குறுங்கதை : நூறு
கதையாசிரியர்: செம்பியன் செல்வன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 93
(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
81. நித்திய ‘கலை’ஞர்கள்

கலைஞர்கள் ஒன்றுகூடி திரைப்படம் பிடித்தனர்.
மிகப் பிரமாதமாக வெற்றி பெற்றது.
வெற்றிற்கு யார் காரணகர்த்தா என்ற விசாரணை தொடங்கியது. ஒவ்வொருவரும் தங்களையே முதன்மைப் படுத்தினர். பிளவு தோன்றிப் பிரிந்தனர்.
சில காலங்களின்பின் மனந்தேறி ஒன்று கூடினர். மீண்டும் ஒரு திரைப்படம் எடுத்தனர். அது மகத்தான தோல்வி அடைந்தது.
தோல்விக்கு ஒவ்வொருவரும் மற்றவரைச் சுட்டிக்காட்டத் தொடங்கினர். விளைவு?…
கலைந்தனர் அக்கலைஞர்கள்.
82. சாதூர்யம்
தன் நண்பனைப் பற்றிய அவதூறான் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து இவனால் தன்னை அடக்கமுடியவில்லை. விசாரித்தறியும் ஆத்திரத்துடன் அவனை அணுகினான்.
நண்பன் எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டான்.
பிறகு அமைதியாகச் சொன்னான்
“நீ கேள்விப்பட்டவற்றை நீ நம்புவதானால் நமது நட்பு நீடிக்க வழியில்லை நம்பாவிட்டால் இந்த விசாரணையே தேவையில்லை”.
இவன் திரும்பிநடந்தான்.
83. வாழ்வு
“இப்படியும் ஒரு தந்தை பரசமா ? மாமனார் மரியாதையா?” ஊரே கூடி வியந்து நின்றது.
காலையில் கிழவன் படுக்கையிலிருக்க, அவனை அலாக்காகத் தூக்கி… காலைக்கடனாற்ற வைத்து… வெந்நீரில் உடல் கழுவி… பவுடர் போட்டு… இதமான பதத்தில் ‘ஹார்லிக்ஸ்’ ஊட்டி மீண்டும் கொண்டுவந்து காற்றோட்டமாகக் கட்டிலை இழுத்துவிட்டு… அதில் சா ய் மானமாக இருக்கவைத்து… பலகாரம் ஊட்டி… காலை மட்டுமல்லாது இரவு வேளைவரை கிழவனுக்கு ராஜ உபசாரம்தான்.
இத்தனைக்கும் அவர்களுக்கு ஏழெட்டுக் குழந்தைகள். தாத்தாவுக்கு உணவு வழங்கும்போது, குழந்தைகள் எனக்கு எனக்கு… என்று ஆரவாரிக்கும் பொழுது ‘அதுகளை புறங்கையால் எற்றி விடுவார்கள்.
கிழவன் எழுபது வயதுவரை வாழ்ந்திருந்தான். ஒரு நாள் கிழவன் கண்ணை மூடினான். செய்தியால் ஊரே அதிர்ந்தது.
கிழவனின் இழப்பை அத் தம்பதிகள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்? தேறுதல் சொல்ல ஊரே விரைந்தது. உள்ளே அழுகுரல் கேட்டது.
‘ஐயோ’… அப்பா… மோசம் பண்ணிப்போட்டியே. நானும் என்ர ஏழெட்டுப் பிள்ளைகளும் உன்ர பென்சன் பணத்தில்தானே வாழ்க்கை நடத்தினோம். இப்போது எங்களை அநாதையாக்கிப் போட்டியளே!’
84. சமத்துவம்
சாதாரண மக்களின் சைக்கிளின் விலை திடீரென உயர்ந்தது.
மக்கள் போக்குவரத்துக்காகத் தவித்தனர்.
நிதி மந்திரியிடம் ஓடினர். அவர் விளக்கினார்.
‘பணக்காரரின் கார்… ஸ்கூட்டர் எல்லாம் என்ன விலை தெரியுமே? அவர்களுக்குச் சமமாக நீங்களும் இருக்க வேண்டாமா? அதுதான் சைக்கிள் விலையும் உயர்ந்து இருக்கிறது எங்கள் ஆட்சி எப்போதுமே ஏழைகளின் பக்கம்தான்’
85. தேர்
ஊர் கூடித் தேர் இழுத்தது;
மணித் தேர் மங்கலகரமாக நகர்ந்தது.
வடமிழுத்தோர் தம்மால்தான் தேர் நகருகிறது என்று இறுமாந்தார்கள். ஆரவாரம் எழுந்தது.
‘படார்!’ அச்சாணி முறிய, தேர்க்கால் இடம் வழுவ வடமிழுத்தோர் வழுவி ஓடினர்.
தேர் மூளியாய் நிற்க-
அச்சராணி முறிந்ததற்கு யார் யார் பொறுப்பு என தம்முள் அடித்துக்கொள்ளத் தொடங்கினர்
86. மண் பொம்மை
செல்வந்தர் வீட்டுக் குழந்தை அருந்தவப் புதல்வன். குழந்தையின் விளையாட்டுக்காக வகை வகையான பொம்மைகள். விலையுயர்ந்த இறக்குமதிப் பொருட்கள்… துப்பாக்கி… ஜீப்… ரயில்… விமானம்… கரடி, குரங்கு… ஆண் பெண் குழந்தைப் குழந்தைப் பொம்மைகள்… என வீடு முழுவதும் வாரியிறைத்துக் கொண்டிருந்தனர்.
திடீரெனக் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
ஓடிச் சென்று பார்த்தார்கள். அங்கே-
அவர்கள் வேலைக்காரனின் மகன், கையில் வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் உடைந்த, மூளியான பொம்மைக் காக குழந்தை அடம்பிடித்து அழுதுகொண்டிருந்தான்.
87. முதலும் முடிவும்
எறும்பு மரக் கொம்பரில் ஊர்ந்து கொண்டிருந்தது. நீண்ட கொம்பராதலால் முடிவேயற்ற பயணம்போல் தோற் றம் கொண்டது. எறும்புக்கும் சவாலாகப் பட்டது.
பயணத்தின் முடிவைக் கண்டுவிட முனைந்தது. வேகம் வேகமாக ஊரத் தொடங்கிய அது, நுனிக் கொம்பை அடைந்து, அப்பாலுள்ள வெளியைக் கண்டு, ‘முடிவைக் கண்டுவிட்டேன்’ என்று உரத்துக் கத்தியது.
அப்போது அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்த இன்னோர் எறும்பு அவசரம் அவசரமாகக் கூறியது:
‘அது முடிவின் முடிவல்ல. நாம் பயணிக்க முடியாத பரப்பின் ஆரம்பம்’
88. தேட்டம்
ஒருவன் தனது வரவுக்கேற்ப, செலவுசெய்து அமைதி யாக, ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவனைச் சந்தித்த ஒருவன் “பைத்தியக் காரா! இப்படி வாழலாமா? உனது பிற்காலத்தை நினைக்காமல் இப்படியா செலவு செய்வது? சேமிக்கக் கற்றுக்கொள்’
அவனுக்கும் அது சரியாகப்பட்டது.
முதலில் சிறு பொறியாக ஆரம்பித்த சேமிப்பு ஆசை, பெருநெருப்பாக பற்றி எரியலாயிற்று.
ஒவ்வொரு நாளும் சேமிப்பைக் கணக்கிடும்பொழுது நாளை இதனைவிடக் கூடச் சேர்க்க வேண்டுமென அவாக் கொள்ள லானான். பணம் சேமிக்கப் பல புதியபுதிய வழிகளைக் கை யாளலானான்.
முதலில் தனது தேனீர், வெற்றிலை, சிகரட் செலவுகளைக் குறைக்கத் தொடங்கியவன் படிப்படியாக உணவு வேளைகளை இரண்டாக்கி, ஒன்றாக்கினான். பின்னர் மனைவி, மக்களுடைய உணவிலும் கைவைக்கத் தொடங்கத் தொடங்க…
செல்வம் மலையாகக் குவிய,
அவனும், அவன் குடும்பமும் ஏற்ற உணவின்றி, பிற் காலத்தை நிகழ்காலத்துக்குத் துரிதப்படுத்தி.
ஒருநாள் அவன் இறந்து போனான்.
‘அவனை எரிப்பதர்? புதைப்பதா? எதில் செலவு குறைவு?’ என அவன் மனைவி கவலைப்படத் தொடங்கினாள்.
89. தர்மம்
வழிதவறிய பயணிகளுக்கும், வழியற்ற வழிப்போக்கர் களுக்குமென அந்தப் பொட்டல் வெளிக் காட்டில் அடையாத படலைக் குடிசையொன்றை அமைத்து, தர்மம் செய்துகொண் டிருந்தார்.
ஒருநாள் நள்ளிரவு. யாரோ ஒரு அந்நியன், இளைப்பாற இடமும், உண்ண உணவும் கேட்டான்.
அவர் அவனை அன்புடன் உபசரித்து, உணவும் கொடுத்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்.
விடிந்தது.
அந்நியனைக் காணவில்லை.
அத்துடன் அவரது கைவிளக்கையும் காணவில்லை.
அன்றிலிருந்து படலையில் கனத்த பூட்டு ஒன்று தொங்கலாயிற்று.
90. போதம்
யுகயுகாந்தரமாக புவி சூரியனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு தணியாத ஆசை.
‘தன்னை உற்பவித்த தாயை என்றாவது ஒரு நாள் ஒரே யொரு கணமேனும் தழுவிக்கொள்ள வேண்டும்’.
ஒரு நாள் புவி கதிரவனை மெல்ல நெருங்கியது.
அக்னிப் பூவாக சூரியன்.
புவி பதறிக்கொண்டே விலகி ஓடியவாறு கேட்டது;
‘உன்னிலிருந்து பிறந்தவள் தானே நான். என்னை இப்படித் தகிக்கலாமா? உனக்குப் பாசமென்பதே கிடையாதா?’
கதிரவன் சிரிப்பாய்க் கூறினான்:
‘என்னால் நீயாக இருக்கும்போது நீ நானாக இருந்தேன். எப்போது என்னிலிருந்து நீ நீயாகப் பிரிந்தாயோ, புதிய உறவுகளைப் பெற்றுக்கொண்டாயோ அன்றிலிருந்து நீ – வேறு நான் வேறு. பழைய உறவுகளை பெயரில் தரிசிக்கலாம்.’
– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.
![]() |
இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடென்ன செய்தது நமக்கு?
வளர்கவி
September 15, 2026
நாய் வால்
நீர்வை பொன்னையன்
September 15, 2026
அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்
இளையவேணி கிருஷ்ணா
September 15, 2026
