பூமறாங்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2026
பார்வையிட்டோர்: 30 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஐய்யய்யோ இண்டைக்கு நல்லாய் நேரம்போட்டுது” 

“அந்த அறுவான் மனேச்சர் திட்டித் துலைக்கப்போறானே நான் என்ன செய்ய”. 

குட்டான் சண்முகத்துக்கு ஒரே பதகளிப்பு. 

விடிவெள்ளி முளைக்க தோட்டத்துக்கு வருகின்றான் குட்டான். பின்நில வாதலால் ஆயிரம் கண்டு வாழைக்கு அவனால் தண்ணீர் பாச்ச முடிந்தது. 

ஓடிக்கொண்டிருக்கும் மின்சார மோட் டரை அவன் நிற்பாட்டுகின்றான். 

‘என்ர உடுப்பையும் சாப்பாட்டையும் கொண்டுவாற அந்தத் தறுதலை சோமனை இன்னும் காணலையே?’ பதைத்து அங்கலாய்கின்றார் குட்டான். 

‘அந்த சனியன் பிடிச்சவன் போற வாற ஆக்களோடை சேட்டை விட்டு வீண் வம்புதும்பு பண்ணுறதிலை நேரம் போக்கிக் கொண்டிருப்பான். இப்ப நான் என்ன செய்ய?’. 

“எங்கடை வீட்டுக்குப் போறது ஒரு பாதையானால் நான் போக அந்த மூதேசி பிடிப்பான் மற்றப் பாதையாலை வந்தா இன்னும் நேரம் போயிடுமே நான் என்ன செய்ய?” 

நெருப்பில் மிதித்தவராய் அவஸ்த்தைப்படுகின்றார் குட்டான். 

குட்டான் மேற்குத் திசையை ஆவலுடன் பார்க்கின்றார். கண்ணுக்கெட்டிய துர்ரத்தில் சோமன் ஆடி அசைந்து அன்னநடை போட்டு வந்துகொண்டிருக்கின்றான். 

ஓடிப்போய் அவனைப்பிடிச்சு நல்லாய் உதைக்கவேணும் போலயிருக்கு குட்டானுக்கு. கெதியாய் வரும்படி தன் இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்தி கத்திக் கூப்பிடுகின்றார். 

சோமன் கிட்ட வந்து உடுப்பும், சாப்பாடும் வைத்திருக்கின்ற கடகத்தை இறக்கி நிலத்தில் வைக்கின்றான். 

சோமன்ரை தலையில் ஓங்கிக் குட்டிவிட்டு சாப்பாட்டைத் திண்டதும் தின்னாததுமாய் அரைகுறையில் விட்டுவிட்டு கையையும் வாயையும் அலம்புகின்றார் குட்டான் சண்முகம். 

தன் இடுப்பிலுள்ள சாரத்தை அவிழ்த்துவிட்டு வெள்ளை வேட்டியை கட்டுகின்றார். வெள்ளை அரைக்கை நஷனல் சட்டையை தோளில் போட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் பள்ளிக்குடத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார் சண்முகம் வாத்தியார். 

பள்ளிக்குடத்துக்கு கிட்ட வந்ததும் மேல் சட்டையைப் போடுகின்றார். எண்ணையில் பிசுபிசுத்த வியர்வை அவரது முகத்தில் வடிகிறது. 

“அதிபற்ரை ஒப்பீசிலை மனேச்சர் நிற்கிறாரே தம்பி?”. என்று என்னை பதற்றத்துடன் கேட்கிறார் சண்முகம் வாத்தியார். 

“இல்லை” என்கின்றேன். 

“அப்பாடா தப்பிப்பிழைச்சன்” என்று கூறிவிட்டு அதிபரின் காரியாலயத்திற்குள் செல்கின்றார். 

சுவரில் மாட்டியிருந்த மணிக்கூட்டைப் பாரக்கின்றார். 

ஓன்பது ஐம்பது மணி. 

தினவரவுப் பதிவுப்புத்தகத்தில் ஒன்பது ஐந்து என்று கடைசியாய் பதியப்பட்டு கையொப்பமிடப்பட்டிருக்கிறது. 

‘நல்லகாலம் சிவப்புக்கோடு இன்னமும் கீறப்படவில்லை’. ஒன்பது பத்து எனப் பதிந்து கையொப்பமிட்டுவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் அதிபரின் அலுவலக்தைவிட்டு வெளியே வருகின்றார். 

“எடே குட்டான் இப்ப என்னடா நேரம்?”. 

இடிமுழக்கமாய் மனேச்சரின் குரல். 

சுண்முகம் வாத்தியார் திகைத்துப் போய் நிற்கின்றார். 

“நீ நினைச்சநேரம் வந்து போறதுக்கு இதென்ன உன்ரை அப்பன்வீட்டு அம்பலமோடா?. இது என்ரை பள்ளிக்குடமடா” 

உரத்துக்கத்துகின்றார் மனேச்சர். 

“வகுப்பாலை இப்பவே வெளிக்கிட்டா. இனி நீ என்ரை பள்ளிக்கடத்துக்கை கால் வைக்கப்படதடா” 

உச்சஸ்தாயியில் கத்துகின்றார் மனேச்சர். 

‘இவர் இப்பிடித்தான் கொக்கரிச்சுப்போட்டு கொஞ்ச நேரத்திலை அடங்கிடு வார். இது வழமையாய் நடக்கிறதுதானே.’ 

“ஐயா நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்கோ. பிறகு நான் என்ன செய்யவேணுமென்டு நீங்களே சொல்லுங்கோ. நான் அதன்படி செய்யிறன்”. 

மன்றாட்டமாய்க் கூறுகின்றார் குட்டான் சண்முகம் வாத்தியார். 

“சரி சொல்லடா” 

“ஏன்ரை மனிசி செல்லம்மா நித்திரையால எழும்ப நேரம் செண்டு போச்சாம். அதோடை அவ பால் புட்டு அவிச்சவவாம் உங்களுக்கும் சேர்த்துத்தான்”. மனேச்சரின் கோபம் தணிகின்றது. 

“பால்புட்ட எனக்கும் கொண்டந்தனியே?. எடு அதை எடு” 

ஆவலாய் மனேச்சர். 

“உங்கட புட்டை அது வீட்ட வைச்சிருக்காம். உங்களை வரட்டாம்”. சுண்முகம் வாத்தியார் பூடகமாய்க் கூறுகின்றார். 

“சரி நீ உன்ரை வகுப்புக்கு போய் படிப்பி”. 

மனேச்சர் அடுத்த வகுப்பிற்குச் செல்கின்றார். 

சங்கரன். 

சக்கரை. 

கரும்பலகையில் எழுதுகின்றார் குட்டான் வாத்தியார். 

சிறிய பனங்கட்டிக் குட்டான் மாதிரி இருப்பதால் அவரை குட்டான் வாத்தியார் என்று கூறுவார்கள். 

பின்னால் நின்று குட்டான் என்று அவரது வகுப்புப் பிள்ளைகளும் கூப்பிடுவார்கள். 

“எல்லாரும் எழும்புங்கோ” 

“இருங்கோ” 

“எழும்பு” 

“இரு” 

நான்கைந்து தடைவைகள் மாணவர்களை அவர் எழுப்பி இருத்துகின்றார். 

“முத்துவேலு எழும்படா”. 

முத்துவேலுவின் கையில் பிரம்பைக் கொடுக்கின்றார். 

சங்கரன், சக்கரை என்று பிரம்பால் கரும்பலகையிலுள்ள சொற்களை சுட்டிக்காட்டியவாறு சொல்கின்றான். 

மாணவர்கள் சங்கரன் சக்கரை என்று கூறுகின்றனர். 

“சங்கரன் சக்கரை” முத்துவேலு திரும்பத்திரும்ப சொல்கின்றான். 

“சங்கரன் சக்கரை” என்று மாணவர்களும் திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருக்கின்றனர். 

குட்டான் வாத்தியார் நித்திரை. 

நான் எங்கள் வகுப்பிலிருந்து வெளியே வருகின்றேன். 

எங்கள் வகுப்பு குட்டான் வாத்தியாரின் வகுப்புக்கு அடுத்து இருக்கின்றது. 

“வாத்தியார் வாத்தியார்” 

நான் அவரைத் தட்டி எழுப்புகின்றேன். 

ஆழ்ந்த நித்திரையிலிருந்த அவர் திடுக்கிட்டு எழுகின்றார். 

“என்ன, என்ன?” 

பதைபதைத்து என்னைப்பார்த்துக் கேட்கின்றார். 

“வாத்தியார் சங்கரன் ஆறு மாதங்களாய் சக்கரை தின்னுறான் இன்னும் அவன் சக்கரையை திண்டுமுடிக்கேல்லையே?”. 

நான் குட்டானைக் கிண்டலாய்க் கேட்கின்றேன். 

அவரை நான் கேலி செய்கின்றேன் என்பது புரிந்து விட்டது. அவருக்கு கோபம் வருகின்றது. அவர் தனது சினத்தை வெளிக்காட்டவில்லை. 

“தம்பி சுந்தரம்” 

“என்ன வாத்தியார்?” நான். 

“மண்கிண்டியளின்ர பிள்ளையளுக்கு படிப்பெதுக்கு? அதுதான் படிச்சுக் கிழிச்சுப் போடுதுகளே?” 

எனக்கு கோபம் வருகின்றது. நான் அவரை முறைத்துப் பார்க்கின்றேன். அவர் என்னைப் பார்த்தும் பாராமலும் அலட்சிய பாவத்துடன் கூறினார் “இஞ்சை படிப்பும் சரியில்லை பழக்கவழக்கங்களும் சரியில்லை. அதுதான் நாங்கள் எங்கட பிள்ளையளை யாழ்ப்பாணப் பட்டிணத்திலயுள்ள பெரிய பிரபலமான பள்ளிக்குடங்களுக்கு காரிலை அனுப்பியிருக்கிறம்’. பெருமையுடன் கூறுகின்றார் சண்முகம் வாத்தியார். 

“எடே குட்டான்!” 

சண்முகம் வாத்தி திகைக்கின்றான். 

“உன்ரை அப்பன் மண்கிண்டி. நீயும் மண்கிண்டிதானேடா?”. 

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *