கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 136 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்

(1955ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் அங்கம் | இரண்டாவது அங்கம் | மூன்றாவது அங்கம்

முதற் காட்சி

இடம். புஷ்பபுரியில் அரண்மனையிலோர் அறை. சௌரியகுமாரன் யோசனை செய்துகொண்டு நிற்கின்றான். 

சௌ. இறந்துபோன ஜெயபாலன் தன்னுடைய குருவென்று நமக்குக் கூறியிருக்கின்ற ஜீவசித்தியே இவனென்று நினைக்கின்றேன். பலாயனன் தன வீட்டில் வந்திருப்பவனுடைய அடையாளங்களைக் கூறினதற்கும் ஜெய பாலன் கூறியதற்கும் சிறிதேனும் பேதமில்லை. பெயரும் ஒத்திருக்கின்றது. ஜீவசித்தி என்பது சாதாரணமான பெயர் அன்று. ஏன் இன்னும் ஜீவசித்தி வரவில்லை ? உடனே அனுப்புகிறேன் என்று கூறிச் சென்றானே பலாயனன். இந்த ஜீவசித்தியிடமிருந்து எப்படியாவது நமக்கு ஜெயபாலன் கொடுத்திருக்கின்ற விஷத்திற்கு மாற்றறிய வேண்டும். தன்னுடைய குருவுக்கன்றி வேறெ வருக்கும் அம்மாற்று தெரியாதென்று அவன் நமக்குக் கூறினானல்லவா? எப்படியும் இவனிடமிருந்து இதை அறியவேண்டும். ஆயினும் இந்த ஜீவசித்தி செவிடும் ஊமையுமாமே! இதை நமக்கு ஜெயபாலன் கூறவில்லையே! பெரிதன்று. எனது கையிலகப்பட்டபின் விட்டேனா இவனை! உண்மையை அறிந்து கொண்டு ஜெயபாலனுக்குச் செய்தவண்ணம் இவனுக்கும் செய்யவேண்டும் -உம்! இப்பொழுது தான் நமக்கு குருபார்வை திரும்பு கிறாற் போலிருக்கின்றது! பிதாவோ இறந்து விட்டார்! -அப்பா! என்னுடைய செய்கைகளை நான் நினைத்தால் எனக்கே பயமாயிருக்கிறது! நினையாதிருத்தலே நலம்!- சங்கனும் விடங்கனும் இன்னும் திரும்பி வரவில்லை. ஆயினும் ஏமாங்கதனைக் கொன்றே அவர்கள் திரும்பி வருவார்கள்; சந்தேகமில்லை. ஏன் ஜீவசித்தி இன்னும் வரவில்லை! நேரமாய் விட்டதே– 

ஏமாங்கதன் ஒரு வயதுமுதிர்ந்த வயித்தியனைப்போல் வேடம் பூண்டுவருகிறான். 

வாரும் சுவாமி. தங்களுக்காக இத்தனை காலம் காத்துக் கொண்டிருந்தேன். தாம் இப்பட்டணத்திற்கு வந்தது என்னுடைய பாக்கியமே. உட்காரவேண்டும் (எமாங்க தன் உட்காருகிறான்) தங்களுக்கு ஜெயபாலன் என்றொருவன் இருந்தானே தெரியுமோ?-அடடே! இவன் ஊமையும் செவிடுமென்பதை மறந்தேன் !– எழுதியே கேட்கவேண்டும்-(ஓர் ஓலையில் எழுதி அதனை ஏமாங்கதனி டம் வணக்கத்துடன் கொடுத்து அவன் முன் முழந்தாளிட்டு நிற்க, ஏமாங்கதன் திக்பிரமையைக் கொண்டவனாய் ஓலையை உற்றுப்பார்த்த வண்ணமிருக்கின்றான் ) சுவாமி ! எப்படியா என்னு வது தாம் இதைக் கிருபை செய்யவேண்டும். டைய ராஜ்யத்தில் பாதி தருகின்றேன்-என்ன சும்மா இருக்கின்றார்? நான் எழுதியது அர்த்தமாகவில்லையோ? (எழுந்திருக்கிறான். எழுந்தவுடன் எதிரில் கதவின் பக்கத்தில் ஜெயபாலன் உருவைக்கண்டு திடுக்கிட்டு நின்று விடுகிறான். ஜெயபாலன் திடீரென்று மறைகிறான். உடனே சௌரிய குமாரன் சேவகர்களே! சேவகர்களே! என்று கூவிக் கொண்டு அறையை விட்டு வெளியே ஓடுகிறான். காவல் மணிக ளெல்லாம் அரண்மனை யெங்கு மடிக்கப்படுகின்றன. இச் சமயத்தில் ஏமாங்கதன் சௌரிய குமாரனைத் தன்முன் காணானாய் மெல்ல எழுந்து ராஜ முத்திரை யிருக்குமிடம் சென்று, தான் கொணர்ந்த இரண்டு ஓலைகளிலும் அதைப் பதிப்பித்துக் கொண்டு அறையை விட்டுச் செல்கிறான் ஒருபுறமாக.) 

சுசங்கதை மற்றொருபுறமாக வருகிறாள். 

சு. இதென்ன! மகாராஜா இறந்துகிடக்குஞ் சமயத்தில் அரண்மனை யெல்லாம் இவ்வாறு பெருங்கூச்சலாயிருக் கின்றது! சௌரிய குமாரனைக் கேட்கலாமென்று வந் தால் அவனையும் காணோம். வந்தவுடன் கேட்போம். ஐயோ! பிதா திடீரென்று இறந்தார். இதுவும் நமது அண்ணன் செயலோ ? சீ! அப்படி எண்ணவும் என் மனம் எழவில்லை. அப்படியிருக்காதென்று கோருகின் றேன் – ஆயினும்!-இப்பொழுது அவனுடன் ஏமாங்கதனை இனி வரவழைத்துப் பட்டங்கட்ட சொல்லிப் பார்க்கின்றேன், அதற்கு என்ன சொல்லுகின்றானோ பார்ப்போம், அதில் எல்லாம் வெளியாகின்றது, என்ன சௌரியகுமாரனை இன்னும் காணோம்?-ஆ! மனிதர் வாழ்வு எவ்வளவு அற்பமானது!! நேற்றிருந்தார் பிதா இன்றைக்கெங்கே? நான் அவருக்காக இப்பொழுது அழுகின்றேன். அவர் எத்தனை பெயரிறந்ததற்காக அழுதாரோ? எத்தனை பெயர் எனக்காக அழப் போகின்றார்களோ ஒருநாள் ? இப்படிச்சென்று கொண்டிருக்கின்றது உலகம்! 

சௌரியகுமாரன் விரைந்தோடி வருகிறான். 

சௌரி. எங்கே ஜீவசித்தி? (சுசங்கதையை ராஜமுத்திரையிருக்கு மிடம் கண்டு) சுசங்கதா! நீ என்ன செய்கின்றாய் இங்கே?

சு. அப்பா! பிதாதான் இறந்தாரே! உன்னிடம் ஒரு விஷ யத்தைப் பற்றிப் பேசவந்தேன்- 

சௌரி. இப்பொழுது உன்னிடம் பேசிக் கொண்டிருக்க எனக்குக் காலமில்லை, உனக்கிங்கென்ன வேலை போ ! போ வெளியே! (சுசங்கதை வெறுத்து வெளியே போகிறாள்) கண்டது ஜெயபாலனோ அல்லது அவனுடைய பிசாசோ! அல்லது என்மனப் பிரமையோ! அதே உடையிலி ருந்ததே – இந்த ஜீவசித்தியையும் காணோம்!- காஞ் சேயா! 

காஞ்சேயன் வருகிறான். 

செளரி. அடே ! கண்டுபிடித்தீர்களா? 

கா. இன்னும் தேடுகின்றார்கள் எங்கும் காணோம்.

சௌரி. அதிருக்கட்டும். ஒரு வயித்தியன் வந்திருந்தானே அவனை யாராவது பார்த்தீர்களா? பச்சை சால்வைதலையில் கட்டிக்கொண்டு வேறொருசால்வையை அங்கவஸ்திரமாக உடுத்திக்கொண்டிருந்தான்? 

கா. ஓ! அவரா ! நான் தேடிக்கொண்டு வரும்பொழுது தாங்கள் சொன்னவண்ணம் ஒருவர் மகாராஜாவின் பிரேதம் வைத்திருக்கும் அறையில் பிரேதத்தின் கால்மாட்டில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார், யாரோ மகாராணியின் பந்து என்றுஎண்ணி நான் சும்மாபோய்விட்டேன்!

சௌரி. ஓகோ! ஏதோ சமாசாரம் தெரியவில்லை! காஞ்சேயா ! நான் குறித்த மனிதன் அரண்மனையிலாவதிருக்க வேண்டும், சுற்றுபுறத்திலாவது இருக்கவேண்டும். வெகு பட்ட தூரம் போயிருக்கமாட்டான் இதற்குள்ளாக பட்டணத்துக் கோபுரக் கதவுகளையெல்லாம் மூடிவிடும்படி நான் கட்டளையிட்டதாகச் சொல். நம்முடைய சேவகர் களை யெல்லாம் அழைத்து இவ்விருவரையும் எங்கிருந்த போதிலும் தேடிப்பிடித்து வரச்சொல். கண்டு பிடிப்ப வனுக்கு ஆயிரம் பொன் தருவதாகப் பிரசித்தி செய். சீக்கிரம் போ,நானும் வருகிறேன்- இதென்னவிபரீதம்! 

(இருவரும் விரைந்து போகிறார்கள்) 

காட்சி முடிகிறது. 

இரண்டாங் காட்சி 

இடம்.- புஷ்பபுரியில் ஒரு கடை வீதி. 

நாயனார் வயத்தான். முதலிய கள்வர்களெல்லாம், ஒவ்வொருவனும் ஒவ்வொருவிதம் வேஷம் தரித்து ஆங்காங்கு வீதியில் வியாபாரம் செய்து வருகிறார்கள். 

ஜெயபாலனும் ஏமாங்கதனும் தங்கள் மாறுவேடத்துடன் விரைந்து வருகிறார்கள். 

ஜெ. இப்பொழுது அதெல்லாம் பேசக்காலமில்லை-சீக்கிரம் வாரும். நம்மைச் சேவகர்கள் பின் தொடர்ந்து வருகின் றார்கள்: நான் அப்பொழுதே சொன்னேனே கேட்டீரா! இதை முழுவதும் புசித்துவிடும். அப்பொழுது தான்உமக்கு நன்றாய்ப் பேச வரும் – (சன்யாசி வேடம் தரித்த வயத்தானை நோக்கி) சுவாமி! சன்யாச சிரோமணியே இப்படி வாரும் சற்றே! தாமும் வாரும். 

(இருவரையுமழைத்துக் கொண்டு ஒரு சத்திரத்திற்குள் நுழைகின்றான்) 

நா. (குடுகுடுப்பு வேடந்தரித்து) ஜெயம் வருது! ஒன்றும் பயப் பட வேண்டாம்! பயப்பட வேண்டாம்! (சத்திரத்தினின்றும் ஏமாங்கதன் சன்யாசி உடையிலும், வயத்தான் வயித்திய ஜெயபாலனுடன் வருகிறார்கள். 

ஜெ.வயித்தியரே! நான் சொன்னது  ஞாபகமிருக்கட்டும், மறக்க வேண்டாம். (உரத்த சப்தமாய்) சந்தை மெல்லக்
கலையும் சமயமாய் விட்டாற்போலிருக்கின்றதே! வந்த படி! (ஏமாங்கதனை அழைத்துக்கொண்டு விரைந்து செல்கிறான், கள்வரெல்லோரும் ஒவ்வொருவனாய் மறைகின்றார்கள்.) 

காஞ்சேயனும் ஒரு சேவகனும் ஒடிவருகிறார்கள். 

சே. அடே ! என்னடா காணோமே! 

கா. இந்தப் பக்கம் தான் வந்தாற் போலிருக்கிறது. 

சே. அதோ! ஒரு சுவாமியார் உட்கார்ந்திருக்கின்றார் அவரிடம் போய்க் கேட்போம், (குருவேடந் தரித்துட்கார்ந்திருக்கும் கோஸ்கியிடம் சென்று) 

கா. சாமி! இங்கே ஒரு வயித்தியர் வந்தாரே பார்த்தீர்களா?

கோ.சிவம்! 

கா. பார்த்தீர்களா என்று கேட்கின்றேன். 

கோ. சிவம்! 

சே. அடே என்ன இழவு சிவம்! பார்த்தீரா இல்லையா ஐயா? 

கோ. சிவம்! 

சே. அடே காது கேட்கவில்லையா என்ன? 

கோ.சிவம்! 

கா. இந்த சிவத்தைக் கேட்கின்றதில் பிரயோஜனமில்லை – அட்டே இதோ இருக்கிறாண்டா! (இருவரும் ஓடிப்போய். வயத்தானைப் பிடித்துக் கொள்ளுகின்றனர் ) 

வ. என்னப்பா! உங்களுக்கென்னா ஓடம்பு? 

சே.உடம்பா? உடம்பு ஊறுது. அடே! காஞ்சேயா! தாரையை ஊது, பிடித்து விட்டோமென்று, ஆயிரம் பொன்கிடைத்தது போ! (காஞ்சேயன் தாரையைஊதுகிறான்)

வ. என்னா! என்னா! அப்பா! ஏன் என்னெ கட்டிகினு போரைங்கோ? 

கா. சொல்லுகிறேன் வா! ஆயிரம் பொன்னுக்கு. 

வ. எனக்கா ஆயிரம் பொன்னு கொடுக்கப்போரைங்க? அதுக்கு கட்டிகினு போவானே? சும்மா அழைச்சா வர மாட்டேனா? 

சே. வா பேசாதே! (வயத்தானை இழுத்துக்கொண்டு போகிறார்கள்)

காட்சி முடிகிறது. 

மூன்றாம் காட்சி. 

இடம். காட்டில் கள்வருடைய கோட்டை ஏமாங்கதன் யோசனை யுடன் வருகிறான்.

ஏ. அப்படி உறுதியாக எண்ணுவதற்கும் காரணமில்லை. இவன்தான் ஜெயபாலனா யிருப்பானாயின் இங்கெப்படி இக்கள்வர்களுக்கெல்லாம் தலைவனான்? ஆயினும் இவ் விஷம் முதலிய விஷயங்களையெல்லாம் பற்றி இவன் அறிந்திருப்பதை யோசிக்குமிடத்து இவன் ஜெயபாலனா யிருக்கலாமென்று நினைக்கவேண்டியதா யிருக்கின்றது. ஒருவேளை நான் நேராகக் கேட்டால்? 

ஜெயபாலன் வருகிறான். 

ஜெ.நான் கொடுத்த மருந்தைச்சாப்பிட்டீரா இன்றுகாலை? இப்பொழுது எப்படி யிருக்கின்றது? 

ஏ. சாப்பிட்டேன். இப்பொழுதெல்லாம் முன் போலவே யிருக்கின்றது. அப்பா! உன்திறமையை நான் என் னென்று சொல்வேன்! 

ஜெ. சரி! ஆனால் இப்பொழுது நான் உம்மை அன்றிரவு பலாயனனுடைய வீட்டருகில் விட்டுச்சென்றது முதல் நடந்த விர்த்தாந்தத்தைக் கூறும். உமக்கு உடம்பு முதலியனவெல்லாம் முன்போல வாகிறவரையில் தொந்தரவு கொடுக்கலாகா தென்றிருந்தேன், 

ஏ. சொல்லுகின்றேன். நீ போனதும் நான் உள்ளே செல்ல, என் எதிரில் பலாயனன் வரவே உன்நிருபத்தை அவனிடம் கொடுத்தேன்; அதைப் பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியம் கொண்டவனாய் சற்றுநேரம் அந்நிருபத்தையும் என்னையும் மாறி மாறி உற்றுப் பார்த்துவிட்டு, என்னைக் கையினால் சைகைசெய்து உட்காரச் செய்து உள்ளே சென்று உடுத்திக்கொண்டு சரேலென்று வெளியிற் சென்றான், ஒரு நாழிகை திரும்பிவந்து அரண்மனையில் சௌரியகுமாரன் என்னைக்காண விருப்ப முற்றிருக்கின் தான் என்னை உடனே அங்கு அழைத்துக் கொண்டு போகின்றதாகவும் எனக்கு ஓர் ஓலையில் எழுதித் தெரிவித்தான். உடனே எனக்கு உண்டான ஆச்சரியம் கொஞ்சமன்று. பேசவேண்டு மென்று யெடுத்தால் பேச வரவில்லை. என்ன செய்வது? ஆயினும் உன் வார்த்தையில் உறுதியான நம்பிக்கை வைத்து அவனுடன் சென்றேன். இரவு பன்னிரண்டு மணியிருக் கும்: நள்ளிருள், என்னை அரண்மனைக்குள் அழைத்துச் அறைக்கு வெளியே விட்டு கையால் ஜாடைசெய்து போய்விட்டான். நான் கொஞ்சநேரம் யோசித்து தர்மமே ஜெயமென்று உள்ளே சென்றேன். அங்கே சௌரியகுமாரனைக் கண் டதும் கோபத்தினாலும் வருத்தத்தினாலும் என் மெய் யெல்லாம் விதிர் விதிர்த்தது. அவன் என்னை மிகவும் உபசரணையுடன் உட்காரச்செய்து வாயால் என்னவோ கேட்டான்; எனக்கொன்றும் கேட்காமற் போகவே நான் மௌனமாயிருந்தேன். பிறகு ஓர் ஓலையில் எழுதி என் கையிற் கொடுத்தான். அப்பா! அதில் எழுதியிருந் ததை நான் என்னென்று சொல்வேன்! நீ அவனைப் பற்றி கூறிய தவ்வளவும் உணமைதான் சந்தேகமில்லை, நான் பிரமாணம் செய்வேன்! அதைப் பார்த்தவுடன் என் அருகில் முழந்தாளிட்டுக்கொண் டிருக்கும்படியான அவனை ஒரே குத்தாய் குத்திவிடலாமா என் கட்டாரியால் என்று அடங்காக் கோபம் பிறந்தது; ஆயினும் நான் என்ன செய்வேன்! என் உடைவாள் முதலிய ஆயுதங்களை யெல்லாம் நீ வாங்கிக் கொண்டாயே. 

ஜெ. என்ன எழுதியிருந்தது அவ்வோலையில்? எங்கே அது ? 

ஏ. அதை நான் பிறகு கோபத்தில்கிழித்து விட்டேன். அதில் ஜயபாலனாகிய தன்பழய சிநேகிதன் உண்டவர்களுக்கு வலது பக்கத்தில் ஒருவித வலியைக்கொடுத்து சீக்கிரத் தில் கொல்லும்படியான ஒரு விஷத்தை தனக்குக் கொடுத் திருப்பதாயும் அந்த மர்மத்தைத்தான் இதுவரையில் ஒரு வருக்கும் ஆணைப்படி வெளியிடவில்லை யென்றும் அந்த ஜெயபாலன் தன் குருவாகிய ஜீவசித்தி ஒருவனுக்குத் தான் அவ்விஷத்தின் மாற்று தெரியுமென்று தனக்குக் கூறியதாகவும், நான் இப்பொழுது அவனுக்குக் கிடைத் தது தன் பூஜாபலனென்றும், எப்படியாவது அம்மருந் தைத் தனக்குத் தெரிவித்தால் தன் ராஜ்யத்தில் பாதி தருவதாயும் எழுதியிருந்தது !-என்ன ஆச்சரியம் என் னைத்தான் அந்த குருவென்று நினைத்துக்கொண்டாற் போலிருக்கின்றது! 

ஜெ. உம் – அப்புறம்.

ஏ. நான் அதைப் பார்த்தவுடன் சௌரியகுமாரன் எனக்குத் தீங்கு செய்தவன் என்று உறுதியாய்ப்புலப் இவ்வள வவ்வள படவே எனக்குண்டான கோபம் வன்று! கோபத்தினால் சற்று நேரம் அசைவற்றுப் போயினேன். இதை அவன் அறிந்து கொண்டானோ என்னவோ திடீரென்று எழுந்திருந்து அறையை வீட்டு ஓடிப்போய் விட்டான். பிறகு அங்கு சற்றுநேரத்துக்குள் அவன் வராமற் போகவே நீ சொன்ன சங்கதிஞாபகம் வந்து இதுதான் சமயமென்று,நான் நீ கொடுத்த ஓலை களில் அங்கிருந்த ராஜ முத்திரையைப் பதித்துக்கொண்டு வெளியிற்சென்றேன். 

ஜெ. எங்கே அந்த ஓலைகள்? கொடுமிப்படி. 

ஏ. இதோ. (ஓலைகளைக் கொடுக்கிறான்.) பிறகு பிதாவின் பிரேதம் வைத்திருக்கிறதென்று நீ குறித்த அறைக்குட் சென்றறேன் – அப்பா! அங்கு அவரை நான் கண்ட பொழுது -(முகத்தைக் கையால் மூடிக்கொண்டு தேம்பி அழுகிறான்.) 

ஜெ. ஐயனே ! இது பிரபஞ்ச வழக்கம். பிறந்த தெல்லாம் இறக்க வேண்டுமென்பதை மறந்தீரா? நாமும் ஒரு நாள் இறக்க வேண்டியதுதானே! தைரியத்தைக் கை விடாதீர்.

ஏ. அப்பா! என்னிடம் ஒரு வார்த்தையும் கூறாது சென்றாரே! நான் அபராதி என்று எண்ணியன்றோ இறந்தார். உண்மையையறிந்து என்மீது கொண்ட கோபம் தணிந்தபின் இறந்திருக்கலாகாதா ! நான் அவ்வளவு பாக்கியம் பண்ணாமற்போனேனே ! 

ஜெ. ஐயனே ! வருந்தாதீர். இனி என்ன செய்வது! நடந்து விட்டது! மேல் நடக்கவேண்டிய காரியத்தைப்பற்றி யோசிப்போம். அப்புறம். 

ஏ. பிறகு நான் அவர் பாதத்தை என் இருகண்ணிலும் ஒத் திக் கொண்டு சற்றுநேரம் விசனப்பட்டு விட்டு, கால மாய் விட்ட தென்று பயந்து வெளியில்வந்து நீ சொன்ன படி அரண்மனையின் மேலைக்கோபுரவாயிலில் வந்து உன்னைக்கண்டேன். அவ்வளவே நடந்த சமாசாரம்; அப்பா, நான் என்மனைவி மக்களை ஒரு முறை பார்த்து விட்டு வரவேண்டு மென்றிருந்தேன்: நீ ஒரே பிடியாய் என்னை இழுத்துக்கொண்டு வந்து விட்டாயே! 

ஜெ. ஐயனே! அதைப்பற்றித் தாம் வருந்த வேண்டாம். சீக்கிரம் அவர்களை நீர் பார்ப்பீர் – நாம் இனி ஒருக்ஷண மும் வீணிற் கழிக்கலாகாது. அரசே நம்முடைய கள்வ ரெல்லாம் எங்கிருக்கின்றார்கள்? அழையும் அவர்களை இங்கு, நான் இதோ வந்துவிட்டேன் (கோட்டைக்குள் செல்கிறான்.) 

ஏமாங்கதன் தாரையெடுத்தூத கள்வரெல்லோரும் வந்து சேர்கிறார்கள்.

நா. சாமி! ஏன் எங்களை அழைத்தீர்கள்? 

ஏ. சற்றுப்பொறுங்கள் சொல்லுகிறேன்; உங்கள் பழைய சுவாமி வந்திருக்கின்றார்; அவர் உங்களையெல்லாம் வர வழைக்கச் சொன்னார். 

நா.சித்தம் (ஒருபுறமாகப் போய்) அடே! கோஸ்கி அப்புறம் வயத்தானைப்பற்றி ஏதாவது தெரியுமா? 

கோ. அவன் எப்படியும் தப்பிச்சுக்குவா ஐயா! அவனா ஆப்பிட்டுக்கிறவே! – அடே! இதோவர்ரானே! அடே! வயத்தான் என்ன மாடா தப்பிச்சிகினே ! 

வயத்தான் வருகிறான். கள்வரெல்லோரும் சந்தோஷமாய்க் கூச்சலிடுகின்றார்கள். 

வ. அடெபோடா! தப்பிச்சிகினு வந்தூட்டேன் சரிதான்; ஆனா அந்தலட்டு உட்டூட்டு வந்தூட்டேண்டா. 

நா. அதிருக்கட்டும் எப்படி தப்பித்துக்கொண்டு வந்தாய்? என்ன சமாசாரம்? 

ஜெயபாலன் வருகிறான். 

ஜெ. வயத்தான்! எப்படித் தப்பித்துக்கொண்டு வந்தாய்?  நடந்த சமாசாரம் என்ன? 

வ. நான் தப்பிச்சிக்க மாட்டேனா சாமி! என்னெபுடுச்சிம் போயி சின்ன ராஜாகிட்ட வுட்டாங்கோ, அவர் என்னை பாத்துட்டு, அடே வேறொருத்தனே புடிச்சிகினு வந் தைங்கடா, இண்ணு அவங்களையே கோவிச்சிகினாரு ; அப்புறம் எங்கிட்ட அந்த உடுப்பெல்லாம் எப்படி வந் துது இண்ணு கேட்டாரு; நான் யாரோ ஒருத்தன் வந்து என் கிழிஞ்ச உடுப்பெ கொடுத்தூட்டு இதை வாங்கி கிறையா இண்ணா, நான் வாங்கிகினே இண்ணு சொல்லி அசல் பயித்தியக்கார னெப்போல வேஷம்போட்டேன். அப்புறம் ராஜா எனக்கு நிஜமாலும்பயித்தியமா இல் லையா இண்ணு பாக்கிரத்துக்காக நிஜத்தை சொல்லும் படி என்னை அடிக்கச் சொன்னாரு-நானா சொல்ரவேன்! நீங்க உதைக்கிரதை உதைங்க, நிஜம் வருதா பாருங்க இண்ணு நினைச்சிகினு, அப்பவும் பயித்தியக்காரனைப் போலவே பாசாங்கு போட்டு பாடிகினு இருந்தேன்; அப்புறம் ராஜா இவனை இந்த அறையிலேயே போட்டு அடைச்சி வையுங்கோ நாளைக்கி விசாரணை பண்ணலா மிண்ணு சொல்லி, என்னை அரண்மனையிலே ஒரு அறை யிலே அடைச்சூடச் சொன்னார்; அது மடப்பள்ளிக்கி பக்கத்திலே யிருந்தது. பாதிராத்திரியிலே மொள்ள அந்த கதவெ பேத்து குனு மடப்பள்ளிக்குப் போயி அங்கே இருந்ததையெல்லாம் பரபர இண்ணு திண் ணூட்டு, அங்கே ஒரு சேவகன் படுத்துக்கினு தூங்கிகினு இருந்தான். அவனைக் கொண்ணூட்டு, அவன் உடுப்பை நான் போட்டுகினு நேராகோபுரவாசல் வழியாவே எல்லாருக்குமுன்னே வந்தூட்டேன் சாமி. 

ஜெ. வயத்தான்! உன் புத்திக்கு மெச்சினே! உனக்கென்ன வேண்டும் கேள், 

வ. ஒண்ணும் வேணாம் சாமி! அங்கே அவசரத்திலே லட்டெ மறந்து வைச்சூட்டு வந்தேன். அதுக்குபதிலாக நம்ப குகைக்கு குள்ள மான்கறிவாசனே வருது, அதிலே நான் திணரமட்டும் கொடுக்கச் சொல்லுங்க. 

ஜெ. சீ! இவ்வளவுதானோ! அப்படியே தின்னுபோ! 

வ. பலே! பலே! நல்லசாமி! நல்லசாமி! (குகையின் பக்கமாய்ப் போகிறான்.) 

ஜெ. அரசே ! உமது கோரிக்கை நிறைவேறும் காலம் வந்து விட்டது இனி வியசனப்படாதீர் நீர்! நாயனார்,நீ நமது கோட்டையிலுள்ள கள்வர்களை யெல்லாம் குடியானவர் களைப்போல் மாறு வேடம் பூணச்செய்து அழைத்துக் கொண்டு பெருமலைத் துர்க்கத்தினிடம் செல்லவேண்டும் பிறகு நீமாத்திரம் தனியாக சௌரியகுமாரனுடையசேவகர்களுள் ஒருவனைப்போல் வேடம் பூண்டு இந்நிருபத்தை பெருமலைக்கோட்டையிலுள்ள புஷ்ப புரத்துச் சேனாதி பதி சித்ராயுதனிடம் கொடுத்துவிட்டு, ஒன்றும் பேசாது திரும்பிவந்து நம்மவரைச் சேர்ந்திரு பழயபடி பிறகு சீக்கிரம் காலசேனன் முதலியோருக்கும் சித்ராயுதனுக் கும் பெரும்போர் விளையும். அப்பொழுது சமயம் பார்த்து, நமது கள்வரைக் கொண்டு சித்ராயுதனுடைய பாசறையைக் கொள்ளையடித்துத் திரும்பி குமாரபுரத் தருகில் சீக்கிரம் வந்து சேர். இதற்கு என்ன வேண் டுமோ அதன்படியெல்லாம் செய்வாய் என்று உறுதி யாய் நம்பி உன்னிடம் நான் இவ்வேலையை ஒப்பி வைத் திருக்கின்றேன். ஜாக்கிரதை உடனே புறப்படு, கால தாமதஞ் செய்யாதே. 

நா. ஐயனே, சீக்கிரத்தில் தாம் சொன்னபடி நான் செய்த தாகவாவது கேட்பீர், அல்லது நானும் நமது கள்வரும் இறந்ததாகவாவது கேட்பீர். (போகிறான்). 

 ஜெ.கோஸ்கி, நீ இந்நிருபத்தை ஏமாங்கதராஜனிடமிருந்து வந்ததாகக்கூறி கல்யாணபுரத்து அரசராகிய சதானந்த ராஜனிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் திரும்பு ; சீக்கிரம் இந்நிருபம் அவரிடம் சேரவேண்டும். அரசே, உம் முடைய மோதிரத்தை இப்படித்தாரும், யாராவது உன்னை அரண்மனையினுள்ளே விடமாட்டேனென்றால் இம்மோதிரத்தைக்காட்டி ஏமாங்கதராஜனிடமிருந்து வந்தேன் என்றுகூறு விட்டுவிடுவார்கள். இந் நிருபம் எப்படியும் நாளை சாயங்காலத்திற்கு முன் சதானந்த ராஜன் கையிற் சேரவேண்டும் தெரியுமா? 

கோ. அப்படியே சாமி, இதோ புறப்பட்டேன். (போகிறான்).

ஏ. அப்பா! எனக்கு நீ செய்வதெல்லாம் ஆச்சரியமாயிருக் கின்றது இதென்ன சமாசாரம்? என்ன நிருபங்களிவை?

ஜெ. சொல்லுகின்றேன்கேளும். நாயனார் எடுத்துச் சென்ற நிருபம் சௌரியகுமாரனுடைய சேனாதிபகு யாகிய சித்ராயுதன் கையிற்பட்டவுடன் அவர்களுக்தி இப்பொழுது உதவியாயிருக்கும் காலசேனன் முதலிய சிற்றரசர்களுடனேயே அவன் போர்ன; பொழுது சித்ராயுதனுடைய பாசறை து. கள்வர் களால் கொள்ளை யடிக்கப்படும். இதற்குள் கோஸ்கி எடுத்துச்சென்ற நிருபத்தின்படி உமது மாமா அவர் கள் உமக்குத் துணையாகத் தமது சைனியத்தை அழைத் துக் கொண்டு குமாரபுரத்துக்கு வந்து சேர்வார் நா நம்முடைய மற்றக்கள்வர்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு அவரைச் சந்திப்போமாகில், பிறகு நடக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி அப்புறம் யோசிப்போம்; இப்பொழுது நாம் கால தாமதஞ் செய்யலாகாது. புறப் படுவோம் சீக்கிரம் வாருங்கள். 

ஏ. அப்பா,என் மாமாவை உனக்கெப்படித் தெரியும்? சித் ராயுதன் இருக்குமிடம் முதலிய விஷயங்களையெல்லாம் நீ எப்படி அறிந்தாய்? அப்பா! இப்பொழுதாவது கூறமாட்டாயா நீ யாரென்று? 

ஜெ.ஐயனே! எனக்கு வாக்களித்ததை மறந்தீரோ? ஒரு காலம் வரும் அப்பொழுது எல்லாம் உமக்குக் கூறுகின் றேன்; இப்பொழுது சீக்கிரம் புறப்படும் வகையைப் பாரும். (எல்லோரும் போகிறார்கள்.) 

காட்சி முடிகிறது. 

நான்காவது காட்சி

இடம்:- புஷ்பபுரியில் சிறைச்சாலை 

சௌமாலினி தன் சிறுகுழந்தையைக் கையில்வைத்துக்கொண்டு ஒரு புறமாக உட்கார்ந்திருக்கிறாள். பாலசூரியன் மற்றொருபுரம் நித்திரைசெய்கிறான். நடுவில் திரையிட்டிருக்கிறது.

சௌ. கண்ணே பாலகா! இது நீ முன்ஜன்மத்திற் செய்த பாவத்தின் பயனோ? அல்லது என்வயிறு செய்த கொடுமையோ? அரண்மனையில் நீ சகலசுகத்துடன் பிறப்பதைவிட்டு இக்கொடிய சிறைச்சாலையில் பிறக்கும் படி நேரிட்டதே! மன்னர் மன்னனுக்குப் புதல்வனாய்ப் பிறந்தும் இக்கதியிலிருக்கும்படி நேரிட்டதே! உன் தலை விதி அது! சுசங்கதா தேவியாகிய உன் நல் அத்தை நீ அருந்த பால் கொண்டுவருமளவும் கண்வளராய்! கண்ணே! கண்வளராய்! (குழந்தையைத் தாலாட்டுகின்றாள்.) கண்ணே! அந்தமட்டும் நாங்கள்படுந்துயரமொன்றையும் அறியாதிருக்கின்றாயே! உனக்கு அரண்மனையிலிருப்பதும் இந்த பயங்கரமான சிறைச்சாலையிலிருப்பதும் எல்லாம் ஒன்று தான். உன்னைப்போல் ஒன்றும் தெரியாத ஸ்திதியில் நாங்களும் இருப்போமாகில் !- 

சுசங்கதை ஒரு கிண்ணத்தில் பாலைக்கொண்டுவருகிறாள்.

சு. அம்மா, குழந்தை எப்படியிருக்கின்றது? 

சௌ. அரண்மனையிலிருந்தால் எவ்வளவு சுகமாயிருக்குமோ அவ்வளவு சுகமாயிருக்கின்றது! சற்று முன்பாக பசியால் அழுது கொண்டிருந்தது, நான் பாலின்றி உறங்கப் படுத்தினேன். 

சு. இதோ நான் கொண்டுவருகின்றேன். ஆயினும் இப் பொழுது அதை எழுப்பவேண்டாம் அதுவாக எழுந்த வுடன் கொடுக்கலாம். 

சௌ. அதிருக்கட்டும் சுசங்கதா, உன் தமையனிடம் சொல்லச் சொன்னேனே, என்னவாயிற்று அக்காரியம்? 

சு. அம்மா! நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன், அவர் இசையாது ஒரே பிடிவாதமாயிருக்கின்றார். 

சௌ.சுசங்கதா! அவருக்கு இரக்கமில்லையோ! ஆணோடு பெண்ணோடு பிறந்திலரோ! பழிபாவத்திற்கஞ்சாரோ ? ஐயோ! எங்கள் முகத்தைப் பார்த்திரங்காவிட்டாலும் இக்குழந்தையின் முகத்தையாவது பார்த்திரங்கலாகாதா ? இப்பேதைப்பாலகனும் அவருக்கென்ன குற்றம் செய்தது? என்னை என் கணவரிடம் சேர்த்துவைக்கா விட்டாலும் நாங்கள் இந்தபாழும் சிறையைவிட்டு அரண் மனையிலோர் மூலையிலிருக்கச் செய்யலாகாதா! எங்களை எவ்வளவு காவலில் வேண்டுமென்றாலும் வைக்கட்டுமே! இச்சிறையிலேயே இறக்கச்செய்ய வேண்டுமென்றெண்ணியிருக்கின்றாரோ! நான் பிரசவ வருத்தமுற்ற பேதையென்றும் எண்ணாரோ! அம்மா! நீயாவது சொல்லடி அவர் மனம் என்னகல்லடி?- என் வருத்தத்தையெல்லாம் நீயாவது அவருக்குரைக்கலாகாதா நன்றாய்? 

சு. அம்மா, நீ என்னை நிந்தித்துக்கொள்ளாதே! நான் அவ னிடம் கூறியதை யெல்லாம் இக்கருங்கல்லினிடம் கூறி யிருப்பேனாயின் இதுவும் இரங்கியிருக்கும்; அப்பாத கன் மனம் சற்றேனும் இரங்காமற்போயிற்று. அவனை அண்ணன் என்று மதிப்பதையேவிட்டேன். அம்மா. நான் என்ன செய்வேன் ? 

சௌ. அவரைநொந்து பயனென்ன! பாலசூரியன் கூறுகிறபடி சுவாமிக்கே மனம் இரங்காமற்போனால் மனிதர் களுக்கு மனம் இரங்கப்போகின்றதோ, சுசங்கதா, என் பிராணநாதரைப்பற்றி ஏதாவது சமாசாரம் வந்ததோ? யாரையோதேட விட்டிருக்கின்றதாகக் கூறினாயே?

சு. மெள்ளப்பேசு. ஒரு சமாசாரமும் வரவில்லை. அனுப்பி யிருக்கின்ற ஆட்களில் ஒருவனும் திரும்பிவர வில்லை இன்னும்.

சௌ. ஐயோ! அவருடைய முகத்தை நான் தினம் ஒரு முறை யாவது பார்த்துக்கொண்டிருப்பேனாயின் இந்தச் சிறைச் சாலையில் நான் படும் துயர மென்பதையும் பாரேனே! அப்பொழுது இந்தச் சிறைச்சாலையே எனக்கு சுவர்க்க மாகும். – ஏது, இனி நான் அநேக நாள் ஜீவித்திருப்பது கடினம். என் உயிரை அப்பொழுதே விட்டிருப்பேன், ஆயினும் இக் குழவியைப்பற்றியும் பாலசூரியனைப்பற்றி யும் இத்தனைகாலம் உயிர்தரித்து வந்தேன் – அம்மா, சுசங்கதா,நீ எனக்கொரு உதவிசெய்வாயா? 

சு. அம்மா, என்னால் முடியுமானால் செய்கின்றேன்.

சௌ. இந்தச் சிறைச்சாலையைவிட்டுத் தப்பிப்போக மார்க்க மில்லையா? 

சு. அம்மா, நான் முன்பே அதையும் யோசித்துப் பார்த்தேன்; எனக்கொரு மார்க்கமும் தோற்றவில்லை. நான் சௌரியகுமாரன் உத்திரவு பெற்று இங்குவந்து போவதே கடினமாயிருக்கின்றது; நான் என்ன செய்வேன்? 

சௌ. அம்மா, நீ என்னைப்போலொரு பெண்தானே, உனக்கு மேன் எங்கள் மீது இரக்கமில்லாமற்போயிற்று?

சு. (எழுந்திருந்து) அம்மா, அப்படி கூறவேண்டாம். இதோ நான்போய் கடைசிமுறை சௌரியகுமாரனுடன் பேசிப் பார்க்கின்றேன்; ஆயினும் அவன் இரங்குவான் என்று நான் நினைக்கவில்லை. பிதா இறந்து இரண்டு தினங்க ளாவதற்கு முன் தனக்குப் பட்டாபிஷேகம் செய்து கொண்டபாபிக்கு கருணையெங்கிருந்து வரும்? ஆயினும் உனக்கொன்று சொல்லுகின்றேன். சீக்கிரத்தில் உன்னை இச்சங்கடத்தினின்றும் நீக்கி உன் பர்த்தாவுடன் சேர்த் தாவது வைப்பேன் அல்லது நானாவது இம்முயற்சியில் இறப்பேன், என் வார்த்தையின் உண்மையைப் பார். (போகிறாள்) 

சௌ.அம்மா, உன்னை சுவாமி காப்பாற்றுவார்! – ஐயோ! பாற்கடலில் அமிர்தத்திற்குமுன் விஷம் உதித்தாற் போல் உனக்குமுன் சௌரியகுமாரன் உதித்திருக்கின்றானே! 

[பாலகுரியன் திடுக்கிட்டு கண்விழித்து எழுந்திருக்கின்றான்]

பா. அப்பா! அந்தமட்டும் கனவுதான் ! ஈசனே! இதுவும் உம்முடைய சோதனையோ? எல்லாம் உனதருள்!இக் கனவு மெய்க்குமாயின் ஏழையேன் என்செய்வேன்? தாம் தம்முடைய திருப்பாதத்தால் உதைத்த போதிலும் நாயேன் அப்பாதத்தையே கதியாகப்பற்றவேண்டும்! எல்லா முமதருளே! 

சௌ, கண்ணே! பாலசூரியா விழித்துக்கொண்டாயா?

பா. ஆம் அம்மா, நான் உள்ளே வரலாமா?

சௌ.வரலாம் கண்ணே. (பாலசூரியன் திரையைத்தள்ளிக் கொண்டு சௌமாலினியிடம் போகிறான்.) 

பா. அம்மா, உங்களுக்கு உடம்பென்னமாயிருக்கின்றது?

சௌ. இருக்கின்றது! என்ன உனக்கு இத்தனை நாள் இருந்த முகமலர்ச்சி இல்லை, என்ன சமாசாரம்? 

பா. ஒன்றுமில்லை அம்மணி. 

சௌ. இல்லை கண்ணே! என்னிடம் சொல்ல உனக்கென்ன? என்ன வாடியிருக்கின்றாய்? 

பா. ஒன்றுமில்லை அம்மா, சற்றுமுன்பாக நான் மெய்ம் மறந்து உறங்கினேன். அப்பொழுது நான் ஒரு கனவு கண்டேன், அது சற்று மனசஞ்சலத்தை யுண்டுபண்ணிற்று வேறொன்றுமில்லை. 

செள, என்ன கனவு? 

பா. நான் ஒரு மலையின்மீது நின்றுகொண்டு கீழ்ப்பிரதேசங் களின் செழுமையையும் அழகையும் பார்த்து சந்தோஷித்துக்கொண்டிருப்பது போலவும், உடனே திடீரென்று ஒரு பெரும் இருள் என்னை சூழ்ந்துகொண்டது போலவும் கண்டேன். இது ஒருவேளை இனிவரப் போகின்ற ஏதாவது ஒருகெடுதிக்கு அறிகுறியாயிருக்கின் றதோ என்னவோ வென்று மனதிற்பட்டது. வேறொன் றுமில்லை;- அம்மா ! என்ன கண்ணீர் விடுகின்றீர்கள் ?

சௌ. அடா! என் கண்ணே! இதுவரையில் இந்தச் சிறைப் பட்டது முதல் தறுதல் சொல்ல நான் என் வருத்தங் களை யெல்லாம் பொறுத்து வந்தேன். இது வரையில் வருந்தா திருந்ததைப் பார்த்து நானும் தைரியங் கொண்டிருந்தேன். இப்பொழுது நீயேவருந்துகின்றாயே நான் என்ன செய்வது! 

பா. அம்மா,அப்படி எனக்கொன்றும் நேராதென்றே நினைக்கின்றேன். இல்லை அப்படி ஒருகால் நேரிட்டாலும் ஈச னொருவனிருக்கின்றான், நீர் ஏன் துயரூறவேண்டும்? 

“இட்டமுடன் என் றலையில் இன்னபடி என்றெழுதி, விட்ட சிவனுஞ்செத்து விட்டானோ”? 

சௌ. அந்த ஈசனுக்குத் தான் கண்கெட்டுப்போயிருக் கின்றதே! இல்லாவிட்டால் பாபியாகிய சௌரிய குமாரனை மகாராஜாவாக்கி, நம்மை இக்கதிக்குக் கொண்டு வருவானோ?

பா. அம்மா, நாம் அப்படிச் சொல்லலாகாது! சுவாமி யினுடைய திருவுள்ளம் ஒரு வழி நிற்பதற்கு நாம் காரணம் கேட்கலாகாது மனிதர்களால் அது அறியக் கூடாத விஷயம். நாம் அதைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதே நம்முடைய ஒருவேளை நம்முடைய கடமை; நன்மையைக்கோரியே அவர் இவ்வாறு செய்திருக்கினு மிருக்கலாம், அவர் திருவருள் நமக்கிப்பொழுதில்லை போலும். 

சௌ. ஆமாம், இப்பொழுது நாம் துக்கமனுபவிக்கின்றோமே அதற்கென்ன செய்வது? 

பா. அதை நாம் துக்கமென்று கொள்ளலாகாது ! இதையே நாம் சுகமென்று பாவிப்போமாகில் ! நாம் எந்த துக்க மான சந்தர்ப்பத்தில்வைக்கப்பட்டபோதிலும் அதிலும் சுகத்தைக் கண்டு பிடித்து அதையே எண்ண வேண்டும். 

சௌரியகுமாரன் இரண்டு சேவகர்களுடன் வருகின்றான்.

சௌ. அப்பா, இங்கேயும் எமன் வருகின்றான்! இன்னும் நமக்கென்ன துன்பம் செய்யப்போகின்றானோ! 

பா. குடியைக்கெடுத்த சிற்றப்பா! என்ன சமாசாரம்?

சௌ. அப்பா, அவர்களுக்கு வீணாகக் கோபம்வரும்படியாக ஒன்றும் சொல்லாதே. 

சௌரி. அம்மணி. தங்களை யெல்லாம் சிறையினின்றும் விடு வித்து என் தமயனிடம் அனுப்புவிக்க வந்திருக்கின்றேன் நான். 

சௌ. அப்பா! இப்பொழுது இரக்கம் வந்ததே! உமக்கு மிகவும் புண்ணியமுண்டு. நீர் எங்களுக்கு இந்த உப காரம் செய்ததை தெய்வம் மறக்காது. ராஜகுமாரா, ப்பொழுதே திறந்து விடும்படியாகக் கட்டளையிடும்.

சௌரி. இதோ சொல்லுகின்றேன் – ஆனால் ஏமாங்கதராஜன் எங்கிருக்கின்றார். 

சௌ. தெரியாதே! 

சௌரி, அம்மா, உண்மையைக்கூறும் பொய் பேசாதீர்! 

சௌ. உண்மையாக எங்களுக்குத் தெரியாது? 

சௌரி.பாலசூரியா! உனக்குத்தெரியும்! உண்மையைக் கூறு உங்களைச்சிறையின்றும் விடுவிக்கின்றேன். 

பா. உண்மையாக எனக்குத்தெரியாது! அப்படித் தெரிந் திருந்த போதிலும் உமக்கு நான் கூறுவேனோ! என் பிதாவைத்தான் நாட்டைவிட்டுத் துரத்தினீரே ! இப் பொழுது அவர் எங்கிருக்கின்றாரென்று கண்டறிந்து இன்னும் ஏதாவது தீங்கு செய்யப்பார்க்கின்றீரோ?

சௌரி. பாலசூரியா ! இப்பொழுது உன்னுடன் வார்த்தை யாடிக்கொண்டிருக்க எனக்குக் காலமில்லை, உன் பிதா விருக்குமிடம் உனக்கிப்பொழுது தெரியும்; நீ கூறுவாயா யின் உங்களை யெல்லாம் சிறையினின்றும் விடுவிக்கின் றேன். அம்மணி, உங்களுக்கு சிறையினின்றும் வெளி யேவர வேண்டுமென்று விருப்பமிருந்தால் இதைத் தெரிவியும். என்னசொல்லுகின்றீர்கள் ? 

சௌ. ஐயோ! எங்களுக்குச்சத்தியமாக ஒன்றும் தெரியாதே! தெரிந்தால் சொல்லமாட்டோமா? ராஜகுமாரா! சற்று முன்பாக மனம் இரங்கினீரே, இதற்குள் முன்போலவாகி விட்டீரே! ஐயோ! நாங்கள் இச்சிறையில் இன்னும் எத் தனை தினம் அவஸ்தைப்படுவது? இன்னும்சில தினங்கள் இங்கிருப்போமாயின் எங்கள் உயிர் போய்விடும்; இந்த அவஸ்தையில் எப்படி யாவது மனமிரங்கும்! 

பா. அம்மா ! அவர் நம்மை சிறையினின்றும் விடுவிப்பதற் காகவா வந்தார் என்று நினைத்தீர்? – சிற்றப்பா ! இந்த சூழ்ச்சி எங்கேகற்றீர்?- ஆயினும் சத்தியமாக எனக்கு பிதா இருக்குமிடம் தெரியாது! 

சௌரி. உன்னை கடைசிமுறை கேட்கிறேன், உனக்குத் தெரியுமென்றெனக்குத்தெரியும், சொல்லுகின்றாயா மாட்டாயா? 

பா. நான் தெரிந்ததை முன்பே சொன்னேன். 

சௌரி. பொய்பேசாதே! இதே கடைசிமுறை. இப்பொழுது நீ கூறாவிட்டால் உன்னிருகண்களையும் பெயர்த்து விடு வேன்! என்ன, சொல்லுகின்றாயா! என்ன? 

பா. எனக்குத் தெரியாது. 

சௌரி. உன்னிடமிருந்து உண்மையை வரவழைக்கும் விதத் தில் வரவழைக்கின்றேன். அடே! சேவகர்களே ! நீங்களிருவரும் உள்ளேபோய் பாலசூரியனைப் பிடித்து வாருங்கள் வெளியே! 

சௌ. ஐஐயோ! ராஜகுமாரா! ராஜகுமாரா! அவனுக்கொன்றும் தெரியாதே அவன் அறியாப்பாலகனாயிற்றே! அவ னுடைய கண்களையா பெயர்க்கப்போகின்றீர்? அதைக் கண்டு நான் எவ்வாறு உயிர்வாழ்வேன்! அதை விட என்னுடைய கண்களைப் பெயர்த்துவிடுமே. ராஜகுமாரா ராஜகுமாரா! உமக்கு ஈவு இரக்கமில்லையா!சற்றாயினும் மனமிரங்கலாகாதா!என் பாலனது கண்களைப் பிடுங்கும் படிக் கட்டளையிட உமது மனம் கல்லோ! உம்முடைய தமயனுடைய குழந்தையென்று மனமிரங்கலாகாதா! யோ! இதற்கோ பாபி நானவனைப்பெற்றேன். ஐயோ ! இந்த நாட்டில் நியாயமனியாயமில்லையா! தெய்வத்திற் குத்தான் கண் அவிந்து போயிற்றா ! 

சௌரி. அடே ! செல்லுங்கள் உள்ளே! (சேவகர்கள் சிறைச் சாலைக்குட் போகிறார்கள்.) 

சேவகர்கள். ராஜகுமாரா தாமாவருகின்றீரா நாங்கள் இழுத்துக்கொண்டு போகவேண்டுமா? 

பா. அப்பா, இதோ நானாகவந்துவிட்டேன். இதோ என தன்னையிடம் விடைபெற்று வருகின்றேன் 

சௌ. ராஜகுமாரா! யமகிங்கரர்கள்வந்து விட்டார்களே! வந்து விட்டார்களே! இந்தவேளை எங்களைக்காப்பாற் றும்! ஐஐயோ ! என்பாவிக்கண்களைப் பறித்து விடுமே! என்பாலனைச் சும்மா விட்டு விடும். உமக்குக்கோடி புண்ணிய முண்டு. ஐயோ ! இதைவிட என்னையாவது கொன்றுவிடுமே முதலில்! 

சௌரி. அப்பா, நான் இவள் கூறுவதைக் கேட்டால் என் மனதைக் கரைத்து விடுவாள் (காதைமூடிக்கொள்கிறான்.)

பா. (தன் அன்னையிடம் சென்று) அம்மா !-அம்மணி ! இனி வருந்தி என்னபயன்?- வருத்தப்படாதீர்! மனதைத் தைரியப்படுத்திக் கொள்ளுங்கள்!-எனக்கு விடையளி யும் நான் போய்வருகின்றேன்!-யாவும் ஈசன் செயல்!

சௌ. (பால சூரியனைக் கட்டிக் கொண்டு) கண்ணே ! கண்ணே ! பாலசூரியா! என்வயிறுசெய்த கொடுமையடா இது! என் அருஞ்செல்வமே! இந்த விதியனுபவிப்பதற்கோ உன்னை இப்புவியிற் பெற்றெடுத்தேன்! பெற்றெடுத் தேன் ! அடாமகனே! என் பாவிவயிறு எரிகின்றதே!

பா. அம்மா,தம்முடைய வயிற்றிற்பிறக்கும் படியான பாக் கியம் நான் பண்ணினேன்! அம்மணி, நேரமாகின்றது நான் தமக்கென்ன தேறுதல் சொல்லப்போகின்றேன் இனி! சுவாமிதான் தேறுதல் சொல்லவேண்டும்! எனக்கு விடையளியும்.

சௌ. கண்மணி! இப்படியும் இருந்ததா உன் விதி! நீ உல காளக் கண்டு நான் களிக்கலாமென்றிருந்தேனே, இப் பொழுது அந்தகனாய்க் கிடப்பதை எப்படி கண்டு என் மனம் தரிக்குமடா என்மகனே! 

பா. அம்மா! யார் விதி யாரைவிட்டது!நீர் வருந்தி என்ன பயன்? அவரவர்கள் வந்த வழி அவரவர்கள் செல்ல வேண்டுமல்லவா? இனி என்ன செய்யலாம்? 

சௌ. அடா, என் வீரச்சிங்கமே! உன் மதிபோன்ற முகத் தைப் பார்த்தன்றே உன் பிதாவைவிட்டுப் பிரிந்தபின் உயிர் வாழ்ந்து வந்தேன். இப்பொழுது உன் முகத்தில் கண்கள் போய் நீ அந்தகனா யிருப்பதைப்பார்த்து நான் எப்படி உயிர்வாழ்வேன்! இக்கதி அனுபவிப்பதற்கோ என்பாவி வயிற்றிலுதித்தாய்! 

பா. அம்மா! என் ஊனக்கண்ணைத்தானே கெடுக்கப்போகின் றார்கள்? என் ஞானக்கண்ணை அவிக்க இவர்களால் முடியுமோ! அதிருக்குமளவும் எனக்கென்ன குறை? அம் மணி, நீர் வருந்தி என் மனோதிடத்தைக் கலக்காதீர்!

சௌ. அடாபாலகா! உனக்குப் பதிலாக என்னுடைய கண் களை எடுத்துக்கொள்ள மாட்டார்களா? என்னுயிரை உனது கண்களுக்குப் பதிலாகக் கொடுக்கின்றேனே! இப்பாபிகள் ஏற்றுக்கொள்ளாரோ? 

செளரி. அடே சேவகா! என்ன காலதாமதம்? 

சே. ராஜகுமாரா, வாரும் சீக்கிரம் நேரமாய் விட்டது. 

பா. அம்மணி,நான் என்ன உமக்குத் தேறுதல் சொல்லப் போகின்றேன்? உமது மனதை நீரே தேற்றிக்கொள்ளும், எல்லாம் ஈசன் செயல்; எல்லாவற்றிற்கும் அவர் ஒருவர் இருக்கின்றார். அம்மா! என்னை சந்தோஷமாய்ப் போய்வா என்று விடையளியும். 

சௌ. கண்ணே! கண்ணே! உனது கண்களை அழிக்க இப் பாதகர்கள் உன்னைக் கொண்டுபோகும் பொழுது நான் எப்படிச் சந்தோஷமாய் போய்வாஎன்று உனக்கு விடை யளிப்பேன். உன்னைப்பெற்ற என்வயிறு எரிகின்றதே!

சே. வாருமையா சீக்கிரம்! 

பா. என்னைப்பெற்ற தாயே, நான் போய்வருகின்றேன். என் பாவிக் கண்களினால் உமது திருமேனியை இவ்வுலகில் கடைசிமுறைக் காண்கின்றேன். நான் கொடுத்துவைத் தது இவ்வளவுதான் (காலில் வீழ்ந்து கதறி அழுகின்றான்.)

சௌ.(கெட்டியாயவனைக் கட்டியணைத்துக் கொண்டு) கண்ணே! கண்ணே! நான் உன்னை விடேன்! விடேன்! என்னைக் கொன்றுவிட்டு இப்பாதகர்கள் உன்னை என்கையினின் றும் இழுத்துக்கொண்டு போகட்டும்! 

சௌ.அடே! இழுத்துக்கொண்டு வாருங்களடா அவனை நீங்களும் என்ன அங்கே நின்று அழுதுகொண்டிருக்கின்றீர்கள்? 

சௌ. நான் விடேன் என்பாலனை! அடாபாதக ராஜகுமாரா! என்னைக் கொன்றுவிட்டு என் பிள்ளையை இழுத்துக் கொண்டு போகச்சொல்! 

சௌரி.அடே! என்ன, இழுத்துக்கொண்டுவருகின்றீர்களா என்ன! 

சௌ.அடா! பாதகா!உனக்கு நான் உங்கள் குலப்பெண் ணென்று சற்றேனும் மானமில்லாமற் போய் விட்டதா! என்னைத்தீண்டியா பாலசூரியனை இழுத்துக்கொண்டு வரும்படி கட்டளையிடுகின்றாய்?

சௌரி. அடே! கழுதைகளா! நான் சொன்னபடி செய்கின் றீர்களா என்ன? (சேவகர்கள் பாலசூரியனருகிற்செல் கின்றனர்)

பா. அம்மா, சிற்றப்பனுக்குத் தான் மான மில்லாமற் போனாலும் எனக்கு இருக்கின்றது. என் உயிரிருக்கு வும் ஒரு அன்னியன் உம்மைத்தீண்ட நான் பார்ப்பேனோ? எனக்கு விடையளியும், நான்வருகின்றேன். என்னை ஈன் றெடுத்ததாயே! உமது திருமேனியை இவ்வுலகத்தில் கடைசி முறை நான் இப்பொழுது கண்டேன், இனி மறு உலகத்தில் என் கண்களால் காண்பேன் ! (சௌமாலினி மூர்ச்சையாகின்றாள்.) ஈசனே எல்லாம் உம்முடைய கருணை.

சேவகர்கள். வாருமையா ! நேரமாய்விட்டது! (வெளியே அழைத்து வருகிறார்கள்.) 

சௌரி. அடே ! இப்பொழுதாவது சொல்கின்றாயா?

பா. சொல்கின்றேன். சிற்றப்பா! பயப்படாதே ! என்கண் களால் உன் உருவை நீ நரகத்தில் கிடக்கும்பொழுது சீக்கிரம் காண்பேன், பயப்படாதே! 

சௌரி. அடே ! இவனை உடனே இழுத்துக்கொண்டு போய் காய்ச்சி இருக்கும் இருப்புச்சலாகைகளினால் இவனது கண்களைக் குத்திவிட்டு, பிறகு சீக்கிரம் இங்கே அழைத்து வாருங்கள்!அப்புறம் என்ன சொல்லுகின்றானோ பார்ப்போம்! 

பா. ஈசனே எல்லாம் உனது கருணை! (சேவகர்கள் அழைத்துச் செல்கின்றனர்) 

சௌரி. என்ன மன உறுதி! இப்பொழுது பாடிக்கொண்டு போகின்றான். 

இரத்தம் தேகமெல்லாம் படிந்த ஒரு தூதன் ஓடிவருகிறான்.

அடே என்னடா இது? 

தூ. மகாராஜா ! உங்களுடைய உத்திரவின்படி காலசேன ராஜன் முதலியோருடைய சைனியங்களுடன் நமது சேனாதிபதி போர் புரிந்து அவர்களை முறியடித்து விட்ட தினால் இருதிறத்திலும் அனேகர் மாண்டார்கள்.

சௌரி. என்ன ! காலசேன்னுடன் சித்திராயுதன் போர் புரிவதாவது! 

தூ. அதுவுமன்றி யுத்தம் நடந்து கொண்டிருக்குஞ் சம யத்தில் நமது பாசறையில் யாரோ அனேகர் கள்வர் வந்து நமதாயுதங்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இவ்விஷயத்தையெல்லாம் தங்க ளுக்குச் சீக்கிரம் கூறும்படி என்னைத் துரத்தினார்.

சௌரி. இதென்ன சமாச்சாரம்! சித்ராயுதனாவது நமது துணையரசர்களுடனே போர் புரிந்து அவர்களை முறி யடிப்பதாவது! அடே! வா இப்படி! (அவனை அழைத்துக் கொண்டு விரைவிற் போகிறான்). 

காட்சி முடிகிறது. 

ஐந்தாவது காட்சி 

இடம் – அரண்மனையில் ஓர் அறை. சௌரியகுமாரனும் பாலாயனனும் வருகிறார்கள். 

சௌரி.பார்த்தாயா பாலாயனா இந்நிருபத்தை ? நான்தான், காலசேனன் முதலிய நமக்குதவியாயுள்ள அரசர்கள் நமக்கு விரோதிகளாய் விட்டார் களென்றும் அவர்களு டன் அந்தட்சணமே போர் புரிந்து அவர்கள் சைனியங் களை அடியோடழிக்க வேண்டுமென்றும், கட்டளையிட்ட தாகக்கூறி அதற்கு அத்தாட்சியாக நமது இராஜ்ய முத்திரையிட்ட இந்நிருபத்தை சித்ராயுதன் அனுப்பி யிருக்கின்றான். இந்நிருபத்தில் அவன் சொன்னபடியே எழுதியிருக்கின்றது உண்மைதான்; எனது முத்திரையு மிருக்கின்றது. ஆயினும் எனது ராஜ்யத்தின்மீது ஆணைப்படிச்சொல்லுகின்றேன் நான் இம்முத்திரையையு மிடவில்லை இந்நிருபத்தையுமனுப்பவில்லை. பிதாவுக்குப் பிற்காலம் என்னையன்றி ஏமாங்கதன் ஒருவனுக்குத்தான் இம்முத்திரையிடும் சூட்சுமம் தெரியும். ஏமாங்கதன் இங்கெப்படி வந்திருக்கக்கூடும்? எனக்கொன்றும் தோன்றவில்லை. 

பா. ஏமாங்கதனாவது இங்குவருவதாவது ! நான் அனுப்பி யிருக்கின்ற கொலையாளிகள் திரும்பிவரா விட்டாலும் இந்நேரம் அவர்கள் தங்களுடைய வேலையை முடித்து விட்டிருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். 

சௌரி. இல்லை! இல்லை! ஏமாங்கதன்தான் ஏதோ இதற் கெல்லாம் காரணமாயிருக்கின்றான் என்று தோற்று கின்றது. ஆயினும் அவனுக்கு இவ்வளவு யுக்தி போதாது. அவனுக்குதவியாக யாரோ இருந்துக்கொண்டு அவனை ஆட்டி வைக்கின்றார்கள். நாம் இனிச்சித்தமா யிருக்க வேண்டும். இந்த ஒரு ஓலை எவ்வளவு வேலை செய்திருக் கின்றது பார்! 

பா. ஆமாம் நமக்குத்துணையான அரசர்களுடைய சைனியங் களை யெல்லாம் நாமே அழித்து அவர்களை நமக்குப் பகையாக்கிக் கொண்டோம். இந்த யுத்தத்தில் நமது படைகளும் மிகவும் அழிந்தன. போதாக்குறைக்கு நமது பாசறையும் யாரோ கள்வர்களால் கொள்ளை யடிக்கப் பட்டதாம்! 

சௌரி. இம்மட்டோ! நமக்குத்துணையாயிருக்கும் மற்ற அரசர்களும் நம்மைப்போன்ற மற்றொருவனுக்கு வந்த கதிதானே நமக்கும் வருமென்று நம்மிடத்தில் இருக்கும் நம்பிக்கை குன்றுவார்களன்றோ! இதோ எனக்குப் பெண் கொடுக்கிறேனென்று சொல்லிக் கோண்டிருந்த பாஞ்சாலதேசத்தரசன் என்மீது கோபங்கொண்டு இனி உன்னுடன் ஒருசம்பந்தமும் செய்யமாட்டேன் என்று எழுதியிருக்கின்றான் ! இதற்கென்ன செய்வது?

பா. ஆயினும் நாம் அதைரியப்படவேண்டியதில்லையென்றே நினைக்கின்றேன். இன்னும்- 

ஒருசேவகன் விரைந்து வருகிறான். 

சே. ராஜாதிராஜனே! நமது சேனாதிபதி உமக்கு இந்நிரு பத்தை அதிசீக்கிரத்தில் கொண்டுபோய்க் கொடுக்கக் கட்டளை யிட்டனுப்பினார் என்னை! (ஓர் ஓலைச்சுருளைக் கொடுக்கின்றான்) அவர் இப்பொழுது பெருமலை துர்க்கத் திலிருக்கின்றார்.

சௌரி. பாலாயனா! அப்பொழுதே உனக்குச் சொன்னேனே! நான் நினைத்தவண்ணமே இருக்கின்றது! ஏமாங்கதன் சிலகள்வர்களைத் தனக்குதவியாகக்கொண்டு படை யெடுத்து குமாரபுரத்துக்கு வந்திருக்கின்றானாம். அவனுடைய மாமனாகிய சதானந்தனும் நம்முடைய கட்டளையெல்லாம் பராமுகம் பண்ணினவனாய் அஞ்சாது அவனுக்குதவியாகத் தன்சைனியத்துடன் அவனுடன் சேர்ந்துவிட்டானாம், நாளைத்தினம் சாயங்காலம் புறப் பட்டு புஷ்பபுரியை நோக்கிவரத் தீர்மானித்திருக் கின்றார்களாம்! 

பா. ஐயனே! இது உண்மையாயிருக்குமா? நான் நம்பவில்லை. கௌரி. சந்தேகமில்லை. இதோ சித்ராயுதனே எனக்கு எழுதி யிருக்கின்றான் ! பார்! 

பா. மகாராஜா, இதற்கென்ன செய்வது! நம்முடைய சைனியங்களெல்லாம் இப்பொழுதுதான் முறியடிக்கப் பட்டு ஆயுதங்களெல்லாம் போய் நிலைதடுமாறி யிருக் கின்றனவே! 

சௌரி. இப்பொழுது தான் என்னுடைய புத்தி எனக்குதவ வேண்டும்!- பாலாயனா! நாம் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம் – நீ உடனே சென்று ஏமாங்கதன் குமார புரத்தினின்றும் புஷ்பபுரிக்கு வர ஒரு அடி எடுத்து வைத்தபோதிலும் இங்கு சிறையிலிருக்கும்படியான அவனுடைய மனைவியையும் மக்களையும் கொன்று விடும்படி நான் ஆக்ஞாபித்ததாக ஒரு நிருபம் எழுதி இந்தச் சேவகனிடம் கொடுத்து, நமது தூதனாக ஏமாங்கதனிடம் சீக்கிரம் கொண்டுபோய்க் கொடுக்கச் சொல் சீக்கிரம்! ஒரு நிமிஷத்தையும் போக்காதே! நான் என் சொற்படி நடக்கின்றேன் பார்! இந்நிரு பத்தை எழுதிக்கொடுத்துவிட்டு சீக்கிரம் வா, போ.

பா. அப்படியே! இதோ (சேவகனை அழைத்துக்கொண்டு போகிறான்)

சௌரி. ஆஹா ! நான் மகுடம்பூண்ட வேளை நல்ல வேளை! இரண்டு மூன்று தினங்களுக்குள் என்னுடைய துணை யரசர்களெல்லாம் தோல்வியடைந்து, என்னுடைய சேனையும் மிகவும் அழிந்து, ஏமாங்கதனும் படை யெடுத்து வந்திருக்கின்றான்! அந்தமட்டும் சௌமாலினி யையும் பாசூரியனையும் விட்டுவிடாது சிறையிலடைத்து வைத்தோமே! சரி, சீக்கிரத்தில் ஏமாங்கதனாவது இறக்க வேண்டும் நானாவது இறக்கவேண்டும்! அதெல் லாம் இருக்கட்டும், இவ்வோலையில் நமது ராஜமுத்திரை எப்படி வந்திருக்கக்கூடும்? ஏமாங்கதன் இங்கு வந்திருக்க மாட்டான்! ஒரு வேளை நமது அரண்மனையில் அவனுக்கு உளவாக யாராவது இருக்கின்றார்களோ? 

சுசங்கதை வருகிறாள். 

சுசங்கதா ! என்ன சமாச்சாரம்? – என்ன உன் கண்களி ரண்டும் சிவந்திருக்கின்றனவே! அழுது கொண்டிருந்தாயா என்ன? 

சு. குலத்தையழிக்கக் கோடாலி நீ பிறந்தாயே! அழாமல் என்ன செய்வது நான்?

சௌரி. உம்!ஆரம்பித்தாயா? ஏமாங்கதனை வரவழைக்க வேண்டுமோ? 

சு. அப்பா! உனக்கு நான் கடைசீ முறைக் கூறவந்தேன்; வேண்டாம், இனியாவது செம்மைப்படு. முற்றிலும் அழிந்து போகாதே! துன்மார்க்கத்தைவிட்டு சன்மார்க் கத்தை நாடு; இன்னும் உனக்குப் புத்திவரவில்லையா? பிறருக்குச் செய்த கெடுதிகளெல்லாம் உனக்கு என்ன நன்மையைப் பயந்தன? உன் கெடுமதி உன்னையே அழிக்கின்றதேயொழிய வேறொன்றுமில்லை. ஏமாங் கதனை நாட்டைவிட்டுத் துறத்தினாய், அவனுடைய பெண்டு பிள்ளைகளைச் சிறையிலிட்டாய், பாலனாகிய பாலசூரியனுடைய கண்களையும் பறித்தாய், பிதாவைக் கொன்றாய், இவ்வளவும் செய்தாய், நீ அடைந்த பயனென்ன? மகாராஜாவ விட்டோம் என்று நினைக்கின்றாயோ? இந்தவாழ்வு இன்னும் எத்தனை நாள்? உன்னு டைய சைனியங்கள் முறியடிக்கப்பட்டன, உனது யரசர்களெல்லாம் உன்னைக் கைவிட்டார்கள். ஏமாங் கதன் தனது மாமனாருடைய உதவியைப் பெற்று படை யெடுத்து வந்திருக்கின்றான். இனி என்ன பிரயோஜனம்? இன்னும் வீணிற் கெட்டுப் போகாதே. பேசாமல் நீ செய்ததெல்லாம் தவறென்று ஏற்றுக்கொண்டு ஏமாங் கதனிடம் போய்ச் சரணாகதியடைந்து உன்னை மன்னிக் கும்படிக் கேட்டுக்கொள். அவன் உத்தமபுருஷன் எப் படியும் உன்னை மன்னிப்பான். 

சௌரி. சுசங்கதா! என்ன சொன்னாய்! நானோ என் பகை வன் காலில் வீழ்ந்து என்னை மன்னிப்பாய் என்று கேட் பேன் ! அதைவிட இதோ இந்தக் கற்றூணை உன் காலில் வணங்கச் சொல். 

சு. ஏமாங்கதன் உன் பகைவனல்லவே, சொந்த தமையன் தானே! நீ அவன் காலில் வீழ்ந்தாலென்ன?

சௌரி. அவன் என் தமையனா யிருப்பதினாற்றான் என் பகை வனானான்!— சுசங்கதா! மறுபடியும் இந்த வார்த்தையை என்னிடம் கூறவேண்டாம் போ ! 

சு. சரி! இனி உன்னுடன் பேசி பிரயோஜனமில்லை. கெடுமதி கண்ணுக்குத்தோன்றுமா? உன் தலைவிதிப்படி நடக்கின் றது. நானென்னசெய்வது! (போகிறாள்) 

சௌரி. இந்தசுசங்கதை ஏமாங்கதனுக்காக இவ்வளவு பாடு படுவானேன்? அன்றைத்தினமும் இதையேகேட்டாள். ஆ! அன்றைத்தினம் இங்குவந்தபொழுது சுசங்கதை ராஜ முத்திரையின் அருகில் இருந்தாளல்லவா? ஓகோ அப்படித்தானிருக்க வேண்டும்! முன்பே நான் சந்தேகப் பட்டேன். சந்தேகமில்லை, இவள்தான் ஏமாங்கதனுக்கு உளவாக இருந்துகொண்டு அம்முத்திரையை அவ்வோ லைகளில் பதிப்பித்து அனுப்பி யிருக்கவேண்டும். ஆஹா! நம்முடைய அடிவயிற்றிலேயே ஒரு பாம்பிருக்கின்றதா? சரி ! இனி சுசங்கதை ஒரு க்ஷணம் உயிரோடு இருப்பாளா யின் இங்குநடக்கும் விஷயங்களெல்லாம் எதிரிகளுக் கெட்டிவிடும். இவளைச்சீக்கிரம் யமபுரம் அனுப்பவேண் டும். அடடா ! இது முன்பே தெரியாமற்போயிற்றே! 

பாலாயனன் வருகிறான். 

பா. மகாராஜா ! நீர்சொன்னபடியே செய்துவிட்டு வந்தேன். 

சௌரி. சேவகன் நிருபத்தை எடுத்துக்கொண்டு சென்றானா?

பா. முன்பே சென்றான். 

சௌரி. பாலாயனா! இதனுடன் இக்காரியத்தை விடலாகாது நாம். இந்த த சங்கடத்திற் கென்ன செய்யலாமென்று தோன்றுகிற துனக்கு? 

பா. இதைக்குறித்துத் தம்முடன் முன்பே பேசவேண்டு மென்று நினைத்தேன். இப்பொழுதோ நாம் சித்திராயுத னிடம் இருக்கும் சைனியத்தை நம்பியிருக்கலாகாது. அவர்கள் அடிபட்டுச் சோர்ந்திருப்பது மன்றி ஆயுதங்க களையும் பறிகொடுத்து பெருமலை துர்க்கத்தில் அடைப் பட்டிருக்கின்றார்கள். ஆகவே நமது எதிரிகளை அழிப் பதற்கு ஒருமார்க்கம் தோற்றுகின்றது; நேரில் அவர்களு டன் யுத்தம் செய்வதிற் பயனில்லை. இங்குள்ள சைனி யங்களெல்லாம் ஒருங்குசேர்த்து இரவில் போய் அவர் கள் உறங்கும் பொழுது அவர்களை அழித்து விட்டு வருவதே நலம் என்று தோற்றுகிறது, என்ன சொல்லு கின்றீர்? 

சௌரி. பாலாயனா நல்லயுக்தி கூறினாய்! ஆம்,ஒருவருக்கும் இதை வெளியிடாதே- நாம் இப்பொழுதே புறப்படுவோம். 

பா. ஐயனே. இதற்குத்தாம் வருவது நியாயமன்று, தமக் குக்காவலாக வேண்டியவர்களை இங்கு அரண்மனையில் வைத்துவிட்டு மற்றவர்களை நான் அழைத்துக்கொண்டு போய் இரவில் வேலை முடித்துவருகின்றேன். 

சௌரி. பாலாயனா! நல்ல யுக்திகூறினாய், அப்படியே செய் அப்பா ! உன்னுடைய நற்குணத்தையும் யுக்தியையும் முன்பே அறியாமற் போனேனே! சீக்கிரம் சித்தஞ்செய். ஆயினும் நானும் வரவா? 

பா. வேண்டாம், மகாராஜா யுத்தமுனையில் வரலாகாது. நான் போகின்றேன். 

சௌரி. பாலாயனா, நீ சென்று ஜெயம்பெற்று வருவாயாக!- உனது கையில் நோய் எப்படியிருக்கின்றது? 

பா. அதொன்றுமில்லை. சீக்கிரம் போய்விடும். நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன். என்னைக்குறித்து ஆச்சரிய மான செய்கைகளைச் சீக்கிரம் கேள்விப்படுவீர். 

சௌரி. சந்தேகமென்ன! (பாலாயனன் போகிறான்.) வரட்டும் வருகிற சங்கடங்களெல்லாம்! என்உயிருள்ளளவும் பார் த்து விடுகின்றேன்! (போகிறான்) 

காட்சி முடிகிறது.

– தொடரும்…

– கள்வர் தலைவன், நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, ஐந்தாம் பதிப்பு: 1955, அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *