எங்கும் ஓர் நிறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2026
பார்வையிட்டோர்: 1,570 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குப்பாசாமி நாயக்கர் தலையிலிருந்த பருத்திப் பொட்டணத்தை தொப்பென்று கீழே போட்டார்.

“ஸ்… அப்பாட” என்று மூச்சுவிட்டு லேஞ்சியை அவிழ்த்துவிட்டு உதறி வேர்வையைத் துடைத்துக்கொண்டார்.

கடையில் கடைக்காரர் இல்லை. மத்தியானச் சாப்பாட்டுக்குப் போயிருந்தார். அவருடைய பையன்தான் இருந்தான்.

நாயக்கர் பருத்திப் பொட்டணத்தை கடையின் நிழல் பகுதிக்கு. புரட்டிப்போட்டு அதன்மேலே சவாரி செய்பவர்போல் உட்கார்ந்து கொண்டார்.

வெக்கை தாளமுடியாததாய் இருந்தது. சுக்கத்தில், கழுத்தடியில், நெற்றிப்பொட்டில் துடைக்கத் துடைக்க வேர்வை கொப்பளித்துக் கொண்டு வந்தது.

அது சில்லரைப் பருத்தி வாங்கும் கடை பஜாரிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளை ரோட்டிலிருக்கும் பெட்டிக்கடை அந்தக் கடை தளது பின்பகுதியை இரண்டு கால்களால் சாக்கடையின் ஓடையிலும் முன் பகுதியை ரோட்டின் விளிம்பிலும் ஊன்றி அமர்ந்திருந்தது.

நாயக்கர் பையனைப் பார்த்தார். பையன் துரு துரு என்றிருந்தான். ஆள் இல்லாதபோது கல்லாவில் துட்டை எடுத்துக்கொள்ள மாட்டாளா என்று நினைத்தார். அப்படியெல்லாம் நாணயப் பிசகு நடக்காது என்று தன்னைத் தேற்றிக்கொண்டார்.

பையனிடம் பேச்சுக் கொடுத்தார். பையனோ இவரிடம் பேச்சுக் கொடுக்க இஷ்டப்படவில்லை. ஒன்று, தன்னை ஒத்த ஜோடியாக இருக்கணும்; இல்லை ஆனாவது பார்க்க நன்றாக இருக்கணும், இரண்டும் இல்லை; இவருக்கு என்ன தெரியும். ஒரு சினிமாவின் பெயரைச் சொல்லி அந்தப் படத்தின் டைரக்டர் யார் என்று கேட்டால் தெரியுமா? ஒண்ணும் தெரியாத ஒரு மண்ணும் தெரியாத அப்புராணி; சுத்தப் பட்டிக்காட்டுக் கிழம்!

நாயக்கர் பையனை விட்டுவிட்டு திராசுவைப் பார்த்தார். அப்புறம் படியைப் பார்த்தார். படிகள் ஒன்றின்மேல் ஒன்றாக கோபுரம்போல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அம்புட்டும் புதுசாக வந்த கிலோகிராம் படிகள், அவருக்கு அவரை அறியாமல் ஒரு சந்தோஷம் வந்தது. அந்தப் படிகளை மனசுக்குள் பாராட்டினார்.

இப்பொழுதெல்லாம் அவருக்கு ஒரு நிம்மதி; முன்னாலெல்லாம் அப்படி இல்லை.

நாப்பது அம்பது வருசத்துக்கு முந்தியெல்லாம் பருத்தியை மூட்டையாகக் கட்டிக்கொண்டு, பத்துக்கல் தொலைவு நடந்து கயத்தாறுக்குத்தான் கொண்டுபோகணும். அப்போதெல்லாம் இந்தக் கோவில்பட்டி இவ்வளவு பிரபலமாகவில்லை. இப்பொழுது நினைத்தால் லாரியிலோ ரயிலிலோ கோவில்பட்டிக்கு பருத்திப் பொட்டணங்களைக் கொண்டுவந்துவிடலாம். வசதி இருக்கிறது. அந்தக் காலத்திலோ கயத்தாறுக்கு மட்டுமென்ன எங்கேயும் பஸ்கூடக் கிடையாது. நடந்துதான் சாகணும்.

அப்பொழுதெல்லாம் நாயக்கர் பருத்திப் பொட்டணத்தை தலையில் சுமந்துகொண்டு போவார் கயத்தாறுக்கு. உப்பன் பருத்தி அமோகமாக விளையும். வியாபாரிகள் கிராமங்களுக்கு வந்து வாங்கிக்கொண்டு போகிற வழக்கம் அப்போதெல்லாம் ஏற்பட வில்லை. கழுத்து ஓடிய சுமக்கவேண்டும்; சுமந்துகொண்டு போய்தான் போடவேண்டும்.

அங்கயக்கண்ணி, அங்கயக்கண்ணி என்ற ஒரு அம்மாள் பருத்தி வாங்குகிற கடை வைத்திருந்தாள். அடேயப்பா…இப்பொ நினைச் சாலும் நல்ல ஞாபகம் இருக்கு. பூஷணிப்பழம்மாதிரி நிறம், நல்ல உசரமும் உருட்டும்; சிரிச்ச சீதேவிமுகம். என்னேரமும் வெத்திலையும் கருப்பட்டிப் புகையிலையும் வாய் நிறைஞ்சி செவேலென்று இருக்கும். நெத்தியிலே ஒத்தை நாமம்போல பச்சைகுத்தி இருப்பா. காதுகளில் ‘பழைய சிகப்பு’க் கற்கள் பதித்த பெரிய கம்மல்கள், சௌந்த ரெண்டு புஜங்களிலேயும் கைகளிலேயும் பச்சைக் கோலங்கள், உச்சி வகுடு எடுத்த சுருட்டை முடியில ஊடு நரை, ஒவ்வொருத்திகளுக்கு தரை கூட பொருத்தமாயும் அழகாகவும் இருக்கு!) கைகள்ளெ களமான பித்தளைக் காப்பு, கால்கள்ளெ களத்த உருண்டையான வெள்ளித் தண்டை, எப்பப்பாத்தாலும் “கள்ளிப் பழம் மணக்கும்” பச்சை நிறச் சேலைதான் உடுத்திக்கிட்டிருப்பான். அந்தக் காலத்துப் பெண்டுக வழக்கப்படி அவளும் ரவிக்கை போடுகிறதில்லை.

சம்சாரிகள் பருத்திப் பொட்டணங்களோடு கடை வாசல்ப் படியில் போய் நின்றால், அங்கயக்கண்ணி அவர்களை முறை வைத்து சொல்லி அழைத்து வரவேற்பாள்.

சின்னையா வாருங்க.

பெரியய்யா வாருங்க.

மச்சாவி வாருங்க.

பெண்மை பொங்கும் சிரிப்போடு, கைகொடுத்து பொட்டணத்தை இறக்கி வைப்பாள்.

ஆனால், ஒரு விஷயம் என்னவென்றால், சம்சாரிகள் மதித்த எடை, நிறுக்கும்போது இருக்காது.

இந்தக்காலம்மாதரி பருத்தியில் தண்ணீர் தெளித்துப் பதங்கட்டி அடைந்து பருத்தி நிறுக்கிற நீச வழக்கம் அப்போ உண்டாகி இருக்கவில்லை. (அதைக்கூட இந்த வியாபாரிகள் வந்துதான் சம்சாரிக்கும் அதைச் சொல்லிக்கொடுத்தார்கள் ?

சுத்தமா ஆன பருத்தி, ஒரு தூசி தும்பு இருக்காது. நல்ல வெயிலில் காய வைத்து எடுத்துக்கொண்டு போவார்கள். அந்தத் திராசுவுக்கு ‘துலாக்கோல் இராசு’ என்றோ என்னமோ பெயர் சொல்லுவார்கள். ஒண்ணரை முழ நீளத்தில் ஒரு கருப்புநிறக் கம்பு. உருண்டையாக ஒரு பக்கத்தில் கனமாகவும், போகப்போக சிறுத்தும் இருக்கும். சிறுத்த நுளியில் ‘ய’ மாதரி ஒரு வளையம் தொங்கும். கிஸ்தான் ரெட்டுவில் சதுரமாக வெட்டித் தைக்கப்பட்ட, நாலுமுனைகளிலும் கயிறுகள் ஒட்டிய – ஒற்றைத் ‘தட்டு’தான். அதில் சம்சாரிகள் பகுத்தியை அள்ளி அள்ளி வைப்பார்கள். படி கிடையாது. திராசுக் கம்பில் வெள்ளை நிறத்தில் சிறிய பல்லி முட்டை அளவுள்ள வெண்ணிற வட்டங்களாக ஒரு வரிசை. இரு வரிசை முவ்வரிசை என்று வட்ட அடையாளங்கள் இருக்கும். எடைக்குத் தகுந்தபடி, பிடித்துக்கொள்ளும் சுருக்குக்கயிற்றை நகர்த்திப் பிடித்துக்கொள்ளவேண்டியதுதான். துலான் கணக்கில் நிறுக்கலாம் அதில்,

அங்கயக்கண்ணி குளிந்துகொண்டு திராசு பிடித்து நிறுப்பதுவே அழகாக இருக்கும். நழுவுகிற மாராப்பை அடிக்கடி சரிசெய்து கொள்வாள். அந்த மாராப்புதான் ஏன் அடிக்கடி அப்படி நழுவு கிறதோ! சம்சாரிகள் அதையேதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு கணக்கு எளவும் தெரியாது. அவர்கள் அவளைப் பார்த்து “அங்கயக்கண்ணி அங்கயக்கண்ணி, பாவமும் புண்ணியமும் உன் கையிலே” என்று கருடாழ்வார் சிலை மாதரி இரண்டு கைகளையும் அவளை நோக்கி விரித்துக்கொண்டு சொல்லுவார்கள். இப்படி சொல்லக் கேட்கும்போதெல்லாம். அங்கயக்கண்ணி கெக்கொலி கொட்டிச் சிரிப்பாள்.

கொஞ்சகாலம் கழித்து படியும், திராசும் வந்தது, சம்சாரிகளுக்கு ஏதோ சில விஷயங்கள் புரிவதுபோல் இருந்தது. ஆனால் கொஞ்ச காலத்துக்கெல்லாம் அந்தப் பழைய ‘மாயை’ மீண்டும் வந்து அப்பிக்கொண்டது. கள்ளப்படி நடமாட ஆரம்பித்தன. பெரிய பலம் சின்னப் பலம் பெரியதுலான் சின்னத்துவான் என்றெல்லாம் குன்றுபடி.

ஒரு தாள்.

நட்ட நடு இருட்டில் உச்சியில் பொழுது திடீரென்று தோன்றியமாதரி, மேலே சொள்ள அனைத்துத் திராககளும் படிகளும் ‘ஜப்தி’ செய்து அப்புறப்படுத்தப்பட்டன. கிலோகிராம் படிகளும் தட்டோட்டமில்லாத புதிய திராசுகளும் எங்கே பார்த்தாலும்

வந்துவிட்டது.

எந்த ஊருக்குப் போனாலும் எங்கே போனாலும் ஒரே எடை நாயக்கர், கருப்பு நிறத்தில் அடுக்கப்பட்டிருந்த இரும்புப் படிகளையும் மஞ்சள் நிறத்தில் அடுக்கியிருந்த பித்தளைப் படிகளையும் மீண்டும் பார்த்தார்.

ஒன்று கருப்பு கோபுரம், இன்னொன்று மஞ்சள் கோபுரம்!

அவர் தளது உதட்டில் உறுத்துகிற வெள்ளி மீசைக் கற்றைகளைத் தொட்டுத் தடவிவிட்டுச் சரிசெய்தார். கடைப் பையனும் அவரைப்பார்த்து – பதிலுக்கு அதே மாதரி மீசை முளைக்காத தனது மேல்உதட்டைத் தொட்டுத் தடவிவிட்டுக் கொண்டான்!

தூரத்தில் வரும்போதே கடைக்காரர் தன் பையன் நாயக்கரைப் பார்த்து செய்கிற ‘சேஷ்ட்டை’யைக் கண்டு சிரித்துக்கொண்டே வந்தார்.

“ஐயா வாங்க; ஐயா வாங்க”

“ஆமய்யா, ஆமய்யா”

பையனுக்கு இப்போது விடுதலை கிடைக்கப்போகிறது. அவனுடைய சேக்காளிகள் இந்நேரமெல்லாம் ஆனந்தமாகச் சாப்பிட்டுவிட்டு வந்து, பள்ளிக்கூடத்தில் அடர்ந்த குளிர்ச்சியான வேப்பமரத்து நிழலில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு, சினிமாப் படங்களின் பெயர்களைக்கொண்ட “வாட் பிக்சர்?” விளையாட்டை விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் தான்மாத்திரம் அதில் கலந்துகொள்ளமுடியாமல் தினோமும் இப்படிப் பட்டிக்காட்டு கிழடுகளையே மத்தியானம் மத்தியானம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

நாயக்கர் பருத்திப் பொட்டணத்தை அவிழ்த்து பகுத்தியை எடுத்து எடுத்துத் தட்டில் வைத்தார். பையன் அவருடைய முதுகுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு வாயைக் கோணலாக வைத்துக் கொண்டு அவருக்கு ‘அழகு’ காட்டினான்! கடைக்காரர் தொந்தி குலுங்க நகைத்துக்கொண்டே பொய்க்கோபத்துடன் ‘ஏலெ, சீக் கழுதெ, போகலெ” என்று கண்டித்தார்.

நாயக்கருக்கோ தன்னைப் பையன் பின்னாலிருந்துகொண்டு வலிச்சான் காட்டுகிறதை அறிந்தாலும் ஒன்றையும் கவனிக்காதவர் போல் தனது காரியத்தில் கவனமாய் இருந்தார்.

– சாந்தி, 15-07-1971.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *