துக் கொண்டிருந்தேன். கற்பகம் இல்லாமல், என் தங்கையும் கயற்கண்ணியும் மட்டும் சேர்ந்து விளையாடிய போது, அவர்களைக் கடிந்துரைத்தேன். “கயற்கண்ணியின் குரல்தான் வீட்டையே தூக்கிக் கொண்டுபோகுது. அப்பப்பா! படிக்கவே விடமாட்டேன் என்கிறாள்” என்று அவள்மேல் குறை சொல்வேன். கற்பகம் வந்து அவர்களுடைய ஆட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, எவ்வளவு ஆரவாரம் கேட்டாலும் வாய் திறக்காமல் பொறுமையாக இருப்பேன். என்னுடைய போக்கு எனக்கே வேடிக்கையாக இருந்தது. அந்தப் பெண்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொண்டார்களோ, தெரியவில்லை.
இவ்வளவு மகிழ்ச்சியான கூட்டமும் ஆட்டமும் இருந்த படியால், அத்தைமகள் கயற்கண்ணி இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அத்தையோடு ஊருக்குப் போகமாட்டேன் என்றும் சொன்னாள். இங்கேயே இருந்து படிக்க விரும்புவதாகவும் சொன்னாள். அத்தை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனதைக் கண்டு என் மனம் மிக மகிழ்ந்தது. “இந்த வருசம் ஊரிலே படித்துப் பரீட்சையிலே தேறிவிடு. அடுத்த வருசம் அப்பாவுக்குச் சொல்லி இங்கே கொண்டு வந்து சேர்க்கச் சொல்வேன்” என்று ஆறுதல் கூறி அத்தை அவளை அழைத்துச் சென்றார். என்னுடைய நல்ல காலம், அவள் அந்த ஆண்டில் முழுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் இங்கே வந்து படிக்கும் முயற்சிக்கு இடம் இல்லாமற் போயிற்று. பள்ளிக்கூடப் படிப்புப் போய், சமையலறைப் பயிற்சி அவளிடம் உரிமையோடு வந்து சேர்ந்தது.
கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து, “இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக வைக்கக் கூடாதா? பலசரக்குக் கடைகூட நன்றாக வைத்திருக்கிறார்களே” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவாள். நான் பார்த்துக்கொண்டே பேசாமல் இருப்பேன். அவளை ஒழுங்குபடுத்த விட்டதனால் எனக்குத்தான் தொல்லை. குறிப்போ புத்தகமோ பொருளோ நான் வைத்த இடம் வேறு; ஒழுங்குபடுத்தியபோது அவள் வைத்த இடம் வேறு. அதனால் எது எங்கே இருக்கிறது என்று தேடிக் காலத்தைப் போக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவளை நான் தடுப்பதே இல்லை.
சில நாட்களில் சந்திரனுடைய வீட்டுக்குப் போனால் வலிய ஏதாவது ஒரு காரணம் பற்றி என்னோடு பேச வருவாள். ஒரு காரணமே இல்லாதபோதும், கணக்குப் புத்தகத்தை எடுத்து வந்து, ஏதாவது ஒன்றைக் காட்டி, “இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்கள்” என்பாள், “சந்திரன் சொல்லிக் கொடுப்பதில்லையா?” என்று நான் கேட்டால், “அண்ணனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது. அதனால் நான் கேட்பதில்லை” என்பாள். அந்தக் கணக்கைப் படித்துப் பொறுமையோடு போட்டுக் காட்டுவேன். ஒரு நாள் கணக்குப் போட்டுக் காட்டி முடிந்த பிறகு, முன் பக்கத்தைத் தள்ளிப் பார்த்தேன். அதே கணக்கை அவளே சரியாகப் போட்டு வைத்திருந்தாள். அதை நான் கண்டு கொண்டதால், “அதெல்லாம் நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்” என்றாள். “வேறு சுருக்கமான வழி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக உங்களைப் போடச் சொன்னேன்” என்று பொய்யான காரணத்தை சொன்னாள்.
அரைத் தேர்வு நெருக்கத்தில் நானும் சந்திரனும் மும்முரமாகப் படிக்கத் தொடங்கினோம். விளையாட்டையும் பொழுது போக்கையும் குறைத்துக் கொண்டோம். வீட்டில் கற்பகத்தின் ஆரவாரம் கேட்டாலும் முன்போல் பொறுத்திருக்காமல், கடிந்து பேசத் தொடங்கினேன். அவளும் தேர்வு நெருக்கத்தை உணர்ந்து கொண்டாள். முன்போல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக வந்து போனாள்.
அரைத்தேர்வில் இருவரும் நன்றாக எழுதினோம். சந்திரன் வரலாறு தவிர மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றிருந்தான். வரலாற்று ஆசிரியர் வேண்டும் என்றே கெடுத்ததாகச் சொல்லி அவனே மனத்தைத் தேற்றிக் கொண்டான். ஆனால் ஆசிரியர் ஒருவர் மட்டும் “வரலாற்றில் எண்கள் குறைந்து போனதைப் பற்றிக் கவலைப்படாதே. கணக்கில் வல்லவர்களாக இருப்பவர்களுக்கு அந்தக் குறை இருப்பது உண்டு. கணக்குக்கும் வரலாற்றுக்கும் உறவு இல்லை” என்றார். எனக்கு யாரும் இப்படித் தேறுதல் கூற வேண்டிய தேவையே இல்லை. நான் எதிலுமே ஐம்பதுக்கு மேல் எண்கள் வாங்கவில்லை என்றால், முதன்மையைப் பற்றிய பேச்சு ஏது?
மிகுதியாகப் பாடுபட்டுப் படித்த காரணமோ என்னவோ தெரியவில்லை; முந்திய ஆண்டு வராமல் விலகியிருந்த சிரங்கு இந்த ஆண்டில் தை பிறந்ததும் என்னிடம் குடி புகுந்தது. ஆனால் நல்ல காலம்; அது முன்போல் யானைச் சிரங்காக வராமல் நமட்டுச் சிரங்காக வந்தது. அதுவும் ஒரு வகையில் பொறுக்க முடியாததாக இருந்தது. இப்போதுபோல், நல்ல ஊசி மருந்துகள் அப்போது அதற்குக் கிடைக்கவில்லை. ஆகவே மேற்பூச்சையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இரவும் பகலும் நடக்கும் போதும் உட்காரும் போதும் சொரிந்துகொண்டே இருக்க நேர்ந்தது. வீடு, வகுப்பு, தெரு என்ற வேறுபாடு அதற்கு இல்லை. நன்றாக ஆழ்ந்து படிக்கும்போதும் கை சொரிவதில் ஈடுபட்டிருக்கும். எழுதும் போதும் இடக்கை அந்தச் சேவையில் ஈடுபடும்; சில சமையங்களில் வலக்கை எழுதுவதை விட்டு அதில் ஈடுபடும். எங்கே இருக்கிறோம், எதிரில் இருப்பவர் யார் என்ற எண்ணமே இல்லாமல் அதில் ஈடுபடும். மற்றப் பிள்ளைகள் என்னை எள்ளி நகையாடினார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் நண்பன் சந்திரனே ‘சொஞ்சரி சொஞ்சரி’ என்று என்னை எள்ளிப் பேசத் தொடங்கினான். எனக்கு அது வருத்தமாகவே இருந்தது. என் தங்கையும் அவ்வாறு நகையாடினாள். அவ்வாறு எள்ளி நகையாடாதவர்கள் என் தாயும் பாக்கிய அம்மையாரும் கற்பகமும்தான்.
மருந்து பூசிப் பூசி அது ஒருவாறு அடங்கியது எனலாம். ஆனால் அடங்கிய நோய்ப்பொருள் உள்ளே அமைதியாய்க் கிடந்த பிறகு வேறு வடிவில் வெளிப்பட்டது போல், நிமோனியாக் காய்ச்சல் வந்துவிட்டது. இருபது நாள் படுக்கையில் கிடந்து வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் தவிர, வேறு யாரும் என்னை அணுகவில்லை. தங்கையும் தம்பியும் அணுகி வந்தாலும் பெற்றோர் தடுத்து விட்டார்கள். கற்பகம் வந்தாலும் அவ்வாறே தடுத்தார்கள். தொத்தக்கூடிய நோய் என்று தடுத்தார்கள். ஆனாலும் கற்பகம் நாள்தோறும் திண்ணை வரையில் வந்து என் தங்கையிடம் பேசியிருந்து விட்டுச் செல்வாள். படுக்கையில் இருந்த என் செவிகளில் அவளுடைய குரல் நாள்தோறும் விழுந்தது. சில நாட்களில் மெல்ல வந்து ஒரு நொடிப் பொழுதில் எட்டிப்பார்த்துத் தன் முகத்தைக் காட்டிவிட்டுப் போவாள். சந்திரன் சில நாளுக்கு ஒரு முறை வந்து போவான். பாக்கியம்மா மட்டும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் வந்து எதிரே உட்கார்ந்து அம்மாவிடம் பேசிவிட்டு, ‘தம்பி கஞ்சி சாப்பிட்டதா? இரவு தூங்கினதா?’ என்று அன்போடு கேட்டுவிட்டுப் போவார். அப்போதுதான் அந்த அம்மாவின் உண்மையான அன்பு எனக்குப் புலப்பட்டது. காய்ச்சல் விட்டுத் தேறிய பிறகு அம்மா ஒருநாள் பாக்கியத்தின் அன்பைப் பற்றிக் குறிப்பிட்டார். “உனக்கு காய்ச்சல் தன்னை மீறி இருந்தபோது இரவில் தூங்கிவிட்டுக் கவனிக்கத் தவறிவிடுவேனோ என்று பயந்து பாக்கியமும் என்னோடு வந்து படுத்துக்கொள்வாள். நான் தூங்கிவிடுவேன். தூங்கி விழித்தபோது பார்த்தால் அவள் உன் பக்கத்தில் உட்கார்ந்து விழித்திருப்பாள். பிறகு நான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவளை உறங்கும்படி வற்புறுத்துவேன். இப்படி எல்லாம் உன்னைக் காப்பாற்றினாள். உன் தொண்டை வறண்டு போகாதபடி பாலும் கஞ்சியும் கொடுத்துக் காப்பாற்றினாள். வேறு யார் அப்படிக் கண் விழிப்பார்கள்!” என்றார். அதைக் கேட்ட போது என் உள்ளம் உருகியது. ஆனாலும் பாக்கியத்திடம் முன்போல் நெருங்கிப் பழக முடியவில்லை. உள்ளத்தில் மட்டும் அன்பு மிகுதியாயிற்று.
அந்த நோயால், என் முடிவுத் தேர்வு என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டேன். உடம்பு தேறிய பிறகும் அளவுக்கு மேல் படிக்கக் கூடாது என்று எல்லாரும் சொல்லத் தொடங்கினார்கள். சந்திரன் அவ்வப்போது வந்து அந்த இருபது நாளில் நடந்த பாடங்களைச் சொல்லிக் கொடுத்தான். இரவில் சாப்பிட்ட பிறகு படிக்கவே கூடாது என்று அம்மா கடுமையாகச் சொல்லிவிட்டார்.
தேர்வு நெருக்கத்தில் சந்திரன் பாக்கிய அம்மையாரின் வீட்டில் இரவும் பகலும் தனியாக இருந்து படித்தான். ஒருநாள் காலை பள்ளிக்குச் சென்ற போது அவன் தலை மிக ஒழுங்காக வாரப்பட்டிருந்தது கண்டு, “இன்று மிகச் சீராகத் தலை வாரி வந்திருக்கிறாயே” என்றேன்.
“நான் வாரியது அல்ல. பாக்கியம்மா வாரிவிட்டார்கள்” என்றான்.
அதைக் கேட்டபோது எனக்குச் சிறிது பொறாமை ஏற்பட்டது. என்னிடம் உள்ளத்தில் அன்பு வைத்திருக்கிறாரே தவிர, இவ்வளவு நெருங்கி அன்பு பாராட்டுவதில்லையே என்று எண்ணினேன். உடனே நானே என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தாலும் நான் நெருங்கிப் பேசாமலும் பழகாமலும் இருந்தது என் குற்றம்தானே என்று உணர்ந்து மனத்தைத் தேற்றிக் கொண்டேன்.
இரவும் பகலும் அந்த அம்மாவின் வீட்டிலேயே இருந்து படித்த அவன், ஒருநாள் நான் போனபோது அங்கே இல்லை. “எங்கே தம்பி வந்தாய். போகிறாய்?” என்று அந்த அம்மா கேட்டார். “சந்திரனைப் பார்க்க வந்தேன்” என்றேன். “அது வீட்டில் இருக்கும்” என்றார். அன்று இரவும் அவன் அங்கே போகவில்லை. கணக்கில் ஒரு சந்தேகம் கேட்பதற்காகத் தான் போயிருந்தேன். அங்கே இல்லாமற் போகவே மறுபடியும் அவனுடைய வீட்டுக்கே போய்ப் பார்த்தேன்.
“பாக்கியம்மா வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ஏன் அங்கே போகவில்லை?” என்று கேட்டேன்.
“எனக்கு அங்கே இருந்து படிப்பதைவிட இங்கிருந்து படிப்பதே நன்றாக இருக்கிறது” என்றான். அவனுடைய முகமும் வாட்டமாக இருந்தது.
“அண்ணன் போக்கு மனம் போன போக்கு. மறுபடியும் நாளைக்கு அங்கேதான் நன்றாகப் படிக்க முடிகிறது என்று போய்விடுவார்” என்றாள் கற்பகம்.
“சே! உன்னை யார் குறுக்கே பேசச் சொன்னார்கள்” என்று சந்திரன் எரிச்சலோடு கடிந்து கூறினான்.
அதைக் கேட்டவுடன், நான் காரணம் வேறே இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். பாக்கியம்மா வீட்டில் சந்திரனுக்கும் அந்த அம்மாவுக்கும் அல்லது சந்திரனுக்கும் அந்த அம்மாவின் தம்பிக்கும் ஏதோ கசப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், என்ன காரணம் என்று அவனைக் கேட்கவில்லை. எரிச்சலோடு பேசுவதால் இப்போது கேட்கக்கூடாது. நாளை மறுநாள் அவனே சொல்லட்டும் என்று, என் கணக்குச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு நானும் அவனும் முனைந்து படித்துக் கொண்டிருந்தோம். சில நாட்களில் பள்ளிக்கூடம் போவதும் நின்றது. அப்போதும் அவன் பாக்கியம் வீட்டுக்குப் போனதை நான் பார்த்ததில்லை. அந்த அம்மாவும் அதைப் பற்றி யாரிடமும் குறிப்பிடவில்லை. தேர்வு நெருக்கடியால், நானும் அந்த அம்மாவின் வீட்டுக்குப் போகவில்லை. அவர் மட்டும் எங்கள் வீட்டுக்கும் சந்திரன் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார்.
நன்றாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நிறைய இருந்தது. ஆனால் படிக்க உடம்பு இடம் தரவில்லை. சோர்வு மிகுதியாக இருந்தது. மறுபடியும் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் விழிப்பாக இருந்தார்கள். காலையில் எழாதபடி தடுத்தார்கள்.
அதற்கு நேர்மாறாக சந்திரன் முன்போல் படிக்கவில்லை என்று அத்தை குறை சொன்னார். அவனும் அடிக்கடி சோர்ந்து போவதாகவும், போன ஆண்டில் படித்த அளவும் இந்த ஆண்டில் படிக்கவில்லை என்றும், குணமும் முன்போல் இல்லை என்றும், தாம் கண்டித்து அறிவுரை செய்வதால் தம்மோடு முன்போல் பேசுவதில்லை என்றும் அம்மாவிடம் சொல்லி வருந்தினார். “அப்படித்தான் இருப்பார்கள் சின்னப் பிள்ளைகள். தவிர, படிப்பு பொல்லாதது; பெரிய சுமையாக இருக்கும். அதனால் சரியாகப் பேசவும் மனம் இருக்காது” என்று அம்மா தேற்றியனுப்பினார்.
தேர்வும் வந்தது. இருவரும் எழுதினோம். சந்திரன் இதற்கு முந்திய ஆண்டுகளில் வெற்றிக் களிப்போடு இருந்ததுபோல் இல்லை; சோர்வோடு வாடியிருந்தான். என் நிலைமை எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எப்போதும் கடிந்து பேசும் அப்பாவே, அதைப்பற்றிக் கவலைப்படாமல், “என் பையன் தேர்வில் தவறிவிட்டாலும் கவலை இல்லை. உடம்பு தான் முக்கியம். சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுதவேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த ஆண்டில் உங்கள் ஊர்ப் பங்குனித் திருவிழா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த பிறகுதான் வந்தது. அதனால் கவலை இல்லாமல் முழுநேரமும் திருவிழாப் பார்த்து அனுபவித்திருக்கலாம். ஆனால், அதுதான் இல்லை.
திருவிழா அந்த ஆண்டில் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் சொல்லிக் கொண்டார்கள். புலிவேடம், கரிவேடம், சாமியார் வேடம், குறத்தி வேடம் என்று இப்படிப் பலர் பல வேடம் போட்டுக்கொண்டு வேடிக்கை செய்தார்கள். ஆண் பூதமும் பெண் பூதமும் ஆடிய ஆட்டங்கள் நன்றாக இருந்தன. எல்லாவற்றையும்விடப் பூக்கடைக்காரர்கள் சேர்ந்து நடத்திய வாணவேடிக்கை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது; வாலாசாவில் இருந்த செவிடர்களின் காதுகளிலும் வாணவெடிகள் கேட்டிருக்கும். பாம்புகள் போலவும், பூமாரி போலவும் வகை வகையான மத்தாப்பு ஒளியோடு வெடித்த வெடிகளுக்குக் கணக்கில்லை. வாண வேடிக்கைக்கு மட்டும் இரண்டாயிரம் ரூபாய் வரையில் செலவாகியிருக்கும் என்றும், அதுபோல் எந்த ஆண்டிலும் நடந்ததில்லை என்றும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். திருவிழாவின் பத்தாம் நாள் இரவு ஒருமணி வரையில் வாணம் வெடித்தபடியே இருந்தது. ஊரே அதிர்ந்து போயிற்று. வானுலகம் மண்ணுலகத்தோடு சேர்ந்து கூத்தாடுவதுபோல் இருந்தது, அந்த ஒளியும் ஒலியும். என் தம்பி கடைசி வரையில் கண் விழித்திருந்து ஒவ்வொரு வெடிக்கும் எழுந்து எழுந்து துள்ளித் துள்ளிக் குதித்தான். என் தங்கையும் கற்பகமும் முந்திய ஆண்டில் மகிழ்ந்தது போலவே பார்த்து மகிழ்ந்தார்கள். அத்தை, அம்மா, பாக்கியம், எல்லோரும் எங்கள் வீட்டின் திண்ணையை அடுத்து உட்கார்ந்தபடியே பார்த்துக் களித்தார்கள். பாக்கியத்தின் தந்தையும் தம்பியும் அவர்கள் வீட்டுத் திண்ணைமேல் படுத்திருந்தார்கள். எங்கள் அப்பா எங்கள் திண்ணையில் படுத்துவிட்டார். சந்திரனும் நானும் படுக்காமல், உட்கார்ந்தபடியே நெடுநேரம் பார்த்திருந்தோம். ஆனால் முந்திய ஆண்டில் இருந்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு இல்லை. மூன்றாம் ஆண்டில் அவன் வந்த புதுமையில் இங்கும் அங்கும் பரபரப்பாகச் சென்று திருவிழாவைப் பார்த்தோம். இந்த ஆண்டில் தேர்வு முடிந்த பிறகும், படிப்புச் சுமை இல்லாத நிலையிலும் எங்கள் மனம் அதில் அவ்வளவாக ஈடுபடவில்லை. நான்கு பேருக்கு இடையில் நாங்களும் கண்விழித்திருந்தோம். சந்திரனுக்கு அடிக்கடி கொட்டாவி வந்தது. எனக்கு உறக்கமே வந்துவிட்டது. காரணம் நோயினால் என் உடம்பு அவ்வளவு சோர்ந்து போயிற்று. அவனுக்கு மகிழ்ச்சி இல்லாத காரணம், தேர்வில் நன்றாக எழுதாத குறையாக இருக்கலாம் என்று எண்ணினேன். அதையும் அவன் என்னிடம் வாய்விட்டுச் சொல்லவில்லை.
அத்தியாயம் – 9
வைகாசி முடிவில் தேர்வின் முடிவுகள் வந்தன. நான் தேர்ச்சி பெறவில்லை. இன்னும் ஓர் ஆண்டு அதே வகுப்பில் படிக்க வேண்டுமே என்று எண்ணி மிக வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் “கவலை வேண்டா. நீ நோயிலிருந்து தப்பிப் பிழைத்ததே போதும்” என்று தேற்றிக் கொண்டிருந்தார்கள்.
சந்திரன் தேர்ச்சி பெற்றான். ஆனால் ஒரு பாடத்திலும் முதன்மையான எண்கள் வாங்கவில்லை. ஆசிரியர்கள் எல்லோருக்கும் உடன்படித்த மாணவர்களுக்கும் – இது பெரிய வியப்பாக இருந்தது. வரலாற்று ஆசிரியரின் மகன் சந்திரகுப்தன் நான்கு பாடங்களில் முதல்வனாக இருந்தான். மற்றொருவன் மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றுவிட்டான்.
பெருங்காஞ்சிக்குப் போய்ச் சந்திரனைப் பார்த்துத் தேறுதல் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். நானே தேர்ச்சி பெறாதபோது நான் போய் அவனுக்குத் தேறுதல் சொல்வது பொருந்தாது என்று எண்ணி நின்றுவிட்டேன்.
ஆனாலும், சந்திரனிடத்தில் எனக்கு நன்றியுணர்ச்சி இருந்தது. ஏன் என்றால், அவன் சொல்லிக் கொடுத்த கணக்கில்தான் நான் நிறைய எண்கள் வாங்கியிருந்தேன். தமிழ்ப்பாடத்திலும் அதற்கு அடுத்த நிலைதான் இருந்தது. ஆங்கிலத்திலும் விஞ்ஞானத்திலும் எண்கள் குறைந்து போயிருந்தன. அந்தப் பாடங்களில் இன்னும் மூன்று மூன்று எண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி கிடைத்திருக்கும் என்று தலைமையாசிரியர் சொன்னார்.
சந்திரனுடைய தகப்பனார் ஊரிலிருந்து வந்தார். அவனைச் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்க்கப் போவதாகவும், சென்னையில் உள்ள உறவினர் ஒருவர் அதற்கு வேண்டிய முயற்சி செய்வதாகவும் கூறினார். நான் தேர்ச்சி பெறாததற்காகக் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்குமாறு தேறுதல் மொழிகள் சொல்லிவிட்டுச் சென்றார். அவன் கல்லூரியில் சேர்வதற்கு முன் அவனைக் காண வேண்டும் என்று விரும்பினேன். அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்தேன். நேராக ரயில் ஏறிச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான் என்று பிறகு தெரிந்து கொண்டேன். நானாவது அவனுடைய ஊர்க்குப் போய்ப் பார்க்கத் தவறிவிட்டேனே என்று என்னையே நொந்து கொண்டேன். சென்னையில் அவனுடைய முகவரி தெரிந்தால் கடிதமாவது எழுதலாம் என்று விரும்பினேன். முகவரியும் தெரியவில்லை. இன்னும் சில வாரம் பொறுத்துப் பார்க்கலாம். அதற்குள் அவனிடமிருந்து கடிதம் வரும் என்று நாள்தோறும் அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்.
பள்ளி திறந்ததும், முன் படித்த வகுப்பிலேயே மிகச் சோர்வோடு போய் உட்கார்ந்தேன். எனக்குக் கீழ் வகுப்பில் படித்த மாணவர்கள் பலர் என்னோடு வந்து உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளாக என் பக்கத்தில் எனக்குத் துணையாக இருந்த சந்திரன் இப்போது இல்லை. அவன் இல்லாமல் நான் மட்டும் தனியே இருந்தது, எனக்குத் துயரமாக இருந்தது. காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும் மாலையில் திரும்பும்போதும் அந்தத் தனிமையை நன்றாக உணர்ந்தேன். வீட்டில் உள்ளவர்களோடும் வகுப்பில் உள்ளவர்களோடும் கலகல என்று பேசிப் பழக எனக்கு மனம் இல்லாமற் போயிற்று. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இந்த உணர்ச்சி மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.
இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எஸ். எஸ். எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான் என்று வருந்தினேன். உடனே அந்தப் பழைய குறையை மறந்துவிட்டுப் புதிய ஊக்கத்தோடு முயலும்படியாக எழுதினேன், அந்தக் கடிதத்தைப் பற்றி அம்மாவுக்குச் சொன்னேன். என்ன காரணமோ, புதிய ஊர் பிடித்திருக்காது என்று அம்மாவும் வருந்தினார்.
அதற்குப் பிறகு அவன் பதில் எழுதவில்லை. மறுபடியும் நானே ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு எழுதிய பதிலும் சுருக்கமாகவே எழுதியிருந்தான். விடுமுறையில் ஊர்க்கு வரப்போவதாகவும் அங்கு வந்தால் தோப்பில் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் குறித்திருந்தான். ஆனால், விடுமுறை எப்போது என்பதைத் தெரிவிக்கவில்லை.
எனக்கு கால் தேர்வு வந்தது. அவனுக்கும் அப்போது தேர்வு நடக்கும் என்றும், அதன் பிறகு தான் விடுமுறைக்கு வருவான் என்றும் எண்ணியிருந்தேன். என் தேர்வு முடிந்த பிறகு பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்குச் சென்று சேர்ந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். அவனுடைய விடுமுறைக் காலம் முடிந்து அதற்கு முந்திய நாள் தான் சென்னைக்குப் போய்விட்டதாகக் கூறினார்கள். உடனே திரும்பிவிடலாம் போல் தோன்றியது. சந்திரனுடைய அம்மா, அப்பா, அத்தை மூன்று பேரும் வற்புறுத்தவே சோர்வோடு மூன்று நாள் தங்கியிருந்தேன். அந்தச் சோர்வுக்கு இடையே நான் பெற்ற மகிழ்ச்சி ஒன்று இருந்தது என்றால், அது கற்பகத்தின் முகத்தை இடையிடையே கண்டதில்தான். அவளோ, படிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, சமையலறையில் பயின்று கொண்டிருந்தாள். என் முன் அடிக்கடி வர நாணினாள். அந்த நாணம் எப்படித்தான் அவளிடம் வந்து சேர்ந்ததோ தெரியவில்லை. ஆறு மாத காலத்தில் அவ்வளவு வேறுபாட்டோடு பழகுவாள் என்று நான் எண்ணவில்லை. ஆனாலும், யாரும் இல்லாதபோது, நடைவழியாகப் போனவள், இரண்டு மூன்று முறை புன்முறுவலும் கடைக்கண் பார்வையும் காட்டிவிட்டுச் சென்றாள்.
வழக்கம் போல் மாசன் இளநீர் வெட்டிக் கொண்டு வந்தான். “நுங்கு இல்லையா?” என்று நான் கேட்ட போது, “அதற்கு இப்போது காலம் இல்லை. வேண்டுமானால், பனம் பழம் இருக்குமா என்று பார்த்து வருவேன்” என்றான்.
தென்னந் தோப்புக்குத் தனியே சென்றேன். காவலாள் சொக்கான் என்னை வரவேற்றான். “சுரைப்புருடை வேண்டுமா சாமி!” என்றான்.
“வேண்டா, நீ பக்கத்தில் இரு. நானே நீந்திப் பார்க்கிறேன்” என்று சொல்லிக் கிணற்றினுள் இறங்கினேன். படித்த வாய்பாடு தவறாமல் நினைவுக்கு வருவது போல், நீரில் இறங்கியவுடன் நீந்தும் திறமை தானே வந்தது. ஒருவகைப் பெருமிதத்தோடு திரும்பத் திரும்பச் சுற்றிச் சுற்றி நீந்தினேன். “சொக்கான்! உன் துணை வேண்டா. இனிமேல் நானே தனியே நீந்துவேன். தண்ணீரும் எனக்குத் தரைபோல் ஆகிவிட்டது. நீ போகலாம்” என்றேன்.
“என்ன சாமி! இது ஒரு வித்தையா? நாய்க்குட்டி பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி எல்லாம் பிறந்த மூன்றாம் நாளில் போட்டாலும் நீந்திக் கரைக்கு வந்து சேருது. மனிதக் குட்டிக்கு இது ஒரு வித்தையா?” என்றான் சொக்கான்.
“நாயும் பூனையும் ஆடும் மாடும் யாரும் கற்றுக் கொடுக்காமலே நீந்துகின்றனவே. மனிதன்தான் கற்றுக் கொடுத்து நீந்த வேண்டியிருக்கிறது” என்றேன்.
வழக்கம்போல் அத்தை வெந்நீர் வைத்துக் காத்திருந்தார். முன் சந்திரன் சொல்லிக் கொடுத்தது போல் பொய் சொல்லி நடிக்க முடியவில்லை. “வேண்டா அத்தை! தண்ணீரிலே குளித்தேன். நன்றாக நீந்துகிறேன். பயமே இல்லை” என்றேன்.
“உடம்புக்கு ஆகுமா? சளி பிடித்துவிட்டால்?”
“ஒன்றும் பிடிக்காது. பூச்சி பூச்சி என்று பயந்து இருந்தால் பயன் இல்லை. துணிந்துவிட்டேன்” என்று சொல்லி முடிப்பதற்குள், கற்பகத்தின் சிரிப்பின் ஒலி கேட்டது.
“தண்ணீரிலே குளிப்பதற்குக்கூட ஒரு பெரிய துணிச்சல் வேண்டுமா என்று சிரிக்கிறாள்” என்று அத்தை விளக்கம் தந்தார்.
நானும் மெல்லச் சிரித்து எட்டிப் பார்த்தேன். புன்முறுவலோடு கற்பகம் போய்க் கொண்டிருந்தாள்.
மூன்று நாள் இருந்துவிட்டுப் புறப்பட்டபோது கற்பகத்தின் முகத்தில் மலர்ச்சி இல்லை. கண்களும் கலங்கியிருந்தன. அந்த நேரத்தில் தபால்காரன் ஒரு கவர் கொண்டு வந்து சாமண்ணாவிடம் கொடுத்தான். அதைப் பிரித்துப் பார்த்த அவர், “தமிழில் எழுதக் கூடாதா? எல்லாரும் சீமையில் பிறந்து வளர்ந்ததாக எண்ணிக் கொள்கிறார்கள். வேலு! இது என்ன, பார்த்துச் சொல்” என்று என்னிடம் கொடுத்தார்.
சந்திரனுடைய கல்லூரித் தலைவரிடமிருந்து வந்த கடிதம் அது. அவன் கால் தேர்வில் பெற்ற எண்களை எழுதி, படிப்புப் போதாது. அக்கறை கொள்ள வேண்டும் என்ற குறிப்பும் சேர்க்கப்பட்டிருந்தது. சாமண்ணாவிடம் சொன்னேன்.
அவர் ஒரு பெருமூச்சு விட்டார். என்னைப் பார்த்தார் “சரி, உனக்கு நேரம் ஆகுது. பணம்தான் தண்ணீர் போல் செலவு ஆகிறது; பயன் ஒன்றும் காணோம். அவனைப் பட்டணத்துக்கு அனுப்பிப் படிக்க வைத்ததே தப்பு. என்னவோ, இவ்வளவு படித்தானே, இன்னும் கொஞ்சம் படித்து முடிக்கட்டும் என்று அனுப்பினேன்” என்று சிறிது நேரம் தரையைப் பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்த்து, “நீயும் அவனோடு போய்ப் படித்துக் கொண்டிருந்தால் அவன் இப்படிக் கெட்டுப் போயிருக்கமாட்டான். மார்க்கு இவ்வளவு குறைந்திருக்காது. எங்களுடைய போதாக் காலம், உனக்கு நோய்வர, நீ பரீட்சையில் தவறி விட்டாய். என் செய்வது? இந்த வருசம் நீ பரீட்சையில் தேறி, அடுத்த ஆனியில் நீயும் பட்டணத்துக்குப் போய்ப் படிப்பதாக இருந்தால்தான் அவனை அனுப்பிப் படிக்க வைக்கப் போகிறேன். இல்லையானால் நிறுத்திவிடப் போகிறேன்” என்றார்.
அதைக் கேட்டு என் மனம் உருகியது. என்ன சொல்வது என்று தெரியாமல் விடை பெற்றுப் புறப்பட்டேன்.
வந்த வழியில் ஒரு குடிசையிருந்தது. அதன் வாயிலில், ஒரு கிழவனும் கிழவியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கிழவி புகையிலையைக் கிள்ளித் தர, கிழவன் அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு, வலக்கையை நெற்றியருகே வளைத்து என்னை உற்றுப் பார்த்தான். “யார் சாமி போகிறது?” என்றான்.
“இந்த ஊருக்கு வந்தேன். வெளியூர்”.
“யார் வீட்டுக்கு வந்தீர்கள்?”
“சந்திரன் வீட்டுக்கு-அதாவது சாமண்ணா வீட்டுக்கு”.
“அதுதானே நினைச்சேன். மொட்டையம்மா தம்பி பிள்ளை மாதிரி இருக்குதே, அந்தப் பிள்ளைதான் இரண்டு நாளைக்கு முன்னே பட்டணம் போச்சே, இது யாரு என்று பார்த்தேன்.
“சந்திரனைத்தான் பார்க்கலாம் என்று வந்தேன். அவன் இல்லை” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தேன்.
கிழவியின் குரல் கேட்டது: “அந்தப் பிள்ளை படிக்கப் போயிருக்குதாம் பட்டணத்துக்கு.”
“போனதே நல்லதுதான். இந்த ஊரில் இருந்தால், கொழுத்துப்போன பெண் கழுதைகள் அதைக் கெடுத்து விடும். அதுவும், பெரிய வீட்டுப் பிள்ளை என்றால் சொல்லத் தேவையில்லை.”
கிழவனின் இந்தப் பேச்சைக் கேட்டு, நின்று மெல்ல நடந்தேன்.
“இன்னுமா அந்தப் பிள்ளையைக் கெடுக்காமல் இருக்கிறார்கள்? உனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எல்லோரும் உன்னைப்போல என்னைப் போலப் பயந்து நடப்பார்கள் என்று கனவு காண்கிறாயே?” என்று கிழவி சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றேன். அங்கு இருந்த மரத்தில் ஏதோ பறிப்பதுபோல நின்றேன்.
“மொட்டையம்மாவின் தம்பி சாமண்ணா நல்லவர். ஒரு தப்புக்கும் போகமாட்டார். எனக்குத் தெரிந்து இல்லை” என்றான் கிழவன்.
“அப்பன் யோக்கியமா இருந்தால், பிள்ளையும் அப்படி இருக்குதா? அதுதான் உலகத்தில் இல்லையே” என்றாள் அவனுடைய அனுபவம் முதிர்ந்த வாழ்க்கைத் துணைவி.
நிழற்படக் கருவி இருந்தால் அந்தக் கணவனையும் மனைவியையும் அவர்களுடைய கற்புள்ள வாழ்க்கைக்கு இடமாக விளங்கிய அந்தக் குடிசையையும் படம் எடுத்து வைத்துப் பூசை செய்யலாமே என்று எனக்குத் தோன்றியது.
சந்திரனுடைய வாழ்க்கையில் உண்மையாகவே களங்கம் தோன்றிவிட்டதோ என்று வருத்தத்தோடு எண்ணியபடியே நடந்து வந்து ஏரிக்கரையில் பஸ் நிற்கும் இடத்தில் நின்றேன்.
அந்த ஏரிக்கரையின் அழகும் சாலையின் ஒழுங்கான மரங்களின் எழிலும் என் கண்களைக் கவரவில்லை. ஏரியில் நீர் நிரம்பியிருந்தது. நீர் நிரம்பிய காட்சியைப் பார்க்க வேண்டும் என்று முதல்முறை வந்தபோது என் மனம் ஆசை கொண்டது. அன்று பஸ் வரும் என்று காத்து நின்றபோது, என் கண் எதிரே அந்த ஏரி நிறைந்த செல்வத்தைக் கண்டேன், ஆயினும் என் மனம் அந்த அழகில் ஈடுபடவில்லை.
நிறைந்த நீரில் கரையோரத்தே வந்து மோதும் அலைகளைக் கண்டேன். என் மனத்திலே சந்திரனுடைய களங்கம் பற்றிய எண்ணங்களே திரும்பத் திரும்ப அலை அலையாக வந்து மோதிக் கொண்டிருந்தன.
மறுபடியும் என் நல்ல மனம் சந்திரனுடைய அறிவையும் அழகையும் பற்றி எண்ணியது. ஒரு கால் அந்தக் கிழவி சொன்னது பொய்யாக இருக்கலாம். கிழவன் அறிவுரையாகச் சொன்ன கருத்தை அவள் மெய்யெனத் திரித்திருக்கலாம். பொதுவாக ஆணும் பெண்ணும் சிறிது நேரம் எங்காவது பேசுவதைப் பார்த்தாலும் அவர்களுக்கு விபசாரப் பட்டம் கட்டித் தூற்றுவது நம் நாட்டு வழக்கம். அதுவும் வேறு செய்திகள் குறைந்த கிராமத்தில் இப்படிப் பழி தூற்றுவது மிகுதி. ஆகையால் சந்திரனைப் பற்றிக் கிழவி சொன்னது நம்பத் தகுந்தது அல்ல. யாரோ சந்தேகப்பட்டுக் கட்டிவிட்ட கதையைக் கேட்டுக் கொண்டு வந்து அவள் கிழவனிடம் சொன்னாள் என்று எண்ணினேன்.
கிழக்கே ஊர்ப்பக்கம் திரும்பி நோக்கினேன், ஏரி நீர் சலசல என்று பல வாய்க்கால்கள் வழியாக ஓடி வயல்களில் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு வாய்க்கால் ஓரமாக அரளிச் செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பச்சைப் பசேலென்று இலைகளுக்கு இடையே அதே நிறமான விதைகள் பல இருந்தன. உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த செந்நிறப் பூக்கள் என் கண்களைக் கவர்ந்தன. கீழே இறங்கிச் சென்று ஒரு பெரிய மலர்க்கொத்தைப் பறித்தேன். சில இலைகளும் சேர்ந்து வந்தன. அதை எடுத்துக் கொண்டு கரைமேல் வந்து நின்றேன். பூக்களின் அழகும் மணமும் இன்பமாக இருந்தன. கூர்மையான முனைகளோடு நீண்டிருந்த இலைகளால் ஒரு பயனும் காணோமே என்று எண்ணினேன். இவ்வளவு அழகான பூக்களுக்கு வரும் சத்து இலைகளுக்கும் வருகிறது. ஆனாலும் இலைகளில் மணம் இல்லை: அழகும் இல்லை. அதனால் இலைகளைப் போற்றுவாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டே, ஓர் இலையை ஒடித்து முகர்ந்தேன். அதிலிருந்து கசிந்த பால் மூக்கில் ஒட்டிக் கொண்டது. அரளி விதை பொல்லாதது, நஞ்சு உடையது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இலையின் பாலும் பழமும் ஏதாவது தீமை செய்யுமோ என்று அஞ்சி மறுபடியும் கீழே இறங்கி வாய்க்காலில் நீரை எடுத்து மூக்கை நன்றாக உள்ளும் புறமும் தேய்த்துக் கழுவிக் கொண்டு வந்தேன். இலைகளை எல்லாம் ஒடித்துப் போட்டுவிட்டு, மலர்களை மட்டும் வைத்துக் கொண்டேன். கீழே உதிர்ந்த அந்த நீண்ட இலைகளை நோக்கினேன். “உங்களுக்கு ஒருவகை மதிப்பும் இல்லையா? பயனும் இல்லையா? அய்யோ! மலர்களோடு பிறந்தும், மலர்கள் பிறப்பதற்குக் காரணமாக இருந்தும், உங்களுக்கு வாழ்வு இல்லையே!” என்று எண்ணினேன். மேற்கே வேலத்து மலையின் சிகரம் சிவலிங்கம் போல் வானளாவி நிமிர்ந்து நின்றது. அதன் அடியில்தான் தாழை ஓடை இருந்தது. சந்திரனும் நானும் அங்கே போய்வந்த இன்ப நாள் நினைவுக்கு வந்தது. அந்தத் தாழை மரங்களை நினைத்தேன். தாழை மரத்திலும் பூக்கள் மட்டுமே மதிப்புப் பெறுகின்றன. முள் நிறைந்த அதன் இலைகளை யார் மதிக்கிறார்கள்? அந்த இலைகள்தான் உழைத்துக் காற்றையும் ஒளியையும் மண்ணின் சத்தையும் நீரையும் உட்கொண்டு மலர்களை உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இலைகளை எவரும் போற்றுவதில்லை. அரளி இலைகளை நின்ற இடத்திலேயே எறிந்தேன். தாழையின் இலைகளை அப்படி எறிவதிலும் துன்பம் உண்டு. நம் காலிலும் படாமல், பிறர் காலிலும் படாமல் அவற்றை எறிய வேண்டும். ஆனால் பூக்களோ மணம் நிறைந்த பூக்கள், அவற்றின் மணத்திற்கு நிகர் ஏது?
இவ்வாறு பல எண்ணிக் கொண்டிருந்தபோது ஆங்கில ஆசிரியர் பைரன் என்னும் ஆங்கிலப் புலவரைப் பற்றி வகுப்பில் கேட்டது நினைவுக்கு வந்தது. பைரனுடைய பாட்டுகளை மட்டுமே எடுத்து நுகர வேண்டுமாம்; அந்தக் கவிஞனுடைய வாழ்க்கைச் செய்திகளை மறந்தொழிக்க வேண்டுமாம்; அவை பயனற்ற நாகரிகமும் அற்ற – மதிப்புக்கு உரியனவல்லாத – செய்திகளாம். உடனே, மனிதரிலும் தாழைபோல், அரளி போல் சிலர் உள்ளனர் என்ற உண்மை விளங்கியது. சந்திரனுடைய அறிவும் அழகும் தவிர, அவனுடைய வாழ்க்கையில் நல்லவை வேறு இல்லை என்று எண்ணினேன்.
கீழிருந்து ஒரு நறுமணம் வந்ததை உணர்ந்தேன். என் இடக்கைப் பக்கம் ஒரு பனைமரத்தின் அடியில் துளசிச்செடி ஒன்று இருந்தது. அதன் மணம்தான் என்று உணர்ந்தேன். அந்தச் செடி அவ்வளவு அழகாகத் தோன்றவில்லை. அதனிடம் கவர்ச்சியான மலர்களும் இல்லை. மலர்களுக்கும் இலைகளுக்கும் நிறத்திலும் அவ்வளவாக வேறுபாடு இல்லை. ஆனால் துளசிமலர்கள் போலவே துளசி இலைகளும் நறுமணம் வீசும் சிறப்பு ஒரு புதுமை என உணர்ந்தேன். குனிந்து ஒரு காம்பை ஒடித்து முகர்ந்தேன். அந்த நறுமணம் மலர்களின் மணமா, இலைகளின் மணமா என்று பகுத்துணர முடியவில்லை. எதைக் கிள்ளி எறிவது, ஏன் கிள்ளி எறிவது என்று வியந்தேன். என்னை அறியாமல், அந்தக் கிளையில் இலை இல்லாத குச்சியை ஒடித்து மூக்கின் அருகே கொண்டு சென்றேன். அது வெறுங் குச்சி: இலை, பூ ஒன்றும் இல்லை. ஆனாலும் துளசியில் அருமையான நறுமணம் வீசியது. ஒருகால் இலைகளைத் தொட்ட என் விரல்களில் இருந்த நறுமணமோ என்று விரல்களை நன்றாக வேட்டியில் துடைத்து அந்தக் குச்சியை மறுபடியும் மூக்கின் அருகே கொண்டு சென்றேன். முன் போல் நறுமணம் கமழவே, துளசிக் குச்சிக்கும், நறுமணம் இருத்தலைத் தெளிந்தேன். என் வியப்பு மிகுந்தது.
அதற்குள் சோழசிங்கபுரத்திலிருந்து பஸ் வரவே, ஏறி உட்கார்ந்தேன். பஸ் ஏறியபோது, அரளிப்பூக் கொத்தை எறிந்துவிட்டுத் துளசியை மட்டும் கையோடு எடுத்துக் கொண்டேன். பஸ்ஸிலும் பழைய எண்ணமே தொடர்ந்து வந்தது. அரளியையும் தாழையையும் படைத்த இறைவனே துளசி போல் எல்லாம் நறுமணம் கமழும் செடியையும் படைத்திருக்கின்றான் என்று எண்ணினேன். புலவர் பைரனைப்போல் நண்பன் சந்திரனைப்போல் ஒரு பகுதி மட்டும் மணம் கமழ்ந்து மற்றப் பகுதியெல்லாம் வெறுத்து ஒதுக்கத்தக்க வகையில் வாழும் வாழ்வைவிடத் துளசி போல் வாழும் தூய எளிய வாழ்வு நல்வாழ்வு என்று எண்ணினேன். அந்த வாழ்வு அடக்கமான வாழ்வாக இருந்தாலும், உள்ளும் புறமும் ஒரே வகையாக மணம் கமழும் நல்ல வாழ்வு அல்லவா?
பஸ் வாலாசா ரயில் நிலையத்தைக் கடந்து இலுப்பை மரங்கள் அடர்ந்த சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த இலுப்பை மரங்களின் அடியில் நானும் சந்திரனும் உட்கார்ந்து, சென்ற ஆண்டில் பல நாட்கள் மாலைக் காலத்தில் தரையில் கோடுகள் கிழித்துக் கணக்குப் போட்டது நினைவுக்கு வந்தது. சந்திரன் எவ்வளவு உதவியாக இருந்தான்! அவனுடைய வாழ்வில் என்ன குறை கண்டோம்? யாரோ சொல்லக்கேட்டு அதை நம்பி அவனைப் பழித்து எண்ணலாமா? பைரனுடைய வாழ்வோடு ஒன்றாகச் சேர்க்கலாமா? அவ்வாறு எண்ணக் கூடாது. எண்ணியது குற்றம் என்று உணர்ந்தபடியே பஸ்ஸைவிட்டு இறங்கினேன்.
– தொடரும்…
– மு.வரதராசன் இந்நாவலை 1958-ல் எழுதினார். அவருடைய ‘தாயகம்’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நாவலுக்கு 1961-ல் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது.
நன்றி: https://www.projectmadurai.org/
![]() |
மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார். எளிய தமிழ் நடையில் திருக்குறளுக்கு இவர் எழுதிய தெளிவுரை தமிழக மக்களிடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. டாக்டர் மு.வ. பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உதிர்ந்த மலர்
என்.ஸ்ரீதரன்
July 20, 2026
ஒட்டு
ஜே.எம்.சாலி
July 20, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 20, 2026
