எது நிஜம்? எது மாயை?
கதையாசிரியர்: இளையவேணி கிருஷ்ணா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2026
பார்வையிட்டோர்: 119

என் கற்பனையில்
உருவான அந்த கனவு
வீட்டில்
நான் மட்டுமே வசிக்கிறேன்
மிகவும் ஆனந்தமாக…
மனிதர்களின் வாசம்
இல்லாத அந்த வீட்டில்
அந்த ஒரு பறவைக்கு மட்டுமே
அனுமதி அளித்து
இருந்தேன்…
நானும் அந்த ஒரு பறவையும்
மிகவும் சுவாரஸ்யமாக
கொஞ்சம் நையாண்டி கலந்து
பேசி தீர்ப்போம்…
உலக நடப்புகளில் இருந்து
உள்ளூர் அரசியல் வரை
ஒரு அற்புதமான தேநீர்
சுவைத்தபடி
அன்று என் வீட்டின்
முற்றத்தில் வீசி எறிந்த
தினசரியை புரட்டியபடி…
பின்பு நிதானமாக காலை சிற்றுண்டி
சமைத்து நானும் அதுவும்
ரசித்து சாப்பிடும் அழகை
அந்த வீட்டின் சுவர்கள்
மிகவும் ஆழமாக நேசித்து
ரசிக்கும்…
ஒரு அற்புதமான தோட்டம்
ஒன்று என் வசம் இருந்தது…
அங்கே எங்கள் தேவைகளுக்கு
மட்டும் பயிரிட்டு மகிழ்ந்து
வாழ்ந்து வந்தோம்…
எங்கள் அற்புதமான வாழ்வியல்
நகர்வு இப்படி அழகாக சென்று
கொண்டு இருப்பதை
நானும் அந்த பறவையும்
ரசித்து உணர்ந்து
அனுபவிக்கும் சமயத்தில் தான்
என் நிஜ வீட்டின் முற்றத்தில்
வசித்து வந்த குரங்கு
நான் கோடை வெப்பம் தாங்காமல்
என் முற்றத்தில் உறங்கிக் கொண்டிருந்த
என் போர்வையை பிடித்து
இழுத்து விட்டு வேகமாக
மரத்தின் கிளையில்
அமர்ந்து கொண்டது…
நான் கண் விழித்து
வேகமாக வேகமாக எழுந்தேன்…
என் கனவு வீடும் நானும்
அந்த பறவையும் எங்கே என்று
தேடி இங்கும் அங்கும்
அலைகிறேன்…
என் வீட்டு மனிதர்கள்
என்னாச்சு என்று
என் பின்னால்
சுற்றி சுற்றி வருகிறார்கள்!
நான் சற்று நின்று
ஒன்றுமில்லை என்று
அவர்களுக்கு பதில்
அளித்து விட்டு
அங்கிருந்து நகர்கிறேன்…
என் கனவு வீட்டின் உள்ளே
கமழ்ந்த சுகந்தம் மட்டும்
என்னோடு தொடர்கிறது…
இங்கே எது நிஜம்
எது கனவு என்று
புரியாமல்
இதோ இன்றைய கடமைகளை
செய்ய மீண்டும்
இயந்திரத்தனமாக
ஓட துவங்கி விட்டேன்…
இப்போதெல்லாம்
வாழ்வின் சுவாரஸ்யங்கள்
கனவோடு
முடிந்து விடுவது தான்
கொஞ்சம் வேதனை அளிக்கிறது…
தொடர்புள்ள சிறுகதைகள்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது…!
வளர்கவி
November 1, 2026
கடவுளைக் காண…
ராமன் செல்வராஜ்
October 29, 2026
அநித்தியம்!
மா.சித்திவினாயகம்
October 29, 2026