கறையது கண்டங் கொண்டார்
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 236
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கறை என்றால் கருமை என்பது பொருள். சிவபெருமான் கண்டத்திலே கறையுடையவர். அதனால் நீலகண்டன் என்னும் பெயரையும் பெற்றவர்.
தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒருமுறை திருமாலிடம் சென்றார்கள். அசுரர்கள் கையோங்கியுள்ளது. அவர்களை வெல்வதற்கேற்ற வழிகூறுமாறு கேட்டார்கள். திருப்பாற்கடலைக் கடைந்து மறுபடியும் அமிர்தம் உண்டால்தான் தேவர்கள் பலமடைவார்கள் என்று கூறினார். திருப்பாற்கடலைத் தேவர்களால் மாத்திரம் கடையமுடியாது. அதற்கு அசுரர்களுடைய துணையும் வேண்டும் என்று கூறினார்.
தேவர்கள் அசுரர்களிடம் அமிர்தம் கடையும் விடயத்தைக் கூறி தமக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். கிடைக்கும் அமிர்தத்தைப் பாதி பாதியாகப் பங்கிட்டுக் கொள்வது என்ற ஒப்பந்தமும் பேசப்பட்டது. மந்திரமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டார்கள். அசுரர் பாம்பின் தலைப்பகுதியிலும் தேவர் வால் பகுதியிலும் நின்று பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மந்திரமலையைத் தாங்குவதற்கு ஆதாரம் ஏதும் இல்லாமல் மலைசரிந்தது. மகாவிஷ்ணு ஆமையுருக் கொண்டு கடலின் அடியிலே சென்று மந்தரமலையைத் தாங்கிக் கொண்டார். மலைநிமிர்ந்து நின்றது. இருபகுதியாரும் வேகமாகக் கடைந்தார்கள். பாம்பு வேதனை தாங்கமாட்டாது விஷத்தைக் கக்கியது. அது ஆலகாலவிஷம். விஷம் எல்லோரையுந் துரத்தியது.
விஷத்திற்குப் பயந்து தேவரும் அசுரரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினார்கள். விஷமும் விடாது துரத்தியது. கடைசியாக எல்லாரும் சிவபிரானிடம் சென்று அபயம் அபயம் என்று முறையிட்டார்கள். அவர்கள் படும் துயரைக் கண்ணுற்ற கண்ணுதல் பெருமான் பக்கத்தே விபூதி மடல் ஏந்தி நின்ற சுந்தரரை அந்த ஆலகால விஷத்தைப் பிடித்து வா என்றார். சுந்தரர் எம்பெருமானைத் தியானித்தவராய் அமிர்தத்தைக் கையால் அள்ளுவதுபோல விஷத்தினைக் கையால் பிடித்து வந்தார். பெருமான் அதனைக் கையால் வாங்கித் தானே உண்டருளினார். இதனைக் கண்ணுற்ற உமாதேவியார் ஓடோடி வந்து நஞ்சு உள்ளே போகாதவாறு தடுப்பதற்காகக் கழுத்தை இறுகப்பிடித்துக் கொண்டார்.
விடம் கீழே இறங்கவில்லை. கண்டத்திலேயே தங்கிவிட்டது. அதனால் சிவபெருமான் நீலகண்டன் என்ற பெயரைப் பெற்றார். அவருடைய நீலகண்டம் அவருடைய தியாகத்தை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. இதனை அப்பரடிகள் ‘கறையது கண்டங் கொண்டார்’ என்கின்றார்.
சிவபெருமான் கையிலே வேதத்தை வைத்திருக்கின்றார். ‘வேதமோதி வெண்ணூல் பூண்டு’ என்றும் குறிப்பிடுவர். நாம் எல்லாம் அவரைப் பார்த்துத் தினமும் வேதம் ஓத வேண்டும் என்பதற்காகவே அவர் வேதத்தைக் கையில் ஏற்றியுள்ளார். இதனை அப்பர் ‘மறையதுபாடி’ என்று குறிப்பிடுகின்றார்.
சிவபெருமான் கையிலே கபாலம் ஏந்தியுள்ளார். அது பிரமனுடைய மண்டையோடு. அதுதான் சிவனுடைய பிட்சாபாத்திரம்.
பிரமதேவருக்கு முன்பு ஐந்து திருமுகங்கள் இருந்தன. பிரமதேவர் தலை எண்ணிப் பார்த்தார். சிவனுக்கும் ஐந்து தலை எனக்கும் ஐந்து தலை. என்னிலும் பார்க்க சிவபெருமான் எதனால் சிறந்தவர்? அவருக்கேன் முதல் இடம்? சிவபெருமான் வைரவப் பெருமானைத் தோற்றுவித்தருளினார். பிரமதேவருடைய தலைகளில் ஒன்றைக் கொய்தார் வைரவப் பெருமான். அந்தக் கபாலம் கையுடன் ஒட்டிக் கொண்டது. இப்பொழுது பிரமதேவர் நான் முகனாகி விட்டார். கையோடொட்டிய கபாலம் கையை விட்டு நீங்க வேண்டுமானால் கபாலம் நிறைய வேண்டும். எதனால் கபாலத்தை நிரப்புவது? ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள ஆணவத் தைப் பிச்சையிட்டால் கபாலம் நிறையும். எல்லா இடங்களிலும் திரிந்து ஆணவத்தைப் பிட்சை ஏற்றும் கபாலம் நிரம்பவில்லை. கடைசியாக மகாவிஷ்ணு இட்ட பிச்சையினாலேதான் கபாலம் நிரம்பியது. இதனை அப்பரடிகள் ‘பிட்சைக் கென்றகந்திரிந்து வாழ்வார்’ என்று குறிப்பிடுகின்றார். இப்பொழுது பாடல் முழுவதையும் பார்ப்போம்:
மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமுடிமேற் பெய்வளையாட னோரும்
கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளார்
இறையவர் பாடலாட லிலங்கு மேற்றளிய னாரே.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026