நெருப்பு
கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2026
பார்வையிட்டோர்: 56
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கிராம ஜனங்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தார்கள். ஓஹோ என்று அடித்தது மேல்காற்று. நாய் ஒன்று ஊளையிடத் தொடங்கியதைத் தொடர்ந்து
“அய்யய்யோ அம்மா…”
“அய்யய்யோ அம்மா” என்று ஒரு பெண்ணின் கீச்சுக்குரல் கேட்டது.
“தீ”
“தீ”
“தீயோ தீ”
அடிவயிற்றிலிருந்து பீதியோடு பல குரல்கள் ஒலித்தன. இருட்டுக் கெசமாக இருந்த தெருக்கள் பிரகாசம் பெற்றன. கிராமத்தின் இரு கரைகளிலுமுள்ள பிரம்மாண்டமான விருட்சங்கள் துலாம்பரமாகத் தெரிந்தன.
தூக்கத்திலிருந்து சட்டென விழித்தவர்கள் என்ன நடந்திருக்கிறது என்று அறியவே கொஞ்ச நாழிகையாகியது.
இளவட்டங்கள் பாய்ந்து தங்களுடைய இடுப்பில் சொருகியிருந்த சூரியை உறையிலிருந்து உருவிக்கொண்டு, தொழுவங்களுக்குள் நுழைந் தார்கள். தங்களுடையதோ தங்களுடைய ஜென்ம விரோதிகளுடை யதோ யாருடைய ஆடுமாடுகளையும் கயிற்றை சூரியால் அறுத்து அவைகளை விடுதலை செய்தார்கள்.
தெருவில் ஒரு பசுங்கன்று தன்னந்தனியாக, “அம்மா” என்று அலறிக்கொண்டு அங்கும் இங்கும் திகைத்துக்கொண்டிருந்தது.
கூரைகள்மீது உட்கார்ந்துகொண்டிருந்தவர்கள் “your of it… தண்ணீர்” என்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் இல்லாததால் கழநீர்ப் பானையை ஒரு கிழவி தன் நடுங்கும் கைகளால் மேல் நோக்கித் தாங்கி நீட்டிக்கொண்டிருந்தாள்.
கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டு வருகிறவர்கள் தெருவின் குறுக்கும் நெடுக்குமாக, ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். நான்கு தெருக்கள் சந்திக்கும் அந்த இடத்தை நோக்கி ஒரு தாய் தலைவிரிகோலமாக, இரண்டு கைகளையும் அகலித்து முன் நீட்டிக்கொண்டு,
“செங்கமலம்.. செங்கமலம்.. மகளே..என் மகளே” என்று கூவிக்கொண்டு ஓடிவந்தாள்.
எதிர்திசையிலிருந்து, திருமண உடையில் ஒரு பெண், இரண்டு கைகளையும் முன்னோக்கி விரித்துக்கொண்டு, “அம்மா..அம்மா..” என்று அழுதுகொண்டே ஓடிவந்தாள்.
அந்தத் தாயும் மகளும் ஒருவரை ஒருவர் அந்தச் சந்தியில் ஆரத் தழுவிக்கொண்டார்கள். தெருவில் தண்ணீர்க் குடத்துடன் வந்தவர் களையும் கூரைமீது இருந்தவர்களையும் இக்காட்சி மனசைத் தொட்டு, ஒரு கணம் சிலைகளாக நின்றார்கள். அடுத்த கணம் அவர்கள் எல்லோரும் தங்கள் கண்களைத் துடைத்துக்கொண்டு தங்கள் தங்கள் அலுவல்களில் முனைந்தார்கள்.
“தண்ணீர். . . . தண்ணீர்”
“சீக்கிரம். . . . சீக்கிரம்”
துப்பாக்கி வெடிப்பதுபோல் மூங்கில்கள் வெடித்தன. அப்படி வெடிக்கும்போது அதிலிருந்து மூங்கில்ச் சிதறல்கள் எரிந்துகொண்டே அம்புபோல் இரைச்சலிட்டுக்கொண்டு பாய்ந்தது. அடுத்த தெருவி லுள்ள கூரைமேல் போய் குத்தி நின்றுகொண்டு ஆடியது.
கையில் ஈரச்சாக்குடன் கூரையில் உட்கார்ந்துகொண்டிருந்த வர்கள் உடனுக்குடன் அந்த மூங்கில் சிதல்களை அடித்துத் தீயை முளையிலேயே அணைத்துக்கொண்டிருந்தார்கள்.
தீ அகோரமாய்ப் பற்றி எரிந்துகொண்டிருந்தது; அதற்கு உபசரணையாய்க் காற்றும் பிய்த்து வாங்கியது.
ஜனங்கள் குய்யோ முறையோவென்று முதலில் நான்கு பக்கமும் சிதறி ஓடினாலும் இப்பொழுது தீயோடு போராட ஆரம்பித்தார்கள்.
இளவட்டங்கள் அண்டாக்களில் கிணற்றிலிருந்து வாளியால் தண்ணீரை இறைத்து இறைத்து ரொப்பினார்கள். பெண்கள் ‘கைபிடி செங்கலாக’ வரிசையாக நின்றுகொண்டு குடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்கள்.
பகையாளிகள் பேசிக்கொண்டார்கள்.
சிறுவன் ஒருவன் ஒரு பெரியவரை நோக்கி “ஏய் அங்கே ஒரு வெத்துக்குடம் கிடக்கு, அதைக் கொண்டா இங்கே” என்று உரத்த குரலில் உத்தரவு இட்டான். தெய்வ ஆணைக்குப் பணிந்தவர்போல் அந்த முதியவர் அந்தக் குடத்தை எடுக்க ஓடினார்.
பக்கத்துச் சேரியிலிருந்து ஹரிஜனங்கள் உதவிக்கு ஓடி வந்தார்கள். அவர்களோடு அவர்களைச் சேர்ந்த ஒரு பிச்சைக்காரியும் ஓடிவந்தாள். தாங்கள் இதுவரை அந்த வீடுகளுக்குள் எட்டிப் பார்க்காத இடங்களுக் கெல்லாம் போய், அவர்களுக்கு சாமான்கள் – தவசதானியங்கள் – ஒதுங்க வைக்க ஒத்தாசனை செய்தார்கள். குழந்தைகளையும் தள்ளாத கிழவர்களையும் தொட்டுத் தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றினார்கள்.
நாச்சியாரம்மாவும் அவளது புருஷன் பெருமாள் நாயக்கரும் தங்களுடைய வீடு நன்றாகத் தீப்பிடித்துக்கொண்ட பிறகுதான் விழித்தார்கள். ஆளுக்குக் கையில் இரண்டு குழந்தைகளைத்தான் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவர முடிந்தது.
வெளியே நான்கு குழந்தைகளையும் நிறுத்திவிட்டு, பெற்றோர்கள், மற்றக் குழந்தைகளைக் கொண்டுவர உள்ளே போகத் திரும்பும்போது அந்த நாலு குழந்தைகளும் அவர்களோடு உள்ளே வரவந்தார்கள். ஏது சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. எவ்வளவு ஆபத்தா னாலும் பெற்றோர்களோடு இருக்கவே அவர்கள் விரும்பினார்கள். பெற்றோர்களுக்கு இன்னதுதான் செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார்கள்.
தாயை குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்தார் நாயக்கர்.
பீதியோடு அழுதுகொண்டிருந்த இரண்டு குழந்தைகளை வெளியே கொண்டுவந்து விட்டுவிட்டுத் திரும்பவும் உள்ளே ஓடினார். மொத்தம் அவர்களுக்குப் பன்னிரெண்டு குழந்தைகள். இப்பொழுது இன்னும் இரண்டு குழந்தைகளை இடுக்கிக்கொண்டு தள்ளாடி வந்தார் நாயக்கர். வேண்டிய மட்டும் உள்ளே புகை குடித்திருந்திருந்தார். குழந்தைகளை வரிசையாக நிறுத்தி எண்ணினார். மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தார். யார் யார் இருக்கிறார்கள் யார் யார் இல்லை என்பதை அறிந்துகொள்ள தன் மனைவியைப் பார்த்தார். அவள் அழுது கொண்டே கிறீச்சிட்ட குரலில் வீட்டினுள் கையைக் காண்பித்துக் கொண்டே சொன்னது நாயக்கரின் காதில் சரியாக விழவில்லை. திரும்பவும் வீட்டினுள் போக ஆரம்பித்தபோது இரண்டு குழந்தைகள் அவரது கால்களைப் போகாதபடி கொடிப் பின்னலாகக் கட்டிக் கொண்டார்கள். எரிந்துகொண்டிருக்கும் வீட்டினுள் புக தம் தந்தையை அனுமதிக்க அவர்கள் மறுத்தார்கள். “விடு; விடு கையை” என்று கூவி தாய் அந்தக் குழந்தைகளை அடித்துக்கொண்டிருந்தாள்.
அந்தச் சமயத்தில்தான் அந்தப் பிச்சைக்காரி குலவையிட்டுக் கொண்டே அங்கு ஓடிவந்தாள். மார்போடு சேர்த்து சட்டியை அணைத்துக்கொண்டே இவர்கள் இருந்த இடத்துக்கு ஓடி வந்தாள். ஓடிவந்தவள் நின்று நாயக்கரின் கால்களைப் பின்னிக்கொண்டி ருந்த குழந்தைகளைப் பயமுறுத்தி பிடுங்கி எடுத்து அவர் உள்ளே போக உதவி செய்தாள்.
நாயக்கர் இப்பொழுது மூன்று குழந்தைகளுடன் குனிந்து கொண்டே வெளியே வந்தார். இரண்டு குழந்தைகளை கக்கத்தில் இடுக் கிப் பிடித்திருந்தார். ஒன்று அவருடைய பின்இடுப்பைப் கைகளால் சுற்றிக்கொண்டு கால்கள் தரையில் இழுபட்டுக்கொண்டே வந்தது; நாயக்கருக்கு முதுகில் தோல்வெடித்துத் தொங்கியது. குனிந்தவாறே தரையில் இரண்டு முழங்கைகளையும் ஊன்றிப் படுத்துவிட்டார்.
அரங்கு வீட்டுக்குள் இருந்த ஒன்பது வயதுடைய நான்காவது பையன் மாத்திரம் உள்ளே அகப்பட்டுக்கொண்டான். தீ வீட்டை நன்றாகச் சுற்றிக்கொண்டது. முன்னால் இறக்கியிருந்த தாழ்வாரக் கூரை எரிந்துகொண்டே சரிந்து விழுந்து வாசலை அடைத்துவிட்டது.
தாயானவள் இரண்டு கைகளையும் நீட்டி உள்ளே கிடந்த பையனின் பெயரைச் சொல்லி அழைத்தாள். அந்த உச்சரிப்பையும் ஒலியையும் கேட்ட கல்லும் கரையும்.
“ஓ..ராகவையா..”
“அடே. என் அருமை மகனே ராகவையா…”
இப்படிப் பல தடவை உரக்க அழைத்துவிட்டு குலுங்கக் குலுங்க அழுதாள் அந்தத் தாய்.
உள்ளே கிடந்த ராகவய்யாவுக்கு பெரியம்மை கண்டிருக்கிறது. உடம்பில் எல்லா இடங்களிலும் கண்கள் உட்பட ஊசி குத்த இடமில் லாமல் முழு நெல்லிக்காய் அளவு கொப்பளங்கள் போட்டிருந்தது.
நீண்ட தலைவாழைக் குருத்திலையில் நிறைய விளக்கெண்ணெ யைத் தடவி அதில் பிறந்த மேனியாய்ப் படுக்க வைத்திருந்தார்கள்.
பிச்சைக்காரி, தன் சட்டியைக் கீழே போட்டதையும், அந்தப் பெரு நெருப்பில் தன் உயிரைத் திரணமாக நினைத்துப் புகுந்ததையும் யாரும் பார்க்காத அந்தச் சமயத்தில், ஒரு இருபது இளவட்டங்கள் ‘வேல்வேல்’ என்று முழக்கமிட்டுக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில், கூரையை வீட்டினுள்ளேயே தாழ்த்தி நெருப்பை அடக்க உபயோகிக் கும் ஒரு நீளமான கனமான இரும்புத் தொறட்டிக் கம்பி இருந்தது. அவர்களைத் தொடர்ந்து பெண்கள் இடுப்பிலும் தலையிலும் தண்ணீர்க் குடங்களுடன் வந்தார்கள். ஆண்கள் புஜங்களில் தண்ணீர்க் குடங்கள் கொண்டுவந்தார்கள்.
தொறட்டிக் கம்பியை கூரையின் உச்சியில் போட்டு, ஒன்றுபோல் பலங்கொடுத்து கீழ்நோக்கி இழுத்தார்கள். ‘நெடு நெடு’ என்ற சப்தத் துடன் எரியும் கூரை அந்த வீட்டின் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே விழுந்து அடங்கி எரிந்தது. குடங்களை ஏந்திக் கொண்டிருந்தவர்கள் தண்ணீரை மடமடவென்று கொட்டி தீயை சாந்தப்படுத்தி அணைத்தார்கள்.
நாச்சியாரம்மாவை வீட்டினுள் புக யாரும் அனுமதிக்கவில்லை. கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள்.
எரிந்து கொண்டிருந்த பல வீடுகள் அணைக்கப்பட்டுவிட்டதால் இருட்டு மீண்டும் வந்துவிட்டது. மண்ணெண்ணெய் விளக்குளாலும், தீப்பந்தங்களின் வெளிச்சத்தினாலும் ஜனங்கள் தங்கள் தங்கள் இழந்த பொருள்களை அழுதுகொண்டே தேடினார்கள்.
அரங்கு வீட்டின் வாசலுக்கு வெளியே, தலைமயிரும் ஆடையும் இல்லாமல் கரிக்கட்டையாய்க் கருகிப்போன இரண்டு பிரேதங்கள் ஒன்றை ஒன்று ஆவி சேர்த்துக் கட்டிப் பின்னிக்கொண்டு கிடந்தன. அந்தக் காட்சி கண்டவர்களை நெக்குருக வைத்தது.
அம்மை விளையாண்டிருப்பதால் யாரும் அழக்கூடாது என்று சொல்லித் தடுத்து, நாச்சியாரம்மாவையும் குழந்தைகளையும், பெருமாள் நாயக்கரையும் அந்த இடத்திலிருந்து பிரித்து தனியிடத் திற்குக் கொண்டுபோய்விட்டார்கள்.
பிரேதங்களை உடனே தகனம் பண்ண ஏற்பாடு செய்தார்கள். நீளமான ஒரு கம்பில், துணியால் தொட்டில் கட்டி அந்தத் தொட்டிலில் இரண்டு பிரேதங்களையும் போட்டு புஜங்களில் கம்பைத் தூக்கிக் கொண்டு போனார்கள்.
இறந்து கிடந்த பிரேதங்களில் இன்னொன்று யாருடையது என்று வெகுநேரம் கழித்துதான் எல்லோருக்கும் தெரிய வந்தது.
காலையில் நாச்சியாரம்மாள் தன் எரிந்த கட்டை மண்ணான வீட்டிற்குள் நுழையுமுன், தன்னுடைய வீட்டு வாசல்முற்றத்தில், இரண்டாக உடைந்து கிடந்த பிச்சைக்காரியின் அழுக்கு நிறைந்த “சட்டி”யை எவ்வித நோக்கும் இல்லாமல் அழுதுகொண்டே கையில் எடுத்துப் பார்த்தாள்.
– தாமரை, ஆகஸ்ட் 1962.
| கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சாணை பிடிக்கலையோ சாணை
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
September 27, 2026
தனக்கு வந்தால்
ஸ்ரீ.தாமோதரன்
September 27, 2026
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026