கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை முத்தாரம்
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 143 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கயற்கண்ணி, நப்பின்னை! சங்கத் தமிழ் முழங்குகின்ற தமிழகத்துச் சோலையிலே இரு மயில்கள்! இணைந்திருந்து இன்பங் கூறுகின்ற இசைக்குயிலினங்கள்! மூத்தவள் முத்தெடுத்துக் கோர்ததது போல் சிரிப்புக்காரி – முழுநிலவு காட்டுகின்ற முகத்துக்காரி! மொண்டு தரும் சுவையனைத்தும் உண்டு களிப்பதற்கு உலகினிலே யாருக்கு வாய்ப்போ என்று ஊர் பேசும்: உவகை சிந்தும் பவள இதழ் கண்டு.

கற்கண்டு இன்னொருத்தி – வயதினிலே இளைய தோழி! தங்கம்மேனி…குணத்தினிலே கொஞ்சம் “கூனி”.

ஓடையிலே – குளிர் தென்றல் விதக்கின்ற மேடையிலே – அருவியோரத்து அழகுக் காவன் வாடையிலே – அவ்விருவர் ஆடிப்பாடி சோடிப்புள்ளெனவே பறந்திடுவார்! காண்போர் தம்மை மறந்திடுவார்!

கிரேக்கத்து எழலாளும் பவனத்துப் பெருமகளும் – தமிழகத்துக்கரையோரம் இவர்களைக் கண்டதனால மறுமூச்சு வாங்குதற்கும் மறந்து போனார் – தலை குனிந்தார் – நிலை குலைந்தார்…

தென்னகத்துச் சந்தனத்தை சரம். மலைப்பாம்பு- மயில் – மிளகு ஏற்றிச் செல்வதற்கும் – யானைத் தந்தத்தை வாயில் அடுக்கிப் போவதற்கும் வெளிநாட்டு வாணிபக் காமானகள் வரும்போது கயற்கண்ணி – நப்பின்னை இருவரையும் கண்டு விட்டா, ‘கிரேக்கத்தை, யவனத்தைப் பண்ட மாற்று செய்து கொள்வோம்: இந்தக் கிள்ளைகளைத் தந்திடுவீர்’ எனச் கேட்பார் என்று கூறி கிழட்டுப் பெண்டி ரெல்லாம் அவர் தம் அழகுக் கீர்த்தி தன்னை வியந்துரைப்பார்!

வைரம் பதித்திட்ட பவளவாய்ச் செம்புட்கள் தங்குதற்கு இதயக் கூண்டுதனைப் பெற்றிருக்கும் ஆடவர்தான் யாரோ – எந்த ஊரோ – என்ன பேரோ – எனப்பேசி வினாக்குறி முகங் காட்டிக் கலைந்தார் அவ்வூரார்!

“கயற்கண்ணி, நப்பின்னை தோழிதானே – நப்பின்னை நமதருந் தங்கை தானே – இவள் மூலம் முயன்று பார்த்தால் அந்தத் தித்திக்கும் செந்தேனை யார் கொள்வார்: நம்மை யன்றி!” என யெண்ணி உழைக்கலானான், மணிவேலன! மாணிக்கச் சிற்பத்தின் அண்ணன். மான், புலி, வேழம் கொள்வதையே தொழிலாய்க் கொண்ட பெரு வீரன்!

நல்ல தருணம் வாய்க்கின்ற போதெல்லாம் கயற்கண்ணி காதினிலே அண்ணனது அழகாற்றல் வலிவை யெல்லாம் அளந்தளந்து சலித்து விட்டாள் நப்பின்னை!

துடிக்கின்ற அண்ணனிடம் ஓர் நாள், “தொட்டவுடன் துவளுகின்ற தோகையல்ல கயற்கண்ணி! முயற்கொம்பே அவளிடத்தில் காதல் எதிர் பார்க்கும் வேலை யென்பேன்! எதற்கும் புலி கொன்று நகம் கொண்டு வருவாய்!… புலி நகத் தாலிகட்டும் போர்க்குடி மகனுக்கு ஒப்புவாய் என்று அவள் மனதை மாற்றுகின்றேன். அதுவும் முழு உறுதி அல்ல அண்ணா!” என மொழிந்து காட்டுக்கு அனுப்பி வைத்தாள்!


ஓர் நிலவுக் காலந் தன்னில் விடிவெள்ளி தோன்றும் மட்டும் தோழிதனைக் காணோ மென்று தேடி வந்தாள் நப்பின்னை! கடற்கரையின் வெண் மணலில் தனி நடந்து வருகின்ற கயற்கண்ணி விழியெல்லாம் வெண் சிகப்பாய் இருத்தல் கண்டாள்!… விளக்க மேதும் தேவையில்லை: புரிந்து கொண்டாள் விபர மெல்லாம்!…

“என் அண்ணன் உனக்காகப் புலிநகம் கொண்டு வரப் போனான் – இன்னும் வரவில்லை” யென்று சொன்னாள்.

“வரவேண்டாம்: வந்தாலும் எனக்கு அதைத் தர வேண்டாம் – வாழ்க்கைக்குத் துணை யொன்றை நாடி விட்டேன்”.

மொழிந்தவாறு கழுத்தினிலே ஆடுகின்ற முத்தாரம் எடுத்து முத்தம் தந்தாள்!…

”முத்து கொடுத்து முத்தம் பெற்றானோ: முட்டாள நீ ஏமாந்து விட்டாய்! தமிழ் வீரம் காட்டுகின்ற செயல்புரிந்து புலி நகத்தைப் புதுப் பரிசாய்த் தந்து மணம் புரியும் வழக்கத்தை மாற்றி விட்டாய் – மறததியல்ல!” எனக் கடிந்தாள்!

புன்னகையைத் தவழவிட்டுக் கயற் கண்ணி, பொன்னுதிரும் வார்த்தைகளால் பதில் சொன்னாள்!…

“அடி தோழி! அவசரப் படாதே! …ஒளிமுத்து என்கின்ற உயர் வீரன் – உத்தமன்!… என் உள்ளங் கவர்ந்தான் – மறத்தி நான் – அதனால் மாவீரா!… புலி நகம் பரிசாக வேண்டுமென்றேன்! புது வகைப் பரிசு தருவேன் என்றான் – முத்தெடுத்து அளித்திட்டான் – என்னையும் சேர்த்தெடுத்து அணைத்திட்டான்!”

“கடையினிலே ஒரு முத்தை ஒளிமுத்து வாங்கித் தருவதற்கும், காட்டகத்தில் புலி வேட்டை ஆடுதற்கும் வித்தியாசம் நிரம்ப இருக்குதடி தோழி!”

“கடையினிலே அல்ல: என் கண் எதிரே கடல் நடுவே குதித்தான்… பின்னர் முத்துச் சிப்பிகளோடு உதித்தான்!”

“இதோ. நானுந்தான் நேற்றிரவு வாழ்வுக்குத் துணை கண்டேன்!…… புலிவேட்டைப் புலி யொருவன்…நம்பி யெனும் நல்லோன் நகமொன்று பரிசளித்தான். நான் அவனுக்கானேன்!”

“பரிசுக்கும் பாராட்டும் வீரத்துக்கு மட்டும் பாவையர்கள் பறிகொடுக்க வேண்டுமோ உள்ளம்!…….. பண்போடு – அழகோடு பராக்கிரமத்தோடு மணவாளன் வருவதினிலே மரபுக்கு மாசு வருமோ பெண்ணே! கடையினிலே முத்தெடுத்து வந்தார் என்கின்றாய் என் கணவன்: காட்டினிலே புலி கொன்று வந்தான் உன் கணவன் என்று யார் கண்டார்?”

“நம்பிக்கை யில்லை யென்னாதே.. நம்பி அவர் பெயர்!”

“இந்த மலருக்குத் தும்பி! அதனால் புகழ்ச்சி யுரை!”

“வார்த்தை நீள வேண்டாம் – வாழ்த்துகின்றேன் – வருகின்றேன் – என் வீரர் காத்திருப்பார்!”

நப்பின்னை நன்முகம்கோணிப் போய் விட்டாள் அதை விட்டு!

“பித்துப் பெண்! இவள் அண்ணன் இருபுலியை ஒன்றாய்க் கொல்வான் – ஆயின் என்?… அவன் பண்பு பரத்தை வீட்டில் கேட்டால் தெரியும்!” முணுமுணுத்துச் சென்றாள் கயற்கண்ணி!


அண்ணனுக்குக் கயற்கண்ணி வாய்க்கவில்லை யென்கிற சீற்றமுடன் வீடுவந்த நப்பின்னை. மணிவேலன் மனமுடைந்து இருப்பதையும் கண்டு விட்டாள். மன்னிப்புக் கேட்டு நின்றாள்.

“இனியென்ன போகட்டும்; இலவு காத்த கிளியானேன்” எனச் சொல்லி எழுந்து சென்றான் மணிவேலன்!

“என்ன அண்ணா – எனக்கோர் துணைவன் தேடிவிட்டேன்!… இதோ பார். அவன் கொன்ற புலி நகம்!” எனத் தந்தாள்…ஆரமுடன்!…

“யார் அவன்?” என் றான் ஆசையுடன்!…

“நம்பி!” என்றாள்.

“அவனா?…அவன் கொன்றானா புலியை?… நான் கயற்கண்ணிக்காக கொன்ற புலியின் நகத்தையன்றோ நம்பிக்குக் கொடுத்தேன்; அவள் மணச் சேதி கேட்ட பிறகு!”

எனச் சொல்லி சிரித்தான் மணிவேலன்!…

வீரனை மணந்தகாய் எண்ணியிருந்த அத்தோழி, வீழ்ந்து விட்டாள் பூமிதன்னில் மூர்ச்சித்து!…

ஆரியனாம் அந்த நம்பி என்ற சேதி அதன் பிறகு கேள்விப் பட்டாள்; ஆவிதனைக் கடளுக்கு அர்ப்பணித்தாள்! மறத்தி யானாள்!

– டிசம்பர் 1956, முத்தாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *