கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 62 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கனா கண்டு முழித்தமாதிரி இருந்தது, சின்னாண்டிக்கு… தலைகால் புரியாத சந்தோஷம். சாதிக்கப் போகிற சாதனை. அவனுக்கு அவனே ஆச்சரியமாய்… 

ராத்திரி வரைக்கும் கூட அந்த விவகாரம் கழுத்தாம் பிடியாயிருந்தது. 

மலைப் பிரம்மாண்டமாய் போட்டு அழுத்திய அந்த விவகாரம், இப்படியும் சட்டென்று தீர ஒரு பாதை கிடைக்குமென்று சின்னாண்டி நினைக்கவேயில்லை. ஜோஸ்யக்காரர் முத்துச்சாமி வேளாளர் மண்டையைப் போட்டது, சின்னாண்டிக்குரொம்பத்தோதாய்அமைந்து விட்டது. இவனுக்குள் ஏகக் கொண்டாட்டம். கும்மாளம். 

வேளாளர் மேலுக்கு சுகமில்லாமல் ரொம்ப நாளாய் சட்டடியாய்ப் படுத்து கிடந்தார். ‘இன்றைக்கு, நாளைக்கு’ என்று இழுத்துக் கொண்டு கிடந்த உயிர், விடியற்காலம் நாலு மணிக்கு, கரிச்சான் கீச்சிடுகிற நேரத்தில் போய்ச் சேர்ந்தது. 

கிராமத்தில் இழவு என்றால், யாரும் வேலைக்குப் போகக் கூடாது. போயிருந்தாலும் வந்துவிட வேண்டும். ஊர்க்கட்டு. நாய்க்கர் புஞ்சைக்குப் பதிவாய் வேலைக்குப் போகிற சின்னாண்டி, இன்றைக்குப் போக வேண்டிய தில்லை. உற்றவர்கள்- உரியவர்களுக்கு இழவு சொல்லிப் போக வேண்டிய கடமை, ஊர்ப்பகடைகளுக்கு. சின்னாண்டியும் போயாகணும். 

இதோ… இழவு சொல்ல ஆமர் நாட்டுக்கு நடையாய் நடக்கிறான் சின்னாண்டி. விடிந்த வெளிச்சம், காலடியில். இன்னும் பொழுது புறப்படவில்லை. தோல்செருப்பு, வண்டிப்பாதையில் ‘டடப் டடப்’ என்கிறது. வேலிமர அடர்த்திக்குள் செம்போத்துப் பறவையின் தாகமான நீளக் கூவல் சிறகு விரிய வட்டமடிக்கிற பருந்தின் கூடவே பறந்து விளையாடுகிற கரிச்சான். ஆவாரங் கொழைகளின் கூந்தல்களில் கொத்துக் கொத்தாய்ப் பூத்துச் சிரிக்கிற பூக்களின் மஞ்சள் ஜொலிப்பு. தைமாசம் பின்பனி, எலும்புக் குருத்துகளைக் குத்துகிறது. 

முந்தா நாள், இப்படித்தான், ரெண்டு கிளாஸ் சாரா யத்தை ஊற்றிக்கொண்டு வீடு வந்தான். உண்டது தெரி யாமல் படுத்துறங்கிப் போன சின்னாண்டி, பின்பனியின் ஊசிக்குத்தலில் முழித்துக்கொண்டான். கூதலடித்தது., இழுத்து மூட இடுப்பு வேட்டி தவிர, வேறொன்றுமில்லை.

எழுந்து உட்கார்ந்தான். குடிசைக்குள் இருட்டு. வெளியே பன்றிகளின் உறுமலும் சீறல்களும். கண்ணுக்குப் பழகிப்போன இருட்டுக்குள், நிழல் வடிவமாய் ஒரு குருட்டு வெளிச்சம். கொஞ்சம் தள்ளி பிள்ளைகள் இரண்டும் படுத்திருந்தன. பக்கத்தில் முத்தக்கா. 

பூனையாய் ஊர்ந்து கிட்டத்தில் போய் உட்கார்ந்தான். அவள் விடுகிற மூச்சு சப்தம். மெல்ல அவள் கையைத் தடவினான். வேர்வைப் பிசுபிசுப்பில்லை. அழுக்கின் பிசுக் கும் தெரியவில்லை. குளித்திருக்கிறாள். குளிப்பின் மிருது வும், மென்மையும், மணமும் கையைக் கொஞ்சுகிறது. மனசுக்குள் ஒரு உன்மத்தம்; உள் தீவிரம்; முறுக்கேறுகிற நரம்புகள். 

ரெண்டுபிள்ளைகள் பெற்றவள் மாதிரியாயிருக்கிறாள் முத்தக்கா. போனமாசம் சடங்கான குமரி மாதிரி, செவலக் காட்டு சீனிக்கிழங்கு மாதிரி கிண்ணென்று, திண்ணக்க மாய்… 

அவனுள் ‘திகு, திகு’வென்று பற்றியெரிகிற தீ. கருகக் கருக சுகமாய் இருக்கிற தீ. எரிய எரிய வெறிகொள்கிற தீ. தீண்டத் தீண்ட உள்ளுக்குள் இன்பமாய் மூண்டெழுகிற தீ. 

கையில் ஒரு நடுக்கம். இருப்புக் கொள்ள முடியாமல் தவிக்கிற உணர்வு. சத்தமில்லாமல் அவளை எழுப்பணும். அவளது குளிர்ச்சியான அடிவயிற்றில் உள்ளங்கையால் தடவி… அழுத்தி… 

முத்தக்கா பதறிப் போய், ‘தடாபுடா’வென்று விழுந் தடித்துக் கொண்டு எழுந்தாள். பதைத்துப் போய்க் கேட்டாள். 

“என்ன… விடிஞ்சிருச்சா?”

“இல்லை.” 

“பெறகெதுக்கு உசுப்புனே?” 

“சும்மாதா.” 

“சும்மா… வா?” 

அவளுக்கு இச்சிலாத்தியாக இருந்தது. பொழுது பூராவும் காட்டில் வேர்வை பிழிந்த உடம்பு. வீட்டிலும் வந்து வேலை… வேலை…. வேலைகள் தான். ‘உஸ்ஸ்’ ஸென்று உட்காரப் பொழுதில்லை. உறக்கத்துக்கும், ஓய்வுக்கும் ஏங்கித் தவிக்கிற உடம்பு. 

மருகிப் போய் உட்கார்ந்திருக்கிற புருஷனைப் பார்த்த தும் புரிந்து கொண்டாள், ‘இது சும்மா’ இல்லை என்று. அவளுக்கு எரிச்சலாகயிருந்தது. கொதித்த மனசில் வெடித்த வசவு, நாக்குவரை வந்து மாண்டு மடிந்தது. 

பாவம்… மனுசன். தவித்துக் கிடக்கிற ஆள். தகித்துக் கிடக்கிற ஆம்பளை. நாம் பார்த்து அடித்து விரட்டினால்… எங்க போவான், பாவம்! 

அவிழ்ந்து கிடந்த கூந்தலை ஒற்றைக்கையால் அள்ளிச் சொருகிக் கொண்டு சகிப்புக்குரிய பெருமூச்சோடு இவன் பக்கமாய்த் திரும்பிப் படுத்தாள். 

“ஒன்னோட… பெரிய தொல்லையாப் போச்சு.” 

“என்ன தொல்லை? கட்ன புருசனா, தொல்லை?’ 

“ஆமா… பெரீய்ய புருசன்! சம்பாத்தியக்காரப் புருசன்.” 

“ஏன்? நாயக்கர் புஞ்சையிலே நா பாடுபடலியா?” 

“நல்லா…பட்டே! பாடுபட்டு என்ன செய்ய? சாராயத்தை வாங்கி வாயிலே ஊத்திட்டு, சோத்துக்கு வந்து நிப்பே. நாங்க உடுத்ததுக்கு மாத்துத் துணியில்லாம சீரழியுதோம்.” 

“எனக்கு மட்டும் என்னவாம்? ஒத்தை வேட்டிதானே இருக்கு?” 

“நீ ஆம்பளைய்யா. கோமணத்தைக் கூட கட்டிக்கிட்டு தெருக்காட்டிலே திரியலாம். பொட்டச்சி நா… அப்படித் திரிய முடியுமா?” 

அவள் பேச்சு, நச்சரிப்பாக உறுத்துகிறது. நேரம் கெட்ட நேரத்தில் புலம்புகிற புலப்பமாய்….த் தோன்ற, பொறுமை சிதைந்த மனநிலையில் சின்னாண்டி. 

“இப்ப…என்ன செய்யணும்ங்கிறே?” 

குரலின் சிடுகிடுப்பில் அவன் மனசை வாசித்துக் கொண்ட முத்தக்கா, தன் குரலை மிருதுவாக்கிக் கொண்டாள். 

“சரிய்யா…. நீ ஒண்ணுஞ் செய்யவேண்டாம். போதுமா, ராசா?” 

‘ராசா’வைச் சொன்ன தோரணையில் கிண்டலும், சரசமும் பின்னிக்கிடக்க, ‘ராசா’ சிரித்து விட்டான். 

“நீ… பெரிய கெட்டிக்காரி!” 

“சரி சரி…. அள்ளிவிடாதே!” 

அவளது ஜாக்கெட் ஊக்கைக் கழற்ற கையால் துழாவினான். ஜாக்கெட்டேயில்லை. துணுக்குற்றுப் போனான். 

“என்ன… இது?” 

“எண்ணெய்ப் பிசுக்கும், அழுக்குமா இருந்துச்சு. தொவைச்சுக் காயப் போட்டிருக்கேன்.” 

“வேற சட்டை?” 

“ரெண்டு சட்டை கிழிஞ்சு போச்சு. தைக்கவும் வழி யில்லே. ரொம்ப நைஞ்சி போச்சு. இது ஒண்ணுதா உருப் படியாயிருக்கு.” 

ஜாக்கெட் இல்லாத வெறுமை, அவனுள் அவலத்தீயாய் சுரீரென்று சுட்டது. “பொட்டச்சி நா… அப்படித் திரிய முடியுமா?” நச்சரிப்பாய்த் தோன்றிய அவள் பேச்சு, இப்போது முள்ளாய் வந்து குத்துகிறது. அது சுமந்து நின்ற சோகம், அதற்குரிய வேகக் கூர்மையோடு முழு வீச்சாய்ப் பாய்கிறது. குத்திக் குடைகிறது. 

“சீலையும் அழுக்குத்தான் வீசுது. இதையும் தொவைச்சு போட்டுட்டா…. முண்டமா படுக்க முடியாதே.” 

சின்னாண்டிக்குள் அழுத்தமாய் ஒரு கனம். மூச்சுத் திணறுகிற வாழ்க்கை கனம். தாட்சண்யமின்றி முகத்தில் அறைகிற இல்லாமை கனம். உள்ளுக்குள் ஒரு பிசைவு; நெஞ்சுக் கூட்டுக்குள் நெறிபடுகிற அவஸ்தை. 

அவள் மீது குறுக்காகப் போட்டிருந்த வலது காலை எடுத்துக் கொண்டான். அவன் மனசுக்குள் இப்போது வேறொரு தீ. இயலாமைத் தீ. பொண்டாட்டி மானத்தை மறைக்கக் கூட முடியாத ஆம்பளை, என்ன ஆம்பளை என்கிற ரோஷத் தீ. 

அவன் மவுனமாய் ஒதுங்கிய விதமும், விட்ட பெரு மூச்சின் உள் அடர்த்தியும் அவள் மனசுக்குள் உணர்வு பாஷையாய் உள்ளிறங்கியது. 

“என்னய்யா…” என்று கனிந்து போன ஒரு குழைவோடு கேட்டாள் முத்தக்கா. 

“சீலையும், சட்டையும் எடுக்கணும்னா… நூறு ருவாய் ஆவுமா?” 

“ம்.” 

“நாளைக்கு நாயக்கர் சாமிகிட்டே கேட்டு பாப்பமா?” 

“கேக்க முடியாதேய்யா. போன வாரம் அவருகிட்டே நூறு ரூபா வாங்குனோம்லே? அது, ஒஞ்சம்பளத்துலே தான் கழிஞ்சு வருது.” 

“இன்னும் ஒரு நூறு ரூவா கேப்போம். தர மாட்டாரா?” 

“தர மாட்டாரு. கட்டாயமா தரவே மாட்டாரு.” 

வேறு வழி? உள்ளூர் ஜவுளிக்கடைக்காரர் நம்பி கடன் தர மாட்டார். குடிகாரப் பயல் என்று நினைப்பார். சைக் கிளில் பொட்டலம் கட்டி வருகிற ஜவுளிச் செட்டியாரிடம் கேட்டுப் பார்க்கலாமா? வாரம் பத்து ரூபாய் என்று தவணையில் கட்டி விடுவதாகச் சொல்லிப் பார்க்கலாமா? கொடுப்பாரா? கொடுத்தால்… கடனை அடைத்து விட முடியுமா? வாரா வாரம் பத்து பத்து தர முடியுமா? முடியும். முடியணும். நெதம் வாங்கி ஊற்றுகிற சாராயத்தை நிறுத்திக் கொண்டாவது… 

அவனுள் ஒரு தீவிரம். வைராக்கியம். வாழ்க்கையோடு மல்லுக்கட்டி ஒரு கை பார்த்து விடவேண்டும் என்கிற போர்க் குணம். 

ஆசையும், தாபமுமாய் உசுப்பிய புருஷன், மவுனமாய் ஒதுங்கிக் கிடக்கிறான். உடம்புகளின் 

உடம்புகளின் இடைவெளி அவளைச் சுட்டது; உள் மனசில் அன்பாய்ச் சுட்டது. 

“என்னய்யா…. ‘கம்’முன்னு கெடக்கே?” 

“ஒண்ணுமில்லே. சீலையும் சட்டையும் எடுத்துக் குடுக்காம… இனி ஒன்னைத் தொடமாட்டேன்.” 

அப்படியே நெக்குருகிப் போனாள். மனசின் மூலை முடுக்கெல்லாம் பரவிப் படர்கிற பரவசம். அவள் தேக மெல்லாம்… ஓடிச் சிலிர்க்கிற புல்லரிப்பு. 

மானத்துக்குத் துணியாய் புருசன். இதைவிட ஒரு பெண்ணுக்கு என்ன பெருமை வேண்டும்? 

அவன் சொன்ன வேகத்திலிருந்த அக்கறை, அதற்குள் உறைந்து கிடந்த புருசப் பொறுப்புணர்வு, பரிவுணர்ச்சி… 

இதெல்லாம்… இந்த ஆளிடமா? ரெண்டு கிளாஸ் சாராயத்துக்காக ‘லோ லோ’ என்று நிதம் அலைகிற இந்த ஆளிடமா? குடிபோதையில் வந்து சண்டை போட்டு, அடித்து மிதித்து வீட்டையே ரணகளப்படுத்துகிற இந்த ஆளிடமா…. இந்த ஈரமும், பொறுப்பும்? 

அவளுள் ஏதேதோ… நினைவுகள், உணர்வுகள். சொல்ல முடியாத மனப்பரபரப்பு. புருசனின் உள் முகம் உணர்ந்த ஆனந்த பரவசம்… 

அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. 

அப்படியே புருசன் மேல் பாய்ந்து, ஆவி சேர்ந்து, இறுக்கி அவன் முகமெல்லாம் எச்சிலாக்கி… அவன் முகத்தை அள்ளி மார்புக்குள் புதைத்து… ஆவேசக் கூத்தாடி… 

மறுநாள், ஜவுளிச்செட்டியாரிடம் தலையைச் சொறிந் தான். அவரை ‘தாஜா’ பண்ணி பவ்யமாய்ப் பேசினான். ஒன்றும் கதையாகவில்லை. பொட்டலம் ரொம்ப மெலிந் திருந்தது. செட்டியார் அதைக் காட்டினார். 

“பாத்தீயா, பொட்டணத்தை? உள்ளதைப் பூரா ஊருக் குள்ளே கடனா வெதைச்சுட்டேன். அஞ்சு பைசா கூட வசூலாகலே. சரக்கு எடுக்கப் போக முடியாம் நானே கிடந்து முழிக்கேன்… நீ வேறே கடனும் ஒடனும் கேட்டுக்கிட்டு; போப்பா.” 

-என்று வேதனையும் சீற்றமுமாய்ச் சொல்லிவிட்டு சைக்கிளை உருட்டினார். இவனுக்கு காலடித்தரையே நழுவுகிற மாதிரியிருந்தது. போர்க்குணம், கலகலத்தது. 

சாயங்காலம் நாயக்கர் புஞ்சையில் வேலை முடித்து விட்டு வந்தான். நப்பாசையோடு நாயக்கரிடம் கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தான். 

“அடேய், கூறு கெட்ட பயலே. பருத்திக்கு மருந்தடிக் கணும். ரெண்டு லிட்டர் மருந்து வாங்கணும். ரூவா கண்ணுலே தட்டலே. ஊர்லே இருக்குற ஒண்ணுக்குமத்த பயகிட்டேயெல்லாம் கேட்டுப் பாத்துட்டேன். ஒண்ணும் ஆகலே. நீ வேறே உசுரைப் பிடுங்கிக்கிட்டு. போடா.” 

சின்னாண்டிக்கு நாடியே விழுந்துவிட்டது. எல்லா வழிகளும் அடைபட்டுப் போன மாதிரி இருந்தது. ரெண்டு கிளாஸ் சாராயம் குடிக்கிற வழக்கத்தைக் கூட மறந்து போனான். அவன் மனசுக்குள் திணறல். கழுத்தாம் பிடியா யிருந்தது. தப்பித்து மீள வழியே புலப்படவில்லை. 

ராத்திரி படுத்தால், உறக்கமே வரவில்லை. முத்தக்கா வுக்கு மானத்தை மறைக்கத் துணியில்லை. மாத்துச் சேலையில்லை. 

முத்தக்கா எப்பேர்ப்பட்டவள்! குடித்துவிட்டு வந்து எத்தனை தடவை போட்டு அடித்திருக்கிறான். மானங் கெட்ட பேச்சு பேசியிருக்கிறான். பூமி மாதா மாதிரி பொறுமைக்காரி. 

சீமான் மாளிகையில் குத்துவிளக்காய் இருக்க வேண்டிய குணவதி. சக்கிலிச்சியாய்ப் பிறந்ததால்… இவனிடம் வந்து, இடுப்புத் துணியில்லாமல் சீரழிகிறாள்… 

நேரத்துக்கு ஒரு சேலையும், விதத்திற்கு ஒன்றுமாய் உடுத் திக் கொண்டு அலைகிறதுகள் சிலது. இந்த மகராசிக்கு இந்த நிலை. அடப் பாதரவே! 

இவனும் பாடுபடுகிறான். அவளும் உட்காரப் பொழு தில்லாமல் பாடுபடுகிறாள். அப்பவும், உடுத்துகிற துணிக்கும் வழியில்லை என்கிற வாழ்க்கை நிஜம். அதன் கசப்பு, காரணம் விளங்காத இருட்டுத் திகைப்பு. போர்க் குணம் காணாமல் போய், சோர்வும் அயர்ச்சியுமாய்… 

உறக்கம் கண்ணில் ஒட்டவேயில்லை. நினைக்க நினைக்க மனசை உலுக்கியெடுத்தது. 

அப்பத்தான்… அந்தத் தாக்கல் வந்து சேர்ந்தது. 

“முச்சாமி வேளாளரு மண்டையைப் போட்டுட்டாரு. எளவு சொல்ல, பகடைகளெல்லாம் போகணுமாம். ஊர் நாட்டாமைச்சாமி சொல்லியிருக்காக….” என்று ஒருவன் சத்தம் போட்டுக்கொண்டே ஓடினான். பன்றிகளின் உறுமல்களையும், எருமையின் கதறலையும் மீறி… அது தெளிவாகக் கேட்டது. 

சின்னாண்டிக்கு மூளை சுறுசுறுவென்று வேலை செய்தது. தெனம் ரெண்டு கிளாஸ் சாராயத்துக்காக யார் யாரையோ ‘தாஜா’ பண்ணுகிறவன், ‘ஐயா, சாமி’ என்று கெஞ்சிக் கூத்தாடி, ஆயிரம் பொய் சொல்லிக் கூழைக் கும்பிடு போட்டு தந்திரம் பண்ணுகிறவன். 

