கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 30, 2026
பார்வையிட்டோர்: 53 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடகக் குழுவினர் 

ராம்குமார், வின்சென்ட் 
முரளி, சாரதி 
சப்பாணி, சாமிஜி 
பாலு, டிங்கு 
சுகேஷ், சுபத்ரா 
சத்தியாதேவி, முத்தம்மா 
சங்கர், ரங்கப்பா 
சிக்கி, அப்பாராவ் 
நரசிங்கராவ், வி.கே. 
ஹரன், ராமுடு 
ரத்தினம், ஹரன் 

பகுதி – 1 | பகுதி – 2

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா இருந்த அந்தக் காலத்திலிருந்தே, ‘கல்யாணம் பண்ணிப்பார்’, ‘வீட்டைக் கட்டிப் பார்’! என்ற அனுபவம் மிக்க பொன்னான இரு மொழிகளை நம் முன்னோர் எச்சரிக்கை மொழிகளாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த இரண்டுடன் ‘நாடகம் போட்டுப் பார்!’ என்ற மூன்றாவதையும் நான் சேர்க்க விரும்புகிறேன். 

இப்படி அவரவர் அனுபவங்களின் அடிப்படையில் சினிமா எடுத்துப் பார்’, ‘டி.வி. சீரியலுக்கு அப்ரூவல் வாங்கிப் பார்’, ‘தேர்தலில் நின்று பார்’, ‘குழந்தையைப் பள்ளியில் சேர்த்துப் பார்’, ‘அபார்ட்மெண்ட்டில் குடியிருந்து பார்’ என்ற புதுப்புதுப் பழமொழிகள் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அரங்கில் ஹாயாக உட்கார்ந்து கொண்டு நாடகம் பார்க்கிறவர்களுக்கு, அந்த நாடகம் அரங்கேற்றமாவதற்கு முன் நாடகக் குழுவினர் காணும் கனவுகளையும், படும் கஷ்டங்களையும், செய்யும் தியாகங்களையும் பற்றித் தெரியவேண்டாமா? ரிகர்சல்களின்போது என்னவெல்லாம் நடக்கிறது என்று அவர்கள் அறிய வேண்டாமா? நாடகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, மேக்கப் அறையிலும் மேடையின் சைடுகளிலும் நடைபெறும் வேறொரு நாடகத்தையும் ரசிகர்கள் ரசிக்க வேண்டாமா? 

இதற்காக நான் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவை உருவாக்கியிருக்கிறேன். அது என் கற்பனை மனைவி பிரசவித்த நிஜத்தின் நிழல், குழுவினர், உண்மையின் பொய் ஜனனங்கள் (மன்னிக்கவும், புதுக்கவிதைச் சூழலின் அரைகுறைப் பாதிப்பு… வேறொன்றும் இல்லை). வழக்கமான வார்த்தைகளில் புரியும்படியாகவே சொல்லிவிடுகிறேன். நாடகக் குழுவினரின் பெயர்கள் அனைத்தும் கற்பனைப் பெயர்களே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. அவர்கள் மட்டுமல்ல… இந்தக் கட்டுரைத் தொடரில் இடம்பெறும் யாராவது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த நபரின் ஜாடையாக இருந்தால், என் கற்பனைத் திறனில் ஏதோ கோளாறு இருப்பதாக நினைத்துக் கொள்ளவும். (‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழியை நினைவுபடுத்தி வீணாகக் குழப்பிக் கொள்ளாதீர்கள்). 

தேசிய வங்கி ஒன்றின் பரபரப்பான காலை நேரம்… அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக க பலர் கௌண்ட்டருக்கு வெளிப்புறம் கழுதைப் பொறுமை யுடன் காத்திருக்க, உட்புறம் பணியாளர்களில் சிலர், கௌண்ட்டருக்கு கௌண்ட்டர் நடந்து கொண்டிருக்கிறார் கள். வேறு சிலர் மேஜைக்கு மேஜை நகர்ந்து சிரித்தபடி நலம் விசாரித்துக் கொண்டும், ரகசியமாக காமெண்ட் அடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ‘கரென்ட்’ கல்பனா, ‘சேவிங்க்ஸ்’ சவிதாவிடம் முன்தினம் பார்த்த டி.வி. சினிமாவைப் பற்றிய சீரியஸ் விமரிசனத்தில் ஈடுபட்டிருக்கிறாள். 

பிரும்மாண்டமான லெட்ஜர் ஒன்றைப் பிரித்து வைத்தபடி, ராம்குமார் பக்கத்து ஸீட்டு முரளியுடன் தாங்கள் தொடங்கப் போகும் நாடகக் குழுவில் யார் யாரைச் சேர்த்துக்கொள்வது என்பதைப் பற்றி விவாதம் நடத்திக் கொண்டிருந்தான். நாடகக் குழுவொன்று தொடங்குவது என்று அவர்களிடையே முன்தினம் தான் முடிவாகியிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. 

ராம்குமார் சென்னை வங்கியில் வந்து சேருவதற்கு முன், நான்கைந்து வருடங்கள் கல்கத்தாவில் வேறு ஒரு வேலையில் இருந்தான். அப்போது அவன் நண்பன் சென்குப்தாவுடன் வங்காள நாடகங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறான். அங்கு நடைபெற்ற நாடக விழாவொன்றில் இடம் பெற்ற மராத்தி நாடகத்தையும் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறான். அவர்களுடைய நாடகப் பாணியும் கையாளும் உத்திகளும் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அதனால் கல்கத்தாவுக்கு ஆண்டுதோறும் சென்னையிலிருந்து வரும் குழுக்கள் போடும் தமிழ் நாடகங்களைப் பார்த்து வெட்கமும் வேதனையும் படுவான். வங்காள, மராத்திய நாடகங்களைப் போல் தமிழிலும் மேடையேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தன்னுள் வளர்த்துக் கொண்டவன் ராம்குமார். 

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த முரளி அமெச்சூர் நடிகன். ஏதாவது ஒரு ட்ரூப்பில், ஏதாவது ஒரு நாடகத்தில், எந்த ரோலிலாவது நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற தணியாத லட்சியமும் தீராத அரிப்பும் கொண்டவன். 

நாடக ஆர்வம்தான் ராம்குமாரையும் முரளியையும் இணைத்து வைத்தது. இருவரும் தமிழ் நாடகங்கள் பார்க்கச் செல்வார்கள். ‘கல்கத்தா குமார்’ என்று எல்லோருக்கும் பெருமையுடன் அறிமுகப்படுத்தி வைப்பாள் முரளி. சாதாரணமாக எந்த நாடகத்தையும் நன்றாக இருந்தது’ என்று ஒப்புக்கொள்ள மாட்டான் ராம்குமார். “ஸீன் செட், லைட்டிங் எல்லாம் திராபை” என்பான். “தீமோ, ப்ளாட்டோ, மெஸேஜோ இல்லை” என்று ‘ஆர்க்யூ’ பண்ணுவான். “சீப் அண்ட் வல்கர் ஜோக்ஸ்” என்று ஒட்டுமொத்தமாகக் கண்டனம் செய்வான்.”நடிகர்களுக்கு ஸ்டேஜ் சென்ஸோ, மூவ்மெண்ட்ஸைப் பற்றிய பிரக்ஞையோ, வாய்ஸ் மாடுலேஷனோ இல்லை” என்று விமரிசிப்பான். 

ராம்குமார் பயன்படுத்தும் இங்கிலீஷ் வார்த்தைக ளெல்லாம் முரளிக்குப் புரியவே புரியாது. நடிகர்களும் பார்வையாளர்களும் இரண்டு மணி நேரம் ஜாலியாகப் பொழுதைக் கழிப்பது என்பது தான் அவன் கற்றறிந்த நாடக இலக்கணம். ராம்குமார் அநாவசியத்துக்கு எதையெதையோ சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்துக்கொள்வான். அவன் அடிக்கடி ‘பெங்காலி தியேட்டர்’, ‘மராத்தி தியேட்டர் என்று கூறுவதைக் கேட்டுக் குழப்பம் அடைந்திருக்கிறான். தியேட்டர்’ என்றால் நாடகம் நடக்குமிடம் என்ற ஒரே அர்த்தம்தான் அவனுக்குத் தெரியும். 

ஒரு சனிக்கிழமை மியூஸிக் அகாடமியில் இருவரும் நாடகம் பார்த்து விட்டுத் திரும்பும்போது ராம்குமாரிடம் முரளி, “கல்கத்தாவில் மராத்தி தியேட்டர் பார்த்ததாகச் சொன்னியே, கல்கத்தா தமிழர்கள் அங்கே தமிழ் தியேட்டர் கட்டியிருக்கிறார்களா?” என்று கேட்டான். 

ராம்குமாருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. “பெங்காலி தியேட்டர்’, ‘மராத்தி தியேட்டர்’, ‘இங்கிலீஷ் தியேட்டர் என்று நான் குறிப்பிடுவது அவர்களுடைய நாடகப் பணியையும் உத்திகளையும் குறிக்கும். நாடகக் கொட்டகையை அல்ல” என்று ராம்குமார் விளக்கிக் கூறியபோத முரளி அசடு வழிந்தான். பிறகு சமாளித்தான். 

“தெரியும்… சும்மா தமாஷ் செய்தேன். சரி, இத்தனை நாடகங்கள் பார்த்திருக்கியே, தமிழ் தியேட்டரைப் பற்றி என்ன நினைக்கிறே?” என்று அவன் வாயைக் கிண்டினான். 

“எந்தவித இலக்கணத்துக்கும் ஸ்டைலுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் ஒரே கேலிக்கூத்தாக இருக்கிறது. பரிதாபப்படுகிறேன். யாராவது இதை மாற்றித்தான் ஆகணும். பூனை கழுத்திலே யார் மணி கட்டப் போகிறார்களோ?” என்று அலுத்துக்கொண்டான் ராம்குமார். 

“நீதான் கரைகண்டவன் போலப் பேசறியே… நீயே மணி கட்டேன், பூனையை வேணுமானா நான் பிடிச்சுத் தரேன்” என்றான் முரளி சிரித்துக்கொண்டே பேசிப் பேசிக் கடைசியில் இருவரும் நாடகம் போட்டுவிடுவது’ என்ற முடிவுக்கு வந்தார்கள். 

அப்படியொரு முடிவெடுத்த அந்தக் கணத்தில் ராம்குமாரின் ராசி பலன் நிச்சயம் கெட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவன் நிம்மதியைக் குலைக்க நினைத்த வில்லன் விதி, முரளியின் வடிவத்தில் வந்து, ‘ஹஹ்ஹ்ஹா’ என்று சினிமா பாணியில் சிரித்திருக்க வேண்டும்.ஆனால், அது ராம்குமாரின் காதில் விழவில்லை! 

ராம்குமாரும், முரளியும் நாடகம் போடுவது என்று முடிவு செய்த பின்னர், தங்கள் குழுவுக்கு ‘ராம் முரளி ஸ்டேஜ் ஆர்ட்ஸ்’ என்று பெயர் சூட்டினர். முரளியின் வற்புறுத்தலின் பேரில், ராம்குமார் அதன் செயலாளர்-பொருளாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். ராம்குமாரின் யோசனைப்படி பத்திரிகைகளுடனும் சபா காரியதரிசிக ளுடனும் தொடர்பு கொள்ளும் முக்கியப்பணியைக் கவனித்துக் கொள்வதாக முரளி உறுதியளித்தான். ‘பப்ளிக் ரிலேஷன்ஸ் இன்சார்ஜ் என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டான். இதைத் தவிர நடிகர் – நடிகைகள் மேற்பார்வை, சீன், செட், லைட், மைக் ஏற்பாடு,காபி,டிபன்,லஞ்ச்,’பர்சேஸ்’ எல்லாம் அவனது இலாகாவின் கீழ் வந்தன. “இதுலேல்லாம் நீ டயத்தை வேஸ்ட் பண்ணாதே… நம்மகிட்டே விட்டுடு…. நான் பார்த்துக்கறேன்” என்று முதலிலேயே சொல்லிவிட்டான் முரளி. ராம்குமாரும் விட்டுட்டான். 

“நாடகம் போட எவ்வளவு பணம் தேவைப்படும்?” என்று கேட்டான் ராம்குமார். ”இரண்டு வழி இருக்கு. கையிருப்புப் பணத்துக்குத் தகுந்த மாதிரி பட்ஜெட் போட்டுட்டு அதற்குத் தேவையான பணத்தைத் திரட்டலாம்.” 

“முதல் வழியிலேயே யோசனை பண்ணுவோம். என் கைலே ரெண்டாயிரம் ரூபாதான் இருக்கு!” 

“சரி, சின்ன பட்ஜெட்டாகக் கதையைத் தேட வேண்டும்!” 

“வேண்டாம். கதை என்னிடம் இருக்கிறது. நானே எழுதியது.” 

“என்ன சப்ஜெக்ட்… காமெடியா?” 

“இல்லே. ரெவல்யூஷனரியா இருக்கும்!” 

“நக்ஸலைட் பிரச்னையா, இல்லேன்னா டெரரிஸ்ட் வயலன்ஸா?” ஏளமாகக் கேட்டான் முரளி. 

“நோ.. நோ… அரசியலோ, பொருளாதாரப் பிரச்னையோ இல்லை. சோஷியல் தீம்”

“ஓ, சமுதாயப் பிரச்னையா?” 

“ஆமா.. ஸ்டோரி அவுட் லைனைச் சொல்றேன், கேக்கறியா?” 

கதாசிரியரிடம் மாட்டிக் கொண்டால் தப்பிக்க முடியாது என்று முரளிக்குத் தெரியும். 

ராம்குமார் கதைச் சுருக்கத்தைத் தொடங்கினான். 

“காதலித்தவனையே கல்யாணம் செய்துகொண்ட பிரமீளா ஒரு வருடத்துக்கெல்லாம் விபத்து ஒன்றில் கணவனைப் பறிகொடுக்கிறாள். ‘கணவனை மறந்துவிட்டு மறுமணம் செய்து கொள்வதில்லை’ என்று உறுதியாக இருக்கிறாள். ஆனால், அலுவலகத்தில் உடன் பணிபுரிந்த கிஷோர்குமார் சோதனையாக அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். அவளும் சற்று மனம் தளருகிறாள். அண்ணனும் மறுமணம் செய்து கொள்ளும்படி அவளை வற்புறுத்துகிறான். ஓர் இரவு பிரமீளாவின் மனத்தில் சூறாவளி வீசுகிறது. கனவில் கணவன் வந்து, ‘எனக்குத் துரோகம் செய்யப் போகிறாயா?’ என்று கேட்கிறான். (அந்தக் காட்சியை வெறும் லைட் அண்ட் சவுண்ட் எஃபெக்டிலேயே பிரமாதமாகச் செய்து காட்டுவானாம்.) கிஷோரின் காதல் வலையிலிருந்து தப்பிக்க, மறுநாள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊரைவிட்டே போய்விடுகிறாள். பிறகு, சிவப்பு விளக்கு ஏரியா தரகர் கையில் சிக்கிக் கொள்கிறாள் பிரமீளா. 

அவளுக்கு அன்று முதலிரவு – அவள் தொழிலுக்கு இறுக்கம் தாங்க முடியாமல் கைப்பையிலிருந்த தூக்க மாத்திரையை விழுங்குகிறாள். கணவன் கனவில் வருகிறான். (இங்கு முரளி லேசாகச் சிரித்துக் கொள்கிறான்.) நீ மறுமணம் செய்து கொள். இந்தத் தொழிலைவிட ‘அது மேல்’ என்கிறான். ‘உங்களுக்குத் துரோகம் இழைக்க மாட்டேன்’ என்று கதறுகிறாள். ‘என் இஷ்டப்படி எது செய்தாலும் அது எனக்கு இழைக்கும் துரோகமாகாது’ என்று அவன் சமாதானம் சொல்ல, ‘சமுதாயம் என்னைக் காரித் துப்பும்’ என்கிறாள். ‘என்னைவிட உனக்குச் சமுதாயம் ஒசத்தியா? அதுக்குத்தான் மதிப்புக் குடுப்பியா? இதுதான் பச்சைத் துரோகம்’ என்று வாதாடுகிறான் கணவன். 

பிரமீளா மெளனமாகிறாள். ‘கிஷோர் உன்னை உண்மையாகவே நேகிக்கிறான். அவன் நல்லவன். அவனைக் கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக இரு’ என்று கூறிவிட்டுக் கனவுக் கணவன் மறைந்து விடுகிறான். 

யாரோ அவளைத் தட்டி எழுப்புவது போல் உணர்ந்த பிரமீளா கண்விழித்துப் பார்க்கிறாள். அங்கே கிஷோர் நின்று கொண்டிருக்கிறான். அவனுக்கும் அது முதலிரவு – அந்தத் தொழிலைத் தேடி வருவதில்!” 

தன் கதையில் தானே ஒன்றிப் போய்விட்ட ராம்குமார் உணர்ச்சி வசப்பட்டு மேலே பேச முடியாமல் நிறுத்தினான். 

“ஏன் நிறுத்திட்டே? அப்புறம் என்ன நடக்கிறது?” என்று கேட்டான் முரளி. 

“இவ்வளவுதான் கதை. நாடகத்தை இங்கேயே நிறுத்திடுவேன். மற்றதையெல்லாம் பார்க்கிறவங்க கற்பனைக்கே விட்டுடப் போறேன். இந்த சப்ஜெக்ட் எப்படி?” என்று கேட்டான் ராம்குமார். 

“நல்லாயிருக்கு. ஆனா,ஆடியன்ஸ் கற்பனைக்கு விடற எக்ஸ்பெரிமெண்ட்டல் ப்ளேயெல்லாம் இப்பவேணாம். நம்ம ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க. ட்ரூப் ஆரம்பிச்சுட்டு மொத மொதல்லே விஷப்பரீட்சையெல்லாம் செய்யக் கூடாது… ரெண்டு மூணு காமெடிப்ளே போட்டு, ஃபீல்டைப் பிடிச்சப்புறம் இதெல்லாம் வெச்சுக்கலாம்…” என்று கூறி ராம்குமாரின் ஆர்வத்தில் மண்ணை வாரி இறைத்தான் முரளி.

ஒரு நாள், ‘மஞ்சள் வானத்தில் நீல ‘சந்திரன்’ என்ற நாடகத்துக்கு ராம்குமாரை அழைத்துச் சென்று ‘சப்பாணி’யை அறிமுகம் செய்துவைத்தான் முரளி. அவன் பெயர் சாரங்கபாணி. அந்த நாடகத்தில் ‘சப்பாணி’ என்ற காமெடி ரோலைச் செய்து ‘அவார்டு’ வாங்கியதால் அவனுக்கு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. 

“சப்பாணி நம்மகூட இருந்தா, நமக்குப் பெரிய ‘அஸெட்’டாயிருப்பான். எந்த மாதிரியான காமெடி ரோலையும் டக்கரா செய்வான்” என்றான் முரளி வீடு திரும்பும் போது. 

“சப்பாணி அந்த ட்ரூப்பை விட்டுட்டு வருவானா?” 

“கொஞ்ச நாளா இவனுக்கும் ஹீரோவா நடிக்கிறான் பாரு சோனி, அவனுக்கும் சரிப்பட்டு வரலே. அவார்டு வாங்கினதிலேருந்து சப்பாணி கர்வம் பிடிச்சு அலையறான், தன்னை மதிக்கிறதில்லேன்னு சோனிக்கு ஒரு நினைப்பு. அது மட்டுமில்லே… அவன் அடிக்கிற ஜோக்ஸுக்கெல்லாம் அப்ளாஸ் தியேட்டர் கூரையைப் பிய்ச்சுக்கிட்டுப் போவுது. இது வேறே சோனிக்கு ஒரே கடுப்பு. சப்பாணியோட பாதி ஜோக்ஸை சோனி எடுத்துக்கிட்டானாம். சப்பாணி குமுறிக்கிட்டிருக்கான். அதனாலேதான் இந்தச் சமயம் பார்த்து சப்பாணியை இங்கே இழுத்துடலாம்னு ப்ளான் போட்டேன்.” 

ராம்குமார் தமிழ் அமெச்சூர் தியேட்டரை நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான், 

“‘கழுதை இங்கே… குட்டிச்சுவர் எங்கே?’ங்கிற நாடகத்திலே எல்டர் பிரதரா நடிச்ச பாலுவை உனக்கு ஞாபகமிருக்கா? அவன் நல்ல ஆக்டர். ‘ரிச் வாய்ஸ்’. அவனையும் சேர்த்துக்கலாம்.”

“நீ இன்டர்வெல்லின்போது இன்ட்ரட்யூஸ் பண்ணினியே அவன்தானே … அவன் எந்த ட்ரூப்லே இருக்கான்?” 

“சுகேஷ் ட்ரூப்லே.” 

“கோல்டன் ஸ்டார்ஸ்’லே இருக்கான்னு சொன்னியே!” 

“ரெண்டும் ஒண்ணுதான். ‘கோல்டன் ஸ்டார்ஸ்’னு ட்ரூப்புக்குப் பேர் இருந்தாலும் எல்லாரும் சுகேஷ் ட்ரூப்’னுதான் சொல்வாங்க. இங்கே இப்படித்தான் வழக்கம். யாருக்கும் ஒரிஜினல் பேர் ஞாபகமிருக்காது. ட்ரூப்பை ஆரம்பிச்சு, ஹீரோவா நடிக்கிறவன் பேர்தான் நிலைக்கும். சுகேஷோடே சொந்தப் பேர் ஆர்.கோவிந்தன். ‘சுகேஷ்’னு ஸ்டைலா பேர் வெச்சுக்கிட்டா, சினிமாலே சான்ஸ் கிடைச்சு. ஒரு சின்ன ரோலாவது பண்ணி, அப்புறம் ‘சினிமா புகழ் சுகேஷ் நடிக்கும், கழுதை இங்கே… குட்டிச்சுவர் எங்கே?’ என்று பெரிசா நாடக போஸ்டர்லே போட்டுக்கணும்னு அவனுக்கு ஒரு ஆசை…” 

ராம்குமார் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டான். 

“அன்னிக்கு பாலுவோட பேசிக்கிட்டிருந்தேன்… சுகேஷைப் பத்தி ரொம்ப கோவமா பேசினான். வருஷம் பூரா, ஊர் ஊரா எக்ஸிபிஷன் சான்ஸா வாங்கி இப்ப கைலே நல்ல துட்டுப் புரளுதாம். தன் ட்ரூப்காரங்களைக் கேவலமா நடத்தறானாம். எனக்கு சுகேஷைப் பத்தி தெரியும். லேடி ஆர்ட்டிஸ்டைக் கண்டா பல்லை இளிப்பான். சீ… ரொம்பக் கேவலம். ஒரு சமயம் இவன் ட்ரூப் சேலம் எக்ஸிபிஷனுக்குப் போயிட்டு ஊர் சிரிச்சுப் போச்சு… என்ன நடந்தது தெரியுமா?…” 

”முரளி, எனக்கு இதெல்லாம் கேட்க வேண்டாம். நம்ம ட்ரூப்பைப் பத்திப் பேசு” என்று முரளியை ‘கட்’ பண்ணினான் ராம்குமார். 

“பாலுவை எதுக்கு இழுக்கறேன் தெரியுமா ? ஒரு கல்லிலே ரெண்டு மாங்கா அடிக்கத்தான். சுகேஷ்கிட்டேருந்து பாலு நழுவிட்டான்னா, நமக்கு லேடி ஆர்ட்டிஸ்ட் ப்ராப்ளம் சால்வ் ஆயிடும்…” 

“அதெப்படி…?” 

“அங்கேருந்து சந்தியாதேவியும் வந்துடுவா. அவளை பாலுதான் சுகேஷ்கிட்டே கொண்டு போய்ச் சேர்த்தான். பாலு ‘வாம்மா’ன்னா வந்துடுவா. அவன் கண்ட்ரோல்ல தான் இவ இருக்கா!” 

“சரி, நாலு பேர் ஆச்சு! மொத்தம் பத்து காரெக்டராவது வேண்டாமா?” 

“வேணும்… டெலிபோன்ஸ்லே சங்கர்னு ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட் இருக்காரு. மிடில் ஏஜ் காரெக்டர் குடுக்கலாம். அவர் இப்ப எங்கேயும் செய்யறதில்லே… ‘நல்ல ட்ரூப்பா இருந்தா சொல்லுப்பா’ன்னு எங்கிட்டே கேட்டுக்கிட்டே இருக்காரு… அப்புறம் எல்.ஐ.சி.யில் ‘சிக்கி’ன்னு பழைய ஆர்ட்டிஸ்ட் இருக்காரு. டீஸன்ட்மேன். அவராலே ப்ராப்ளம் இருக்காது.ஐ.சி.எஃப் அப்பாராவ்னு ஒருத்தர் இருக்காரு. நிறைய அப்பா ரோல் செஞ்சு அவருக்கு அந்தப் பேர் வந்தது. அவர் பேரு நரசிங்கராவ். அப்புறம், நம்ம பாங்க்லே மைனர் ரோலுக்கு ஒருத்தர் ரெண்டு பேர் கிடைப்பாங்க… நீ வொர்ரி பண்ணிக்காதே” என்று முரளி அபயம் அளித்தான். 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை உட்லன்ஸ் டிரைவ்-இன் ஓட்டல் தோட்டத்தில், ஒரு தூங்குமூஞ்சி மரத்துக்கடியில் ‘ராம் முரளி ஸ்டேஜ் ஆர்ட்ஸ்’ தொடக்க விழாவுக்குப் பூஜை போடப்பட்டது. ராம்குமார், முரளியைத் தவிர சப்பாணி, பாலு, சங்கர், ஹரன், சிக்கி, ரத்தினம், வின்சென்ட், சாரதி முதலியவர்கள் ஸ்டேஜின் தூண்களாக ஆஜராகியிருந்தனர். 

ஒரு சிறு பிள்ளையார் படத்துக்குப் பூ வைத்து, கற்பூர ஆரத்தி காட்டினார் முரளி. அப்போது நாலைந்து பேர் பாரதியாரின் ‘ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம்…’ பாடலைப் பாடினார்கள். அந்தப் பாட்டுத் தெரியாததால் ராம்குமார் கைகளைக் கட்டிக் கொண்டு, கண்களை மூடி, தலையைச் சற்றுத் தாழ்த்தியபடி நின்றிருந்தான். 

ராம்குமாரின் நாடக ஆர்வத்தைப் புகழ்ந்து பேசிய முரளி, ‘ராம் முரளி ஸ்டேஜ் ஆர்ட்ஸ் தமிழ் நாடக மேடையையும், தமிழகத்தையும் JM… அகில இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கப் போவது உறுதியென்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான். 

அத்தனை பேரும் மகிழ்ச்சியில் ஒரு சுற்றுப் பெருத்துப் போயினர். பின்னர் ஸ்வீட், ஐஸ்க்ரீமோடு டிபன் சாப்பிட்டு முடித்தபோது,மற்றொரு சுற்றுப் பெருத்துக் காணப்பட்டனர்! 

ஆனால், ராம்குமாரின் மணிபர்ஸ் மட்டும் ரொம்ப இளைத்துப் போயிருந்தது. பாவம்! 

தங்கள் குழுவின் கன்னி முயற்சியாக, காமெடி நாடகம் ஒன்றை மேடையேற்ற வேண்டும் என்று முரளி வற்புறுத்திய போது, “காமெடி நாடகம் என்றால் என்ன?” என்று ராம்குமார் படுசீரியஸாகக் கேட்டான். 

நாடகம் முழுவதும் சிரிப்புச் சிரிப்பாக க இருக்கவேண்டும்” என்று ஒரே வரியில் அதன் லக்கணத்தைப் பிட்டு வைத்தான் முரளி. ராம்குமார் விழித்தான். 

“சபா செக்ரெட்டரிகிட்டே போய் ‘நாங்க ஒரு நாடகம் அரங்கேற்றப் போகிறோம், தேதி கொடுங்கள்’ என்று கேட்டவுடனேயே ‘கமெடி சப்ஜெக்டா?’ என்பதுதான் அவருடைய முதல் கேள்வியாக இருக்கும். மெம்பர்கள் சிரிக்கவில்லையென்றால் அவர் ‘டல்’லாகி விடுவார். 

“ஆடியன்ஸ் சிரிக்காவிட்டால்?” – ராம்குமார் தன் சந்தேகத்தைக் கேட்டான். 

“விடக்கூடாது… அவர்களை எப்படியாவது சிரிக்க வைக்கவேண்டும். சரியான டைமிங்’ கொடுத்துக் கன்னத்துல அறையற மாதிரி ‘பளார்…’னு ஜோக்ஸ் அடிச்சுக்கிட்டே இருக்கணும். கதைக்கோ, காட்சிக்கோ, பாத்திரத்துக்கோ சம்பந்தம் இருக்கான்னு பார்க்கவே கூடாது. சொந்தம், இரவல், பழசு, பத்திரிகையில் வந்தது, ஸில்லி, சீப், வல்கர் ஏதுவாயிருந்தாலும் பரவாயில்லை. ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கணும்… ஏதாவது ஒரு ஜோக்குக்கு சிரிச்சுட்டாங் கன்னா, அப்புறம் அவங்க நம்ம கையிலேதான்… இது காமெடி நாடகம்னு தெரிஞ்சுக்கிட்டு, எது சொன்னாலும் ஸீனுக்கு ஸீன் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க… 

இன்னொண்ணு ரொம்ப முக்கியம்… அள்ளிக்கிட்டுப் போற மாதிரி, ஒவ்வொரு ஸீன்லேயும் லைட் ஆஃப் ஜோக் செமத்தையா விழணும்…” 

“லைட் ஆஃப் ஜோக்கா…?!” 

“ஆமா… ஸீன் முடியறப்ப அடிக்கிறதுக்குன்னே ஒரு டக்கர் ஜோக்கை ரிசர்வ் பண்ணி வெச்சுக்கணும். அதைச் சொன்னதும் விளக்கு அணையணும்… ஆடியன்ஸ் சிரிக்கணும். இப்ப லைட் ஆஃப் ஜோக்ஸ்ல மன்னன் யாரு தெரியுமா சாமிஜி… நீ சரின்னு சொன்னா அவரையே நமக்கு ஒரு காமெடி நாடகம் எழுதித் தரச் சொல்றேன்…” 

“நாடகம் எழுதற சுவாமிஜி யாருப்பா?” 

“அடேடே… நீ தப்பா புரிஞ்சுக்கிட்டே… அவருடைய சொந்தப் பேர் நாகசாமி… முப்பது வயசுதான் இருக்கும். ‘சாமி’ங்கிற பேர்ல ரெண்டு ப்ளே எழுதினார், ரெண்டும் ஊத்திக்கிச்சு…(ராம்குமார் விழிக்கவே, ‘ஊத்திக்கிச்சு’ என்பதற்குப் பொருள் கூறிப் புரிய வைத்தான் முரளி!) அப்புறம் நியூமராலஜி நிபுணர் மூன்று எழுத்தில் ஒரு பெயர் வைத்துக் கொள்ளச் சொன்னார். சாமியுடன் ஒரு ‘ஜி’யைச் சேர்த்துக் கொண்டார்…” என்று விளக்கினான் முரளி. 

இரண்டு நாட்களுக்கெல்லாம் சாமிஜியிடம் ராம்குமாரை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தான் முரளி. நேரே சப்ஜெக்ட்டுக்கு வந்தான் சாமிஜி.

“எனக்கு நேரமில்லீங்க…” ராம்குமார் முரளியைப் பார்த்தான். முரளி, சாமிஜியிடம் “நேற்றுக் கேட்டப்ப எழுதித் தர்றதா சொன்னீங்களே…” என்று கேட்டான். சாமிஜி பலமாகச் சிரித்தான். “நீயும் ஏமாந்துட்டியா? நாடகத்தின் டைட்டிலைச் சொன்னேம்ப்பா…’எனக்கு நேரமில்லீங்க’ எப்படி டைட்டில்?” என்று பெருமையுடன் முரளியைப் பார்த்துக் கேட்டான். 

“பிரமாதம்” என்று முரளி பரவசத்துடன் பாராட்டினான். ‘இதில் என்ன பிரமாதத்தைக் கண்டுவிட்டான் முரளி’ என்று ராம்குமார் ஆச்சரியப்பட்டான். 

“உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். இந்த ப்ளே நிச்சயம் சக்ஸஸ் ஆகும். திடீர்னு ஒரு டைட்டில் தோணிச்சு, சொன்னேன். எண்ணிப் பார்த்தா பதினோரு எழுத்து, எனக்கு ஒத்தப்படைதான் லக்கி நம்பர்” என்று டைட்டிலை உறுதிப்படுத்தினான் சாமிஜி. 

“எப்போ பூஜை போடலாம்?”என்று முரளி கேட்டான். 

“அது உங்க சௌகரியம். நாளைக்கே கூடவெச்சுக்குங்க… முகூர்த்த நாள் தான்.” 

“நாளைக்குள் ஸ்க்ரிப்ட் எப்படி ரெடியாகும்?” என்ற வியப்புடன் ராம்குமார் முரளியைப் பார்த்தான். 

“சாரோட சந்தேகம் எனக்குப் புரியுது. நாளைக்கு முதல் ஸீன் எழுதிக் குடுத்துடறேன். அதைப் பூஜைலே வெச்சுப் படிச்சுடலாம்… அப்புறம் மூணு நாள்லே இன்டர்வெல் வரைக்கும் எழுதிக் குடுத்துடறேன்… ஓட்டல்ல ரூம் போடுங்க…” 

“அதெல்லாம் ராம்குமார் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டார்… நல்ல ப்ளேயா எழுதிக் குடுத்துடுங்க” என்றான் முரளி. 

“ஆமாம் சார். முதல் நாடகம். பிரமாதமா பிரொட்யூஸ் பண்ணப்போறேன். சீக்கிரம் எழுதிக் குடுத்தீங்கன்னா சௌகரியமாயிருக்கும். மனசுல ஏதாவது ஸ்டோரி வெச்சிருக்கீங்களா?” என்று கேட்டான் ராம்குமார். 

“டைட்டில் வந்துடுச்சுல்லே… ஸ்டோரி தன்னாலே வந்துடும். கவலைப்படாதீங்க… இங்கே கம்ப்யூட்டர் மாதிரி ஸ்டோரீஸ் ஸ்டோர் பண்ணி வெச்சுக்கிட்டேயிருப்பேன். (தலையைத் தட்டிக் காட்டுகிறான்.) பட்டனைத் தட்டி விட்டேன்னா ஐடியாஸ் அருவியா கொட்டும். எனக்கு எழுத ஆரம்பிக்கிறது கஷ்டமில்லே… நிறுத்த முடியாமத்தான் திண்டாடுவேன்… முரளிக்குத் தெரியுமே… ஏழரை நாட்டுச் சனி’யை (இது ஒரு நாடகத்தின் டைட்டில்) ஒரேசனிக்கிழமை ராத்திரி எழுதி முடிச்சேன். ஞாபகமிருக்கா முரளி?’ என்று கேட்டு விட்டு, வெற்றிப் புன்னகையுடன் ராம்குமாரைப் பார்த்துக் கொண்டே, பொட்டலத்தைப் பிரித்து சீவலை வாயில் போட்டுக் கொண்டு, வெற்றிலையின் முதுகில் லாகவமாகச் சுண்ணாம்பைத் தடவி, லலிதமாக அதன் காம்பைக் கிள்ளி, வெற்றிலையைக் காயப்படுத்தா மல் நைஸாக நரம்பைக் கிழித்து, இரண்டு பகுதிகளையும் சேர்த்துச் சொகுசாச மடிக்கத் தொடங்கினான் சாமிஜி. 

– தொடரும்…

– நாடகம் போட்டுப் பார், முதற் பதிப்பு: 2010, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *