குறுங்கதை : நூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 92 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

81 – 90 | 91 – 100

91. ஜீவன் முக்தி

கோடை வெயில். 

கருவேல மரத்தைச் சுற்றிக்கொண்டு பாம்பு கிடந்தது. 

அது சட்டை உரிக்க வேண்டிய காலம். 

உடலிலே பலத்த வேதனை. 

அருகில் தேரைகளும், தவளைகளும் கவலையற்றுத் துள்ளித் திரிந்தன. 

பாம்பிடம் கேட்டன: 

‘பாம்பே! ஏன் இப்படிச் சுருண்டு கிடக்கிறாய்?’

‘நான் இவ்வளவு காலமும் செய்துவந்த பாவத்திற்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்; விரதம் அனுஷ்டிக்கிறேன். உங்களைப் போன்ற ஜீவராசிகளைக்கொன்று வளர்த்த உடலைக் கழற்ற வரம் கேட்கிறேன்’ – என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதன் உடலிலிருந்து செட்டை உரியத் தொடங்கியது. அதன் உடல் பளபளத்து ஒளி வீசத்தொடங்கியது. 

தவளையினங்கள் கரங்கூப்பி அதன் தெய்வீக ஒளியில் பரவசமாகின. தன்னிலை மறந்தன. 

விரதம் முறிந்த பாம்பு ஒவ்வொன்றாக அவற்றை உண்ணத் தொடங்கியது.

92. முதுகு

மரக்கொம்பரிலிருந்த சேவல் கண்விழித்தது. பரபரப் துக்கொண்டது. புடன் எழுந்தது. ‘சட… சட… சட’ வென இறக்கைகளை அடித் அடிவானில் மெல்லிய கீற்றாகத் தெரிந்த ஒளிக்கதிரைக் கண்டு ஆனந்தமாக, உற்சாகமாகக் கூவியது. 

‘கொக்கரக் கோ… கொக்கொக், கொக்கரக்கோ..’

மனிதன் எழும்பவேயில்லை. 

சேவல் சோம்பவில்லை. 

கூரை முகட்டிற்கு தாவிப்பறந்தது. 

தன் சக்தி முழுவதையும் ஒன்றுதிரட்டிக் கூவியது. 

‘கொக்கரக்கோ’ 

மனிதன் எழுந்தான். 

கதிரவனை நோக்கிக் கைதொழுதான். அப்போது-

சேவல் குறுக்கே நிற்பதைப்போல அவனுக்கு உணர்வு தோன்றியது. தான் சற்று விலகி வணங்கலாம் எனத் தோன்ற வில்லை. சீற்றத்துடன் கூறினான். 

‘யாரங்கே… இந்தச் சேவலைப் பிடித்து காலை முறித்து அடுப்பில் வை’. 

93. சோம்பேறி

அவன் ஒரு முழுச்சோம்பேறி. ஒரு துரும்பை எடுத்து அப்பால் போடுவது என்றாலும் பெரிதும் அலுத்துக் கொள்வான். வீட்டில் அடுப்பில் பூனை உறங்கும். அவன் மனைவி தான் அண்டை அயலில் ஏதோ கடன்பட்டு அவன் வயிற்றை யும் சேர்த்துக் கழுவி வந்தாள். 

ஒரு நாள் அவளுக்கு அயலிலிருந்து ஒரு உதவியும் கிடைக்கவில்லை. மத்தியான உணவுக்கு என்ன, செய்வது என்ற பதைப்புடன் வீட்டிற்கு வந்தால், அவன் ஆனந்தமாக அந்தப் பட்டப்பகலிலே பாயில் புரண்டுகொண்டிருந்தான். அவளுக்கோ பற்றிக்கொண்டு வந்தது. 

‘நீங்கள் வெளியே போய் உழைத்து வந்து குடும்பத் தைக் காப்பாற்றப் போகிறீர்களா?… இல்லை பிறந்த வீட்டுக்குப் போகவா? இன்றைக்கு இரண்டிலொன்று தெரியவேண்டும்!’ என்று கத்தினாள். 

அவனுக்குக் கொஞ்சம் பயம் வந்தது. 

‘வயலுக்குப் போய் உழுது என்ன பயன்? விதைநெல் தான் இல்லையே?’ என்றான். 

அவள் அவசரமாக வெளியே சென்று விதை நெல் வாங்கிவந்தாள் 

‘இந்தாருங்கள் விதை நெல். வயலுக்குப் போங்கள்!’

‘எல்லாம் சரி… இதை விதைத்தால் ஏராளமாக விளையுமல்லவா?.’ 

அவள் மகிழ்ச்சியோடு ‘ஆமாம்!’ என்றாள்.

‘அவற்றை வைக்க களஞ்சியம் வேண்டாமா?’
 
‘கட்டாயம் வேண்டும்’ 

‘எங்கள் வீட்டில்தான் களஞ்சியம் இல்லையே. கஷ்டப் பட்டு விளைவித்த நெல்லைப் பாதுகாக்க வழியில்லாமல் ஏன் பயிரிடுவான்’ என்று கூறித் திரும்பிப் படுத்தான். 

94. அழகுக் கலைகள்

காகமும் கிளியும் நட்புக்கொண்டிருந்தன. 

கிளி பறக்குமிடமெல்லாம், அந்த அந்தக் கணங்களை அழகூட்டிக் கொண்டிருந்தது. மரங்களிலிருக்கும் மதுரக்கனி களை கொந்தியும், அவரை இனங்களைக் கொறித்தும் வாழ்ந்து கொண்டிருந்தது. 

காகமோ கிடைத்தவற்றையெல்லாம் உண்டது. வேப்பங் கனிகளைக் கொட்டையோடு புசித்து தான் செல்லுமிடமெல் லாம் நன்றிக் கடனாக அந்தந்த இனங்களைப் பரப்பிக் கொண் டிருந்தது. அதுமட்டுமல்லாமல் 

அழுக்கை, அசுத்தத்தை, ஏன் அழுகி நாறிய பிணங் களைக் கூடப் புசித்தது. 

கிளி இதைக்கண்டு அருவருப்புடன் முகத்தைத் திருப்பியது 

காகம் சொல்லியது: 

‘உலகில் பயனற்றது என்றோ.. அசுத்தமானதென்றோ எதுவுமில்லை. மனிதர்கள் கூட கழிவுகளை பசளையெனக்கொண்டு பயிர் வளர்க்கிறார்கள். நீங்கள் உலகை அழகு படுத்துகிறீர் கள். நாங்கள் உலகைச் சுத்தம் செய்பவர்கள். சுத்தமில் லாத அழகு அசுத்தக் களஞ்சியம்தானே…’ 

கிளி தன் வாழ்நாளில் முதன் முறையாக தன் அழகுப் பயன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. 

95. வழிகாட்டல்

அத்துறவியின் மாதபசைக் கண்டு உலகமே வியந்தது: ஆற்றலைக் கண்டு அதிசயித்தது. அறிவைக் கண்டு பெருமூச்சு விட்டது. 

அவனுக்கும் ஒரு நாள் வாழ்க் கை வெறுத்து விட்டது. மனைவி மக்களை மறந்து அவர்முன் போய் நின்றான்.

‘என்னப்பனே வேண்டும்?’

‘என்னை உங்கள் சீடரில் ஒருவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்’

அவர் அவனைக் கூர்ந்து பார்த்தார். துறவிக்கான மனப் பக்குவம் அவனிடம் இல்லாதது தெரிந்தது. 

‘அப்பனே! உன்னிடம் துறவுக்கான மனப்பக்குவம் இன் னமும் கைகூடவில்லை. போய்விட்டு காலம் கனியும்போது வா. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்!’ என்றார். 

அவனோ பிடிவாதமாக நின்றான். 

குரு ஒருகணம் யோசித்தார். 

‘சரி என்னைத் தொடர்ந்து வா!’ என்று நடக்கத் தொடங்கினார். 

வழியெலாம் இயற்கையின் களிநடம். அவன் ஆர்வத்துட னும் ஆனந்தத்துடனும் நாலாபக்கமும் பார்வையை சுழற்றிக் கொண்டு நடந்தான். 

குருவோ எந்தவித லயிப்புமில்லாமல் நிச்சிந்தையாக நடந்துகொண்டிருந்தார். 

திடீரென ஒரு கதறல் கேட்டது. குரு திரும்பிப் பார்த்தார்.  

அவன் ஒரு பள்ளத்தில் இடறி விழுந்திருந்தான். 

‘புலனடக்கம் இல்லாத… புகழ் விரும்பி நீ!… பாதை பார்த்து நடக்கத் தெரியாத உனக்கு ஒரு துறவா?… நீ மற்றவருக்கு எந்த வழியைக் காட்டுவாய்?’ 

குரு நடக்கத் தொடங்கினார். சிஷ்யனின் அலறல் பின் தொடர்ந்தது. 

96. வெட்கம்

தங்கள் தங்கள் பொம்மைகளை வைத்துக்கொண்டு விளை யாடிக்கொண்டிருந்தனர் சிறுமிகள். திடீரென்று இருவரிட மும் ஒரு போட்டி மனப்பான்மை தோன்றிவிட்டது. 

‘என்ர பொம்மைதான் வடிவு’ 

‘இல்லை. என்ர பொம்மை தான்…’ 

‘ஐய… உன்ர பொம்மைக்குக் கையில்லை…’ 

‘உன்ர பொம்மைக்குத்தான் காலில்லை…’ 

‘உன்ர பொம்மை ஒரே கறுப்பு… ஊத்தை… உவ்வே…’ 

‘ஐய. என்ர பொம்மை கண்ணை மூடித் திறக்கும்…’

‘ஆனா சட்டையே போடேல்லியே… வெட்கம்…’ என்று “ஆனா… ஒரு குழந்தை சொல்ல, மற்றது அழத் தொடங்கியது.

அழுகுரல் கேட்டு இருவரின் தாய்மாரும் ஓடிவந்தனர்.

‘ஏய்… ரெண்டும் இங்க வாங்க! சனியன்களே குளிச்ச கையோட சட்டைகூடப் போடாம்… அம்மணமா… விளையாட தெருவுக்கு வந்து சண்டையா போடுகிறீர்கள்?’

-இரண்டும் குடுகுடுவென்று தாய்மாரிடம் ஓடின. 

97. கோலத்தில் புகுவோர்

ஐம்பது கோடி ரூபாய் பெறுமதியான பாரிய தொழிற் சாலைக்கு அதிபர் அவர். பணமூட்டையில் தான் அவர் படுக்கை. 

நாட்டில் புதிய ஆட்சி மலர்ந்தது. 

தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டு வந்தன.

முதலாளி முன்னரேயே விழித்துக்கொண்டார். 

ஒருநாள் அவரது ஆலையும் தேசிய உடமையாக்கப்பட்ட போது சிரித்தபடியே வெளியேறினார். 

அரசாங்கம் பேரேட்டைப் புரட்டியபோது. சமீபத்தில் அந்த ஆலை அறுபது கோடி ரூபாவுக்கு மேல் வங்கியில் கடன் பட்டி ருப்பது தெரிந்தது. 

98. பிறவிப்பயன்

பள்ளமான காட்டுப் பகுதியைச் சார்ந்து அணையொன்று வெகு வேகமாக எழுந்தது. 

அங்கே நீர் வெகு வேகமாக ‘குபுகுபு’வென நிறைய, வேரால் நீருண்ட மரங்கள் திகைத்துச் சாய்ந்தன. சமாதியுமாயின. ஒன்று எப்படியோ தப்பி நீருக்கு மேலாக நம் பிக்கை விழிகளுடன் வானைத் துளாவியபடி… 

…நீரலைகள் எற்றி எறிந்து, அ த னை த் தம்வயப்படுத்த முயன்றுகொண்டிருந்தன. 

சில நாட்களில்… 

மரத்தின் இலைகள் உதிர்ந்தன. மரம் மரம் மொட்டையாகி, காய்ந்த கரங்களை வானை நோக்கி மேலுயர்த்தி… 

‘இயற்கையே! எனக்கேன் இந்தக் கோலம்? என்னில் பலன் கண்போர் பலர். இப்போது வறியவனாகி விட்டேனே? கொடுத்தே பழகிய நான் பயனற்று வாழ்வதைவிட என்னை வீழ்த்தி விடு…’ என இறைஞ்சிற்று. 

அப்போது- 

மரங்கொத்திப் பறவையொன்று தனது வண்ணச் சிறகு களை அடித்துப் பறந்துவந்து கொத்தலாயிற்று. 

99. வயிறு

தெளிந்த நீரோடை. 

நீரென்ன… ஸ்படிகமா? இல்லையில்லை… சரஸ்… உருக்கிய பாதரசம்… 

பாதரசத்தில் மீன்குஞ்சுகள் நீந்துவதுண்டோ? 

நீந்துகின்றனவே? 

இதுவென்ன அதிசயம்… அற்புதம்… 

கவிஞன் வியந்து போகிறான். 

ஒருவன் வருகிறான். 

நீரோடையைப் பலமாக காலாலும், கைகளாலும் குழப் பிச் சேறாக்கி… ‘அழகெங்கே… மீனெங்கே… ஸ்படிக மெளன மெங்கே? பிணவாடை எங்கிருந்து எழுகிறது?’ 

அழகின் சிதைவு! போர்க்களத்து இரத்தச் சேறு. 

‘ஓ!… அரக்கனே நிறுத்து!… நிறுத்து! அழகை. ஆழ்ந்த மௌனத்தைக் கலைத்து விட்டாயே?’ 

அவன் சிரித்தான். 

‘அழகின் குளிர்மையில் அமைதி காணும் கவிஞனே… என் வயிற்றின் நெருப்பை அணைக்க இதைத் .தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்றவாறு மீன்களைப் பிடித்துத் தனது பறியில் போட்டான். 

100. கோதுமையும், திராட்சையும்

1

பொன்மயிலின் தங்க நிறத் தோகையாய்ச் சரிந்து கிடந்தன கோதுமைக் கதிர்கள்! மஞ்சள் மஞ்சள் வெயில் சிந்திய தங்கப் பொடிகள், ரோமாபுரிப் பெண்களின் பொன்னிறக் கேசங்களின் பளபளப்பையூட்டின. 

விவசாயிகள் ஆனந்தமாக அறுவடை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்துகொண்டிருந்தனர். 

கோதுமை வயல்களுக்கப்பால் திராட்சைத் தோட்டங்கள். கறுப்புத் திராட்சையும் பச்சை முந்திரியுமாகப் பின்னிப் பிணைந்து, கலந்து நிற்பேதமற்ற, இனபேதமற்ற சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. 

தோட்டக்காரர்கள் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தனர். 

வயல்களினூடும், தோட்டங்களினூடும் மனிதனின் காலடி பதித்த பாதைகள் மானிட ஒற்றுமையின், தொழிலாள ஒற்றுமையின் சின்னங்களாகத் தெரிந்தன. 

கோதுமை உணவாக, திராட்சைக் கனிகள் – கனியாக, ரசமாக மாறின. மண்ணகத்தில் விண்ணகத்தைக் காண்கின்ற போது, 

2 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சாத்தானுக்குப் பொறுக்க முடியவில்லை. 

‘வேதம் ஓதப்’ புறப்பட்டது. 

தோட்டக்காரர்களிடம் சென்றது. 

‘பைத்தியக் காரர்களே… திராட்சையை திராட்சையாக உண்பதைவிட, ரசமாக அருந்துவதைவிட, மதுவாக அருந்திப் பாருங்கள். பரலோகம் தெரியும்…’ 

‘மதுவா…? அப்படி என்றால்…?’ 

‘திராட்சை ரசத்தைப் புளிக்க விடுக. அது மதுவாக மாறும். பின் அருந்து. புதுமது புத்துணர்ச்சி அளிக்கும். புது வழிகாட்டும். உங்கள் ஊன விழியாலேயே ஆண்டவனைக் காணமுடியும். ஏன் நீங்களே ஆண்டவனாக முடியும்…’ 

சாத்தானின் வார்த்தைகளிலேயே மது இருந்ததுபோலும்.

தோட்டக்காரர்கள் மதுப் போதையில் ஆண்டவனாக முயன்று, மிருகமாகி எங்கும் ஒரே சண்டையும் சச்சரவும் தான்… 

மது… மங்கை… மாமிசம்… 

அமைதி குலைய, 

சாத்தானின் சிரிப்பு எங்கும் நிறைந்தது. 

தோட்டக்காரர்களிடம் இப்போது கையில் தொழிலுமில்லை. பண்டமாற்றுச் செய்ய திராட்சைகளுமில்லை. எனவே, விவசாயிகளைக் கொள்ளையிடலாயினர். 

மதுபோதையினர் ஈவு இரக்கமில்லாமல், விவசாயிகளைத் தாக்கவே, விவசாயிகளின் பொருட்கள் அடிக்கடி கொள்ளை போயின. 

சாத்தான் அவர்களை நோக்கிப் போனான். 

‘பார்த்தீர்களா… வீரம் அவர்களுக்கு அடிமையாகிவிட் டது. ஏன் தெரியுமா? எல்லாம் இந்த மதுவால்தான். அவர் களை வெல்ல வேண்டுமென்றால் உங்களுக்கும் வீரம் வேண்டு மென்றால்…’ —சாத்தான் முடிக்கவில்லை. 

‘எங்களுக்கும் மது வேண்டும். ஆனால் எங்களிடம் திராட் சைத் தோட்டங்களில்லையே!’ என விவசாயிகள் கூக்குரலிட்டனர். 

‘அதனாலென்ன?… கோதுமையிலே மது வடிக்கலாம். நான் சொல்லித்தருகிறேன்’ என்றான் சாத்தான். 

அன்றிலிருந்து பயிர்கள் மடியலாயின. போரினால் உழைப் பாளிகளும் மடியலாயினர். நிலத்தில் வெறுமை பூத்தது.

சாத்தானும் சிரிக்கத்தொடங்கினான். 

பரமண்டலத்திலிருந்து பிதா எல்லாவற்றையும் பார்த் துக்கொண்டிருந்தவர், சொன்னார். 

‘ஆதாமையும் ஏவாளையும் அனுப்பி, விலக்கப்பட்ட கனியை உண்ணாதீர்கள் என்றேன். உண்டார்கள் இதனால் உண்ணும் கனிகளையும், தானியங்களையும் உருவாக்கினேன். அவர்கள் விரும்பி உண்ணட்டுமென்று. ஆனால் அவர்கள்… 

உண்பதற்குப் . பதிலாக, அவற்றைக் குடிக்கப் பழகிக் கொண்டன்ரே… இனியும் குமரனை இங்கு வைத்திருக்கவியலாது… குமரா வா!… உனக்கு மண்ணுலகத்தில் நிறைய வேலை இருக்கிறது.’

என்று தேவகுமாரனை பலத்த குரலில் அழைக்கலானார். 

– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *