கூகுள் குப்புசாமி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 110 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

“அண்ணா வணக்கம்! என்ன இந்த நேரத்துல கூப்பிடுறீங்க, ஏதாவது அவசரமா?”

காலையில் 6:00 மணிக்குத் தொலைபேசியில் அழைத்த என் சகோதரனிடம் சந்தேகத்துடன் கேட்டேன்.

“ஆமாம், அந்த நாகராஜ் செத்துப் போயிட்டானாமே!”

“எந்த நாகராஜ் அண்ணா?”

“அதானப்பா நீ சொல்லுவியே… அறிவுஜீவி, மேதாவி, எந்தச் சப்ஜெக்ட்டா இருந்தாலும் அதுல எல்லாம் தெரிஞ்ச மாதிரி சந்தேகக் கேள்வி கேட்பான்னு… அந்த மணி!”

“ஓஹோ, ஸ்டேட் பேங்க் கிளார்க்?”

“ஆமா, அவனேதான்!”

“ஏன், என்னவாம்?”

“தெரியல, நேத்து எங்கேயோ ஒரு கெடா வெட்டுக்குப் போயிட்டு சாப்பிட்டு வந்து படுத்துருக்கான். சாயந்தரம் நெஞ்சு கரிக்குதுன்னு வைஃப் கிட்ட சொல்லிருக்கான். உடனடியா அவங்க குமரன் ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் வரச்சொல்லி அங்க போயிருக்காங்க. அப்புறம் என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்துட்டு ‘மேசிவ் ஹார்ட் அட்டாக்’ (Massive Heart Attack) அப்படின்னு சொல்லி ஐ.சி.யூ-வுல வச்சிருந்துருக்காங்க. நைட்டே போயிட்டானா இல்லையான்னு தெரியாது, ஆனா இப்ப 5:30 மணிக்குத்தான் எனக்குத் தகவல் சொன்னாங்க. சரின்னு உடனே உன்ன கூப்பிட்டுச் சொல்றேன், அவ்வளவுதான் எனக்குத் தெரியும். பாடி எப்படியும் சாயந்தரம்தான் வரும். நாம கிரவுண்டுக்கு போயிட்டு வந்து 11 மணிக்குக் கூட போலாம், அவ்வளவுதான்.”

“வெரி குட்… ஊரில் ஒரு அறிவுஜீவி காலமாகிவிட்டார்!”

நாகராஜ் இறந்து போனது தெரியாமல், நஞ்சப்பா உயர்நிலைப் பள்ளி காலை நடைப்பயணத்திற்கும், பல்வேறு மற்ற விளையாட்டு சார்ந்த விஷயங்களுக்கும் தயாராகிக் கொண்டிருந்தது.

நாகராஜ் ஒரு எம்.காம் (M.Com) பட்டதாரி. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடைசிப் பதவி உயர்வாக ‘துணை மேலாளராகப்’ பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் சக வயதுத் தோழர்களை விடவும் அதிகமாகப் படித்தவர் என்பதாலும், அவருடைய ஒரே மகள் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து நல்ல பதவியில் இருப்பதாலும், அவருக்கு எப்போதுமே தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் மற்றவர்களைக் காட்டிலும் தான் ஒரு அறிவுஜீவி என்று நம்புபவர். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும், எவரிடத்தும், எந்த விஷயங்களிலும் தன்னுடைய அதிமேதாவித்தனத்தை நிரூபிப்பதற்காக அதிகம் மெனக்கெடுவார். ஆதலால் பல்வேறு குழுக்களில் அவருக்குப் பல்வேறு பட்டப்பெயர்கள் உண்டு.

எனக்கும் அவருக்கும் அடிக்கடி இந்த விஷயத்தில் கருத்து மோதல்கள் ஏற்படுவது வாடிக்கை. இதன் காரணமாக ஒரு சில விஷயங்களில் நான் அவரிடத்தில் அவ்வளவாக அளாவுவதில்லை.

ஆனால், இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி எங்களுக்கு இடையேயான அந்தக் கருத்துப் பரிமாற்றங்களில் முரண்பாடு ஏற்படுத்தி, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் முடிந்தது.

அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து முதல் கோல் அடித்தவுடன் தற்காப்பு நிலை எடுத்தது அவருக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றிப் பல்வேறு விதமான கருத்துக்களை அவர் கொண்டிருந்தார். அந்தப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும், அர்ஜென்டினா மிகவும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கையாண்டது என்றும் கூறினார். மேலும், அர்ஜென்டினாவின் முக்கிய டிஃபெண்டரான லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் (Lisandro Martínez) போட்டியின் இடையே காயத்தால் (அல்லது கார்டு வாங்கி) வெளியேறியதால் அர்ஜென்டினாவின் பாதுகாப்புப் பிரிவு பலவீனமடைந்தது; அப்படியிருந்தும் இங்கிலாந்து அணியால் அதைச் சாதகமாக்கிக் கொள்ள முடியாமல் தோற்றது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்பது அவரின் எண்ணமாக இருந்தது.

அதைப் போன்று VAR (Video Assistant Referee) பற்றியும் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. “கிரிக்கெட் அல்லது டென்னிஸ் போன்ற விளையாட்டுகளைப் போல் அன்றி, ஒவ்வொரு அணிக்கும் VAR மறுஆய்வு கோரும் வாய்ப்பு முற்றிலும் இல்லை. VAR தொழில்நுட்பக் குழு சம்பந்தப்பட்ட சம்பவங்களைத் தானாகச் சரிபார்க்கும். மேலும், VAR மறுஆய்வுக்கு என்று குறிப்பிட்ட காலவரம்பு இல்லை. ஆகவே, இதை உலகக்கோப்பை கால்பந்து நிர்வாகக் குழு தீவிரமாக மறுஆய்வு செய்ய வேண்டும்” என்றும் அவர் சொன்னபோது எனக்குச் சற்று வியப்பாகத்தான் இருந்தது.

“உலகளாவிய போட்டிகளை நடத்தும் ஒரு அமைப்பு இத்தகைய தவறுகளைச் செய்யுமா? அதாவது ஒரு சாதாரண கால்பந்து ரசிகன் குறை கூறும் அளவிற்குத்தான் அவர்களுடைய தயாரிப்பு இருக்குமா?” என்று கேட்டபோது, அவருக்கு மூக்கின் மேல் கோபமும் நாக்கின் நுனியில் ஆங்கிலமும் வந்து, “You are an idiot!” என்று சொன்னார். அத்துடன் அன்றைய வாக்குவாதம் நிறைவு பெற்றது.

அடுத்த நாளும் இதைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். “கோப்பைப் போட்டிகள் நடுநிலையாக நடப்பதற்கு, போட்டியில் பங்கேற்காத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நடுவராகும் முன்னுரிமையை அளிக்கிறார்கள்” என்றும், அன்றைய போட்டியில் யுவான் பார்டன் (Juan Bordon) நடுவர் என்றும், இவர் ‘மெஸ்டிஸோ’ (Mestizo) வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், இவர்கள் 1524 ஆம் ஆண்டில் எல் சால்வடார் மீது படையெடுத்து வென்றவர்கள் என்றும், இதனால் பிரான்ஸ் – ஸ்பெயின் இடையிலான போட்டியில் ஒரு பெனால்டி பற்றிய முடிவில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் என்றும் சொன்னார். இது எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது.

“என்ன இருந்தாலும் நீங்க ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, சகலகலாவல்லவன், கற்றறிந்த பண்டிதர்! நீங்க சொன்னா தப்பா இருக்குமா சார்? சரியாத்தான் இருக்கும்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

இந்தச் செய்தியை என் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளப் பலருக்கும் நான் தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னேன். அதில் ராமலிங்கத்திடம் சொல்லும்போது, அவன் எனக்கு வேறொன்றை ஞாபகப்படுத்தினான்.

“ஏப்பா, எப்படிப்பா அந்த ‘கூகுள் குப்புசாமி’ கூட நீ குப்பை கொட்டுற? எதைக் கேட்டாலும் உடனே அவனுக்குத் தெரிஞ்ச விஷயத்தை, அவனுக்குத் தெரிஞ்ச பாணியில அவன் சொல்றதுதான் சரி அப்படின்னு ‘முயலுக்கு மூணு கால்’னு நிக்கிறவனாச்சே அவன்!” என்று இறந்துபோன மணிக்கு ‘கூகுள் குப்புசாமி’ என்று ஒரு பட்டப்பெயர் இருப்பதையும் எனக்குத் தெரிவித்தான் நண்பன் ராமலிங்கம்.

அதைப் போன்று பல்வேறு நண்பர்களும் ‘அறிவுஜீவி’ என்றும், ‘மேதாவி’ என்றும் இன்னும் பல பெயர்களில் அவரை அழைத்தது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ, கூகுள் குப்புசாமி மறைந்துவிட்டார்… வருத்தம்தான்!

கூகுள் குப்புசாமியின் சில விசேஷ குணங்கள்: அவரிடம் இருப்பது Unlimited Data! இவரிடம் நீங்கள் விண்வெளி ஆராய்ச்சியைப் பற்றிக் கேட்டாலும் சரி, அல்லது பக்கத்து வீட்டுப் பஞ்சாயத்தைப் பற்றிக் கேட்டாலும் சரி, உடனே தேதி வாரியாக டேட்டா எடுத்துக்கொட்டுவதில் வல்லவர். காடு, மலை, கிராமம் என எங்கு சென்றாலும் இவருடைய அறிவு சிக்னல் எப்பொழுதும் ‘ஃபுல்’ ஆகத்தான் இருக்கும்; ‘No Signal’ என்பது இவர் வாழ்க்கையில் கிடையாது. அதேபோலவே, சில நேரங்களில் நீங்கள் எதுவும் கேட்காமல் இருந்தாலும், இவர் தானாகவே ஒரு ‘Search Engine’-ஆகத் தன்னை மாற்றிக்கொண்டு உங்களுக்குத் தேவையில்லாத பல தகவல்களைத் தந்து உங்களை அப்டேட் செய்துவிடுவதில் வல்லவர்.

பொதுவாகவே கூகுள் குப்புசாமிக்கும் ‘சாட் ஜிபிடி’ (ChatGPT) சின்னத்தம்பிக்கும் தான் போட்டி! இடையில் ‘விக்கிப்பீடியா’ வேலாயுதம் நுழைந்து இவர்கள் இருவரையும் குழப்பி, தானும் குழம்பி, அந்தக் காலை நேர நடைப்பயணத்தை வாட்ஸ்அப் வடிவேலு போன்று மாற்றிவிடுவதும் உண்டு.

கூட நடக்கும் நண்பர்கள் “காலை வணக்கம்” என்று சாதாரணமாய்ச் சொன்னால் கூட, அதற்கு ‘விடியலின் முக்கியத்துவம் மற்றும் சூரிய ஒளியின் நன்மைகள்’ என 500 வார்த்தைகளில் கட்டுரை வாசிப்பார்.

மார்கழி மாதம் வந்துவிட்டால் போதும்; இவருக்கும் ராமசாமிக்கும் ஒரு மணி நேர வேலை! அன்றைக்கு எந்தப் பத்திரிகையில் திருப்பாவை, திருவெம்பாவை பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார்கள், அந்தப் பாடல் யாருக்காக எழுதப்பட்டது, அதனுடைய சிறப்பு என்ன என்பதைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ஏறக்குறைய 30 வருடங்களாக இந்தக்கூத்து ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. என்ன செய்ய… பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது! தலைஎழுத்து…

காலை நடைப்பயிற்சி முடிந்து அமிர்தா ஹோட்டல் வந்து காபி சாப்பிடுவது, ஞாயிற்றுக்கிழமைகளில் வடையுடன் காபியும், அரை மணி நேரம் பக்கத்தில் இருக்கும் கடையில் காலியாக இருக்கும் திண்ணைப் பேச்சும் நிச்சயம்.

அப்படித்தான் ஒரு நாள் மூர்த்தி தன்னுடைய பழைய ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, பத்து முறை உதைத்தும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை; வெறும் கரும்புகை மட்டுமே வந்தது. உடனே கூகுள் குப்புசாமிக்கு வேர்த்துவிட்டது! மொபைலை எடுத்தார், “இருங்கப்பா பதறாதீங்க!” என்று கூகுளில் “ஏன் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை?” என்று ஒரு கேள்வி கேட்டார்.

“வண்டியோட சைலன்ஸர் குழாய்க்குள்ள கார்பன் அடைச்சிருந்தா ஸ்டார்ட் ஆகாதாம். அதனால வாய வச்சு சைலன்சர்க்குள்ள வேகமா ஊதணுமாம், அப்பதான் அடைப்பு நீங்குமாம்!” என்று சொல்ல, ‘சாட் ஜிபிடி’ சின்னத்தம்பியும் இந்த உரையாடலில் நுழைந்து, அவனுடைய மொபைலில் என்னென்னவோ கேள்வி கேட்டு, “அதற்கு உங்கள் எரிபொருள் தொட்டியில் (Fuel Tank) பெட்ரோல் இல்லாம இருக்கலாம் அல்லது ஸ்பார்க் பிளக்கில் (Spark Plug) மின்சாரம் பாயாமல் இருக்கலாம். எதற்கு ஒரு தகுதி வாய்ந்த மெக்கானிக்கை அணுகுவது சாலச்சிறந்தது! வாயால் ஊதினால் உங்கள் வாய்க்குள் கார்பன் துகள்கள் நுழைய வாய்ப்புள்ளது, ஆகவே வேண்டாம்” என்று சொல்ல, கூடியிருந்த எங்களுக்கு அன்றைய காலை சுவாரசியமாகச் சென்றது.

இவர்கள் மூவரும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் கீழே அமர்ந்து பெட்ரோல் டியூப்பைப் பிடுங்கி, பெட்ரோல் டேங்க் அடைப்பை நீக்கி வண்டியை உதைக்க… அது ஸ்டார்ட் ஆகிவிட்டது! இவர்கள் மூவரும் தாங்கள் சொன்ன எதுவுமே இங்கு வேலைக்காகவில்லை என்று தெரிந்ததும் ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி அமர்ந்துகொண்டதுதான் அன்றைய கிளைமாக்ஸ்!

“வணக்கம் புரொபசர்! சொல்லுங்க, எப்படி இருக்கீங்க? என்ன விசேஷம், திடீர்னு என்னோட நினைவு எப்படி வந்தது உங்களுக்கு?”

“ஒன்னும் இல்ல… அந்த மேனேஜர் நாகராஜ் இறந்துட்டாராமே, அப்படியா?”

“ஆமாம் புரொபசர், அப்படித்தான் சொன்னாங்க. நான் இன்னும் போகல… நீங்க இப்ப எந்த ஊர்ல இருக்கீங்க?”

“நான் மேட்டுப்பாளையத்துலதான் இருக்கேன். நேத்து ஊட்டில இருந்து இறங்கி வந்தேன். வந்த இடத்துல இந்தச் செய்தியைச் சொன்னாங்க. அதான் அங்கயும் வந்து துக்கம் விசாரிச்சுட்டு, உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்னு இருக்கேன். உங்க புரோகிராம் என்ன?”

“இன்னைக்கு ஒன்னும் ஸ்பெஷல் இல்லை. நீங்க எப்ப வர்றீங்கனு சொல்லுங்க, அதுக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிவோம். என்ன இருந்தாலும் உங்களுக்கே ஆலோசனை சொல்ற உங்க நண்பர்! அதனால அவருடைய சாவுக்கு நீங்க வர்றது ரொம்ப நல்லதுதானே, இல்லைங்களா?”

“ஆமாங்க… கண்டிப்பா வர்றேன்.”

“நல்லவேளை… அவரு உயிரோட இல்ல! இருந்திருந்தா ‘நீங்க எல்லாம் சொல்லி கொடுக்கறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? என்னவோ போங்க புரொபசர்’னு சொல்லி என்னைய ஒரு காச்சு காச்சி எடுத்துருப்பாரு!”

“போன தடவைக் கூட ELT (English Language Teaching) அதாவது ‘ஆங்கில மொழிவழிக் கற்பித்தல்’ முறையில எனக்கு ஒரு மிகப்பெரிய லெக்சரே எடுத்தாரு! ஒன்னாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒரு மாணவன் என்னென்ன ஆங்கிலச் சொற்களைக் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும், அதை எப்படி அந்த மாணவர்களுக்காகப் புத்தகம் எழுதுகிற ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்குனாரு. ‘சி.பி.எஸ்.இ’ (CBSE) மாணவர்கள் ஆறாம் வகுப்பில் படிக்கும்போது தோராயமாக 12,000 ஆங்கிலச் சொற்களைக் கற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் மாநில மொழிப் பாடத்திட்டத்தில் (State Board) இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைப் பயில்பவர்கள் வெறும் 2,000 ஆங்கிலச் சொற்களை மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள் என்றும், அதனால் மாநில மொழிப் பாடத்திட்டம் பயனற்றது என்றும் எனக்கு ஒரு மிகப்பெரிய வகுப்பே எடுத்தாரு! அதேபோன்று தமிழிலும் எப்படி இருக்க வேண்டும் என்றும் கொஞ்சம் சொன்னாரு. எனக்குத் தலை சுற்றாத குறைதான்! இருந்தாலும் என்ன செய்ய… பொறுத்துக்கத்தானே வேண்டும், நண்பர் ஆயிற்றே!”

“ஆமாங்க! அதுமட்டுமா… ‘சவுக்கு’ சங்கர்ல இருந்து அண்ணாமலை வரைக்கும் யாரைத்தான் அவரு விட்டு வச்சாரு! என்னமோ போங்க… எல்லாம் முடிஞ்சு போச்சு. சரி வாங்க, சாயந்தரம் வந்துருவீங்கள்ல?”

“நீங்க வர்றதைப் பொறுத்து என் சகோதரனிடமும் சொல்லிவிட்டு நாங்கள் இருவரும் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். நன்றி!”

நாகராஜன் வீட்டு வாசலில் சாமியான போட்டிருந்தது நண்பர்களும் உறவினரும் அதிகம் வருவார்கள் என்பதால் பிளாஸ்டிக் சேர்கள் 50க்கும் மேல காணப்பட்டன துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு அவருக்கு மிகவும் பிடித்தமான அமிர்தா ஹோட்டல் காபி வழங்கப்பட்டது.

வந்தவர்கள் நாகராஜன் கதையையும் சொந்தக் கதையும் பேசிக் கொண்டிருந்தார்கள் சாவு செய்திகளுக்கு கீத்துவம் தரும் அந்த நாளாந்தர பத்திரிக்கை பத்துக்கு மேல் அங்கே இருந்தன

வந்தவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதை பற்றி அறிய விரும்பவில்லை என்பதாலும் அதிக பிரசிங்கித்தனம் என்பதாலும் நாங்கள் நண்பர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தோம். ஆனாலும் அதையும் மீறி ஒரு நண்பர் சொன்ன செய்தி காதுகளுக்குள் தானாகவே பாய்ந்தது

இல்லைங்க முந்தாநாள் கூட என்கிட்ட பேசும்போது ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் எல்லாம் சுத்தமாக இல்ல இத பத்தி ரயில்வே மினிஸ்ட்ரிக்கு நம்ம பாராளுமன்ற உறுப்பினர் மூலமாக ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திருக்கிறேன் அவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டாலும் கேட்பாரு அப்படின்னு சொன்னாரு இதற்கு பதில் அளித்த மற்றொரு நண்பர் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை ரொம்ப அதிகமா பயன்படுத்தியவர் திருவிழா தான் இருக்கணும் என்று சொன்னதும் கேட்டது ஆக google குப்புசாமிக்கு இன்னொரு விதத்திலும் பொழுது நன்றாகவே போய்க் கொண்டிருந்ததாக தெரிந்தது

இவ்வளவு மகா குணம் பொருந்திய நாகராஜ் இறந்துவிட்டார் என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. இனி எப்படி எங்களுக்குச் சாட் ஜிபிடி, கூகுள், விக்கிப்பீடியா போன்றவை கிடைக்கும் என்பது சந்தேகமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *