மானங்காத்த மன்னன்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 3
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் அரசன் பகைவர்களிடம் அகப்பட்டுக்கொண் டான். அகப்பட்டுக் கொண்ட அரசன் பெருஞ் சிறப் பொடு வாழ்ந்திருந்தவன். பகைவர்கள் அவனைச் சிறையில் அடைத்துவிட்டனர். சிறையில் அவனை நன்றாகக் கவனிக்கவில்லை. ஒருநாள் அரசனுக்கு நீர் வேட்கை மிகுதியாயிற்று. சிறைக்காவலனை அழைத்துச், “சிறிது தண்ணீர் கொண்டு வருவாயாக” என்று கூறினான். அச்சிறைக்காவலன் உடனடியாகக் கொண்டு வந்து கொடுக்கவில்லை. பல முறை வற்புறுத்திக் கேட்ட பின் இறுதியில் முணுமுணுத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வந்தான். அதனை இடது கையால், “இந்தா பிடி,” என்று சொல்லிக் கொண்டே நீட்டினான்.
சிறைக்காவலனின் மனப்பான்மை அரசனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. இவ்வளவு கண்ணியக் குறை வாக நடந்துகொண்டானே என்று எண்ணி எண்ணி உள்ளம் புழுங்கினான். “நாம் இத் தண்ணீரைக் குடித்து உயிரோடிருந்து ஆகப்போகிறது என்ன? மானம் இழந்தபின் வாழாமை யன்றோ இனிது,” என்று எண்ண மிட்டான். அத் தண்ணீரைக் குடிப்பதற்கு அவனுக்குச் சிறிதும் விருப்பமில்லை. அதனை அப்பால் வீசி விட்டான். தான் இறக்கும்வரை உண்ணா நோன்பை மேற்கொண்டிருந்து இறந்துபோனான்.
“பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியா
துயிர்விடுகை சால வுறும்.”
(உரை.) பேசுங்கால் – சொல்லுமிடத்து, பீச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை – பிச்சையெடுத்து உண்டலினும் இழிவிற் பெரிய குடிவாழ்க்கையாவது; பல இச்சை சொல்லி இடித்து உண்கை பலவாகிய இச்சைகளைப் பேசி ஒருவரை நெருங்கி வாங்கி ண்ணுதலாம், சிச்சீ – சீசீ இஃது என்ன செய்கை !, வயிறு வளர்க்கைக்கு – இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கினும் மானம் அழியாது – மானங் கெடாமல், உயிர்விடுகை – உயிர் விடுதல், சால உறும் – மிகவுஞ் சிறந்ததாம்.
(கருத்து.) மிக இழிவான நிலையில் ஒருவர் வயிற்றை வளர்த்து உயிர் வாழ்வதினும், இறந்து போவதே மிகச் சிறப்புடையதாம்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026