கருப்பசாமி தர்மத்தின் சலங்கை
கதையாசிரியர்: எஸ்.ஜி.மணிகண்டன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
அமானுஷம்
கதைப்பதிவு: September 30, 2026
பார்வையிட்டோர்: 36
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் 13: விஸ்வரூபம் எடுத்த தர்மம்

திடீரென, தமிழரசனுக்கு உடம்பு “சுரீர்” என மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ந்தது. அவன் மண்டியிட்டு விழுந்தான். “இவன் ஏன் இப்படி?” என்று அடியாள் திகைத்தான்.
அடுத்த நொடி, தமிழரசன் கண்கள் கோவைப்பழமாகச் சிவக்க, கழுத்து நரம்புகள் புடைக்க வீறுகொண்டு எழுந்தான். அது இப்போது தமிழரசன் இல்லை… மாரநாடு மண்காக்கும் கருப்பசாமி!
“ஏய்… ரத்னவேலு! மதுரையில் ஒரு மூலையில இருக்கிற சாதாரணச் சாமின்னு நெனச்சிச்சியாடா? மாரநாடு மண்ணுடா! என் எல்லையிலயே எந்திரம் புதைக்கிற அளவுக்கு உனக்குத் திமிரு வந்திருச்சாடா? நீ கட்டிய மந்திரக் கயிறுகள், என் சலங்கையின் ஒரு சிறு அசைவில் கருகிப்போனதைப் பார்த்தாயா? நீ செஞ்ச அநியாயத்துக்கும், என் பக்தன் பழனியோட ரத்தத்துக்கும் நான் இன்னும் கணக்கு முடிக்கல. இனி நீ எந்தப் பாதாளத்துல ஒளிஞ்சாலும், இந்த மாரநாடு கருப்பசாமியோட அருவா உன்னைத் தேடி வரும்டா!”
எச்சரித்துவிட்டு, தமிழரசன் சுருண்டு மயங்கி விழுந்தான். “தம்பி… தம்பி எழுந்திரு!” என்று மற்ற அடியாள் அவனை அசைத்தான். ஆனால் அச்சத்தில் அவனும் மற்றவர்களும் ஓடிவிட்டனர். ஊர் மக்கள் இதைக் கேள்விப்பட்டு, “பழனி தாத்தாவோட ஆளுக்கு மேலயே சாமி இறங்குச்சு… தர்மம் நம்ம பக்கம் இருக்கு!” என்று புதிய நம்பிக்கை கொண்டனர்.
அத்தியாயம் 14: மக்களின் புதிய குரல்
மறுநாள் காலை. கருப்பசாமி கோவில் வாசலில் ஊர் மக்கள் கூடியிருந்தனர். தமிழரசன் எழுந்து நின்றான். “நேத்து இரவு எனக்கு என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியல. ஆனா ஒரு விஷயம் தெரியுது — நம்ம சாமி நம்மள கை விடல. நாமதான் பயந்து ஒளிஞ்சு இருந்தோம்.”
“ஆனா தம்பி, ரத்னவேலுக்குப் பணமும் பலமும் இருக்கு. காவல்துறையும் அவன் பக்கம்தானே…” என்று ஒரு முதியவர் தயங்கினார்.
“அதுக்குத்தான் நாம ஒன்று சேரணும் மாமா,” என்றான் தமிழரசன்.
“என்ன பண்ணலாம் சொல்லு தம்பி?” என்று ஒரு இளைஞன் கேட்டான்.
“நான் சென்னையில வேலை பார்க்கும்போது, மனித உரிமை வழக்கறிஞர் ஒருத்தரைக் தெரியும். நான் இன்னைக்கே அவரைக் கூப்பிடுறேன். அதோட, ஊர்ல நடந்த ஒவ்வொரு அநியாயத்தையும்
நாம ஆதாரமா சேகரிக்கணும் — புகைப்படம், சாட்சி எல்லாம். யாருக்கு என்ன தெரியுமோ, இன்னைக்கே என்கிட்ட வந்து சொல்லுங்க.”
“நான் சொல்றேன் தம்பி,” என்று ஒரு பெண் முன்வந்தாள். “என் புருஷன் நிலத்தை மாத்தமாட்டேன்னு சொன்னதுக்கு, அடியாட்கள் வீட்டுல புகுந்து பொருள் எல்லாம் உடைச்சாங்க. அது என்கிட்ட புகைப்படம் இருக்கு.”
“நல்லது! இப்படித்தான் ஒவ்வொருத்தரும் முன்வரணும். அப்போதான் இந்த அநியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்,” என்று தமிழரசன் உற்சாகமாகச் சொன்னான்.
இப்படித் தமிழரசன், ஊர் மக்களை மறைமுகமாக ஒருங்கிணைக்கத் தொடங்கினான். இரவுகளில் ரகசியக் கூட்டங்கள், போலீஸ் மேலதிகாரிகளிடம் மறைமுகத் தொடர்பு, பத்திரிகையாளர்களுக்குத் தகவல் கசிவு — இவை எல்லாம் மெல்ல மெல்ல ரத்னவேலின் கோட்டையை உலுக்கத் தொடங்கின.
அத்தியாயம் 15: பயத்தின் விரிசல்
ரத்னவேலுக்கு இந்தச் செய்திகள் எட்டின. “எவன்டா அந்தப் புதுசா வந்து இருக்குற பய? ஊர்க்காரங்களுக்கு தைரியம் ஊட்டுறானாம்?” என்று மாயாண்டியிடம் கேட்டான்.
“அண்ணே… பழனிக் கிழவனோட ஆளுதான். சென்னையில படிச்சவன். இப்போ ஊரு முழுசும் அவன் பேச்சுத்தான் கேக்குது.”
“என்ன பேசுறானாம்?”
“வழக்கறிஞர், போலீஸ், பத்திரிகை எல்லாம் கூப்பிடுறானாம் அண்ணே.”
ரத்னவேலின் கண்கள் சிவந்தன. “அவனையும் அந்தக் கிழவனப் போலவே அனுப்பி வைக்கணுமா என்ன?” ஆனால் அவன் அதைப்பற்றி மேலும் யோசிக்கும் முன்பே, மாந்திரீகக்கட்டு உடைந்த செய்தி அவனை வந்தடைந்தது. கோவில் வாசலில் நடந்த அந்த அமானுஷ்யமான காட்சியினை நினைத்த போது, ரத்னவேலின் நெஞ்சில் முதன்முறையாக ஒரு பயம் ஊடுருவியது.
– தொடரும்…
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
September 30, 2026
கருப்பசாமி தர்மத்தின் சலங்கை
எஸ்.ஜி.மணிகண்டன்
September 27, 2026
கொஞ்சம் கொஞ்சமாக… (poco a poco)
சு.அப்துல் கரீம்
September 27, 2026