குங்குமப்பூ
கதையாசிரியர்: கே.கணேஷ்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2026
பார்வையிட்டோர்: 95
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வா தம்பி! இந்தச் சினார் மரத்தடியில் உட்கார்ந்து களைப்பாறு. கண நேரத்தில் தண்ணீர் கொண்டு வருகிறேன். அந்த நீல நிறக் கார் உன் னுடையதுதானே? டயரில் காற்றுப் போய்விட்ட தாக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாதே; இருட்டுவதற்குள் நீ எப்படியும் ஸ்ரீநகர் போய்ச் சேரலாம். என்ன, இங்கேயிருந்து இருபது மைல் தூரம் தானே…? வேண்டாம் தம்பி, வேண்டாம். நான் கொடுத்த தண்ணீருக்காகப் பணம் வாங்க மாட்டேன். அல்லாவுடைய கிருபையால் நாங்கள் இன்னும் தண்ணீரையும் காற்றையும் விற்கத் தொடங்கவில்லை. காசுதான் எனக்கு என்ன பிரயோசனப்படப்போகிறது ஒரு பைசா – ஓர் அணா – ஒரு ரூபாயாக இருந்தாலும் என்ன? இந்த உலகத்தில் என்னுடையவர்கள் என்று கூறுவதற்கு ஒருவரும் உயிருடனில்லை… ஆமாம்! மகன், மகள், புருஷன் எவருமில்லாமல் தனியாகத்தான் இருக்கிறேன்… தம்பி அதோ அந்த மிராசுதாரின் வயலில் வேலை செய்கிறேன்…அந்த ஊற்றிலி ருந்து தண்ணீர் தூக்கி, நெல் குத்திப் பிழைக்கிறேன். எப்படியோ அல்லா என் சாப்பாட்டுக்கு ஒரு படி அரிசி அளக்கிறார். எனக்கு அறுபத்தைந்து வயதாகிறது. காடு வா, வா என்று அழைக்கிறது. எனக்கு என்ன வேண்டியிருக்கிறது? இன்றைக்குச் செத்தால், யார் நாளை என்னை நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? நான் ஏன் இதையெல்லாம் கூறி உனக்குத் தொல்லை கொடுக்கிறேன்? நீ என்னை ஒரு தொண தொணத்த கிழவி என்று நினைக்கிறாயல்லவா? என்ன தம்பி சொன்னாய்? இந்த வயலில் பூத்திருப்பவை அபின் பூக்கள் அல்ல; அவை குங்குமப் பூக்கள். குங்குமப் பூக்கள் ஊதா நிறமாய் மஞ்சள் மகரந்தப் பொடியுடனிருக்குமே, என்கிறாயா? ஆமாம்; அது உண்மைதான். ஏன், இப்போது நீ போகும் வழியில் மற்ற வயல்களில் உள்ள குங்குமப் பூக்களும் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால், இந்த வயலில் மட்டும் குங்குமச் செடியின் பூக்கள் சிவப்பாக மாறியிருக்கின்றன; ரத்தச் சிவப்பாக. ஏன் அப்படி ஆயிற்றுத் தெரியுமா? இது கடவுளாகச் செய்த ஓர் அற்புதமாகும். ஆனால், பள்ளத்தாக்கில் வசிக்கிற இந்தக் கால வாலிபர்கள் நீங்கள்; கடவுள், அற்புதம் இவைகளை நீங்கள் நம்பமாட்டீர்கள். இந்த மாதிரி விஷயங்களை நம்பும் ஏழைக் காஷ்மீரிகளாகிய எங்களை, முட்டாள்கள் குருட்டு நம்பிக்கையுள்ளவர்கள் என்றுதான் எண்ணுவீர்கள்.
இந்தப் பூக்களைப் பற்றிய கதையைக் கேட்ப தற்கு உனக்கு நேரமிருக்குமா? இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னுடைய கார் சரிப்பட்டுவிட்டதும், கதை அரை குறையாக இருக்கும்போதே நீ போய் விடுவாய். இந்தப் பாதையில் ஒன்று, இரண்டு, பத்து, இருபது, நூறு என்று மோட்டார்க் கார்கள் பல போய்க்கொண்டுதான் இருக்கின்றன. ஏதோ கொஞ்ச நேரம் நின்றாலும், பின்னால் விரைவாய்ப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டு விடுகின்றன. ஆனால், இந்த வயல்களில் உள்ள குங்குமப் பூக்களோ அவைகளை எவராவது பறிக்கும் வரையில் இங்கேயேதான் இருக்கப் போகின்றன. ரத்தத் துளிகளைப் போன்ற இந்தப் பூக்களை வெயிலில் காய வைப்பார்கள். பின்பு உலகின் நாலா திசைகளுக்கும் இவைகளை அனுப்புவார்கள். எந்தெந்த ஊர்களிலே சேர்ந்து, இதன் நறுமணம் யாருடைய சாப்பாட்டில் கலக்கப் போகிறதோ? அங்கேயும் உன்னைப் போலவேதான் பலர் “ஏன் இந்தக் குங்குமப் பூக்கள் ரத்தத்தைப்போல் சிவப்பாக இருக்கின்றன?” என்று கேட்பார்கள். ஒருவ ருக்கும் பதில் சொல்லத் தெரியாது. ஏதோ இந்தப் பித்துக்கொள்ளிக் கிழவி உளறுகிறாள் என்று நினைக்கிறாயா? இருந்தாலும் இந்தச் சிவப்புக் குங்குமப் பூக்களைப் பற்றிய மர்மத்தை அறிய விரும்புகிறாயல்லவா? ஆமாம். காரைச் செப்பனிட இன்னும் நேரமிருக்கிறது; அது வரையில் என்னுடைய உளறல்களைக் கேட்டுத்தான் பொழுதைப் போக்கலாமே என்று நினைக்கிறாயோ? எப்படி இருந்தாலும், சரி, இதோ அந்தக் கதையைக் கூறுகிறேன். உனக்கு இஷ்டமிருந்தால் கேள்.
இந்த வருஷத்தில் மட்டுந்தான் இந்த வயலில் இப்படிச் சிவப்பு நிறத்துடன் குங்குமப் பூக்கள் பூத்திருக்கின்றன. ‘இதற்கு முன்னெல்லாம் மற்ற வயல்களைப் போலவே, ஊதா நிறமாய் மஞ்சள் மகரந்தப் பொடியுடனேயே இங்கேயும் அவை பூத்திருந்தன. சமவெளி எல்லாம் அந்தப் பூக்கள் மூடிக்கிடக்கும். நாணமுள்ள மணமகள் ஒருத்தி மஞ்சள் நிறப்போர்வை போர்த்துப் படுத்திருப்பது போல் அவை காட்சியளிக்கும். சுற்றுப்புற மெல்லாம் அவற்றின் தெய்வீக வாசனை மூக்கைத் துளைக்கும். சாலையில் கார்கள் செல்லும்போது கிளப்பும் புழுதிகூட வாசனையைக் கொண்டு வரும். பார்த்தால் ஆகாசத்திலிருந்து பூமி வரைக்கும் குங்கும வர்ண மயமாகத் தோன்றும்.
ரொம்ப ரொம்பக் காலத்துக்கு முன்னே, வேறொரு வழிப்போக்கன்கூட இந்த இடத்தில் நின்று, பூக்கும் தறுவாயிலிருந்த இந்த வயலைப் பார்த்தான். அந்த வாலிபன் பார்வைக்கு எளிய சுபாவமுடையவன் போல் தோன்றினான். நேரே வயலுக்கு மத்தியில் போய் மூக்கினால் விசித்திரமான முறையில் – ஏதோ முகர்வது போலல்லாமல் அப்படியே அதன் வாசனையைப் பருகுவது போல் – அவன் முகர்ந்தான். பின்பு தனக்குத் தானே “இதென்ன ஆச்சரியம்! எனக்கு ஏன் வர வில்லை?” என்றான். “உனக்கு வரவில்லை என்கிறாயே! என்ன வரவில்லை?” என்று நான் கேட்டேன். அதற்கு அவன், “குங்குமப் புதருள்ள வயல்களுக்குச் சென்றால், சிரிப்பு வருமென்று பத்திரிகைகளில் தெளிவாக எழுதியிருக்கிறது. ஆனால், எனக்குச் சிரிப்பு வரவில்லையே. என்ன ஆச்சரியம்!” என்றான். அவன் மனத்தை இந்த விஷயம் உறுத்தியிருக்கிறது. அவன் முகத்திலே பிரமாதக் கவலை தென்பட்டது. இதைக் கண்டு எனக்குச் சிரிப்பு வந்துவிட்ட.து. அந்த நேரத்தில் அல்லாவின் திருவுள்ளப்படி விறகு பொறுக்கச் சென்ற ஷாப்ராணியும் அந்த வழியே விறகு சுமந்துகொண்டு வந்தாள். அவளிடம் இதைப் பற்றி நான் கூறவே, அவளும் சிரித்தாள். அவள் சிரிப்பதைக் கண்ட அந்த வாலிபனுக்கு ஆரம்பத்தில் சிறிது சங்கடமாகவும் எரிச்சலாகவும் இருந்தாலும், ஷாப்ராணி பைத்தியத்தைப்போல் குலுங்கக் குலுங்கச் சிரிப்பதைக் கண்டு, முன்னே இறுக மூடியிருந்த அவன் வாயும் புன்சிரிப்பால் திறந்தது. அந்தப் புன்சிரிப்பு வலுத்து, அவனும் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். இவர்கள் இருவரும் இப்படி அர்த்தமில்லாமல் சிரிப்பதைக் கண்ட எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. பின்பு அந்த வழிப்போக்கன் ரொம்பத் தெரிந்தவன் போல் கர்வத்துடன், “பார்த்தாயா, புத்தகத்தில் கூறியது உண்மையாகிவிட்டது! நாம் மூன்று பேரும் மட்டுமே இந்த வயலில் இருக்கிறோம். இருக்கிற நாம் மூவருமே சிரிக்கிறோம் அல்லவா?” என்றான்.
பார்த்தாயா, தம்பி, நான் என்னென்னவோ சொல்லுகிறேனே! இந்த வயோதிகக் காலத்தில் எங்கெங்கேயோ மனது ஓடுகிறது. ஆம், அது தான் காரணம். மனது அப்படி ஓடுவதால் நான் என்ன பேசுகிறேன் என்பதை மறந்துவிடுகிறேன். ஆம், நான் ஷாப்ராணியைப் பற்றிச் சொன்ன போது, “யார் அந்த ஷாப்ராணி?” என்றா கேட்டாய்? அவள் என் மகள் என்று நான் சொல்ல வில்லையா? சொல்ல மறந்துவிட்டேன் போலிருக் கிறது. இதிலிருந்து என் ஞாபக சக்தி எப்படி என்று தெரிந்துகொண்டாயல்லவா?” அது போகட்டும், அவளுடைய உண்மைப் பெயர் நூரான் என்றிருந்தாலும், ஊரார் அவளை ஷாப் ராணி என்றுதான் அழைப்பார்கள். அதற்குக் காரணம் குழந்தைக்கால முதலே அவளது மேனி வெளுப்பாய் மஞ்சள்போல் இருந்தது. ஊரில் உள்ள போக்கிரிச் சிறுவர் சிறுமியர்களுடன் சுற்றித் திரியும் இவளை, ‘ஷராப்ராணி’ (மஞ்சள் மேனியாள்) என்று அவர்கள் கேலி செய்வார்கள். இவளுக்குக் கோபம் அதிகமாக ஆக, ‘ஷாப்ராணி! ஷாப்ராணி!’ என்று அவர்கள் பலமாகக் கத்துவார்கள். இந்தக் காலத்துக் குழந்தைகள் எமனைக் கூடப் பலகாரம் செய்துவிடும் என்றுதான் உனக்குத் தெரியுமே! இதேபோல என் ஷாப்ராணியும் மங்கைப் பருவம் அடைத்த பின்பும், ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம், “இந்த ஜில்லாவிலேயே ஷாப் ராணியின் அழகில் பாதியளவுகூட உள்ளவர்கள் வேறு எவரும் கிடையாது என்று புகழத் தொடங்கினார்கள். அவளது உடல் குங்குமப்பூப் போன்றதென்றும், அவளுடைய கண்களிரண்டும் தாமரை மலர்களென்றும், ஏதேதோ உளறினார்கள்.
எனக்கென்னவோ அவளிடம் அழகு இருப்பதாகத் தோன்றவில்லை. அதற்குப் பதிலாக, அவள், அதோ அந்தச் சிற்றாற்றின் கரையில் வளர்ந்திருக்கிறதே நாணல், அதைப்போலவே மெலிந்திருந்தாள் எனத் தோன்றியது. இப்படி மெலிந்த இந்தப் பெண் எப்படிக் குழந்தை பெறப் போகிறாள் என்று அடிக்கடி நான் எண்ணுவதுண்டு. அப்போது அவளது உடல் மிகவும் வெளுத்திருந்ததால், அவளுக்கு மஞ்சள் காமாலை ஏதும் பிடித்திருக்கிறதோ என்று யாரும் சந்தேகப்படுவார்கள். அதோடு அவள் பெரியவர்களைக் கண்டால் கொஞ்சமும் மதிக்காமல் ஏதாவது குறும்பு செய்துகொண்டே இருப்பாள். நான் அவளுக்கு ஏதும் செல்லம் கொடுப்பதில்லை. ஆனால் தன் மூன்று சகோதரர்களுக்கும் அவள் ஒரே சகோதரி யாதலால் அவர்கள் கொண்ட பிரியத்தாலும், தன் தந்தை காட்டிய அன்பினாலும், அவள் கெட்டு விட்டாள். நானோ இப்படிப்பட்ட பெண்ணை எவன் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்று எண்ணினேன். ஆனால் அதற்கு மாறாக, அந்த ஊரில் அவளைக் கலியாணம் செய் கொள்ள ஆசைப்படாத வாலிபப் பையன்களே கிடையாது என்று சொல்லலாம். நீங்களெல்லாம் விசித்திரமான பிள்ளைகளப்பா! உன்னை யொத்த பையன்களுக்கெல்லாம் எது எது பிடிக்கும், எது எது பிடிக்காது என்றே புரிவில்லை.
எல்லாப் பக்கத்திலிருந்தும் வந்து அவளைக் கலியாணம் செய்துகொள்ளப் பெண் கேட்கத் தொடங்கினார்கள். மிராசுதாரும் பட்டணத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் தன் மகனுக்காகக் கேட்டார். ஒரு சாதாரண விவசாயிக்கு இந்தப் பெண் கிடைப்பதென்றால் லேசா, என்ன? நீயே சொல்லு, தம்பி! ஷாப்ராணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதென்று நினைத்தேன். ஆனால், அல்லாவின் திருவுள்ளம் வேறு விதமாக இருந்தது. அந்த வருஷம் குளிர் காலத்தில் இந்தப் பக்கமெல்லாம் ஜன்னி தோன்றியது. அதற்கு ஷாப்ராணியின் தகப்பனாரும் இரையாகி அடுத்த உலகத்துக்குப் போய்விட்டார். ஆண்டவன் அவருக்குச் சொர்க்கத்தில் ஓர் இடமளிப்பாராக! எல்லாம் எழுதியபடி தானே நடக்கும்? விதியின் போக்கை யாராலும் மாற்ற முடியுமா? இறந்தவரைப் பூமியில் புதைத்தோமோ இல்லையோ, எல்லாப் பக்கத்திலிருந்தும் தொல்லைகள் தோன்றத் தொடங்கின. மார்வாரி கடனுக்காக நிலம் ஏலம் போயிற்று. அப்போது கூட நான் மனந்தளரவில்லை. அன்று எனக்கு மூன்று ஆண் மக்கள் இருந்தார்கள். அவர்களே பெரிய சொத்தும் சுகமும் அல்லவா? அல்லா அவர்களை உயிருடன் காப்பாற்றினால், எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுவிடலாம் என்றிருந்தேன். ஷாப்ராணியின் மேனி எவ்வளவுதான் குங்குமப்பூப் போலவும், கண்கள் தாமரை போலவும் இருந்தாலும், ஓர் ஏழை அனாதைப் பெண்ணை யார் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று எண்ணி வருத்தப்பட்டேன்.
நானூறு வருடங்களாக எங்கள் வம்சத்தார் இந்த ஊரிலே நிலத்தை உழுவதும் பயிரிடுவதுமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சில சமயம் பயிர் நன்றாக வளரும். சில சமயம் மோசமாக இருக்கும். சில சமயம் மழை பெய்யும். மற்றும் சில சமயம் மழை பெய்யாமல் பூமி வறண்டு போகும். ஒரு வருஷம் நிலத்தில் அதிகமாக மழை பெய்தால் பயிர் பச்சை எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடும். மற்றொரு வருஷம் கடும் பனியால் பயிர் மடித்துப் பதராய்ப் போகும். சில சமயம் நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் வேலை செய்வோம்; மற்றும் சில சமயம் வேறு யாருடைய நிலத்திலாவது போய்க் கூலிக்கு வேலை செய்வோம். சகடக்கால்போல் சுழலும் விதியின் மேடு பள்ளத்திலிருந்து யாரப்பா தப்ப முடியும்? மகனே, சில சமயங்களில் ராஜாவின் உத்தியோகஸ்தர்கள் கொடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், ராஜாக்கள் ராஜாக்கள் தான் ; பொதுஜனங்கள் பொதுஜனங்கள்தானே? நாம் மட்டும் பொறுமையாக இருந்து நமது நிலைமையை எண்ணிப் பார்த்து நமக்கும் உயர்ந்தவர்களுக்கு மரியாதை கொடுத்து வந்தால், ஏதோ சந்தோஷமாக வாழா விட்டாலும் நிம்மதியாகவாவது வாழலாமே. இந்த மகாக் கொடிய கலியுகத்தில் தினமும் விசித்திரமான சம்பவங்கள் நடைபெறும் என்று அந்தக் காலத்தவர் கூறியது சரியாகத்தான் இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்னே என் வீட்டுக்காரர் உயிரோடு இருந்தபோது, ஒரு நாள் என் வீட்டில் நான் நெல் குத்திக் கொண்டிருந்தேன். அப்போது என் இரண்டாவது மகன் நூரு ஓடி வந்து ” அம்மா! ஷெர்-இ-காஷ்மீர் (காஷ்மீரச் சிங்கம்) வந்திருக்கிறது. ஷெர்-இ-காஷ்மீர் வந்தி ருக்கிறது” என்றான். காஷ்மீரச் சிங்கமா? இந்தப் பக்கத்தில் அப்போதுதான் முதல் முதலாகச் சிங்கமோ, புலியோ வந்ததை நான் கேள்விப் பட்டேன். “சிங்கம் வந்திருந்தால் அதைப்பற்றி என்னிடம் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பதற் குப் பதிலாக, மிராசுதாரிடம் ஓடிப் போய்த் துப்பாக்கியை எடுத்து வரும்படி சொல்லு” என்று நான் சொல்வதற்குள். நூரு ஓடிவிட்டான். ஆனால் கொஞ்ச நேரத்துக்குள் கிராமத்திலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் பரபரப்புடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். சிங்கத் தைப் பிடித்துவிட்டார்கள்போல் இருக்கிறது! இல்லாவிட்டால் இப்படி அலட்சியமாகப் பயமின்றி ஓடுவார்களா? நாமும்தான் போய்ப் பார்ப் போமே என்று எண்ணினேன்.
அந்தக் காட்சியை என்றும் என்னால் மறக்க முடியாது. அதோ மரங்கள் தெரிகின்றன, பார்! அவைகளுக்குப் பின்னால் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. இப்போது மத்திய வகுப்பு வரையில் அதில் போதிக்கிறார்களாம் அப்போதோ அது ஆரம்பப் பாடசாலையாகத்தான் இருந்தது. ஆனால், நான் அங்கே போனபோது என்ன கண்டேன் என்று நினைக்கிறாய்? ஒரு பெரிய கூட்டம் என் முன்னால் தரையில் உட்கார்ந்து கொண்டும் பின்னால் நின்று கொண்டும் இருந்தது. அந்த ஜனங்களுக்கு முன்னால் சிங்கமோ, புலியோ இருப்பதற்குப் பதிலாக யாரோ சிவந்த உயரமான ஒரு வாலிபன் ஏதோ சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தான். “அட இதுதானா காஷ்மீரச் சிங்கம்!” என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். பார்த்தாயா, இந்தப் பிள்ளைகளின் குறும்பை! என்னை அனாவசியமாக அல்லவா பய முறுத்திவிட்டார்கள். இந்த மனிதன் சிங்கமும் அல்ல, புலியுமல்ல; ஓர் உத்தியோகஸ்தன்கூட அல்ல. உத்தியோகஸ்தர்கள் இந்த விதமான முரட்டுச் சுதேசி உடை உடுத்தியிருக்க மாட்டார்கள். அவன் போடும் சத்தத்திலிருந்து அவன் ஒரு தேயிலை வியாபாரி என்று எண்ணினேன். கொஞ்ச நேரத்தில் அவனிடமுள்ள ஒரு குழாய்ப் பெட்டியிலிருந்து சங்கீதம் பொழிந்த பின்பு நமக்கு இனாமாகத் தேயிலைப் பொட்டணங்களை வினியோகிப்பான் என்று எண்ணி, அங்கே போய் நின்றேன். ஆனால், அவன் காஷ்மீர பாஷையில் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்.
அவன் விற்பது தேயிலையாக இருந்தால், உண்மையாகவே அது காரசாரமுள்ள பயங்கரமான தேயிலைதான். நான் கேட்ட சில வார்த்தைகளே என்னைத் திடுக்கிடச் செய்தன. நம் ஊருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படப் போகிறது எனத் தோன்றியது. அவன் பேசிய விதமும் சொன்ன வார்த்தைகளும் பயங்கரமாக இருந்தன. ‘சமஸ்தானத்தின் உண்மையான சொந்தக்காரர் கள் ராஜாவும் அவருடைய உத்தியோகஸ்தர் களும் அல்ல, விவசாயிகளாகிய நாம்தான் சமஸ்தானத்தின் சொந்தக்காரர்கள்! நாம் நசுக்கப் பட்டுக் கேவலமாக நடத்தப்படுகிறோம்! நம்முடைய உழைப்பினாலும் வியர்வையாலும் ரத்தத் தாலுமே, மிராசுதார்களும் லேவாதேவிக்காரர் களும் கொழுத்துப் பணக்காரர்கள் ஆகிறார்கள்! நாம் எல்லோரும் இந்த முறையை ஒழிக்க ஒன்று சேரவேண்டும்! நமது விடுதலைக்காகப் போராட வேண்டும்! நம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்! அவர்கள் எதிர்காலக் காஷ்மீரத்தின் தலைவர்களாதலால், அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்!” இப்படியெல்லாம் என்ன என்னவோ பயங்கரமான விஷயங்களை உரத்த குரலில் சொன்னான். அதன் முடிவைக் கேட்க நான் அங்கே இருக்கவில்லை. ஷாப்ராணி ஒரு மூலையில் ஆச்சரியத்துடன் பிரசங்கியின் வாயிலிருந்து வரும் ஒவ் வொரு வார்த்தையையும் அப்படியே பருகுபவள் போல் வாயைப் பிளந்தவண்ணம் உட்கார்ந்திருந் தாள், இப்படிப்பட்ட ஆபத்தான இடங்களில் இனிமேல் கால் வைக்காமல் இருப்பதற்காக, அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவளுடைய தகப்பனாரிடம் கொண்டு போய் விட்டு உதைக்கச் சொல்ல எண்ணி அவரைத்தேடினால், அந்த மனுஷனும் கூட்டத்துக்கு முன்னால் தரையிலே வயதான பல மனிதர்களின் மத்தியிலே உட்கார்ந்திருக்கிறார்! எனக்கு வந்த கோபம் சொல்லவே முடியாது.
தம்பி, ஒரு குளத்தின் மத்தியில் ஒரு கல்லைப் போட்டால் அதிலிருந்து தோன்றும் அலைகள் சுற்றியுள்ள தண்ணீர் முழுவதையும் குழப்புவதை நீ அறிந்திருப்பாய். அதைப்போலவே இந்த ஷெர்- இ-காஷ்மீர் என்ற ஒரு சிறு கல், இந்த அமைதியான கிராமக் குளத்தில் ஆத்திர அலைகளைக் கிளப்பி விட்டது. அன்று முதல் எங்களிடையே நிம்மதியும், அமைதியும் அடியோடு ஒழிந்துவிட் டன. எல்லோரும் நிம்மதியின்றியும் குறை கூறிக் கொண்டும், வாழ்க்கைமீது வெறுப்புக் கொண்டும், அதனை மாற்றுவதற்கு நிச்சயம் கொண்டார்கள். நான் அவர்களைப் பார்த்து அடிக்கடி “அடே, உங்கள் தகப்பன், பாட்டன்மார்கள் இதே ராஜாக்கள், இதே உத்தியோகஸ்தர்களின் கீழே இது போன்ற கொடுமைகளையும் பிடுங்கல்களையும் சகித்துக் கொண்டு, அவைகளை எதிர்த்தோ ஆட்சேபித்தோ ஒரு வார்த்தையும் பேசாதிருக்கவில்லையா? நீங்கள் எல்லாம் இந்த உலகத்தை மாற்று வதற்கு அவர்களைவிட, தலையிலே கொம்பு முளைத்தவர்களா, என்ன?” என்று கேட்பேன். ஆனால், என் பேச்சை யாரப்பா சட்டை செய்கிறார்கள்? அந்த ஷெர்-இ-காஷ்மீரின் மந்திரத்தில்தானே அத்தனை பேரும் கட்டுப்பட்டிருந்தார்கள்! என்னு டைய பிதற்றலைக் கேட்டு, உனக்குச் சலிப்பாக இருக்கிறதல்லவா? ஆம், இந்தச் சிவப்பு நிறக் குங்குமப் பூக்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன். நான் இதையெல்லாம் எதற்காகச் சொல்லுகிறேன் என்று ஆச்சரியப்படுகிறாயோ? ஷெர்-இ-காஷ்மீரின் அந்தப் பேச்சுக் கிளம்பியிரா விட்டால், இந்தக் குங்குமப் பூக்கள் சிவப்பாக மாறி இருக்கமாட்டா. அது எப்படி என்று கேட்கிறாயா? சொல்லுகிறேன், கேள். ஆனால், நான் பேசும்போது குறுக்கே பேசாமல் பொறுமையுடன் நீ கேட்க வேண்டும். அப்போதுதான், நான் அவை அப்படி மாறியதன் காரணத்தைச் சொல்ல முடியும்.
நம் ஊரிலிருந்து அந்த மனிதன் போய் மூன்று நாலு மாதங்கள்கூட ஆகியிருக்காது. அதற்குள் அந்த ஷெர்-இ காஷ்மீரை ராஜா கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. கிடைத்ததும் நான் எனக்குள்ளாகவே “அப்படியானால் ரொம்ப நல்லதுதான். இனி மேல் அந்த மனிதன் உபதேசித்த பயங்கர விஷயங்களை இவர்கள் மறந்து விடுவார்கள். இந்தப் பிரதேசத்திலே மீண்டும் அமைதி தோன்றும்” என்று எண்ணினேன். ஆனால் அதற்கு மாறாக, கைதியானதற்குப் பின்பு அந்த மனிதனின் பெயர் முன்னைவிட அதிகப் பிரசித்தமாகிவிட்டது. அவனுடைய பெயர் எல்லோர் உதட்டிலும் தவழ்ந்தது. அவனைக் கைது செய்தவர்களை ஜனங்கள் ஆத்திரமாகவும் கோபமாவும் திட்டினார்கள். “இந்தச் சர்க்கார் சீக்கிரத்திலே தொலைந்து விடும்” என்று அவர்கள் பயங்கரக் குரலில் கூறினார்கள். இவ்விதம் பேசியவர்களிலே என் இரு மகன்களும் முன்னணியில் நின்றார்கள். சில நாட்களுக்குப் பின்பு, ஷெர்-இ-காஷ்மீரை விடுதலை செய்து விட்டார்கள் என்பதைக் கேட்டதும் சந்தோஷப்பட்டேன். ஏனென்றால், இன்னும் அவனை அடைத்து வைத்திருந்தால், இந்தப் பையன்கள் சர்க்காரைத் திட்டுவார்கள்; அதை மிராசுதாரோ அல்லது வேறு எந்த உத்தியோகஸ்தரோ கேள்விப் பட்டால், இவர்கள் சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்வார்கள்…
பையன்களின் தகப்பனார் உயிரோடு இருந்த வரையில், பையன்களை அவர் அடக்கி வைத்திருந்தார். அவரைப் புதைத்து முடிந்ததோ இல்லையோ, குடும்பம் சீர்குலையத் தொடங்கி விட்டது. எங்கள் நிலம் போய்விட்டது என்பதைத்தான் முன்னமே கூறினேனே. தான் பிறருடைய நிலத்தில் போய் ஒரு கூலியாளாக வேலை செய்ய முடியாது என்று பெரியவன் குலாம்நபி கூறிவிட்டான். “இதைவிட நான் ஸ்ரீநகருக்கோ குல்மார்க்கோ போகலாம்; அங்கே கோடை காலத்தைக் கழிக்கக் காஷ்மீரத்துக்கு வரும் துரைமார்களுக்கு மூட்டை சுமந்து சம்பாதிக்கலாம். அந்த வழியில் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ரூபாய் கிடைக்கும்” என்றான். நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். ஆனால், என் பேச்சை அவன் கேட்பதாக இல்லை. அவன் போனபோது, கிராமத்திலிருந்த எல்லாப் பையன் களையும்விட அவன் தோள்கள் பருத்திருந்தன. ஆனால், ஆறு மாதம் கழித்து, மூன்று நாள் வீட்டில் தங்குவதற்காக அவன் வந்திருந்தபோது, அவனை அடையாளமே கண்டுகொள்ள முடிய வில்லை. அவன் உடம்பு ஷாப்ராணியின் உடம்பை விட வெளுத்திருந்தது. அவனுடைய கண்கள் குழி விழுந்திருந்தன. தூக்கும் பாரத்தைத் தாங்குவ தற்காக நெற்றியில் கயிறு கட்டியதால் ஏற்பட்ட ஆழ்ந்த வடு இருந்தது. இரவு முழுதும் இருமிக் கொண்டே இருந்தான். சில சமயத்தில் திடீரென்று மயக்கம் போட்டுவிடும். “உன் உடம்புக்கு என்ன? ஏதாவது அசௌக்கியமா?” என்று கேட்டேன். “இல்லை, அம்மா! நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே; சமீபத்தில் டாங்மார்க்கிலிருந்து குல்மார்க்குக்கு ஒரு துரையின் மூட்டையைத் தூக்கிச் சென்ற போது, மழையில் நனைந்துவிட் டேன். அதனால் தடுமன் ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான்… டாங்மார்க்குக்கு அவன் திரும்பிப் போனபோது, அவனுடன் என்னுடைய இரண்டாவது மகன் நூரு, தானும் பட்டணத்தில் ஏதாவது வேலை தேடச் செல்வதாகக் கூறிப் போய் விட்டான். “உன் இஷ்டப்படி செய். வயதானவர்களை நீங்கள் மதிக்காத வரையில் நீங்கள் இங்கே இருந்துதான் என்ன பிரயோஜனம்?” என்று நான் சொன்னேன். சில மாதங்களுக்குப் பின்பு பட்டணம் போய்த் திரும்பிய மிராசுதார் “தாயே! உன் இரண்டாது மகன் நூரு, ஷேக் அப்துல்லாவின் கட்சியில் சேர்ந்து விட்டான். ஜாக்கிரதையாக இரு. பகலில் படகு ஓட்டிவிட்டு இரவில் பிற தோணிக்காரர்களிடம் அவன் பிரசங்கம் செய்கிறான்” என்றார். ‘தண்ணீரிலே கிடக்கிற தவளைக்குத் தடுமன் வந்து பிடிச்சுக்கிட்டதாம்’ என்ற மாதிரி அல்லவா இருக்கிறது, இந்தப் பயலின் காரியம் ! எப்படியிருந்தாலும், அந்த ஷெர்-இ-காஷ் மீர் ஒரு காலத்தில் வாத்தியாராக இருந்தவனாம். இந்த விவசாயி பிள்ளையும் தலைவனாக நாடகம் நடிக்கலாமோ? இனி என் முன்னால் இவன் பெயரையே யாரும் உச்சரிக்க வேண்டாம் என்று எல் லோருக்கும் சொல்லி விட்டேன். அந்த நாள் முதல் இவன் எனக்கு மகனுமல்ல; நான் இவனுக்குத் தாயுமல்ல.
ஷாப்ராணியின் சங்கதி என்ன, அவள் என்ன ஆனாள் என்று கேட்கிறாயா? பார்த்தாயா, என் ஞாபகம் தடுமாறிவிட்டது! அவளைப்பற்றிச் சொல்லவே மறந்து விட்டேனே. என்னையும் ஷாப் ராணியையும் கடைசி மகன் காபூராவையும் தவிர, வேறு எவரும் வீட்டில் இல்லை. ஷாப்ராணிக்கு அப்போது வயது இருபதாகியும் கல்யாணமாக வில்லை. கையில் காசில்லாமல், அவளது கல்யாணத்தைப்பற்றி யாரிடம் பேச முடியும்? எப்படித் தான் பேசுவது? அப்போது வருமானமோ பூஜ்யம். அதோடு, எங்கேயோ கடலுக்கு அப்பால் உள்ள கண்காணாத நாட்டில் யுத்தம் மூண்டிருக் கிறதென்றும், சின்னச் சாமான்கள்கூட அபாரமாக விலையேறி விட்டதாகவும் அறிந்தோம். நானும் ஷாப்ராணியும் ஜீவனத்துக்காக வேலை செய்ய நேர்ந்தது. மற்றவர்களின் வயல்களிலே வேலை செய்தோம். விற்க விறகு பொறுக்கினோம். ஆற்றிலிருந்து தண்ணீர் சுமந்தோம். சர்க்காவில் கம்பளி நூல் நூற்றோம். இப்படி மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தினோம். சின்னஞ்சிறிய காபூராவுக்கும் ஏறக்குறைய வயது பத்தாகி விட்டது. அவனையும் வேலைக்கனுப்ப எண்ணினேன். ஆனால் ஷாப்ராணியோ அதைக்கேட்காமல் அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டும் என்று சொன்னாள். “உனக்குப் பைத்தியமா?’ என்று கேட்டேன். ஆனால், அவள் பிடிவாதமாக இருந்தாள். மறுநாள் என்னையும் கேட்காமல் காபூராவைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டாள். நான் என்ன செய்வது? அவ்வளவு பெரிய பெண்ணை எப்படி அடிப்பது? அதோடு அவளை இன்னும் கல்யாணம் செய்து கொடுக்க முடியவில்லையே என்று என் மனசும் உறுத்திக் கொண்டிருந்தது. ஆகவே, பேசாதிருந்தேன். ஆனால், மனசுக்குள் ஏதோ “இன்று முதன் முதலாக இந்தக் குடும்பத்தில் ஒரு பையன் பள்ளிக்கூடம் போயிருக்கிறான். இதிலிருந்து நமக்கு என்ன தீமைகள் வரக் காத்திருக்கின்றனவோ?” என்று சொல்லிக் கொண்டேன். ஆனாலும், ஷாப்ராணி தன் தம்பியின் கல்வியில் அபார அக்கறை காட்டினாள். இரவும் பகலும் அவனுடனேயே இருந்தாள். அவன் பள்ளிக்கூடம் போய்வந்த பின்னும், கொஞ்சம் கூட அவள் அவனை ஓய்ந்திருக்கவிடவில்லை. அவன் வீட்டுப் பாடங்களைச் செய்யவேண்டும்; எழுத்துக்களை அடிக்கடி எழுதி எழுதிக் கையெழுத்தைத் திருத்திக் கொள்ள வேண்டும்; ஏதாவது கணக்குகள் புரியாதிருந்தால், உடனே வாத்தியார் வீட்டுக்குப் போய் அவரிடம் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், இதைச் செய்ய வேண்டும்; அதைச் செய்ய வேண்டும்-இப்படி யெல்லாம் ஓயாமல் ஷாப்ராணி அலட்டுவாள். அவளால் முடிந்திருந்தால் புத்தகங்களை எல்லாம் கரைத்துக் காபூராவுக்கு ஒரே மூச்சாகக் குடிக்கக் கொடுத் திருப்பாள்.
வீட்டில் பழமரம் இருந்தால் கல்வந்து விழும் என்பது உனக்குத்தான் தெரியுமே. ஷாப்ராணி இருபது இருபத்தொரு வயது நிறைந்த யுவதியாக இருந்தாள். பார்வையில் அவள் ஓர் அப்சரஸாக இல்லாவிட்டாலும், ஒன்றரைக் கண்ணும், அம்மை வடு முகமும் உடைய அகோர ரூபியல்ல. இந்தக் காலத்துப் பையன்களைப் பற்றி உனக்குத் தெரியாதா? டவுன்களில் போய், சினிமா, பயாஸ் கோப் என்ற இவற்றிலிருந்து என்னென்னவோ கெட்ட பழக்கங்களை எல்லாம் கற்றுக் கொண்டார்கள். ஒரு நாள் அவள் விறகு கொண்டு வரு வதற்காக வெளியில் போயிருக்கிறாள் என்று எண்ணியிருந்தேன். அவள் வெறுங்கையுடன் அழுது கொண்டே திரும்பி வந்தாள். காரணம் என்ன என்று நான் கேட்டதற்கு, அவள் பதில் கூறாமல் அழுது கொண்டே இருந்தாள். “அடி நாச மாய்ப் போனவளே! பதில் சொல்கிறாயா இல்லையா? உன்னை யாராவது திட்டினார்களா? அல்லது கீழே விழுந்து ஏதும் காயம் பட்டுவிட்டதா? என்னதான் நடந்தது? சொல்லேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகும்” என்று கேட்டேன். அவள் கூறிய பதில் என்னைத் திடுக்கிடச் செய்தது. தன் மகளின் வாயிலிருந்து ஒரு தாய் கேட்க விரும்பாத செய்தியை நான் கேட்டேன். “அம்மா, எனக்குக் கல்யாணம் செய்து வை” என்று சொல்லி மீண்டும் தேம்பினாள். பத்துத் தடவை நான் வற்புறுத்திக் கேட்ட பிறகுதான், நடந்த விஷயத்தை அவள் சொன்னாள். அவள் விறகு பொறுக்கிக் கொண்டிருக்கையில், பட்டணத்திலிருந்து விடுமுறையில் வந்திருந்த மிராசுதாரின் மகன் எங்கிருந்தோ தோன்றி ஷாப்ராணியைக் கேலி செய்து என்னென்னவோ தகாத முறையில் முட்டாள்தனமாகப் பேசத் தொடங்கினானாம். இதற்காக அவனை அவள் கண்டிக்கவே, கண்ணில் தூராகிருதம் ஜொலிக்க அவன் அவளுடைய கையைப் பிடித்துக் காட்டுக்கு இழுத்துக் கொண்டு போனானாம். மிகுந்த சிரமப்பட்டு அவனிடமிருந்து அவள் விடுவித்துக் கொண்டு ஓடோடியும் ஊர் வந்து சேர்ந்தாளாம். வந்து சேர்ந்ததும், அவளுடைய இருதயத்திலிருந்த பீதியினால் கோடை காலத்துக் காற்றில் அசையும் இலையைப் போல் அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளது உடல் நடுங்கியதுடன், அவள் கண்களில் இருந்து ஊற்றைப் போல் கண்ணீர் வழிந்தது. அவள் தேம்பி நிறுத்தும் ஒவ்வொரு முறையும் “அம்மா! தயவுசெய்து என்னைக் கல்யாணம் செய்து கொடுத்து விடு; இல்லா விட்டால் என்றைக்காவது என் மானம் தரை மட்டமாகிவிடும்” என்று கெஞ்சிக் கேட்டாள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஓர் ஏழைக் கிழவி என்ன செய்ய முடியும் என்று நீதான் சொல்லேன், தம்பி. கையிலே ஒரு காசுகூட இல்லாமல் தன் மகளை ஒருத்தி எப்படி மணம் செய்து கொடுக்க முடியும்? அப்படியிருந்தும், யோக்கியமான யாராவது ஓர் ஏழைப் பையன் வந்து ஷாப்ராணியை மணக்க விரும்பினாலும் கொடுத்துவிடலாம் என்று எண்ணினேன். அப்படியும்கூட ஐம்பது அறுபது ரூபாயாவது வேண்டாமா? வீட்டிலேயோ விற்பதற்கோ, ஈடு வைப்பதற்கோ ஒரு செம் பாலடித்த காசுகூடக் கிடையாது. இதைப்பற்றி நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது, வெளியூர் மனிதன் ஒருவன் வந்தான். பார்வைக்கு அவன் ஒரு கூலி போல் தோன்றினான். அவன் நெற்றியில் மூட்டை தூக்கியதால் ஏற்பட்ட தழும்பு இருந்தது. அவனது தோற்றத்திலிருந்து அவன் வயது இன்னதுதான் என்று ஒருவராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. வயது நாற்பதிருக்கலாம்; அறுபதுமிருக்கலாம். “குலாம்நபி இதை உங்களிடம் கொடுக்கச் சொல்லித் தந்தான்” என்று சொல்லி, சிறிது தடுமாற்றத்துடன், “நான் அவனுடைய நண்பன் மகமது” என்று முடித்தான். இப்படிச் சொல்லியபடி, கந்தையால் சுற்றிய ஒரு பொட்டணத்தையும் அவன் என் கையில் தந்தான். அதைத் திறந்தபோது அதில் நோட்டுகளாகவும், சில்லறைகளாகவும் கொஞ்சம் பணம் இருந்தது. அதை நான் எண்ணிப் பார்த்ததில், அறுபத்தேழு ரூபாயும் பத்தணாவும் இருந்தது. “குலாம்நபி இதை உங்களிடம் கொடுத்து இதை ஷாப்ராணியின் கல்யாணத்துக்கு வைத்துக்கொள்ளும்படி சொன்னான்” என்று மகமது சொன்னான். கடைசியாக, “இந்த ஓடுகாலி மகன், விட்டுப்போன தாயையும் தங்கையையும் இப்போதாவது ஞாபகப்படுத்திக் கொண்டானே!” என்று கடவுளுக்கு நான் நன்றி செலுத்தினேன். மகமதுவின் முகத்தில் ஒரு விசித்திரத் தோற்றம் ஏற்படுவதைக் கண்டு, “குலாம்நபி எங்கே? அவன் ஏன் வரவில்லை?” என்று கேட்டேன். மகமது அடைத்த குரலில் மெதுவாக, பேச விரும்பாதவன் போல் வேண்டா வெறுப்பாக “தாயே, குலாம்நபி இறந்து விட்டான். அவன் ரத்தம் ரத்தமாகக் கக்கிக் கொண்டிருந்தான்” என்றான். அதற்குமேல் மகமது பேசவில்லை.
தன் மகன் இறந்ததும் ஒரு தாய் எப்படித் துக்கம் அடைவாள் என்பதை ஆண்களால் ஒரு நாளும் புரிந்துகொள்ள முடியாது, தம்பி அந்த நிகழ்ச்சி ரத்தம் வடிக்கும் அவளுடைய இருதயத்தை வெட்டித் துண்டிட்டு அப்புறப்படுத்தி யது போல இருக்கும்…… பத்துமாத காலம் குழந்தையைத் தாய் கர்ப்பத்திலே சுமக்கிறாள். இரண்டு வருஷங்கள் மார்பிலே பாலூட்டி வளர்க்கிறாள். அந்தக் குழந்தை தாயின் உதிரத்தில், தசையில் எலும்பிலே உருவாகிறது. அவளுடைய பாலிலே வளர்கிறது. பின்பு குலாம்நபியைப்போல் பருத்த தோள்களுடைய ஆஜானுபாகுவாய்க் குழந்தை வளர்கிறான். பிறகு, துரைமார்களுக்குக் கழுதை போல் மூட்டை தூக்கி ரத்தம் கக்கிச் சாகிறான். அவனுடன் அவள் தாயும் சாகிறாள். இந்தச் சாவுதான் மகா மோசமானது. செத்தும் உயிருடனிருக்கும் இந்த நிலைதான் மிக்க கஷ்டமானது.
எனக்கு அப்போது தோன்றிய உணர்ச்சியை என்னால் வர்ணிக்க முடியாது. ஆனால், சகோதரனின் சாவு ஷாப்ராணிக்கு ஒரு விசித்திர நிலையை உண்டாக்கியது. அவளுடைய இளைய சகோதரனின் படிப்பிலே அவள் மேலும் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினாள். ஒவ்வொரு க்ஷணமும் அவனுக்கு அருகிலே இருந்து அவனைப் படிக்க வும் எழுதவும், வீட்டுப் பாடங்களை முடிக்கவும் தூண்டுவாள். மற்றப் பையன்களுடன் ஒரு மணி நேரமாவது விளையாட அவனுக்கு அவள் இடங் கொடுக்கமாட்டாள். ஏதோ அவனுடைய ஒரு வருஷத்திய பாடத்தை ஒரு வாரத்திலே முடிக்க வேண்டும் என்று அவள் அவசரப்படுவது போல் தோன்றும். அப்படி அவள் ஏன் அவசரப்பட்டாள் என்பதே புரியவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை.
ஆமாம்; அதோடு இன்னொரு விஷயம். மகமது வின் பக்கத்தில் அமர்ந்து தன் அண்ணாவின் கடைசி நாட்களைப்பற்றி அவள் கேள்வி கேட்பாள். “அவனுக்கு எப்போது என்ன வியாதி தோன்றியது? வைத்தியம் ஏதும் நடந்ததா? எல்லாக் கூலிகளுக்கும் மூட்டை தூக்கிகளுக்கும் இந்த மோசமான இருமல் வருமா?” இப்படிப்பலப் பல கேள்விகள். கேட்பாள். மகமதுவும் “பலருக்கு இந்த இருமல் வரத்தான் வருகிறது” என்று கூறவே, “அப்படியானால் நீ ஏன் அந்த வேலைக்குப் போகிறாய்! இங்கேயே இருப்பதற்கென்ன?” என்று இவள் கேட்டாள். எதற்காகத்தான் இப்படி அவனை இவள் கேட்டாளோ தெரியவில்லை.
என் பிடிவாதத்தின் பேரில் மகமது மேலும் மூன்று நாள் தங்கினான். அவன் எங்களை விட்டு நீங்கும்போது நான் அவனை நோக்கி, “தம்பி மகமது, இந்த வேலை ஆபத்தானதாக இருப்பதால், ஏன் இதை நீ விட்டுவிடக் கூடாது?” என்றேன். அவன் அதற்கு “எப்படி முடியும் அம்மா? மற்ற வேலைகள் எவையும் செய்து பழக்கமில்லையே! அதோடு எனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படத் தாயோ தகப்பனோ எவருமில்லை” என்றான். நான் உடனே “ஏன், பெண்ஜாதி? பெண்சாதி கூட இல்லையா?” என்று கேட்டேன். அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டே “ரொம்ப நாளைக்கு முன்பே அவள் செத்துவிட்டாள்” என்று முனங்கினான். நான் அவனை கோக்கி “நீ இன்னொரு முறை கல்யாணம் செய்து கொள்வதற்கென்ன?” என்று கேட்டதன் அர்த்தம் அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ என்னவோ தெரியவில்லை. அவன் எங்களுடன் தங்கியிருந்த மூன்று நாளும் அவன் சிரித்தே நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், நான் இந்தக் கேள்வியைக் கேட்டதும், அவன் கண்கள் பிரகாசமடைந்தன். வறண்ட முகத்திலே ஒரு புன்னகையுடன், “ என்னை யாரம்மா கல்யாணம் செய்து கொள்வார்கள்?” என்றான்…… இப்படியாக, ஷாப்ராணிக்கும் மகமதுவுக்கும் மணம் பேசி முடிந்தது.
என்னப்பா தம்பி, கேட்டாயோ? “ஷாப்ராணி என்ன சொன்னாள் என்கேட்டாய்? வாலிபப் பையன்களையும் பெண்களையும் கேட்டுத்தான் கல்யாணம் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று நினைத்தாயா? இன்னும் பிறை தோன்றிய இருபது நாளையில் ஷாப்ராணியை மகமது சென்று விடுவான்” என்று நான் சொல்லக் கேட் அழைத்துச் டதும், அவளுக்கு ஏதோ பெருஞ்சுமை நீங்கிய தாக அவள் எண்ணுவதுபோல் தோன்றியது.
அவளுடைய கல்யாணத்துக்கான ஏற்பாடு களில் சில நாட்கள் கழிந்தன. ஆமாம் தம்பி ! நாங்கள் ஏழையாக இருந்தாலும் பெண் தன் வீட்டை விட்டுப் புருஷன் வீட்டுக்குச் செல்லும் போது, துணிமணியும் ஒரு ஜதை வெள்ளியாலான காதணியுமாவது சீதனமாகக் கொடுக்கத் தானே வேண்டும் ? மகமது வருவதாக இருந்த அன்று தினம் அதிகாலையில் ஷாப்ராணியை எழுப்பிக் குளிக்கச் செய்து, ஓர் ஊதா அங்கியையும் பச்சை அச்சிட்ட சீட்டி மேலங்கி ஒன்றையும் மணவுடையாக அணியும்படி சொன்னேன். பழைய காலத்திலெல்லாம் காஷ்மீரப் பெண்கள் இந்த நீண்ட ‘பரஹான்’ என்ற அங்கியை மட்டும் தான் அணிவது வழக்கம். ஆனால் இந்த ஷெர்-இ- காஷ்மீர்தான் இந்தப் பெண்களை ‘ஷால் வார்’ என்ற மேலங்கியை அணியும்படி போதித்து விட்டான். அதனால் ஷாப்ராணி என்னையும் மேலங்கி அணியும்படியும் இல்லாவிட்டால் ஷெர்-இ-காஷ் மீர் கோபிப்பாரென்றும் சொல்லுவாள். நிஜமாகவே நான் எந்தப் புலி சிங்கத்துக்கும் பயப்பட வில்லை. ஆனால் எல்லாப் பெண்களும் ‘ஷால்வார்’ அணிந்திருக்கையில் நான் மட்டும் ஏன் தனித்துக் கர்நாடகமாகத் தோன்ற வேண்டும்? இதை எண்ணித்தான் நானும் மேலங்கி அணியத் தொடங்கினேன்.
அன்று தினம் ஷெர்-இ-காஷ்மீர் கைதியான செய்தியைக் கேட்டதும், அந்த மனிதன் மேல் எனக்கு அசாத்தியமான கோபம் உண்டாயிற்று. என் மகளின் கல்யாண நாளாகப் பார்த்துத்தானா அவன் கைதியாக வேண்டும்? ஊர் முழுதுமே அல்லோல கல்லோலப்பட்டது. ஷெர்-இ-காஷ் மீர் கைது செய்யப்பட்டார்! ஷெர்-இ-காஷ்மீர் கைது செய்யப்பட்டார்!’ ஏன் கைது செய்யப்பட்டார் என்று எனக்கெப்படித் தெரியும்? எனக்கென்னவோ அந்த மனிதனை எப்படியும் சிறை யில் வைத்திருந்தால் தேவலை என்று தோன்றியது. ஆனால், இந்தச் சமயமோ அந்த மனிதன் ராஜாவையே சமஸ்தானத்தை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசத் தொடங்கி விட்டானாமே? “ஆமாம். இந்தக் குட்டிச் சிங்கம் பெரிய ராஜ சிங்கத்தின் வாயில் காலை நுழைத்து மாட்டிக் கொண்டது. இந்த முறை தப்பிக்க முடியாது” என்று எனக்குள்ளாகவே நான் சொல்லிக் கொண் டேன்.
வெளியே தெருவில் ஏகச் சத்தமாகக் கேட்கவும், மகமதுதான் கல்யாண ஊர்வலத்துடன் வருகிறானாக்கும் என்றிருந்தேன். ஆனால் அதற்குப் பதிலாகச் சில பிள்ளைகள் குழப்பம் செய்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் கையில், வெள்ளைக் கலப்பை போட்ட சிகப்புக் கொடியைப் பிடித்துக்கொண்டு, அங்குமிங்கும் ஓடிக்கொண்டு “ஷெர்-இ-காஷ்மீர் சிங்கத்துக்கு ஜே!” என்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சின்னப்பயல் காபூரா ஒரு செங்கல் திட்டின் மேல் நின்று கொண்டு கையிலுள்ள வெள்ளைச் சுண்ணாம்புக் கட்டியால் சுவரில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். அதை எழுதிக் கொண்டே “காஷ்மீரத்திலிருந்து வெளியேறு” என்று அவன் உரக்கப் படித்தான். ஷாப்ராணி கதவோரத்தி லிருந்தபடி ஏதோ பெரிய வெற்றி கொண்டவள் போல் சந்தோஷத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திரும்பி வீட்டுக்குள் போனேனோ இல்லையோ. குழந்தைகளின் பெரும் கூச்சலும் அழுகையும் காதில் விழுந்தது. வெளியே வந்து நான் கண்ட காட்சி என்னைக் கல்லாய்ச் சமைத்து விட்டது. சாலையில் ஒரு காக்கி நிற லாரி நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து குதித்த சிப்பாய்கள் குழந்தைகளை லத்தியால் தாக்கிக் கொண்டிருந்தார்கள். சில நிமிஷங்களுக்கு முன்னால் காபூரா எழுதிக் கொண்டிருந்த சுவரை நோக்கி ஓடினேன். காபூராவை அங்கே காணோம். ஆனால் அங்கே தரை யில் ரத்தம் சிந்திக் கிடந்தது. நான் அந்தத் திசையை நோக்குகையில், என் கண்மணி காபூரா தூரத்திலே பிரக்ஞையில்லாமல் நெற்றியில் ரத்தம் பெருகும் ஒரு காயத்துடன் விழுந்து கிடந்ததைக் கண்டேன். இன்னமும் தன் வலது கையிலே அந்தச் சீமைச் சுண்ணாம்புக் கட்டியை மட்டும் விடாமல் இறுகப் பிடித்திருந்ததையும் நான் கண்டேன்.
நான் போய் என் மகனைத் தூக்கி வீட்டுக்குள் கொண்டு வந்தேன். அவன் தன் அக்காளின் மடியில் படுத்தபடியே உயிரை விட்டான். பிரக்ஞையற்ற நிலையிலும் சுவரில் தான் எழுத முயன்ற ‘காஷ்மீரத்திலிருந்து வெளியேறு’ என்ற வார்த்தைகளை அவன் முணுமுணுத்துக்கொண்டே இருந்தான். கடைசியாக ‘வெளியேறு’ என்று முடித்தானோ இல்லையோ, மூச்சு அவன் தொண்டையை அடைத்துக் கொண்டது; சப்தம் வருவதற்குப் பதிலாக, திறந்த அவனது வாயிலிருந்து ரத்தப்பிரவாகம் வெளியேறியது. ஒரே மாதத்தில் இரண்டாவது தடவையாக நான் மாண்டேன்…… ஆனால், உயிர் போகவில்லை!
அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாத தனித்தனி கோர உருவங்கள் பல ஒன்று சேர்ந்து பெரிய மகா கோரமான பிண்டமாகும் ஒரு பயங்கர சொப்பனத்தைப் போல்தான் எனக்கு அது ஞாபகம் இருக்கிறது. ஒரு காலத்தில் தாமரை மலர்களைப் போலிருந்த ஷாப்ராணியின் கண்கள் இரண்டும், இரண்டு நெருப்புக் கங்குகள் போல் மாறின. ஒரு சொட்டுத் தண்ணீரும் அவற்றிலே தோன்றவில்லை. அப்படித் தோன்றியிருந்தாலாவது அது அந்தக் கண்களில் எழுந்த கனலை அவித்திருக்கும். ஒரு பெரிய ஊர்வலத்தை-ஊரிலுள்ள ஆண்கள் பெண்களெல்லாம் திரண்ட ஒரு மௌன ஊர்வலத்தை – என் ஷாப்ராணி தலைமை தாங்கி நடத்திச் சென்றாள். அவள் அப்போது தன் மணவுடையையே அணிந்திருந்தாள். அவளுடைய கண்களிலே கனல் ஜொலித்துக் கொண்டுதான் இருந்தது. அந்தப் பெரிய ஊர்வலம், உழுத வயல்களைக் கடந்து, இதோ உன் நீலநிறக் கார் நிற்கிறதே, இதன் அருகில் நின்று கொண்டிருந்த சிப்பாய்களின் காக்கிநிற லாரியை நோக்கி வந்தது.
காக்கியுடை அணிந்து பயங்கர மீசை உள்ள கன்னங்கரிய சிப்பாய்களின் துப்பாக்கிகள் ஊர்வலத்தை நோக்கிக் குறிவைத்தன. அதிலுள்ள பெண்களையும், ஷாப்ராணியையும் மற்றும் அனைவரையும் நோக்கிக் குறிபார்த்தன.
ஆனால் அவளைக் குறிபார்த்த குருடர்களின் துப்பாக்கி நெருப்பைவிட, ஷாப்ராணியின் அனல் கக்கும் கண்கள் மிகவும் அபாயகரமாகவும் ஆபத்தாகவும் இருந்தன. அதனால்தான், அவள் ஒன்றுக்கும் அஞ்சாது அவர்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாள்.
ஒன்று, பத்து, பன்னிரண்டு, பதினைந்து தடவைக்கும் மேல் துப்பாக்கிகள் வெடித்தன. எல்லோரும் தட்டுத்தடுமாறி ஓடத் தலைப்பட்டார்கள். இதோ இந்த வயலிலேயே மென்மையான பூமியிலே, தாயின் மடியில் விழுகிற குழந்தையைப்போல், என் ஷாப்ராணி வீழ்ந்து விட்டாள். நான் அவளை நோக்கி ஓடினேன். ஆனால், நான் போவதற்கு முன்பே அவளுடைய மார்பிலிருந்து ரத்தம் ஆறாகப் பெருக, வறண்டு வேட்கை கொண்ட பூமி அந்த ரத்தத்தைப் பருகிக் கொண்டிருந்தது. பெண்ணின் மார்பிலே பால் சுரப்பதற்குப் பதிலாக, ரத்தப்பிரவாகம் சுரந்தது. அந்த ரத்தமே இந்த நிலத்துக்கு எருவாயிற்று. என் மகள் என் மடியிலே மடிந்தாள். ஆனால், கடைசி வரைக்கும் அவளது உதட்டிலே புன்னகை பூத்திருந்தது. என்னைப் பார்த்து, “இன்றுதான் அம்மா, என் கல்யாண தினம்” என்று முணு முணுத்தபடியே அவள் உயிர் விட்டாள். அது ஏனோ நான் அறியேன். ஆம், இதோ குங்குமப் பூக்கள் செம்மையாக மலர்ந்திருப்பதைப் பார்க்கிறாயே, இதே வயலிலேதான் என் ஷாப்ராணி மாண்டாள்.
இதுதான் அப்பா, என் கதை. ஆனால், நீ எங்கே போய் விட்டாய்? சொன்னபடியே கதை யின் முடிவைக் கேட்காமலே போய்விட்டா யாக் கும். “இன்னும் கொஞ்ச நேரத்தில் கார் சீர்பட்டு விடும். நீயும் போய் விடுவாய்; கதையும் அரை குறையாய் நின்று விடும்” என்று அப்போதே சொன்னேனே. இந்தச் சாலையில் ஒன்று, இரண்டு, பத்து, இருபது, நூறு என்று மோட்டார்க் கார்கள் பல போய்க்கொண்டுதானிருக்கின்றன. ஏதோ கொஞ்ச நேரம் நிறுத்தினாலும், பின்பு விரைவிலே புழுதியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டு விடுகிறார்கள். ஆனால், இந்த வயல்களில் உள்ள குங்குமப் பூக்களோ அவற்றை எவரேனும் பறிக்கிற பூ வரையிலும் இங்கேயேதான் இருக்கப் போகின்றன. ரத்தத் துளிகளைப் போன்ற இந்தப் பூக்களை வெயிலில் காய வைத்து உலகத்தின் நாலா திசைக்கும் அனுப்பப் போகிறார்கள். எந்த எந்த ஊர்களிலே சேர்ந்து இதன் நறுமணம் யாருடைய சாப்பாட்டில் கலக்கப் போகிறதோ? அங்கேயும் உன் னைப் போலவே பலர் “ஏன் இந்த குங்குமப் பூக்கள் ரத்தத்தைப் போல் சிவப்பாக இருக்கின்றன?” என்று கேட்பார்கள். ஒருவருக்கும் பதில் சொல்லத் தெரியாது.காரணம் என்னைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.
– குங்குமப்பூ, கே.ஏ.அப்பாஸ், தமிழில்: கே.கணேஷ், முதற் பதிப்பு: ஜனவரி 1956, இன்ப நிலையம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஸ்மார்ட்போன் பிடியிலிருந்து…
என்.ஸ்ரீதரன்
August 13, 2026
அன்புக்கு அடிமை!
மஞ்சுளா ரமேஷ் ஆரணி
August 13, 2026
படித்தவரும் படிக்காதவரும்
எஸ்.மதுரகவி
August 13, 2026