அதே புத்தி, இப்பவும் வேலை செய்தது. ஒரு யோசனை பிடிபட்டது. அந்த யோசனை, அவனுக்கே பிரமிப்பான பொருத்தமாகத் தோன்றியது. அவனே அவனுக்கு ஓர் ஆச்சர்யமாய்… 

தலைகால் புரியாத சந்தோஷம். 

சக பகடைகளோடு சின்னாண்டியும் இழவு வீட்டு முன்னால் போய் நின்றான். தோள் துண்டைக் கையில் போட்டு பவ்யமாய் நின்றான். ஒவ்வொரு பகடையையும் ஒவ்வொரு ஊருக்கு நியமித்தார், ஊர் நாட்டாண்மை. 

“ஆமர் நாட்லே ஆறு வீடுகள்லே சொல்லணும். யார் போறீக? ஏண்டா – ஆண்டி,நீ போறீயா?” 

“ஆட்டுஞ் சாமி. ஆனா…” 

“என்னடா, ஆனா, ஆவன்னா?” 

“இல்லே சாமி… ஆறு வீடுங்கிறீக. துட்டி * சொல்லப் போனா…வீட்டுக்கு ஒரு ரூவாய் குடுப்பாக. வருமானம் ரொம்பக் கம்மியாயிருக்கும். டீத் தண்ணிக்குக்கூட துட்டு பத்தாது…” 

நாட்டாண்மை சிரித்தார். 

“ஒனக்குச் சாராயத்துக்கு துட்டு வேணுமோ? எப்பா, இந்த ஆண்டி கையிலே அஞ்சு ரூபாயைப் போடு. சரியா ஆண்டி?” 

“போதுஞ்சாமி. ஆறு வீடுக மட்டுந்தானா?” 

*துட்டி – இழவு அல்லது கெட்டது. துஷ்டம், துஷ்டியாகி துட்டியாகியிருக்கிறது. 

“ஆமா. துட்டு வருமானத்துக்காக நீ பாட்டுக்கு ஊரெல் லாம் சொல்லிராதே. கேவலமாப் போயிரும். ஆறு வீடுக மட்டுந்தான்.” 

“ஆகட்டுஞ்சாமி…” 

குறுஞ்சிரிப்பாய் சிரித்துக் கொண்டான். அவன் யோசனையே அதுதான். மண்டையைப் போட்டிருக்கிற முத்துச்சாமி வேளாளர், கோவில் பூசாரி. பெரிய ஜோஸ்யர். வட்டாரத்தில் அவரைத் தெரியாத ஆளே கிடையாது. அத்தனை பிரபல்யம். 

ஆமர் நாட்டில் போய்… நாடாக்கமார், நாய்க்கமார், தேவமார் எல்லா ஜாதிசனத்திடமும் வீடு தப்பாமல் இழவு சொல்லிவிட வேண்டியதுதான். வீட்டுக்கு ஒரு ரூபாய் கொடுப்பார்கள். விருப்பமில்லாதவர்களும் கூட… தள்ள மாட்டாமல், அரை ரூபாயாச்சும் கொடுத்து விடுவார்கள். 

நடக்கப் போகிற கூத்தை நினைக்க நினைக்க… அவனுள் சிரிப்பாணி பொத்துக் கொண்டு வருகிறது. 

மேல்த்துண்டை முழங்கையில் போட்டுக் கொண்டு ஒரு வீட்டின் முன்னால் போய் பவ்யமாய் நிற்பான். 

“யாரப்பா… நீ?” 

“துட்டி சொல்லி வந்துருக்கேன்… சாமி.” 

“துட்டியா? எங்கயிருந்து?” 

“நம்ம ஜோஸ்யரு முச்சாமி வேளாரு மண்டையைப் போட்டுட்டாரு, சாமி. ஒங்ககிட்டே சொல்லச் சொன்னாக.” 

“எங்கிட்டேயா? எனக்கும் அவருக்கும் தொடர் பில்லையே…” என்று… பாவம் அவர் ‘விலு விலு’ வென்று முழிப்பார். அசட்டுத்தனமாய் மூளையைப் போட்டுக் கசக்குவார். 

“அதென்னமோ சாமி… உங்ககிட்டே சொல்லச் சொன்னாக…” 

“நெசம்மாவா?” 

“ஆமா சாமி…” 

“இது என்ன புது வம்பாயிருக்கு. சரி இந்தா ஒரு ரூவா, போய்த் தொலை.” 

இவன் கூழை தந்திரத்தில் ஊரே ஏமாறும். இவனுக்கு வசூலாகிப்போகும்… நினைத்தால், சிரிப்பாணி வெடித்துக் கொண்டு வருகிறது. 

ஊரெல்லாம் சொல்லி முடித்து, காப்பிக் கடையில் நாலு இட்லியைப் பிய்த்து வாயில் போட்டுவிட்டு… ஊரைக் கடந்து வந்து விட்டான், சின்னாண்டி. இளமதியமாகி விட்டது. 

மடியில் சில்லறையும் நோட்டுமாய்… மனசைப் போல சந்தோஷமாய் சலசலத்தது. மஞ்சணத்தி மரத்து நிழலில் உட்கார்ந்து எண்ணிப் பார்த்தான். நூத்தி முப்பதுக்கு கொஞ்சம் கூடியிருந்தது. 

அவனுக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். சொந்த சாமர்த்தியத்தில் வந்த சம்பாத்தியம். முத்தக்காவுக்கு சேலையும், சட்டையும் எடுத்து விடலாம். பிள்ளை களுக்கும் கூட குறைந்த விலையில் ரெண்டுதுணி எடுத்து விடலாம்… 

இந்தப் பணத்தை… முத்தக்காவிடம் இப்பவே காட்ட ணும். அவன் சாமர்த்தியத்தை நினைத்து எம்புட்டு சந்தோ ஷப்படுவாள். அவள் முகமெல்லாம் ஆவாரம் பூவாய் பூத்து ஜொலிக்கும். மின்னலாய் வெட்டி மின்னுகிற அவளது கண்கள்…. 

இந்தப் பணத்தை… முத்தக்காவிடம் இப்பவே காட்ட ணும். மலர்ந்து சிரிக்கும் அவள் குளிர் முகத்தைப் பார்க் கணும். இப்பவே, இப்பவே… இந்தக் கணமே… 

அவனுள் துடிப்பு… புதுச்சட்டை மாட்டிய ஏழைச் சிறுவனின் ஆர்வப் பரபரப்பு. 

எள் களத்தில் இருந்தாள் முத்தக்கா. உதறிக் காயப் போட்ட எள்ளுச் செண்டு, களம் பூராவும் முதப்பாய் விரிந்து கிடந்தது. கறுப்பு மலையாய்க் குவிந்துகிடந்த எள்ளில் விளக்குமாறாமல் பரசிப் பரசி… தூசி துப்பட்டை களை நீக்கிக் கொண்டிருந்தாள் முத்தக்கா. அவள் உடம் பெல்லாம் கருந்தூசி. தலை, கை, சேலையெல்லாம் படிந்து கிடந்த கருந்தூசி. 

நேராய் அவளிடம் வந்திருந்தான். வெற்றிபெற்ற பெருமிதத் ததும்பலாய்…. வந்து நின்றான், சின்னாண்டி. 

“என்னய்யா… துட்டி சொல்லிவிட்டு வந்துட்டீயா?” 

“ம் .” 

“சாப்ட்டுட்டீயா?” 

“ம்… காப்பிக் கடையிலே.” 

“என்ன ஆளு ஒரு தினுசாயிருக்கே…? மூஞ்சியைப் பாத்தா… ஒரே ஆதாளியாய்த் தெரியுது?” 

“சீலை துணிமணியெல்லாம் எடுத்துரலாம். அதுக்கு ரூவா கெடைச்சிருச்சு.” 

“ஏது?” 

ஊர் பூராவையும் ஏமாற்றிய சாமர்த்தியத்தை… வீடு தவறாமல் கையேந்தி காசு வாங்கிய கெட்டிக்காரத் தனத்தை -எல்லாம் மகிழ்ச்சிப் பரபரப்பாய் விவரித்தான். 

அவள் முகத்தைப் பார்க்கப் பார்க்க இவனுள் எறும்பு ஊர்கிற மாதிரியோர் உணர்வு நெருடல். மனப்பூரிப்பு இருந்த இடத்தில், எறும்பு கடித்த வேதனை, வலி.

கருந்தூசி படிந்த முத்தக்காவின் முகம் மேலும் கறுத்து… வெறுப்பில் கோணலாகி… அடிபட்ட சோகமும், அருவருப் பும் கண்ணில் தெரிய… 

சாக்கடையில் புரண்ட பன்றி, காலில் வந்து உரசி விட்ட மாதிரி, அவள் முகத்தில் ஒருவித அசூயை. 

இவனுக்கு ஏமாற்றமும் பயமுமாய் இருந்தது. 

“என்ன முத்தக்கா…?” 

“போய்யா நீயும், ஓம் பிச்சைக்காரப் புத்தியும், இப்படி யுமா, ஒரு ஆம்பளை ஈனத்தனமா பிச்சையெடுக்குறது? அதுலேயும் களவாணிப் பிச்சை. த்தூ! குடிகாரப் புத்தியை காட்டிட்டீயே…” 

“இதென்ன முத்து… இப்படிச் சொல்றே?” 

“பாடுபட்டுக் கஞ்சி குடிக்கிற நம்ம கிட்டே… ரோஷத் தைத் தவிர வேறு என்னய்யா இருக்கு? அதையும் உதுத் திட்டு என்னத்துக்கு உசுரு வைச்சு இருக்கணும்?” 

“முத்து… சீலை சட்டை எடுக்கணும்னுதா… நா…” 

”யோவ், ரோஷ மானத்துக்குத்தானய்யா சீலையும் துணியும்? ஆம்பளையாயிருந்தா… வேர்வை சிந்திப் பாடு பட்டு என்னோட மானத்துக்கு துணியாயிருக்கணும். அதுதா… மதிப்பு; பெருமை. இப்படி… களவாண்ட பிச்சை யிலே எடுத்து உடுத்துறதும் ஒண்ணுதான், முண்டமாத் திரியறதும் ஒண்ணுதான். இந்த ஈனத்துட்டுலே எனக்குத் துணி எடுக்காதே. ஆமா, சொல்லிட்டேன். எடுத்தே… தெருவுலே வீசியெறிஞ்சுருவேன்… ஆமா…!” –அவளது ரௌத்திரத்திலிருந்த ரோஷம்; பத்ரகாளித் தோற்றம்; ஆளே வேறு ஆளாகியிருந்தாள். 

அவனுக்குள் செருப்படி விழுந்த மாதிரி இருந்தது. முத்தக்காவை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாயிருந்தது. 

அவளது சீற்றத்தில்தான், இவனது சிறுமை இவனுக்கே புரிந்தது. புரியப் புரிய… தானே தனக்கொரு அசிங்கமாய் ஓடைக்காட்டில் மலந்தின்று திரியும் பன்றியாய்- 

இப்போது -மடியில் இருக்கிற சில்லறையும், பணமும் பேய்க்கனமாய்க் கனத்தது. இழிவுச் சுமையாய்… ஈனப் பணமாய்… 

சாராயம் குடிக்க வேண்டியதுதான். வந்தவன் போன வனுக்கெல்லாம் வாங்கி ஊத்தி துட்டை தொலைத்துத் தலைமுழுக வேண்டியதுதான். 

ஈனக்காசு… ஈனக் காரியத்திலேயே கரையட்டும். 

முத்தக்காவின் எள் தூசி படிந்த ஒற்றைச் சேலையைப் பார்த்தான். அவனுள் – ஆழத்தில் தாளமுடியாத ஓர் இழப்புணர்வு. 

அடிபட்ட சிறுபிள்ளை மாதிரி… கண்ணீர் உறுத்திக் கொண்டு வந்தது, சின்னாண்டிக்கு. 

– ஜூலை 1993, புதிய பார்வை.

– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *