காளிமுத்தும் கள்ளர்களும்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 3
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பனங்குடி என்னும் ஊரிலே வெகுகாலத்திற்குமுன் காளிமுத்து என்னும் பெயருடைய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் அதற்கு முந்திய பிறப்புகளிலே செய்த நல்வினையினால் அவனுக்கு மிகுந்த செல்வம் உண்டாகியிருந்தது. காளிமுத்து மேலும் பல வாணி கங்கள் செய்து பொருளைப் பெருக்கினான். பொருளைப் பெருக்கினானே தவிர அருளைப் பெருக்கி அறவழிகளில் செலவிடவில்லை.
உறவினர்களைக்கூட அவன் நன்றாக ஆதரிக்க- வில்லை. தன்னுடைய பெற்றோர்களை நன்கு காப்பாற் றாமல் விட்டுவிட்டான். பிள்ளைகள் சிலர் அவனுக்குத் தோன்றினர். அவர்களுடைய கல்விக்குத் தக்கவாறு. செலவு செய்து படிக்கவைப்போம் என்றும் அவன் எண்ணவில்லை. மக்களையும் பெற்றோர்களையுமே அவன் கருத்துடன் காப்பாற்றவில்லை யென்றால் ஊரார்கட்கும் நண்பர்கட்கும் எவ்வாறு உதவி செய்வான்? அவன் பொருள் காக்கும் பூதமாகப் போனானே என்று பலரும் இரங்கினார்கள்.
இரவலர்கள் புலவர்கள் முதலியோர் காளிமுத் திடஞ் சென்று எவ்வளவோ பணிவாகவும் அடக்க. ஒடுக்கமாகவும் “ஏதேனும் உதவி செய்தருளுங்கள்; வறுமையினால் துன்பப்படுகிறோம்,” என்று கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தனர். எதுவும் பலிக்கவில்லை.
காளிமுத்திடம் பெரும்பொருள் குவிந்திருப்பது எல்லாருக்கும் நன்கு தெரியும். கள்ளர்கள் காளிமுத்துவைப் பற்றிக் கருத்துச் செலுத்தினர். ஒருநாள் நள்ளிரவில் பன்னிரண்டு பேர் நல்ல தடிகளுடன் காளிமுத்துவின் வீட்டிற்குள் நுழைந்தனர். காளிமுத்து வுக்குப் பலமான அடி கிடைத்தது. அவன் உடலில் அடிவிழாத இடமே பாக்கியில்லை. காளிமுத்துவின் பொருள் ஒரு நொடிக்குள் கள்ளர் கைக்கு மாறி விட்டது. காளிமுத்து யாதும் பேச்சு மூச்சு விடவில்லை.
“பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலுந் தாம்.’
(உரை.) பேர் உலகில்-பெரிய நிலவுலகத்திலே, பெற்றார்- தாய் தந்தையர், பி றந்தார் – பிள்ளைகள், பெருநாட்டார் – தம்முடைய ஊரினர், உற்றார் – சுற்றத்தவர், உகந்தார் – நண்பர் என வேண்டார் என்று. விரும்பாதவராகிய பிசினர்கள், மற்றோர் யாதும் தொடர்பில்லாத பிறர், இரணம் கொடுத்தால் தம்முடம்பிலே காயத்தை உண்டு செய்தால், இடுவர் – தம்பொருளை அவருக்குக் கொடுப்பர், சரணம் கொடுத்தாலும் இடார் முன் கூறப்பெற்றவர்கள் அடைக்கலம் புகுந்தார்களாயினும் அவருக்கு யாதுங் ‘கொடுக்கமாட்டார்கள்.
(கருத்து) அறிவற்றவர்கள் தம்மை வருத்துகிறவர் கட்குத் தான் பொருள் உதவி செய்வார்களே தவிர உறவினர் முதலியவர்கட்கு எத்தகைய உதவியுஞ் செய்ய மாட்டார்கள்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026