எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
கதையாசிரியர்: ஆர்.மணிமாலா
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2026
பார்வையிட்டோர்: 13
(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம் – 1

எங்கேயோ இடிஇடிக்கும் சப்தம் கேட்டது. ஆற்றங்கரையோரம் கால்நனைய நடந்து சென்று கொண்டிருந்தவளை… தட்டி எழுப்பிவிட் டது இடி.
சிந்து திடுக்கிட்டு கண்விழித்தாள்.
ஜன்னல் வழியே அழுக்காய் தெரிந்தது வானம். இரவெல்லாம் பளபளத்துக் கொண்டிருந்த வெள்ளிக் காசுகளை சுத்தமாய் பெருக்கி தள்ளிவிரட்டியிருந்தது மழைமேகம். சுவர்கடிகாரத்தின் ரேடியம் முட்கள் ஐந்தரையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தன.
‘இன்னும் கொஞ்சம் படுக்கலாமா’ என கெஞ்சிய சோம்பேறித்தனத்தை போர்வையடன் உதறிவிட்டு வேகமாய் எழுந்தாள்.
பாத்ரூமில் நுழைந்து பிரஷ் பண்ணி. முகம் கழுவிக் கொண்டு வெளியே வருகையில்… நுழைவாசல் திறந்து.. பல்பு எரிந்துக் கொண்டிருந்ததை பார்ததாள்.
ஓ…. அம்மா… எழுந்துட்டாங்களா?
வேமாய் வாசலுக்கு வந்தாள். கமலி நெளி நெளியாய் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். கை வளைந்து நெளிந்து ஓட.. அழகாய் பளிச்சிட்டது கோபம். கமலிக்கு. விதவிதமான… போடவே கடினமான கோலங்கள் எல்லாம் அத்துபடி. அந்த விஷயத்தில் சிந்து அம்மாவின் ரசிகை. “ஏம்மா.. கோலம் போடறே? வானத்தைப் பார்.. கண்டிப்பா மழை வரும்…”
“மழை வருதோ, வரலியோ… இங்கெல்லாம்.. பொண்ணுங்க காலைல எந்திரிச்சதும்… வாசல் தெளிச்சு கோலம் போட்றணும்!” அம்மா நிமிராமல் பதில் சொன்னாள்.
‘இங்கெல்லாம்.. ‘ என்ற வார்த்தை.. ‘நகர்ந்துப்போ..’ என்பதுபோல் ஒட்டாமல் வந்தது.
சிந்துவிற்கு வலித்தது ஆனாலும் சிரித்தாள்.
“காபி போடவாம்மா?”
“வேணாம்.. வேணாம்.. நான் வந்து போடறேன்.. அவருக்கு நான் போட்டாதான் பிடிக்கும்!”
அவர் என்பது சிந்துவின் தகப்பனார்.
‘அம்மாவுக்கு என்னிடம் மட்டும் மனசும். உதடும் ஒட்டவே ஒட்டாதோ?’
உள்ளே வந்தாள்.
ஒரு பிரம்பு கூடையில் முன்தினமே சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்திருந்த மளிகை சாமான்களை எடுத்து சமையலறை மேடை மேல் வைத்தாள். பிளாஸ்டிக் கவர்களை கத்தரித்து. அரிசி, பருப்பு, உளுந்து, கம்பு என்று தனித்தனியே கொட்ட முற்பட்டவள்.. சில கணங்கள் யோசித்து களைமேட்டை உத்தேசித்து சற்று அளவைக் குறைத்துப் போட்டாள்.
கமலி… ஸ்டவ்வில் பாலை வைத்து.. குளிக்க ஓடினாள். ‘அம்மா என்ன டிபன் செய்யப்போகிறாள்?’
சுற்று முற்றும் பார்த்தாள்.
பிரிட்ஜிலிருந்து இட்லி மாவை எடுத்து சமையல் மேடைமேல் வைக் கப்பட்டிருந்தது.
‘ஓ .இட்லியோ, தோசையோ… ஏதோ ஒண்ணு. சரி.., சட்னி அரைச்சிடலாம்!’
அம்மாவின் வேலைப் பளுவில் கொஞ்சமேணும் சுமக்க ஆசைப்பட்டு.. தேங்காய் உடைத்து, துருவி, இஞ்சி, மிளகாய், பொட்டுக்கடலை வைத்து மிக்ஸியில் ஓடவிட்டாள்.
வழித்துக் கொட்டி, உப்பு சரிப்பார்த்து தாளித்துக் கொட்டினாள். அதற்குள் கமலி வந்துவிட்டாள்.
சிந்தால் சோப்பின் வாசனை அறைமுழுக்க ரம்மியமாய் நுழைந்தது. லேசான மஞ்சள் பூச்சில் பளபளத்த முகத்தில் அளவான சைஸிஸ் ஸ்டிக்கர் பொட்டு.
அம்மாவின் அழகை ரசித்தாள்.
“என்ன தாளிச்சே?”
”சட்னிம்மா! இட்லிதானே சுடப்போறே? சட்னி அரைச்சிட்டேன்!” பெருமிதமாய் சொன்னாள்.
“என்ன சட்னி?” பாத்திரத்தை திறந்துப் பார்த்தாள்.
“தேங்காய்.. பொட்டுக்கடலை சட்னிம்மா!”
“உன்னை யாரு அதிகப்பிரசங்கித்தனமா இதை அரைக்கச் சொன்னது ? அவரு கொத்து மல்லி சட்னியில்லே கேட்டாரு? வீணாக்கறதுக்குன்னே பொறந்தியா நீ.. சை!” கமலி அலுத்துக் கொண்டாள்.
‘என்னாச்சுன்னு இப்படி கத்தறே? ஊர் உலகத்துல என்னாட்டம் உள்ளப் பொண்ணுங்கல்லாம் கிச்சன் பக்கமே எட்டிப் பார்க்கறதில்லை. ஆனா, வலிய வந்து உதவணும்னு நினைச்சா… இப்படிதான் பேசுவி யாம்மா?’ என்று பதிலுக்கு உரிமையோடு கத்த நினைத்தாள். ஆனால் முடியவில்லை.
அம்மாவின்முகம், அவள் பார்வையில் தெரிந்த அந்நியம்.. அவளால் பேச முடியவில்லை. சிறுதீயில் நன்கு காய்ந்திருந்த பாலில், முன்னமே இறக்கியிருந்த டிகாஷனை விட்டு, அரை ஸ்பூன் சர்க்கரை கலக்கி வைக்கும்போதே.. சிந்து கேட்டாள். “அப்பாவுக்குதானே?”
“ம்”
“நான் குடுத்துட்டு வர்றேன்!”
“வேணாம்….” சொல்லி முடிக்கு முன்பே டம்ளருடன் அறையை விட்டு வெளியேறி இருந்தாள் சிந்து.
‘என்ன இது அதிகப்பிரசங்கித்தனம்?’ கமலி சலித்துக் கொண்டாள். பனியன், லுங்கியுடன் வராந்தாவில் சேரில் அமர்ந்திருந்தார் விஸ்வநாதன் கையில் தினசரி.
“அப்… அப்பா.. காபி!”
நான்காம் பக்கத்தில் பதிந்திருந்த பார்வையை விலக்கி அவளைப் பார்த்தார்.
கண்களில் எரிச்சல்.
“ம்.. அப்படி வச்சிட்டுப்போ!”
கைநீட்டி வாங்கவில்லை.
சிந்துவிற்கு சின்ன ஏமாற்றம்.
அருகிலிருந்து முக்காலிமேல் காபியை வைத்துவிட்டு சென்றாள். அதே நேரம் செல்போன் அழைத்தது.
சார்ஜரில் இருந்தது போன்.
விஸ்வநாதன் எழமுற்பட… வேகமாய் நடந்து செல்போனை எடுத்து தந்தையிடம் கொடுத்தாள். அவளிடமிருந்து போனை வெடுக்கெனப்பிடுங்கியவர்
“அலோ.. பாஸ்கர்.. எப்படிப்பா இருக்கே? எங்களுக்கென்ன? ஒரு பிரச்சனையும் இல்லே? சாமுத்ரிகா எப்படியிருக்கா? உன் மாமனார். மாமியார் எப்படியிருக்காங்க? வாயேன்ப்பா… உன்னைப் பார்த்து ரொம்ப நாளாய்டுச்சு. கண்லேயே நிக்கறே பாஸ்கர்.. ம்… அம்மாக்கிட்ட அப்புறமா பேசு… வேலையா இருக்கா” பேசி முடித்து வைத்தார்.
தன் மகனிடம் செல்போனில் பாசத்தைக் கொட்டிப் பேசிய அவரை ஏக்கத்துடன் பார்த்தாள்.
‘என்னை… ஒரே ஒருமுறையாவது உரிமையோட சிந்துன்னு கூப்பிடுப்பா! உன வாயால என் பேரைச் சொல்லி கேக்கணும்னு ஆசையாயிருக்குப்பா!’
‘என்ன?’ என்பதுப்போல் விஸ்வநாதன் பார்க்க..தயங்கி, பதறி, நகர்ந்துச் சென்றாள்.
அத்தியாயம் – 2
“அம்மா…” என்றாள் சிந்து
“ம்.” என்றாள், திரும்பிப் பார்க்காமலேயே…
“நான் ஏதாவது உதவி செய்யவாம்மா?”
“வித்யாவை எழுப்பி விடு| ஆபீசுக்கு போக நேரமாய்டுச்சு!”
“சரிம்மா”
சிந்து வேகமாய் சென்றாள்.
தாழிடாமல் வெறுமனே சார்த்தப்பட்டிருந்த கதவைத் திறந்து உள்ளேச் சென்றாள். கட்டிலில் குப்புறப்படுத்து.. கோணல் மானலான போசில் கிடந்தாள் வித்யா.
சிரித்தபடி அவளருகே அமர்ந்த சிந்து.. பாசத்துடன் அவள் முதுகை தடவிக் கொடுத்தாள்.
அந்த ஸ்பரிசத்தில் விழிப்பு வந்தவளாய்… லேசாய் சிணுங்கி… கண்களைத் திறக்காமலேயே “குட்மார்னிங் சிந்து” என்றாள். சிந்துவின் உதடுகள் புன்னகையில் அகன்றன.
“எப்படிக்கா.. பார்க்காமலேயே நான் தான்னு கண்டுபிடிச்சே?” வித்யா சிரித்தபடி எழுந்தமர்ந்தாள்.
“பெரிய விஷயமா இது? என்னை எழுப்பறதே நீயும். அம்மாவும் தான். அம்மாவாயிருந்தா. ‘வயசுப் பொண்ணு இவ்வளோ நேரமாவாத் தூங்கறதுன்’னு முதுகுல தட்டி தட்டி எழுப்புவாங்க. நீ.. எப்பவும் தாலாட்டற மாதிரி எழுப்புவே.. தட்ஸால்!”
“நான் இப்டி எழுப்பறது பிடிச்சிருக்கா?”
வித்யா.. சிந்துவின் கன்னத்தில் செல்லமாய் தட்டினாள்.
“நீ என்ன செஞ்சாலும் பிடிக்கும்!”
“நிஜமாவா?” விழிகள் அகல கேட்டாள்.
“யார் மேல்.சத்தியம் பண்ணட்டும்?”
சிந்து அவள் வலக்கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்தினாள்.
“இது போதும்க்கா!”
என்றவள், சட்டென நினைவு வந்தவளாய் பதறி,
“ஐயோ மறந்துட்டேன் பாரேன்… எந்திரிக்கா.. டைமாய்டுச்சி பார்.. அம்மா எழுப்பிவிடச் சொல்லி அனுப்பினாங்க.. நான் பாட்டுக்கு ஏதேதோ பேசி.. எந்திரி.. எந்திரி!” கைப்பற்றி இழுத்தாள்.
“ஏய்..ஏய்.. இரு.. போ… வந்துட்டேன்!”
கையை விட்டவள்… போகாமல் தயங்கி நின்றாள்.
‘என்ன?’ என்பதுப்போல் பார்தாள்.
“அடுத்தமாசம் உனக்கு கல்யாணமில்லே?”
“ஆமாம்.. அதுக்கென்ன?”
”நான்.. உனக்காக ஒரு பரிசு வாங்கியிருக்கேன். குடுத்தா வாங்கிப்பேயில்லே?”
“நீயா.. எனக்கா?”
“ஏன்க்கா.. வாங்கிக்க மாட்டியா?” முகம் வாடியது.
“ப்ச்.. அதுக்குச் சொல்லலே.. வந்து.. சரிவிடு.. ஈவ்னிங் அதைப்பத்திப் பேசுவோம்!”
“பேசுவோம்னா? வாங்கிக்க மாட்டியா? நீயுமா என்னை அந்நியமா நினைக்கிறே?”
”சீச்சீ… அந்த அர்த்தத்துல சொல்லலே! நீ என் தங்கச்சி. சின்னப் பொண்ணு! நான்தான் உனக்குத் தரணும். நீ எனக்குத் தரணுமான்னு யோசிச்சேன்!”
“இப்ப நீதானே கல்யாணப் பொண்ணு? கல்யாணப் பொண்ணுக்கு தானே பரிசுத் தரணும்!”
“பெரிய மனுஷி.. தர்றேன்னும் போது மாட்டேன்னு சொல்லக் கூடாதே! சரி.. இப்பவேகுடு!..”
“ஹூம்.. ஈவ்னிங் வியாபாரம் முடிஞ்சு வரும் போதுதான் வாங்கிட்டு வருவேன்!”
“ஒருவேளை… கம்பு தோசையும், பணியாரமுமா?”
“போக்கா..” வெட்கப்பட்டாள் சிந்து.
“அம்மாவை டீ ரெடி பண்ணச் சொல்லு சிந்து, நான் பிரஷ்பண்ணிட்டு வந்துடறேன்!”
“சரிக்கா”
அடுத்த ஐந்தாவது நிமிடம் வித்யாமுகமும் கழுவிக் கொண்டு, துவா லையால் துடைத்துக் கொண்டு கிச்சனிற்குள் வந்தாள்.
“அம்மா… டீ”
“வா.. ரெடியாயிருக்கு!” வடிகட்டியில் டீயை இறக்கி டம்ளரில் நிறைத்தாள்.
சிந்து கிரைண்டரில் அரிசியை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். இஞ்சியும், ஏலமும் மணத்த டீயை எடுத்து சுவைத்தாள் வித்யா.. “சூப்பர்..” என்று ரசித்துப் பருகினாள்.
“குளிச்சிட்டு வந்துடுடி.. டிபன் ரெடியாயிருக்கு!”
“என்னம்மா டிபன்?”
“இட்லியும் கொத்துமல்லி சட்னியும்!”
“ஐயோ.. எனக்குதான் கொத்துமல்லி சட்னி பிடிக்காதே! தேங்காய் சட்னி இல்லையா?”
“தேங்காய் சட்னிதானே? நான் அரைச்சு வச்சிருக்கேன்க்கா! எங்கேம்மா?” மேடையில் ஒவ்வொன்றையும் திறந்துப் பார்த்துத் தேடினாள் சிந்து செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு ஆவலாய் தேடியதை கண்டு முகம் மாறினாள் கமலி.
“இப்ப என்ன? எனக்கு எடுக்கத் தெரியாதா? இல்லை.. இப்பவே அவ சாப்பிட உக்காந்துடப் போறாளா? போய் உன் வேலையைப் பார்!” அம்மா எரிந்து விழ.. சிந்துவின் முகம் வேதனையில் வாட… நகர்ந்தாள்.
வித்யாவுக்கு பார்க்கவே சங்கடமாயிருந்தது.
“உங்கப்பா கேட்டார்னு கொத்துமல்லி சட்னி அரைச்சேன் வித்யா..!”
“சரி.. விடு.. நாளைக்கு ஆப்பம் செய்யேன்ம்மா! சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு!”
“செய்யறேன்டி! ஹூம்.. ஒரு காலத்துல நம்ம வீட்ல.. தினமும் மூணு நாலுவகை டிபன் செய்வோம். சொந்தக்காரங்க தினமும் நம்ம வீட்ல வந்து சாப்பிட்டுப் போவாங்க. பணத்தை படியால அளந்த குடும்பம் இது! எல்லாம் போச்சு! இந்நேரம் உன் கல்யாணத்துக்கு குறைந்தது முன்னூறு பவுனாவது போட்டிருப்போம். இப்ப.. முப்பது பவுனுக்கே.. எந்த செலவை குறைச்சு சரிக்கட்டலாம்னு பட்ஜெட் போடற நிலைமை! எங்களுக்கு வந்து தரித்திரமா…”
அம்மா அடுத்த வார்த்தை பேசுமுன் வித்யா சுதாரித்துக் கொண்டாள்.
“பழசெல்லாம் எதுக்கும்மா? மனசுதான் புண்ணாகும். லஞ்ச் என்னப் பண்ணியிருக்கே?”
“நேத்தே.. வெஜிடபிள் புலாவ் பண்ணச் சொன்னியே”
“தாங்க்ஸ்ம்மா.. அம்மான்னா.. அம்மாதான்!” அம்மாவின் கன்னத்தை செல்லமாய் பிடித்துக் கிள்ளி ஆட்டிக் கொஞ்சினாள்.
அதைப் பார்த்த சிந்துவிற்கும்.. அம்மாவின் பக்கத்தில் ஒட்டி நின்றுக் கொண்டு இழைய வேண்டும் போல் ஏக்கம் எட்டிப் பார்த்தது. காமாட்சி டிபன் சென்டர்!
பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மாலை மூன்று மணியானால்… அந்த டிபன் சென்டரில் மனிதத் தலைகள் மொய்க்கும்.
காஞ்சிபுரம் உழவர் சந்தையையொட்டி, கலெக்டர் அலுவலகமும் இருந்தது. மாலை நேர டிபனுக்காக.. கிராமத்து அசல் சுவையோடு, பாரம் பரிய உணவு வகைகளான குழிப்பணியாரம், கோதுமைப்புட்டு, கம்பு தோசை, காஞ்சிபுரம் இட்லி, சோளதோசை, உளுந்தங்கழி, தவிர, காபி, டீ, கேழ்வரகு கஞ்சி.. எல்லாமே அங்கு கிடைக்கும்.
சம்பாதிப்பவர்கள், ஆரோக்கியமான, சத்தான சுவையான உணவு வகைகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா?
ஆரம்பித்த ஒரே வாரத்தில் வியாபாரம் சூடுபிடித்து விட்டது.
அத்தியாயம் – 3
உழவர் சந்தையில் அதுபோல் இன்னும் இரண்டு கடைகள் இருந்தாலும்.. கூட்டம் என்னவோ இங்கு தான் படையெடுக்கும்.
சுடச்சுட விநியோகம் நடந்தது. பத்து டேபிள்! ஒவ்வொரு டேபிளைச்சுற்றி நான்கு சேர்கள் எல்லாமே நிறைந்திருந்தன.
தேவாவும், திவாகரும் காரிலிருந்து இறங்கினர். முகமும், உடையும், மெத்தப்படித்த நகரவாசிகள் என்று கூறின. கூடவே பின்பக்க கதவைத் திறந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் இறங்கினார்.
“ஹோட்டல்னு சொன்னீங்களே சார். பார்க்க… அப்படியொண்ணும் தெரியலியே!” கன்னத்தை சொறிந்தபடி சற்றே உதடைப் பிதுக்கி சொன்ன தேவாவுக்கு போன வாரம்தான் இருபத்தியேழு வயது பிறந்தது.
“வாய்க்கு ருசியா சாப்பிடணும்னு ஆசைப்பட்டா..தைரிமா இதுக்குள்ளே நுழையலாம். ஆனா கண்டமேனிக்கு சோளாபூரி, பஜ்ஜி, போண் டான்னு எதிர்பார்க்காதீங்க. அருமையான கிராமத்து அயிட்டம், வந்து சாப்பிட்டுதான் பாருங்களேன் தம்பி. டைரக்டர் நீங்க வித்தியாசமான சிந்தனைக் கொண்டவங்க. இதுவும் வித்தியாசமான சாப்பாடுதான். உங்க சிட்டியில இதையெல்லாம் கண்ணாலக் கூட பார்த்திருக்க மாட்டீங்க.. வாங்க தம்பி!” என்று அழைத்தார் பஞ்சாயத்து தலைவர்.
“இவ்ளோ சொல்லும்போது.. விஷயம் இல்லாம இருக்காது.. வாங்க.. வா. திவா..!”
உள்ளே சென்றதும் ஒரு டேபிள் காலியாக இவர்கள் மூவரும் அமர்ந்தனர்.
“எப்படியோ… டாகுமெண்டரி படத்தை இங்கே வந்து எடுத்து முடிச்சிட்டீக? அப்பா சொன்னார்னதும் தான்.. சிரமப்பட்டு.. பழங்கால கோவிலில் ஷூட்டிங் எடுக்க பர்மிஷன் வாங்கிக் குடுத்தேன். இங்கே கொஞ்சம் ஊர்க்கட்டுப்பாடு அதிகம்..”
“தெரியும் சார்! ஆனா.. அந்த ஸ்பாட் ரொம்ப அவசியமா இருந்துச்சு. எனிவே.. தாங்க்யூ ஸோ.. மச்..!” என்று அவரின் கைப்பற்றி சிரித்த தேவா.. பளிச்சென வசீகரமாயிருந்தான்.
திவாகர் அந்த பேச்சில் கலந்துக் கொள்ளாமல்.. தட்டில் இருந்த பண்டங்களை ஆவலாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தேவாவின் நண்பன் மட்டுமல்ல.. ஒளிப்பதிவாளனும் கூட.
“அடுத்து என்னப் பண்ணப்போறீங்க தம்பி?”
“ஒரு விளம்பரப்படம். இன்னும் ரெண்டு வாரத்துல ஷூட்டிங்! அநேகமா.. அதையும் இந்த ஊர்ல வச்சுதான் எடுக்கணும்னு திட்டம். “
“நல்லது.. நல்லது! தம்பி.. பெரிய சினிமாப்பட மெல்லாம் எடுக்கணும்னு ஆசைப்படாதோ?”
“இதுவரைக்கும் இல்லே.. அட.. நீங்க சொன்னது சரிதான் சார். இந்த புட்டெல்லாம் ரொம்ப டேஸ்ட்டியா இருக்கே? என்ன திவா.. எப்படி இருக்கு?”
“எல்லாத்திலேயும்.. இன்னொரு பிளேட் கொண்டு வரச்சொல்லுப்பா… எக்ஸலண்ட்! இப்படியெல்லாம் கூட டிபன் வகை இருக்குமா என்னன்னு ஆச்சரியமாயிருக்கும்.”
பஞ்சாயத்து தலைவர் வாய்விட்டு சிரித்தார். “நான் அப்பவே சொல்லலே? அம்மாடி.. சிந்து.. எல்லாத்திலேயும் இன்னும் ரெண்டு பிளேட் கொண்டு வரச்சொல்லு!”
தலைவர் குரல் கொடுக்க.. திரும்பி பார்த்து தலையாட்டிய சிந்துவை.. கேழ்வரகு புட்டை வாயில் வைத்து பார்த்த தேவா.. ஒருகனம் இமைக்க மறந்தான்.
மழை வலுத்திருந்தது. பெரிய… பெரிய ஊசிகளால் பூமியை துளைப் போட்டுக் கொண்டிருந்தன. காற்றும் அதிகம்தான். வேகமாய் விசிறிய தில் மரங்கள் பேயாட்டம் ஆடின.
வேன் விஸ்வநாதன் வீட்டு முன் நின்றது. சற்றே பாத்திரங்களை இறக்க. கடையில் வேலை செய்யும் முத்து, மகேந்திரன், இருவரும் காலி பாத்திரங்களை இறக்கி ஒரு ஓரமாய் வைத்தனர்.
“வர்றோம் தங்கச்சி..!”
தலையாட்டிய சிந்து.. டிரைவரிடம் வேன் வாடகைக்கான பணத்தைக் கொடுத்தாள்.
அவர்களிருவரையும் சுமந்தபடி வண்டி வேகமெடுக்க.. சிந்து.. வெளி வாசலில் செருப்பை கழற்றிப் போட்டாள். உள்ளே சிரிப்பு சத்தம் பல மாய் கேட்டது.
‘அப்பாவுக்கு புரையேறிக்கற அளவுக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா..?’ வியப்புடன் உள்ளேச் சென்றாள்.
விஸ்வநாதன் சோபாவில் அமர்ந்திருக்க.. கீழே அமர்ந்திருந்த கமலி சேலைத் தலைப்பால் சிரிப்பை அடக்க வாயைக் பொத்தியிருக்க.. அவள் மடியில் வித்யா.
“எங்கேருந்துடி கத்துக்கிட்ட.. இப்படி ஜோக்கெல்லாம் அடிக்க?” அம்மா, மகளின் தலையை பெருமிதமாய் தடவியபடிக் கேட்டாள்.
“என்கூட வேலைப் பார்க்கிற சீதாங்கிற லேடிக்கு.. வாயத்திறந்தாலே ஜோக்குதாம்மா! லொட லொடன்னு எதையாவது டைமிங்கா பேசிக் கிட்டே இருப்பாங்க..
அட.. சிந்து.. வந்துட்டியா? வா.வா உனக்காக தான் காத்திருக்கேன். நீ பாட்டுக்கு சர்ப்பரைஸ்னு சொல்லிட்டியா? ஆபீஸ்ல போய்.. என்ன வாயிருக்கும். என்னவாயிருக்கும்னு யோசிச்சு.. மூணு காபி குடிச்சிட்டேன். அம்மா.. தெரியுமா..! சிந்து எனக்கு கல்யாணத்துக்காக என்னவோ பரிசு வாங்கி வச்சிருக்காளாம்.” வித்யா எழுந்து அவளருகே வந்தாள்.
விஸ்வநாதன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்ள.. கமலி சலனமின்றி அங்கு நடப்பவைகளை பார்த்தாள்.
அக்காவின் ஆர்வம் சிந்துவை தொற்றிக் கொள்ள.. முகம் கொள்ளா புன்னகையுடன், தோளில் மாட்டியிருந்த பேகைத் திறந்து ஒரு பாக்ஸை எடுத்தாள்.
வித்யா புருவம் மேலேற தங்கையைப் பார்க்க.. திறந்து காட்டினாள். பச்சையும், சிவப்பும், முத்தும் கலந்த.. கற்கள் பதித்த ஒரு ஜோடி வளையல்கள்.
“ஏய்.. என்ன இது?”
“புடிச்சிருக்காக்கா?”
“சூப்பராயிருக்கு!” விழிகளில் மின்னல்.
“கவரிங்கா?” கமலி ஆவலை வெளிக்காட்டாமல் எட்டிப்பார்த்தாள்.
விஸ்வநாதன், ஏற்கனவே படித்து முடித்திருந்த தினசரியை விரித்து வைத்துக் கொண்டார்.
அம்மாகேட்ட கேள்வியில் சிந்துவின் முகம் சூம்பியது.
“இல்லேம்மா.. தங்கம் தான்! மொத்தம் நாலு பவுன்!”
“….?!”
“கோல்டா? நீ எப்படி இவ்வளோ விலை கொடுத்து வாங்கினே? இன்னைக்கு விக்கிற விலைக்கு.. அறுபத்தஞ்சாயிரத்துக்கு மேலே ஆகியிருக்குமே!”
“கடையில நல்ல வருமானம்க்கா! மினிடார் வேன் வாங்க பேங்க்ல லோன் கேட்டிருக்கேன். கிடைச்சிடும். உனக்கு வாங்கிக் குடுக்கறதுக்கு விலையெல்லாம் பெரிய விஷயமா? பிடிச்சிருக்கில்லே.. அது போதும்!”. பூரிப்புடன் உள்ளேச் சென்ற சிந்துவை ஆறுஜோடிக் கண்களும் வியப்புடன் பார்த்தன.
– தொடரும்…
– எனக்கெனவே… நீ… கிடைத்தாய்! (நாவல்), தேவியின் கண்மணி, ஏப்ரல்-15, 2011.
தொடர்புள்ள சிறுகதைகள்
அப்பாவுக்கு ஒரு கடிதம்
என்.ஸ்ரீதரன்
August 16, 2026
காலம் கடந்து விட்டது
இரா.துரைமாணிக்கம்
August 16, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
August 16, 2026