வட்டத்திற்குள் வட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 52 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்கத்தா பல்கலைக்கழக பழைய மாணவர் சந்திப்பு முடிந்தது. பழைய மாணவர் சங்கத்தில் எழுபது உறுப்பினர்கள். சந்திப்பிற்கு வந்தவர்கள் பதினேழு. மாணவர்கள் சந்தித்த மண்டபத்திலிருந்து பஸ்நிலையம் கூப்பிடு தூரத்தில். 

சுந்தரம் பயணிக்கவேண்டிய பஸ் சற்றுமுன்னர்தான் புறப்பட்டது. அடுத்த பஸ் ஒருமணி நேரத்தின்பின் தான் புறப்படும். 

நாங்கள் ஐவர். சுந்தரத்தை தனியே விட்டுச்செல்ல எங்களுக்கு மனம் ஒப்பவில்லை. 

ஒருமணி நேரமும் என்ன செய்வது என்ற கேள்வி எம்முன். 

“பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ‘சுபாஸ் கபே’ல் ‘ரீ’ குடித்து நேரத்தைப் போக்கலாமே”. 

சந்திரன் ஆலோசனை கூறுகின்றான். 

“நாங்கள் சிற்றுண்டி தேனீர் குடித்து அரை மணி நேரம்கூட ஆகவில்லையே” பசுபதி கூறுகின்றான். 

“எங்கடை வீடு பக்கத்திலைதான் வாங்கோ போவம்’ செல்லத்துரை எங்களை அழைக்கின்றான். 

“ஓமோம் இது நல்ல யோசனை. பக்கத்திலைதானே துரையின்ர வீடும். ஒரு மணி நேரம் அங்கை இருந்து எங்கடை கல்லுாரி நாட்களை இரைமீட்டு சந்தோசிக்கலாம்”. 

செல்வராசா உற்சாகமாய் இந்த ஆலோசனையை வரவேற்கிறான். 

சுந்தரம் தயங்குகின்றான். 

“அப்ப நாங்கள் என்ன செய்யிறது?”. வேலாயுதம் கேள்வி. 

“வேணுமெண்டால் நீங்கள் அங்கை போங்கோ. நான் கடைத்தெருப்பக்கம் போட்டு வாறன்”. சுந்தரம் கூறுகின்றான். 

“நாங்கள் உனக்காகத்தானே மினக்கெடுகிறம். ஆனா நீ எங்களோடை ஒத்துப் போகாட்டி என்ன அர்த்தம்?”. வேலாயுதம் விசனத்துடன் சுந்தரத்தைக் கேட்கின்றான். 

“நான் உங்களை நிற்கச் சொன்னனானே” சினந்து சுந்தரம் கேட்கிறான். 

“சரி சரி இந்த சின்ன விசயத்தை நாங்கள் ஏன் பெரிசு படுத்துவான்? எங்களோடைசேர்ந்து வர அவருக்கு இஷ்டமில்லையெண்டால் அவர் வராட்டிப் போகட்டும் நாங்கள் போவம்”. வேலாயுதம் கடுப்பாய்க் கூறுகின்றான். 

“சரியில்லை சுந்தரம் ஒண்டாய் வந்த நாங்கள், இப்ப ஒண்டாய் போவம்’. 

“நீங்கள் வற்புறுத்திறியள். நான் வாறன் உங்களோடை”. சுந்தரம் தயங்கித் தயங்கி கூறுகின்றான். 

நாங்கள் ஐவரும் செல்லத்துரையின் வீட்டு விறாந்தையில எங்கள் கல்லுாரி நாட்களில் நடந்த இனிமையான சம்பவங்களை இரை மீட்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றோம். 

வீட்டை ஒட்டினாற்போல் கள்ளுக்கொட்டில். மூன்று நாலு பேர் கள்ளுக் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். 

சிறிது நேரத்தில. செல்லத்துரையின் இளைய சகோதரி ‘பிளேன்ரீ’ கொண்டு வருகிறாள். 

நாங்கள் ஒவ்வொருவரும் ‘ரீ’ யை எடுத்துக் குடிக்கிறோம். சுந்தரம் ‘ரீ’க் கோப்பையைத் தொடவில்லை. 

எனக்கு மனக்கொதிப்பு ஆனால் நான் வெளிக்காட்டவில்லை. மீண்டும் பழையபடி நினைவுத்தடத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். 

செல்லத்துரையின் தம்பி ஒரேஞ் பார்லி போத்தல் ஒன்றைக் கொண்டுவந்து வைக்கின்றான். 

“சோடாவை உடைத்து வை” 

துரையர் தம்பியாருக்கு கூறுகின்றார். 

துரையரின் தம்பி சோடாப்போத்தல் மூடியைத்திறந்து கிளாசில் சோடாவை ஊற்றுவதற்கு முனைகின்றான். 

“தம்பி சோடாவைக் கிளாசில் ஊற்றாதை”. நான் தடுக்கின்றேன். 

ஏல்லோரும் என்னை வியப்புடன் பார்க்கின்றனர். 

”சுந்தரமாக்களுக்கு கிளாசிலை குடிச்சுப் பழக்கமில்லை. அவை போத்தலிலைதான் குடிச்சுப் பழக்கம்”.

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *