அரசனுக்கு அறிவுரை
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 6
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் அரசனை அவனுடைய பகையரசன் எதிர்த் துப் போராடினான். இருவருக்கும் போர் கடுமையாக டபெற்றது. முதலரசனுடைய பெயர் பூங்குன்றன். அவனுக்கு எதிரியாக வந்து எதிர்த்துப் போராடிய பகையரசனுடைய பெயர் நெடுந்தத்தன். நெடுந்தத்த னுடைய படை பெரிதாகவும் போர்த்திறம் உடைய தாகவும் இருந்தது. ஆகவே, பூங்குன்றன் எளிதில் தோல்வி அடைந்தான். நெடுந்தத்தன் பூங்குன்றனை நெடுந்தொலை விரட்டி அடித்துவிட்டு அவனுடைய நாட்டையும் கைப்பற்றிக்கொண்டான்.
பூங்குன்றனுக்கு யாது செய்வதென்று தெரிய வில்லை. பல காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந் தான். ஒரு நாள் ஒரு முனிவரைக் கண்டான். அம் முனிவரிடம் தன் குறைகளை யெல்லாஞ் சொல்லி வருந்தினான். அம் முனிவர் மெய்யறிவு கைவரப் பெற்றவர். ஒருவரையும் ஒருபொருட்படுத்தமாட்டார். ஒருவரைப் பகையாகவும் ஒருவரை நட்பாகவும் எணண மாட்டார்.
அம் முனிவர் பூங்குன் றனைப் பார்த்து, “அன்பனே! ஒவ்வொருவருந் தாந்தாஞ் செய்த வினையைத் தாமே நுகர்ந்துதான் தீரவேண்டும். நான்முகனுடைய எழுத்துத் தவறாது. நெடுந்தத்தன் உன்னை வருத்தி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் என்று அவனிடம் பகை பாராட்டாதே. நாம் நம்முடைய ஊழ் வினையை வெறுக்க வேண்டுமே தவிர, ஊழ்வினையின் பலனை ஊட்டுவித்தவர்களை வெறுத்தல் கூடாது. உலகத்தார் எல்லாரும் ஒன்றாகச்சேர்ந்து ஒருவனுடைய ஊழ்வினையை விரட்டினாலும் அது தன் பலனைக் கொடுக்காமல் போகமாட்டாது,” என்று அறிவுரைகள் கூறினார்.
“தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்ற
வெறுத்தாலும் போமோ விதி.”
(உரை.) வேந்தே – அரசனே!, தாம்தாம் முன்செய்த வினை – தாம்தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை பூந்தாமரையோன் பொறி வழியே – தாமரை மலரில் இருக் கின்ற நான்முகன் விதித்தபடியே, தாமே அனுபவிப்பார்-தாமே நுகர்வார்கள்,ஒறுத்தாரை என் செயலாம் – தீவினையாலே தூண்டப்பட்டுத் தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம், ஊர் எல்லாம் ஒன்ற வெறுத்தாலும் விதி போமோ – ஊரிலுள் ளோர் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் ஊழ்வினை போகுமா?
(கருத்து.) முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளின் பலனை ஒவ்வொருவரும் நுகர்ந்துதான் தீரவேண்டும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026