அலையரசி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 28, 2026
பார்வையிட்டோர்: 25 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(ஓர் வரலாற்றுத் தேடல்)

அந்தக் குளிரூட்டப்பட்ட அறையின் அமைதியைக் குலைத்துக் கீபோர்டின் தட்டச்சு சத்தம் மட்டும் நெடுநேரம் கேட்டுக் கொண்டிருந்தது. யாழினி தன் மடிக்கணினியின் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியை. அவளது மேசையில் ‘மகாவம்சம்’ நூலின் பிரதிகளும், கிரிந்த கல்வெட்டுகளின் புகைப்படங்களும் சிதறிக் கிடந்தன.

“விகாரமகாதேவி… வெறும் புராதனக் கதையா? அல்லது வரலாற்றிற்குள் திணிக்கப் பட்டிருக்கிற பேரதிர்வா? இளவரசியா? குருதி குடிப்பவளா ? தேவதையா ? என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.

அவளது தேடல் வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடவில்லை. காலத்தின் தூசியை உதறி, ஒரு பெண்ணின் தியாகத்தின் உண்மையான பரிமாணத்தை, இன்றைய நவீன உலகிற்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்பதே அவளது லட்சியம். ஒரு தேர்ந்த கதைசொல்லியைப் போல, அவளது மனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்குள் மெல்லப் பிரவேசித்தது.

கதையின் புள்ளிகள் களனி நகரில் இருந்து தொடங்கின. அது ஒரு தீவின் வரலாறு மட்டுமல்ல, அதிகாரத்தின் ஆணவத்திற்கும், ஒரு பெண்ணின் பேரன்பிற்கும் இடையே நடந்த மௌனப் போர்.

சுத்தமான இளங்காற்று முகத்தை வருடிய, பண்டையகாலத்துக் காலைப் பொழுதில், களனி கங்கையின் அலைகள் வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமாக கரைகளில் மோதிக்கொண்டிருந்தன. களனி நாட்டு மன்னன் களனி திஸ்ஸன் தன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அவனது முகம் கோபத்தாலும், சந்தேகத்தாலும் சிவந்திருந்தது.

“இது மாபெரும் அரச துரோகம்! என் அந்தப்புரத்து ரகசியங்களை ஒற்றறிய ஒரு பௌத்த துறவிக்கு இவ்வளவு துணிச்சலா? துறவறம் பூண்ட ஒருவன், உலக ஆசைகளைத் துறந்தவனாக அல்லவா இருக்க வேண்டும்? அப்படியிருக்க, எனது அரண்மனை அந்தப்புரத்தின் அந்தரங்கங்களை அவன் ஏன் உளவு பார்க்க வேண்டும்? காவியுடை அணிந்ததனால் மட்டுமே அவன் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது. மன்னனின் கோபத்திற்கு முன்னால் துறவி மட்டுமல்ல கடவுளும் சர்வ சாதாரணமே. அந்த பெளத்த துறவியை உடனடியாக என்முன் இழுத்து வாருங்கள்; அவனது துரோகத்திற்கு தகுந்த தண்டனையை நானே வழங்குகிறேன்!” என்று கர்ஜித்தான். 

மன்னனின் கட்டளைப்படி, அந்தத் துறவி கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் இடப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். 

களனி திஸ்ஸ மன்னனின் அந்த அவசரமான, தீர்ப்பினால்  உயிரிழந்த அந்தப் பௌத்த துறவி முற்றிலும் நிரபராதி, ஏதுமறியாதவர் என்ற உண்மையை மன்னன் காலங்கடந்து அறிந்த போது கலங்கிப்போனான்

அந்தோ! என்ன பிழை செய்தேன்! அவசர ஆத்திரத்தால்  நரகக் குழிக்குள் அல்லவா என் தேசத்தைத் தள்ளிவிட்டேன்!

உலக ஆசைகளைத் துறந்த அந்த உத்தம சீலரின் மேல், வீண் பழி சுமத்தினேனே! அந்தப் பௌத்த துறவி ஏதுமறியாத பனிமலரா ???

அந்தப்புரத்து ரகசியங்களை ஒற்றறியும் இழிந்த எண்ணம், அந்தப் புனிதமான துறவியின் நெஞ்சில் எப்படி வரும் ?? உண்மை அறியாமல், தீர விசாரிக்காமல், காவி உடையின் மாண்பைச் சிதைத்துவிட்டேனே!

அரசனின் கடமை நீதியைக் காப்பது, ஆனால் நானோ, சந்தேகப் பேய்க்குப் இடங் கொடுத்து, புத்தியிழந்து ஒரு நிரபராதியின் உயிரை இந்த மண்ணில் வீழ்த்திவிட்டேன்! ஐயோ… அந்த மாமுனிவர் சிந்திய ஒவ்வொரு துளிக் குருதியும், இன்று என் செங்கோலைச் சுட்டெரிக்கிறது! உளவு பார்த்தான் என்று நான் கூச்சலிட்ட வார்த்தைகள் யாவும், இன்று என் காதுகளிலேயே மரண ஓலமாய் ஒலிக்கின்றனவே ??

தேரா மன்னா! செப்புவது கேளாய்! என்று தவறான தீர்ப்பிட்ட அன்றைய  மதுரை மன்னையும் மண்ணையும்  தன் சிலம்பால் எரித்தாள் 

 கற்பரசி கண்ணகி. அந்த மதுரை மன்னனைப்போலவே 

நீதியின் நெறி தவறிய மூட வேந்தனே! அறம் துறந்து, ஆத்திரத்தால் நீ அளித்த தீர்ப்பு, இந்த அகிலத்தையே உலுக்கிவிட்டதை இன்னும் நீ உணரவில்லையா?

இதோ பார்! பழிபாவத்திற்கு அஞ்சாத உனது செங்கோலை முறிக்க, இதோ பிரளயமாய் எழுந்து வந்துவிட்டது கடல்! சாந்தமாய் இருந்த அலைகள் யாவும், இன்று சினங்கொண்ட பேரலைகளாகச் சீறிப் பாய்கின்றன. வானமே இடிந்து விழுவது போல் மேகங்கள் கர்ஜிக்கின்றன. நீ கொன்ற அந்தத் துறவியின் குருதிக்கு நியாயம் கேட்க, இயற்கையே தன் நீலப் பட்டாடையைக் களைந்து, பிரளயக் கோலம் பூண்டு உனது எல்லையை நோக்கி ஓடி வருகிறது!

பூமி நடுங்குகிறது! கடல் கொதிக்கிறது! பேரலைகள் மாளிகைகளையும், கோபுரங்களையும் சுருட்டி எறிந்து, உனது ஆணவத் தலைநகரைக் கடலுக்குள் இழுத்துச் செல்லத் துடிக்கின்றன.  ஒரு துறவியின் உயிரைப் பறித்த உனது கரம், இன்று ஒட்டுமொத்த களனி தேசத்தின் கழுத்தையும் நெரித்துவிடப் போகிறது !

இன்று உனது அநீதியான தீர்ப்பால், உனது தேசத்தையே விழுங்கத் துடிக்கிறது இந்த மகா கடல்!இயற்கையின் இந்தத் தண்டனைக்கு முன்னால் உனது வாளும் வீரமும் எம்மாத்திரம்? பதில் சொல், மன்னா என்று மன்னனை நோக்கி கேள்வி எழுப்பினார்கள்அரச சபையின்  மகாஞானிகள். 

மன்னன் தாரைதாரையாக கண்ணீர் வடித்தபடி தலை கவிழ்ந்திருந்தான்

 அதிகாரக் கண் என்றும்  உண்மைகளை குருடாக்கிவிடும். புனிதமான மண்ணில் சிந்திய பெளத்ததுறவியின் புனித இரத்தம், இயற்கையின் சமநிலையைக் குலைத்தது.

அரண்மனை மாடத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த இளவரசி விகாரமகாதேவியின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. “அதிகாரத்தின் பசிக்கு ஒரு புனித உயிர் பலியா? இதற்கான விலையை இந்த நாடு கொடுக்க வேண்டியிருக்குமே…”அவள் அன்புத் தந்தையாகிய மன்னன் உட்பட அனைவரும் அழிய வேண்டி வருமே என்று அவள் அஞ்சினாள். அவளது அச்சம் பொய்க்கவில்லை.

மறுநாள் விடியல் ஒரு பேரழிவிற்காகப் பிறந்தது. பூமி அதிர்ந்தது. கடல் நீர் பல நூறு அடிகள் பின்வாங்கியது.  களனிதேச மக்கள் அனைவரும் விசித்திரமான அந்த அமைதியைக் கண்டு மிரண்டனர். அடுத்த சில நிமிடங்களில், மலையளவு உயர்ந்த கறுத்த அலைகள் கரையை நோக்கிப் பாய்ந்து வந்தன. நவீன உலகம் ‘சுனாமி’ என்று அழைக்கும் அந்த ஆழிப்பேரலை, அன்று களனிப் பிரதேச எல்லையை விழுங்கத் தொடங்கியது.

“கடல் தெய்வங்கள் கோபம் கொண்டுவிட்டன! மன்னனின் பாவமே இதற்குக் காரணம்!” என்று மக்கள் அலறினர்.

அரண்மனைக்கு ஓடிவந்த நிமித்திகர்கள், “மன்னா, இந்தச் சீற்றம் அடங்க வேண்டுமானால், அரச குடும்பத்தின் இரத்த வாரிசைச் சேர்ந்த ஒரு உயிர் கடலுக்குப் பலியாக வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த களனித் தேசமும் கடலுக்குள் மூழ்கிவிடும்” என்று ஆருடம் சொன்னார்கள்.

மன்னன் நடுங்கினான். தன் தவறுக்காகத் தன் நாடே அழிவதை அவனால் தடுக்க முடியவில்லை. தன்னுயிர் கொடுத்து  நாட்டைக் காக்கும் தியாகம் செய்யும் கடவுள்கள், இங்கு யார்? அப்படி எவரும் இருக்கின்றார்களா? 

அரச சபையில்் மௌனம் நிலவியபோது, மெல்லிய சிலம்பொலி கேட்டது. கூட்டத்தைப் பிளந்துகொண்டு முன்வந்தாள் இளவரசி விகாரமகாதேவி. அவளது முகத்தில் பயமில்லை, மாறாக ஒரு தெய்வீகத் தெளிவு இருந்தது.

“தந்தையே, உங்கள் பாவம் இந்த அப்பாவி மக்களை அழித்து விடக் கூடாது. இந்த நாட்டின் மண்ணையும் மக்களையும் காக்க என்னை நான் கடலுக்கு அர்ப்பணிக்கிறேன்,” என்றாள் தீர்க்கமான குரலில்.

“அன்பு மகளே, நீ தான் நாட்டின் ஒரே வாரிசு!” என்று மன்னன் கதறினான்.

“மக்களே இல்லாத நாட்டில் கிரீடத்திற்கு என்ன மதிப்பு? என் மரணம் இந்த அலைகளை அடக்குமானால், அதைவிடப் பெருமை வேறில்லை, என்று கூறிவிட்டு, அவள் கடலை நோக்கி நடந்தாள். 

அங்கு அரண்மனையின் தங்கப் படகு ஆயத்தமாக்கப்பட்டது. அதில் “இது ஒரு மா மன்னனின் மகள்” என்று பொறிக்கப்பட்டது. அவள் அந்தப் படகில் ஏறியபோது, ஒட்டுமொத்த களனி நாடும் கண்ணீரில் மூழ்கியது.

தங்கப் படகு ஆழ்கடலுக்குள் தள்ளப்பட்டது. விசித்திரமாக, விகாரமகாதேவி ஏறிய அடுத்த சில நிமிடங்களில், கரையை நோக்கி வந்த மாபெரும் சுனாமி அலைகள் அப்படியே பின்வாங்கின. கடல் அமைதியானது. நாடு காப்பாற்றப்பட்டது.

ஆனால், அந்த இளம் இளவரசியின் பயணம் பெரு அலைகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது. நாட்கள் நகர்ந்தன. கடலுள் தத்தளித்த அவளைப் பசியும் தாகமும்  வாட்டின. சுட்டெரிக்கும் சூரியனும், இரவின் குளிரும் பசியும், தாகமும்  அவளது உடலை பலவீனப்படுத்தினவே தவிர, அவளது மன உறுதியைக் குலைக்கவில்லை.

“நான் இறப்பதைப் பற்றி கவலையில்லை, ஆனால் என் தேசத்திற்கு இன்னும் ஏதோ ஒரு கடமை எஞ்சியிருப்பதாக என் உள்மனம் சொல்கிறது,” அதற்காகவே கடல் அன்னை என்னை இன்னமும் கொல்லாமல் அலைக்கின்றாள் என்று அவள் அலைகளின் பேரோசைக்கு நடுவே தனக்குத்தானே பேசிக் கொண்டாள். அவளது படகு இலங்கையின் தென்பகுதியை நோக்கி மிதந்து சென்றது.

இலங்கையின் தென்பகுதியான ருகுணு நாட்டின் ‘கிரிந்த’ கடற்கரை. அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள், கடலில் ஒரு தங்கப் படகு மிதந்து வருவதைக் கண்டனர். அதில் ஒரு தெய்வீக மங்கை மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்டு, உடனே ருகுணு நாட்டு மன்னன் காகவண்ண திஸ்ஸனுக்குச் செய்தி அனுப்பினர்.

விரைந்து வந்த மன்னனுக்கு முதலில் விபரம் புரியவில்லை. அரண்மனை மந்திரியார் இவள்  களனி இளவரசி. நாட்டைக்காக்க தன்னுயிரைத் தந்த தேவதை என்றார்.

அவளது வீரத்தையும் தியாகத்தையும் கேட்டு வியந்து போனான் மன்னன் . தன் இலங்கைத் தேசத்தைக் காக்கத் துணிந்த அந்தப் பேரரசியை, தன் நாட்டின் மகாராணியாக்கிக் கொண்டான்.

யாழினி தன் கணினியில் தட்டச்சு செய்வதை நிறுத்தினாள். “இங்குதான் கதையின் அடுத்த திருப்பம் தொடங்குகிறது. விகாரமகாதேவியின் தியாகம் அவளோடு முடியவில்லை. அது அவளது இரத்தத்தின் வழியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டது,” என்கின்ற வரலாற்றை வாசித்து, அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கினாள்.

விகாரமகாதேவி கர்ப்பமுற்றாள். அந்த வீரத் தாயின் வயிற்றில் வளர்ந்தது சாதாரணக் குழந்தையல்ல, இந்தத் தீவின் வரலாற்றையே மாற்றியமைக்கப் போகும் ஒரு மாவீரன். கர்ப்ப காலத்தில் சாதாரண தாய்களுக்கு மாங்காய் அல்லது புளி சாப்பிட ஆசை வரும். ஆனால் அவளுக்கு விசித்திரமான, பயங்கரமான ஆசைகள் ஏற்பட்டன.

அவள் தன் கணவனிடம், “மன்னா, எனக்கு ஒரு விசித்திரமான ஆசை. வடக்கே அநுராதபுரத்தை ஆளும் எல்லாள மன்னனின் முதன்மைப் படைத் தளபதியின் தலையை வெட்டி, அந்த வாளைக் கழுவிய நீரைக் குடிக்க வேண்டும். மேலும், அநுராதபுரத்தின் புனித போதி மரத்தின் அருகில் உள்ள குளத்து தாமரை மலர்களை நான் சூட வேண்டும்,” என்றாள்.

இது சாதாரண ஆசையல்ல, போருக்கான அறைகூவல். எல்லாளன் ஒரு பலமிக்க தமிழ்ப் பேரரசனாக அநுராதபுரத்தை ஆண்ட பெருமன்னன் . அவனது தளபதியின் தலையைக் கொய்து வருவது மரணத்தோடு விளையாடுவதற்குச் சமம். ஆனால், காகவண்ண திஸ்ஸன் தன் பிரிய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்தான். 

படையெடுத்துப் போர்செய்ய பயந்து  தன் ஒற்றர்களை அனுப்பி, பெரும் ஆபத்துகளுக்கு மத்தியில் இரவோரிடரவாக தளபதியைக் கொன்று அவள் ஆசையை நிறைவேற்றினான்.

தளபதியின் தலை வெட்டப்பட்டு, அந்த வாள் கழுவப்பட்ட நீரை விகாரமகாதேவி குடித்தாள். அவளது கண்கள் சிவந்தன. அவளுக்குள் ஆரம்பத்திலிருந்த தியாக உணர்வு இப்போது அச்சமூட்டும் வீர உணர்வாக மாறியிருந்தது.

சில மாதங்களில், அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்குத் ‘துட்ட கெமுனு’ என்று பெயரிட்டனர். தாயின் வயிற்றில் இருந்தபோதே எல்லாளஅரசுத் தளபதியின் இரத்தத்தை சுவைத்தவன் அவன். தாய் வயிற்றிலேயே குருதியையும், அரச ஆசையையும் சுவாசித்த அந்தக் குழந்தை, வளர்ந்து ஒரு மூர்க்கமிக்க போர்வீரனாக மாறினான்.

அவன் வெறும் வாள்வீச்சை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. தன் தாயின் தியாகக் கதையைக் கேட்டு வளர்ந்தான். “தன் மக்களுக்காக உயிரையே கொடுக்கத் துணிந்தவள் என் தாய். இந்த நாட்டை அன்னியர்களிடமிருந்து மீட்பதே என் லட்சியம்” என்று அவன் சபதமேற்றான்.

மகாவம்சத்தில் நல்லவனாகப் போற்றப் படுகிற இந்த துட்ட கெமுனு நல்லவனா ? கெட்டவனா? 

தமிழனான எல்லாளன் இவனுக்கு அன்னியனானது எப்படி ? இலங்கையெங்கணும் இதற்காக இன்றுவரை குருதியோடுவது ஏன் ?? விகாரமகாதேவி ஏன் தமிழன் குருதியை குடிக்க விரும்பினாள்? 

யாழினி தன் கணினியின் திரையை மூடினாள். விடியற்காலை ஐந்து மணி. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் மரங்களில் இருந்து பறவைகளின் சத்தம் கேட்கத் தொடங்கியது. அவள் தன் காரை எடுத்துக்கொண்டு நேராக அந்தப் பூங்காவிற்குச் சென்றாள். பிரித்தானியர் அமைத்த இந்த  விக்ரோறியா பூங்காவை “விகாரமாதேவி பூங்கா” என்று பெயர் மாற்றி   வைத்த பெருந்தகை   இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க.  விகார மகாதேவியின் கனவான   ஒரே தேசம், ஒரே மொழி என்பதற்கிணங்க இலங்கையின் மொழி தனிச் சிங்களமே என்று மாற்றிய தலைவர். 

பூங்காவின் மையத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் விகாரமகாதேவியின் சிலைக்கு முன்னால் நின்றாள்.

“அரசியே… நீ அன்று கடலில் இறங்கிய தியாகமும், உன் மகனுக்கு நீ ஊட்டிய வீரமும் வெறும் பழங்கதைகள் அல்ல. ஒரே தேசம் என்கிற உன் கனவு  இன்றும் இந்த நாட்டில் குருதிப் பேராற்றையல்லவா ஓடச் செய்கிறது. அன்னையே நீ சிங்கள மனதில் வாழும் வீர தேசியம். ஆனால் நானோ… கபடத் தனத்தால் தோற்றுப் போன எல்லாளன் வாரிசு … அதிகாரத்தின் தவறுகளுக்குப் பெண்கள் பலியாவதும், பின்னர் அவர்களே அந்தத் துயரத்திலிருந்து மீண்டும் ஓர் புதியதொரு அதிகாரத்தைப  படைப்பதும் தான் பெண்களுக்கான வேலையா?  சொல் அன்னையே… விகாரமகாமேவி சிலையை உலுக்கினாள். 

யாழினி எழுதிய  இந்தக் கதை இன்னமும் முடிவற்றிருந்தது. ஆரம்பத்தில் தேடலாகத் தொடங்கிய யாழினியின் பயணம், இப்போது ஒரு தெளிவை அடைந்திருந்தது. விகாரமகாதேவி என்பவள் எப்போதோ பிறந்து மறைந்த ஒரு அரசி மட்டுமல்ல; அவள் தியாகத்தின், பொறுமையின், மற்றும் தேவைப்படும்போது இனங்களுக்கிடையே அணுக்குண்டாக வெடிக்கும் வீரத்தின் நவீனக் குறியீடு.

அந்தப் பூங்கா குளிர் காற்றிற்குப் பதிலாக வெப்பக் காற்றை  யாழினியின் முகத்தில் மோதியது. தூரத்தே சுனாமி அலைகளின் சத்தம் கேட்பது போல அவளுக்கு ஒரு பிரமை. ஆம், அந்த அலைகள் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன: “தன் தேசத்தை நேசிக்கும் பெண்களின்  தியாகத்திற்கு மரணமே இல்லை!”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *