கந்தர் புராணம்
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 352
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்கள் கண்கண்ட கலியுக கசவாரமாகிய கந்தரம்மானின் புராணத்தை எழுதுவதற்கு, ஒறிஜினல் கந்தபுராணத்தின் கதாநாயகனான கந்தசாமியாரும், ஆசிரியரான கச்சியப்பரும் எனக்குத் துணை நிற்பார்களாக!
கசவாரக் கந்தரின் அறுபதாவது பிறந்த தினம் அண்மையில் வர இருக்கிறது. அன்னாரின் நினைவுநாளை ஒட்டி அவரது வாழ்க்கைக் குறிப்புகள் சிலவற்றை உங்களுக்குத் தருவதில் பெருமைப்படுகிறேன். கந்தரின் வாழ்வை ஊன்றிக் கவனித்து அவரைப் பின்பற்றுவதன் மூலம் நீங்களும் பணக்காரர் ஆகலாம் என்ற எனது பரந்த நோக்கமே என்னை இக்கட்டுரை வரையும்படி வற்புறுத்தியது.
கந்தரை யாழ்ப்பாணத்தில் கசவாரக் கந்தரென் றும் கொழும்பில் ‘ஓசி’க் கந்தரென்றும் அழைப் பார்கள். இவர் தனது கசவாரத்தனத்தாலும், ஓசித் தனத்தாலும் ஏராளமான பணத்தைச் சேர்த்து வைத் திருக்கிறார்; இன்னும் சேர்த்தும் வருகிறார். மனைவியோ மக்களோ இல்லாத இவருக்கு ஏன் இத்தனை பணம் என்று தயவு செய்து என்னை நீங்கள் கேட்டுவிடா தீர்கள். அந்தச் சங்கதி உங்களைப் போலவே அடியே னுக்கும் தெரியாது.
கந்தர் எப்பொழுதும் தலையைக் குனிந்தபடியே- அதாவது நிலமடந்தையைப் பார்த்தபடியே செல்வார். இதனால் இவர் இதுவரை சுமார் ஐந்நூறு ரூபா பெறு மதியான பொருட்களும் நூறு ரூபாயும் ‘போட்டுக் கிடந்து’ எடுத்திருக்கிறார்.
இவருக்குக் கொழும்பில் வீட்டுப் பிரச்சினையோ வாடகைப் பிரச்சினையோ கிடையாது. கொழும்பில் வேலை கிடைத்ததும் இவரது தகப்பனாருக்கு அறிந்த கொழும்பு நண்பர் ஒருவரின் வீட்டில் போய்த் தொத் திக்கொண்டார். வீட்டுக்காரரும் ‘ஓர் அறை காலியாக இருக்கிறதே! ஆளும் அறிந்தவராக இருக்கிறாரே’ என்று இவருக்கு ‘ஓசி’ யில் அறை கொடுக்கச் சம்மதித்து விட்டார். இந்த அறையில் இவரால் ஓர் ஆண்டு காலந்தான் இருக்க முடிந்தது. அதன்பிறகு கந்தரின் நடை உடை போக்கு யாவற்றிலும் அசல் கசவாரத் தனத்தைக் கண்ட வீட்டுக்காரர், ஆளைத் தங்களுடன் வைத்துக்கொண்டால் தங்கள் மதிப்புக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமென்று கருதி ஆளை அப்புறப்படுத்தி விட்டார். இதற்குப் பிறகும் கந்தர் முன்போலவே தகப்பனது துணையுடன் முயன்று இன்னொரு வீட்டில் ஒட்டிக்கொண்டார். இப்பொழுது கந்தர் வசித்து வரு வது பதினோராவது வீடாகும்.
கந்தர் வேலைக்குப் போவதற்கு காலை ஐந்து மணிக்கே ஆயத்தமாகிவிடுவார். வேலையால் வீடு திரும்புவதற்கும் அநேகமாக இரவு எட்டு மணியாகி விடும். ஏன் தெரியுமா? இவர் ‘பஸ்’ சுக்குப் பணம் கொடுப்பதில்லை. பஸ்சில் ஏறி கொண்டக்டர் “டிக்கட் கொடுக்கும்வரை இருந்துவிட்டு கொடுக்கும்போது அய்யய்யோ நான் மாறி ஏறிவிட்டேனே!’ என்றோ காசை விட்டுவிட்டு வந்துவிட்டேனே!’ என்றோ சொல்லி இறங்கி விடுவார். இதற்கிடையில் இவர் தனது பிரயாண தூரத்தில் ஒரு சிறு பகுதியையாவது கடந்துவிட்டிருப்பார். இப்படியே இவர் ஆபீசுக்குப் போகும்போதும் வரும்போதும் பணம் கொடாது ஏராளமான ‘பஸ் ‘ சில் பிரயாணம் செய்வார். சில வேளைகளில் கார் வைத்திருக்கும் இவரது சக ஊழியர் களோ அல்லது இவர்மீது இரக்கம் கொண்டவர்களோ இவரைத் தங்கள் காரில் ஏற்றிப் பறிப்பதுண்டு. (பறிப்பதென்று சொல்வதால் இவர் ஒரு பாரமான பெரிய உருவமுடையவரெனத் தயவுசெய்து எண்ணவேண்டாம்.)
கந்தரிடம் தபால் போடும் குணமோ, தபாலைப் பதிவுசெய்யும் பழக்கமோ தந்தி அடிக்கும் பண்போ கிடையாது. எந்தப் பெரிய பிரபுக்கென்றாலும் ‘போஸ் காட்’தான் போடுவார். அந்தப் போஸ் காட்டை வாசிப்பதற்கு ஒரு பூதக்கண்ணாடி கட்டாயம் தேவை. அவ்வளவு சிறிய-நெருக்கமான எழுத்துக்கள்.
நமது கந்தருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய உணவுக்கு எந்தவிதச் செலவும் கிடையாது. இவர் அன்றைய தினம் பணக்காரர்போல் உடையணிந்து கொண்டு ஒரு கையிலே கூடையுடனும் மறு கையிலே. பெரிய ‘பர்சு ‘டனும் சந்தைக்குப் போய் ஒன்றும் வாங் காது போனது போலவே திரும்புவார். ஆனால் திரும் பும்போது இவரின் பசி பறந்திருக்கும்; வயிறு நிறைந் திருக்கும். எப்படியென்றா கேட்கிறீர்கள்? முதலில் சந்தையிலுள்ள முந்திரிப்பழம் விற்கும் இடத்திலே போய் விலை கேட்பார். விலையைச் சொன்னதும் “உந்தப் புளிக்கு இந்த விலையோ?” என்பார். உடனே கடைக்காரர் “தின்றுபார்த்து வாங்கும் ” என்று இரண்டு பழங்களைக் கொடுப்பார். இவர் என்ன செய்வார் தெரியுமா? பழத்தைத் தின்றுவிட்டு “பச்சைப் புளி” என்றவாறு அங்கிருந்து அகன்று விடுவார். இப்படியே சந்தையின் ஒவ்வொரு பகுதிக் கும் சென்று மாம்பழத்துண்டு, பலாப்பழச்சுளை, தோடம்பழச்சுளை, அன்னாசிப்பழத் துண்டு முதலிய வைகளைச் ‘சாம்பிள்’ பார்ப்பதுபோல் ஒரு கை பார்த்து விட்டு வருவார். இதற்கும் பிறகுமா அவருக் குப் பசி இருக்கும்?
ஓட்டல் உணவு சாப்பிட்டுவந்த கந்தரை ஒருமுறை சிலர் அணுகி “ஓட்டல் உணவு சாப் பிடுகிறீர்களே! இதனால் ஏராளமான பணத்தை இழப்பதுடன் வைத்தியருக்கும் பணம் கொடுக்க வேண்டி வருமே! ஒரு திருமணத்தைச் செய்தால் இந்தச் செலவுகள் ஒன்றும் வராதே!” என்றார்கள்.
உடனே கந்தர் “என்னய்யா அலம்புகிறீர்கள்? என்னைத் திருமணம் செய்யப் போகிறவளுக்கு வயிறு இல்லையா? அப்படியே இருந்தாலும் அவள் வயிற்றோடு மட்டும் நின்றுவிடுவாளா? சட்டைகளுக்கு, சேலைக களுக்கு, நகைகளுக்கு, அதுகளுக்கு இதுகளுக்கென்று பணம் கேட்கமாட்டாளா? அவள் குழந்தைகளை வேறு பெற்றுவிட்டால் அதுகளுக்கு என்ன செய்வது? நான் ஓட்டலுக்குக் கொடுப்பதிலும், வைத்தியருக்குக் கொடுக்கப்போவதிலும் எத்தனைமடங்கு பணம் இவற் றிற்கெல்லாம் வேண்டும் தெரியுமா?” என்று மடக்கி விட்டார். இதன் பிறகுமா வந்தவர்கள் நிற்பார்கள்.? ஓடிவிட்டார்கள், ஓடி!
இப்படியாக கந்தரின் வாழ்க்கைக் குறிப் புக்களைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். எழுதினால் விளக்கிலுள்ள எண்ணெய் வற்றிவிடும், பேனாவில்மை குறையும்,பேப்பர்கள் பல வேண்டும். கந்தரின் வாழ்க்கையைப் பின்பற்ற முயலும் எமக்கு இவைக ளெல்லாம் மாறுபட்டதல்லவா?
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
